Friday 21 March 2014

"ஏணி வேண்டும்!"

 
ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைக்கக் கூடாது என்பார்கள். இது எங்களுக்குப் பெரிய உதவி செய்தது ஊரில.

செபா நியூஸிலாந்து வர வெளிக்கிட்டதுமே எங்கட வீட்டை விற்றாச்சுது. பிறகு திருகோணமலைக்குப் போற நேரம் எல்லாம் மாமி வீட்டிலதான்; அது மச்சாள்ட வீடு என்றாலும்.. எங்கட வீடு மாதிரித்தான்.

இது போன முறை போன நேரத்துக் கதை. நாங்கள் இருந்த அறை கிட்டத்தட்ட யாரும் பாவிக்காத அறை. வீடு கட்டி முடியேல்ல இன்னும். இந்த அலுமாரிக்கு மேல மருமகள்ட கலியாண பனர் ++ எல்லாம் இருந்துது. பக்கத்து அறையிலதான் மாமி இருந்தவ. மேல தெரியிற இடைவெளியால இரவு முழுக்க மாமியின்ட "ஆண்டவரே! நாட்டிற்குச் சமாதானத்தைக் கொடும்," கேட்டுக் கொண்டே இருக்கும்.

ஒருநாள் கதவை இழுத்துச் சாத்த, அது பூட்டிக் கொண்டுது. நாங்கள் போற இடமெல்லாம் போய் வந்தாச்சுது. உள்ள மட்டும் போக முடியேல்ல. திறப்பு உள்ளே. ;)

சரி, ஒரு கோப்பி குடிக்கலாமெண்டு நினைச்சம். க்றிஸ் கோப்பி போடுறன் எண்டு போனார். பிறகு எனக்கு மட்டும் ஒரு கோப்பை வந்துது.
"நீங்கள் குடிக்கேல்லயா?"
 "அதுக்கு ஏணி வேணும்,"
ஏதாவது விளங்குதா உங்களுக்கு!! ஏணியில ஏறி நிண்டு குடிக்கப் போறார் எண்டு நினையாதைங்கோ.
க்றிஸ் ஈக்வல் போட்டுக் குடிப்பார். ஈக்வல் அறையில. அறைத் திறப்பும் அறையில.

ஈக்வலை எடுக்க முதலில் திறைப்பை எடுக்க வேணும். எப்படி! நிறையப் ப்ளான் பண்ண வேண்டியிருந்தது. ;)

திறப்பை எடுக்க ஒரே வழி மாமிட அறைக்குள்ள ஏணி வைச்சு ஏறி படத்தில தெரியிற இடைவெளியால எங்கட அறைக்குள்ள இருக்கிற அலுமாரிக்கு மேல குதிச்சு, பிறகு கீழ குதிச்சு கட்டில்ல இருக்கிற திறப்பை எடுத்து... கொஞ்சம் பொறுங்கோ, முடியேல்ல இன்னும்.

ம்.. திறப்பை எடுத்தால் போதாது. கதவை உள்ள இருந்து திறக்க ஏலாது. ஆகவே மீண்டும் போன வழியே திரும்ப வெளிய வர வேணும். அது ஏலாது. ஏனெண்டால் உள்ளே ஏணி இல்லை அலுமாரியில் திரும்ப ஏற. கஷ்டப் பட்டு ஏற நினைச்சு அலுமாரியோட விழுந்தால்!!! சரி, விழாமல் ஏறியாச்சுது எண்டு வைப்பம். பிறகு அந்த உயரச் சுவரை எப்பிடித் தாண்டுறது! மற்றப் பக்கம் இன்னொரு அலுமாரி இல்லை.

திறப்பைக் கவனமா சுவருக்கு மேலால அடுத்த அறைக்கு வீசலாம். ஆனால்... முதல்ல உள்ள எப்பிடிப் போறது! ஏணியைக் காணேல்ல! அது யார் வீட்டுக்கு இரவல் உலா போயிருந்தது என்று தெரியேல்ல. கள்ளனைப் பொலீஸ் தேடிப் பிடிக்கிறது போல அயலெல்லாம் விசாரித்துக்கொண்டு இருந்தார்கள்.

"சரி, விடுங்கோ. அது கிடைக்குமட்டும் நான் அணிலைப் படம் எடுக்கப் போறன்."
"அதுக்கும் ஏணி வேணும்." - கமரா உள்ள!!
"அவ்வ்!!! ம்.. நான் என் ஃப்ரெண்டுக்கு ஃபோன் பண்ணப் போறன்."
"அதுக்கும் ஏணி வேணும். அட்ரஸ் கொப்பி உள்ளதானே இருக்கு!"

வீட்டு உடுப்பு மாத்த முடியேல்ல; குளிக்க முடியேல்ல.
நெட் கனெக்க்ஷன் போனால் நீங்கள் எவ்வளவு கஷ்டம் அனுபவிப்பீங்களோ அதே அளவு கஷ்டம் அனுபவிச்சம் அன்றைக்கு.

பிறகு ஒரு மாதிரி ஏணி வீட்டுக்கு வந்தது.
தொடர்ந்து வந்த நாட்களில் அறையை விட்டு வரும் ஒவ்வொரு தடவையும் கவனமாக திறப்பைக் கையில எடுத்துக்கொண்டோம்.

13 comments:

  1. எல்லாத்துக்கும் ஏணி வேணும்..!

    ReplyDelete
  2. அப்பாடா...! முடிவில் கிடைத்து விட்டது...!

    ReplyDelete
  3. ஊரில் ஏணிக்கு எவ்வளவு டிமான்ட். எங்க வீட்டு ஏணி என் மனக்கண்ணில். என்றாலும் நீங்க அதிக கஷ்டமெல்லோ அனுபவிச்சிட்டீங்க.

    ReplyDelete
  4. சாவி (திறப்பான்) உள்ளே மாட்டிக் கொண்டதான எங்களுக்கான ஒரு சந்தர்ப்பத்தில் நாங்கள் இவ்வளவு கஷ்டப்படவில்லை. சன்னல் திறந்திருக்க, அதன் வழியே அவசரகாலத்துக்கு பக்கத்து வீட்டிலிருந்த ஸ்பீக்கரிலிருந்து காந்தம் கழற்றி, குச்சியில் கோர்த்து, ஜன்னல் வழியே நீட்டி, அலமாரியிலிருந்த சாவியை அதில் ஒட்டவைத்து, மீட்டெடுத்தோம்! :))))

    ReplyDelete
  5. அருமை இமா மேடம். உங்க பதிவுகளை பாக்க வேனும் அடிக்கடி ப்ளாக் பக்கம் வரவேண்டும்... கடைசியில் கிடைத்து விட்டதே திறப்பான். சாவி என்று சொலவதவிட திறப்பான் என்று படிக்கும் போதே இனிமையாக உள்ளது

    ReplyDelete
  6. அழகான இலங்கை தமிழில் பகிர்வு படிக்க நல்லா இருக்கு இமா. ஏணி இல்லாமல் இந்த அவஸ்தை நானும் பட்டதுண்டு..:)

    ReplyDelete
  7. வணக்கம் இமா!
    இந்த நிலா உலா போனமைக்கு நன்றி சொல்ல வந்தேன்.வந்த இடத்தில சாவிக்கும் உங்களுக்கும் நடந்த போராட்டதில வந்த விஷயத்தையே மறந்திட்டன்.

    வீட்டு உடுப்பு மாத்த முடியேல்ல; குளிக்க முடியேல்ல.
    நெட் கனெக்க்ஷன் போனால் நீங்கள் எவ்வளவு கஷ்டம் அனுபவிப்பீங்களோ அதே அளவு கஷ்டம் அனுபவிச்சம் அன்றைக்கு. ரசித்தேன் உங்கள் பதிவை கஷ்டத்தை அல்ல. மிக்க நன்றி இமா ! வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்புக்கு மிகவும் நன்றி இமா.

      Delete
  8. அடப்பாவமே! க்றிஷ் அண்ணாச்சியிக்கு இப்படி ஒரு சோதனையா? எனக்கென்னவோ டீச்சர் தான் ஏணியை எடுத்து ஒளிச்சு வைச்ச மாதிரி ஒரு ஃபீலிங்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...

    ReplyDelete
  9. //நெட் கனெக்க்ஷன் போனால் நீங்கள் எவ்வளவு கஷ்டம் அனுபவிப்பீங்களோ அதே அளவு கஷ்டம் அனுபவிச்சம்//

    சமயம் பாத்து இந்த இடைச்செருகல்!! :-))

    எப்படியோ, அந்தத் திறப்பானைத் தேடியதில், இந்த வலைப்பூவுக்கு ஒரு திறப்பான் கிடைத்ததே!! :-)

    ReplyDelete
  10. வணக்கம்
    அம்மா....

    மிகவும் கஷ்டப்பட்டு பல போாராட்டங்களை தாண்டி திறப்பு கைக்கு வந்து விட்டது ...
    நன்றி
    அன்புடன்
    ரூபன்


    ReplyDelete
  11. அழகான இலங்கைத்தமிழில் அழகான‌, சுவாரஸ்யமான பதிவு இமா!

    ReplyDelete
  12. ரொம்ப நல்ல பதிவுங்க. இலங்கைத்தமிழ் ரசிக்கும்படியாக உள்ளது.. :-)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா