Friday 1 November 2019

நத்தார் வருகிறது

நான் முன்பு கற்பித்த பாடசாலையிலிருந்து விலகிய சில நட்புகள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தோழி ஒருவர் வீட்டில் சந்திப்போம். ஆளுக்கொரு உணவுப் பண்டம் எடுத்துப் போவோம். பெரும்பாலும் என்னிடம் விரும்பிக் கேட்பது என் 'கட்லட்'. ஒருவர் பப்படம் கூடக் கேட்பார். :-) அதை எப்படிச் சமைப்பது, சமைக்கும் முன் பார்க்க எப்படி இருக்கும் என்பதெல்லாம் அறியாதவர் அவர். 

இதைத் தட்டும் சமயம் அம்மா சொன்ன அவரது தோழியின் கதை நினைவுக்கு வருகிறது. பப்படம் பொரிக்கச் சொல்ல, அதைக் கழுவி வடியவிட்டுப் பொரித்தாராம். ;D 

இப்போது படம் சொல்லும் கதைக்கு வருவோம். 2016 ஆரம்பத்தில் அப்பியாசப் புத்தகங்கள், பாடசாலைக்கான பொருட்கள் எல்லாம் மலிவு விலையில் விற்பனைக்கிருக்கும் சமயம் குட்டிக் குட்டி 'நோட் புக்' ஆறு சதம் விலை போட்டிருந்தார்கள். பாடசாலைக் கைவேலைக்கு உதவும் என்று கொஞ்சம் வாங்கியிருந்தேன். பயன்படுத்தியது போக நான்கைந்து மீதி இருந்திருக்கும். அம்மாவின் மரணத்தின் பின் அவரது பொருட்கள் மத்தியில் நிறையக் கிடைத்தன. 

என்ன செய்வது? எந்த வழியும் புலப்படவில்லை. ஒவ்வொரு வருடமும் என் பயன்பாட்டுக்கு ஒன்று மட்டும் எடுத்துக் கொள்வேன். அந்த ரீதியில் போனால் எனக்கு 80 வயதாகும் வரை பயன்படுத்தலாம். ;) அத்தனை இருந்தன. 

கார்த்திகை வர, மின்னஞ்சல் வந்தது எங்கள் ஆசிரியர் சந்திப்புப் பற்றி. ஆளுக்கு ஒரு சின்ன அன்பளிப்பு கொடுப்பதானால் என்ன கொடுக்கலாம்! பெற்றுக் கொள்பவருக்கு, எனக்கு எதையும் எடுத்து வரவில்லை என்கிற சங்கடம் வரக் கூடாது. அதனால் அன்பளிப்பு சின்னதாக இருக்க வேண்டும். அதே சமயம் பயனுள்ளதாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று யோசித்தபடியே அதையும் இதையும் கிளற... கண்ணில் பட்டது என் பழைய வாழ்த்திதழ் சேகரிப்பு.

செயலில் இறங்கினேன்.

ஒரு பக்கம் எழுதிய வெள்ளை அட்டைகளை நடுவில் (இரும்பு அடிமட்டம் & ஸ்கோரர் பயன்படுத்தி) அழுத்தி மடித்துக் கொண்டேன்.
அவற்றைக் கொப்பிகளின் அட்டைகள் மேல் ஒட்டினேன். 
காய்ந்த பின் மேலதிகமான அட்டைகளை வெட்டி நீக்கினேன்.
வாழ்த்திதழ்களிலிருந்து அளவான படங்களையும் வாழ்த்து வாசகங்களையும் வெட்டிக் கொண்டேன்.
படங்களை முன் அட்டையின் வெளிப் பக்கமும் வாசங்களை அதன் உட்பக்கமும் ஒட்டிவிட்டேன்.
வாழ்த்திதழ்களில் எழுதுவது போல கையொப்பமிட்டேன்.
சின்னதாக ஒரு ரிபன் 
கட்டியதும் அன்பளிப்புகள் தயாராகிவிட்டன.
அனைத்தையும் ஒரு பையில் (நினைவாக தேவைக்கு மேல் சிலது எடுத்துக் கொண்டேன். எதிர்பாராது யாராவது வந்திருந்தால் சிக்கலாகிப் போகுமல்லவா?) போட்டு எடுத்துச் சென்றேன். விருந்து முடிந்து பிரியும் சமயம், 'லக்கி டிப்' போல ஆளுக்கு ஒன்று எடுத்துக் கொள்ளக் கொடுத்தேன். நத்தார் காலத்திற்கான குறிப்புகளைக் குறித்து வைத்தால் மறு வருடம் கூட தேவைக்கு எடுத்துப் பார்க்கலாம். 

எல்லோருக்கும் அன்பளிப்பு பிடித்திருந்தது. இம்முறை தற்போதையை பாடசாலை நட்புகளுக்காகச் செய்ய இருக்கிறேன். 

என் சேகரிப்பும் மெதுவே பயனுள்ள விதத்தில் குறைந்து வருவதைப் பார்க்கச் சந்தோஷமாக இருக்கிறது.

4 comments:

  1. அனைத்தும் அவ்வளவு அழகு... பாராட்டுகள்...

    ReplyDelete
  2. அனைத்தும் அழகு. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    ReplyDelete
  3. அருமையான ஐடியா,அழகான வாழ்த்தட்டைகள்.

    ReplyDelete
  4. நன்றி வெங்கட், தனபாலன் & ப்ரியா. இந்த வருடம் வேறு ஏதாவது ஒன்று யோசித்து வைக்க வேண்டும். :-)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா