Friday 24 August 2012

தொலைந்ததும் மீண்டதும்

தனிமை பெரிதாகத் தெரிந்த காலம் அது - அறுசுவையில் பலவற்றையும் முயற்சித்துக்கொண்டு இருந்தேன். ஒருமுறை முயன்றது மஹிஸ்ரீயின் இந்த ஒரிகாமி நாய்க்குட்டி.

முன்பே அறிமுகம்தான்... கற்பிக்கையில்... ஆறாம் ஆண்டு ஆங்கிலநூலில் என்பதாக நினைவு. அதனாலேயே பார்த்ததும் ஒரு பிரியம் வந்தது. செய்து அறுசுவைக்கும் அனுப்பி வைத்தேன். கருத்துக்கள் வரிசையில் வெளியானது; தற்போது இல்லை. அதனால் அட்மினிடமிருந்து எனக்கு உரிமை மறுப்பு அறிவித்தல் வராது என்று ஒரு நம்பிக்கை. :)

இப்போழுது மீன்தொட்டியைச் சுற்றி பாசி இல்லை, வேறு அமைப்பு இருக்கிறது. நாய்க்குட்டியின் தலைக்கு மேல் தெரியும்! வாத்தும் காலுடைந்து நிறமிழந்து குப்பைக்குப் போய்ச் சில ஆண்டுகளாகிவிட்டது.

மறந்துபோயிருந்த நினைவுகளை மீட்டு, இடுகையிடக் காரணமாக இருந்தது அறுசுவையில் வனிதாவின் நேற்றைய கைவினை. நன்றி வனிதா.

Sunday 19 August 2012

இமா பிறந்த மண்ணில் பிறந்த குருவி....

பிடித்திருந்ததிந்த இடுகை - http://www.geevanathy.com/2010/09/video.html#.UDHVD6Ccax0

இமா பெற்ற இன்பம் பெறுக இமாவின் உலகோருமெனப் பகிர்கிறேன். ;) நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்.

இமா பிறந்த மண்ணில் பிறந்த குருவி.... அழகாகத்தானே இருக்கும்!! ;)

குறிப்பிட்ட காணொளி பற்றிய கருத்துக்களை ஜீவநதியில் பதிவிட்டால் மகிழ்வேன்.

அன்புடன்
இமா

Wednesday 15 August 2012

முள்ளெலியும் ரயில் சினேகமும்

இரண்டாம் வகுப்பில் கிடைத்த பரிசுப் புத்தகம் ஒன்றிலிருந்து முள்ளெலிகள் எனக்குப் பரிச்சயமாயின.

'சித்திரக் கதைகள்' என்கிற அந்தப் புத்தகம் அழகழகான முள்ளம்பன்றிக் கதைகள் சிலவற்றைக் கொண்டிருந்தது. அவை முள்ளெலிகளா முள்ளம்பன்றிகளா என்று சிந்திக்கத் தெரியாத வயது அது. ஆனாலும் இந்தப் பிராணிகளுக்கு என் மனதில் ஒரு... 'மென்மையான மூலை' நிரந்தரமாகிவிட்டது அப்போதிருந்து.

ஒரு வருடம் கழித்து ஓர்நாள் உண்மையாகவே முள்ளம்பன்றியைக் கண்டேனே!
செபா பாத்திரம் தேய்க்கும் இடத்தில் விம்மும் (vim) தும்பும், ஒரு பழைய தயிர்ப்பானையில் அடுப்புச் சாம்பலும் வைத்திருப்பார். என்னைக் கண்டதும் அந்தப் பானையில் தூங்கிக் கொண்டிருந்த முள்ளம்பன்றி சட்டென்று கிளம்பி ஓடிவிட்டது. ;(

சரியாகப் பார்த்து ரசிக்கக் கூட முடியவில்லையென்ற சோகத்தோடு செபாவிடம் சொன்னேன். எப்போதும் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு இருப்பார் அவர். கண்ணைச் சுருக்கிப் பார்த்து, "முள்ளம்பன்றி!! அதுவும் தயிர்ப் பானையிலா!!!! ம்.. பெருச்சாளியைப் பார்த்திருப்பீங்கள்," என்றார். "புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்" என்று போயிற்று எனக்கு. ;(


நியூசிலாந்து வந்ததன்பின்னால் கண்டேன் என் அன்பு முள்ளெலிகளை. hedgehogs - அழகு ஜீவராசிகள் அவை. தத்தக்கா பித்தக்கா என்று குழந்தை தவழுவது போலிருக்கும் அவர்கள் நடை. எடுத்த படங்கள் எல்லாம் ஏதோ வைரஸ் கொண்டு போய் விட்டது அப்போதிருந்த கணனியோடு. ;(

அதை விடுங்கோ. சமீபத்தில கொஞ்சம் ஐசிங் மிஞ்சிப் போக முள்ளெலி செய்து விளையாடினன். பிறகு செபா அயலாருக்கு அனுப்பியாச்சுது. செய்முறையை அறுசுவைக்கு அனுப்பினன்.
செபா வீட்டுப் பக்கமும் முள்ளெலி இருந்திருக்கிறது.

இந்த... முள்ளெலி என்கிற சொல்லை எங்க இருந்து பிடிச்சன்!! ம்!! யோசிச்சு.... அறுசுவையில தேட... வந்ததே ஒரு பழங்கதை. ;D
L போர்ட் சந்தூஸ், மஞ்சள் மகி, அதிரா, செபா, ஹுஸைனம்மா, வாணி, ஆசியா எல்லாரும் அவரவர் செல்லங்களோட 'ட்ரெய்ன்'ல போயிருக்கிறம். ;D விரும்பினால் நீங்களும் போய் இரைமீட்டுப் பார்க்கலாம். ;)

Sunday 5 August 2012

ஏப்ரன்

இந்த மாதம் எங்கள் குடும்பத்தின் சில முக்கியமான உறுப்பினர்கள் பிறந்த மாதம் - இருவரில் ஒருவருக்கான எனது அன்பளிப்பு இது.

பிரித்துப் பார்த்த போது அவர் காண்பித்த மகிழ்ச்சி எனக்குக் கொடுத்த திருப்தி... பெறுமதியான வேறு எந்த அன்பளிப்பைக் கொடுத்திருந்தாலும் கிடைத்திராது.

குறிப்பிற்கு... http://www.arusuvai.com/tamil/node/23400