Friday 22 August 2014

டொமாரும் டொமாரியும்

தோழியின் தோழியின் தோழியின் பொம்மை தயாரிக்கும் ரசனை, ஆரம்பித்த வேகத்தில் முடிந்து விடாமல் இடையில் தடைப்பட்ட காரணத்தால் கைகள் மாறி என்னிடம் வந்தன இரண்டு பொம்மைகள்.

மேற்சட்டைக்குப் பித்தான்கள் எதையும் காணோம். ஊசி குற்றிய காற்சட்டையைப் பார்த்ததும் டொமார் தான் நினைவுக்கு வந்தார்.

டொமாரி... டொமாரை விடப் பரிதாபமான நிலமையிலிருந்தார். மூக்கையும் காணோம்; முழியையும் காணோம். இவருக்கும் பித்தான்களில்லாத சட்டையொன்று தயாராக இருந்தது.

தீவிர திருத்த வேலைகளின் பின்னால்.....
இப்பொழுது இருவரும் செபாவின் அயல் வீட்டுச் சின்னப்பெண்களுக்குத் துணையாகப் போயிருக்கிறார்கள்.

Monday 18 August 2014

அதிர்வலைகள்

சில காலம் முன்பு ஒரு பெண்குழந்தைக்கு ஏற்பட்ட விபத்து பரவலாக எல்லா இடங்களிலும் அதிர்ச்சி அலைகளைத் தோற்றுவித்திருந்தது.

அதற்கு முன்னால்...
சமீபத்தில் பாடசாலையில் ஒரு விடயம்  கற்பிக்க நேர்ந்தது. ஒவ்வொரு வருடமும் பாடத்திட்டத்தில் வரும் விடயம்தான்.

புத்தகத்தில் கார்ட்டூன் ஒன்று இருக்கும். ஒரு குளம்... ஒரு குழந்தை... அது தொப்பென்று ஒரு குட்டிக் கல்லை குளத்துள் போடும். கல் விழுந்த இடத்தில் நீரில் சின்னதாக ஒரு குழிவு... பிறகு ஒரு சிறிய வட்டம்... அது பெரிதாகி... இன்னொன்று... மற்றுமொன்று இன்னும் பெரிதாக என்று ஏராளமான வட்ட அலைகள், அதிர்வலைகள்... தொடர்ந்து கண்ணுக்குத் தெரியாது போகும் வரை அலைகள் பரவிப் போகும். Ripples of LOVE.

இந்தக் குழந்தையின் விபத்தும் சமுதாயத்தில் அதிர்வலைகளைத் தோற்றுவித்திருந்தாலும்... என்னவோ ஒன்று நெருடலாக என் மனதில் பட்டது. 

அவை அன்பின் அதிர்வலைகளல்ல. கரிசனத்தின் அதிர்வலைகளைப் போலத் தோன்றின. ஆனாலும் முகநூல் மற்றும் பல இடங்களில் என் பார்வையில் பட்ட பதிவுகளும் அவற்றின் பின் தொடர்ந்திருந்த கருத்துகளும் சற்று நெருடுடலாக இருந்தன. நாம் எதிர்மாறான அதிர்வலைகளைத் தோற்றுவிக்கிறோமா!

நடந்த கொடுமையை விமர்சிக்க யாருக்கும் உரிமை இருக்கிறது; விமர்னம்... தனிமனித உரிமை என்று கொண்டாலும் கூட... தீர்ப்புக் கூற யாருக்கு உரிமை இருக்கிறது!!

அவனை வெட்ட வேண்டும். அடித்துக் கொல்ல வேண்டும், தூக்கில் போட வேண்டும்... இதை விட பல மேலான கருத்துக்களும் கண்ணில் பட்டன. அப்போது வலியோடு ஒரு எண்ணம் தோன்றிற்று.... இப்படி நினைத்த கணமே... இப்படியான எண்ணங்களை ஆதரிக்கும் கணமே நாமும் குற்றமிழைக்கவில்லையா! முகம் தெரியாத அந்தக் குற்றவாளிக்கும் எமக்கும் என்ன வேறுபாடு!!

இப்படியான அதிர்வலைகளைப் பரப்புவது நன்மையா! அது மீண்டும் சுழன்று வந்து எம்மையே தாக்காதா!

ஒரு செபம் இருக்கிறது. அதில் வரும் வரிகள்... 'என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன்,' என்று. இது மதப் பிரச்சாரம் அல்ல. மனிதப் பிரச்சாரமும் அல்ல. இமாவின் சுய பரிசோதனை.

என் குடும்பத்தில் யாருக்காவது தீங்கு நிகழ்ந்தாலும் கூட... அந்த வலியில் எதிராளியை மன்னிக்கும் மனப்பக்குவம் என்னிடம் இல்லாமல் போனாலும் கூட... திரும்பத் தாக்கத் தோன்றாத மனதை எப்பொழுதும் போல எனக்குக் கொடு இறையே!