Sunday 28 July 2013

பூட்டிய கதவு

காலையில் கோவிலுக்குக் கிளம்பும் அவசரத்தில் கண்ணாடியை எடுக்க மறந்து போனேன். திரும்பக் கதவைத் திறக்க முயன்றால் இயலவில்லை. ;( கண்ணாடி இல்லாமலே போய் வந்தாயிற்று.

திறக்கவே இயலவில்லை. பூட்டை மாற்றலாம் என்றால்... அது அறையின் உட்பக்கமிருந்துதான் மாட்டினோம். உள்ளிருந்துதான் மாற்றவும் வேண்டும். பிறகு ஹாச்ஸா (hacksaw), க்ரைண்டர் (இது சமையலறை க்ரைண்டர் இல்லை) எல்லாம் கொண்டு ஒரு பாதியை தீப்பொறி பறக்க அறுத்து, திருகி, மீண்டும் மறு பாதியை அறுத்து... நெம்பி...
 ஒரு விதமாக துண்டு துண்டாகப் பிடுங்கி எடுத்தோம்.
 புதிய பூட்டும் வாங்கி வந்தாயிற்று. பழைய துவாரம் சிறிதாக இருந்தது.
 பெரிதாக்க... புகை மண்டலம்.
கதவின் மறுபக்கம்
 மதியம் வேலை முடிந்தது.
 புகை அடையாளங்களைச் சுத்தம் செய்தேன். ஆனால் ஆங்காங்கே வாள், சுத்தியல் தட்டுப் பட்ட அடையாளங்கள் நிறையவே இருக்கின்றன. கதவை ஒரு முறை பெய்ன்ட் செய்ய வேண்டும் போல இருக்கிறது.
 கோடை வரும் வரை அப்படியே இருக்கட்டும்.

Saturday 20 July 2013

என் வலி தனீ... வலி!!

துடைப்பம்.....
 
 
 
 
பிஞ்...சுரும்!

Thursday 18 July 2013

அரளி காத்த இமா!

செந்தீயின் நாப்போல செழுந்தளிர்கள் ஈன்று
திருமாலின் நிறம் போலப் பசிய தளை பொதுளி
மங்காத நெடுந்தெருப் போல கிளைகள் பல ஓச்சி
நடுக் காட்டில் ஓர் இலவம் மரம் வளர்ந்ததன்றே! (றேயா றோவா!! யாரவது சொல்லுங்க.) ;))
மஞ்சு தொட வளர்ந்த அந்த இலவமரமதனில்
மரகத மாமணி போலப் பசுமை நிறம் வாய்ந்த
கொஞ்சு மொழிக் கிஞ்சுக வாய் அஞ்சுகம் ஒன்றினிதே
குடியிருந்து நெடுநாளாய் வாழ்ந்துவந்ததன்றே!

கர்ர்ர்... மீதிப் பாடல் நினைப்பு வர மாட்டேன் என்கிறது. தெரிந்தவர்கள், மேலே உள்ள வரிகளில் பிழை இருந்தால் சொல்லுங்கள். அப்படியே மீதியையும் சொல்லி உதவுங்கள்.

சித்ராசுந்தரின் பொழுதுபோக்குப் பக்கங்கள் - அரளிப் பூ / பட்டிப் பூ என்று ஒரு இடுகை. அதன் கீழ் கருத்துகளில் 
//சிலர் கோபத்தில் அரளி விதையை..... /// 
//அது வேறு இது வேறு.// 
//பொன்னரளி// அது இது என்று பேசிக் கொண்டு இருந்தோம். இப்போதும் இருக்கிறோம். 

காலையில் அது நினைப்பு வர என் செடியில் உள்ள காய்கள் பழுத்திருக்கிறதா என்று போய்ப் பார்த்தால்.... ஐயஹோ!! என்ன கொடுமை இது! 
இ.கா.கி ஆனேனா நான்! ;((
காற்று ஜோ... (பன்னர்கட்டா ஜோ இல்லை இது.) என்று வீச, மரம் தலையை ஆட்டு ஆட்டு என்று ஆட்ட, ஹாயாக காயிலிருந்து ஒவ்வொரு வித்தாகக் கழன்று, சுழன்று, கொக்கு பறபற, கோழி பறபற மயிலே பறபற, அரளியே பற... என்று பறந்துகொண்டிருந்தது.
ஓடிப்போய் காமராவை எடுத்து வந்தால், சுட முடியாமல் காற்று செடியை அசைத்தது.
ஒரு வழியாக படம் எடுத்து... காயையும் கவர்ந்தாயிற்று.
காய் / கனி
காய்ந்த கனி
குட்டி பாரசூட்... நட்டுப் பார்க்க வேண்டும்.
பூக்கள் - படம் கண்ணில் படமாட்டேன் என்கிறது. கிடைக்கும் போது இங்கு சொருகி விடுகிறேன்.

நன்றி _()_

Sunday 14 July 2013

ஃபீஜோவா தயாரிப்புகள்

ஒரு வகையில் இரு வகைகளில் தொடர் பதிவு இது. ;))

1. என் வீட்டுத் தயாரிப்பு; ஃபீஜோவா வரிசையில் அடுத்து வருகிறது.
2. ஸாதிகாவின் கண்டுபிடியுங்கள்!! இடுகையையுடன் சிறிது தொடர்பு உள்ளது. 

இடுகையைத் தயார் செய்துவிட்டுப் பார்த்தால் ஸாதிகாவின் இடுகை வெளியாகி இருந்தது. ;) அவர்கள் பதில் சொல்லும் வரை என்னுடையதைப் பின்போட்டேன்.

