Tuesday, 18 March 2014

எழுதுகிறேன் ஒரு கடிதம்

இது ஒரு மீள் இடுகை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

18 March 2010


என் செல்ல மகளுக்கு,

மகள்தானே நீ? என் முதல் குழந்தை பெண்ணாக இருக்க வேண்டும் என்று தான் விரும்பினேன், அதனால் நீ மகள்தான். ;)

எப்படி இருக்கிறாய் என் குட்டிப் பெண்ணே? நலம்தானே? நலமாகத் தான் இருப்பாய்.

சில நாட்களாகவே உன்னோடு பேசவேண்டும் என்று தோன்றிக் கொண்டு இருந்தது.

இன்று உன் பிறந்த!நாள். நினைவு இருக்கிறதா! நாங்கள் இருவரும் மட்டும் ரகசியமாக செலிபரேட் பண்ணலாமா? ;) கேக், ஸ்வீட், டெகரேஷன் எல்லாம் கிடையாது. பேசலாம், பேச்சு செலிபரேஷன் மட்டும், ஓகேயா! ;) இந்த இருபத்தைந்து வருடங்களில் இதுதான் நாங்கள் கொண்டாடும் முதலாவது பிறந்ததினம் இல்லையா? ;)

நீ என்னோடு இருந்திருந்தால் என்னவாக இருந்திருப்பாய்! படித்துக் கொண்டு / வேலை பார்த்துக் கொண்டு! இல்லையானால் 'இங்கு' யாரையாவது 'பிடித்துக்கொண்டு' பீச், பார்க் என்று சுற்றி என் வயிற்றில் புளியைக் கரைத்திருப்பாயோ!! ;)) பாடசாலை விட்டு வெளியேறும் 'மூன்று மணி' அவசரப் பொழுதில், (சீருடையிலும்) அவசரமாக  ஒரு 'ஜோடி' செடி மறைவில் ஒதுங்கி முத்தமிட்டு மீள்வதைக் கவனிக்கையில் உன் எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. ;)

எனக்காக நீ எந்தச் சின்னச் சின்னச் சந்தோஷங்களையும் கொடுக்கவில்லை. அவ்வளவு ஏன், உன்னை ஏந்தி முத்தமிடக் கூட எனக்குக் கிடைத்ததில்லை. ஆனாலும்.... நீ என் மேல் பிரியம்தான் இல்லையா? ;) முதல் முறையாக ஆரோக்கியமாக உன் இழப்பை நினைவுகூரும் மனப்பக்குவம் இந்த அம்மாவுக்கு வந்திருக்கிறது. நீ நிச்சயம் என்னை நேசிக்கிறாய்.

கண்ணாடியில் முகம் பார்க்கிறேன், என் பதினைந்து வயது - ஆறு வயது மாணவரின் தாய் கண்ணில் தெரியும் நிரந்தர சோகம் என் கண்ணில் இல்லை. சமீபத்தில் தாயை இழந்த அன்றே ஏக்கத்தில் தானும் தானாகவே இறந்து போன அந்த வளர்ந்த குழந்தையாக நீ என் அருகே வளர்ந்ததில்லை. பாடசாலையில் எத்தனை பேரைப் பார்க்கிறேன், உன்னை யாரிலும் காணவில்லை. இப்போது ஏக்கம் என்னுள் இல்லை. மாறாக நிம்மதியாக இருக்கிறது. அதனால்... உன்னை எல்லோரிலும் காண முடிகிறது.

எந்தக் குழந்தையும் 'நன்றாக' இருக்க வேண்டும் என்றுதானே தாய் விரும்புவாள். அதனால் 'நீ இல்லை,' என்பதை 'நீ நன்றாக இருக்கிறாய்,' என்பதாக எடுத்துக் கொள்கிறேன். என்னைப் பிரிந்தமைக்கு நன்றி என் செல்லமே.

என் சின்ன மகளுக்கு வலிக்காமல், மென்மையாய் ஒரு முத்தம்.

I love you my little girl. I love you lots. 

என்றும் உன்
அம்மா 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 நாளை பூசைக்குக் கொடுத்து இருக்கிறேன்... கருவில் இருக்கிற, கருவாக இருக்கிற அனைத்துக் குழந்தைகள் நலனுக்காகவும். காலை எட்டு மணிக்குப் பூசை. நம்பிக்கை இருக்கிறவங்க என்னோட சேர்ந்து செபியுங்க.
சரி, இப்ப எல்லாரும் சிரிச்சுக் கொண்டு அப்பிடியே கிளம்பி அடுத்த இடுகைக்குப் போறீங்க. அங்க 'கிராக்கர்ஸ்' வச்சு இருக்கு. போய் அழகா ஒரு 'சீஸ்' சொல்லுங்க. ;)

21 comments:

  1. என்ன இமா இது? உண்மைச் சம்பவமோ? கேட்கவும் தயக்கமாக இருக்கு?.... சொன்னால்தானே தெரியும்.

    ReplyDelete
  2. இமா..யாருக்கு எழுதி இருக்கீங்கன்னு புரிகிறது.
    / அதனால் 'நீ இல்லை,' என்பதை 'நீ நன்றாக இருகிறாய்,' என்பதாக எடுத்துக் கொள்கிறேன்./ பக்குவப்பட்ட மனம் இமா உங்களுக்கு. என்ன சொல்வதுன்னு தெரில..உங்கள் மகளுக்கு பிறந்தநாள்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. இமா, மிகவும் கவலையாக இருக்கு. இது உண்மையாக இருக்க கூடாது என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன். ஏனோ தெரியவில்லை சில வருடங்களின் முன்பு இறந்த என் நெருங்கிய உறவினரின் முகம் அடிக்கடி ஞாபகம் வருது. நெஞ்சை தொட்டு விட்டீர்கள்.

    ReplyDelete
  4. Imaa! I feel it. My little girls are in my heart now ... Older one is going to kindergarden !!! Nice way of dealing with emotions. Thank you !!!

    ReplyDelete
  5. இதை படித்ததும் எனக்கும் என் மகளுக்காக நான் ஏங்கிய நாட்கள் நினைவில் வருகிறது....இமா உங்களுக்கு நிறைய மகள்கள்(நாணும் தான்) இருக்கிறோம்.

    ReplyDelete
  6. இமா அம்மா இப்படி எழுதி எல்லாருடைய மனசையும் டச்சு பன்னிட்டிங்க. ஆனா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. நாங்க எல்லரும் இருக்கும் இமா அம்மா. அப்பரம் ஏன் இப்படி ஒரு வருத்தம். ( இல்லாமல் இருக்காது. )

    ReplyDelete
  7. படித்ததும் மனசு கஷ்டமாயிடுச்சு இமா.உங்களுக்கு நிறைய மகள்கள் நாங்கள் இருக்கிறோம்....

    ReplyDelete
  8. இமா, ரொம்ப கஷ்டமாக இருக்கு படிக்கவே. உங்களுக்கு நல்லதொரு மனப்பக்குவத்தை அளித்த கடவுளுக்கு நன்றி. ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு சோகம் ஒளிந்து கொண்டு தான் இருக்கும் போல. தெளிந்த மனதுக்கு வாழ்த்துக்கள் இமா.

    ReplyDelete
  9. tkz for ur support dear friends.

    anaivarum 'meendum' idukai(update) padikkavum. ;)

    anpudan imma

    ReplyDelete
  10. 'இது எல்லாம் சிம்பிள் மாட்டர்,' எண்டு சொல்லுவார். ;) கேட்டுப் பாருங்க. ;)// காலம் போனபின் ஒருவேளை சிம்பிளாகத் தெரியலாம் இமா, ஆனால் அந்த நேரத்தில அது நிட்சயம் சிம்பிளாக முடியாது...

    சரி சரி நான், இமா மாதிரி டிஷ்யூ முடிஞ்சுபோச்செண்டு சொல்லமாட்டேன்:), இது அமுதசுரபியாக்கும்... ஆனாலும் இமா இவிங்கள் அழுகிற அழுகையைப் பார்த்தால் டிஷ்யூ போதாது, நான் பார்த் டவல் தாறேன்.. தோய்சுத் தோச்சு....றையருக்க போட்டுப் போட்டு ஒவ்வொருவருக்கும் குடுங்கோ ஓக்கை.....

    நானும் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  11. ippavum simpilaath theriyella athees. aanaal simpilaath theriyuthu. ;)

    ReplyDelete
  12. இமா இந்த கடிதம் மனதை மிகவும் நெருட வைக்கிறது,
    ஏன் இப்படி ? படிகக்வே கழ்டமா இருக்கு.

    ReplyDelete

  13. வணக்கம்!

    சின்ன குழந்தை சிரிப்பழகில்
    சிந்தை மகிழ்ந்து களித்ததுவும்!
    கன்னம் தீட்டி! கண்தீட்டிக்
    கதைகள் கூறி இனித்ததுவும்
    அன்னம் காட்டி! சோறுாட்டி
    அமுதப் பாடல் இசைத்ததுவும்
    என்ன சொல்லி எழுதிடுவேன்
    என்றும் நிலைத்த நினைவுகளே!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. கவிதையாய்க் கருத்திட்டமைக்கு
      நன்றி கவிஞரே!
      //சின்ன குழந்தை சிரிப்பழகில்
      சிந்தை மகிழ்ந்து களித்ததுவும்!
      கன்னம் தீட்டி! கண்தீட்டிக்
      கதைகள் கூறி இனித்ததுவும்
      அன்னம் காட்டி! சோறுாட்டி
      அமுதப் பாடல் இசைத்ததுவும்//
      எதுவும் இந்தக் குழந்தைக்கில்லை. ;(
      //என்ன சொல்லி எழுதிடுவேன்
      என்றும் நிலைத்த நினைவுக//ளை!!
      மார்ச் மாதம் மறக்காது வரும்
      மனதைக் கலைக்கும், கனக்க வைக்கும்;
      தானாய்த் தூரம் சென்றுவிடும்.
      காத்திருக்கும்
      'இன்னொரு மார்ச் வரும்', என்று.

      Delete
  14. புரிஞ்சது ....எந்த வார்த்தையும் என்னிடத்தில இல்லை சொல்லுவதற்கு ..

    ReplyDelete
  15. கலங்க வைத்தது சகோதரி......

    ReplyDelete
  16. பிறக்காத மகளுக்கு எழுதிய கடிதன் கனக்கவைக்கிறது .. நிம்மதியாகவும் இருக்கிறது..!

    ReplyDelete
  17. ஜாலியாக 'சிவப்பு மக்னோலியாவை பதிவாக்கி இருக்கிறேன்' என்று சொல்ல வந்த எனக்கு உங்களின் இந்தப் பதிவு வெகுவாகப் பாதித்துவிட்டது. ஏதோ ஓர் உண்மை புரிகிறது. உங்களின் 25 வயது செல்ல பாப்பாவுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களும். வேறென்ன சொல்ல !

    ReplyDelete
  18. மனம் கலங்கி விட்டது சகோதரி...

    ReplyDelete
  19. என் செல்ல இமாம்மாக்கு . . . . .

    அம்மா நான் எங்கே போனேன்
    என்று நீ அழுகிறாய்,

    என் மீது அளவுகடந்த அன்பு வைத்துருக்கும் உன்னால்
    நான் உன்னுள் இருப்பதை உணரமுடியாதது ஏனம்மா ?

    கருவறையில் இருந்த நானும்
    கருவறையில் இருக்கும் கடவுள் போல தான்ம்மா,
    என்னை காணமுடியாது ஆனால்
    நான் இருப்பதை உன்னால் உணரமுடியுமே அம்மா,

    நீ பார்க்கும் இடமெல்லாம் நான் இருக்கிறேன்
    உனக்கு தெரியலையாம்மா,

    உனைப் பார்த்து சிரிக்கும் பூ நான் தானே,

    நீ சுவாசிக்கும் காற்றில் கலந்திருக்கும் ஜீவன் தானே,

    சின்ன சின்ன பிள்ளையாய் உன் கண் முன் தோன்றுவதும் நான் தானே,

    உன் முத்ததை நான் உணர்ந்து அனுபவிக்கிறேன்,
    பதிலுக்கு நான் தருவதை நீ ஏன் ஏற்க மறுக்கிறாய் ,

    நீ அன்பாய் தலை வருடும் போது ஒவ்வொரு பிள்ளையிலும்
    உன் பாசத்தையும், நேசத்தையும் உணர்கிறேன் நானம்மா,

    நீ அழுவது எனக்கு தெரிகிறது
    நான் அழுதால் உன்னால் தாங்கமுடியாதுனு எனக்கு தெரியும்மா,


    இது தெரியாமல் ஏனம்மா மறு மறுபடி என்னை சாகடிக்கிறாய்,
    இனியாவது என்னை இல்லை என்று சொல்லாதம்மா,
    இப்படி கூறி என்னை காயப்படுத்தாதேம்மா,
    என் தவிப்பு உனக்கு புரியலையாம்மா ,
    உன் அன்பிற்க்காக ஏங்கும் உன் ஆசை பெண்ணல்லவா நான் .................

    Subi ............

    ReplyDelete
  20. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : நேசன் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தனிமரம்

    வலைச்சர தள இணைப்பு : டெலிபோன் தொல்லை!!!!!!!!

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா