Wednesday 8 August 2018

பெட்டியொன்று பையான கதை!

என் மூத்த மருமகள் சற்றுத் தீவிரமான ப்ளாத்திக்கு எதிர்ப்புப்போராளி. :-) அவர் வீட்டில் அவற்றைக் காண்பது குறைவு.

எதையாவது அன்பளிப்பாகக் கொடுக்கும் போது ப்ளாத்திக்குப் பையில் எடுத்துப் போனால், அதை என்ன செய்வது என்கிற கேள்வி உள்ளே என்ன இருக்கிறது என்பதைப் பார்க்கும் முன்பே அவர் முகத்தில் தெரியும். ஆரம்பத்தில் நானே திரும்ப எதையாவது போடும் சாக்கில் என்னோடு எடுத்து வந்திருக்கிறேன். பிற்பாடு நல்ல கடதாசிப் பைகள் கிடைக்கும் போது, இவர்கள் வீட்டிற்குப் போகும் சமயம் உதவும் என்று சேமிக்க ஆரம்பித்தேன்.
ஒரு முறை சிறிய பிரம்புக் கூடையில் எடுத்துப் போனேன். அந்தக் கூடை இப்போது அவர்கள் பழக்கூடையாக மாறி இருக்கிறது.

மகனது கடந்த பிறந்தநாளுக்கான அன்பளிப்பை எடுத்துச் செல்ல என்னிடமிருந்த எந்தப் பையும் நீள அகலம் தோதாக இருக்கவில்லை. பாதி அளவாக 'வீட்பிக்ஸ்' பெட்டி அளவாகத் தெரிந்தது. அதைக் கொண்டு ஒரு பை செய்யலாமா!

செய்தேன்.
மகனுக்கு நாய் வளர்ப்பு பிடிக்கும். நாய்ப் படங்களுடனான பொதி சுற்றும் தாள் ஒன்று இருந்தது. செபாவின் சேகரிப்பிலிருந்து ஒரு துண்டு நாடாவைப் பொறுக்கிக் கொண்டு வேலையை ஆரம்பித்தேன். கூடவே... பசை, கத்தரிக்கோல் & ஒரு துளையிடும் உபகரணமும் தேவையாக இருந்தன.
பெட்டியின் வாய்ப் பகுதியை உட்புறமாக மடித்து ஒட்டிக் கொண்டேன்.
பெட்டியைச் சுற்றிச் சுருக்கமில்லாமல் கடதாசியை ஒட்டினேன். கீழே இருந்த கடதாசியை மடித்து ஒட்டிவிட்டேன்.
மேலே மீந்திருந்ததை இப்படி மூலை வழியே வெட்டி விட்டு....
உட்புறமாக மடித்து ஒட்டினேன்.
அகலமான வாய்ப் பகுதியில் துளைகள் செய்து நாடாவைக் கோர்த்துக் கட்டிக் கொண்டேன்.
உள்ளே அன்பளிப்பாக வாங்கியவற்றை  - எல்லாம் இலங்கைக் கடையில் வாங்கிய உணவுப் பொருட்கள் தான். வேண்டாதவற்றைக் கொடுத்தால் என்ன செய்யப் போகிறார்கள்! பிடித்ததை, கிடைக்காததை வாங்கிக் கொடுத்தால் நிச்சயம் பயன்படுத்தி முடிப்பார்கள் அல்லவா! - உள்ளே வைத்து எடுத்துப் போனேன்.

இம்முறை உறுத்தலாக இருக்கவில்லை எனவே பையைத் திரும்பக் கொண்டு வரவில்லை. :-)

Wednesday 1 August 2018

தேன் மெழுகு மெழுகுவர்த்திகள்

முன்பு, பாடசாலையில் கைவினை வகுப்பு எடுக்கும் போது சேகரிப்பில் இணைந்திருந்த ஒரு பெட்டி தேன்மெழுகு மெதுவே குறைந்து வருகிறது.

சென்ற இரு வருடங்கள் நத்தார் அன்பளிப்பாக மெழுகுவர்த்திகள் செய்த விதத்தில் வெண்மை நிறத் தாள்கள் முற்றாகத் தீர்ந்து போயிற்று. சிவப்பு நிறம்... பூக்கள் செய்யலாம் என்று வைத்திருந்தேன். ஆனால் மெழுகுவர்த்தியை எரிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். பருமன் அதற்கேற்ப அமைய வேண்டும். சிந்தனை வந்து போகும்.

சில வாரங்கள் முன்பாக இதற்கு நேரம் அமைந்தது. அம்மாவின் நினைவாக குடும்பத்தாருக்கு சிறிய அன்பளிப்புகள் கொடுக்க விரும்பினேன். அன்பளிப்புப் பெட்டியில் ஒரு மெழுகுவர்த்தி வைக்கலாம் எனத் தோன்றியது. அவரது வலைப்பூவின் பெயர், 'இதயத்திலிருந்து' என்பதாலும் இதயம் அன்பின் அடையாளம் என்பதாலும் இதய வடிவில் செய்யலாம் என முடிவு செய்தேன்.

தேவையாக இருந்தவை...
தகரத்திலான இதய வடிவ cookie cutter
சிவப்பு நிறத் தேன் மெழுகு தாள்கள்
அழுத்தமான பலகை
hair dryer
நீளமான தடித்த கம்பி
நீளமான கேக் மெழுகுவர்த்திகள்
நக அலங்காரத்திற்குப் பயன்படுத்தும் சிறு கற்கள்
கத்தரிக்கோல்
(படத்தில் முக்கியமான பொருட்களை மட்டும் காட்டியிருக்கிறேன்.)

மெழுகுவர்த்தி செய்வது வெகு சுலபம்.
முதலில் பலகையில் மெழுகு தாளினை வைத்து, கட்டரை வைத்து அழுத்தி இதயங்களை வெட்டிக் கொண்டேன். குளிர்காலம் என்பதால், ஒவ்வொரு வெட்டுக்கும் முன்பு ட்ரையரால் வெட்டப் போகும் இடத்தைச் சூடுகாட்டிக் கொண்டேன். கட்டர் கையைப் பதம்பார்க்காமல் அதன் மேல் அட்டை ஒன்றை வைத்துப் பிடித்துக் கொண்டேன்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் மெழுகு அதிகம் சூடாகிவிடக் கூடாது. வேலைக்கு வளைந்து கொடுக்கும் அளவு சூடு போதும். அதிகமானால் பார்க்கப் பளபளப்பாக இருக்குமென்றாலும் அதன் அறுகோண வடிவம் கெட்டுப் போகும்.

ஒவ்வொரு மெழுகுவர்த்திக்கும் பதினைந்து இதயங்கள் தேவைப்பட்டன. வெட்டிய இதயங்களைத் திருப்பிப் போட்டுவிடாமல் ஒரே பக்கமாக அடுக்க வேண்டும். கட்டரின் வடிவம் சமச்சீராக இல்லாமலிருந்தால் அல்லது நெளிந்திருந்தால் முழுகுவர்த்தி அமைப்பு சீராக வருவதற்கு இப்படி அடுக்கி வைப்பது உதவும். தேவையான எண்ணிக்கை இதயங்களை வெட்டி முடித்ததும். பதினைந்து பதினைந்தாக அடுக்கி வைத்துக் கொண்டு வேலையை ஆரம்பித்தேன்.

இதயத்தை அமைப்பதுதான் அனைத்திலும் சுவாரசியமான வேலை. முதலில் ஒரு துண்டைப் பலகையில் வைத்து மெல்லிதாக சூடு காட்டிக் கொண்டு அடுத்த துண்டை அதன் மேல் வைத்து அழுத்தினேன். இப்படியே தொடர்ந்து சூடு காட்டி எட்டுத் துண்டுகளை ஒட்டி எடுத்தேன். அமைப்பு பொருந்தி வர வேண்டும். துண்டுகள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ள வேண்டும் ஆனால் அழுந்தி தட்டையாகி விடக் கூடாது. சற்றுப் பொறுமையாகச் செய்ய வேண்டி இருந்தது. மெழுகுதிரி தலையில் கையும் பிக்பொஸ் வீட்டில் கண்ணுமாக வேலை நடந்தது.

மீதி ஏழு துண்டங்களுக்கும் ஒட்டும் முறையை மாற்றினேன். இப்போது கையில் எடுக்கும் துண்டைச் சூடு காட்டி ஏற்கனவே செய்து வைத்திருந்தவற்றின் மேல் அடுக்கத் தொடங்கினேன். மெதுவே இதயம் உருப் பெற ஆரம்பித்தது. அடுத்தடுத்த துண்டுகளை அழுத்துகையில் ஓரங்கள் சற்று கீழ் நோக்கி வளைய ஆரம்பித்தன. இறுதி மூன்று துண்டுகள் இதயத்தின் மேற்பகுதிக்குச் சரியான வடிவம் கொண்டுவந்தன. 'வந்தன' என்ன! 'கொண்டு வந்தேன்,' எனச் சொல்ல வேண்டும். சுற்றிலும் ஒரு முறை அழுத்திச் சரி செய்து விட்டு அடுத்த இதயத்தைத் தயாரிக்க ஆரம்பித்தேன்.

அனைத்தும் தயாரான பின் திரி வைக்கும் முயற்சியை ஆரம்பித்தேன். அவற்றுக்குரிய திரிகள் கைவசம் இருந்தன. நேரம் குறைவாக இருந்தது. கேக்கில் சொருகும் மெல்லிய நீள மெழுகுவர்த்திகள் எந்தப் பயனும் இல்லாமல் சேமிப்பில் கிடந்தன. அவற்றைப் பயன்படுத்துவது... சுலபமாக இருக்கும் என்று பட்டது. சிவப்பு நிற மெழுகுவர்த்திகளைக் காணோம். மென்சிவப்பு நிறமே போதும் என்று முடிவு செய்தேன். 

கொதிநீரில் கம்பியை அமிழ்த்தி வைத்து எடுத்து இதயங்களின் நடுவே துளைகள் செய்தேன். உடனே தயாராக வைத்திருந்த மெழுகுக் குச்சு ஒன்றை துளையூடே சொருகி அளவாகக் தத்தரித்து விட்டேன். கீழ்ப்பக்கத்தச் சற்று அழுத்திச் சரிசெய்தாயிற்று. அனைத்து இதயங்களுக்கும் திரிகளைச் சொருகிய பின்பு மீண்டும் ஊசியைக் கொண்டு கற்கள் வரவேண்டிய இடத்தில் அடையாளம் (மெழுகு சற்று இளகும்.) செய்து கற்களை வைத்து அழுத்தி விட... என் மனதுக்குப் பிடித்தாற்போல் மெழுகுவர்த்திகள் கிடைத்தன. ஒவ்வொன்றையும் தனித்தனியே வெள்ளை நிறப் பட்டத் தாளில் சுற்றி சேமித்து வைத்தேன்.


(பிழைகள் நிறையை இருக்கும் என்று தோன்றுகிறது. சுட்டிக் காட்டினால் உதவியாக இருக்கும். அல்லாவிட்டால்... தானாக என் கவனத்திற்கு வரும் சமயம் தான் திருத்தம் செய்யப்படும்.)

Thursday 25 January 2018

ஆக்வாஃபாபா விப்ட் க்ரீம்

தற்செயலாகக் கண்முன் தோன்றிய‌ அந்தக் காணொளியைத் தொடர்ந்து பார்க்க‌ வைத்தது... உண்மையில் அந்தக் குட்டிப் பையனின் சிரித்த‌ முகம்தான். பார்க்கும் போது எங்கள் பாடசாலையில் சின்னவர்கள்  oral presentation இற்குத் தயாராவது நினைவுக்கு வந்தது.

ஒரு தடவை சின்னவரொருவர் எலிப்பொறி வேலை செய்யும் விதத்தை விளக்கினார். பழகும் போது எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. பரீட்சகர் முன்னால்... பொறி சின்னவரது கையை இறுகப் பற்றிக் கொண்டது. வலியில் துடித்து போனார் சின்னவர். பரீட்சகர் பதறிப் போனார். சின்னவரோ வலியின் மத்தியிலும் நிறுத்தாமல் தொடர்ந்து தன் பேச்சை முடித்துவிட்டே கையைப் பார்த்தார். 

இந்தச் சின்னவர் சொன்ன‌ விதம் என்னைக் கவர்ந்தது; க்ரீம்  செய்து பார்க்க‌ வைத்தது.

க்றிஸ்ஸுக்கு கடலை கடிக்க‌ முடியாதாம். எப்பொழுதும் ப்ரெஷர் குக்கரில் போட்டு மெத்தென்று அவித்து வைப்பார். (நான் தனியாக‌ எனக்கு அவித்துக் கொள்வேன்.) யேமன் சொன்ன‌ அளவு கடலை, நீர், நேரம் எல்லாம் பார்க்கவில்லை க்றிஸ். அது அவருக்கு வேண்டாத‌ வேலை. உப்பும் போட்டிருந்தார். தண்ணீரை வடிக்கும் போது கண்டுவிட்டேன். அந்தத் தண்ணீரைக் கொட்டாதிருக்கும்படி சொல்ல‌ அப்படியே விட்டுவைத்தார். நான் அதில் எப்பொழுதாவது ரசம் வைப்பதுண்டு. சுவையாக‌ இருக்கும். இம்முறையும் அதற்காகத் தான் கேட்கிறேன் என்று நினைத்திருப்பார். 

முதலில் நீர்க்க‌ இருந்ததைப் பார்த்ததும், இது வேலை செய்யாது என்று தோன்றியது. இரவு தூங்கப் போகுமுன் பார்க்க‌ சற்று ஜெலி போல் ஆக‌ ஆரம்பித்திருந்தது. ஐஸ்க்யூப் தட்டில் நிரப்பி குளிரூட்டியில் வைத்துவிட்டுத் தூங்கிவிட்டேன். காணொளியில் சொல்லியிருந்தபடி என் தட்டுகளின் ஒவ்வொரு குழியும் ஒரு மேசைக்கரண்டி கொள்ளளவாக‌ இருந்தது வியப்பைத் தந்தது. இப்படித்தான் எல்லாக் குளிரூட்டித் தயாரிப்பாளர்களும் தயாரிப்பார்களோ! 

இன்றுதான் நேரம் அமைந்தது செயற்படுத்த‌. 'விப்ட் க்ரீம்' தயாரிப்பில் இறங்கினேன். வெள்ளையாகவே வராது என்று மனம் சொல்லிற்று. இருந்தாலும், பிழைத்துப் போனால் நான்கு கரண்டி சீனியும் கொஞ்சம் மின்சாரமும் கொஞ்ச‌ நேரமும் தானே வீண்! 
ஆனால் என் அவநம்பிக்கையைத் தகர்த்தபடி மெதுவே வெள்ளைவெளேரென நுரைத்து எழுந்தது க்ரீம். சுவையும் பறவாயில்லை. (க்றிஸ் ஒரு பொழுதும் நன்றாக இருக்கிறது என்று சொல்ல மாட்டார். அவரது அகராதியில், 'பறவாயில்லை,' என்றால் நன்றாக இருக்கிறது என்று பொருள்.) என் சின்னவர் ஒரு முறை விழுந்து எழுந்து அழுதார். 'பறவாயில்லை கண்ணா, அழாதைங்கோ!' என்றதும் கோபம் வந்தது. பிறகு, 'பறவாய் இருக்கு,' என்று அழ ஆரம்பித்துவிட்டார். (பரவாயில்லை! பரவாயில்லை! எது சரி!! உதித் பாடுவது போல் பருவாயில்லை என்று சொல்லாதவரைக்கும் சரிதான்.)

ஏணியை இழுத்து வந்து ஏறி பைப்பிங் பை & நொசில்ஸை எடுக்கப் பஞ்சியாக‌ இருந்தது. பிஸ்கட்டில் கரண்டியால் அள்ளி வைத்துச் சுவைத்தோம்.
மீதியைக் குளிரூட்டியில் வைத்திருக்கிறேன். கரைந்து போகுமா! அப்படியே இருக்குமா! கெட்டிப்படுமா! பார்க்கலாம்.  

Saturday 13 January 2018

உங்களிடம் சில‌ வார்த்தைகள்... கேட்டால் கேளுங்கள்

எச்சரிக்கை! வழமைக்கு மாறாக‌ இது நீ.....ண்ட‌ இடுகையாக‌ இருக்கப் போகிறதோ! :-)
'உங்களிடம் சில‌ வார்த்தைகள்... கேட்டால் கேளுங்கள்' - இது... தொடரை ஆரம்பிக்க‌, 'அவர்கள் உண்மைகள்' மதுரைத்தமிழன் பயன்படுத்தியிருந்த‌ தலைப்பு. தொடர்புள்ளிகளுடன் அப்படியே கொடுத்திருக்கிறேன்.  அவரது அழைப்பை ஏற்று எழுதிய‌ அதிராவைத் தொடர்ந்த இளமதி, தொடருமாறு எனக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அவரிடம் தனியாக‌ சற்றுத் தாமதமாகத்தான் எழுதக் கிடைக்கும் என்று சொல்லியிருந்தேன்.

என் சிறுவயதுத் தோழியின் தாயார் சொல்லிய‌ ஒரு வார்த்தை, நான் நினைவில் வைத்திருக்க‌ வேண்டிய‌, ஆனால் ‍ நினைவில் வைத்திராத‌ விடயம் ஒன்றுண்டு. (1) 'ஆறிய‌ கஞ்சி பழங்கஞ்சி!' அறுசுவையில் சில‌ இடுகைகள் நான் தாமதித்த‌ காரணத்தால் எழுதப்படாமலே போயின‌. சிலருக்கு உணவுக் குறிப்புகள் அனுப்ப‌வும் இருக்கிறது. இந்தத் தொடரை இப்பொது விட்டுவிட்டால் பிறகு சுட்டியைத் தேடிப் பிடிப்பது சிரமம். (2) 'அலை எப்போது ஓய்வது; தலை எப்போது மூழ்குவது!' (இது நடிகர் நாகேஷ் அவர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினருக்கு நாற்பது வருடங்களுக்கு முன்பு கொடுத்த‌ ஒரு பேட்டியில் நான் முதன்முதலில் கேட்டது.) அலை அடிக்கும் போதே தலை மூழ்குகிறேன். :‍)

ஆலோசனை / அறிவுரை / அட்வைஸ்!! இந்தச் சொற்கள் பற்றி எனக்குச் சரியான‌ விளக்கம் கிடையாது.

கடைசியிலுள்ள‌ ஆங்கிலச் சொல் பற்றி... அது பொருளாகவும் வரும்; வினையாகவும் வரும். சிறு வயது முதலே எனக்கு ஒரே மாதிரி இரண்டு சொற்கள் / விடயங்கள் இருந்தால், எது என்ன‌ என்பதை நினைவு வைத்திருப்பதில் சிரமம் இருந்தது. (3) எதையாவது குறியீடாக‌ நினைத்து வைத்தாலன்றி தவறாகவே எழுதுவேன். உ+ம் அஜி, சுஜி என்று இரு சகோதரர்களிருந்தால், 'அ முதலெழுத்து அல்ல‌.' என்று நினைவு வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு தடவையும் மனதினுள் குறியீட்டு வசனத்தைச் சொல்லிப் பார்த்தே பேசுவேன். (அதிராவுக்காக‌... கதைப்பேன்.) ;‍) பெயர்ச் சொல் - advice, வினைச் சொல் - advise. 'If you see a 'C', it's the noun.' S!!! ஸ்ஸப்பா! என்று உணர்வுகளுடன் விளையாடும் சொல் வினை.

சிறு வயதில் தனித்து வாழ்ந்த‌ காலம் அதிகம். உறவுகளிடமிருந்து தொலைவிலிருந்தது எங்கள் வீடு. சுற்றாடலில் ஒரேயொரு வீடுதான் இருந்தது. பேசாமடந்தையாக‌ வளர்ந்த‌ காரணத்தால் இன்றும் நானாகப் போய் யாரிடமும் அட்வைஸ் கேட்பது குறைவு. என் மனதைக் கேட்பேன். நல்ல‌ நட்பாக‌ அமைதியாக‌ அது என்னுடன் பேசும். தைரியமான‌ என் தவறுகளைச் சுட்டிக்காட்ட‌ வல்ல‌ நட்பு அது. அதற்கு மேல்... க்றிஸ் நான் கேளாமலே ஏதாவது சொல்வது உண்டு. நாங்கள் வெகு பிரியமான‌ சோடி, நல்ல‌ நண்பர்கள் என்பதால் எம் சிந்தனைகள் ஒரே விதமாக‌ இருக்க‌ வேண்டும் என்பது இல்லை அல்லவா? நிறைய‌ விடயங்களில் எதிர்மாறுதான். குழந்தையாக‌ இருந்த‌ காலத்திலிருந்தே நான் சற்று முற்போக்குச் சிந்தனை கொண்டவளாக‌ இருந்திருக்கிறேன். அதனால் மற்றவர்களோடு பொருந்திப் போக‌ இயலாமல் மன‌ உழைச்சலுக்கு ஆளானது உண்டு. மணமான போது இருபது வயதாகி இருந்தாலும் என் தோற்றம் என்னைச் சின்னப் பெண்ணாகக் காட்டியது எல்லா வகையிலும் எனக்குப் பாதகமாகவே இருந்திருக்கிறது. பிடிக்காதவற்றைப் பின்பற்றவும் இயலாமல் சொல்லவும் மாட்டாமல் தவிக்கும் தருணங்களில் விட்டுக் கொடுக்கச் சொல்லும் க்றிஸ் மேல் தான் என் கோபம் திரும்பும். பாவம் அவர். :‍) குறைந்தது மூன்று நாட்களாவது பேச‌ மாட்டேன். (அது பெரிய‌ பிரச்சினை இல்லை. ஆள் அதிகாலை நான்கு மணிக்கு வேலைக்குப் போனால் வர‌ இரவு பன்னிரண்டைக் கடந்துவிடும். கண்ணை இறுக‌ மூடிக் கொண்டு இருந்தால் வாய்க்கு வேலை ஏது!) பிறகு மெதுவே ஒரு மாற்றம். என்னிலில்லை, க்றிஸ்ஸில். என் பல‌ எண்ணங்கள் அவரிடம் புகுந்திருந்தது. சில‌து என் மாமிக்கும் மாறியிருந்தது. பெருமையோடு மெதுவே அவதானிக்க‌... வார்த்தையால் அறிவுரை சொல்வதை விட‌.... (4) நான் நானாக‌ இருப்பதே மற்றவர்களுக்கு பெரிய‌ அறிவுரையாக இருக்கிறது என்று தோன்றிற்று.

என் பிள்ளைகள் எனக்குப் பல‌ விடயங்களில் உதவியிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து அறிவுரைகள் கிடைப்பதில்லை. என்னுடனான‌ ஆரோக்கியமான‌ உரையாடல்கள் - (5) கனிவான‌ ஒரு பக்கம் சார்ந்திராத‌ உரையாடல்கள் அவை. என் சரியான‌ எண்ணங்களைச் சிலாகிப்பார்கள்: தவறானவற்றை நாசூக்காகப் புரிய‌ வைப்பார்கள். அவர்கள் சொல்லாமலே என் மனது சரியானதை எடுத்துக் கொள்ளும். வந்து இணைந்த‌ மருமக்களும் இப்படியே தான் அமைந்திருக்கிறார்கள். ஆலோசனைக்கு உகந்தவர்களாக‌, சிந்திக்க‌ இயலாத‌ தருணங்களில் 'என்' சிந்தனாசக்தியாக‌ இவர்கள் நால்வரையும் காண்கிறேன். சென்ற‌ ஞாயிறன்று என் மனதில் உதித்த‌ எண்ணம்... க்றிஸ் உயிருடன் இருந்தாலும், அவருக்கு முன் எனக்கு இயலாமை தோன்றினால் என் பிள்ளைகளையே என் பாதுகாவலர்களாக‌ நியமிக்குமாறு உயில் போன்று எங்காவது குறித்து வைக்க‌ வேண்டும் என்பது. க்றிஸ்ஸுக்கு வெகு மென்மையான‌ மனம். மற்றவர்கள் மனம் நோக‌ நடக்கக் கூடாது என்பதை மட்டுமே நினைப்பார். அவரைப் பொறுத்த‌ வரை, நோயாளிக்கு / வயோதிபருக்கு இன்னின்னது ஆகாது என்பது சிந்தனைக்கு அப்பாற்பட்டது. அவர்களது சந்தோஷத்திற்குத் தான் முதலிடம் கொடுப்பார் என்பதை என் பெற்றோர் விடயத்திலிருந்து தெரிந்துகொண்டிருக்கிறேன். என் நான்கு பிள்ளைகளும் 'எனக்கு' எது நல்லது என்பதை ஆராய்ந்து, எதற்கு எப்போது முக்கியத்துவம் கொடுக்க‌ வேண்டும் என்பதை அறிந்து நடப்பார்கள். இதிலிருந்து யாருக்காவது அறிவுரை (5) கிடைக்குமானால்... எடுத்துக் கொள்ளுங்கள். :‍)

அப்பா... வாழ்ந்து மட்டும் காட்டியவர். அவரிடமிருந்து எப்படி நடக்க‌ வேண்டும் என்பதையும் சில‌ சமயங்களில் எப்படி நடக்கக் கூடாது என்பதையும் அனுபவ‌ அறிவாகப் பெற்றேன்.

அம்மா... சொன்ன‌ பாரதூரமான‌ அறிவுரைகள் இரண்டு. (6) 'சாகிற‌ மாடு கண்டுக்கு வைக்கோலும் தண்ணியும் சேர்த்து வைச்சிட்டுச் சாகிறது இல்லை.' அ+து உன் வாழ்க்கை உன் கையில். நீயே அதற்குப் பொறுப்பு. 'யாரையும்' எதிர்பார்க்காதே. (இங்கு மாடு - 'பசு' மட்டும் தான்எ ன்பதை மனது குறித்துக் கொண்டது.) (7) தனக்கு ஏதாவது ஆனால் உடனடியாக‌ வீட்டை விட்டு வெளியேறி கார்மேல் சபைக் கன்னியர்களுடன் போய் வசிக்கச் சொன்னார். (என் வீட்டில் அப்பாவும் என் தம்பியும் மட்டும் இருந்திருப்பார்கள். வீட்டிற்கு வருவோரும் பெரும்பாலும் ஆண்களாக‌ மட்டும் இருந்திருப்பார்கள்.) இதென்ன‌ இப்படிப் பேசுகிறேன் என்று நினைப்பீர்கள். இந்தக் கதையைப் படியுங்கள், புரியும். அது அம்மா தன் சொந்த அனுபவத்திலிருந்து சொன்ன‌ அறிவுரை. அவரது தாயார் அவருக்குச் சொல்லியிருந்த அறிவுரை. முதலில் தந்தையாரும் தொடர்ந்து தாயாரும் இறந்த பிறகு அம்மா பிரான்சிஸ்கன் கன்னியர் மடத்தில் தான் வளர்ந்தார்.

அம்மாவின் இன்னொரு அறிவுரை! / விருப்பம்! -  வாழ்க்கையில் என்ன‌ ஆனாலும் என் தம்பியை அரவணைத்து வைத்துக்கொள்ள‌ வேண்டும் என்பது. (அவர் தம்பியின் வாழ்க்கை நன்றாக‌ அமையவில்லை. சரிசெய்து கொடுக்கவோ அவருக்கு ஆறுதலாக‌ இருக்கவோ அப்பாவை மீறி எதுவும் செய்ய‌ இயலாத‌ நிலை. அது அவரை வாட்டியிருக்க‌ வேண்டும்.) இதன் வழியே நான் புரிந்துகொண்டது... (8) 'தேவைப்படும் போது.... நிமிர்ந்து நில்; கோழையாக‌ இராதே!' என்பது.

என் மூத்தவர் சிரித்துக் கொண்டே அழகாக‌, ஆளமாகப் பேசும் திறன் வாய்ந்தவர். சொல்வதை நச்சென்று சுருக்கமாக‌ சொல்வார். ஓட்டிப் பழகும் சமயம் மோட்டர் வண்டியை... அதை வண்டு என்றும் சொல்லலாம், ஒரு பள்ளத்தில் இறக்கினேன். வீட்டிற்கு வந்ததும் சிரித்தபடி சொன்னார், "நானும் டடாவும் எத்தனை அக்சிடண்ட் பட்டிருக்கிறம். இது ஒரு இன்சிடண்ட் மட்டும் தான். லைசன்ஸ் கிடைச்ச‌ பிறகு நிறைய‌ அடிபடுவீங்கள். (9) டோன்ட் கிவ் அப்" அதோடு நினைவுக்கு வந்த‌ வாசகம்... அறுசுவையில் இலா வைத்திருந்த‌ விருப்ப‌ வாசகம்... (10) "10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"

நான் நானாக‌ - அறுசுவையில் ஆரம்பத்தில் 'நன்றாக‌ இருக்கிறது' என்றும் 'நன்றி' என்றும் மட்டும் தட்டியிருப்பேன். அதற்கே பல‌ நிமிடங்கள் செலவாகும். பிழையில்லாமல் செய்ய‌ வேண்டும் அல்லவா? இன்று நிலை வேறு. அங்கு பலருக்கும் அட்வைஸ்... :)) சொல்கிறேன். சில சமயம் தோன்றும்.... இதற்கு இன்னொரு பெயர்... 'ஆவலாதி' அல்லவா! மற்றவர்களது தனிப்பட்ட விடயங்களில் மூக்கை நுழைக்கிறோமோ! இல்லையில்லை! அவர்கள் கேட்பதால்தானே என் மனதில் படுவதைச் சொல்கிறேன்! 'இது உதவிதான்; ஆவலாதித்தனம் அல்ல,' என்று மனம் சமாதானம் சொல்லும். சில சமயங்களில், 'கொஞ்சம் கடுமையாக விமர்சிக்கிறோமோ!' என்றும் தோன்றும். அதற்கும் மனம் ஒரு சமாதானம் தயாராக வைத்திருக்கும் - 'என் பதில் தவறாகவும் இருக்கலாம். அவர்கள் எங்கே முழு விபரத்தையும் கொடுத்திருக்கப் போகிறார்கள்! எனக்கு கிடைத்த தகவலைக் கொண்டு அவர்களை நான் சிந்திக்க வைக்கிறேன், அவ்வளவுதான். முடிவு அவர்கள் கையில்தான் இருக்கிறது,' யார் என்ன சொன்னாலும் அதில் உள்ள நியாயத்தை ஆராய்ந்து பார்த்து முடிவு எடுப்பது அவரவர் பொறுப்பு அல்லவா!


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு. 

அதிகாரம் - அறிவுடைமை 
குறள் - 423
~~~~~~~~~~~~
வேறு ஒரு காரியத்தில் முழுமூச்சாய் ஈடுபட்டிருக்கிறேன். தூக்கக்  கலக்கத்தில்  தினமும் சிறிது சிறிதாகத்  தட்டிய இடுகை இது. எங்காகியினும் எழுத்துப் பிழைகள் கண்ணில் பட்டால் சுட்டிக் காட்டுங்கள், திருத்தி விடுகிறேன். இப்போதே நன்றி.

Monday 8 January 2018

குட்டி நாற்காலிகள்

 வாங்க, ஒரு பானம் அருந்தலாம்! :-)
~~~~~~~
இங்கு வந்தது முதல் விமானப் பயணங்கள் எதனையும் என் பெற்றோர் மேற்கொள்ளவில்லை. ஒரு தடவையாவது அழைத்துப் போவது என்கிற‌ முடிவில் 2016 தை மாதம் க்ரைஸ்ட்சேச் அழைத்துப் போனோம்.

செய்ன்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ட்ராமுக்காகக் காத்திருக்கையில் சூடாக‌ ஒரு பானம் - 'ஹொட் சொக்லட்' அருந்தினோம். அந்தக் கடையில் காட்சிக்கு இருந்த இந்தக் கதிரை என்னைக் கவர்ந்தது.

