Friday 21 March 2014

"ஏணி வேண்டும்!"

 
ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைக்கக் கூடாது என்பார்கள். இது எங்களுக்குப் பெரிய உதவி செய்தது ஊரில.

செபா நியூஸிலாந்து வர வெளிக்கிட்டதுமே எங்கட வீட்டை விற்றாச்சுது. பிறகு திருகோணமலைக்குப் போற நேரம் எல்லாம் மாமி வீட்டிலதான்; அது மச்சாள்ட வீடு என்றாலும்.. எங்கட வீடு மாதிரித்தான்.

இது போன முறை போன நேரத்துக் கதை. நாங்கள் இருந்த அறை கிட்டத்தட்ட யாரும் பாவிக்காத அறை. வீடு கட்டி முடியேல்ல இன்னும். இந்த அலுமாரிக்கு மேல மருமகள்ட கலியாண பனர் ++ எல்லாம் இருந்துது. பக்கத்து அறையிலதான் மாமி இருந்தவ. மேல தெரியிற இடைவெளியால இரவு முழுக்க மாமியின்ட "ஆண்டவரே! நாட்டிற்குச் சமாதானத்தைக் கொடும்," கேட்டுக் கொண்டே இருக்கும்.

ஒருநாள் கதவை இழுத்துச் சாத்த, அது பூட்டிக் கொண்டுது. நாங்கள் போற இடமெல்லாம் போய் வந்தாச்சுது. உள்ள மட்டும் போக முடியேல்ல. திறப்பு உள்ளே. ;)

சரி, ஒரு கோப்பி குடிக்கலாமெண்டு நினைச்சம். க்றிஸ் கோப்பி போடுறன் எண்டு போனார். பிறகு எனக்கு மட்டும் ஒரு கோப்பை வந்துது.
"நீங்கள் குடிக்கேல்லயா?"
 "அதுக்கு ஏணி வேணும்,"
ஏதாவது விளங்குதா உங்களுக்கு!! ஏணியில ஏறி நிண்டு குடிக்கப் போறார் எண்டு நினையாதைங்கோ.
க்றிஸ் ஈக்வல் போட்டுக் குடிப்பார். ஈக்வல் அறையில. அறைத் திறப்பும் அறையில.

ஈக்வலை எடுக்க முதலில் திறைப்பை எடுக்க வேணும். எப்படி! நிறையப் ப்ளான் பண்ண வேண்டியிருந்தது. ;)

திறப்பை எடுக்க ஒரே வழி மாமிட அறைக்குள்ள ஏணி வைச்சு ஏறி படத்தில தெரியிற இடைவெளியால எங்கட அறைக்குள்ள இருக்கிற அலுமாரிக்கு மேல குதிச்சு, பிறகு கீழ குதிச்சு கட்டில்ல இருக்கிற திறப்பை எடுத்து... கொஞ்சம் பொறுங்கோ, முடியேல்ல இன்னும்.

ம்.. திறப்பை எடுத்தால் போதாது. கதவை உள்ள இருந்து திறக்க ஏலாது. ஆகவே மீண்டும் போன வழியே திரும்ப வெளிய வர வேணும். அது ஏலாது. ஏனெண்டால் உள்ளே ஏணி இல்லை அலுமாரியில் திரும்ப ஏற. கஷ்டப் பட்டு ஏற நினைச்சு அலுமாரியோட விழுந்தால்!!! சரி, விழாமல் ஏறியாச்சுது எண்டு வைப்பம். பிறகு அந்த உயரச் சுவரை எப்பிடித் தாண்டுறது! மற்றப் பக்கம் இன்னொரு அலுமாரி இல்லை.

திறப்பைக் கவனமா சுவருக்கு மேலால அடுத்த அறைக்கு வீசலாம். ஆனால்... முதல்ல உள்ள எப்பிடிப் போறது! ஏணியைக் காணேல்ல! அது யார் வீட்டுக்கு இரவல் உலா போயிருந்தது என்று தெரியேல்ல. கள்ளனைப் பொலீஸ் தேடிப் பிடிக்கிறது போல அயலெல்லாம் விசாரித்துக்கொண்டு இருந்தார்கள்.

"சரி, விடுங்கோ. அது கிடைக்குமட்டும் நான் அணிலைப் படம் எடுக்கப் போறன்."
"அதுக்கும் ஏணி வேணும்." - கமரா உள்ள!!
"அவ்வ்!!! ம்.. நான் என் ஃப்ரெண்டுக்கு ஃபோன் பண்ணப் போறன்."
"அதுக்கும் ஏணி வேணும். அட்ரஸ் கொப்பி உள்ளதானே இருக்கு!"

வீட்டு உடுப்பு மாத்த முடியேல்ல; குளிக்க முடியேல்ல.
நெட் கனெக்க்ஷன் போனால் நீங்கள் எவ்வளவு கஷ்டம் அனுபவிப்பீங்களோ அதே அளவு கஷ்டம் அனுபவிச்சம் அன்றைக்கு.

பிறகு ஒரு மாதிரி ஏணி வீட்டுக்கு வந்தது.
தொடர்ந்து வந்த நாட்களில் அறையை விட்டு வரும் ஒவ்வொரு தடவையும் கவனமாக திறப்பைக் கையில எடுத்துக்கொண்டோம்.

Tuesday 18 March 2014

எழுதுகிறேன் ஒரு கடிதம்

இது ஒரு மீள் இடுகை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

18 March 2010


என் செல்ல மகளுக்கு,

மகள்தானே நீ? என் முதல் குழந்தை பெண்ணாக இருக்க வேண்டும் என்று தான் விரும்பினேன், அதனால் நீ மகள்தான். ;)

எப்படி இருக்கிறாய் என் குட்டிப் பெண்ணே? நலம்தானே? நலமாகத் தான் இருப்பாய்.

சில நாட்களாகவே உன்னோடு பேசவேண்டும் என்று தோன்றிக் கொண்டு இருந்தது.

இன்று உன் பிறந்த!நாள். நினைவு இருக்கிறதா! நாங்கள் இருவரும் மட்டும் ரகசியமாக செலிபரேட் பண்ணலாமா? ;) கேக், ஸ்வீட், டெகரேஷன் எல்லாம் கிடையாது. பேசலாம், பேச்சு செலிபரேஷன் மட்டும், ஓகேயா! ;) இந்த இருபத்தைந்து வருடங்களில் இதுதான் நாங்கள் கொண்டாடும் முதலாவது பிறந்ததினம் இல்லையா? ;)

நீ என்னோடு இருந்திருந்தால் என்னவாக இருந்திருப்பாய்! படித்துக் கொண்டு / வேலை பார்த்துக் கொண்டு! இல்லையானால் 'இங்கு' யாரையாவது 'பிடித்துக்கொண்டு' பீச், பார்க் என்று சுற்றி என் வயிற்றில் புளியைக் கரைத்திருப்பாயோ!! ;)) பாடசாலை விட்டு வெளியேறும் 'மூன்று மணி' அவசரப் பொழுதில், (சீருடையிலும்) அவசரமாக  ஒரு 'ஜோடி' செடி மறைவில் ஒதுங்கி முத்தமிட்டு மீள்வதைக் கவனிக்கையில் உன் எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. ;)

எனக்காக நீ எந்தச் சின்னச் சின்னச் சந்தோஷங்களையும் கொடுக்கவில்லை. அவ்வளவு ஏன், உன்னை ஏந்தி முத்தமிடக் கூட எனக்குக் கிடைத்ததில்லை. ஆனாலும்.... நீ என் மேல் பிரியம்தான் இல்லையா? ;) முதல் முறையாக ஆரோக்கியமாக உன் இழப்பை நினைவுகூரும் மனப்பக்குவம் இந்த அம்மாவுக்கு வந்திருக்கிறது. நீ நிச்சயம் என்னை நேசிக்கிறாய்.

கண்ணாடியில் முகம் பார்க்கிறேன், என் பதினைந்து வயது - ஆறு வயது மாணவரின் தாய் கண்ணில் தெரியும் நிரந்தர சோகம் என் கண்ணில் இல்லை. சமீபத்தில் தாயை இழந்த அன்றே ஏக்கத்தில் தானும் தானாகவே இறந்து போன அந்த வளர்ந்த குழந்தையாக நீ என் அருகே வளர்ந்ததில்லை. பாடசாலையில் எத்தனை பேரைப் பார்க்கிறேன், உன்னை யாரிலும் காணவில்லை. இப்போது ஏக்கம் என்னுள் இல்லை. மாறாக நிம்மதியாக இருக்கிறது. அதனால்... உன்னை எல்லோரிலும் காண முடிகிறது.

எந்தக் குழந்தையும் 'நன்றாக' இருக்க வேண்டும் என்றுதானே தாய் விரும்புவாள். அதனால் 'நீ இல்லை,' என்பதை 'நீ நன்றாக இருக்கிறாய்,' என்பதாக எடுத்துக் கொள்கிறேன். என்னைப் பிரிந்தமைக்கு நன்றி என் செல்லமே.

என் சின்ன மகளுக்கு வலிக்காமல், மென்மையாய் ஒரு முத்தம்.

I love you my little girl. I love you lots. 

என்றும் உன்
அம்மா 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 நாளை பூசைக்குக் கொடுத்து இருக்கிறேன்... கருவில் இருக்கிற, கருவாக இருக்கிற அனைத்துக் குழந்தைகள் நலனுக்காகவும். காலை எட்டு மணிக்குப் பூசை. நம்பிக்கை இருக்கிறவங்க என்னோட சேர்ந்து செபியுங்க.
சரி, இப்ப எல்லாரும் சிரிச்சுக் கொண்டு அப்பிடியே கிளம்பி அடுத்த இடுகைக்குப் போறீங்க. அங்க 'கிராக்கர்ஸ்' வச்சு இருக்கு. போய் அழகா ஒரு 'சீஸ்' சொல்லுங்க. ;)

Friday 7 March 2014

பெண் எழுத்து


இது ஒரு மீள்பதிவு. 
முதலாவதாக இடுகையிட்ட தினம் - 16 ஏப்ரல் 2011
இப்போது மீண்டும் வெளியிடக் காரணம் இரண்டு - உலக மகளிர் தினம் + மறைந்த என் ஆசிரியருக்கு அஞ்சலி.
கட்டுரை இறுதியில் நான் குறிப்பிட்டிருக்கும் என் அபிமானத்துக்குரிய எழுத்தாளர் தமிழ்மணி திருமதி பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கம் அவர்கள் கடந்த
27/02/2014 அன்று இறை எய்தினார்.

அன்னாரது ஆன்ம இளைப்பாற்றிக்காக என் பிரார்த்தனைகள். 


~~~~~~~~~~~~~~~~~~~~
 16 ஏப்ரல் 2011
அமைதியாக அங்கங்கே இத்தலைப்போடு வரும் இடுகைகளையும் அவற்றுக்கான கருத்துக்களையும் படித்துக்கொண்டிருந்தேன். இப்போ அதிரா அழைப்பை ஏற்றுத் தொடராமல் தொடர்கிறேன், நன்றி அதிரா. 
பலரைப் போலவும் எனக்கும் சந்தேகம்தான்... எதை என்று கொள்வது! பெண் எழுதுவதையா? அப்போ பெண் பெயரில் ஆண் எழுதினால்!! ;) இல்லை... இது நிச்சயம் பெண் எழுதுவது பற்றித்தான் இருக்க வேண்டும். ;) ஆனால் ‘எழுதுவது’ பற்றி எழுத வேண்டும். கிறுக்குவது பற்றியோ குப்பைகள் பற்றியோ அல்ல. ;) என் எழுத்தும் பெண் எழுத்தானாலும் எழுத்து என்கிற ரீதியில் சேர்க்க இயலாத எழுத்து. ;)

1879!
‘எழுத்து’ இப்போது எவ்வளவோ தூரம் கடந்து வந்துவிட்டது. ஒருவர் எழுதுவதை இன்னும் சிலர் படித்து பிரசுரத்துக்கு ஏற்றது எனத் தெரிந்து கொண்டு பின்பும் திருத்தங்கள், மாற்றங்கள் செய்து வாசகர்கள் பார்வைக்கு விட்ட காலம் போய் தனிப்பட ஆளாளுக்கு ஒன்றிரண்டு வலைப்பூக்கள் வைத்துக் கொண்டு  அவற்றில் அவரவர் இஷ்டம் போல் எழுதும் சௌகரியம் என்று வந்தாயிற்று. நேரத்தைத் தவிர வேறு செலவு இல்லை.

இந்த எழுத்துச் சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தாது இருக்கும் வரை ஆண் எழுதினால் என்ன, பெண் எழுதினால் என்ன எல்லாம் ஒன்றுதான்; விமர்சனங்கள் வாசகர் நோக்கினைப் பொறுத்தது.

கண்டன விமர்சனக்களுக்குள்ளாகின்ற ‘பெண் எழுத்து’க்களை (உதாரணம் எல்லாம் இங்கு எடுத்துச் சொல்லவில்லை,) எடுத்துப் பார்த்தால், அவை அவ்வாறு விமர்சனங்களுக்குள்ளாவதற்குப் படைப்பாளியின் பின்னணிதான் முக்கிய காரணமாக இருக்கும்; குடும்பம், நாடு, சமயம் மற்றும் கலாச்சாரம் என்று எத்தனையோ காரணிகளை அளவு கோலாகக் கொண்டு விமர்சனங்கள் வந்திருக்கும். இங்கு உண்மையில் எழுத்து விமர்சனத்துக்குள்ளாவதை விட படைப்பாளியே விமர்சனத்துக்குள்ளாகுகிறார்.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் விமர்சனத்துள்ளானாலும் சிலருக்குப் ‘பிரபல எழுத்தாளர்’ என்கிற அந்தஸ்து பிற்காலத்தில் தன்னால் அமைந்து விடுகிறது. கால மாற்றம் என்கிற ஒன்றும் காலத்துக்கேற்ப மக்கள் நம் மனது மாறுவது என்கிற ஒன்றும் கூட இருக்கிறது. இது எழுத்துக்கு என்று மட்டும் அல்லாமல் அனைத்திற்குமே பொருந்தும் இல்லையா? நாமும் மாறிவிடுவோம், தினமும் எம்மை அறியாமல் மாறிக்கொண்டேதானே இருக்கிறோம்.

இப்படித்தான் எழுத வேண்டும் என்று  தடை போடவேண்டாம் என்றே தோன்றுகிறது. ஒவ்வொருவரும் தனி மனிதர்; தனித்துவமானவர். ரசனை, சிந்தனைப் போக்கு அனைத்தும் வேறுபட்டிருக்கும். கருத்தும் எழுத்தும் சுயமாக ஒரு ஊற்றுப் போல் வர வேண்டும். அதில் தான் தனித்துவம் வெளிப்படும்.

ஒவ்வொருவருக்கும் தம் எண்ணத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம் இருக்க வேண்டும். படிக்கவும், பாராட்டவும் விமர்சிக்கவும் எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. விமர்சியுங்கள், அங்கிருந்து படைப்பாளி தனக்குத் தேவையானதைத் தெரிந்து கொள்வார்.

எழுதிவர் யாரென்பதை விடுத்து படைப்பை மட்டும் பார்ப்போம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நான் முதல்முதலில் படித்த ‘பெண் எழுத்து’, ‘பூஜைக்கு வந்த மலர்’, ஈழத்து மூத்த பெண் எழுத்தாளர் எனது மதிப்பிற்குரிய தமிழ்மணி கலாபூஷணம் திருமதி. ந. பாலேஸ்வரி அவர்கள் எழுதியது. மீண்டும் படிக்க விரும்பித் தேடுகிறேன். பூஜைக்கு வந்த மலரை பா. பாலேஸ்வரி என்கிற பெயரில் எழுதி இருப்பார்கள்; அப்போது அவர்களுக்கு மணமாகி இருக்கவில்லை.
வாணி, நிலா, அதிரா, அனாமிகா, அம்முலு... யாராவது உதவுவீர்களா?
நாவலைப் படித்து முடித்து திருப்பிக் கொடுத்தபோது கேட்டார்கள்.. வளர்ந்து நான் எழுத்தாளராக வருவேனாவென்று. எங்கே! ஆசிரியப் பெற்றோர்க்குப் பிறந்த இமா இப்படித்தான் இருக்கவேண்டும் என்கிற மற்றவர்கள் எதிர்பார்ப்பு ஒன்று இருந்ததே, தயக்கத்தில் எழுதினதெல்லாம் குப்பத்தொட்டிக்கே போய்விட்டது. ஒரு புனைபெயரின் பின்னால் மறைந்து கொள்ளலாம் என்று அப்போது தோன்றவில்லை. ;( எல்லாவற்றுக்கும் ஒரு காலம் வர வேண்டும் இல்லையா! ;)
தற்போது என்னிடம் இருப்பது ஆசிரியையின் இந்த ஒரு நூல் மட்டும்தான். மீதியையும் சேகரிக்க முயற்சிக்கிறேன்.


என் தாயாருக்கும் மாமியாருக்கும் சக ஆசிரியை என்கிற விதத்தில் திருமதி. பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கம் அவர்களோடு நட்பு இருந்தது. மூவருமே பாடசாலையில் என் தமிழ் ஆசிரியர்கள். கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து இம்முறை திருகோணமலைக்குச் சென்றிருந்த போது அவரைச் சந்தித்தேன். அவர் வீட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இது.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திருமதி. ந. பாலேஸ்வரி அவர்கள் எழுதிய
சுடர் விளக்கு -
http://noolaham.net/project/11/1011/1011.pdf
தத்தை விடு தூது -
http://www.noolaham.net/project/04/373/373.htm



நன்றி நிரூபன்