Friday 30 April 2010

செவி வழி இலக்கியம்

"தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை".... என்று இல்லாவிட்டாலும் சுடியாகவாவது இருப்போமே. ;)

'ஆசிரியையாய் என் அனுபவங்கள்' என்று நானும் எழுதுவதாகத் தீர்மானித்தாயிற்று.

இன்று... சிரித்த அனுபவம்.

'அறை எண் 15' மாணவர்கள் இன்னமும் செபங்கள் மனனம் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஏனைய அறை மாணவர்கள் எல்லோரும் பாடம் சொல்லி முடித்தாயிற்று. இவர்களைச் செவிமடுக்க சமய ஆசிரியருக்கு வேளை போதவில்லை என்று என்னிடம் உதவி கேட்டார் நேற்று. சம்மதித்தேன். என்கையில் மாணவர்கள் பெயர் அடங்கிய தாளைத் திணித்துவிட்டு விலகினார். செம்மஞ்சள் நிறத்தில் (வகுப்பிற்குரிய நிறம் அது) அட்டவணை போட்டு, பாடம் கேட்க வேண்டிய செபங்களின் பட்டியலும் இருந்தது.

நேற்று பாடசாலை முடிந்ததும் மாணவி ஒருவர் என்னைத் தேடி வந்தார். "அம்மா வர அரை மணி இருக்கிறது. செபம் சொல்லட்டுமா?"  என்றார். எனக்கும் 'அப்பா' வர அரை மணி இருந்தது. செம்மஞ்சள் வர்ணத் தாளோடும் பேனாவோடும் அமர்ந்தேன். செபங்கள் அனைத்தும் சரியாக ஒப்பித்தார்.

இன்று காலை சிலர் வந்தார்கள். சரியாக ஒப்பித்தவற்றைக் கணக்கு வைத்துக் கொண்டு மீதியைக் கற்றுக் கொண்டு வருமாறு திருப்பி விட்டேன்.

தேநீர் இடைவேளையில் சிலர் வந்தார்கள். குண்டுக் கன்னத்தோடு கொழுக்மொழுக்கென்று ஒரு பிலிப்பீனோக் குட்டியர் இருக்கிறார். அவர் பெயர் சட்டென்று நினைவு வராது. சில சமயங்களில் 'எரிக்'என்று வாய் தவறி அழைத்து மாட்டி இருக்கிறேன். ;) இந்த எரிக் வந்து என்னருகே அமர்ந்தார். அனைத்துச் செபங்களும் மனப்பாடம் என்றார். சொன்னார். சில சொற்கள் நடு நடுவே காணாது போய் இருந்தன.

கடைசியாகக் கேட்டேன் "Do you know 'Eternal Rest'?" "Yes, Miss," என்று ஆரம்பித்தார். உதடுகள் அதிகம் அசையாது வேக வேகமாகச் சொன்னார். வாய் நிறையச் சாக்லட் குதப்புவது போல கன்னம் அசைந்தது அழகாக இருந்தது. அவர் கையில் ஒரு ஐஸ் ப்ளாக் (blog இல்லை), பாதி உறிஞ்சிய நிலையில். என் கையில் லிசா போட்டுத் தந்த 'பால்க்'கோப்பி!! அதுவும் பாதி உறிஞ்சிய நிலையில்.

"Eternal rest grant to him O! Lord. May pe.t..l light shine upon him. May he.." என்ன சொல்கிறார்! நடுவில் தடுத்து மீண்டும் சொல்லக் கோரினேன். "Eternal rest grant to him O! Lord. May pe..t..l light shine..." காது சரியாகக் கேட்கவில்லை. "Hold on Eric. Can I have that line again please!!!" இப்போது நானே எடுத்துக் கொடுத்தேன். "Eternal rest grant to him O! Lord. May..." தொடர்ந்தார்  "May... May.. um. May petrol light shine upon him. May he rest in peace. Amen."

perpetual என்பது தான் மருவி, பெட்ரோல் ஆகி இருந்தது. ;)
 
பிறந்ததும் இறந்துபோனவர் இவர். வயிற்றுப்புறம் வற்றி இருந்தது. ஆகாரம் போதாது இருந்திருக்கும் போல.

Wednesday 28 April 2010

பத்து நிமிடம் முன்பாக எழுந்து பார்த்த போது...


பத்து நிமிடம் முன்பாக எழுந்து பார்த்த போது...

தூங்கப் போகுமுன் இப்படித்தான் இருந்தார்.
இதற்கு மேல் வீட்டினுள் இருந்தால் காலையில் அடுப்பில் உட்கார்ந்திருப்பார். அல்லது தரையில் யார் காலிலாவது மிதி பட்டால் என்று...

யன்னல் வழியே வெளியே தெரிந்த தொட்டிச் செடியில் ஏற்றிவிட்டேன்.

கையில் மீந்த கோது இது. 

இரண்டு நாள் முன்பாக வந்தவர் இவர். பாடசாலை கிளம்பும் நேரம் என்பதால் தொடர்ந்து எடுக்க இயலவில்லை. 

இன்று பின்னேரம் வந்தவர் இவர்.

நான் படுக்கைக்கு வருமுன்பு வரை இதே இடத்தில் இருந்தார். நாளைக்காலைதான் பறக்க ஆரம்பிப்பார்.

இன்று பிறந்த மற்றொருவர்.
இமா மீண்டும் படுக்கைக்குப் போகிறேன். அனைவருக்கும் நல்லிரவு. ;)

மாற்றங்கள்

வெகு காலங்களாக இருந்த இந்தக் கட்டிடங்கள் இன்று இல்லை. 
 இந்த இடத்தைத் தினமும் கடந்து போக வேண்டி இருக்கிறது. ஒரு காலைப் பொழுதில் பச்சை விளக்குக்காகக் காத்திருந்த சமயம் இந்த இரண்டு கடற்காக்கைகள் சோகமாக் கூரையில் அமர்ந்திருந்ததைக் கண்டபோது கூடவே அருகே இருந்த சில கட்டிடங்கள் காணாமல் போயிருப்பதும் கவனத்துக்கு வந்தது. ம்... நாளை இந்த இரண்டு கட்டடங்களும் பிரிக்கப்பட்டால் பறவைகள் எங்கே போகும்!!

படம் எடுத்துச் சில காலங்கள் ஆகி விட்டது. சில நாட்கள் முன்பு மஞ்சளும் செம்மஞ்சளுமாக இருபது இருபத்தைந்து இயந்திரங்கள் இந்த இடத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. இப்போ கட்டிடங்கள் முழுவதாகக் காணாமல் போய் விட்டன. இடிபாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டது. கற்கள் தூளாக்கப் பட்டுச் சீராகப் பரவிக் கிடக்கிறது. எதைத்தான் கட்டப் போகிறார்கள் இங்கே என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
இது ஒரு ஸ்டேடியத்தின் பின் பகுதி. பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
~~~~~~~~~~~~~~~~
தினமும் கடந்து சென்றாலும் என் அதிஷ்டம், ;) இப்போதெல்லாம் அந்த இடத்தில் உள்ள பச்சை விளக்கு நாங்கள் கடக்கையில் எல்லாம் பச்சையாகவே இருக்கிறது. அதனால் படம் எடுப்பது முடியவில்லை.
வேலை நடப்பதை மட்டும் பார்க்கிறேன். விதம் விதமான அளவுகளில் இயந்திரங்கள், மண்ணை அள்ளுவதும் குவிப்பதுமாக பார்க்க சுவாரசியமாக இருக்கும். ஒன்று மஞ்சள் வர்ணம், ஒன்று செம்மஞ்சள், ஒன்று பச்சை. எல்லாம் ஒவ்வொரு டைனோசர் மாதிரி நின்ற இடத்திலேயே தலையைத் திருப்புவதும் குனிந்து எடுப்பதும் தூக்கிப் போடுவதுமாக மும்முரமாக வேலையில் ஈடுபட்டு இருக்கும்.

இன்று ஒரு கட்டிடத்திற்கான சட்டங்கள், அமைப்புப் பூர்த்தியான நிலையில் தெரிந்தது. விரைவில் அந்த இடத்தில் பெரிதாக ஏதோவொரு முக்கியமான கட்டடம் நிற்கும்.
பறவைகள்!!

அவற்றுக்கா இடம் இல்லை. எங்களைப் போலவா அவை! லோன் விண்ணப்பிக்க வேண்டாம், 'ரியல் எஸ்டேட் ஏஜென்ட்' பின்னால் அலைய வேண்டாம். மீதி வேலைகள் எதுவும் இல்லை. பிடித்து இருக்கிறதா, உடனே அந்த இடத்தில் குடிபுக வேண்டியதுதானே! ;)
பென்ரோஸ் பாலத்தைக் கடந்து திரும்புகிற முனையில் ஓர் கட்டிடம் இருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களாக அதன் கூரை மேல் இருந்த பெயர்ப் பலகைகள் நடுவே ஒரு கடற்காக்கைக் குடும்பம் குடியிருந்தது. ஓரளவு பெரிய கூடு, தூர இருந்தே தெரியும். குஞ்சுகள் தெரிவதில்லை, ஆயினும் சத்தம் கேட்கும். தாய்ப் பறவை இரையோடு மேலே பறப்பதைக் கண்டிருக்கிறேன். கூரை அவ்வப்போது (waterblast) கழுவப்படும். கூட்டைப் பிரித்துப் போட்டிருப்பார்கள். திரும்ப அடுத்த இனப்பெருக்க காலத்தில் மீண்டும் ஒரு கூடு அங்கு அமைக்கப்பட்டுவிடும். அவை மனம் சோர்வது இல்லை. இடம் மாறுவதும் இல்லை. கூரை எல்லாம் எச்சமும் பெயர்ப்பலகையில் அழுக்காய் அடையாளங்களும் தெரியும்.

சென்ற வாரம் புதிய தவணைக்காகப் பாடசாலை ஆரம்பித்த அன்று பெயர்ப்பலகை பளீர் சிவப்பில் தெரிந்தது. கட்டிடம் கைமாறி இருக்கிறது. இன்னும் புதிய பெயர் எழுதப்படவில்லை.
கட்டிடத்திற்கான பெறுமதியை யாரோ பெற்றிருப்பார்கள். கூரையின் இந்தப் பகுதிக்குச் சொந்தக்காரக் குடும்பத்திற்கு அதற்கான நஷ்ட ஈடு வழங்கப் பட்டிருக்குமா!!!!
 
எனக்கென்னவோ கட்டிடக்காரர்கள் நஷ்டப்படப் போகிறார்கள் என்று தோன்றுகிறது. ;) பெயர் எழுதுமுன் மீண்டும் கூடு அமைக்கப்பட்டால்.... 
'கீச்.. கீச்
கூடவே... 'பீச்.. பீச்'  
;D

Tuesday 27 April 2010

கஷ்டப்பட்டு சிரிச்சால்...

'ச்சீஸ்' சொன்னவர்களிற் சிலர். ;)

கஷ்டப்பட்டு சிரிச்சால் இப்பிடித்தான் வரும். ;) மொப்சியையும், மொப்பியையும் பிரிக்க முடியேல்ல. ;) எல்லாம் குழப்படிக் கூட்டம், 'கொம்பு' வைக்கிற ஆக்களும் சட்டென்று 'சைட்' போஸ் காட்டுற ஆக்களுமா இருக்க இப்பிடித் தான் படம் வந்து இருக்கு. ;) ரெண்டு பேர் மிசிங். நீலத் தலையும் நாவல்ப் பூவும் கருப்பு வெள்ளைப் படத்தில வர மாட்டுதாம். ;) மன்னிக்க வேணும் அந்த இருவரும்.

எனக்குப் பிடித்த பெண்

எந்த வயதாக இருந்தால் என்ன பெண், பெண்தானே!
ஏற்கனவே உங்களுக்கு அறிமுகமானவர்தான் இவர். என் ஆறு வயது குட்டித் தோழி, எங்கள் வீட்டுக் குட்டித் தேவதை.
நான் இத்தனை நாட்கள் கழித்தும் நிபந்தனைகளை நினைவு வைத்திருக்கிறேன். ;)
இவர் எனக்கு உறவல்ல. துறை - மாணவி. ஆனால் எனக்கு ஆசிரியர் போல் பல சமயம் நடப்பார். ;)
உ + ம்:- ஒரு முறை தொலை பேசியில் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். நான் தொடர்பைத் துண்டிக்க மனமில்லாது மறுநாள் மீண்டும் அழைப்பதாகக் கூறி இருந்தேன். மறு நாள் என்ன ஆயிற்று என்று நினைவில்லை. அதற்கு அடுத்த நாளும் ஏதோ ஓர் தடங்கல் வந்திருக்க வேண்டும். பிற்பாடு ஒரு நாள் அழைத்தேன், தாயார் எடுத்தார். பேசினோம். குட்டியர் என்னோடு பேசக் கேட்கவில்லை. நான் விசாரித்த போது ஏதோ வேலையாக இருக்கிறார் என்று அறிந்து கொண்டேன். ;)

அதற்கு அடுத்த நாள் அழைத்தேன். பேசிக் கொண்டிருக்கையில் குட்டிக் குரல் எம்பி எம்பிக் குதித்தது. ;) ட்ராம்பலீனில் குதித்துக் குதித்துக் கதைத்திருக்கிறார்.

அரை மணி நேரம் கழித்து....
'சரி, நான் நாளை மீண்டும் பேசட்டுமா?' என்கிறேன்.
'No way. நீங்க அண்டைக்கு ஒருநாள் இப்பிடி சொல்லிட்டு... You never called me,' குரலில் இறுக்கம். ;(
'நான் நாளைக்கு வீட்ட வாறனே, கதைப்போம்.'
'No. வேணாம்,' இன்னமும் குரல் குதிக்கிறது, கொஞ்சம் கொதிக்கிறது. ;))
'இப்ப. I want to talk to you NOW Aunty,'
'ok, ok, ok. ;)'
'Why are you saying ok so many times!!!'
'o..key ;)'
'இன்னொருக்கா ok சொல்லுறீங்க.'
'okeyyy! ;)'
'Don't say ok. சரியா?' அதட்டுகிறார். 
'ம் ;)'
'திருப்பியும் you are saying ok,'
'இன்னும் ஒரு five minutes கதைச்சிட்டு வைக்கிறன். பிறகு நாளைக்குக் கதைக்கலாம், என்ன!'
'ம்'

பிறகு எனக்கு ஒரு தண்டைனையாகச் சில நிமிடப் பொழுதுகள் அவர் அமைதியாகக் குதித்தார். நான் காதில் வைத்தது வைத்த படி அவர் மூச்சு வாங்கும் சப்தத்தை காதில் வாங்கிக் கொண்டிருந்தேன். ;)

'அஞ்சு நிமிஷம் ஆகீட்டு. நான் வைக்கிறன். நாளைக்..' முடிக்க முதல் வார்த்தை தடுக்கப்படுகிறது. 'Wait. Is it already five minutes!' சந்தேகம். மேலும் சில வசனங்களில் சமாதானம் ஆகிறார்.

மறுநாள் மறந்து போனேன். கிட்டத்தட்டக் கோவிலுக்குக் கிளம்பும் சமயம் பார்த்து நினைவு வருகிறது. அவசரமாக உடை மாற்றிக் கொண்டு அழைக்கிறேன். ஒன்றிரண்டு நிமிடங்களாவது இன்று பேசி விட வேண்டும்.

மறுபுறம் யாரும் இல்லை என்பதாகவும் செய்தி வைக்குமாறும் சேமிக்கப்பட்ட பெண் குரல் இனிமையாகத் தகவல் சொல்கிறது. 'பீப்' கேட்டதும் 'நான் ஆன்ட்டி. இண்டைக்கு உங்களோட கதைக்கிறதெண்டு சொன்னனான். அதுதான் எடுத்தன்,' சொல்லிக் கொண்டிருக்கையில் மீதி மூவரும் காரில் ஏறிவிட்டது புரிய தொடர்பைத் துண்டித்து விட்டு ஓடுகிறேன்.

மீண்டும் வீடு வர இரவு ஒன்பதரை ஆகிறது. தொலை பேசியில் தகவல் இருக்கிறது. 'ஆன்ட்டி.. நான் --------. ஏலுமெண்டா எடுங்க' குட்டிக் குரல் சோகமாக அடங்கிப் போய் ஒலிக்கிறது.
காலையில் எடுக்கிறேன்.

'ஆன்டி, என்ன நீங்க செய்ற வேல? Don't you know how to leave a message? நீங்களும் மெசேஜ் வைக்கிறீங்க. நானும் மெசேஜ் வைக்கிறன்.' அதாவது, நான் வீட்டில் இல்லை, வெளியே போய் விட்டேன் என்பதைச் செய்தியில் சொல்லி இருக்க வேண்டுமாம். ;) தப்புத்தான். ;) 'சொல்லி இருந்தா I would have known,' குரலில் ஒரு ;(. 'Remember this next time, right!' 'ம்'
நல்ல வேளை தொலைபேசியில் என் முகம் தெரியவில்லை என்று நினைத்துக் கொண்டேன். பிறகு சிரிப்பதற்கும் ஒரு டோஸ் கிடைத்திருக்கும். ;))

இவரிடமிருந்து நான் கற்றவை பல. ;) இன்னும் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. கற்றுக் கொடுப்பார். இந்தக் குட்டி தேவதை, என் குட்டி ஆசிரியர். பல சமயங்களில் சிறியவர்கள்தானே என்று நினைத்துவிடுகிறோம். ஆனால் சிந்திக்க வைக்கிறார் இவர்.

Monday 26 April 2010

Moody Moments ;)

 
விருப்பு வெறுப்புகள் அற்றதோர்  தருணத்தில் மலர்ந்த மலரிது. ;) 
பயன்பட்டவை ஆப்பிள், லீக்ஸ், கோவா இலை.

Sunday 25 April 2010

மாணவர் கைவண்ணம்

இந்த வாழ்த்து அட்டைகள் சமீபத்தில் என் மாணவர்களிற் சிலர் செய்தவை.
செய்முறை விளக்கத்தை வெண்பலகையில் எழுதி வைத்து, பொருட்களையும் கொடுத்தேன். ஒழுங்காகச் செய்யப்பட்ட வாழ்த்திதழ்களில் முப்பரிமாணத் தோற்றம் படத்தில் தெரியவில்லை.

இந்தப் படத்தில் மட்டும் கடற்கன்னியின் முதுகுப்புறம் பார்த்தால் இரு வரிகள் தெரியும்.

Monday 19 April 2010

என் இனிய இயந்திரா!


பாடசாலையில் குட்டி மாணவர்கள் முகமூடி செய்கிறார்கள்.
அவரவருக்கு விரும்பிய வடிவத்தில், ஆனால் முகத்தின் அளவுக்கு ஏற்ற விதமாக அமைக்க வேண்டும். முதலில் கடதாசியில் வடிவமைத்து ஆசிரியரின் அனுமதி கிடைத்ததும் அட்டையில் வரைய ஆரம்பித்தார்கள்.
இந்த முகமூடியைப் பார்க்கும் போது... அந்தச்செவிகளைப் பார்க்கும் போது உங்களுக்கு யாராவது நினைவு வருகிறார்களா!
(முகம்தான் கொஞ்சம் அளவுக்கதிகமாக 'இயந்திரா'த்தனமாக இருக்கு.) ;)

Thursday 15 April 2010

விருந்தினர் வந்தால்தான் மேசை அலங்காரமா!

விருந்தினர் வந்தால்தான் மேசை அலங்காரமா!
 
நமக்காகவும் ஒன்று இன்று. ;) மெதுவாக ஒவ்வொரு திராட்சையாக எடுத்து ரசித்து நறுக்கி...

பாதியை வாயில போட்டு, மீதியை குச்சியில் குத்தி...
 
ஸ்டான்ட் ஒன்று வேண்டுமே! 
என் மகன் அடிக்கடி கரிசனத்தோடு சொல்கிறார், 'அம்மா... டெய்லி ஒரு ஆப்பிள் சாப்பிடுங்க. சாப்பிடணும்.' ;) அதற்காக, திராட்சை சாப்பிட்டாலும் ஒரு ஆப்பிள் சேர்த்து சாப்பிடலாம். 
இந்த ஒரு துண்டு ஸ்டான்ட்டுக்கு....
இலை வேண்டுமே!! குட்டிக் குட்டிப் பார்ஸ்லி நெட்டுகள் சொருகலாம். ;)

அழகா இருக்கே! இனி இதைச் சாப்பிட வேணுமா! ;(

Wednesday 14 April 2010

மருதாணி, மருதாணி

சிறுவயது முதலே எனக்கு மருதாணி வைத்துக் கொள்ள ஆசை. எங்கள் பக்கம் இது எல்லாம் வழக்கம் இல்லை. என் கணவரது இஸ்லாமியத் தோழியின் திருமணத்தின் போதுதான் முதல் முறையாக வைத்துக் கொண்டேன். ஆனால் அது பெரிய புள்ளிகளாக மட்டும் இருந்தது. இப்படி அழகாக! என் கையில் போட்டுக் கொள்வேன் என்று அப்போது நினைத்துக் கூடப் பார்த்து இருக்கமாட்டேன். ;)

அறுசுவையில் வனிதா, ஜலீலா மற்றைய சகோதரிகள் எல்லோரும் பேசிக் கொண்டதைப் பார்த்து எனக்கும் ஆசை வந்தது. அதுவரை இலையை அரைத்துத் தொப்பி மாதிரி வைத்தால் சரி என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு நிறைய விஷயங்கள் பிடிபட்டது. ;)
(இது ப்ளாஷ் போட்டு எடுத்தேனா, போடாமல் எடுத்தேனா என்பது இப்போது நினைவில் இல்லை. ;)  )


பின்பு உமாவும் வனிதாவும் அங்கு மருதாணி போடும் முறையை விளக்கிக் குறிப்புகள்  கொடுக்க ஆரம்பித்தார்கள்.

சிறிது சிறிதாக.... முன்னேறி இருக்கிறேனா இல்லையா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். ;)


இந்த இடத்தில்தான் வில்லங்கம் ஆரம்பித்தது. ;(

ம்... திருத்தங்கள் எல்லாம் படத்தில் பளீரென்று தெரிகிறதே! ;)
ஓரமாக இருக்கும் அந்த ஒற்றை மயிலிறகு வைக்கும் போது 'கோன்' அடைத்துக் கொண்டது. பிறகு துவாரத்தைப் பெரிதாக்கியதில்...

மீதிக் கோடுகள் எல்லாம் கொஞ்சம் பெரிதாக... இலா ஸ்டைலில் சொல்வதானால் 'ஆம்ப்ளிஃபைட்' ஆக வந்தது. ;)

என் கைதானே, பரவாயில்லை. ;)
வனிதாவுக்கும் அறுசுவைக்கும் நன்றி @}->--

புத்தாண்டு வாழ்த்துக்கள்


மலரும் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் ஆண்டாக அமைய என் வாழ்த்துக்கள்.
- இமா

Tuesday 13 April 2010

பெத்தாவும் பெத்தம்மாவும்

இமா மெதுவாக நழுவி விட்டாங்களோ!... என்று நினைக்கிற ஆட்களுக்கு, இதோ மீண்டும் வந்தேன். ;)

எனக்குப் பிடித்த, என் வாழ்வில் மறக்க முடியாத பெண்  'பெத்தா'. அப்படித்தான் எல்லோரும் அழைப்பார்கள், பூரணம் அவர் பெயர். குழந்தைகள் இல்லை. (ஒருவரை வளர்த்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவரை நான் பார்த்ததில்லை.)

தஞ்சாவூர் மண் எடுத்துத் தாமிரபரணி தண்ணி எடுத்து செய்த பொம்மை மாதிரி... எனக்குரிய DNA எல்லாவற்றோடும் பெத்தாவின் குணங்கள் சிலவும் என்னில் தொற்றி இருப்பதைப் பலமுறை நான் உணர்ந்திருக்கிறேன்.

எனக்கு என் அம்மம்மாவைத் தெரியாது. டடாம்மாவை விடவும் பெத்தாவோடு நான் செலவழித்த நாட்கள் மிகமிக அதிகம். எனக்கு நினைவு புரிய ஆரம்பித்த காலங்களில் அயல் வீட்டில் இருந்தவர் பெத்தா. வெளியிட என்னிடம் ஒரு படமும் இல்லை. மனதில் இருக்கும் படத்தை இங்கு மாற்றிடும் திறமை எனக்கில்லை. ஆகவே...

..பெத்தம்மாவுக்குப் பதில் இங்கு ஒரு 'காகாபோ' (kakapo from New Zealand)
நான் ரசித்த, மதித்த பெண். மலேஷியன் தமிழ்ப் பெண்மணி என்பதாக நினைவு. கணவர் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் கற்பித்து இளைப்பாறியவர். 'மாணிக்கம் மாஸ்டர்' என்று ஊரில் தெரியும், எனக்கு மாஸ்டர் அப்பா, பெத்தாவுக்கு மட்டும் 'பள்ளியையா'. அப்படித்தான் கூப்பிடுவார். ;) (இதெல்லாம் நான் எழுதுகையில் அந்த நாட்களுக்கே போய் விட்டேன். )

பெத்தா கிளி வளர்ப்பார். அது அவர் குழந்தை. அவர் 'பெத்தம்மாவோடு' பேசுவதைப் புதினமாகப் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறேன். அது ஒரு தலை உறவல்ல. ;) அந்தக் கிளியும் அவரைப் புரிந்து வைத்திருந்த மாதிரித் தான் பதில் சொல்லும்.

தினமும் ஒரு குளியல் - ஒரு 'மில்க்மெய்ட்' பேணியில் மெல்லிய ஆணியால் துளைகள் தட்டி வைத்திருப்பார் பெத்தா. துருப்படியாத புதுப் பேணிதான் பெத்தம்மாவின் ஷவர். கிணற்றடியில் கூட்டோடு 'பெத்தோ' குளிப்பார். ஒரு வாளியில் நீர் நிறைத்து வைத்து ஒரு பேணியால் இந்தப் பேணியில் ஊற்றினால் இறங்கும் பூமழையில் அவர் (கிளி) குளிக்க வேண்டும். சமயங்களில் திட்டும் கிடைக்கும். ;) பிறகு, துவாலையால் துடைக்கப்படுவார், சாம்பிராணிப்புகை காட்டப்படுவார். கொடுத்துவைத்த பெத்தம்மா. பிறகு காரக்குழம்பு சேர்த்துக் குழைத்த ஒரு கவளம் சோற்றை அதல் கூட்டில் தட்டில் வைப்பார் பெத்தா. கிளி வளர்ப்பது ஒரு அழகான கலை. ;)

பெத்தாவிடமிருந்து நான் கற்றதும் பெற்றதும் அதிகம். எழுத எவ்வளவோ இருக்கிறது. ஒரே நாளில் அதிகம் சொன்னால் எப்படிப் படிப்பீர்கள்! அலுத்து விடுமே உங்களுக்கு! அதனால் சொல்கிறேன் மெதுவே, ஒவ்வொன்றாய்.

இன்று பெத்தாவும் மாஸ்டர் அப்பாவும் உயிரோடு இல்லை. அவர்கள் நேரடி வாரிசுகள் என்றும் யாரும் இல்லை. இந்த இடுகை பூரணம் பெத்தாவையும் மாணிக்கம் மாஸ்டரையும் அறிந்தவர்கள் கண்ணில் பட்டால் ஒரு நிமிடம் அவர்கள் ஆன்ம இளைப்பாற்றிக்காகப் பிரார்த்தித்துக் கொள்ளும்படி அன்பு வேண்டுகோள் வைக்கிறேன்.
- இமா 
பிடித்த பெண்கள் இன்னும் வருவார்கள்

Monday 12 April 2010

புதுமுகங்களுக்காக ஓர் இடுகை ;)

_()_ 
சமீபகாலமாக என் உலகைச் சுற்றிவரவென்று சிலர் புதிதாக இணைந்துள்ளமை தெரிகிறது. ;) பின்தொடராமல் பின்னூட்டம் கொடுப்போரிலும் சில புதுமுகங்கள் தென்படுகிறார்கள். அனைவருக்கும் நல்வரவு.
உங்களுக்காக விசேடமாக இந்த அன்பளிப்புகள், ஆளுக்கொரு கீவி கடிகாரம் எடுத்துக் கொள்ளுங்கள். ;)
சரி, கடிகாரத்தில் என்ன விசேஷம் இருக்கப் போகிறது! எல்லாக் கடிகாரங்களையும் போல் மணி காட்டப் போகிறது, அவ்வளவுதானே!.. என்கிறீர்களா!
இவை விசேடமானவை. பழைமை! வாய்ந்தவை. ;) புதுமையானவையும் கூட. 'காலம் பொன்னானது' இவை ஆனது சதுப்பு நிலத்துள் புதையுண்டு கிடந்த 40,000 - 45,000 வருடங்கள் பழைமை வாய்ந்த கௌரி (Kauri ) மரங்களால். நிறச்செறிவு கூடியவை வயது அதிகமான மரங்கள்.
 
ஃபஙரெய் (Whangarei) -ல் அமைந்துள்ள   இந்தத் தொழிற்சாலையைக் எப்போது கடக்க நேர்ந்தாலும் தவறாது ஒருமுறை நுழைந்து பார்த்துவிடுவேன். அப்படியே தொடர்ந்து வரும் நாட்களில் யார் யாருக்கு எல்லாம் அன்பளிப்புக் கொடுக்க வேண்டி இருக்கிறது என்று மனதில் ஒரு கணக்குப் போட்டுப்பார்த்து முடிந்ததை வாங்கிக் கொள்ளுவேன். ஆசைப்பட்டாலும் எனக்கென்று வாங்கிச் சேர்க்க முடியாது. ;) பிறகு என் வீடு 'கௌரி மியூசியம்' மாதிரி ஆகிவிடும். ;) சென்ற ஞாயிறன்றும் போயிருந்தேன்.

நீங்களும் ஒரு நடை உள்ளே போய்ப் பாருங்கள். அங்கு ஒரு அழகு பப்பியும் இருக்கிறார். எனக்கு அங்குள்ள 'இந்தியா' கடிக்காரம் பிடிக்கும். 'மியா' பெயரிலும் ஒன்று இருக்கிறது. ;)

மேற்கொண்டு என் படங்கள் பேசும். ;) இப்போதைக்கு இவை.
 
தொழிற்சாலையின் முன்பாக சேமிக்கப் பட்ட கௌரி அடிமரங்கள். வலது புறம் நிற்பது ஒரு கௌரி மரக்கன்று.
 
மீன்கொத்திக் குடும்பம். சுற்றிலும் உள்ளவை கௌரிமரப் பிசின். இதைக் கொண்டுதான் எல்லாவற்றையும் வார்னிஷ் பண்ணி இருக்கிறார்கள்.
 
எரியும் மெழுகுவர்த்தியும் 'ஸ்னாப்பரும்'


Fan Tail
-இமா 

Sunday 11 April 2010

சமர்ப்பணம் - 2

நான் ஏதோ என் சந்தோஷத்திற்காக என் புகழ் பாடவென ;) ஆரம்பித்தது 'இது இமாவின் உலகம்'.
சுற்றி வருவது, பின்னூட்டம் கொடுப்பதோடல்லாமல் திடீர் திடீரென்று விருது, கிரீடம் என்று கொடுத்து ஊக்கப்படுத்தும் அன்பு உள்ளங்களுக்காகப் பதிலுக்கு நான் என்ன செய்யப் போகிறேன்!! 
'என் உலகம்' இன்னும் சிறப்பாக, என்ன செய்ய வேண்டுமென்று யோசித்து ஒரு பட்டியல் போட்டு வைத்திருக்கிறேன்.அது எல்லாம் பிறகு...
முதலில்... எனதன்பு ஸாதிகா, கவிசிவா, விஜி, ஜலீலா ஆகியோருக்காக இன்று பிறந்த என் செல்ல வண்ணத்துப் பூச்சி...
சமர்ப்பணம்.
விடுமுறை முடிந்து வீடு வந்தேன். என் கூட்டில் 'ஒருவர்' பறக்கப் பழகிக்கொண்டிருகிறார் என்பதாகச் செய்தி வந்தது.

விடுவித்துவிட என்று கையில் எடுத்தேன்.


கொஞ்சநேரம் கொஞ்சினேன்.
இதோ என் மனம்போல் வானில் சிறகடிக்கிறார். ;)


நாளை மீண்டும் வருவார் என் வீடு தேடி. அவர் குழந்தைகளையும் நான்தானே வளர்க்க வேண்டும். ;) 
- இமா