ஃபீஜோவா ரோல் அப்
 
நன்கு கனிந்த ஃபீஜோவா பழங்களின் சதைப்பகுதியைச் சுரண்டி, சிறிது பழுப்புச்சீனி & கறுவாத்தூள் சேர்த்து 'லெதர் ரோல் அப்' ஆக்கி பாக்கட் செய்து வைத்திருக்கிறேன்.

வாழைப்பழம், ஆப்பிள் போலவே ஃபீஜோவாவும் காற்றுப் பட்டால் கறுத்துவிடும். அந்த நிறமும் சீனி, கறுவா நிறமும் சேர்ந்த நிறம் இது.

கலவையை டீஹைட்ரேட்டர் தட்டில் ஊற்றி, பிரிக்க முடியும் அளவு உலர்ந்ததும் பிரித்து, வெயில் கிடைத்த போது வெயிலிலும் மீதி அவணிலுமாக உலரவைத்தேன்.

'ரோல் அப்' இனிப்பும் புளிப்புமாக நன்றாக இருக்கிறது. இப்போ ஃபீஜோவா காலம் முடிந்துவிட்டாலும் என்னால் சுவைக்க முடிகிறது.
 
கடிக்கும் பதத்தில் இருந்த பழங்களில் வற்றல் போட்டேன். சுவையில் நேத்திரங்காய் சிப்ஸிற்கும் இதற்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை.

Friday 12 July 2013

உயரமாய் இருக்கிறது; பயமாய் இருக்கிறேன்!

தேதி - 07/07/2013
இடம் - இமாவின் சமையலறை
செபா:-  பின் வீட்டுக் கூரையில என்ன? குரங்கா?
இமா:- பூனை அது. ;) ஏறீட்டு இறங்கத் தெரிய இல்ல. கொஞ்ச நேரமா உலாவுது. முஸ்பாத்தியா இருக்கு.
படம் எடுக்கலாம். கட்லட் பொரிக்க எண்ணெயை அடுப்பில வைச்சிருக்கிறன். மறந்தால் வீடு சரி. ஒரு செட் போட்டுவிட்டு பிறகு படம் எடுக்கப்போறன்.
செபா:- இதென்ன வால் இப்பிடி இருக்கு?
இமா:- ம். அது சீனத்துப் பூனை போல. காற்றும் வீசுது இப்ப.
பூனை:- இந்தச் சனம் என்னையே பார்க்குறாங்க. என்ன யோசனையோ தெரியாது. பிடிச்சுப் பொரிக்க முதல் கெதியா ஓடிரவேணும்.
மீதிக் கதை வேண்டுமானால்... இங்கே

Wednesday 10 July 2013

வாதுமை கேக்

சுனாமியின் போது மட்டுநகரிலிருந்த என் தந்தையின் சகோதரி குடும்பத்தை இழந்து போயிருந்தோம். இங்கும் விடுமுறைக் காலம் அது. தொலைபேசியில் விசாரித்து விபரம் அறிந்து கொண்டு என்னைப் பார்க்க வந்தார் சக ஆசிரியர் (ஆசிரியை அல்ல) ஒருவர். வரும்போது ஒரு கேக் கொண்டுவந்தார். இவர் நன்றாகச் சமைப்பார். கேக் சுவை குறிப்பைக் கேட்கத் தூண்டியது. 

விஸ்கி சேர்க்க வேண்டும் என்பதுதான் சிக்கலாக இருந்தது. அதற்கு எங்கே போவது! பிறகு இதற்காகவே சின்னதாக ஒரு போத்தல் வாங்கி வைத்தேன்.

பலமுறை சமைத்திருக்கிறேன். பாரமில்லாது, மெத்தென்று இருக்கும் இந்த கேக் பாடசாலையில் அனைவருக்கும் பிடிக்கும். சமீபத்திலும் செய்தேன். குறிப்பைப் பகிரத் தோன்றியது

Walnut Cake

தேவையானவை

soft butter - 200 கிராம்
பழுப்புச்சீனி - 150 கிராம்
சீனிப்பாணி (treacle) - 4 மே.க
முட்டை - 2
மா - 150 கிராம்
பேக்கிங் சோடா - 2 சிட்டிகை
ஏலக்காய்த்தூள் - 2 சிட்டிகை
பால் - 4 மே.க
விஸ்கி - 4 மே.க
சிறிதாக நறுக்கிய வாதுமை - 140 கிராம்
  • அவணை 160°c யில் சூடு படுத்தவும்.
  • பட்டர், சீனி, சீனிப்பாணி மூன்றையும் குழையும் வரை கலக்கவும்.
  • முட்டையைச் சேர்த்து அடிக்கவும்.
  • மா, பேக்கிங் சோடா, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் குழைக்கவும்.
  • பாலையும் விஸ்கியையும் சேர்த்து நன்கு அடிக்கவும்.
  • வாதுமையைச் சேர்த்துக் கலந்துவிடவும்.
  • வட்டமான கேக் தட்டில் ஊற்றி 50 நிமிடங்கள் வேகவிடவும்.
சில சமயங்களில் 180°யில் 25 - 30 நிமிடங்கள் வைத்து எடுப்பேன். கொஞ்சம் புடிங் பக்கம் இருக்கும்; ஆனால் கேக்கை விட இதற்கு வீட்டில் வரவேற்பு அதிகம்.
 
இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரியமான குட்டிப் பையனுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். ;)