ஒரு க்ளிக்.
அது முதல் அபூர்வமாக என் கண்ணில் படும் ஷாம்பெய்ன் தக்கைகளைச் சேர்த்து வருகிறேன்.

இப்போதுதான் எண்ணத்தைச் செயற்படுத்த நேரம் அமைந்தது.
நான் முதல்முதலாகச் செய்த‌ கதிரை இது.
இரண்டாவது தயாரிப்பு.
கம்பிகள் எப்படி வளைந்து இருக்கின்றன என்பதைப் பொறுத்தே நேர்த்தி அமைகிறது. சிலதை எப்படி முயன்றாலும் நேராக்க முடிவதில்லை - நாய்வால் போல!
ஸ்டூல்!
சின்ன வயதில்.... வீட்டில் அப்பா செய்த முக்காலி ஒன்று இருந்தது. ஏறி நிற்க விடமாட்டார். சரியான இடத்தில் காலை வைக்காவிட்டால்... 'டமார்'. இது நாற்காலி! (இந்த நாற்காலி உருவான கதை இன்னொன்று இருக்கிறது. இன்னொரு சமயம் சொல்கிறேன்.)

செய்வது சுலபம். :-) தேவையானவை ஒரு ஷாம்பெய்ன் தக்கையின் கம்பிக் கூடு (இதை எப்படிச் சொல்வார்கள் என்பதை அறிய பல நிமிடங்கள் கூகுளில் அலைந்தேன்.), வெட்டும் குறடு, கூர்மூக்குக்  குறடு, நிறையப் பொறுமை.
கூட்டில் இருக்கும், இறுக்கும் வளையக் கம்பியை நீக்கிவிட்டால் போதும். சில சூட்சுமங்கள் இருக்கின்றன. வளையக் கம்பியிலிருந்து வளைவுகளை நீக்கினால் தான் வெளியே எடுக்க முடிகிறது. எடுக்கும் பொது கால்களை அதிகம் விரித்து விட்டால் இருக்கை வீழ்ந்துவிடும். ஒரு தடவை விழுந்துவிட்டால் திரும்ப நிறுத்துவதற்குப் பொறுமை அவசியம். இருக்கையின் அடியில் இறுக்கமாக வைத்துக் கொண்டு மீதிக் காலை மட்டும் விரித்து விட்டால் 'ஸ்டூல்' கிடைத்துவிடும்.

கதிரை செய்வதானால் வளையக் கம்பியை வெட்டும் இடத்தைக் கவனிக்க வேண்டும். இதில்தான் முதுகு தயாராகப் போகிறது. எனவே, முறுக்கு இல்லாத பக்கம் நட்டநடுவில் - அந்தக் குண்டுயூசித் தலை தெரிகிற இடத்தில் வெட்டலாம். கீழே உள்ள படத்தில் இருப்பது போல் வரும்.
அல்லது... வெட்டாமல் முறுக்கை நீக்கியும் கம்பியைக் கழற்றலாம். உங்கள் கற்பனைத் திறனைப் பொறுத்தது மீதி.

Thursday 4 January 2018

பவன‌ அமுக்கம்!

என் குஜராத்தி சம்பந்தி, 2017 நத்தாரை முன்னிட்ட‌ அவர்களது மகளிர் சங்கத்தினரின் மதியபோசனத்திற்கு அழைத்திருந்தார். இவர்கள் மத்தியில் இருக்கையில் எனக்கு உள்ள‌ பெரும் பிரச்சினை மொழி. அறிமுகமில்லாதோர் என் தோல் நிறம் கண்டு தம்மவர் என்று எண்ணி அன்பாக‌ உரையாட வருகையில்... நான், 'ஙே!!'

ஆனால் சொற்களைப் புரிந்து கொள்ள‌ என் சிங்களப் புலமை ;‍) உதவுகிறது என்பதை இங்கு பெருமையாகக் கூறிக் கொள்ள‌ விரும்புகிறேன். சோளக் கதிரைக் கையில் வாங்காமல் பரிமாறியவருக்கு ஒருவர் சொன்ன காரணத்தை, அவருக்கு கடிப்பதில் பிரச்சினை என்பதைச் சுலபமாகப் புரிந்துகொண்டேன். பல்லுக்கு சிங்களத்திலும் 'தத்' என்பார்கள்.

அந்த‌ மகளிர் சங்கத் தலைவியின் பெயர் புஸ்பாவாம். ஆனால் யாரும் சரியாக‌ உச்சரிப்பது கிடையாது என்றார். சிலர் புஷ்பா என்பார்களாம், திருத்திச் சொல்லிக் காட்டினால் Bushba என்பார்களாம் என்று தன்னை அறிமுகப்படுத்துகையில் குறிப்பிட்டார்.

பிறகு ஒருவர் எங்களை மகிழ்விக்க‌ பாடுவதற்காக‌ எழுந்தார். அவர் இந்த‌ புஸ்பாவின் கதையை மீள‌ நினைவுபடுத்தி அதற்கேற்ப‌ ஓர் இந்திப் பாடலைப் பாடினார். எனக்கும் அந்தப் பாடலின் சில‌ வரிகள் ஏற்கனவே அறிமுகமாக‌ இருந்தது. 'சாவன் கா மஹினா, பவனு கரே சோரு...' என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடல்.
பாட‌லைக் கேட்ட‌ தருணம் சட்டென்று நினைவுக்கு வந்தது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 'அசலும் நகலும்' பாடல் நிகழ்ச்சி. அட‌! தமிழில், 'பவனம்' என்றால் காற்று. 'சந்தனத்தில் நல்ல‌ வாசம் எடுத்து என்னைத் தழுவிக்கொண்டோடுது தென்னங்காத்து!' இரண்டு பாடல்களையும் இங்கே சேமிக்கிறேன்.
இன்றிரவு இங்கு தென்னங்காத்து இல்லை; பேய்க்காற்று. மழையில் நனைந்து நனைந்து குப்பைத் தொட்டியைத் தெருவில் வைத்து, திரும்ப‌ எடுத்து வந்தார் க்றிஸ்.

முயல்கள் நேற்று முழுவதும் கூட்டினுள் அடைந்து கிடந்தார்கள். அவர்களைக் கவனித்ததும் மழையில் நனைந்தபடியே.'

சிறிய‌ சத்தம் கேட்டாலே உறக்கம் கெடும் எனக்கு, தூக்கமே பிடிக்கவில்லை. அந்தக் கோபத்தில் ;‍) பிறந்தது இந்த‌ இடுகை. 

Tuesday 2 January 2018

நாட்கள் நகருதே!

அப்பாவுக்கு இப்போது 86 வயது. ஓய்வு ஓய்வு இல்லத்தில் பரபரப்பாக‌ இருக்கிறார். சுவாரசியமான‌ மனிதர். எப்பொழுதும் எதையாவது வெட்டுவதும் ஒட்டுவதுமாகப் பொழுது போகிறது. :-)

நான் பிரதி புதனும் அங்கு சென்று வருவேன். அன்று எனக்கு வேலைக்குப் போகும் அவசியம் இல்லை. என் நாத்தனாருக்கு திங்களன்று வேலையில்லை. ஞாயிறு காலை பூசை முடிந்ததும் நானும் க்றிஸ்ஸும் சென்று அப்பாவைப் பார்த்து வருவது வழக்கம். இந்த‌ நாட்களில் எம் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறார். நாங்கள் செல்லும் போது, தான் ஓய்வாக, தயாராக‌ இருக்க‌ வேண்டும் என்று நினைக்கிறார். 

இன்று சென்ற‌ போது கண்டது இது.
http://3.bp.blogspot.com/-3E9HtOfdqF0/WkyC4yrJwOI/AAAAAAAASkE/ZvyTglKGzM0FKaJRqtUsmwlrQLi3SQ3wQCK4BGAYYCw/s1600/20180103_131336-781732.jpg
முன்பே தம்பி சொல்லியிருந்தார், அப்பா நகர்த்தி நாளைக் காட்டக் கூடியதான‌ ஒரு அமைப்பைச் செய்து வைத்திருக்கிறார் என்று. நாட்களைக் கணக்கு வைப்பது அவருக்குப் பிரச்சினையாக‌ இருந்திருக்க‌ வேண்டும். அதற்குத் தீர்வாக‌ இந்த‌ அமைப்பைக் கண்டுபிடித்திருக்கிறார். :-)

அவர் புகைப்படத்தைக் காட்டியதும் எப்படி தினங்களை தட்டச்சு செய்திருப்பார் என்று வியந்தேன். எங்கோ இருந்து வெட்டி ஒட்டியிருக்க‌ வேண்டும் என்று புரிந்தாலும் எப்படி இத்தனை நேர்த்தியாகச் செய்திருப்பார் என்று புதினமாக‌ இருந்தது.

அங்கு சென்று நேரில் பார்த்ததும் புரிந்துவிட்டது. அவர்களுக்கு வாரம் தோறும் அந்தந்த‌ வாரத்துக்கான‌ நிகழ்ச்சி நிரல் ஒன்று வழ‌ங்கப்படும். அதிலொன்றை அளவாக‌ வெட்டி எடுத்திருக்கிறார்.

(இது செபாவின் இல்லத்திலான‌ கடைசி வாரத்திற்கான‌ நிகழ்ச்சி நிரல். இருந்ததோ 16, 17 & 18ல் பாதி நாள். அதற்குள் நேர்த்தியாக‌ நான்காக‌ மடித்து வைத்திருந்தார்.)

தேதிகளின் மேல் வட்ட‌ வடிவ‌ 'ஸ்டிக்கர்களைப் பாதியாக‌ வெடி ஒட்டியிருக்கிறார். மறுபக்கம்... கடதாசித் துண்டுகளை ஒட்டி எழுத்துக்களை மறைத்திருக்கிறார். ஞாயிறு! அது சென்ற‌ மாதத்து நாட்காட்டியிலிருந்து வெட்டப்பட்டிருகிறது.

முழுக் கடதாசியையும் வெண்பலகையில் (இது காந்தக் கண்ணாடியிலானான‌ பலகை. ஓய்வு இல்லத்தில் ஒவ்வொரு அறையிலும் ஒன்று இருக்கும்.) ஒரு வட்டக் காந்தத்தால் ஒட்டி விட்டு, இன்னொரு வட்டக் காந்தத்தின் மேல் அம்புக்குறியை வர்ண‌ ஸ்டிக்கர் கொண்டு ஒட்டி வைத்திருக்கிறார்.
இனி அன்றன்று காலை ஒரு முறை காந்த அம்புக்குறியை நகர்த்தினால் போதும்.

நாட்காட்டியிலும் கடந்து போன‌ நாட்கள் அடையாளமிடப்பட்டிருக்கின்றன‌.