Saturday 19 March 2011

சின்னச் சின்ன(வரின்) ஆசை - 3

முத்து மு(த்)து ஆசை

ஊரில் போய் இறங்கி இரண்டு
நாட்களில் சின்னவர் சொன்னார், "ஒரு பாம்பு பார்க்க வேண்டும், பார்த்து நாளாயிற்று," என்று.

நாளாயிற்று, பாம்பு மட்டும் கண்ணில் படக் காணோம்.
பெரியப்பா வீடு பெரிய தோட்டம். நாங்கள் 'தோட்டத்துக்குப் போறோம்,' என்றால், பெரியப்பா வீடு போகிறோம் என்பது சொல்லாமல் புரியும் உறவினர்க்கு.

போனோம், அங்கும் மகன் பாம்பு பார்க்கும் ஆசையைச் சொல்ல 'நேற்றுக் கூட ஒன்று அடித்தோமே,' என்றார்கள்.
மழையில் தீ நடுவில் அணைந்து இருந்தது. ;)

அடுத்து... ஒரு யானை மேல் போக வேண்டும் என்றார். கண்டிக்குப் போகும் போது தம்புல்லையில் யானைகளைக் காணோம். எல்லாம் உலாப் போய் விட்டன போலும். திரும்ப வரும்போதோ ஊரே வெள்ளமெடுத்துக் கொண்டிருந்தது. யானைகளுக்கெல்லாம் விடுமுறை.

கடைசி நாள்.. விளாம்பழத்தைச் சாப்பிட்டு முடித்து எல்லோரிடமும் பிரியாவிடை பெற்றுக் கிளம்பி வாகனத்தில் ஏறியதும், கூட வந்த உறவினர் கூட்டம் சின்னவரை ஓட்ட ஆரம்பித்தது... "விளாம்பழ ஆசை மாதிரி யானை ஏறும் ஆசையும் கடைசி நேரத்திலதான் நிறைவேறுமோ!"

மழை முற்றாக விட்டிருக்கவில்லை. எனவே மூன்று மணி நேரம் முன்னால் கிளம்பி வந்திருந்தோம்.
யானை தங்கும் இடத்தை அண்மிக்கவும் 'நேரம் இருக்கிறது, முடிந்தால் முயற்சிக்கலாம்,' என்று தோன்றிற்று. யானைகளைத் தான் காணோம். எல்லாம் வெள்ளை வெளேரென்று யாரையாவது ஏற்றிக் கொண்டு தெருவோடு நடை பயின்றன. எதுவும் ஓய்வாக இல்லை.

கடைசித் தரிப்பிடத்தை நெருங்கினோம். இதை விட்டால் இனிக் கிடைக்காது என்றார்கள். யானை இல்லை. விசாரித்தால் 'வேலை முடியும் தறுவாய், இறுதி உலாவில் இருக்கிறார்,' என்றார்கள். இனிப் பொறுத்தால் எப்படி! பயணப்பட வேண்டுமே!! கிளம்பலாம் என்று மனம் சோர்ந்து புறப்பட...
அட! யானை வருது...

வாகனத்தின் உள்ளே இருந்து எடுத்ததால் படம் மங்கலாக இருக்கிறது. 

 வாகனத்தைத் திருப்பினோம். யானை களைப்பாக இருக்கிறார் என்றார்கள். பணத்தையும் விட விரும்பவில்லை அவர்கள். குட்டி உலா ஒன்று ஒப்பந்தமாயிற்று.


மு(த்)து... சிங்களப் பெயர், அதே கருத்து. முத்துப் போல் அழகாக இருக்கிறாரா? ;)
முதலில் விருப்பமில்லாமல் அரை மனதோடு ஆடி அசைந்து கிளம்பினார். ஒவ்வொரு அடியையும் 'தொப் தொப்' என்று வேண்டாவெறுப்பாக வைத்தார். பாவமாக இருந்தது. ஒரு குழந்தை மேல் ஏறி இருக்கும் உணர்வு... மனதை என்னவோ செய்தது; இறங்கி விடலாமா என்று இருந்தது. ஏறும் போதே சொன்னார்கள்.. அவரது நடு முதுகில் கால் வைக்க வேண்டாம் என்று. முள்ளந்தண்டு அசைவதை ஒவ்வொரு அசைவிலும் உணர்ந்தோம்.

வழியில் புல்லைப் பிடுங்கிச் சுவைத்துக் கொண்டு நின்று விடுவார். பாகன் சொன்னால் புறப்படுவார். பாகனிடம் எங்கள் புகைப்படக் கருவி இருந்தது. இடையில் ஓரிடத்தில் நின்று அழகாக துதிக்கையைத் தூக்கி ஒரு 'போஸ்' கொடுத்தார். (அந்தப் படங்கள் இங்கு இல்லை - என் முதுகு தெரியவில்லையே.)

தன் தரிப்பிடத்தை அண்மித்ததும்  குட்டியருக்கு வந்ததே ஒரு சந்தோஷம்.. பாருங்கள் பின்னங்காலை.. கடகடவென்று ஓட ஆரம்பித்தார். (முன்னங்கால் கழுத்தோடு சங்கிலியால் பிணைக்கப் பட்டிருந்தது.) 

நாங்கள் இறங்கிய பிறகு அவர் அம்பாரி எல்லாம் இறக்கி வைத்து முதுகை மசாஜ் செய்து விட்டார்கள். நாங்களும் தொட்டுத் தடவி ஒரு 'தாங்க்யூ' சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.

வாழ்வில் இன்னொரு முறை யானைமேல் ஏற மாட்டேன், பாவம் அது. முத்து இன்னமும் ஒரு குழந்தையாகத் தான் என் நினைவில் இருக்கிறார். 

முத்துவைப் பற்றி உலாவின் போது பலதும் விசாரித்தோம். (விடுமுறை முடிவில் ஏற்பட்ட எண்ணத் தடங்கலில் எல்லாம் மறந்து போயிற்று.) ஒவ்வொரு முறை நான் கேள்வி எழுப்பவும் மகன் தடுத்து "It's a HE Mum," என்பார். என்னால் பெண்ணாகத் தான் பார்க்க முடிந்தது முத்துவை.

 தாய்மைக்கும் குழந்தைத்தனத்துக்கும் ஆண் பெண், உயர்திணை அஃறிணை வேறுபாடு இருக்கிறதா என்ன! 

Friday 18 March 2011

சின்னச் சின்ன ஆசை 2

வீட்டுக்கு மேலாகப் பெரிதாக ஒரு விளாமரம் வளர்ந்திருந்தது. இந்த இரண்டு காய்களிலும் என் கண் போயிற்று. விளாம்பழம் சாப்பிட்டிருக்கிறேன். மரத்திலிருந்து பறித்த, உடன் மாம்பழம், கொய்யாப்பழம், வாழை, பப்பாளி எல்லாம் சாப்பிட்டிருக்கிறேன். அப்படி உடன் விளாம்பழம் சாப்பிடக் கிடைத்தால்.. ;))
அந்த மரம் முன்பும் காய்த்திருக்கிறதாம். ஆனால் யாரும் அதிலிருந்து ஒரு பழம் சாப்பிட்டதில்லையாம். குரங்குப் பிள்ளைகள் அதிகமாக இருந்தார்கள். இருந்தாலும் ஒரு அவாவில் தினமும் மூன்று முறை பழம் இருக்கிறதா இல்லையா எனப் பார்த்து விடுவேன். 

மூன்று வாரம் முடிவதற்குள் சாப்பிடக் கிடைக்கவேண்டுமே!

தினமும் பார்த்தேன். என் கவலை புரியாமல் விளாங்காய் தொங்கிக் கொண்டே இருந்தது. 

கிளம்ப முதல் நாள், பெட்டிகள் எல்லாம் கூட ஆயத்தம். இனி எதிர்பார்ப்பதில் என்ன பயன் இருக்கிறது. கூடத்தில் எல்லோரும் கூடி இருந்தனர். சீட்டுக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. ஒரே ஆரவாரம். சீட்டு விளையாடத் தெரியாத நான் சமையலறையில் மச்சாளிடம் கடைசியில் சொல்ல இருந்தவை எல்லாம் இறக்கி வைத்துக் கொண்டிருக்க விளையாடுபவர்கள் பேசிக் கேட்கிறது.. "பெரியம்மா போறதுக்கு முதல் இந்த விளாம்பழம் விழுமா?" சிரிப்பு. 
 
தூங்கப் போகிறோம், காலையில் புறப்பாடு.

என்னைவைத்துச் சிரிப்பு நடக்கிறது. நாங்களும் சிரித்து விட்டுப் பேச்சைத் தொடர்கிறோம். 

தலைக்கு மேல் ஒரு 'டொம்' காது வெடிக்கிற மாதிரி ஒரு சப்தம். ஒன்றும் புரியவில்லை.
'டம டம டம டம டம டம டம டம டம டம டம டம டம டம டம ........
சப்'

வெளியே விளக்கு எரியவில்லை. மின்விளக்கினைக் கொண்டு சென்று எடுத்து வந்தேன் இதனை. ;)
மறுநாட் காலை சீனி போட்டுக் குழைத்து சந்தோஷமாக ஆளுக்கொரு கரண்டி கொடுத்துச் சாப்பிட்டு விட்டுப் புறப்பட்டேன்.

Thursday 17 March 2011

சின்னச் சின்ன ஆசைகள்


மீண்டும் மழைக்காலம் தொடர்கிறது...

வளவைச் சுற்றி வந்து இந்தப் பந்தலைக் கண்டுவிட்டேன், ஒரு நாள் தூதுவளைச் சம்பல்

தினமும் முருங்கைக் கீரை சாப்பிடச் சொல்லி யாரோ ;) அறிவுரை சொன்னார்கள். ஊரில் ஆசைப் பட்ட மட்டும் சாப்பிட்டு விட்டு வந்தாயிற்று. ஆனாலும் எனக்குப் பிடித்த மாதிரி சம்பல் அரைத்துச் சாப்பிடக் கிடைக்கவில்லை, மீதி எல்லோரும் போர்க் கொடி தூக்கி விட்டார்கள். ;(

இப்போ எல்லாம் இப்படி எண்ணெயும் தேங்காய்ப்பூவுமாகப் பார்த்தால் கொஞ்சம் பயம் எட்டிப் பார்க்கிறது. ஆனாலும் விடவில்லை. சண்டிக்கீரைச் சுண்டல் இது. நாங்கள் ஊரில் லெச்சகட்டை என்போம்.
சென்னையில் நிறைய இடத்தில் இந்தத் தாவரத்தை அழகுக்காக வளர்க்கிறார்கள். முன்பு அறுசுவையில் இதைப் பற்றிப் படித்திருக்கிறேன். நேரில் காணக் கிடைத்த போது ஆச்சரியமாக இருந்தது.
அறுசுவையில் இருக்கும் 'சண்டிக்கீரை சுருள் பொரியல்' சமைத்துப் பார்க்க நினைத்தேன். அங்கிருக்கும் சமயம் அறுசுவைக்குப் போக முடியவில்லை. ;(

இது எப்போதும் என் ஃபேவரிட்'. கொஞ்சம் எண்ணெய் அதிகமாக இருந்தது. என் சமையல் அல்ல.
மீதியைத் தணலில் சுட்டு.. ஹும்ம்.. அந்த வாசனை இன்னும் நாசியில் இருக்கிறது.

அறுசுவையில் யாரோ என் 'ப்ரொஃபைல் பார்த்து எனக்கு ஆமை ஓட்டுக்குள் ஆஸ்மியும் அதை உடைக்கவென்று சுத்தியலும் வைத்து அனுப்பினீர்களே, நினைவு இருக்கிறதா? ;) அந்த ஆஸ்மி இது தான். மெத்தென்று வாயில் கரைந்தது. சர்க்கரை போதவில்லை. அதுவும் நல்லதுதான்.

எதுவும் முன்பு போல் இல்லை. தரம், சுவை மாறி விட்டிருந்தது. எனக்கு இன்னும் கருகிய நிறத்தோடு இருந்தால்தான் கவும் பிடிக்கும். கொண்டையும் அழகாக இல்லை. பரவாயில்லை,ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை. ;P

இது... பூஸ் & இமாவின் ஃபேவரிட். ;))) படம் தெளிவாக எடுபடவில்லை. செல்வியம்மா... வந்து பாருங்க, இதுதான் நீங்க வேலியெல்லாம் தேடின குறிஞ்சா.

Monday 14 March 2011

சல்மல்


ஒரு மழைநாள், கண்டிவாவியைச் சுற்றி இருந்த வீதியில் நடந்துகொண்டிருந்த பொழுது பெரிய பெரிய காய்களோடு நின்றிருந்த இந்த மரம் என்னைக் கவர, மழையையும் பொருட்படுத்தாது தரித்து நின்று எடுத்த படங்கள் இவை.
இந்தக் காய்களை முன்பெப்போதும் கண்டதில்லை. தரையில் கொட்டிக் கிடந்த பூக்கள்... சல்மல் - தம்புல்ல விகாரையில் புத்தர் பெருமான் முன்னால் அர்ச்சனைக்காக வைக்கப்பட்டிருந்து பார்த்திருக்கிறேன்.

மேலே அதே மலர் இந்த மரத்தில்.

இங்கு வந்ததும் இணையத்தில் தேடிப் பார்க்கலாம் என்று பெயர்ப்பலைகையையும் மரத்தோடு சேர்த்து படம் எடுத்து வைத்தேன்.

இதே தாவரம் மீண்டும் சில நாட்களில் வேறு ஓர் இடத்தில் என் கண்ணில் பட்டது, சென்னையில் எழும்பூர் அருங்காட்சியகப் பக்கம் பெரிதாக ஒரு மரம் நின்றது - நாகலிங்கப் பூ மரம்.

எனக்கு இது புதிதானாலும் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த தாவரமாக இருக்கலாம். இருப்பினும் பகிர்ந்துகொள்ளத் தோன்றியது.

சிங்களவர் இதை சல்மல் என்று அழைத்தாலும் இது அந்த மரம் அல்லவாம்.

காய்கள் பீரங்கிக் குண்டுகள் போல் இருந்தன. மேலதிக விபரம் இங்கே.

இந்த வீதியுலா ;) பற்றி வேறொரு சம்பவமும் இப்போது நினைவு வருகிறது.
அங்கங்கே மரங்களின் அடியில் அர்ச்சனைக்கான பொருட்களைச் சிலர் விற்றுக் கொண்டிருந்தனர். உரக்கப் போவதாகப் பயமுறுத்திக் கொண்டிருந்த மழைக்குப் பயந்து விரைந்து கொண்டிருந்த வேளை எதிர்பாராமல் என் முன்னே ஒரு கை அட்டைப்பெட்டி ஒன்றை நீட்டியது. தவிர்த்துவிட்டு நகர்ந்தேன். முன்னே சென்ற மருமகன் சட்டென்று நின்று என்னைத் திரும்பிப் பார்த்து ஒரு நக்கல் சிரிப்புச் சிரித்தார். "அவ சந்தனக்குச்சு விக்கப் பிடிச்ச ஆளப் பாருங்க,"
இமாவுக்கு ஊதுபத்தி வாசனை ஆகாது. ;( மீதிப் பயணம் முழுக்கச் சிரிப்பதற்கு இதுதான் தலைப்பாக இருந்தது அனைவருக்கும். ;)

Wednesday 9 March 2011

மலை பாம்பும் எழும்பூரும்


எங்க, ஒருக்கா இந்தப் பலகையில இருக்கிற தடிச்ச எழுத்துச் சொல்லக் கவனமா வாசியுங்க பாப்பம்!

அப்பிடி இல்ல, அப்பிடி இல்ல. ;))
கடகடவெண்டு ரெண்டு மூண்டு தரம் வாசிக்கவேணும். ;)

என்ன!! உங்களை அறியாமல் நடுவில ஒரு "ப்" போட்டீங்களா, இல்லையா? ;))

மாமல்லபுரம் போற வழியில முதலைப் பண்ணைக்குள்ள உள்ளிட்டம். இவருக்குப் பக்கத்தில இருந்த பாம்பார் இலங்கையராம். இவர் மலை பாம்பு. மலையில இல்லாட்டிலும் ஒரு குட்டிப் பாறையிலயாவது இருந்தார். பளபள எண்டு வடிவான சட்டை போட்டு இருந்தார்.

அதை விடுங்க, ஒருக்கா அதில எழுதி இருக்கிறதத் தட்டிப் பார்க்கப் போறன், என்னோட சேர்ந்து வாசிக்கிறீங்களா நீங்களும். ஒரு எழுத்தும் கூட்டாமல் குறைக்காமல் வாசிக்க வேணும்.

ஆயத்தமா!! ;)))
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மலை பாம்பு.
இவ்வகை பாம்புகள் இந்தியா முழுவதும் பசுமை காடுகளில் காணப்படுகிறது. நரி, பறவைகள், காட்டுப்பன்றி இதன் உணவாகும். 100 முட்டைகள் வரை இடும். 9 அடி முதல் 10 அடி வரை வளரக்கூடியது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எனக்கு இந்தத் தமிழ் விளங்கேல்ல!! சந்தேகமாக் கிடக்கு. மலை பாம்பும், பசுமை காடும் சரியெண்டால்... காட்டு பன்றியும், வளர கூடியதும் தானே சரியா வரும்!!

அதை விடுங்க. என்ட கணனியில எப்பிடித் தட்டினாலும் அந்தப் பலகையில இருக்கிற மாதிரி ஸ்டைலான 'ழு' எழுத வராதாம். '' வையும் 'ழு' வையும் கலக்கி விட்ட மாதிரி ஒரு எழுத்தாக் கிடக்கு. ;( 

இங்க மட்டும் இல்ல... ஒருநாள் 'எக்மோர்' போவம் எண்டு வெளிக்கிட்டம். 'திருகோணமலை' வெள்ளைகளால 'ட்ரிங்கொமலீ' ஆன மாதிரி 'எழும்பூர்', 'எக்மோர்' ஆகீட்டுது எண்டது ஒருவரும் சொல்லாமலே விளங்கீட்டுது.

அங்க முதல் என்ட கண்ணில பட்ட ஒரு கடைல இருந்த பெயர்ப் பலகையை வாசிச்சு... "எழும்பூருக்கு எப்பிடி..." நான் முடிக்கக் கூட இல்ல; கூட வந்த எங்கட குட்டி ஃப்ரென்ட் பீட்டர், என்ன கேக்க வெளிக்கிடுறன் எண்டு விளங்கிப் போய் "டீச்சர்!!!!! ஆரம்பிச்சுட்டீங்களா!! முடீ..யல," எண்டவும் வாயை இறுக்கி மூடிக்கொண்டு இருந்தாச்சுது. 

உங்களிட்டயாவது கேப்பம். இந்த 'ழு' வை யார் கண்டுபிடிச்சு இருப்பாங்கள்!!! எந்த font ல தட்டினால் இப்பிடி வரும்!!! அகராதி பிடிச்ச ஒரு எழுத்தாக் கிடக்கு. ;( அகராதியிலயும் தேடிப் பார்த்திட்டன், காணேல்ல. ;((

Tuesday 8 March 2011

மனதோடு மழைக்காலம் - 2


மச்சாள் வீட்டில் பழைய ஆல்பங்களைப் புரட்டிக் கொண்டிருந்த சமயம் இவை கண்ணில் பட்டன.  கூட அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த சின்னவர் சொன்னார் "Superb Mum, you made this didn't you?" ஆமாம், நான் செய்ததுதான். சந்தோஷமாக இருந்தது படத்தைக் காண.

1992 அல்லது 93 ஆக இருக்கவேண்டும்; மருமகள் முதல்நன்மைக்காகச் செய்தது. அப்போ அங்கு உதவிக்குப் புத்தகங்களோ இணையமோ இருக்கவில்லை. மனம் போன போக்கில் செய்தது இது.

பட்டர் கேக் & பட்டர் ஐசிங்
இலைகளும் மகரந்தங்களும் செயற்கைதான்.
அட்டையில் பல்லுகள் போல் வெட்டி வைத்து பைபிள் முகப்பில் இழுத்து விட்டேன். அதே போல் சிறிதாகப் பல்லுகள் வெட்டி தாள்கள் வரைந்தேன்.
புக்மார்க் - பேப்பர் ரிபன்.
குருசினைச் சுற்றி உள்ள நீள்சதுர பார்டர் வெள்ளி அட்டையில் வெட்டி எடுத்தது.
பூக்கள், மீதி ஐசிங் எல்லாம் 'ஸ்டார் நொசில்ஸ்' கொண்டு வைத்தேன்.

செபமாலை வைப்பது சிரமமாக இருந்தது நினைவு வருகிறது. ஒரு இடத்தில் ஆரம்பித்து மணிகள் வைத்துக் கொண்டு வர.. தேவையான இடத்தில் முடியாமல் மீதம் வரும் போல் தோன்றிப் பயமுறுத்தியது. ;) ஒரு மாதிரி வளைத்து நெளித்துக் கொண்டுபோய் அழகாக முடித்துவிட்டேன்.

அப்போ இருந்ததை விட இப்போ படத்தைப் பார்க்க இன்னும் அதிக சந்தோஷமாக இருக்கிறது.
படத்தைப் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்தவர்களைப் பாராட்ட வேண்டும்.

அங்கு இருப்பவர் என் மருமகள், இப்போ மணமாகி கனடாவில் இருக்கிறார். அந்தச் சட்டை.. மாமி தைத்தது. அழகாகத் தைப்பார். அவர் எனக்கு மட்டும்தான் எதுவும் தைத்துக் கொடுத்தது இல்லை என்று அடிக்கடி சொல்வேன். ஹும். ;(

கேக் போர்ட்... என் தந்தையார்தார்  ஊரில் கேக் செய்யும் எல்லோருக்கும் கேக் போர்ட் செய்து கொடுப்பார். ஆசிரியர், இளைப்பாறியதன் பின் அவரது பொழுதுபோக்குகளில் இதுவும் ஒன்றாக மாறி இருந்தது. இதில் அவருக்கு நல்ல வருமானமும் வந்தது.
ஆனால் இங்கு உள்ளது என் சமையலறைக்காக அப்பா செய்து கொடுத்த பாண் வெட்டும் பலகைதான். அதுதான் சரியான அளவாக இருந்தது. தேயிலைப் பெட்டியில் ஒட்டிவரும் வெள்ளிக் கடதாசியை ஒட்டி எடுத்தேன்.

Monday 7 March 2011

என் மனதோடு ஓர் மழைக்காலம்

விடுமுறை முடிந்து வீடு வந்து மாதம் ஒன்றாகிவிட்டது. இனிமையான பலவிடயங்கள் ஓரளவுக்கு மேல் சுவைக்க இயலாது சுவை தெரியாத சுவடுகளாக மட்டும் தங்கிவிட்டன.

ஆனாலும் கிடைத்தற்கரிய பாக்கியம் இந்தப் பயணம்; கடல்கடந்து வந்தமையால் நாம் இழந்து போன பல தருணங்களுக்கும் ஈடுகட்டும் விதமான மனதோடு என்றும் தங்கிவிட்ட மழைக்காலம்.

விடுமுறை என்று கிளம்பியதே எதிர்பாராதது. இந்த இவ்வருட இறுதியில்தான் போவதாக இருந்தது. திடீரென்று ஒரு அதிகாலை வேலைக்குக் கிளம்புமுன் க்றிஸ் "அம்மாவைப் பார்க்க இப்போதே போய் வருவது நல்லது என்று தோன்றுகிறது.  ஒரு வருடம் வெகு தொலைவில் இருப்பது போல இருக்கிறது," என்றார்.

எதையும் ஆற அமர யோசித்து முடிவெடுக்கும் நாங்கள் திடீரென்று நினைத்துக் கொண்டு செய்த காரியங்களில் இதுவும் ஒன்று.

அன்று மதியம் பாடசாலை முடிந்து வருகையில் பயணச் சீட்டுக்கு ஏற்பாடு செய்து விட்டு வந்தோம். அந்த 20 நிமிட இடவேளையில் தோன்றியது தான் இந்தியப் பயண யோசனையும்.பிற்பாடு சின்னமகனும் எங்களோடு இணைந்து கொண்டார். ஊருக்குப் போவதற்காக கிரிக்கட் கோச்சிங்கையும், விடுமுறை கிடைக்காத நிலையில் வேலையையும் விட்டுவிட்டுக் கிளம்பினார்.

பொன்விழா 26ம் தேதி, மறுநாள் எங்கள் மணநாள். பயண ஆயத்தவேலைகள் இருந்தமையால் இம்முறை பெரிதாக எதுவும் செய்யவில்லை.

ஊரில் இறங்கியதும் நேரே வீடு செல்லவில்லை. நீர்கொழும்பில் என் தந்தையின் சிறியதந்தையாரைப் போய்ப் பார்த்தோம். அப்படியே கொழும்பில் என் பிரியத்துக்குரிய ஆசிரியை, என்னைக் கற்பித்த பழைய அதிபர் எல்லோரையும் பார்த்துக் கொண்டு (இதன் நடுவே பாதிப்பில்லாமல் ஒரு சிறு வாகனவிபத்து.) கிட்டத்தட்ட 26 மணி நேரம் கழித்து வீடு போய்ச் சேர்ந்தோம்.

மழை.. விடாது மழை. சோவென்று இராவிடினும் விடாது பெய்துகொண்டே இருந்தது. எங்கும் வெள்ளம்.

அதுவும் நல்லதற்கே என்று இப்போது தோன்றுகிறது. வெளியே அதிகம் செல்லாமல் மாமியோடு அதிக நேரம் செலவளிக்கக் கிடைத்தது.

இரண்டாம் குழந்தைப் பருவத்தில் இருந்தார்.

அழகான குழந்தைச் சிரிப்பு, குழந்தைபோல் பொக்கை வாயைத் திறந்து சொல்வதைத் திருப்பிச் சொல்லிக் கொண்டு உட்கார்ந்திருப்பார்.

