Friday 14 November 2014

அன்பளிப்புப் பெட்டி ஒன்று

ஆசிரியத் தோழி ஒருவர் தனது உறுதிபூசுதலுக்கு சக ஆசிரியர் ஒருவரை sponsor ஆகத் தெரிந்திருந்தார்.
அவருக்கு மரவேலையில் ஈடுபாடு அதிகம். வித்தியாசமான இந்த சிலுவையை அன்பளிபாகக் கொடுப்பதற்காகத் தயார் செய்ய ஆரம்பித்தார். அவ்வப்போது முன்னேற்ற நிலையை அபிப்பிராயங்களுக்காக என்னோடு பகிர்ந்துகொள்வார்.

அளவான நியூஸிலாந்து ரிமு மரக் குற்றியில் குறிப்பிட்ட அந்த சிலுவையின் அளவுக்குக் குடைந்து அதனுள் படத்தை ஒட்டினார். ஒட்டுவதற்கு ஒரு வகை ஸ்ப்ரே க்ளூ பயன்படுத்தியதாகச் சொன்னார். அது கடதாசியை நனைக்காமல் சுருக்கங்கள் இல்லாமல் ஒட்ட உதவுமாம்.

பிறகு படத்தை மறைத்து வைத்துக் கொண்டு sand paper கொண்டு தேய்த்துச் சீராக்கினார். Rimu பலகைக்கு varnish கொடுக்கத் தேவையில்லை. சாதாரண சமையல் எண்ணெயைத் துணியில் தொட்டுப் பூசி தேய்த்துவிட்டால் போதும். 

இறுதி விளைவு நாங்கள் நினைத்தபடியே அழகாக வந்தது.

அழகான அந்த அன்பளிப்புக்கு பொருத்தமாக ஒரு பெட்டி அமைந்தால் நன்றாக இருக்கும் என்று பேசிக்கொண்டோம்.

அவர்களுக்காக நான் தயாரித்த பெட்டி இது.
உள்ளே அளவாக bubble wrap துண்டு ஒன்றை வெட்டி வைத்து...

அதன் மேல் சிலுவையை வைத்து...
பொதி செய்தோம்.

Wednesday 22 October 2014

வாழ்த்துகிறேன்

பல நாட்கள் கழித்து இங்கே எட்டிப் பார்க்கிறேன்.
அனைவருக்கும் இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.

Monday 1 September 2014

அச்சுக் கலை

பாடசாலைச் சின்னவர்களை அழைத்துக் கொண்டு கல்விச் சுற்றுலாவென்று எங்கெல்லாமோ போவோம். சென்ற தவணை மோடாட் ( MOTAT) சென்றிருந்தோம். போக்குவரத்து & தொழில்நுட்பம் தொடர்பான அருங்காட்சியகம் இது. தனியாகப் பதிவு இடும் அளவு ஏராளமான தகவல்கள் உள்ளன. 

இன்று... அச்சடித்தல் பற்றிச் சின்னதாக ஒரு கிறுக்கல்.

நான் படித்த காலத்தில்... பரீட்சை வினாத்தாள்கள் எல்லாம் ஆசிரியைகள் ரோனியோ மெஷினில் போட்டு கை வலிக்கச் சுற்றுவார்கள். நான் கற்பிக்க ஆரம்பித்த காலத்தில் ஸ்டென்சில் வெட்டும் அனுபவம் கிட்டியது. ஸ்டென்சிலை எக்ஸ்ட்ரே ஷீட் ஒன்றின் மேல் வைத்து மை தீர்ந்த  பேனா ரீஃபில்களால் சற்று அழுத்தி எழுத வேண்டும். அதிக அழுத்தம் கொடுத்தாலும் ஸ்டென்சில் கிழிந்து போகும். அந்த இடங்களில் மசி அதிகம் படிந்து எழுத்துகள் படிக்க முடியாததாகி விடும். என் வினாத்தாள்கள் மாணவர்கள் பரீட்சையைச் சுமையாக நினைக்காமல் ரசித்து எழுத வேண்டும் என்னும் எண்ணத்தில் கொஞ்சம் கலை நயத்தோடு அமைக்கப்பட்டிருக்கும். முடிந்த அளவு படங்களைச் சேர்ப்பேன். சில சமயம் ஸ்டென்சிலில் நாணயங்களை வைத்துத் தேய்த்து அச்சடிப்பேன்.

ஒரு சமயம் தோழியொருவருடன் அவரது பெரியப்பா வீட்டிற்குப் போயிருந்தேன். புகழ் பெற்ற ஈழத்து  சிறுகதை, நாவல் எழுத்தாளர் திரு. வ. அ. இராசரத்தினம் அவர்கள்தான் அந்தப் பெரியப்பா. அவரது வீட்டிலேயே அச்சுக் கூடம் ஒன்று இருந்தது. குட்டிக் குட்டியாக இரும்பில் வார்த்த தமிழ் எழுத்துக்கள் சின்னப் பெட்டிகளில், விதம் விதமாக அரிசியைத் தரம் பிரித்துக் கொட்டி வைத்தது போல வைத்திருந்தார். ஒன்றைக் கையில் எடுத்துப் பார்த்தேன். 'உ' - கண்ணாடிப் பிம்பம் போல் தெரிந்தது. ஒவ்வொரு எழுத்தாக அச்சுக் கோர்த்து அடித்து, பிறகு சரிபார்த்து... அச்சடிப்பது கடினமான வேலை அப்போது. ஆட்டோகிராஃப் படம் பார்த்தால் கொஞ்சம் புரியும். 

இப்போது... காலம் மாறிவிட்டது. நினைத்ததை நினைத்தவுடன் வீட்டிருந்தபடி அச்சடித்து எடுக்கலாம். எங்கள் பாடசாலைச் சின்னவர்கள் சிலர் வாராந்தர வீட்டுப் பாடத்தை 'மெமரி ஸ்டிக்' ஒன்றில் போட்டு வந்து பாடசாலை வாசிகசாலையில் அச்சடித்து வகுப்பாசிரியடம் சமர்ப்பிக்கிறார்கள். 

இந்தக் கல்விச் சுற்றுலாவில் நான் கண்டது வேறு வகையான அச்சியந்திரம். முடிந்தால் ஒன்று வாங்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். ;) இது முப்பரிமாண வடிவங்களை அச்சடிக்கும். சாதாரண அச்சியந்திரத்திற்கு மை போல இதற்கு...தோட்டத்தில் புல்லு வெட்டும் edge trimmer இற்கு மாட்டும் ப்ளாஸ்டிக் நூலைப் போல ஒன்று இருந்தது. ஆனால் அதுவல்ல இது. பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது இந்த நூல். வெப்பநிலையோடு நிறம் மாறும் நூல் கூட கிடைக்கிறது. எபொக்ஸ்சி, நைலோன் தவிர வேறு பொருட்களையும் பயன்படுத்தலாம் என்றார்கள்.
ஒரு பெட்டியில் ஏற்கனவே அச்சடித்து வைத்திருந்த முப்பரிமாண வடிவங்கள் சேமிக்கப்பட்டிருந்தன. அவற்றுள் ஒன்று... அழகான குட்டி முயல். சலவைக்கல்லில் செதுக்கியது போல அத்தனை அழகு. வீட்டிற்கு வந்து இணையத்தில் கொஞ்சம் ஆராய்ந்தேன். இனி.... வீட்டிற்குத் தேவையான ப்ளாஸ்டிக் பொருட்களை நாமே அச்சடிக்கலாம். நீங்கள் பார்த்து ரசிக்க - இங்கே யூ ட்யூப் காணொளி ஒன்றிற்கான சுட்டியை இணைத்திருக்கிறேன். 

