Monday, 18 August 2014

அதிர்வலைகள்

சில காலம் முன்பு ஒரு பெண்குழந்தைக்கு ஏற்பட்ட விபத்து பரவலாக எல்லா இடங்களிலும் அதிர்ச்சி அலைகளைத் தோற்றுவித்திருந்தது.

அதற்கு முன்னால்...
சமீபத்தில் பாடசாலையில் ஒரு விடயம்  கற்பிக்க நேர்ந்தது. ஒவ்வொரு வருடமும் பாடத்திட்டத்தில் வரும் விடயம்தான்.

புத்தகத்தில் கார்ட்டூன் ஒன்று இருக்கும். ஒரு குளம்... ஒரு குழந்தை... அது தொப்பென்று ஒரு குட்டிக் கல்லை குளத்துள் போடும். கல் விழுந்த இடத்தில் நீரில் சின்னதாக ஒரு குழிவு... பிறகு ஒரு சிறிய வட்டம்... அது பெரிதாகி... இன்னொன்று... மற்றுமொன்று இன்னும் பெரிதாக என்று ஏராளமான வட்ட அலைகள், அதிர்வலைகள்... தொடர்ந்து கண்ணுக்குத் தெரியாது போகும் வரை அலைகள் பரவிப் போகும். Ripples of LOVE.

இந்தக் குழந்தையின் விபத்தும் சமுதாயத்தில் அதிர்வலைகளைத் தோற்றுவித்திருந்தாலும்... என்னவோ ஒன்று நெருடலாக என் மனதில் பட்டது. 

அவை அன்பின் அதிர்வலைகளல்ல. கரிசனத்தின் அதிர்வலைகளைப் போலத் தோன்றின. ஆனாலும் முகநூல் மற்றும் பல இடங்களில் என் பார்வையில் பட்ட பதிவுகளும் அவற்றின் பின் தொடர்ந்திருந்த கருத்துகளும் சற்று நெருடுடலாக இருந்தன. நாம் எதிர்மாறான அதிர்வலைகளைத் தோற்றுவிக்கிறோமா!

நடந்த கொடுமையை விமர்சிக்க யாருக்கும் உரிமை இருக்கிறது; விமர்னம்... தனிமனித உரிமை என்று கொண்டாலும் கூட... தீர்ப்புக் கூற யாருக்கு உரிமை இருக்கிறது!!

அவனை வெட்ட வேண்டும். அடித்துக் கொல்ல வேண்டும், தூக்கில் போட வேண்டும்... இதை விட பல மேலான கருத்துக்களும் கண்ணில் பட்டன. அப்போது வலியோடு ஒரு எண்ணம் தோன்றிற்று.... இப்படி நினைத்த கணமே... இப்படியான எண்ணங்களை ஆதரிக்கும் கணமே நாமும் குற்றமிழைக்கவில்லையா! முகம் தெரியாத அந்தக் குற்றவாளிக்கும் எமக்கும் என்ன வேறுபாடு!!

இப்படியான அதிர்வலைகளைப் பரப்புவது நன்மையா! அது மீண்டும் சுழன்று வந்து எம்மையே தாக்காதா!

ஒரு செபம் இருக்கிறது. அதில் வரும் வரிகள்... 'என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன்,' என்று. இது மதப் பிரச்சாரம் அல்ல. மனிதப் பிரச்சாரமும் அல்ல. இமாவின் சுய பரிசோதனை.

என் குடும்பத்தில் யாருக்காவது தீங்கு நிகழ்ந்தாலும் கூட... அந்த வலியில் எதிராளியை மன்னிக்கும் மனப்பக்குவம் என்னிடம் இல்லாமல் போனாலும் கூட... திரும்பத் தாக்கத் தோன்றாத மனதை எப்பொழுதும் போல எனக்குக் கொடு இறையே!

10 comments:

 1. "தன்னை போல் பிறரையும் நேசி" - அழகான சொற்கள், இதை மானிடர் யாவரும் கடைபிடிக்க முயன்றாலே போதுமே...

  ReplyDelete
 2. வணக்கம்
  அம்மா
  நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள் கல்லும் குளமும் பற்றி எழுதிய கருத்தாடல் சிறப்பாக உள்ளது சொல்ல வேண்டியகருத்தை நச் என்று சொல்லி விட்டீர்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. என் குடும்பத்தில் யாருக்காவது தீங்கு நிகழ்ந்தாலும் கூட... அந்த வலியில் எதிராளியை மன்னிக்கும் மனப்பக்குவம் என்னிடம் இல்லாமல் போனாலும் கூட... திரும்பத் தாக்கத் தோன்றாத மனதை எப்பொழுதும் பொல எனக்குக் கொடு இறையே! //

  மனதை தொட்டன..இமா...!!!

  ReplyDelete
 4. எதிரியை மன்னிக்கும் மனப்பக்குவம் எல்லோருக்கும் வாய்ப்பது இல்லை! அப்படி வாய்த்தால் உலகம் சுகப்படும்! நல்ல பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 5. உங்கள் மென்மையான மனதிற்கு சான்றாய் இந்த பதிவு:)
  உங்களுக்கு என்றும் நன்றே நடக்கட்டும் தோழி:)

  ReplyDelete
 6. எதிராளியையும் மன்னிக்கும் மனப்பக்குவத்தை இறைவனிடம் வேண்டும், தங்களின் குணம்
  போற்றுதலுக்கு உரியது சகோதரியாரே

  ReplyDelete
 7. தண்டனை ஒரு போதும் தீர்வாகாதுதான். ஆனால் அந்த அளவிற்கு மனப்பக்குவமிருந்தால் எந்தப் பிரச்சனையுமே தோன்றாதே...

  ReplyDelete
 8. அன்பு இமா!
  நலமாக இருக்கின்றீர்களா?

  உங்களின் இந்தப் பதிவு என் டாஷ்போர்டில் ஏனோ காட்டவில்லை.
  தற்சமயம் தேடி வந்து கண்டு கொண்டேன்...:)

  ”அதிர்வலைகள்” அழகாகச் சொன்னீர்கள்.
  உங்கள் கருத்தை மறுப்பதற்கில்லை. ஆயினும்
  என் மனநிலையில் - உங்களவிற்கு இன்னும் பக்குவப்படவில்லையோ நான் தெரியவில்லை – கேள்விப்பட்ட மாத்திரத்தில் கொதித்தது எண்ணங்களும் இதயமும்…
  பலனாய்ப் புறப்பட்டன கணையாக வார்த்தைகள்!
  விறுவிறுப்பு என்பது விளைந்த விபரீதத்தைப் பொறுத்தே என்பது என் கணக்கு!

  அநீதியை அழிக்க அமைதியான வேண்டுதல் இதுவும் நல்லதுதான்!
  நன்றியுடன் வாழ்த்துக்கள் இமா!

  ReplyDelete
 9. ம்ம்ம் ..உங்கள் நல்ல மனது புரிகிறது இமா ..ஆனா உலகம் அவ்வளவு நல்ல இடமில்லை .
  ஒரு RABID நாயைகூட அடிக்கவோ இல்லை எந்த உயிரையும் கொல்லவோ அல்லது euthanasia செய்யவோ விரும்பாத மனம் தான் என்னுடையதும் ..அந்த சிறு பெண் என்ன பாவம் செய்தாள் ?இனி வாழ்நாளெல்லாம் நரகம் தானே ...
  அந்த பெற்றோர் எவ்வளவு வேதனையில் இன்னும் இருப்பாங்க :( அந்த சிந்தனை மட்டுமே எனக்கு இருந்தது ...

  அந்த பிள்ளை எனதாக இருந்தால் என்றில்லை யார் பிள்ளையாக இருந்தாலும் நானும் உணர்ச்சிவசப்படுவேன் ...
  நம்மை ஒரு எறும்பு கடிச்சா சும்மா விடுவோமா ? இல்லை கடிக்கிற கொசுவுக்கு கையை காட்டிக்கிட்டுதான் இருப்போமா .
  அதைதான் கோபமாக வெளிபடுத்தினார்கள் பலர் .

  .//தனிமனித உரிமை என்று கொண்டாலும் கூட... தீர்ப்புக் கூற யாருக்கு உரிமை இருக்கிறது!!// எந்த ஒரு உயிரையும் எடுக்க நமக்கு உரிமையில்லை ..இறைவனிடம் வேண்டுவோம் உலகம் நல்லவர்களால் மட்டும் நிரம்பி வழியட்டும் அப்போது ஓநாய்களுக்கு இந்த உலகில் இடமிருக்காது
  ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா