Sunday 22 April 2012

சமீபத்திய அறுவடை

கடந்த சில வருடங்களாகத் தோட்டம் துரவு! எல்லாம் க்றிஸ்தான் பார்க்கிறார். எனக்கு வெய்யில் ஒத்துவரவில்லை. (வேலையில் இருந்து தப்பிக்க ஒரு காரணம் வேண்டாமா! ;)  ) இவருக்குச் செடிகளைப் பற்றி அதிகம் தெரியவில்லை. அதுவும் இங்குள்ள வகைகள் பற்றி அறிவு பூச்சியம்தான். நான் நட்டு வைப்பவற்றை களை என்று பிடுங்கி வைக்கிறார்.

ஒரு (அறு)சுவையான கதை சொல்கிறேன், கேளுங்கள்.முன்னொரு காலம் செந்தமிழ்ச்செல்வி மணத்தக்காளி என்கிறாரே என்று 'அறுசுவை' உதவியோடு ஆராய்ந்து.. கண்டுபிடித்து.. ஆசையாய் நானும் வளர்த்தேன் மணத்தக்காளி. எனது ஊர்ப் பக்கம் இவை களையாகவும் கண்டதில்லை.
இங்கு வந்த ஆரம்பத்தில் ஒரு நாள் என் இரண்டு புத்திரர்களையும் நடை கூட்டிப் போகையில் ஒரு கேரளத்துப் பெண் தோழியாகக் கிடைத்தார். அவ்வப்போது தெருவில் சந்தித்துக் கொள்வோம். தமிழ் பேசுவார். ஒரு மகள் இருந்தார். பேசிக் கொண்டே நடப்போம். பிள்ளைகள் சைக்கிளில் அல்லது 'ஸ்கேட் போர்டில்' முன்னால் போவார்கள். இவர் ஒரு 'மந்தகாளி' பற்றிச் சொன்னார். எனக்கு மனசிலாகவில்லை.

ஆனாலும் நடைபாதை ஓரம் ஒரு செடியில் காய்களை யாரோ கொத்தாக நறுக்கிய அடையாளம் தெரிவதைப் பார்த்து யோசித்திருக்கிறேன், சமைக்க எடுத்துப் போய் இருப்பார்களோ அல்லது மருந்து மூலிகையா என்று. செடிகள்... கத்தரி, மிளகாயை எல்லாம் நினைவு வர வைக்கும். பழங்களோடு உள்ள செடிகளில் சிட்டுக்கள் வேட்டையாடுவதையும் அவதானித்திருக்கிறேன்.

செல்வியம்மா எல்லாவற்றையும் மீண்டும் மனக் கண்முன் நினைவு வர வைத்தார். எங்கள் வீட்டிலும் சில நாட்கள் கவனியாது விட்டால் இவை வளர்ந்திருக்கும். நான் சிட்டுக்கள் சாப்பிடுமே என்று விட்டுவைப்பேன். கிறிஸ் பிடுங்கி வைப்பார்.

மணத்தக்காளிக் கீரையில் என் முகம் தெரிகிறது என்று ஒருமுறை செல்வி சொன்னார். ;) எனக்கு இங்கு அவர் முகம் தெரிந்தது; கண்டு பிடித்துவிட்டேன். ;) கூடவே என்ன சமைக்கலாம் எப்படிச் சமைக்கலாம் என்பதெல்லாம் அறிந்து... செடி சடைத்து வளர ஆரம்பித்தது. (இப்போ க்றிஸ் சொல்லிவிட்டுப் பிடுங்குகிறார்.)

