Thursday 12 December 2013

காத்திருங்கள்!

இமாவின் உலகம்
இன்று முதல்
தடம் மாறியும் உருளும்.
அங்கும் இங்குமாய்
இடம் மாறி உலவும்.

எங்கு!
'அங்கு'தான்.

பொங்கலின் பின் வருவேன்
பொறுமையாய்க் காத்திருப்பீர்.
அதற்குள் முடிந்தால்
'அங்கு' வருவீர்.

இதற்கிடையில்....
நத்தார் வரும்
புத்தாண்டு மலரும்
பொங்கலும் வரும்.
சிலருக்குப் பிறந்தநாள் வரும்
மணநாளும் வரும்.
அனைத்திற்கும்
அனைவருக்கும்
என் மனங்கனிந்த வாழ்த்துக்கள்.

மீண்டும் சந்திக்கும் வரை நன்றி கூறி விடைபெறுவது....
இமா க்றிஸ் _()_

Friday 29 November 2013

ஒரு மீன்தொட்டி அப்டேட்...

 
//நிறையப் பொன்குஞ்சுகளோட வாங்கோ!..//
...இது இளமதியின் வாழ்த்து.

இன்று ஒரு பெண்குஞ்சோடு என் பொன்மீன்.

வாழ்த்திய அன்புள்ளங்கள் வாழ்க!

நவில்கிறேன் நன்றி.

@}->--

ஆமாம், ஜீனோ என்ன செய்யுது!!
பாடுதா!
சின்னச் சின்ன வாத்து!
சிங்கார வாத்து!! ;))

அனைத்துப் படங்களும் முன்பு ஒரு முறை சைனீஸ் லான்டர்ன் ஃபெஸ்டிவலின் போது எடுத்துவைத்திருந்தது.

Tuesday 29 October 2013

அண்டாட்டிக்கா! ;)

part 1 - http://www.arusuvai.com/tamil/node/26973

part 2 - http://www.arusuvai.com/tamil/node/26974

குப்பைத் தொட்டியில் போடுமுன்னே....
ஒரு குழந்தை விளையாட்டு. ;)
அதை அறுசுவைக்கு அனுப்பி...
அழகு பார்த்து...
சந்தோஷமாகச் சின்னவர்களிடம் காட்ட - கேட்டார்கள்...

"அங்கின பனை மரமும் இருக்கோ மம்மி!!!" ;))))


Friday 18 October 2013

Thursday 3 October 2013

மைக்ரோ எள்ளுருண்டை

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டாமா! ;)))

மகியின் ஆங்கில வலைப்பூவில் கொடுக்கப்பட்டிருந்த கருப்பு எள்ளுருண்டை குறிப்பின் கீழ், பாதிக்குப் பாதி வெள்ளை எள்ளும் கருப்பு எள்ளும் கலந்து செய்வதாகக் கருத்துச் சொல்லியிருந்தேன்.

இதற்கு முன் கருப்பு எள்ளு வாங்கியதில்லை. முதல் தடவையாக சாப்பிட்டிருக்கிறோம். வாங்கி வைத்தது இதிலும் தளகுளி நன்றாக வருமா என்பதை முயற்சிப்பதற்காக.

காற்கோப்பை கருப்பு எள், காற்கோப்பை  வெள்ளை எள் சேர்த்து வறுத்து....
4 மேசைக்கரண்டி அளவு சர்க்கரையை உடைத்துப் போட்டு ஆறவிட்ட எள்ளை அதனோடு சேர்த்து சுற்றி எடுத்தேன். சின்னதாகப் பிடிக்க முயன்றேன். இயலவில்லை. பத்து செக்கன் மைக்ரோவேவ் செய்து, கலந்து, மீண்டும் பத்து செக்கன் மைக்ரோவேவ் செய்து, கலந்துவிட்டு குட்டிக் குட்டியாக (பெரிய கோலி அளவு) 21 உருண்டைகள் பிடித்து வைத்தேன்.

படம் சுமார்தான், பொறுத்தருள்க. ;)

அடுத்த தடவை bring a plate for morning tea என்றால் பாடசாலைக்கு எடுத்துப் போகலாம். கட்லட்டும், கில் மீ டேட்ஸும், பட்டீஸும் எல்லோருக்கும் பிடித்திருந்தாலும் பழகி விட்டது. வித்தியாசமான உணவுப் பொருட்களை முயற்சித்துப் பார்க்க விரும்புபவர்கள் அவர்கள். இது சற்றுப் புதுமையாக இருக்கும். சுவை... நிச்சயம் அவர்களுக்குப் பிடிக்கும். எனக்கும் சிரமமில்லாத சமையல்.

மகியின் விதவிதமான எள்ளுருண்டை குறிப்புகள் இங்கே.

Tuesday 1 October 2013

காலா லில்லி



ஒரு முறை பின்வீட்டு அங்கிளிடம் பேச்சுக் கொடுத்து காலா லில்லித் தாவரம் ஒன்று வாங்கி வைத்தேன்.
பூக்களைப் பிடுங்காமல் விட்டால் காய்களும் நிறைய வருகிறது. சில நாட்கள் முன்பாக எடுத்த படங்கள் இவை.
காலா லில்லி மலர்கள்
காய்கள் பழங்கள்
பறவைகள் பார்வைக்குத் தப்பியவை இவை.
குட்டித்தாவரங்கள்

Wednesday 25 September 2013

ஊதா கலர் ரி(ப்)பன்

ட்ரிக்ஸிப் பொம்பிளை வந்த நாளில செய்ய விரும்பினது, கொஞ்சம் லேட்டாப் போச்சுது போல. புற்தரையில வோக் கூட்டிப் போகவேண்டும் எண்டு ஆசை. ஒரு ஹானஸ் வாங்கப் போனேன். வாங்கி வந்து ட்ரிக்ஸியைப் பிடித்து மாட்டப் பார்த்தால்... இந்தம்மா மகா சைஸ் ஆக இருந்தார். ;( அதைக் கடையில் திருப்பிக் கொடுத்துவிட்டு நாலு வைக்கோல் கட்டு வாங்கிவரலாம் என்று போனன்.

கடைக்காரப் பொம்பிளை, "பூனைக்கான ஹானஸ் சரியாக இருக்கும். அதுதான் பெரிய முயலுக்கு விற்கிறனாங்கள்," என்று எடுத்துத் தந்தா. அதில எழுதி இருந்துது... Trouble Trix என்று. அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் வாங்கியாச்சுது. இல்லேல்ல, வித்தாச்சுது. (முன்னையதை விட இது விலை குறைவாக இருந்துது என்று கையில $3.00 கிடைச்சுது.)

வீட்ட வந்து ட்ரிக்ஸியைக் கூப்பிட்டு மாட்டினன். முதல் நாள் என்னையும் இழுத்துக்கொண்டு சந்தோஷமாக வளவெல்லாம் ஒரே ஓட்டம். பத்து நிமிஷம் கழிஞ்சு களைச்சுப் போய் பொத்தென்று ஒரு இடத்தில படுத்தாச்சுது ஆள். பிறகு தூக்கி வந்துதான் கூட்டில விட்டனான்.

அடுத்த நாள் ஹானஸ் கட்டின பாதியில பிடுங்கிக் கொண்டு ஓடீட்டா ட்ரிக்ஸி. சரியென்று விட்டாச்சுது. இப்ப என்னடா என்றால்... ஊதா கலர்ல (ஊதாவா அது!!) ரிபன் மட்டுமில்ல, என்னத்தை கண்டாலும் ஒரே ஓட்டம் கூடுக்குள்ள. தன்னை கட்டாமல் சுதந்திரமாக புல்லில ஓட விடட்டாம். அப்பிடியே பேஸ்மண்ட்டுக்குள்ள ஓடினால் நான் பிறகு எப்பிடிப் பிடிக்கிறது! அதை விட ஒரு பெரும் பூனைப் படை இருக்கிற இடம் இது.

பின்னேரம் நான் வேலையால வந்ததும் கதவடியில போய் நிற்கிறா. திறந்து விட்டால் (ஒரு தட்டி மறைப்பு வைச்சிருக்கிறம்.) பத்து நிமிஷம் புல்லில குதிச்சுப் போட்டு உள்ள வந்துருவா. நாங்கள் உள்ள வந்தாலும் வெளியில நிற்க மாட்டா. தனிய நிற்கப் பயம் போல இருக்கு.

அடைக்கவேணும் என்று எப்ப நினைச்சாலும் ஊதா!! கலரில எதையாவது காட்டினால் வேலை ஆகீருது. ;))
தமிழ் விளங்கினால்... 'ஊதா கலர் ரிப்பன்' பாட்டுக் கேட்டாலும் ஓட்டம் பிடிக்கும் போல. ;)))) ஆமாம், ஒரு சந்தேகம் எனக்கு. பாட்டில் வாறது நீலக் கலர் ;)) ரிபனாக இருக்க ஏன் 'ஊதா... கலர்' என்கினம்!  ஒருவேளை எனக்குத்தான் கண் சரியாத் தெரியேல்லயோ! ;)))
அந்த ரிபன் வடிவா பாம்பு மாதிரி டான்ஸ் ஆடுது. ;)))

Saturday 21 September 2013

ஜன்னல் மலர்கள்

ஒரு மதியம் பின் வீட்டு ஜன்னலில் நிழல். அது அவர்களது மலகூடம். ஜன்னற்கட்டில் கம்பளி ஜாக்கட் ஒன்றை வைத்திருக்கிறார்களா? அங்கு அந்த அளவு இடம் இராதே!

ஆரம்ப காலத்திலிருந்தவர்கள் வீடு விற்பதற்காக open home வைத்த சமயம் போய்ப் பார்த்திருக்கிறோம். இந்த பிரதேசத்தின் நிலம், வீடு விலை நிலவரம் அறிந்து கொள்வதற்காக இப்படிப் போய்ப் பார்த்துப் பார்த்தே அயலிலுள்ள பல வீடுகளின் அமைப்புத் தெரியும்.
எங்கள் வீடும் அவர்கள் வீடும் 95 % ஒரே அமைப்பிலானவை. அவர்களது தரைமட்டத்திலும் எங்களது பிடுங்கி நடக்கூடிய விதமாகவும் அமைத்திருக்கிறது. வாகனத் தரிப்பிடக் கூரை எங்களது சரிவாக இருக்கும்; அவர்களது கூராக இருக்கும். அதற்கான கதவு இருக்குமிடமும் வேறு. பார்த்திருக்கிறேன். 

சற்று நேரத்தில் 'ஜாக்கட்' பெரிதாகிற்று.
செவியொன்றும் கண்ணொன்றும் தெரிந்தது. ;) மலகூடத்து ஜன்னலில் என்னவோ இருக்கிறது. சாப்பாடா! பூச்சி ஏதாவதா? இங்குதான் அவையெல்லாம் அபூர்வமாயிற்றே!

சற்று நேரத்தில் இன்னொருவர் அதே இடத்தில். ;)

திரும்ப முதலாமாள்

ஒன்றும் புரியவில்லை. ஒருவேளை விடுமுறையில் சென்றிருப்பார்களோ வீட்டார்! முன்பிருந்தவர்கள் விடுமுறையில் செல்லும் போது எங்கள் பராமரிப்பில் பூனைகளை விட்டுப் போவார்கள். இப்போதுள்ளவர்கள் இளவயதினர். மேலதிகமான இந்த மலகூடத்தில் கம்பளித் தரை இல்லையென்பதால் அதனை பூனைகளுக்கான அறையாக்கிவிட்டார்களோ!

Tuesday 10 September 2013

வாழ்த்துகிறேன்

இமாவுக்கு இனிய விநாயகசதுர்த்தி வாழ்த்துக்கள்.

பின்ன என்ன? எல்லாரும் கொழுக்கட்டையும் மோதகமுமாகப் போட்டுப் போட்டு என்னைப் புகைய வைக்கிறீங்கள். எனக்கு ஒருவரும் தாறதாக் காணேல்ல. ;(
நானே மோதகம் செய்து சாப்பிட்டன்.

இது உங்களுக்கு.

அனைவருக்கும்... பிலேட்டட் விநாயகசதுர்த்தி வாழ்த்துக்கள். :-)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அதிராவுக்காக 0---   ---


Friday 6 September 2013

என் செல்ல மீன் தொட்டிக்கு...

சமர்ப்பணம் - என் செல்ல மீன் தொட்டிக்கு ;)

பாஷை தெரியவில்லை
புரிவதற்கு எதுவுமில்லை
மொழி.. அன்பென்பதால்,
இசைக்கு மொழியிலாததால்
மனதைத் தொட்டதிது.

விரும்பியது...
முதலிற் பெண் வேண்டும்.
யாரதுவென்றே யானறியேன்.

இரண்டாவது பெற்றுப்
பெண்ணாய் வளர்க்க
வளர்ந்தது என் தாயாய்
சேயானேன் நான்.

மூன்றாவதும் சோதரனாய்ப் போக...
சேர்த்துக் கொண்ட சின்ன மகள்
சொன்ன சேதி
சொர்க்கம் தருது இன்று.

அன்றன்று வரும்
சின்னச் சின்னக் குறிப்புகளில்
உணர்கிறேன் தாய்மை மீண்டும்.
மென்மையாய் வளர் வயிற்றில்
மீன்குஞ்சு ஊரக் கண்டேன்.
அது சுழல,
மென்வால் தடவ,
சின்னச் சிலிர்ப்பு என்னுள்.

கண் பனிக்கக் கேட்ட வரம்
கனிவாய்ச் செவி மடுத்தாய்.
மனம் நிறைந்து நிற்கிறேன்
மனதார நன்றி தந்தாய்.
மீண்டும் ஓர் வரம் வேண்டும்
என் செல்ல மீன் தொட்டிக்கு...
ஒரு குஞ்சு போதா
தாராளமாய்த் தங்கமீன்கள்
தாங்கும் வரம் வேண்டும்.
தயை கூர்ந்து தா இறையே!

- இமா க்றிஸ்

Wednesday 4 September 2013

நடை


 அழகாய் ஒரு காலை
அன்பு மகன் இறக்கி விட
கால் வீசி நடந்து
புகாருள்ளே தொலைந்து
இன்புற்ற பொழுதில் தோன்றிற்று...
கவிதை வரி.

படம் பிடித்தேன்
இரவு வந்து வார்த்தைச் சரம் கோர்த்தேன்.
அனுப்பினேன் அறுசுவைக்கு

நேற்று...
மகிழ்ச்சி எல்லாம் பனிபோல்
கலைந்து போயிற்று.

அதைச் சுட்டுச் சின்னாபின்னமாக்கி
முகநூற் சுவரில் ஒட்டியிருக்கிறார் ஒருவர். ;(
வாழி அவர்.

Friday 30 August 2013

முதல் முதலாய்...

   தொடருமுன்...

முதல் முதலாயிட்ட இடுகை இது

அது தொடர்பான மேலதிக விபரங்கள் இங்கே 

 

புத்தாண்டுக்குப் பட்சணங்கள் தயாரிப்புக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தோடு சிரத்தையாகத் தயார் செய்த இடுகையை முதலாம் தேதியானதும் வெளியிட்டுவிட்டு ஆர்வத்தோடு இமாவின் உலகத்தில் போய்ப் பார்த்தால்... ;) வலையுலகுக்கு அன்று Thursday, 31 December 2009 என்றது. ஆனாலும் பரவசத்துக்குக் குறைவில்லை. கடைசியில்... சாதித்துவிட்டேன். ;D

சுருக்கமாக ஒருவரியில் சொல்ல வேண்டும் என்றால்....

குட்டிப்பெண் ட்ரிக்ஸியை பஞ்சுக் குவியலாய் அணைத்து வீட்டுக்கு எடுத்து வந்து மெத்தென்று இறக்கிவிட்ட முதல்நாள் சந்தோஷம் அது.
 

மலைப்பு!

எனக்கொரு வலைப்பூ!!
மனசுக்குள்... மத்தாப்பூ ;)

 

பாதி நாள் அந்த சந்தோஷத்தை யாருக்கும் சொல்லாமல் எனக்குள் புதைத்து வைத்துக் கொண்டு... திறந்து பார்ப்பதும், மூடுவதுமாக... page view அன்றே சதம் அடித்திருக்கும். ;))) மனது பூரித்துப் பூரித்து பெரீ..ய பூரி ஆகி வெடித்துவிடும் போல இருந்தது. சந்தோஷம் கூட வேதனைதான் இல்லையா! அந்த வேதனை தாங்க முடியாமல் ஜீனோவுக்கும் அருணுக்கும் மட்டும் விபரம் எதுவும் சொல்லாமல் இணைப்பை அனுப்பிவிட்டு உட்கார்ந்திருந்தேன்.
பிறகு... வாணிக்கு.

முதல் இடுகையின் கீழ் கருத்துச் சொல்லி இருக்கும் நட்புக்களில் பலர் நட்புக்கள் என்பதை விட என் பிள்ளைகள் என்பேன். காணாமற் போயிருப்பவர்கள், வலையுகிற்கு மட்டும்தான் காணாமற் போனவர்கள்; இமாவின் உலகிற்கு இன்றும் வேண்டப்பட்டவர்கள்தான். Miss you Chanthoos. ;( 

பிறகு தொடர்ந்த மாதம், தினம் ஒரு இடுகை அதாவது... தை மாதம் இருபத்தேழு நாட்கள் இருந்திருந்தால். ;) பிறகு... மெதுவே குறைந்தது.... ஆர்வமல்ல. பொறுப்புகள் கூடி இருக்கிறது. தினப்படி நிகழ்வுகளில் எதற்கு முக்கியத்துவம் என்று யோசித்து வரிசைப் படுத்தி நிகழ்த்தி வர பிற்போடப்படும் விடயமாக என் உலகம் ஆகிவருகிறது. மெதுவாகவெனிலும்... சுற்றும். ;)

வலைமீட்டுப் பார்க்கிற சந்தோஷத்தைக் கொடுத்த
இளையநிலா... என்றும் இனிது பொழிக! 

என் வாழ்த்துக்கள்.

Wednesday 28 August 2013

காணாமற் போன செம்மறிகள்

நாளை வெள்ளி - மதிய இடைவேளைப் பூசைக்கான ஏற்பாடுகளை அறை எண் 16 மாணவர்கள் பொறுப்பெடுத்திருக்கிறார்கள். 'காணாமற்போன செம்மறி' பற்றிய உவமையை நடித்துக் காட்டப் போகிறார்களாம். 
நூறு செம்மறிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவது போல நான்கு செம்மறிகள் மட்டும் வருவார்களாம். தங்களுக்கு உரையாடல்களெல்லாம் தயார் செய்து வைத்திருக்கிறார்கள். நடித்தும் காட்டினார்கள். அவர்கள் உண்மையில் என்னை நாடியது முகமூடிகள் செய்வதற்காக. இடைவேளைகளின் போது கிடைத்த நேரத்தில் காகிதத்தில் ஒருவர் முகத்திற்களவாக வரைந்து பிடித்துப் பார்த்தோம். பிறகு அவர்களே அட்டையில் வரைந்து கொடுத்தார்கள். அட்டை மொத்தமாக இருந்தது. வெட்டிக் கொடுத்தேன். 
இங்கு என் யோசனை என்று எதுவும் இல்லை. உதவி மட்டும்தான் நான். நாடா வேண்டாம்; சுற்றிலும் தலைக்கு மேலாகவும் பட்டி போல் அட்டையை வெட்டி ஒட்டினால் தொப்பி மாட்டுவது போல மாட்டலாம் என்றார்கள். நேற்று மதிய இடைவேளையில் பார்த்தால் அறையில் ஒழிந்து உட்கார்ந்து பஞ்சு ஒட்டிக் கொண்டிருந்தார்கள். :-) என்னைக் கண்டதும் ஒருவர் தலையில் மாட்டி "மே..." என்றார். ;))

நாளை நான் பாடசாலையில் இருக்க மாட்டேன். நாற்பது மாணவர்களை அழைத்துக் கொண்டு Art Gallery போகிறோம். என்னால் சின்னவர்களின் நடிப்பு பார்க்கக் கிடைக்காது. ;(

இந்தப் படங்கள் அனைத்தும் சின்னவர்கள் எடுத்துக் கொடுத்தவை. நாளை மதியம் வரை யாருக்கும் தெரியக் கூடாதாம். நீங்களும் ஷுஷ்! ;)
நியூசிலாந்தில் காணாமற் போய் ஏழு வருடங்களின் பின்பு கண்டுபிடிக்கப்பட்ட செம்மறி ஒன்றின் கதை இங்கு இருக்கிறது. விரும்பினால் படித்துப் பாருங்கள். கதையின் முடிவு இங்கே.

Saturday 24 August 2013

ஆட்டோகிராஃப் கேக்

பாடசாலையில் பூசைக்காக இம்முறை செய்த கேக் இது.
கேக் செய்தவர் - எங்கள் பகுதித்தலைவர்
வெள்ளை ஐசிங் &....
...சிலுவை - நான்
தேவதிரவிய அனுமானம் பெற்றுக் கொண்ட அனைவரது கையொப்பங்களும் இதில் உள்ளன.

Tuesday 20 August 2013

சின்னவர்கள் செய்த 'பானர்கள்'

வருகிற 23ம் தேதி வெள்ளியன்று பாடசாலையில் ஒரு முக்கிய நாள். அன்று இருபத்தெட்டு மாணவர்களும் ஒரு ஆசிரியையும் பாடசாலைத் திருப்பலியின்போது திருவருட்சாதனங்கள் பெற இருக்கிறார்கள். சில மாதங்களாக வகுப்புகள் நடக்கின்றன.

இறுதி நாளன்று அலங்கரிப்பதற்கென்றும் பின்னால் அவர்கள் நினைவுக்காக வைத்திருப்பதற்காகவும் 'பானர்கள்' தயாரித்தார்கள்.
 ஃபெல்ட் துணியை ஒரேயளவாக வெட்டி....
 மேற்புறம் மடித்து...
 ஒரு வரி அடிக்கவேண்டும்.
கடகடவென்று அப்படியே தொடராக அடித்து எடுத்துப் போனேன்.
குறிப்பிட்ட சில டிசைன்களிலிருந்து தெரிந்து தங்களதை வடிவமைத்துக் கொண்டார்கள். 
 
 
 
 
 
 
பிறகு தங்கள் பெயர்களையும் ஒட்டினார்கள். 
துணியைச் சுருங்க விடாமல், ஒரு நீள ஸ்ட்ரா முனையில் நூல் கட்டி  கோர்த்து வைத்திருக்கிறேன். 
கடைசி நாள் படம் எடுக்கக் கிடைக்காது. அன்று காலை ஆறு மணி முதல் மூன்றரை வரை தொடர்ந்து வேலைகள் இருக்கின்றன.

Tuesday 13 August 2013

ஒரு கேக்கின்... இறுதி நாள்


இமாவின் உலக நட்பு வட்டத்திற்காக ஒரு கேக்.
 
ENJOY :-)

Thursday 8 August 2013

ஒரு கேக்கின் டைரி 7

7ம் நாள் (08/08/2013)
 
இப்படி இருந்ததை...
 
 
கலக்கி ....
 

இப்படி....
- Herman the German Friendship Cake