Wednesday 25 September 2013

ஊதா கலர் ரி(ப்)பன்

ட்ரிக்ஸிப் பொம்பிளை வந்த நாளில செய்ய விரும்பினது, கொஞ்சம் லேட்டாப் போச்சுது போல. புற்தரையில வோக் கூட்டிப் போகவேண்டும் எண்டு ஆசை. ஒரு ஹானஸ் வாங்கப் போனேன். வாங்கி வந்து ட்ரிக்ஸியைப் பிடித்து மாட்டப் பார்த்தால்... இந்தம்மா மகா சைஸ் ஆக இருந்தார். ;( அதைக் கடையில் திருப்பிக் கொடுத்துவிட்டு நாலு வைக்கோல் கட்டு வாங்கிவரலாம் என்று போனன்.

கடைக்காரப் பொம்பிளை, "பூனைக்கான ஹானஸ் சரியாக இருக்கும். அதுதான் பெரிய முயலுக்கு விற்கிறனாங்கள்," என்று எடுத்துத் தந்தா. அதில எழுதி இருந்துது... Trouble Trix என்று. அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் வாங்கியாச்சுது. இல்லேல்ல, வித்தாச்சுது. (முன்னையதை விட இது விலை குறைவாக இருந்துது என்று கையில $3.00 கிடைச்சுது.)

வீட்ட வந்து ட்ரிக்ஸியைக் கூப்பிட்டு மாட்டினன். முதல் நாள் என்னையும் இழுத்துக்கொண்டு சந்தோஷமாக வளவெல்லாம் ஒரே ஓட்டம். பத்து நிமிஷம் கழிஞ்சு களைச்சுப் போய் பொத்தென்று ஒரு இடத்தில படுத்தாச்சுது ஆள். பிறகு தூக்கி வந்துதான் கூட்டில விட்டனான்.

அடுத்த நாள் ஹானஸ் கட்டின பாதியில பிடுங்கிக் கொண்டு ஓடீட்டா ட்ரிக்ஸி. சரியென்று விட்டாச்சுது. இப்ப என்னடா என்றால்... ஊதா கலர்ல (ஊதாவா அது!!) ரிபன் மட்டுமில்ல, என்னத்தை கண்டாலும் ஒரே ஓட்டம் கூடுக்குள்ள. தன்னை கட்டாமல் சுதந்திரமாக புல்லில ஓட விடட்டாம். அப்பிடியே பேஸ்மண்ட்டுக்குள்ள ஓடினால் நான் பிறகு எப்பிடிப் பிடிக்கிறது! அதை விட ஒரு பெரும் பூனைப் படை இருக்கிற இடம் இது.

பின்னேரம் நான் வேலையால வந்ததும் கதவடியில போய் நிற்கிறா. திறந்து விட்டால் (ஒரு தட்டி மறைப்பு வைச்சிருக்கிறம்.) பத்து நிமிஷம் புல்லில குதிச்சுப் போட்டு உள்ள வந்துருவா. நாங்கள் உள்ள வந்தாலும் வெளியில நிற்க மாட்டா. தனிய நிற்கப் பயம் போல இருக்கு.

அடைக்கவேணும் என்று எப்ப நினைச்சாலும் ஊதா!! கலரில எதையாவது காட்டினால் வேலை ஆகீருது. ;))
தமிழ் விளங்கினால்... 'ஊதா கலர் ரிப்பன்' பாட்டுக் கேட்டாலும் ஓட்டம் பிடிக்கும் போல. ;)))) ஆமாம், ஒரு சந்தேகம் எனக்கு. பாட்டில் வாறது நீலக் கலர் ;)) ரிபனாக இருக்க ஏன் 'ஊதா... கலர்' என்கினம்!  ஒருவேளை எனக்குத்தான் கண் சரியாத் தெரியேல்லயோ! ;)))
அந்த ரிபன் வடிவா பாம்பு மாதிரி டான்ஸ் ஆடுது. ;)))

Saturday 21 September 2013

ஜன்னல் மலர்கள்

ஒரு மதியம் பின் வீட்டு ஜன்னலில் நிழல். அது அவர்களது மலகூடம். ஜன்னற்கட்டில் கம்பளி ஜாக்கட் ஒன்றை வைத்திருக்கிறார்களா? அங்கு அந்த அளவு இடம் இராதே!

ஆரம்ப காலத்திலிருந்தவர்கள் வீடு விற்பதற்காக open home வைத்த சமயம் போய்ப் பார்த்திருக்கிறோம். இந்த பிரதேசத்தின் நிலம், வீடு விலை நிலவரம் அறிந்து கொள்வதற்காக இப்படிப் போய்ப் பார்த்துப் பார்த்தே அயலிலுள்ள பல வீடுகளின் அமைப்புத் தெரியும்.
எங்கள் வீடும் அவர்கள் வீடும் 95 % ஒரே அமைப்பிலானவை. அவர்களது தரைமட்டத்திலும் எங்களது பிடுங்கி நடக்கூடிய விதமாகவும் அமைத்திருக்கிறது. வாகனத் தரிப்பிடக் கூரை எங்களது சரிவாக இருக்கும்; அவர்களது கூராக இருக்கும். அதற்கான கதவு இருக்குமிடமும் வேறு. பார்த்திருக்கிறேன். 

சற்று நேரத்தில் 'ஜாக்கட்' பெரிதாகிற்று.
செவியொன்றும் கண்ணொன்றும் தெரிந்தது. ;) மலகூடத்து ஜன்னலில் என்னவோ இருக்கிறது. சாப்பாடா! பூச்சி ஏதாவதா? இங்குதான் அவையெல்லாம் அபூர்வமாயிற்றே!

சற்று நேரத்தில் இன்னொருவர் அதே இடத்தில். ;)

திரும்ப முதலாமாள்

ஒன்றும் புரியவில்லை. ஒருவேளை விடுமுறையில் சென்றிருப்பார்களோ வீட்டார்! முன்பிருந்தவர்கள் விடுமுறையில் செல்லும் போது எங்கள் பராமரிப்பில் பூனைகளை விட்டுப் போவார்கள். இப்போதுள்ளவர்கள் இளவயதினர். மேலதிகமான இந்த மலகூடத்தில் கம்பளித் தரை இல்லையென்பதால் அதனை பூனைகளுக்கான அறையாக்கிவிட்டார்களோ!

Tuesday 10 September 2013

வாழ்த்துகிறேன்

இமாவுக்கு இனிய விநாயகசதுர்த்தி வாழ்த்துக்கள்.

பின்ன என்ன? எல்லாரும் கொழுக்கட்டையும் மோதகமுமாகப் போட்டுப் போட்டு என்னைப் புகைய வைக்கிறீங்கள். எனக்கு ஒருவரும் தாறதாக் காணேல்ல. ;(
நானே மோதகம் செய்து சாப்பிட்டன்.

இது உங்களுக்கு.

அனைவருக்கும்... பிலேட்டட் விநாயகசதுர்த்தி வாழ்த்துக்கள். :-)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அதிராவுக்காக 0---   ---


Friday 6 September 2013

என் செல்ல மீன் தொட்டிக்கு...

சமர்ப்பணம் - என் செல்ல மீன் தொட்டிக்கு ;)

பாஷை தெரியவில்லை
புரிவதற்கு எதுவுமில்லை
மொழி.. அன்பென்பதால்,
இசைக்கு மொழியிலாததால்
மனதைத் தொட்டதிது.

விரும்பியது...
முதலிற் பெண் வேண்டும்.
யாரதுவென்றே யானறியேன்.

இரண்டாவது பெற்றுப்
பெண்ணாய் வளர்க்க
வளர்ந்தது என் தாயாய்
சேயானேன் நான்.

மூன்றாவதும் சோதரனாய்ப் போக...
சேர்த்துக் கொண்ட சின்ன மகள்
சொன்ன சேதி
சொர்க்கம் தருது இன்று.

அன்றன்று வரும்
சின்னச் சின்னக் குறிப்புகளில்
உணர்கிறேன் தாய்மை மீண்டும்.
மென்மையாய் வளர் வயிற்றில்
மீன்குஞ்சு ஊரக் கண்டேன்.
அது சுழல,
மென்வால் தடவ,
சின்னச் சிலிர்ப்பு என்னுள்.

கண் பனிக்கக் கேட்ட வரம்
கனிவாய்ச் செவி மடுத்தாய்.
மனம் நிறைந்து நிற்கிறேன்
மனதார நன்றி தந்தாய்.
மீண்டும் ஓர் வரம் வேண்டும்
என் செல்ல மீன் தொட்டிக்கு...
ஒரு குஞ்சு போதா
தாராளமாய்த் தங்கமீன்கள்
தாங்கும் வரம் வேண்டும்.
தயை கூர்ந்து தா இறையே!

- இமா க்றிஸ்

Wednesday 4 September 2013

நடை


 அழகாய் ஒரு காலை
அன்பு மகன் இறக்கி விட
கால் வீசி நடந்து
புகாருள்ளே தொலைந்து
இன்புற்ற பொழுதில் தோன்றிற்று...
கவிதை வரி.

படம் பிடித்தேன்
இரவு வந்து வார்த்தைச் சரம் கோர்த்தேன்.
அனுப்பினேன் அறுசுவைக்கு

நேற்று...
மகிழ்ச்சி எல்லாம் பனிபோல்
கலைந்து போயிற்று.

அதைச் சுட்டுச் சின்னாபின்னமாக்கி
முகநூற் சுவரில் ஒட்டியிருக்கிறார் ஒருவர். ;(
வாழி அவர்.