தக்காளி & கத்தரி வகை என்பதால் ஒவ்வாமை ஏற்படுமோ என்று முதலில் பயந்து பின்னர் ஒரு விடுமுறையில் கீரை, பருப்புப் போட்டு சமைத்தாயிற்று. பிறகு அடிக்கடி தொடர்ந்தது என் சமையல். என்னவென்றே தெரியாமல் வீட்டார் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். (முன்பே சொல்லி இருந்தால் நஞ்சோ என்று சந்தேகித்திருப்பார்கள்.)
தோட்டத்தில் உலாவுகையில் பழத்தைப் பிடுங்கிச் சாப்பிடுவேன். ஒரு நாள் அறுசுவையில் கொடுத்து இருந்த முறையைப் பார்த்து வற்றல் போடலாம் என்று எண்ணி... ஒரு கூடையும் கத்தரியும் எடுத்துக் கொண்டு வேலையில் இறங்கினேன். ஒரு கூடை நிரம்பிற்று. தலைக்கு மேல் இருந்த கிளையில் சிட்டொன்று நான் எப்போ விலகுவேன் என்று பார்த்திருந்தது. சிறிது தள்ளி கிறிஸ் எதையோ மீள்நடுகை செய்து கொண்டிருந்தார்.

கூடைக் காயை மேசையில் கொட்டி விட்டு ஒரு தொலைபேசி அழைப்புக்குப் பதிலளித்து விட்டு திரும்ப வந்தேன் வேலையைத் தொடர. என்ன மாயம்! செடிகளைக் காணோம். ;( 
சிட்டு இப்போ வேறிடத்தில் நின்று சப்தித்தது. மணலில் செடிகளைப் பிடுங்கியமைக்கான அடையாளம்... தோட்டக்காரரிடம் கேட்டால் மீள் நடுகையாம், மிளகாய் நடப் போகிறாராம். ;( பாவம் சிட்டு.

நல்ல வேளையாக பிடுங்கிய செடி குப்பைத் தொட்டிக்குப் போகாமல் குவியலாய்க் கிடந்தது. மீதிக் காய்களையும் வெட்டி எடுத்துக் கொண்டேன். பிறகு வெயிற்காலம் போய் விட்டதால் டீஹைட்ரேட்டரில் காய வைக்கவேண்டியதாகிற்று.

அது... பழைய அறுவடை.

இவ்வருட அறுவடை...
ஒருமுறை "கிண்ணத்தில் மணத்தக்காளி பிடுங்கி வைத்துச் சாப்பிடுகிறேன்," என்றேன் தோழியிடம்ம். ;) "அவ்வளவு பழம் இருக்கிறதா?" என்றார்.

இனிய உளவாக இன்னாத கூறல்...

இருப்பக்

கவர்ந்தற்று. ;))

Friday 20 April 2012

Imma is Spring Cleaning


இந்தப் படம் கண்ணில் பட்டதும், முன்பொரு இடுகையில் கொடுக்கப்பட்டிருந்த மகியின் பின்னூட்டம் நினைப்பு வந்தது. இன்று பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றிற்று.

'ஆடத் தெரியாதவள் அரங்கு கோணல் என்றாளாம்; வரையத் தெரியாதவள்... model கோணல் என்றாளாம்.' ;)))

எனக்குப் பிடித்த பின்னூட்டங்கள்

செல்வி சொல்லி விட்டார்; எப்படியாவது கொடுக்கலாம், விதிமுறைகள் என்று எதுவும் இல்லை என்பதாக.

ஒழுங்கு என்பதெல்லாம் கிடையாது. பிடித்தவற்றில் சிலதை (கவனிக்க, சிலதை மட்டுமே) இங்கு குறிப்பிடுகிறேன்.
அப்படியே என் வலையுலக உறவுகள் சிலரையும் உங்களுக்கு அறிமுகம் செய்யலாம் என்று எண்ணம்.

என் முதல் இடுகைக்கு வந்த பின்னூட்டங்கள் மறக்கமுடியாதவை.

எழுதலாமா வேண்டாமா!
என்ன எழுதுவது!
சரியில்லை என்று யாராவது வந்து சொல்லி விடுவார்களோ!
யாரும் வராமலே விட்டுவிடுவார்களோ! இப்படி ஒரு முழுநீள சந்தேக லிஸ்ட்டை மனதில் வைத்துக் கொண்டு, வலைப்பூவில் எனது முதலாவது இடுகையை வருடம் பிறந்த அன்று (இங்கு அது ஒரு நாள் முன்னதாக வந்திருந்தது) வெளியிட்டேன். செபாஅம்மாவிடம் கூடச் சொல்லவில்லை. ;)

அப்படி இருக்க... தன் மோப்ப சக்தியைப் பயன்படுத்தித் தேடி ஓடி வந்து முதல் ஆளாக
ஜீனோ said...
Aunty,Wish you a very Happy New Year..Have a great 2010!! Geno wishes you all the very best for your blogging world..I am going to be one of the frequent visitors for sure! :)
எனக்கு பின்னூட்டம் மெய்லில் வரும் என்று கூடத் தெரியாது அப்போ. பார்த்ததும் அப்படி ஒரே சந்தோஷம். (அப்போ ஜீனோ வலைப்பூ ஒன்றுக்குச் சொந்தக்காரராக இருக்கவில்லை.) 'அறுசுவை'யில் என்னை 'இஞ்சி டீ, பால்டீ, ஆன்ட்டீ' என்று விழித்துக்கொண்டு இருந்ததால் நானும் சந்தோஷமாக 'என் செல்ல மருமகன்' ஆகத் தத்து எடுத்துக் கொண்டேன். ;D

geno கொடுக்கும் பின்னூட்டங்கள் எல்லாமே என்னைச் சிரிக்க வைக்கும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இரண்டாவதாக வந்த
அருண் பிரசங்கி said...
அம்மா முதலில் மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்... இனிப்பு வகைகள் அனைத்தும் அருமை....எனக்கு கொஞ்சம் பார்சல் பண்ணி அனுப்புங்க... என்னோட முகவரி இருக்குல... நெறைய எழுதுங்க... உங்க உலகத்தை சுத்தி பார்க்க நாங்க ரெடி... ஆமாம் சொல்லிட்டேன்... நல்லது அம்மா... மீண்டும் பார்க்கலாம்... என்றும் உங்கள், அருண் பிரசங்கி
சொன்ன மாதிரியே மீண்டும் பார்க்கிறார். ஆனால் பின்னூட்டங்கள் வாய்வார்த்தையாக வந்துவிடுவதால் இங்கு காணக்கிடைக்காது. ஒரு வருடம் முன்பு வரை அறுசுவையில் 'சிரித்த முகமான இமா' என்று என்னைக் கிண்டலடித்துக் கொண்டிருந்த அருண்பிரகாஷ்தான் என்னை 'அம்மா' என்று தத்து எடுத்துக் கொண்ட முதல் பிள்ளை. (வீட்டில் நான் 'மம்மி') திடீர் திடீரென்று தொலைபேசி அழைப்புகள் வரும். சமீபத்தில் புது மருமகளோடும் பேசினேன். ;)

இவர்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
முக்கியமான தகவல், இமா 'வலையில்' இடறி விழுந்தால் கை கொடுக்கும் இருவரில் முக்கியமானவர் இவர். இரண்டாவது... ம்..ஹூம், சொல்ல மாட்டேன். பெயர் சொல்லித் திட்டு வாங்க விருப்பமில்லாததால் ___  ஆக விட்டு விடுகிறேன். ;)

அருண்மகனும் மருமகனும் வாழ்த்தியபடியே 2010  எனக்கு நல்லபடி போகிறது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

3. என் மனதைத் தொட்ட பின்னூட்டம் வாணியுடையது.

   சமீபத்தில் வாணி வலைப்பூவில் ( Iris Folding )
athira said...

சூப்பர் வாணி. பொறுமையாகச் செய்து எங்கட இமாவை அடிச்சிட்டீங்க.... கடவுளே படித்ததும் கிழித்திடுங்கோ... மீ. எஸ்ஸ்ஸ்ஸ் ///// ;D
vanathy said...
அதிரா, என் குரு இமா தான். நான் அவரின் உண்மையான சிஷ்யை. ///////
மனதைத் தொட்டது, மகிழ்வளித்தது, மனநிறைவு தந்தது.

என்றும் என் மனதில் இடம்பெறும் இந்தப் பின்னூட்டம். @}->-

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

4. தானும் சிரித்து எல்லோரையும் சிரிக்க வைக்கும்
athira has left a new comment on the post "ச்ச.. இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்.. ":

சுஜாதா சாரோட செல்லம்//// ஜீன்ஸ்... என்னால முடியல்லே.... கிக்...கிக்... கக்..க...காக்க்க்க்க க்காஅக்க்க்க்கீஈஈஈஈஈஈஈஈ( குறை நினைக்கப்படாது அக்காவுக்கு சிரிச்ச்.... கிக்...கிக்..கீஈஈஈஈஈ /////

அப்பாடி. ;) என்னாலையும் முடியேல்ல. ;)

இது ஜீனோவின் வலைப்பூவில் வந்த பின்னூட்டம். ;)

இந்த அதிராக்காவின்ட அலுப்புத் தாங்க முடியாது. ;) எப்பிடித் தான் தட்டுறாவோ! 'கீ' போர்ட்ல 'k' அழிஞ்சு போயிருக்கும் இவ்வளவுக்கும். ;) ஆனால் கொடுமை கிடையாது. சிரிச்சுச் சிரிச்சே கொல்லுவாங்க. என் உலகத்திலும் இவரது பின்னூட்டங்கள் ஏராளம், இருந்தாலும் சமீபத்தில் சிரிக்கவைத்த பின்னூட்டம் என்பதால் இது. :)

என்னவோ தெரியேல்ல.. நான் நினைக்கிறதை, நினைச்சும் எழுதாமல் விடுறதை இவங்க எழுதீருவாங்க - சுருக்கமாச் சொன்னால்.. இமா அடக்கி வாசிக்கிறதை இவங்க 'ஓபினா' வாசிப்பாங்கள். ;) என் அதே அலைவரிசையில் இன்னொரு ஒலிபரப்புச் சேவை. நிறைய கரட் சாப்பிடுற ஆள் இவ. மற்றவங்க கண்ணில் படாதது எல்லாம் இவவுக்குப் பட்டுரும். ;) உ+ம் ஜீனோவின் ஆல்பம் பார்த்த விதம். எப்பவும் தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பாங்க உ+ம் இமாவைப் பார்க்காமல் இமாவுக்குப் பின்னால தெரிஞ்ச பூச்சியை! பார்த்தது!!.

மொத்தத்தில் அதிரா ஒரு 'ஊட்டமான ஊசி ' ;)

 பின்தொடருங்கோ ... 

ஒரு ஃப்ரீஸர், ஒரு மோட்டார், ஒரு ஸ்கூட்டர்,

2000
இங்கு வந்த புதிது, இமா குடும்பத்தார் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு வாடகை வீட்டிற்குள் நுழைந்தோம். என் கையில் வேலைக்கான அனுமதி இல்லை. எல்லாமே புதிதாக வாங்கிக் கொள்ள இயலாத நிலை. தொலைக்காட்சிப் பெட்டி மட்டும் புதிதாக வாங்கினோம். குளிர்சாதனப்பெட்டி இல்லாமல் சில மாதங்கள் கடத்தியாயிற்று. பிறகு சில மாதங்கள் இன்னொருவர் பயன்படுத்தியதொன்றை வாங்கி வைத்திருந்தோம்.

2001
அது அடிக்கடி வெள்ளமெடுக்க ஆரம்பித்தது. இரவு வேளைகளில் கடமுடாவென்று சப்தம் வேறு போடும். வருட நடுப்பகுதியில், தவணைமுறையில் புதிதாக ஒன்று வாங்கிக் கொண்டோம்.

பிறகு... எல்லாம் நலமே.

2011
மேல் கதவை அடைத்தால் கீழ்க் கதவு திறந்துகொண்டது. அழுத்திச் சாத்தாவிட்டால் மேல்க் கதவு மூடிக் கொள்ளாது. வேலையால் வீடு வந்தால் சுத்தம் செய்யும் வேலை இருக்கும். கதவுகளில் குறிப்பு எழுதி ஒட்டினேன். ;) பிறகு எல்லோரும் கவனமாக இருந்ததில் பிரச்சினை எதுவும் தெரியவில்லை.

2012
6 வாரங்கள் முன்பாக க்றிஸ் முணுமுணுக்க ஆரம்பித்தார். வாங்கிவரும் காய்கறிகளை நான் நேரத்துக்குப் பயன்படுத்தாமல் வீணாகக் கெட்டுப் போக வைக்கிறேனாம். ;) "ஃப்ரிஜ் கிழவியாகீட்டுது," நான் சொன்னதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. எல்லாம் எடுத்து எறிந்து புதிதாக வாங்கி வைக்க... மீண்டும் கெட்டுப் போயிற்று. தக்காளி, மிளகாய் எல்லாம் ஃப்ரீஸரில் வைத்தது போல கட்டியாக ஆகிற்று.

வெப்பமானியை அளவு மாற்றிவைத்தாலும் பயனில்லை.

காய்கறி எல்லாம் மேசையில் கூடையில் வைக்க ஆரம்பித்தோம். பாதியளவு குளிர் சாதனப் பெட்டிதான் பயன்பாட்டில் இருந்தது. தேனீருக்கு பாலை எடுத்துக் கவிழ்த்தால் 2 L போத்தலிலிருந்து ஒரு சொட்டும் விழவில்லை, அப்படிக் கட்டியாகி இருந்தது. முட்டை கல்லாக, sauce கூட அப்படி. ;)

சத்தம் பெரிதாக வர ஆரம்பித்தது. புதிது வாங்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம். பேச்சுக் கொடுத்த கடைக்காரர் போய்ப் பின் பக்கம் ஏதாவது விழுந்திருக்கிறதா என்று பாருங்கள் என்றார். பார்த்தோம் எதுவும் இல்லை.

வார இறுதியில் திரும்பவும் புதிது தேடும் படலம் புறப்படுவதாக இருக்க... நேற்று இரவு மூத்தவர் வந்தார். அவர் வீட்டில் யாருமில்லையாம். எல்லோரும் விடுமுறைக்குப் போய்விட்டார்கள். இப்படியான நாட்களில் தனியொருவருக்கு என்று சமைக்காமல் எங்கள் வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கிறேன்; எங்களோடும் பொழுதைக் கழித்ததாகுமே. வந்தார்; "அது என்ன சத்தம்?" என்றார். தன் மோட்டார்பைக் அங்கிகளைக் களைந்து வைத்துவிட்டு வந்து குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பார்த்தார். நான் திடீர் தோசைக்குக் கரைத்துக்கொண்டு இருந்தேன்.

"குளிர் காற்று மேலே எழும்பி வரவில்லை. fan பிரச்சினை கொடுக்கிறதோ!" என்றார். தந்தையும் மகனும் பேசிக்கொண்டே எல்லா உணவுப் பொருட்களையும் வெளியே பரப்பினார்கள். புதிது வாங்குவதென்று முடிவு செய்தாயிற்று; இனி உடைந்தால் என்னவென்று எப்படியோ அதன் உட்பக்கம் திறந்து பார்த்தார்கள்.
 
நினைத்தது போலவே fan வேலை செய்யவில்லை.
இந்த நடுக் குழிக்குள்தான் fan இருந்தது.
மகன் எப்பொழுதும் தனக்கெனத் தனியாக வேலைக்கான உபகரணங்கள் எல்லாம் வைத்திருப்பார். எல்லாமே அவர் வீட்டில் இருந்தன. "டெஸ்டர் இல்லையே!" என்றார். பிறகு "பெரிய torch எங்கே?" என்றார். அது charge இல்லாமல் இருக்க, சின்னவரது மொப்பெட் பாட்டரியில் பிடித்துச் சோதித்தார்கள்.
வேலை செய்தது. ஏங்கோ இணைப்பு தொடர்பு விட்டிருக்க வேண்டும் போல. மீண்டும் பொருத்திப் பூட்டிவிட, அமைதியாக அழகாக வேலை செய்கிறது எங்கள் குளிர்சாதனப் பெட்டி. ;)

ஐந்து வருட உத்தரவாதத்தோடு வந்தது பத்து வருடம் தாண்டியும் புது மெருகோடு ஓய்வில்லாமல் உழைக்கிறது.

இன்னும் எவ்வளவு காலம் வரும் என்பது தெரியாது. இருவருமாக எதையாவது செய்து ஒரு வருடமாவது ஓட்டி விடுவார்கள் என்று தோன்றுகிறது. ;)))

Thursday 19 April 2012

பழிக்குப் பழி, நட்புக்கு நட்பு

கடந்த இரு மாதங்களுக்குள் வீட்டில் பல மாற்றங்கள்; திடுக்கிடும் திருப்பங்கள். தினமும் ஏதாவது எதிர்பாராத செய்தி வரும். கவலைகள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், பிரார்த்தனைகள், காத்திருப்புகள், பின் பிரார்த்தனைக்கான பலன்கள்... எதுவானாலும் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் என் பாட்டில் இருக்கக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

இப்போ உள்ள ஒரே சிரமம், தனிமை முன்னறிவித்தலில்லாமல் வருகிறது. அதற்கொரு 'ஷிஃப்ட்' போட்டுக் கொடுத்து தப்பான சமயம் வந்தால் சம்பளமில்லை என்று அறிவிக்கப் போகிறேன். ;)

தனிமையைப் பயன்படுத்தி ஒரு பழிவாங்கும் முயற்சி மேற்கொண்டேன். அதைப் பகிர்ந்துகொள்ளவே இந்த இடுகை. ;) எல்லோர் குறிப்பையும் முயன்று பின்னூட்டப் பதிவு கொடுக்கையில் என் சமையலை மட்டும் முயலாமல் தவிர்த்த மகியின் சமையலறையிலிருந்து இன்று முயன்றது.... முட்டை குர்ர்ர்ர்மா ;)

தேவையான பொருட்கள்
வெங்காயம்-1
தக்காளி-2 (தானாக முளைத்த செடியில் விளைந்திருந்தது.)
முட்டை-3
பச்சைமிளகாய்- 3(அ)4 (இதுவும் தோட்டத்துச் செடியில் இருந்தது.)
பூண்டு-4 பற்கள்
கொத்துமல்லி இலை-சிறிது (இலை இல்லை, பதிலாக தோட்டத்து பார்ஸ்லி இலை)
மிளகாய்த்தூள்-1டீஸ்பூன்

கரம் மசாலா-1டீஸ்பூன் (இல்லை, பதிலாக சக்தி ஃபிஷ் ஃப்ரை மசாலா)
உப்பு

அரைக்க
தேங்காய் - 3டேபிள்ஸ்பூன் (குளிர்சாதனப் பெட்டியில் தயாராக இருந்தது "நளன் ப்ராண்ட்" அரைத்த தேங்காய்ப்பூ.)
முந்திரி-4 (காஃபி க்ரைண்டரில் தனியாக அரைத்தேன்.)
சோம்பு-1டீஸ்பூன் (பதிலாக, "நளன் ப்ராண்ட்" சீரகத்தூள்)

//தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.// விட்டேன்.

//நீங்களும் செய்து ருசித்துப் பாருங்க! :)))))// பார்த்தேன்.

//வீடியோ குக்கிங் பார்க்க விருப்பமும் நேரமும் இருந்//..த..//தால்// பார்த்தேன். அந்தக்கா வீட்டில் சமைக்கவே மாட்டாங்க போல. கிச்சன்லாம் அப்புடி பளிச். கைல உடையாம நீ..ளமா நகம் வளர்த்து பூச்சு அழகா பூசி... ஸ்டைலா விரலை விரலை அசைச்சு பேசுறாங்க. இந்த டிஷ் கூட யாராச்சும்தான் தேய்ப்பாங்க போல. புகை புகையா வருது இமாவுக்கு. ;(

சமைத்து ருசித்துச் சாப்பிட்டாயிற்று. //எடுத்த போட்டோவை எல்லாம் இங்கே போஸ்ட் பண்ணாம என்ன பண்ணறதாம்???;))))))// மகியே சொல்லி இருக்க, பகிராதுவிட்டால் எப்படி!

பி.கு
1. இருவருக்கு மட்டும் அளவான குறிப்பு.
2. குருமா வெகு சுவையாக இருந்தது.
3. படம் அழகாக எடுக்க முயலவில்லை. சாப்பிடுவதில்தான் என் கவனம் இருந்தது. ;)
4. ரசித்து ருசித்துச் சாப்பிட்டுவிட்டு நளனது பாகம் வைத்துவிட்டுக் காத்திருந்தேன். அங்கிருத்து கிடைத்த பாராட்டுக்கள் இந்தப் பூவோடும்.....

பூந்தியோடும்....

மஹிஸ் கிச்சனுக்கு அனுப்பப்படுகிறது.
(மோத்தி லட்டு! பொறுத்துக்கங்க மகி. ;( அடுத்த தடவை சூப்பரா பண்ணி அசத்திருறேன். ம்... படம் பார்க்க இமா சொதப்பினது போல் இருந்தாலும் சுவைக்குக் குறைவில்லை. "Too good Mum," இது மகன். "இப்படியெல்லாம் இனிப்பாக சமைக்கப்படாது," இது க்றிஸ். ஏஞ்சல் வீட்டிலிருந்தும் "டேஸ்டா இருந்துது," என்று செய்தி வந்தது.)
அப்போ இது!!!

பின்தொடர்வோர் அனைவருக்காவும் என் சமையலறையிலிருந்து. வருகைக்கு அன்பு நன்றிகள். ;)
- இமா

Thursday 12 April 2012

வாழ்த்துகிறேன்

வலையுலக உறவுகள் அனைவருக்கும்
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
உரித்தாகுக.

அன்புடன்
இமா


Sunday 1 April 2012

கத்தரிக்கா... குண்டு கத்தரிக்கா!!

ஒருமுறை கடையில் குட்டிக் கத்தரிக்காய்களைப் பார்த்ததும் Mahi's Kitchen இல் இருந்த வாயூற வைத்த ஸ்டஃப்ட்கத்தரிக்காய் குறிப்பு நினைவுக்கு வரவும் ஆறு காய்கள் வாங்கி வந்தேன்.

கணக்கு எல்லாம் சரிதான். குட்டி மிளகாய்களாகத் தெரிந்து கொண்டேன். எண்ணெய்... மேசைக்கரண்டிக்குப் பதில் தேக்கரண்டிதான். மகி குறிப்பில் இருந்தது போல் அல்லாமல் கொஞ்சம் உலர்வாக வந்தது.
(படத்தைப் பார்த்து விட்டு மகி கருத்துச் சொல்வார்களாம்; இமா திருத்திக் கொள்வேனாம். ) ;)
பிரியாணி எல்லாம் கிடையாது, சூடாக தனியே தட்டில் வைத்து கரண்டியால் சாப்பிட்டாயிற்று. யமி ;P நானே 3 காய் சாப்பிட்டேன். சின்னவர் இரண்டு... மற்றவர் ஒன்று.

காலநிலை மாற ஆரம்பித்து விட்டது. தோட்டத்தில் குண்டுகுண்டாகக் காய்த்த கத்தரியில் காய்கள் சிறுக்க ஆரம்பித்து விட்டன.

அந்தக் குறிப்பில் மகி சொன்னபடி எல்லாம் பொடிசெய்து தயாராக வைத்திருக்கிறேன். ஏதாவது கொறிக்க வேண்டும் என்று தோன்றும் போது... செடியில் ஒரு காயைப் பிடுங்கி.... 
யமி.. ;P

குறிப்புக்கு நன்றி மகி. ;)