Thursday 28 December 2017

டேப் & டிஸ்பென்சர்

 நத்தார் அன்பளிப்புகளைப் பொதிகளாகச் சுற்றும் சமயம் இடைநடுவே 'டேப்' தீர்ந்து போயிற்று. புதியதை மாற்ற‌ முயன்றேன். என் சின்னக் கைகளுக்கு பிரயத்தனமாக‌ இருந்தது. கர்ர்... மாடியிலிருந்து இறங்கி வந்து, தோட்டத்தில் நின்றிருந்த‌ மனிதரிடம் உதவி கேட்டேன். அவரும் பழையதைக் கழற்ற‌ சிரமப்பட்டார்.
 திடீரென்று தோன்றிற்று... புதியதை மாட்டிவிட்டுத் தள்ளினால் வராதோ! வந்தது. புதியதும் தானாகப் பொருத்தமான‌ இடத்தில் சென்று அமர்ந்தது.
எல்லோரும் இப்படித் தான் செய்வார்கள் போல‌. நமக்குத்தான் தாமதமாக‌ வெளித்திருக்கும் என்று தோன்றிற்று. :‍)

Wednesday 27 December 2017

காகிதச் சொடுக்குகள்

புதினமாக‌ ஏதாவது தலைப்பு வைத்தால் நிறையப் பேரைக் கவரலாம். :-)

முன்பு ஒரு சமயம் பாடசாலைக்கு யாரோ ஒரு தொகுதி விளையாட்டு அட்டைகளை வழ்ங்கியிருந்தார்கள். வருட‌ இறுதி வாரம், சின்னவர்களுக்கு ஆளுக்கொன்று கொடுத்து குறிப்பிட்ட‌ பகுதியைப் பிரித்து அதில் கொடுக்கப்பட்டிருந்த‌ விளக்கக் குறிப்புகளைப் பயன்படுத்தி 'கிராக்கர்ஸ்' செய்யச் சொன்னோம். எனக்கும் அந்தச் சத்தம் பிடித்திருந்தது. சில நாட்கள் முன்பாக‌ எனக்கென்று எடுத்து வைத்திருந்த‌ கிழிந்து போன‌ வெடியைக் கண்டேன், ஓர் பெட்டியில். இன்று இந்தப் பதிவுடன்... அந்தக் காகித‌ வெடி குப்பைக்குப் போகிறது. :‍)

செய்முறை 

ஒரு 4A கடதாசியில் 4 செ.மீ நீளத் தீரைகள் வெட்டிக் கொள்ள‌ வேண்டும்.

அதை ஒரு முறை இரண்டாக‌ மடிக்க‌ வேண்டும்.

பிறகு விரித்து வைத்து...
ஒவ்வொரு பக்கத்தையும் தனித்தனியே நடுக் கோட்டுடன் இணையுமாறு பிடித்து ....

உள்நோக்கி மடித்துக் கொள்ள‌ வேண்டும்.


இப்போது மொத்த‌ அகலம் 2 செ.மீ இருக்கும்.

மீண்டும் நடு மடிப்பு வழியே மடிக்கவும். இப்போது அகலம் 1 செ.மீ  இருக்கும்.
மீண்டும் இரண்டாக‌.....
....பின்பு நான்காக‌ மடித்து எடுக்க‌ வேண்டும்.
W  / M  வடிவில் மடிப்பது முக்கியம்.


M கீழ் நடு மடிப்பை இடது கையில் பிடித்துக் கொள்ளுங்கள். மடித்திருக்கும் மேல் துண்டுகள் இரண்டும் இடது கைக் கட்டை விரல் & சுட்டு விரல்களின் மேல் இருக்கும். இப்போது வலது கையை மேல் நோக்கி 
இழுத்தால், 'டிக்' என்று சொடுக்குச் சத்தம் கேட்கும். கடதாசி உயிரை விடும் வரை வேலை செய்யும் இந்த‌ க்ராக்கர்.

இங்கே பதிவு செய்தால் தேடுவது சுலபம்; நட்பு வட்டத்திற்குக் காட்ட‌ வேண்டி இருந்தாலும் சட்டென்று கைபேசியில் தேடிக் கொடுக்கலாம்.... என்பது வரை தட்டச்சு செய்து தயாராக‌ இருந்தது இடுகை. படங்கள் மட்டும் பிற்பாடு எடுத்து இணைக்க வேண்டி இருந்தது.

24 /12/2017
வருடா வருடம் நானே 'க்றிஸ்மஸ் க்ராக்கர்ஸ்' தயார் செய்வேன். பெரும்பாலும் அவை இன்னாருக்கு இன்னது என்பதாக‌ தனித்துவமான‌ அன்பளிப்புகள் & சிரிப்புத் துணுக்குகளுடன் தயாராகும்.

இம்முறை சின்னவர்களை ஏமாற்றக் கூடாது. கடைசி நேரத்தில் போய்த் தேட‌, க்ராக்கர் ஸ்னாப்ஸ்' கிடைக்கவில்லை. மனம் தளராமல், 'சரி, ஒரு வித்தியாசத்திற்கு காகிதச் சொடுக்குகளை வைக்கலாம்,' என்று செய்ய‌ ஆரம்பித்தேன்.

க்ராக்கர்ஸை எடுக்கும் போது எல்லோரும் எங்கே பிடித்து இழுப்பது என்று தலையைப் பிய்த்துக் கொண்டார்கள். ;‍) சாதாரணமாக‌, சொடுக்குகளின் முடிவுகளைக் கையில் பிடித்துக் கொண்டு இழுத்தால்தான் சப்தத்தோடு வெடிக்கும். இம்முறை பிய்த்து உள்ளீட்டை எடுத்துக் கொண்டு பிறகு சொடுக்கி விளையாடினோம். :‍)

Tuesday 26 December 2017

செரிப்பழங்கள்

இந்த நொடி... என் சிந்தனையில் ஒலிக்கிறது சித்ராவின் இனிய‌ குரலில், "ஐஸ் க்ரீம் கடையில் செரிப்பழம் இருப்பது அரை நொடி வாழ்க்கையடா!" என்கிற‌ வரிகள்.

வாழ்க்கை கூட‌ அப்படித்தான். ஒரு நொடி அழகு; மறு நொடி அழுகை.

இந்த‌ வருடம் ஆரம்பம் முதல் இதுவரை, இந்தத் தத்துவம் சுத்தியலால் ஒவ்வொரு அடி வாங்கும் போதும் ஆணி சற்று ஆளமாக‌ உள்ளே இறங்குமே, அப்படி இறங்கிக் கொண்டே இருக்கிறது.

செபா மருத்துவமனையிலிருந்த‌ சமயம், காலை வரை பிரயாசையுடன் என்றாலும் நடந்து குளியலறை வரை சென்ற‌ வயதான‌ பெண்மணி பதினொரு மணியளவில் வந்து குழுமிய‌ உறவினர் கூட்டத்துடன் பேசியபடி அமைதியாகக் கண் மூடினார். எதிர்க் கட்டிலிலிருந்து மெதுவே நிகழ்வுகளைக் கவனித்தபடி இருந்தோம் நாம். மெதுவே உறவுகள் கலைந்து போய் அனுமதிக்க‌, வைத்தியசாலை ஊழியர்கள் அவரை அறையிலிருந்து வெளியே எடுத்துப் போனார்கள். படுக்கை சுத்தம் செய்யப்பட்டு அடுத்த‌ நோயாளியை ஏற்கத் தயாராகிற்று.

என் பெற்றோர்களுக்காக‌ ஓய்வு இல்லத்தில் அனுமதிக்கான‌ பத்திரங்களை நிரப்பிய‌ வண்ணம் இருந்த‌ சமயம், அந்த‌ அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. "நீங்கள் உள்ளேயே இருங்கள். ஒருவரை வெளியே எடுத்துப் போகப் போவதாகத் தெரிகிறது," என்றார் அலுவலர். இம்முறை அவரது அறை - ஓரிரண்டு நாட்களில் இன்னொருவரை அனுமதிக்கத் தயாராகி இருக்கும் என்னும் நினைப்பு வந்தது.

ஐப்பசி 18ம் தேதி - அம்மா பிரிந்ததும் அவரை பார்லருக்கு எடுத்துப் போயாயிற்று. குளிர் அறையில் அவர் அமைதியாகத் துயில் கொள்ள‌, நாம் பிரிவுபசார‌ வேலைகளில் மும்முரமானோம். பத்தொன்பது... இருபது... கிட்டத்தட்ட‌ இருபது பேர், அந்த இல்லத்தில் இணைய அறைகளுக்காகக் காத்திருப்பது நினைவை உறுத்தியது. அட்டைப் பெட்டிகள் எடுத்துப் போய் உடமைகள் எல்லாவற்றையும் அடுக்கி, அறையைக் காலி செய்து கொடுத்தோம். மருத்துவமனையால் இரவலாகக் கொடுக்கப்பட்டிருந்த‌ குளியல் நாற்காலி, நடை வண்டி, ஒட்சிசன் இயந்திரம் எல்லாவற்றையும் உரியவர்களுடன் தொடர்பு கொண்டு திருப்பியாயிற்று. (இவை இன்னொருவர் பயன்பாட்டுக்காக அனுப்பப்பட்டுவிடும்.) ஒரு வாரம் கழித்து இறுதிச் சடங்குகள் முடிந்து போய்ப் பார்க்க‌, அந்த‌ அறை அடுத்தவரை வரவேற்கத் தயாராக‌ இருந்தது. இபோது இன்னொரு பெண்மணி அங்கு குடியிருக்கிறார். இந்த‌ அறைக்கு வரும் எவரும் குணமாகி வீடு திரும்புவது  கிடையாது என்பது கசப்பான‌ உண்மை.

முப்பத்தோராம் நாள் காரியம் ஆகி மெதுவே மனது வேலைகளில் ஈடுபட‌ முனைகையில் ஊரில் குடும்பத்தினர் இல்லத்தில் சடுதியாக‌ ஒன்றன்பின் ஒன்றாக‌ இரு இழப்புகள்.

விடுமுறையைத் தனியாக‌ வீட்டில் கழிக்க‌ இயலுமென்கிற‌ தைரியம் இருக்கவில்லை. ஒரு சிறு பயணம் கிளம்பினோம்.  தோட்டமொன்றில் பழம் பிடுங்கப் போனோம்.  அங்கும் செரிப்பழங்கள் -
கொத்துக் கொத்தாக சிவப்பும் கருஞ்சிவப்புமாக செரிப்பழங்கள் - நாம் பறித்தவற்றுக்கு அரை நாள் தான் வாழ்க்கை. :-) இந்தப் படத்திற்கு இங்கு சில நாட்கள் தான் வாழ்க்கை. பிறகு காணாமல் போய் விடும். :-)

மார்கழி 26 வந்தால் சுனாமி எண்ணங்கள் வராது இராது. எம் உறவுகள் எழுவரை இழந்த தினம்.

பூவுலகை  விட்டுப்  பிரிந்து போன அனைத்து ஆன்மாக்களுக்காகவும் என் பிரார்த்தனைகள்.

Thursday 21 December 2017

யார் இவர்?


இவரைப் பற்றி....


அறிந்தவர்கள் விபரம் சொல்லலாம். 

Tuesday 19 December 2017

அழகுக் குறிப்பு!

படித்ததில்.........
பிடித்தது! 
:-)

Monday 18 December 2017

வெயிலுக்கு முளைத்த‌ காளான்!

அவ்வப்போது கைவேலைக்காக‌ வாங்கிச் சேர்த்தவற்றில், சில செரமிக் பொருட்களை நேற்று வெளியே எடுத்தேன். யாருக்கு என்ன‌ அன்பளிப்பு என்பதை   யோசித்து குறித்து வைத்தாயிற்று. செரமிக் பெய்ன்ட் இருந்த‌ பெட்டியில் எப்பொழுதோ ஒரு கைவேலைக்காக‌ வாங்கி மீந்து போன‌ மலிவு விலை வர்ணங்கள் தெரிந்தன‌. சிவப்பும் வெள்ளையும் மஞ்சளும் பாதி காய்ந்து இருந்தன‌. 

வீசாமல் பயன்படுத்த‌ முடியாதா! 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2003ல் இந்த‌ வீட்டை வாங்கினோம். வாங்கும் போது ஒரு ப்ளம் மரம் & நிறைய‌ புல்லும் களைகளும் அவற்றின் நடுவே களையாக‌ வளர்ந்திருந்த‌ ப்ளம் கன்றுகளுமே இருந்தன‌. தோட்ட‌ வேலையை ஆரம்பித்தேன். 


அந்த‌ வருட‌ நத்தாருக்கு சின்னவர் எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தது... ஒரு காளானை. $ கடைகள் சின்னவர்களுக்கு ஒரு பெரிய‌ வரப்பிரசாதம். :‍-) கையிலிருக்கும் சொற்பப் பணத்தில் அழகாக‌ எதையாவது தேடி வாங்கிவிடலாம். 

பல‌ வருடங்கள் கழித்து அதன் வர்ணப் பூச்சுகளை இழந்தும் என்னைப் பிரியாமல் செடி மறைவில் இருந்துவந்த காளானை, சுரேஜினியின் கைவேலை ஒன்று வெளியே எடுத்து வரச் செய்தது. படிந்த‌ பாசியைத் தேய்த்துத் தேய்த்துச் சுத்தம் செய்வது நச்சுப் பிடித்த‌ வேலையாக‌ இருந்தது.
இந்த‌ நிலை வரைதான் கொண்டுவர‌ முடிந்திருந்தது. அழுக்குப் போகாவிட்டாலும் சிரிப்புப் போகவில்லை. ;-) மீண்டும் அழுக்காகி விடாமல் ஒரு அட்டைப் பெட்டியில் உறங்கப் போய்விட்டார் காளான் பிள்ளையார்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தொட்டால் ‍ தூரிகையில் கெட்டித்தயிர் போல் ஒட்டிப் பிடித்தது தீந்தை. பளிச்! 

எங்கே என் காளான்! 
தேடிப் பிடித்தேன். 

பூசாமல் இழுபட்ட தீந்தை, காளான் மேல் கோடுகள் போன்ற‌ தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. காய்ந்த‌ பின் முகத்தை வரைந்தேன்.
 
அடிப்படை கரடுமுரடாக‌ இருந்ததால், மெல்லிய‌ கோடுகள் வரைவது சிரமமாக‌ இருந்தது.

மஞ்சள் பச்சக் பச்சக்! :‍) தூரிகையின் பின்புறத்தால் தொட்டு பொட்டுகள்வைத்தேன்.  பரவாயில்லை. 
கடும் வெயில் இங்கு.  சட்டென்று உலர்ந்துவிட்டது. என் தோட்டத்தில் எங்கே வைக்கலாம்!
                                     .. இந்தக் களைகளைத் தொலைக்க‌ முடியாமலிருக்கிறது. கர்ர். க்றிஸ்ஸிடம் சொல்லி தற்காலிகமாக‌ ஏதாவது விசிறச் சொல்ல‌ வேண்டும்.
 சின்னவர் ஓரிரண்டு நாட்களில் வருவார். நன்கு தெரியும் எனக்கு‍ ‍ காளானைப் பார்த்ததும் ஒரு சிரிப்புச் சிரிப்பார். ;-) அதன் கருத்து... "மம்மி இன்னும் சின்னப் பிள்ளை விளையாட்டு விளையாடுறா!"

Thursday 14 December 2017

ஔவை சொன்ன‌ வாக்கு!!

நத்தார் கொண்டாடுவதற்கான‌ மனநிலை இன்னும் வரவில்லை. அதனாலேயே கொண்டாட‌ வேண்டும் எனும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.

செபா சொல்லுவார்... "சாகப் போற‌ மாடு, கண்டுக்குப் புல்லும் வைக்கோலும் சேர்த்து வைச்சுட்டுச் சாகிறது இல்லை," என்று. உண்மைதான். கன்று எப்படியாவது பிழைத்துக் கொள்ளும். இன்னொரு பசுவிடம் கெஞ்சியோ அடம் பிடித்தோ பாலருந்தலாம். அல்லது... இன்னொரு மாடு தீவனத்திற்கு, தன் சீவனத்திற்கு என்ன‌ செய்கிறது என்பதைக் கவனித்து அதன்படி நடந்தாலே பிழைத்துக் கொள்ளும். 

மனிதர்!! 

பிள்ளைக்கு எத்தனை வயதானாலும் அம்மா அம்மாதான். நான் நன்றாக‌, சந்தோஷமாக‌ இருப்பதைத்தான் அம்மா விரும்புவார். 

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்... ம்... ஔவையாருக்கு இதைச் சொல்வது சுலபமாக‌ இருந்திருக்கும். ஒரு வயதுக்கு மேல் வளர்ப்புத் தாயையும் விட்டு, தன் காலே தனக்குதவி என்று சுற்றுலாக் கிளம்பிய‌ பெண்மணி.  ;-) பெரிதாக‌ எதிலும் பிடிப்பு இருந்திராது, தமிழைத் தவிர‌. 

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா
நமக்கும் அதுவழியே நாம் போம் அளவும்
எமக்கு என்னென்றிட்டுண்டிரும். 

கடைசி ஆறு சொற்களையும் பிரித்துப் பிரித்து எழுதிப் பார்த்தேன். :‍) கவிதைத் தன்மை தொலைந்து போனாற்போல இருந்தது. தேடலாம் என்று இணையத்தில் உலாவ‌... கொடுமையொன்று கண்டேன்!! ;( படம் போட்ட‌ குழந்தைகள் அரிச்சுவடியில் 'ஔ' என்கிற‌ எழுத்துக்கு 'ஔவையார்' என்று எழுதியிருப்பார்கள். இணையத்தில் சில‌ ஔவைகளையும் ஏராளமான‌ அவ்வைகளையும் கண்டேன். ;( 

தமிழ், 'தமிழை வளர்க்க‌ நினைக்கும் தமிழராலேயே' மரித்து விடும் என்று முன்பே ஔவைக்குத் தெரிந்திருக்குமோ! அதனால் தான், 'நமக்கும் அதுவழியே நாம் போம் அளவும் எமக்கு என்ன!' என்று மனம் நோகாமலிருக்கும்படி அப்படிப் பாடி வைத்தாரோ!!! ;D

தட்டச்சு செய்வது சிரமமாகிப் போகும் என உணர்ந்து எழுத்து மாற்றம் வந்த‌ பின்பும், 'ஔ' 'ஐ' எழுத்துகளைத் தட்டுவதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லாதபடிதான் இருந்துவருகிறது. ஆனாலும்... நாம் 'அய்யா' என்போம்; 'அவ்வை' என்போம். ;((

மீண்டும்... விஷயத்துக்கு வருகிறேன். மாண்டார் வருவரோ மாநிலத்தீர்!! வேண்டா... நமக்கும் அதுவழியே நாம் போம் அளவும் எனக்கு என்ன‌ என்று இட்டு உண்டு இருக்கலாம்.  அதன் ஒரு படியாக‌... இந்த‌ அலங்காரம். 
கையிலிருந்த‌ பொருட்களை வைத்துச் செய்தேன். இம்முறை அழகான‌ இலைகள் அகப்பட்டன‌. ஒரு சாடியில் சில‌ மிட்டாய்களும் இருந்தன‌. இவை அம்மா வீட்டிலிருந்து எனக்குக் கடத்தப்பட‌ பொக்கிஷங்கள். தன்னைச் சந்திக்க‌ வரும் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்காக‌ மிட்டாய்கள் வைத்திருப்பார்.

முன்பெல்லாம் நிறமற்ற‌ செலோஃபேன் கடதாசியில் மிட்டாய்களைச் சுற்றுவேன். இம்முறை கையிலிருந்தது சிவப்பு செலோஃபேன். 
நீளமாகத் தெரிபவை ஜெல்லி மிட்டாய்கள். 
செய்முறை இங்கே ‍- http://www.arusuvai.com/tamil/node/30177