குளிக்க வைத்து, ஊட்டி விட்டு... எல்லோருக்கும் ஏவல் பார்த்தவர், மற்றவர் தயவில் தங்கி இருந்தார். ஆனாலும் சந்தோஷத்துக்குக் குறைவில்லை. அவர் இருக்கும் இடம் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும் எப்போதும். இயாலாமையைக் காட்டிக் கொள்ளமாட்டார். யாரிடமும் உதவி கேட்கப் பிடிக்காது. யாருக்கும் சிரமம் கொடுக்க வேண்டாம் என்று நினைப்பார்.

முன்பே தொலைபேசியூடாகக் கேட்டிருக்கிறோம், எப்போதும் 'நாட்டுக்குச் சமாதானம் தாரும்' அல்லது 'எனக்குச் சமாதானத்தைத் தாரும்,' என்று சத்தமாகப் பிரார்த்தித்தபடியே இருப்பார். உணவு உண்கையில் கூட பிரார்த்திப்பது தெரியும். இதன் கருத்து... வாழ்ந்தது போதும் என்பதா? பழைய எண்ணங்களில் இருந்தாரா? எதுவாக இருப்பினும் ஒரு நிமிடம் விடாது உதடுகள் இந்த வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டே இருந்தன, ராத்திரிகளில் கூட.

விடுமுறையில் நிறைவேற்றவென்று சில காரியங்கள் எண்ணி இருந்தேன். அனைத்தும் நிறைவேறாவிடினும் முக்கியமானவை ஆயிற்று. தவிர்க்க இயலாது சிலது தவறிப் போயிற்று.

எனக்கும் மகனுக்கும் ஆளுக்கொரு விநோத ஆசை வந்தது. ;) நடக்காது என்று நினைத்திருக்க இறுதித் தருணத்தில் நிறைவேறின இரண்டும். வேறு ஒரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன் அவை பற்றி. ;)

க்றிஸ் மனதில் ஒரு எண்ணம் எப்போதும் இருந்தது. அது நிறைவேறிய விதம்தான் நம்ப இயலாததாக இருக்கிறது. இது ஒரு தாயும் மகனும் பற்றிய கதை.

என் மாமனார் எங்கள் திருமணத்துக்கு முன்பாகவே காலமாகிவிட்டார். க்றிஸ்ஸின் மூன்று சகோதரர்கள் இப்போ இல்லை. இவை எல்லாம் கடந்து வந்தும் எப்போதும் சொல்வார் "என் அம்மா என் நினைவில் எப்போதும் உயிரோடு சிரித்த முகமாக மட்டும் தங்கிவிட வேண்டும்,' என்று.

ஏழு வருடங்கள் முன்பாக ஊர் சென்றிருந்தோம். புறப்பட மூன்று நாட்கள் இருக்கையில் 'அதிக சுகவீனமாக இருக்கிறார். விரைவில் வர முடிந்தால் நல்லது,' என்றார்கள் வீட்டார். பயண சீட்டை முன் கொணர முயற்சித்துக் கொண்டிருக்கையில் மீண்டும் செய்தி, "இப்போ பரவாயில்லை, நீங்கள் முன்பு செய்த ஏற்பாட்டின் படி வந்தால் போதும்,' என்றார்கள்.

நாம் அங்கிருந்த ஆறு வாரங்களில் உடல்நிலையில் ஆச்சரியமான முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. மாமியின் எண்பதாவது பிறந்தாநாளுக்குக் கிளம்பலாம் என்றிருக்க, மூத்தவர் பாட்டியை இங்கு அழைக்கலாம் என்பதாக யோசனை சொன்னார். க்றிஸ் அரை மனதாக இருந்தார். வயதானவை அலைக்கழிக்க வேண்டுமா? இங்கு அவருக்குக் காலநிலை ஒத்து வருமா? அவருக்குத் தேவையான மருந்துகள் இராதே. மறுமுறை  தொலைபேசியில் அழைக்கையில் வீட்டார் சொன்னார்கள்.. எங்கெல்லாமோ தேடித் தன் கடவுச்சீட்டைக் கண்டு பிடித்து வைத்திருந்தார்கள்.

சக்கர நாற்காலியில் இங்கு வந்து ஆறு வாரங்கள் எங்களோடு தங்கினார். நண்பரொருவர் அவரது தாயார் பயன்படுத்திய நாற்காலியை இரவல் கொடுத்திருந்தார்.

அந்த ஆறு வாரங்களில் தாயும் மகனும் எத்தனையோ பேசினார்கள். சமயத்தில் தோழர்கள் போல் தெரிவார்கள். சில சமயம் ஒரு தந்தையும் மகளும் பேசிக் கொள்வது போல இருக்கும் பார்க்க. அப்போதான் க்றிஸ் தன் மனதிலிருப்பதைச் சொன்னார். ம்.. அம்மா தன் நினைவில் எப்போதும் சிரித்த முகமாக இருக்க வேண்டும் என்பதை. அவரது மரணச் சடங்கிற்காக மட்டும் வருவதாக இருந்தால் வர மாட்டார் என்பதையும் சொன்னார். மாமியும் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டதாகத் தான் தெரிந்தது. கிளம்பப் பிரியமில்லாது கிளம்பினார் இங்கிருந்து.

இதோ இம்முறை அவரோடு மூன்று வாரங்கள்... இனிமையாகக் கழித்துவிட்டு வந்தோம். மகனைக் கண்டதும் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சிப் புன்னகை பூத்தது. அதிகம் பேசாவிட்டாலும் எங்கள் அருகாமையை விரும்பினார். கிளம்ப இரண்டு நாட்கள் இருக்கையில் மனதைத் தயார் செய்ய எண்ணி, "அம்மா.. நான் இன்னும் ரெண்டு மூண்டு நாளில வெளிக்கிட்டுருவன். நியூசிலாந்து போறன் என்ன."என்றார். "ஆ!" என்று தலையை ஆட்டினார் தாயார். "போகத்தானே வேணும்," அப்போதும் சின்னச் சிரிப்பு.

கிளம்பிய அன்று காலை மீண்டும் "இன்னும் கொஞ்ச நேரத்தில வெளிக்கிட்டுருவன்," எனவும்.. "போய்ட்டு!!" என்று சந்தேகமாக வந்தது வார்த்தை. இனி எப்போ பார்ப்பது என்றா? அல்லது வருவாயா? என்று கேட்க நினைத்தாரா? அப்போதும் கூட அவரது அழகுச் சிரிப்போடுதான் இருந்தார்.

பத்து நாட்கள் இந்தியாவில் இருந்தோமே.. எல்லாமே ஒழுங்காகத் தான் இருந்தது. இங்கு வந்த மறுநாள் சொன்னார்கள் 'அம்மாவுக்கு கொஞ்சம் சுகமில்லை. தண்ணிச் சாப்பாடு மட்டும் தான் இறங்குது,' கொஞ்சமாக மனது கவலையானது. ஆனாலும் எதிர்பார்க்கவில்லை எதையும். கிளம்பும்போதும் நன்றாகத்தானே இருந்தார்கள்.

மறுநாள் பாடசாலையில் இருக்கையில் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. பேசாமலே புரிந்து விட்டது. ;(

மகன் விருப்பப்படி ஆகவேண்டும் என்று காத்திருந்தாரா? நாம் கிளம்பியதும் உணவை நிறுத்திவிட்டாராம். இந்தியப் பயணமும் முடித்து வரும்வரை குழப்ப வேண்டாம் என்று காத்திருந்ததுபோல் இருந்தது மாமியின் முடிவு.

எல்லாம் நல்லதற்கே என்று நினைக்க முயற்சித்தாலும் மனதில் ஒரு சிறு வலி எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கிறது.

Thursday 3 March 2011

கேக்! கேக்!

மீதிப் படங்களும் கிடைத்துவிட்டன.
செபா வெட்டிய கேக் இதோ \/
  செபாவும் திரு செபாவும் \/ ;)

Wednesday 2 March 2011

எங்கட வீட்டுக் குட்டி ஏஞ்சல்

அப்பாடா! 
மடிக்கணணி வந்தாச்சுது. ;)

இதுவரைக்கும் 'லாப்டாப்' என்று அடிச்சுக் கொண்டு இருந்த இதயம் இப்பதான் திரும்ப 'லப்டப்' எண்டு அடிக்கத் தொடங்கி இருக்கு. ;) 

அந்தச் சந்தோஷத்தோட... எங்கட வீட்டுக் குட்டி ஏஞ்சல் ஒரு நாள் 'டே ஸ்பென்ட்' பண்ண வந்த போது செய்த 'டீ ஷேட் ட்ராஸ்ஃபர்', உங்கள் பார்வைக்கு. ;) 

எனக்குக் கிடைக்கிற நிறையக் குட்டிக் குட்டிச் சந்தோஷங்களை 'அறுசுவை' ரெண்டு, மூண்டு மடங்காகப் பெருக்கித் தந்திருக்கு. நிறையவே கடமைப்பட்டிருக்கிறன். 

சரி, விடுறன் உங்களை. நிம்மதியா வேலையைப் பாருங்கோ.