Friday, 7 March 2014

பெண் எழுத்து


இது ஒரு மீள்பதிவு. 
முதலாவதாக இடுகையிட்ட தினம் - 16 ஏப்ரல் 2011
இப்போது மீண்டும் வெளியிடக் காரணம் இரண்டு - உலக மகளிர் தினம் + மறைந்த என் ஆசிரியருக்கு அஞ்சலி.
கட்டுரை இறுதியில் நான் குறிப்பிட்டிருக்கும் என் அபிமானத்துக்குரிய எழுத்தாளர் தமிழ்மணி திருமதி பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கம் அவர்கள் கடந்த
27/02/2014 அன்று இறை எய்தினார்.

அன்னாரது ஆன்ம இளைப்பாற்றிக்காக என் பிரார்த்தனைகள். 


~~~~~~~~~~~~~~~~~~~~
 16 ஏப்ரல் 2011
அமைதியாக அங்கங்கே இத்தலைப்போடு வரும் இடுகைகளையும் அவற்றுக்கான கருத்துக்களையும் படித்துக்கொண்டிருந்தேன். இப்போ அதிரா அழைப்பை ஏற்றுத் தொடராமல் தொடர்கிறேன், நன்றி அதிரா. 
பலரைப் போலவும் எனக்கும் சந்தேகம்தான்... எதை என்று கொள்வது! பெண் எழுதுவதையா? அப்போ பெண் பெயரில் ஆண் எழுதினால்!! ;) இல்லை... இது நிச்சயம் பெண் எழுதுவது பற்றித்தான் இருக்க வேண்டும். ;) ஆனால் ‘எழுதுவது’ பற்றி எழுத வேண்டும். கிறுக்குவது பற்றியோ குப்பைகள் பற்றியோ அல்ல. ;) என் எழுத்தும் பெண் எழுத்தானாலும் எழுத்து என்கிற ரீதியில் சேர்க்க இயலாத எழுத்து. ;)

1879!
‘எழுத்து’ இப்போது எவ்வளவோ தூரம் கடந்து வந்துவிட்டது. ஒருவர் எழுதுவதை இன்னும் சிலர் படித்து பிரசுரத்துக்கு ஏற்றது எனத் தெரிந்து கொண்டு பின்பும் திருத்தங்கள், மாற்றங்கள் செய்து வாசகர்கள் பார்வைக்கு விட்ட காலம் போய் தனிப்பட ஆளாளுக்கு ஒன்றிரண்டு வலைப்பூக்கள் வைத்துக் கொண்டு  அவற்றில் அவரவர் இஷ்டம் போல் எழுதும் சௌகரியம் என்று வந்தாயிற்று. நேரத்தைத் தவிர வேறு செலவு இல்லை.

இந்த எழுத்துச் சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தாது இருக்கும் வரை ஆண் எழுதினால் என்ன, பெண் எழுதினால் என்ன எல்லாம் ஒன்றுதான்; விமர்சனங்கள் வாசகர் நோக்கினைப் பொறுத்தது.

கண்டன விமர்சனக்களுக்குள்ளாகின்ற ‘பெண் எழுத்து’க்களை (உதாரணம் எல்லாம் இங்கு எடுத்துச் சொல்லவில்லை,) எடுத்துப் பார்த்தால், அவை அவ்வாறு விமர்சனங்களுக்குள்ளாவதற்குப் படைப்பாளியின் பின்னணிதான் முக்கிய காரணமாக இருக்கும்; குடும்பம், நாடு, சமயம் மற்றும் கலாச்சாரம் என்று எத்தனையோ காரணிகளை அளவு கோலாகக் கொண்டு விமர்சனங்கள் வந்திருக்கும். இங்கு உண்மையில் எழுத்து விமர்சனத்துக்குள்ளாவதை விட படைப்பாளியே விமர்சனத்துக்குள்ளாகுகிறார்.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் விமர்சனத்துள்ளானாலும் சிலருக்குப் ‘பிரபல எழுத்தாளர்’ என்கிற அந்தஸ்து பிற்காலத்தில் தன்னால் அமைந்து விடுகிறது. கால மாற்றம் என்கிற ஒன்றும் காலத்துக்கேற்ப மக்கள் நம் மனது மாறுவது என்கிற ஒன்றும் கூட இருக்கிறது. இது எழுத்துக்கு என்று மட்டும் அல்லாமல் அனைத்திற்குமே பொருந்தும் இல்லையா? நாமும் மாறிவிடுவோம், தினமும் எம்மை அறியாமல் மாறிக்கொண்டேதானே இருக்கிறோம்.

இப்படித்தான் எழுத வேண்டும் என்று  தடை போடவேண்டாம் என்றே தோன்றுகிறது. ஒவ்வொருவரும் தனி மனிதர்; தனித்துவமானவர். ரசனை, சிந்தனைப் போக்கு அனைத்தும் வேறுபட்டிருக்கும். கருத்தும் எழுத்தும் சுயமாக ஒரு ஊற்றுப் போல் வர வேண்டும். அதில் தான் தனித்துவம் வெளிப்படும்.

ஒவ்வொருவருக்கும் தம் எண்ணத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம் இருக்க வேண்டும். படிக்கவும், பாராட்டவும் விமர்சிக்கவும் எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. விமர்சியுங்கள், அங்கிருந்து படைப்பாளி தனக்குத் தேவையானதைத் தெரிந்து கொள்வார்.

எழுதிவர் யாரென்பதை விடுத்து படைப்பை மட்டும் பார்ப்போம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நான் முதல்முதலில் படித்த ‘பெண் எழுத்து’, ‘பூஜைக்கு வந்த மலர்’, ஈழத்து மூத்த பெண் எழுத்தாளர் எனது மதிப்பிற்குரிய தமிழ்மணி கலாபூஷணம் திருமதி. ந. பாலேஸ்வரி அவர்கள் எழுதியது. மீண்டும் படிக்க விரும்பித் தேடுகிறேன். பூஜைக்கு வந்த மலரை பா. பாலேஸ்வரி என்கிற பெயரில் எழுதி இருப்பார்கள்; அப்போது அவர்களுக்கு மணமாகி இருக்கவில்லை.
வாணி, நிலா, அதிரா, அனாமிகா, அம்முலு... யாராவது உதவுவீர்களா?
நாவலைப் படித்து முடித்து திருப்பிக் கொடுத்தபோது கேட்டார்கள்.. வளர்ந்து நான் எழுத்தாளராக வருவேனாவென்று. எங்கே! ஆசிரியப் பெற்றோர்க்குப் பிறந்த இமா இப்படித்தான் இருக்கவேண்டும் என்கிற மற்றவர்கள் எதிர்பார்ப்பு ஒன்று இருந்ததே, தயக்கத்தில் எழுதினதெல்லாம் குப்பத்தொட்டிக்கே போய்விட்டது. ஒரு புனைபெயரின் பின்னால் மறைந்து கொள்ளலாம் என்று அப்போது தோன்றவில்லை. ;( எல்லாவற்றுக்கும் ஒரு காலம் வர வேண்டும் இல்லையா! ;)
தற்போது என்னிடம் இருப்பது ஆசிரியையின் இந்த ஒரு நூல் மட்டும்தான். மீதியையும் சேகரிக்க முயற்சிக்கிறேன்.


என் தாயாருக்கும் மாமியாருக்கும் சக ஆசிரியை என்கிற விதத்தில் திருமதி. பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கம் அவர்களோடு நட்பு இருந்தது. மூவருமே பாடசாலையில் என் தமிழ் ஆசிரியர்கள். கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து இம்முறை திருகோணமலைக்குச் சென்றிருந்த போது அவரைச் சந்தித்தேன். அவர் வீட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இது.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திருமதி. ந. பாலேஸ்வரி அவர்கள் எழுதிய
சுடர் விளக்கு -
http://noolaham.net/project/11/1011/1011.pdf
தத்தை விடு தூது -
http://www.noolaham.net/project/04/373/373.htm



நன்றி நிரூபன்

37 comments:

  1. //என் எழுத்தும் பெண் எழுத்தானாலும் எழுத்து என்கிற ரீதியில் சேர்க்க இயலாத எழுத்து. ;)//

    அப்டிலாம் இல்லை டீச்சர் எல்லாரும் எப்போ அ ஆ எழுத ஆரம்பிக்கிறோமோ அப்போவே எழுத்தாளர் ஆகியாகிவிட்டது.வயதாக இலக்கண இலக்கியங்கள் படித்தபின் வருவது படிப்பெழுத்து இதில் நீங்கள் எந்த சுவாரஸ்யங்களையும் எதிர்பார்க்கமுடியாது அசோகர் மரம் நட்டார் அசோகரால் மரம் நடப்பட்டது என்பது மாதிரியானது. அதற்குபின் வேலை விஷயங்களுக்காக எழுதப்படும் எழுத்து அலுவல் எழுத்து இதில் ஃப்ரம் டூவை தவிர்த்து வேறு எதுவும் ம்ஹ்ஹும் ! முதன் முதலாக அப்பாவுக்கோ அம்மாவுக்கோ காதலிக்கோ எழுதப்படும் கடிதத்தில் , அன்றாட நிகழ்வுகளை எழுதி வைக்கும் டைரியில் , பலசரக்கு மளிகை லிஸ்டில், வண்ணார் கணக்கில், இவற்றில் ஆரம்பிக்கிறது தன்னிச்சையான எழுத்து.அவரவற்கென்ற தனிப்பட்ட கையெழுத்தில் உருவாகும் இந்த எழுத்துக்கள் மட்டுமே எழுத்து. மற்ற இலக்கிய இதிகாச கதை கவிதை கட்டுரை நாவல் போன்ற எழுத்துக்கள் கற்பனா சக்தியுடையோருக்கு வருவது இவை எழுத்துக்கள் ஆகாது படைப்புகள் என்றழைக்கலாம் . தன் உணர்ச்சிகள் , அனுபவங்கள் , அன்றாடம் பார்க்கும் நிகழ்வுகளை எழுதுபவர்களின் எழுத்து கிறுக்கல் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.எழுத்தாளர் என்பவர் சமூகத்தை பிரதிபலிக்க வேண்டும் என்ற குறுகிய விதியை உடைத்தெறிந்ததுதான் வலைத்தளம்.இங்கேயும் தான் ஒரு மிகச்சிறந்த எழுத்தாளன் என்று பீற்றிக்கொள்பவர்கள் அதிகம் அவர்களுக்கு துதிபாடவும் ஒரு கூட்டம் அவர்கள் க்ன்னா வைத்தாலும் ஆஹா ஓஹோ க்ளாஸ் என்று அடித்துவிடப்படும் கருத்துக்கள் எல்லாம் இருக்கிறது.உண்மையான எழுத்தாளினி (என்ன பார்க்குறீங்க பெண் எழுத்தாம்ல)சலனமில்லாமல் செல்லும் நதிபோன்று இருப்பவர்கள் உங்களைப்போல .

    ReplyDelete
  2. //கண்டன விமர்சனக்களுக்குள்ளாகின்ற ‘பெண் எழுத்து’க்களை (உதாரணம் எல்லாம் இங்கு எடுத்துச் சொல்லவில்லை,) எடுத்துப் பார்த்தால், அவை அவ்வாறு விமர்சனங்களுக்குள்ளாவதற்குப் படைப்பாளியின் பின்னணிதான் முக்கிய காரணமாக இருக்கும்; குடும்பம், நாடு, சமயம் மற்றும் கலாச்சாரம் என்று எத்தனையோ காரணிகளை அளவு கோலாகக் கொண்டு விமர்சனங்கள் வந்திருக்கும். இங்கு உண்மையில் எழுத்து விமர்சனத்துக்குள்ளாவதை விட படைப்பாளியே விமர்சனத்துக்குள்ளாகுகிறார்.//

    கிகிகி இதெல்லாம் ஜர்வ ஜாதரணம் டீச்சர் கவிதையோ கட்டுரையோ எழுதினால் அதில் அந்த படைப்பாளியை பொருத்திப்பார்ப்பதுபோன்ற மட்டமான செயலைவிட இது ஒன்றும் பெரிதல்ல!!

    ReplyDelete
  3. //எழுதிவர் யாரென்பதை விடுத்து படைப்பை மட்டும் பார்ப்போம்.//

    நிச்சயம் இதை ஆமோதிக்கிறேன் ஆமென் :))

    ReplyDelete
  4. உங்க ஸ்டூண்ட்டா இருக்கிறதால உரிமை எடுத்துக்கொண்டு என் கருத்துக்களை சொல்லிவிட்டேன் டீச்சர் :)

    கையில இத்தன மோதிரம் போட்ருக்கீங்க பாவம் உங்ககிட்ட குட்டு வாங்கற பசங்க :)) மீ எஸ்கேப்பு

    ReplyDelete
  5. கருத்துக்கு நன்றி வசந்த். ;) ராத்திரி முழுக்க தூங்காம முழிச்சு இருந்து இருக்கீங்க. ;)

    ReplyDelete
  6. ம்ஹ்ஹும் இங்க இப்போதான் இரவு 10 இது நான் டைப்புறப்போ மாலை 7 கிகிகி :)) உங்களுக்கு விடியல் எங்களுக்கு இரவு :)

    ReplyDelete
  7. ஐ.... பொன்னான பெண் எழுத்தைத் தொடர்ந்தமைக்கு நன்றி இமா.

    //விமர்சனங்கள் வாசகர் நோக்கினைப் பொறுத்தது.
    // 100 வீதம் உண்மையே. “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”.

    அடிக்கடி மறைச்சு மறைச்சு எழுதிறீங்க.... ஆராவது பார்த்து கொப்பியடிச்சிடுவினமோ என்ற பயமோ?:)).

    உதவிக்கு என்னை அழைத்திருக்கிறீங்க.

    சென்னையில ஒரு பழைய புத்தகக் கடை இருக்காமே... அங்கு இல்லாத புத்தகமே இல்லையாமே... என் கணவர் அதை எப்பவும் சொல்லிச் சொல்லிப் புகழ்வார்... தாம் தேடிய ஒரு ஆங்கில நாவல் அங்குதான் மேலே ஏணி வைத்து ஏறி ஒரு பறணில் எடுத்து வந்து தந்தார்களாம்..

    நீங்க போனநேரம் தேடியிருக்கலாம்.(இலங்கைப் புத்தகம் அங்கு கிடைக்காதோ????). ம்ம்ம் நான் மனதில் போட்டுவைத்திருக்கிறேன் முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  8. //க்ன்னா வைத்தாலும்// லைட் பத்தீட்டுது வசந்த். ;)))

    டீச்சர்!! ம்.. லீவு நாள்லயாச்சும் நினைக்காம இருக்கலாம்னு பாக்குறேன், விட மாட்டேங்கறீங்க. ரெண்டு வாரத்துக்கு டீச்சர் என்று கூப்பிடத் தடை போடுறேன். ;)

    //குட்டு// ;)) அதெல்லாம் கிடையாது. ரொம்ப முடியாம படுத்தினா... இன்னொரு டெக்னிக் வச்சு இருந்தேன், பக்கத்துல இருக்கிறவங்களுக்குக் கூட தெரியவராது. ;) ரெண்டு வாரம் முன்னால ஒரு எஞ்சினீயர் மாணவர் சாட் வந்தார். இப்பவும் அப்புடியேதான் குழப்படி மாணவர்களை ட்ரீட் பண்ணுவீங்களான்னு கேட்டு ஷாக் ஆக வச்சுட்டார். ;)) இப்ப இருக்கிற ஸ்கூல்ல புதுசா வேற சில டெக்னிக் புடிச்சு வச்சு இருக்கேன், சொல்ல மாட்டேன். ;)

    ReplyDelete
  9. //உங்களுக்கு விடியல் எங்களுக்கு இரவு// அது தெரிந்துதான் சொன்னேன். ;)

    ReplyDelete
  10. //கொப்பியடிச்சிடுவினமோ என்ற பயமோ?// இல்ல அதீஸ். அது உபகதை போல இருந்துது, அதுதான் அப்பிடி. நிலாதான் பார்ப்பாவோ தெரியேல்ல.

    //இலங்கைப் புத்தகம் அங்கு கிடைக்காதோ?// நீங்கள் சொன்ன மாதிரிக் கடை எண்டால் கிடைக்கும் சாத்தியம் இருக்கிறது. சென்னையில இருந்து வந்த பிறகு.. ;((
    //ஏணி வைத்து ஏறி// ;)) அதுக்கு இமா அங்கதான் போக வேணுமோ!!!

    எங்க அச்சடிச்சாங்கள் என்று தெரியேல்ல. வீரகேசரிக்கு எழுதிக் கேப்பம் என்று நினச்சு இருக்கிறன். இலங்கையில எங்க பழையதெல்லாம் இருக்கப் போகிறது. ஊர்ல நான் எதிர்பார்த்துப் போன புத்தகக்கடையைக் காணோம். ;( கனக்கப் பிரதிகள் அடிச்சு இருக்க மாட்டினம் என்று நினைக்கிறன், பார்ப்பம். ஆசிரியரைக் கேட்டுக் கரைச்சல் படுத்த விரும்பேல்ல. ஒன்றும் சரிவராட்டில் கேட்பம்.