பி. கு

சின்னவர்களோடு போகும் போது எனக்காகப் படங்கள் எடுக்க நினைப்பதில்லை. அவர்களைக் கவனிப்பதற்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதனால் முப்பரிமாண குட்டி முயலுக்குப் பதிலாக என் குட்டிப் பெண் ட்ரிக்ஸி. :-)

Friday 22 August 2014

டொமாரும் டொமாரியும்

தோழியின் தோழியின் தோழியின் பொம்மை தயாரிக்கும் ரசனை, ஆரம்பித்த வேகத்தில் முடிந்து விடாமல் இடையில் தடைப்பட்ட காரணத்தால் கைகள் மாறி என்னிடம் வந்தன இரண்டு பொம்மைகள்.

மேற்சட்டைக்குப் பித்தான்கள் எதையும் காணோம். ஊசி குற்றிய காற்சட்டையைப் பார்த்ததும் டொமார் தான் நினைவுக்கு வந்தார்.

டொமாரி... டொமாரை விடப் பரிதாபமான நிலமையிலிருந்தார். மூக்கையும் காணோம்; முழியையும் காணோம். இவருக்கும் பித்தான்களில்லாத சட்டையொன்று தயாராக இருந்தது.

தீவிர திருத்த வேலைகளின் பின்னால்.....
இப்பொழுது இருவரும் செபாவின் அயல் வீட்டுச் சின்னப்பெண்களுக்குத் துணையாகப் போயிருக்கிறார்கள்.

Monday 18 August 2014

அதிர்வலைகள்

சில காலம் முன்பு ஒரு பெண்குழந்தைக்கு ஏற்பட்ட விபத்து பரவலாக எல்லா இடங்களிலும் அதிர்ச்சி அலைகளைத் தோற்றுவித்திருந்தது.

அதற்கு முன்னால்...
சமீபத்தில் பாடசாலையில் ஒரு விடயம்  கற்பிக்க நேர்ந்தது. ஒவ்வொரு வருடமும் பாடத்திட்டத்தில் வரும் விடயம்தான்.

புத்தகத்தில் கார்ட்டூன் ஒன்று இருக்கும். ஒரு குளம்... ஒரு குழந்தை... அது தொப்பென்று ஒரு குட்டிக் கல்லை குளத்துள் போடும். கல் விழுந்த இடத்தில் நீரில் சின்னதாக ஒரு குழிவு... பிறகு ஒரு சிறிய வட்டம்... அது பெரிதாகி... இன்னொன்று... மற்றுமொன்று இன்னும் பெரிதாக என்று ஏராளமான வட்ட அலைகள், அதிர்வலைகள்... தொடர்ந்து கண்ணுக்குத் தெரியாது போகும் வரை அலைகள் பரவிப் போகும். Ripples of LOVE.

இந்தக் குழந்தையின் விபத்தும் சமுதாயத்தில் அதிர்வலைகளைத் தோற்றுவித்திருந்தாலும்... என்னவோ ஒன்று நெருடலாக என் மனதில் பட்டது. 

அவை அன்பின் அதிர்வலைகளல்ல. கரிசனத்தின் அதிர்வலைகளைப் போலத் தோன்றின. ஆனாலும் முகநூல் மற்றும் பல இடங்களில் என் பார்வையில் பட்ட பதிவுகளும் அவற்றின் பின் தொடர்ந்திருந்த கருத்துகளும் சற்று நெருடுடலாக இருந்தன. நாம் எதிர்மாறான அதிர்வலைகளைத் தோற்றுவிக்கிறோமா!

நடந்த கொடுமையை விமர்சிக்க யாருக்கும் உரிமை இருக்கிறது; விமர்னம்... தனிமனித உரிமை என்று கொண்டாலும் கூட... தீர்ப்புக் கூற யாருக்கு உரிமை இருக்கிறது!!

அவனை வெட்ட வேண்டும். அடித்துக் கொல்ல வேண்டும், தூக்கில் போட வேண்டும்... இதை விட பல மேலான கருத்துக்களும் கண்ணில் பட்டன. அப்போது வலியோடு ஒரு எண்ணம் தோன்றிற்று.... இப்படி நினைத்த கணமே... இப்படியான எண்ணங்களை ஆதரிக்கும் கணமே நாமும் குற்றமிழைக்கவில்லையா! முகம் தெரியாத அந்தக் குற்றவாளிக்கும் எமக்கும் என்ன வேறுபாடு!!

இப்படியான அதிர்வலைகளைப் பரப்புவது நன்மையா! அது மீண்டும் சுழன்று வந்து எம்மையே தாக்காதா!

ஒரு செபம் இருக்கிறது. அதில் வரும் வரிகள்... 'என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன்,' என்று. இது மதப் பிரச்சாரம் அல்ல. மனிதப் பிரச்சாரமும் அல்ல. இமாவின் சுய பரிசோதனை.

என் குடும்பத்தில் யாருக்காவது தீங்கு நிகழ்ந்தாலும் கூட... அந்த வலியில் எதிராளியை மன்னிக்கும் மனப்பக்குவம் என்னிடம் இல்லாமல் போனாலும் கூட... திரும்பத் தாக்கத் தோன்றாத மனதை எப்பொழுதும் போல எனக்குக் கொடு இறையே!

Saturday 19 July 2014

ஆப்பிள்கள்

[DSC07604.JPG]
"அம்மா! ஆப்பிள்,"
"எதுக்குடா கத்துற!" திரும்பக் கத்தி விட்டுத் திரும்பிப் பார்த்தாள். அது பையோடு தரையில் உட்கார்ந்திருந்தது.

"மேசைல வைச்சா என்னடா! இப்போ எனக்கு தேவையில்லாத வேலை. முதுகு பிடிச்சுக்கப் போகுது.
சோம்பேறித்தனம் தான். நாலு ஆப்பிள் தூக்கினால் முதுகு பிடிக்குமா என்ன! அவள் முணுமுணுத்துக் கொண்டு தூக்கி வைக்க பையன் மெதுவாகச் சொன்னான், "ஆப்பிள் சாப்பிட்டா எதிர்ப்புச் சக்தி பெருகும். முதுகுப் பிடிப்பு வராதும்மா."
ஏற்கனவே கடுப்பிலிருந்தாள். காலையிலிருந்து என்னவோ ஒரு எரிச்சல். இப்போ இவன் வேறு. பழத்தட்டை நிரப்பி விட்டு பையைத் தூக்கிக் கொண்டு உள்ளே போனாள்.

ஹாலை சுத்தம் செய்ய நினைத்து எல்லாவற்றையும் பரவிப் போட்டிருந்தாள். இடை நடுவே மீண்டும் அசதி தலை காட்ட அப்படியே ஒரு சோஃபாவில் சரிந்தவள் தூங்கிப் போனாள்.


தொலைபேசி அழைத்து எழுப்பிற்று. "பின்னேரம் நாங்கள் அந்தப் பக்கம் வாறம். நீங்கள் வீட்டில இருப்பீங்கள் எண்டால் உங்களையும் வந்து பார்க்கலாம் எண்டு நினைச்சம்."

வெகு நாட்களாக இவர்கள் வரவை எதிர்பார்த்திருந்தாள். அவளுக்குப் பிடித்த இலங்கை நட்பு வட்டம். ஆனால்... இப்போது வீடு இருக்கும் நிலையில்!!

"பிரபூ... இதை ஒதுக்க கொஞ்சம் உதவி செய்யேன்."
பிரபு வந்தான். அம்மா சொன்னது போல எல்லாம் செய்து கொடுத்தான்.

"முடியலைன்னா நாளை பண்ணலாம்ல! எதுக்கு இப்படி சிரமப்படுறீங்க?" என்றான்." கிட்டத்தட்ட வேலை முடியும் சமயம் ஒரு ஆப்பிளை எடுத்துக் கடித்தான். அம்மாவுக்கும் ஒன்று கொடுக்க, "இப்போ வேண்டாம்," என்றாள்.

"சும்மா சாப்பிடும்மா. சாப்பிட்டா..."

திரும்ப நோய் எதிர்ப்புச் சக்தி என்று ஆரம்பிக்கப் போகிறானோ என்று அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
"ஆன்டி வர மாட்டாங்க."
"அவங்கதான் டாக்டராச்சே!"
~~~~~~~~~~~
இன்னொரு ஆப்பிள் கடி இங்கே

Sunday 22 June 2014

இளையநிலாவைத் தொடர்கிறேன்

1. உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக்
கொண்டாட விரும்புகிறீர்கள்?
இருப்பேன் என்று கொண்டு கேட்கப்பட்ட கேள்வி இது. கட்டாயம் கொண்டாட வேண்டும். மகாராணியிடமிருந்தும் வாழ்த்து வருமே! ;-) சந்தோஷமாக என் குழந்தைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள், வலையுலகிலும் இதே போல ஒரு குடும்பம் பெருகி இருக்குமே.... எல்லோருடனும் என் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வேன்.  :-)

இமா... குதூகலமான, ரசனை நிறைந்த, ஆரோக்கியமான மனதுக்குச் சொந்தக்காரி. யார் மேலாவது (நியாமாக) கோபம் வந்தாலும் கர்ர்...ச்சித்துவிட்டு... ;) நாலு நாளில் அதை 100% மறந்து விட்டு அன்பு பாராட்ட முடியும் பேர்வழி. தன் ஆரோக்கியம் பற்றிய புரிதல் போதுமான அளவு இருக்கிறது. இப்போது இமா இருக்கும் நிலையை வைத்துப் பார்க்க... நிச்சயம் 100 வயதில் ஆரோக்கியமான மனநிலையில் இன்னும் அழகான குழந்தையாக இருப்பேன் என்று நம்பிக்கை இருக்கிறது. ;) அப்படியில்லாமல் சுயநினைவில்லாது இருப்பேனானால்... நடப்பது நடக்கட்டும். நன்றாக இருந்தால்... நிச்சயம் அப்போது என் வசதிக்கு ஏற்ப, என் நட்பு வட்டத்திற்கேற்ப... கொண்டாடுவேன். என் கையாலேயே கேக் செய்வேன். ஊட்டிவிட செபாதான் இருக்க மாட்டாங்க.
 

அன்றைய நாள் நிச்சயம் இன்னொரு சாதாரண நாளாக இராது. குடும்பம் & நெருங்கிய நட்புகளோடு செலவளிக்கும் ரசனை மிக்க அவர்களாலும் மறக்க முடியாத நாளாக இருக்கும். என் அகராதியில் 'கொண்டாடுதல்' - ஆடம்பரச் செலவு செய்து கொண்டாடுவது அல்ல. என் வாழ்க்கையைக் கொண்டாடுவது, என் உறவுகளை, நட்புவட்டத்தைக் கொண்டாடுவது, அ+து... அங்கீகரித்தேன், மகிழ்ச்சியாக அனுபவித்தேன் என வெளிப்படுத்துவது.

'பிறந்தநாள் இன்னொரு நாள் மட்டும்தான்.' / 'இதில் கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை.' / 'வீண்!' / 'வாழ்க்கையில் ஏதாவது சாதித்தவர்கள் தான் பிறந்தநாள் கொண்டாடலாம்.' இப்படிப் பலர் வாயிலிருந்து பல கருத்துகள் கேட்டிருக்கிறேன். என்னைப் பொறுத்த வரை... ஒவ்வொரு பிறந்தநாளும் விசேடம்தான். நான்... இறப்பைச் சுவைத்துப் பார்த்தவள். மனித உயிரின் அற்புதத்தை, பெறுமதியை முழுமையாக உணர்ந்து வைத்திருக்கிறேன்.  என் வாழ்க்கையை இனிமையாக்கிய, முழுமையாக்கிய ஒவ்வொருவருக்கும் அந்தச் சமயம் சின்னதாகவாவது ஏதாவது செய்ய வேண்டும். அப்போது உயிருடன் இருப்பவர்கள் விலாசங்களைத் தேடிச் சேகரிப்பேன். குறைந்தது... பிரத்தியேகமாக ஆளொக்கொரு Thank you Card - அவரவர் குணாதிசயத்திற்குப் பொருத்தமாக நானே செய்து என் கைப்பட நன்றிச் செய்தி பதிவிட்டு அன்போடு அனுப்பிவைப்பேன். இது முன்பே தயாராக இருக்கும். பிறந்தநாளுக்கு பத்து நாட்கள் முன்பாகத் தபாலில் சேர்த்தால் வெளிநாட்டு நட்புகளுக்கு சரியான சமயத்தில் கிடைக்காதா! அவ்வ்!! இப்போதே இங்கு தாபால் நிலையங்களுக்கெல்லாம் மூடுவிழா நடக்கிறது. ஹ்ம்! குரியர் இருக்கும் எப்படியும். நம்பிக்கைதான் வாழ்க்கை. ;)


2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
இன்னும் அதிகமாக 'என்னை'. ;)

3. கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
ம்... இது இமாவிடம் கேட்கும் கேள்வியா இளமதி! 'கடைசியாக உர்ரென்று இருந்தது எப்போது? எதற்காக?' என்று கேட்டால் கூட "நினைப்பில்லை," என்பேன். பாரமான எதையும் மனதில் தூக்கிக் கொண்டு உலவுவது கிடையாது.  சிரிப்பது தினம் பலமுறை. கடைசிவரை அது என் கூட வரும்.

4. 24 மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
செய்வது என்னவா? என்ன செய்வேனா?
 
ம்... இது... நியூஸிலாந்து. கோடையென்றால்... இங்கு சூரியபகவான் அதிகாலை உதித்து ஒன்பது ஒன்பதரை வரை கோலோச்சுவார். பிரச்சினையே இல்லை. 
பனிக்காலமானால்... ஒன்றன் மேல் ஒன்றாக நான்கைந்து துணி, கையுறை காலுறையெல்லாம் மாட்டிக்கொண்டு எல்லா நாளும் போல பகற்பொழுது வேலைகள் ஆகும். 

சமையல்... இதற்காகத்தானே வாயு அடுப்பு வைத்திருக்கிறேன். இணையம்... ஒரு பொழுதுபோக்கு. வேறு பொழுது போக்குகள் நிறைய இருக்கின்றன எனக்கு. பொழுது போதவில்லை என்று பின்போட்ட வேலைகளும் இருக்கும். அதிலொன்றை முடிப்பேன். 

குளியல்... 25 ஆவது மணி ஆனதும் வெந்நீர் கிடைக்கும்போது குளிக்கலாம். 

இரவு!! மெழுகுவர்த்தி எதற்கு இருக்கிறது! ஒரு ரொமான்டிக் 'காண்டல் லைட் டின்னர்'. போன் / அழைப்பு மணி அடிக்காத, கணனி / தொலைக்காட்சி வழியாக எட்டிப் பார்க்கும் கோபிநாத்கள் சூப்பர் சிங்கர்கள் யாருமில்லாத அமைதியான தனியான இரவு... நான்... க்றிஸ்... ட்ரிக்ஸி... ஆவலுடன் எதிபார்க்கிறேன். :-)

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?
அவர்களிருவரையும் நல்ல மனிதர்களாக வளர்த்திருக்கிறேன் என்கிற பெருமை எனக்கு அதிகம் இருக்கிறது. இதற்குமேல் சொல்வதற்கு அறிவுரைகள் எதுவும் இல்லை. தேவையும் இல்லை. வாழ்த்து... அதுதான் ஒவ்வொரு நிமிடமும் என் மனதில் ஓடுகிறதே, தனியாக வாழ்த்த வேண்டாம். "I am proud of you!" என்று பூரிப்போடு சொல்லலாம். ஆனால் என்னிரு குழந்தைகளுக்கும் இதெல்லாம்தான் தெரியுமே. எதைச் சொன்னாலும் செயற்கையாகத்தான் தெரியும்.

ஒரு முத்ததுடன் "Love you lots Mahan!"


6. உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்தப் பிரச்சனையைத் தீர்க்க விரும்புகிறீர்கள்? அனைத்துப் பிரிவினைகளையும் இல்லாமற் செய்ய விரும்புகிறேன்.
 
7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்? முதலில்... என் புத்தியிடம்! அதற்கு மட்டும்தான் என்னை முழுமையாகத் தெரியும். அது சொல்லும் எதற்கு யாரை அறிவுரைக்கு அணுகவேண்டும் என்பதை.
 
8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால்
என்ன செய்வீர்கள்?
அனுபவம் இருக்கிறது. அப்போது இருந்த இமா சின்னப்பெண். அமைதியாக மனதுக்குள் புழுங்கினேன்தான். ஆனால் அதை மனதோடு காவித் திரியவில்லை. அவர்களுக்கு ஏதோ ஒரு மன ஆறுதல் வேண்டி அப்படிச் செய்திருந்தார்கள். பரிதாபம்தான் வருகிறது இன்று நினைக்க.


இனிமேல்... என்னை, என் குடும்பத்தை எந்த விதத்தில் பாதிக்கும் என்பதைப் பொறுத்துத்தான் கவனிக்காது விடுவதா அல்லது ஏதாவது செய்யவேண்டுமா (அல்லது என்ன செய்வேன்) என்பதைத் தீர்மானிப்பேன்.


9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
என் 'நண்பர்கள்' அனைவருமே யதார்த்தவாதிகள். சொல்வதற்கு குறிப்பாக எதுவும் இராது. என்னால் அவர்களுக்குப் புதிதாக ஏதாவது உதவி தேவைப்படுமானால்  புரிந்துகொண்டு அவர்களுக்குத் தொல்லையில்லாத விதத்தில் உதவ முயற்சி செய்வேன்.

  10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
 ;)) இது எனக்கு சர்வசாதாரணம்.

முன்பெல்லாம் என் விடுமுறைகள் சின்னவர்களுக்கும் விடுமுறைகளாக அமைந்துவிடும். அவர்கள் பல்கலைக்கழகக் கல்வியில் கால் பதித்த பின்புதான் விடுமுறைகளில் தனியாக இருந்திருக்கிறேன். வீட்டு வேலை இருக்கும் விதம் விதமாக. பித்தளை மினுக்க, மூலை முடுக்குகள் தூசு நீக்க, முத்திரைகள் நாணயங்கள் பிரிக்க, வலையுலக நட்புகளோடு தொடர்பு... அதிகம் இந்த நாட்களிற்தான். ட்ரிக்ஸியோடு அதிக நேரம் செலவளிப்பேன். தோட்டத்தில் உலவுவேன். 

நட்பாயினும் உறவாயினும் ஜெர்மனியின் செந்தேன் மலர்களோடு பேச, உகந்த நாட்கள் இவை. :-) கொஞ்சம் வலைப்பூக்களில் இடுகை, பின்னூட்டம், கொஞ்சம் அதிகமாக அறுசுவை. கைவினை செய்வேன். குளியல் தொட்டியில் வெந்நீர் நிரப்பி ரசித்து ஊ..றிக் குளிப்பேன். நக அலங்காரம். புதிதாக ஒரு கைவினை. இமை மூடி ரசித்து என் mouth organ இல் ஒரு ராகம். பூனையைக் கண்டால் நாய் போல் குரைத்துக் காட்டுவேன். பறவைக் குரல்களை பயிற்சி செய்து அவர்களைக் குழப்புவேன். ;) கிண்ணம் நிறைய மணத்தக்காளி பறித்துச் சுவைத்து... நாவைக் கண்ணாடியில் பார்ப்பேன். ;))

எதிர்பாராமல் அந்நியர்கள் யாராவது கதவைத் தட்டினால்... (இங்கு அறிமுகமானவர்கள் முன்பே பேசி வைக்காமல் வருவது கிடையாது.) படுக்கை அறை ஜன்னலைத் திறந்து, "எனக்கு உடம்பு சரியில்லை. அதனால்தான் வேலைக்கும் போகாமல் வீட்டில் இருக்கிறேன்.
(பொய்தான், ஆபத்துக்குப் பாவம் இல்லையல்லவா!) குறை நினைக்க வேண்டாம்." என்று மன்னிப்புக் கேட்டுக்கொண்டு ஜன்னல் வழியாகவே பேசி அனுப்புவேன். தனியாகத் தெருவில் நடக்கப் பிடிக்கும். கிளம்பிவிடுவேன்.

Tuesday 10 June 2014

வாழ்த்தொன்று!

இன்று பிறந்தநாள் கொண்டாடும்... என் அன்புத் தாயார் செபாவுக்கும்...
என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பொழுது... போகிறது
நொடிகளாய்
நிமிடங்களாய்
மணிகளாய்
நாட்களாய்
மாதங்களாய்
வருடங்களாய்ப் போகிறது
விரைவாக..
மிக விரைவாக

போகட்டும் பல்லாண்டு இப்படி
நலமாக, வளமாக.

பொழுது... போதவில்லை
வருட மத்தி இது;
பரீட்சைக் காலம்.
ஆதலால்...
சின்னதாக ஒரு கேக்
பெரிதாக வாழ்த்தொன்று.

வாழ்த்துகிறேன்
வாழ்க!

- இமா

Friday 6 June 2014

ட்ரிக்ஸி பேசுகிறேன்!



எப்பவும் பொம்மைகளோட விளையாடிக் கொண்டிருந்து... எது பொம்மை எது உண்மையான பிராணி எண்டே விளங்கேல்ல எனக்கு. பக்கத்து வீட்டு ஸ்பெகட்டோ... என் சைஸ்லயே இருக்கிறார். வாலும் காதும்தான் கொஞ்சம் வித்தியாசம். ஆசையாக விளையாடப் போனால் வீட்டில ஏசுறாங்கள்.
;(
 "பூனையைக் கண்டால் நாய் மாதிரிக் கத்தவேணும். இல்லாட்டி பூனை மாதிரியாவது நடிக்க வேணும். ரெண்டும் தெரியாட்டி உள்ள ஓடி வரவேணும்," எண்டு இமா சொல்லுறா.
 
நான் சொல்லுக் கேக்கிறேல்ல எண்டு உயரமா வேலி போட்டிருக்கிறாங்கள். எனக்கென்னவோ ஸ்பெகட்டோ எப்பிடியும் இதையெல்லாம் தாண்டி என்னைப் பார்க்க வரும் எண்டு நல்ல நம்பிக்கை இருக்கு. அதே நம்... ம்ஹும்! சந்தேகம் இமாவுக்கும் இருக்கும் போல. இப்ப க்றிஸ் படலை அடிக்கிறார்.
 
நீர்மட்டம் எல்லாம் பார்த்து பயங்கரமா வேலை நடக்குது. 
 
எனக்காக கஷ்டப்படுறாங்கள். பாவம்! ஏதாவது உதவி செய்யலாம் எண்டு நினைச்சன். சுத்தியல் கீழ கிடந்தது எடுத்துக் குடுக்கப் போனன். அது சரியான பாரம். தூக்கத் தூக்க விழுந்து வைச்சுது. கடகடவெண்டு சத்தம் கேட்க எல்லாரும் சிரிக்கிறாங்கள். இனி ஒரு உதவியும் செய்ய மாட்டன் இவங்களுக்கு. ;(
எனக்குப் பசிக்குது. இமா பிடுங்கி வைச்சிருக்கிற கரட்... உங்களுக்கும் வேணுமோ!
 
நான் கீரையைச் சாப்பிடுறன். நீங்கள் கரட் சாப்பிடுங்கோ. எனக்கு கடையில வாங்குற கரட் கிழங்கு மட்டும்தான் விருப்பம். இது நல்லாவே இருக்காது. வாசம்... கரட் போலவே இல்லை. ஆனால் இந்தக் கீரை மட்டும் யமி. ;P ஏன் இப்பிடி இருக்கு! உங்களுக்குத் தெரியுமோ!

Tuesday 27 May 2014

சீமாட்டி 1 2

இதற்குச் சீமாட்டிவண்டு என்று பெயரிட்டவர்.... வானதி.:-)
பொன்வண்டானால் பொன்னிறமாக இருக்வேண்டும். பெண்வண்டானால்... (ladybug) ஆணாக இருத்தலாகாது. :) இது பொரிவண்டு என்று நண்பரொருவர் சொன்னார். என்னைப் பொறுத்தவரை... இவை பின்வண்டுகள் - pin cushions ;)

நீங்கள் என்ன பெயர் சொல்கிறீர்கள்!!

முதல் முறை செய்த வண்டு... வயிற்றில் 'வெல்க்ரோ' ஒட்டி வைத்திருந்தேன். வெல்க்ரோவின் மறுபாதி தையலியந்திரத்தில் இருக்கும். வேலை நேரம் அங்கே வண்டார் ஒட்டிக் கொள்வார். மீதி நேரம் மேசையில் இருப்பார்.

சில மாற்றங்களோடு இரண்டாம் முறை செய்த வண்டிற்கான செய்முறை இங்கே

அப்டியானால்
து!!! :-)
```````````
ஒரு வருடத்தில் 365நாட்கள். இது 365வது இடுகை என்கிறது என் கணக்கு. இத்தனை வருடத்தில் ஒரு வயதுதான் ஆகி இருக்கிறதா என் உலகிற்கு! ஹ்ம்! ;(

Tuesday 20 May 2014

மணநாள் வாழ்த்துக்கள்

 மாமி வீட்டில் இந்த அழைப்பிதழைக் கண்டு அழகாக இருக்கவும் எடுத்து வந்தேன்.

எத்தனை நாள் வைத்திருப்பேன்! பிறகு இதற்கு என்ன ஆகும்!

உபயோகமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். தேதி கண்ணில் பட்டது.  மகன் முறையானவரது திருமண அழைப்பிதழ், விலாசமும் மனப்பாடம். இதையே மணநாள் வாழ்த்தாக அனுப்பிவிடலாமா!! தபால் செய்யப் போதுமான கால அவகாசம் இருந்தது அப்போது.
அழைப்பிதழைப் பகுதி பகுதியாகப் பிரித்துப் போட்டேன். வெளிப்பக்கம் OHP ஷீட்டில் அச்சடித்திருந்தார்கள். (அனைத்துப் படங்களிலும் பெயர்களை மறைத்திருக்கிறேன்.) நெய்ல் பாலிஷ் ரிமூவரைத் தொட்டு எழுத்துகளை அழிக்க முயன்றேன். திருப்தியாக வரவில்லை. முடிந்தவரை அழித்து எடுத்தேன்.
 உள்ளே அச்சடித்த பக்கத்தை நீக்கிவிட்டு அதே அளவில் இன்னொரு அட்டை வெட்டி துளைகளையும் சரியான இடங்களில் அடித்து எடுத்துக் கொண்டேன். இந்த அட்டையில் என் எழுத்தில் வாழ்த்துக்களைப் பதிவு செய்து...
மீண்டும் முன்பிருந்தபடி கோர்த்துக் கட்டினேன். பஞ்ச் செய்த பூக்கள் தேவையற்ற பகுதிகளை மறைத்திருக்கின்றன. தபாலில் சேர்க்கும் முன் இறுதியாக, வெறுமையாகத் தோன்றிய பூக்களின் நடுவே நகங்களுக்கு ஒட்டும் சிறிய சிவப்புக் கற்களை ஒட்டி முடித்தேன்.

குறிப்பிட்ட அந்த இனிய உறவுகளுக்கு என் அன்பான மணநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Thursday 17 April 2014

வானமே எல்லை!

என் சேகரிப்பில் என்னவெல்லாம் இருக்கும் என்பது எனக்கே தெரியாது. 
 
சமீபத்தில் எதையோ தேட, குறுக்கே தரிசனம் தந்தது எப்போதோ 'கராஜ் சேல்' ஒன்றில் வாங்கிப் போட்ட இந்த ஆகாயவிமானத்தின் அமைப்பு!!!
அட்டைப் பெட்டியினுள்ளே ஒரு குட்டிப் பையில் சில ஸ்டிக்கர்களுடன் தேவையான பாகங்களனைத்தும் உதிரியாக இருந்தன.

குட்டிப் பிள்ளைகள் செய்யும் வேலைதான். ஆசையாக இருக்கிறதே! இங்கு குட்டீஸ் யாரும் இல்லை என்னைத் தவிர. பொறுமையாக பாகங்கள் அனைத்தையும் பொருத்தி ஸ்டிக்கர்களையும் ஒட்டி முடித்தேன்.

வானம் - என் சேலை. :-)

பெட்டியில் நிஜ விமானத்தைப் பற்றிய குறிப்புகள்.

Friday 21 March 2014

"ஏணி வேண்டும்!"

 
ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைக்கக் கூடாது என்பார்கள். இது எங்களுக்குப் பெரிய உதவி செய்தது ஊரில.

செபா நியூஸிலாந்து வர வெளிக்கிட்டதுமே எங்கட வீட்டை விற்றாச்சுது. பிறகு திருகோணமலைக்குப் போற நேரம் எல்லாம் மாமி வீட்டிலதான்; அது மச்சாள்ட வீடு என்றாலும்.. எங்கட வீடு மாதிரித்தான்.

இது போன முறை போன நேரத்துக் கதை. நாங்கள் இருந்த அறை கிட்டத்தட்ட யாரும் பாவிக்காத அறை. வீடு கட்டி முடியேல்ல இன்னும். இந்த அலுமாரிக்கு மேல மருமகள்ட கலியாண பனர் ++ எல்லாம் இருந்துது. பக்கத்து அறையிலதான் மாமி இருந்தவ. மேல தெரியிற இடைவெளியால இரவு முழுக்க மாமியின்ட "ஆண்டவரே! நாட்டிற்குச் சமாதானத்தைக் கொடும்," கேட்டுக் கொண்டே இருக்கும்.

ஒருநாள் கதவை இழுத்துச் சாத்த, அது பூட்டிக் கொண்டுது. நாங்கள் போற இடமெல்லாம் போய் வந்தாச்சுது. உள்ள மட்டும் போக முடியேல்ல. திறப்பு உள்ளே. ;)

சரி, ஒரு கோப்பி குடிக்கலாமெண்டு நினைச்சம். க்றிஸ் கோப்பி போடுறன் எண்டு போனார். பிறகு எனக்கு மட்டும் ஒரு கோப்பை வந்துது.
"நீங்கள் குடிக்கேல்லயா?"
 "அதுக்கு ஏணி வேணும்,"
ஏதாவது விளங்குதா உங்களுக்கு!! ஏணியில ஏறி நிண்டு குடிக்கப் போறார் எண்டு நினையாதைங்கோ.
க்றிஸ் ஈக்வல் போட்டுக் குடிப்பார். ஈக்வல் அறையில. அறைத் திறப்பும் அறையில.

ஈக்வலை எடுக்க முதலில் திறைப்பை எடுக்க வேணும். எப்படி! நிறையப் ப்ளான் பண்ண வேண்டியிருந்தது. ;)

திறப்பை எடுக்க ஒரே வழி மாமிட அறைக்குள்ள ஏணி வைச்சு ஏறி படத்தில தெரியிற இடைவெளியால எங்கட அறைக்குள்ள இருக்கிற அலுமாரிக்கு மேல குதிச்சு, பிறகு கீழ குதிச்சு கட்டில்ல இருக்கிற திறப்பை எடுத்து... கொஞ்சம் பொறுங்கோ, முடியேல்ல இன்னும்.

ம்.. திறப்பை எடுத்தால் போதாது. கதவை உள்ள இருந்து திறக்க ஏலாது. ஆகவே மீண்டும் போன வழியே திரும்ப வெளிய வர வேணும். அது ஏலாது. ஏனெண்டால் உள்ளே ஏணி இல்லை அலுமாரியில் திரும்ப ஏற. கஷ்டப் பட்டு ஏற நினைச்சு அலுமாரியோட விழுந்தால்!!! சரி, விழாமல் ஏறியாச்சுது எண்டு வைப்பம். பிறகு அந்த உயரச் சுவரை எப்பிடித் தாண்டுறது! மற்றப் பக்கம் இன்னொரு அலுமாரி இல்லை.

திறப்பைக் கவனமா சுவருக்கு மேலால அடுத்த அறைக்கு வீசலாம். ஆனால்... முதல்ல உள்ள எப்பிடிப் போறது! ஏணியைக் காணேல்ல! அது யார் வீட்டுக்கு இரவல் உலா போயிருந்தது என்று தெரியேல்ல. கள்ளனைப் பொலீஸ் தேடிப் பிடிக்கிறது போல அயலெல்லாம் விசாரித்துக்கொண்டு இருந்தார்கள்.

"சரி, விடுங்கோ. அது கிடைக்குமட்டும் நான் அணிலைப் படம் எடுக்கப் போறன்."
"அதுக்கும் ஏணி வேணும்." - கமரா உள்ள!!
"அவ்வ்!!! ம்.. நான் என் ஃப்ரெண்டுக்கு ஃபோன் பண்ணப் போறன்."
"அதுக்கும் ஏணி வேணும். அட்ரஸ் கொப்பி உள்ளதானே இருக்கு!"

வீட்டு உடுப்பு மாத்த முடியேல்ல; குளிக்க முடியேல்ல.
நெட் கனெக்க்ஷன் போனால் நீங்கள் எவ்வளவு கஷ்டம் அனுபவிப்பீங்களோ அதே அளவு கஷ்டம் அனுபவிச்சம் அன்றைக்கு.

பிறகு ஒரு மாதிரி ஏணி வீட்டுக்கு வந்தது.
தொடர்ந்து வந்த நாட்களில் அறையை விட்டு வரும் ஒவ்வொரு தடவையும் கவனமாக திறப்பைக் கையில எடுத்துக்கொண்டோம்.

Tuesday 18 March 2014

எழுதுகிறேன் ஒரு கடிதம்

இது ஒரு மீள் இடுகை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

18 March 2010


என் செல்ல மகளுக்கு,

மகள்தானே நீ? என் முதல் குழந்தை பெண்ணாக இருக்க வேண்டும் என்று தான் விரும்பினேன், அதனால் நீ மகள்தான். ;)

எப்படி இருக்கிறாய் என் குட்டிப் பெண்ணே? நலம்தானே? நலமாகத் தான் இருப்பாய்.

சில நாட்களாகவே உன்னோடு பேசவேண்டும் என்று தோன்றிக் கொண்டு இருந்தது.

இன்று உன் பிறந்த!நாள். நினைவு இருக்கிறதா! நாங்கள் இருவரும் மட்டும் ரகசியமாக செலிபரேட் பண்ணலாமா? ;) கேக், ஸ்வீட், டெகரேஷன் எல்லாம் கிடையாது. பேசலாம், பேச்சு செலிபரேஷன் மட்டும், ஓகேயா! ;) இந்த இருபத்தைந்து வருடங்களில் இதுதான் நாங்கள் கொண்டாடும் முதலாவது பிறந்ததினம் இல்லையா? ;)

நீ என்னோடு இருந்திருந்தால் என்னவாக இருந்திருப்பாய்! படித்துக் கொண்டு / வேலை பார்த்துக் கொண்டு! இல்லையானால் 'இங்கு' யாரையாவது 'பிடித்துக்கொண்டு' பீச், பார்க் என்று சுற்றி என் வயிற்றில் புளியைக் கரைத்திருப்பாயோ!! ;)) பாடசாலை விட்டு வெளியேறும் 'மூன்று மணி' அவசரப் பொழுதில், (சீருடையிலும்) அவசரமாக  ஒரு 'ஜோடி' செடி மறைவில் ஒதுங்கி முத்தமிட்டு மீள்வதைக் கவனிக்கையில் உன் எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. ;)

எனக்காக நீ எந்தச் சின்னச் சின்னச் சந்தோஷங்களையும் கொடுக்கவில்லை. அவ்வளவு ஏன், உன்னை ஏந்தி முத்தமிடக் கூட எனக்குக் கிடைத்ததில்லை. ஆனாலும்.... நீ என் மேல் பிரியம்தான் இல்லையா? ;) முதல் முறையாக ஆரோக்கியமாக உன் இழப்பை நினைவுகூரும் மனப்பக்குவம் இந்த அம்மாவுக்கு வந்திருக்கிறது. நீ நிச்சயம் என்னை நேசிக்கிறாய்.

கண்ணாடியில் முகம் பார்க்கிறேன், என் பதினைந்து வயது - ஆறு வயது மாணவரின் தாய் கண்ணில் தெரியும் நிரந்தர சோகம் என் கண்ணில் இல்லை. சமீபத்தில் தாயை இழந்த அன்றே ஏக்கத்தில் தானும் தானாகவே இறந்து போன அந்த வளர்ந்த குழந்தையாக நீ என் அருகே வளர்ந்ததில்லை. பாடசாலையில் எத்தனை பேரைப் பார்க்கிறேன், உன்னை யாரிலும் காணவில்லை. இப்போது ஏக்கம் என்னுள் இல்லை. மாறாக நிம்மதியாக இருக்கிறது. அதனால்... உன்னை எல்லோரிலும் காண முடிகிறது.

எந்தக் குழந்தையும் 'நன்றாக' இருக்க வேண்டும் என்றுதானே தாய் விரும்புவாள். அதனால் 'நீ இல்லை,' என்பதை 'நீ நன்றாக இருக்கிறாய்,' என்பதாக எடுத்துக் கொள்கிறேன். என்னைப் பிரிந்தமைக்கு நன்றி என் செல்லமே.

என் சின்ன மகளுக்கு வலிக்காமல், மென்மையாய் ஒரு முத்தம்.

I love you my little girl. I love you lots. 

என்றும் உன்
அம்மா 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 நாளை பூசைக்குக் கொடுத்து இருக்கிறேன்... கருவில் இருக்கிற, கருவாக இருக்கிற அனைத்துக் குழந்தைகள் நலனுக்காகவும். காலை எட்டு மணிக்குப் பூசை. நம்பிக்கை இருக்கிறவங்க என்னோட சேர்ந்து செபியுங்க.
சரி, இப்ப எல்லாரும் சிரிச்சுக் கொண்டு அப்பிடியே கிளம்பி அடுத்த இடுகைக்குப் போறீங்க. அங்க 'கிராக்கர்ஸ்' வச்சு இருக்கு. போய் அழகா ஒரு 'சீஸ்' சொல்லுங்க. ;)

Friday 7 March 2014

பெண் எழுத்து


இது ஒரு மீள்பதிவு. 
முதலாவதாக இடுகையிட்ட தினம் - 16 ஏப்ரல் 2011
இப்போது மீண்டும் வெளியிடக் காரணம் இரண்டு - உலக மகளிர் தினம் + மறைந்த என் ஆசிரியருக்கு அஞ்சலி.
கட்டுரை இறுதியில் நான் குறிப்பிட்டிருக்கும் என் அபிமானத்துக்குரிய எழுத்தாளர் தமிழ்மணி திருமதி பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கம் அவர்கள் கடந்த
27/02/2014 அன்று இறை எய்தினார்.

அன்னாரது ஆன்ம இளைப்பாற்றிக்காக என் பிரார்த்தனைகள். 


~~~~~~~~~~~~~~~~~~~~
 16 ஏப்ரல் 2011
அமைதியாக அங்கங்கே இத்தலைப்போடு வரும் இடுகைகளையும் அவற்றுக்கான கருத்துக்களையும் படித்துக்கொண்டிருந்தேன். இப்போ அதிரா அழைப்பை ஏற்றுத் தொடராமல் தொடர்கிறேன், நன்றி அதிரா. 
பலரைப் போலவும் எனக்கும் சந்தேகம்தான்... எதை என்று கொள்வது! பெண் எழுதுவதையா? அப்போ பெண் பெயரில் ஆண் எழுதினால்!! ;) இல்லை... இது நிச்சயம் பெண் எழுதுவது பற்றித்தான் இருக்க வேண்டும். ;) ஆனால் ‘எழுதுவது’ பற்றி எழுத வேண்டும். கிறுக்குவது பற்றியோ குப்பைகள் பற்றியோ அல்ல. ;) என் எழுத்தும் பெண் எழுத்தானாலும் எழுத்து என்கிற ரீதியில் சேர்க்க இயலாத எழுத்து. ;)

1879!
‘எழுத்து’ இப்போது எவ்வளவோ தூரம் கடந்து வந்துவிட்டது. ஒருவர் எழுதுவதை இன்னும் சிலர் படித்து பிரசுரத்துக்கு ஏற்றது எனத் தெரிந்து கொண்டு பின்பும் திருத்தங்கள், மாற்றங்கள் செய்து வாசகர்கள் பார்வைக்கு விட்ட காலம் போய் தனிப்பட ஆளாளுக்கு ஒன்றிரண்டு வலைப்பூக்கள் வைத்துக் கொண்டு  அவற்றில் அவரவர் இஷ்டம் போல் எழுதும் சௌகரியம் என்று வந்தாயிற்று. நேரத்தைத் தவிர வேறு செலவு இல்லை.

இந்த எழுத்துச் சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தாது இருக்கும் வரை ஆண் எழுதினால் என்ன, பெண் எழுதினால் என்ன எல்லாம் ஒன்றுதான்; விமர்சனங்கள் வாசகர் நோக்கினைப் பொறுத்தது.

கண்டன விமர்சனக்களுக்குள்ளாகின்ற ‘பெண் எழுத்து’க்களை (உதாரணம் எல்லாம் இங்கு எடுத்துச் சொல்லவில்லை,) எடுத்துப் பார்த்தால், அவை அவ்வாறு விமர்சனங்களுக்குள்ளாவதற்குப் படைப்பாளியின் பின்னணிதான் முக்கிய காரணமாக இருக்கும்; குடும்பம், நாடு, சமயம் மற்றும் கலாச்சாரம் என்று எத்தனையோ காரணிகளை அளவு கோலாகக் கொண்டு விமர்சனங்கள் வந்திருக்கும். இங்கு உண்மையில் எழுத்து விமர்சனத்துக்குள்ளாவதை விட படைப்பாளியே விமர்சனத்துக்குள்ளாகுகிறார்.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் விமர்சனத்துள்ளானாலும் சிலருக்குப் ‘பிரபல எழுத்தாளர்’ என்கிற அந்தஸ்து பிற்காலத்தில் தன்னால் அமைந்து விடுகிறது. கால மாற்றம் என்கிற ஒன்றும் காலத்துக்கேற்ப மக்கள் நம் மனது மாறுவது என்கிற ஒன்றும் கூட இருக்கிறது. இது எழுத்துக்கு என்று மட்டும் அல்லாமல் அனைத்திற்குமே பொருந்தும் இல்லையா? நாமும் மாறிவிடுவோம், தினமும் எம்மை அறியாமல் மாறிக்கொண்டேதானே இருக்கிறோம்.

இப்படித்தான் எழுத வேண்டும் என்று  தடை போடவேண்டாம் என்றே தோன்றுகிறது. ஒவ்வொருவரும் தனி மனிதர்; தனித்துவமானவர். ரசனை, சிந்தனைப் போக்கு அனைத்தும் வேறுபட்டிருக்கும். கருத்தும் எழுத்தும் சுயமாக ஒரு ஊற்றுப் போல் வர வேண்டும். அதில் தான் தனித்துவம் வெளிப்படும்.

ஒவ்வொருவருக்கும் தம் எண்ணத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம் இருக்க வேண்டும். படிக்கவும், பாராட்டவும் விமர்சிக்கவும் எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. விமர்சியுங்கள், அங்கிருந்து படைப்பாளி தனக்குத் தேவையானதைத் தெரிந்து கொள்வார்.

எழுதிவர் யாரென்பதை விடுத்து படைப்பை மட்டும் பார்ப்போம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நான் முதல்முதலில் படித்த ‘பெண் எழுத்து’, ‘பூஜைக்கு வந்த மலர்’, ஈழத்து மூத்த பெண் எழுத்தாளர் எனது மதிப்பிற்குரிய தமிழ்மணி கலாபூஷணம் திருமதி. ந. பாலேஸ்வரி அவர்கள் எழுதியது. மீண்டும் படிக்க விரும்பித் தேடுகிறேன். பூஜைக்கு வந்த மலரை பா. பாலேஸ்வரி என்கிற பெயரில் எழுதி இருப்பார்கள்; அப்போது அவர்களுக்கு மணமாகி இருக்கவில்லை.
வாணி, நிலா, அதிரா, அனாமிகா, அம்முலு... யாராவது உதவுவீர்களா?
நாவலைப் படித்து முடித்து திருப்பிக் கொடுத்தபோது கேட்டார்கள்.. வளர்ந்து நான் எழுத்தாளராக வருவேனாவென்று. எங்கே! ஆசிரியப் பெற்றோர்க்குப் பிறந்த இமா இப்படித்தான் இருக்கவேண்டும் என்கிற மற்றவர்கள் எதிர்பார்ப்பு ஒன்று இருந்ததே, தயக்கத்தில் எழுதினதெல்லாம் குப்பத்தொட்டிக்கே போய்விட்டது. ஒரு புனைபெயரின் பின்னால் மறைந்து கொள்ளலாம் என்று அப்போது தோன்றவில்லை. ;( எல்லாவற்றுக்கும் ஒரு காலம் வர வேண்டும் இல்லையா! ;)
தற்போது என்னிடம் இருப்பது ஆசிரியையின் இந்த ஒரு நூல் மட்டும்தான். மீதியையும் சேகரிக்க முயற்சிக்கிறேன்.


என் தாயாருக்கும் மாமியாருக்கும் சக ஆசிரியை என்கிற விதத்தில் திருமதி. பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கம் அவர்களோடு நட்பு இருந்தது. மூவருமே பாடசாலையில் என் தமிழ் ஆசிரியர்கள். கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து இம்முறை திருகோணமலைக்குச் சென்றிருந்த போது அவரைச் சந்தித்தேன். அவர் வீட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இது.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திருமதி. ந. பாலேஸ்வரி அவர்கள் எழுதிய
சுடர் விளக்கு -
http://noolaham.net/project/11/1011/1011.pdf
தத்தை விடு தூது -
http://www.noolaham.net/project/04/373/373.htm



நன்றி நிரூபன்

Wednesday 26 February 2014

கீவி நேரம்!

சென்ற வருட இறுதியில் தட்டி வைத்து படமும் சேர்த்திருந்தும், நேரமின்மை கரணமாக வெளியிடாது சேமிப்பில் இருந்த இந்த இடுகை கண்ணில் பட்டது. இப்போது உங்கள் பார்வைக்காக.

~~~~~~~~~~~~~~
05 / 12 / 2013
நேரம் பற்றாக்குறையாக இருக்கிறது. ;(

எல்லோருக்கும் இருக்கிற அதே 24 மணி நேரம் இமாவுக்கும் கிடைத்தாலும்... கொஞ்சம் இடிபாடான மாதம் இது.
காரணம்....
1. பாடசாலையில் வருட இறுதி - பரீட்சை, முன்னேற்ற அறிக்கை, புதிய ஆண்டுக்கான ஆயத்தங்கள்
2. பாடசாலையில் வீட்டிலும் பிறந்தநாட்கள். முன்னதில் 4 + வீட்டில் ஒன்று
3. இங்கு முன்கோடை - தோட்டம் செப்பனிடல் + செய்து முடிக்க வேண்டிய வெளி வேலைகள். காற்றுள்ள போதே தூற்ற வேண்டும். வெயில் உள்ள போதே முடிக்க வேண்டும்.

நேரம் கிடைத்தால் ஒரு வலைப்பூ; மறுமுறை இன்னொன்று என்று உடனே இல்லாவிட்டாலும் எப்படியாவது அனைவரையும் தரிசிக்க வருவேன். அதுவரை தயை கூர்ந்து பொறுத்தருள்க நட்புக்களே.

ஒரு குட்டிக் கதை மட்டும் சொல்லிவிட்டுக் கிளம்புகிறேன். ;)

பரீட்சைக்கு முன்பாக மீட்டல் வகுப்புகள் நடந்துகொண்டிருந்தன. காலை இடைவேளையில் ஒரு கணித ஆசிரியை - கொஞ்சம் சின்னவர், முகம் சிவந்து சிரிப்பாக வந்து அமர்ந்தார்.

எல்லோரையும் ஆளுக்கு இரண்டு மணிக்கூட்டு முகங்கள் வரையச் சொல்லி இருக்கிறார். பின்பு இவர் குறிப்பிடும் நேரத்தை (முட்களை) அவர்கள் வரைந்து காட்ட வேண்டும்.

ஒரு மாணவி ஒரே ஒரு வட்டம் மட்டும் வரைந்து விட்டு வானம் பார்த்து (சுற்றிலும் ஏராளமாள கண்ணாடி ஜன்னல்கள்) இருக்க, அருகே போய் எண்களைக் குறிக்க உதவி விட்டு, அதை முடித்த பின் இரண்டாவது வட்டம் வரைந்து குறித்து வைக்கச் சொன்னாராம் ஆசிரியை.

வரைந்து முடித்து மாணவி கொண்டுவந்து காட்டிய மணிக்கூட்டில்.... 13 முதல் 24 வரை எண்கள் இருந்தனவாம்.  ;D

Saturday 15 February 2014

மலர் கொடுத்தேன்

ஹாய்! 
இமாவில் உலகத்தார் அனைவருக்கும் இமாவின் அன்பு வணக்கங்கள்! :-)
 _()_

சென்ற வருட இறுதியில்... பயண ஏற்பாடுகள், பாடசாலை ஆண்டு இறுதி வேலைகள் +++ என்று நேரமெல்லாம் போனதில், இங்கு அதிகம் எதுவும் பகிர்ந்துகொள்ள இயலவில்லை.

விடுறையின் போதும் நேரமின்மை + இணையத் தொடர்பு இல்லாமை என்று பகிர்வுகள் இல்லை. வீடு திரும்பிய பின்னாலும் சிலபல அவசிய வேலைகள். 


அவ்வப்போது அன்புள்ளங்கள் யாராவது 'இமாவின் உலகத்தை' வலைச்சரத்தில் அறிமுகம் செய்துவைக்க... கொஞ்சம் குற்ற உணர்ச்சி.

இதோ மீண்டும் வந்தேன். 

முதலில் வலைச்சரத்திற்கும் அங்கு என்னை அடிக்கடி நினைவுகூரும் அன்புள்ளங்களுக்கும் என் அன்பு நன்றிகளோடு....

இந்த மலர்ச்செண்டு

Tuesday 21 January 2014

நாகையில் ஒரு கொண்டாட்டம்!


விடுமுறை முடிந்து வந்து சரியாக ஒரு வாரம் இன்று. என் விடுமுறை ஆரம்பம் எப்படி  அமைந்தது என்று நான் சொல்வதை விட... உங்களை அங்கேயே அழைத்துச் செல்வது சுலபம். வருகிறீர்களா போகலாம்! :-) வர விரும்புபவர்கள் மேலே உள்ள இணைப்பை அழுத்துங்கள்.

Wednesday 15 January 2014

அறுசுவையும் நானும்

ஏற்கனவே  அறுசுவையில் உள்ள எனது படைப்புகளுக்கான தொடர்புகளை உலகில் அங்கங்கே இணைத்திருக்கிறேன்.
இப்போ புதிதாக...
'தொட்டுக்கொள்ள...'
~~~~~~~~~
தேவையான எல்லாவற்றையும் ஓரிடமாகத் தொகுத்து வைத்தால் தேடுவதற்குச் சுலபமாக இருக்கும் என்கிற எண்ணத்தில் இந்தத் தொகுப்பு. என்னைப் பின்தொடரும் கவினையில் ஆரவமுள்ள, தமிழ் படிக்கத் தெரியாத நட்புக்களுக்காக ஆங்கிலத்தில் சிலவற்றைக் கொடுத்திருக்கிறேன்.

க்றிஸ் கைவினைகள்

 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 ஏஞ்சல் செய்தவை

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அம்மா செபா செய்தவை

Silver Bells
Flower Arrangement
Paper ducks - Origami / Papaer Serviette foldings
First communion crown
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அலனது சமையல்கள்