    நீங்களும் மனசில வச்சுக் கொள்ளுங்கோ, நன்றி.

    ReplyDelete
  11. எழுதிவர் யாரென்பதை விடுத்து படைப்பை மட்டும் பார்ப்போம்.
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~/
    ம் கருத்தை ஆமோதிக்கிறேன் ...
    கமெண்ட் போடகூட எனக்கு தெரியவில்லை ...:)

    ReplyDelete
  12. //எழுதிவர் யாரென்பதை விடுத்து படைப்பை மட்டும் பார்ப்போம்..

    மிகச்சரியே இமாக்கா

    ReplyDelete
  13. அழகா எழுதிருக்கீங்க இமா.
    //உண்மையில் எழுத்து விமர்சனத்துக்குள்ளாவதை விட படைப்பாளியே விமர்சனத்துக்குள்ளாகுகிறார்.//
    ஆமாம்.

    ReplyDelete
  14. எழுதிவர் யாரென்பதை விடுத்து படைப்பை மட்டும் பார்ப்போம்.//
    Yes. i agree with this.
    நீங்கள் அடுத்த முறை சென்னை போகும்போது ,திருவல்லிக்கேணி சென்று பாருங்கள் .அங்கே நிறைய புத்தக கடை இருக்கும் .(new/old)
    முன்பெல்லாம் நான் சின்ன பாப்பவ இருக்கும்போது மூர் மார்க்கெட்டில்
    நிறைய புக்ஸ் கிடைக்கும் .

    ReplyDelete
  15. //எழுதிவர் யாரென்பதை விடுத்து படைப்பை மட்டும் பார்ப்போம்.// சரியாக சொல்லி இருக்கீங்க இமா.என்ன எங்கள் பக்கம் ஆளை காணவில்லை???

    ReplyDelete
  16. அருமையா சொல்லி இருக்கீங்க! பிரதாப முதலியார் சரித்திரம் படித்திருக்கிறேன். நல்ல நகைச்சுவையோட இருக்கும்.

    ReplyDelete
  17. இம்ஸ்ஸ், எதுக்கும் 2012 க்குள் தேடிக் கண்டு பிடிச்சிருங்க புத்தகத்தை:).

    ReplyDelete
  18. ? ஹைஷ் சொல்ற மாதிரி நாள் கணக்கா!!

    ReplyDelete
  19. எழுதிவர் யாரென்பதை விடுத்து படைப்பை மட்டும் பார்ப்போம்.//

    உங்களது இக் கருத்துக்களோடு நானும் உடன்படுகிறேன். படைப்பாளியினை விடுத்து, காத்திரமான படைப்புக்களின் தன்மை பற்றி நாம் அலசும் போது தான் அவை அப் படைப்பாளியை மேலும் மேலும் பட்டை தீட்டிப் பல வெற்றிகரமான படைப்புக்களை வழங்க உதவும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  20. சகோதரி, எழுத்தாளர், நா.பாலேஸ்வரியின் படைப்புக்களை இந்த லிங்கில் சென்று நீங்கள் பார்க்கலாம்.

    http://noolaham.net/project/11/1011/1011.pdf

    http://www.noolaham.net/project/04/373/373.htm

    சுடர் விளக்கு, தத்தை விடு தூது எனும் இரண்டு சிறுகதை நூல்களை இந்த லிங்கில் இணைத்திருக்கிறார்கள்.

    ReplyDelete
  21. தயக்கத்தில் எழுதினதெல்லாம் குப்பத்தொட்டிக்கே போய்விட்டது//

    எம்மையறியாமல் நாம் செய்யும் இத் தவறுகள் தான் எங்கள் எண்ணங்களை முடக்கும் செயற்பாடுகளாய் அமைந்து விடுகின்றன. ஆனாலும் இன்று வலைப் பூவில் ஒரு சுதந்திரமான எழுத்தாளராக நீங்கள் ஆகியிருக்கிறீர்கள் என்பதினை நினைக்கையில் மகிழ்ச்சி.

    பெண் எழுத்துப் பற்றி ஒட்டியும், ஒட்டாமலும் பொதுவான நோக்கில் அலசியிருக்கிறீர்கள்.
    விமர்சனங்களையும் மூத்த எழுத்தாளர் ஒருவரின் நூலினையும் குறிப்பிட்டு ஆக்கத்தை பதிவினை முடித்து விட்டீர்கள்.

    பதிவின் உள்ளே, இன்றைய பெண் எழுத்தின் காத்திரத் தன்மை, பெண் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரங்கள் எனப் பல விடயங்களை அலசியிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் சகோ.

    ReplyDelete
  22. சிவா, ஜலீ, ஏஞ்சலின், ஹுஸைன், ஸாதிகா (வந்தேன். ;) ), இலா அனைவருக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  23. இமாவின் உலகத்தைத் தொடர்கிறீர்கள் நிரூபன், நன்றி. ;)

    சுடர்விளக்கு, தத்தைவிடு தூது இரண்டுமே என்னிடம் இருந்தன. நாடு விட்டு நாடு வந்து மீண்டும் போய்ப் பார்க்கையில் எதுவும் மீதம் இல்லை. ;( தொடர்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி. இடுகையிலும் இணைத்துவிடுகிறேன்.

    இவற்றைப் புத்தகங்களாகப் பெற வழி இருக்கிறதா? இங்குள்ள வாசிகசாலையில் ஈழத்து எழுத்தாளர் படைப்புக்கள் வெகு சிலவே உள்ளன. இருப்பவை கூட சமீபகாலத்தவை தான். நூலுருவிற் கிடைத்தால் பலரும் பயனடையும் விதத்தில் வாசிகசாலையில் சேர்ப்பித்து விடலாம். உதவ இயலுமா!

    //பதிவின் உள்ளே, இன்றைய பெண் எழுத்தின் காத்திரத் தன்மை, பெண் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரங்கள் எனப் பல விடயங்களை அலசியிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்// கருத்துக்கு நன்றி. வெகு சுருக்கமாகவே முடித்து விட்டேன் இல்லையா!

    நிரூபனுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.. 'பெண் எழுத்து' தொடரைத் தொடர இதுவரை நான் யாரையும் அழைக்கவில்லை. உங்களை அழைக்கிறேன், இயலுமானால் தொடருங்கள். தொடர்ந்தால் மகிழ்ச்சி.

    அன்புடன்
    இமா

    ReplyDelete
  24. இமா said..//


    நிரூபனுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.. 'பெண் எழுத்து' தொடரைத் தொடர இதுவரை நான் யாரையும் அழைக்கவில்லை. உங்களை அழைக்கிறேன், இயலுமானால் தொடருங்கள். தொடர்ந்தால் மகிழ்ச்சி.//

    வாயைக் கொடுத்து, வம்பை விலைக்கு வாங்கிறது இது தானா....
    சகோதரி, தற்போது உடனடியாக எழுத நேரம் இல்லை.. அத்தோடு ஏற்கனவே பல பதிவுகளைத் தொடர் பதிவுகளாக்கி பாகம் ஒன்றினை மட்டும் வெளியிட்டு விட்டு, ஏனையவற்றை எழுத நேரம் இல்லாமல் வாசகர்களைக் காக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக எழுதுவேன், ஒரு சில வாரங்களின் ஆனால் ஒரு சில வாரங்களின் பின்னர் தான். தங்களின் அழைப்பிற்கு மிகுந்த நன்றிகள்.

    ReplyDelete
  25. இமா said...

    //இவற்றைப் புத்தகங்களாகப் பெற வழி இருக்கிறதா? இங்குள்ள வாசிகசாலையில் ஈழத்து எழுத்தாளர் படைப்புக்கள் வெகு சிலவே உள்ளன. இருப்பவை கூட சமீபகாலத்தவை தான். நூலுருவிற் கிடைத்தால் பலரும் பயனடையும் விதத்தில் வாசிகசாலையில் சேர்ப்பித்து விடலாம். உதவ இயலுமா!//

    கடல் கடந்தும் தமிழ் வளர்க்கிறீர்கள், வாசிக சாலைகளில் எங்களூர் மொழியிற்கும் அங்கீகாரம் இருக்கிறது என்பதை நினைக்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப் புத்தகங்கள் எந்தப் புத்தகக் கடையில் தற்போது விற்பனையில் உள்ளன என்று தெரியாது. ஆனால் இவற்றினை வாங்கிய பின்னர் கண்டிப்பாக உங்களைட் தொடர்பு கொள்கிறேன்.

    ReplyDelete
  26. நிரூபன்.. //வாயைக் கொடுத்து, வம்பை விலைக்கு வாங்கிறது // ;))) அதெல்லாம் கிடையாது. சொன்னேனே, எழுதியாக வேண்டும் என்று எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்பதை. ;) எழுத உங்களிடம் விடயம் இருக்கும் என்று தோன்றிற்று. //கண்டிப்பாக எழுதுவேன்// அது போதும். மிக்க நன்றி. மெதுவே எழுதுங்கள்.

    புத்தகங்கள் பற்றி... ;) மிக்க நன்றி.

    ReplyDelete
  27. இமா.. படிக்கும் போதே நிறைவாக இருந்தது.. தெளிவாகச் சொல்லியிருக்கீங்க.. நேத்தே படிச்சேன்..

    //ஒவ்வொருவருக்கும் தம் எண்ணத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம் இருக்க வேண்டும். படிக்கவும், பாராட்டவும் விமர்சிக்கவும் எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. விமர்சியுங்கள், அங்கிருந்து படைப்பாளி தனக்குத் தேவையானதைத் தெரிந்து கொள்வார்.//

    நன்றி..

    ReplyDelete
  28. //படிக்கும் போதே நிறைவாக இருந்தது.// க்ர்ர் ;( பொய் சொல்லக் கூடாது பாப்பா. ;)
    //தெளிவாகச் சொல்லியிருக்கீங்க.// நீங்களாவது உண்மையைச் சொல்லுவீங்கள் எண்டு பார்த்தன். ;(

    ஒரு தடங்கல் சந்தூஸ்.. அதீஸ்ட்ட லீவ் சொல்லி இருந்தேன். பிறகும் நாள் கடந்து கொண்டு போனதால எப்பிடியோ போட்டு முடிச்சாச்சுது. பெருசாத் திருப்தியாக இருக்கேல்ல. ;( எழுத்துப் பற்றி மட்டும் இல்லாமல் வேற சில விஷயங்களும் சொல்ல இருந்தனான். விடுபட்டுப் போச்சுது. பரவாயில்ல. இன்னொரு நேரம் எங்கயாவது சொல்லீரலாம்.

    நன்றி சொல்லி இருக்கிறீங்கள்! குழப்பமா இருக்கு. ;))

    ReplyDelete
  29. நன்றி சொன்னது ஒத்த கருத்து என்பதால.. குழம்பப் படாது :)

    இமா.. உண்மையிலேயே நல்லா இருந்தது.. நம்புங்க..

    ReplyDelete
  30. பலவற்றை சரியாகச் சொல்லி உள்ளீர்கள்...

    திருமதி பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கம் அவர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

    ReplyDelete
  31. உப்புமா விடம் கேட்டால் சில சமையம் கிடைக்கலாம் :-)

    ReplyDelete
  32. நல்ல வேளை இந்த பிளாகுக்கு பூட்டு இல்லை ஹி..ஹி...:-))))))))))))))))))))))))))))

    ReplyDelete
    Replies
    1. வெகு காலத்திற்குப் பின்பு வந்திருக்கிறீர்கள். _()_.
      எப்போதும் பூட்டுப் போட மாட்டேன் ஜெய். கமண்ட் மாடரேஷன் இருக்கிறது. அது போதும்.

      அது என்ன உப்புமா!! :-)

      Delete
    2. Meee Imaa :) இங்குள்ள லைப்ரரியில் இவரதுபுத்தகத்தை சமீபத்தில் பார்த்த நினைவு ...
      @ஜெய் தோசை உப்புமா தானே :)

      Delete
  33. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : கலைச்செல்வி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கிராமத்துக் கருவாச்சி

    வலைச்சர தள இணைப்பு : இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி!!!

    ReplyDelete
  34. நீங்கள் சொல்வது உ ண்மை தான் இமா நன்றாகவே எழுதியுள்ளீர்கள் குப்பை தொட்டியில் போடாதீர்கள் சரியா!
    தொடர வாழ்த்துக்கள்....!
    திருமதி பாலேஸ்வரி நல்லரெட்னசிங்கம் அவர்களின் ஆன்ம சாந்தி யடைய வேண்டுகிறேன்.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா