Tuesday, 26 December 2017

செரிப்பழங்கள்

இந்த நொடி... என் சிந்தனையில் ஒலிக்கிறது சித்ராவின் இனிய‌ குரலில், "ஐஸ் க்ரீம் கடையில் செரிப்பழம் இருப்பது அரை நொடி வாழ்க்கையடா!" என்கிற‌ வரிகள்.

வாழ்க்கை கூட‌ அப்படித்தான். ஒரு நொடி அழகு; மறு நொடி அழுகை.

இந்த‌ வருடம் ஆரம்பம் முதல் இதுவரை, இந்தத் தத்துவம் சுத்தியலால் ஒவ்வொரு அடி வாங்கும் போதும் ஆணி சற்று ஆளமாக‌ உள்ளே இறங்குமே, அப்படி இறங்கிக் கொண்டே இருக்கிறது.

செபா மருத்துவமனையிலிருந்த‌ சமயம், காலை வரை பிரயாசையுடன் என்றாலும் நடந்து குளியலறை வரை சென்ற‌ வயதான‌ பெண்மணி பதினொரு மணியளவில் வந்து குழுமிய‌ உறவினர் கூட்டத்துடன் பேசியபடி அமைதியாகக் கண் மூடினார். எதிர்க் கட்டிலிலிருந்து மெதுவே நிகழ்வுகளைக் கவனித்தபடி இருந்தோம் நாம். மெதுவே உறவுகள் கலைந்து போய் அனுமதிக்க‌, வைத்தியசாலை ஊழியர்கள் அவரை அறையிலிருந்து வெளியே எடுத்துப் போனார்கள். படுக்கை சுத்தம் செய்யப்பட்டு அடுத்த‌ நோயாளியை ஏற்கத் தயாராகிற்று.

என் பெற்றோர்களுக்காக‌ ஓய்வு இல்லத்தில் அனுமதிக்கான‌ பத்திரங்களை நிரப்பிய‌ வண்ணம் இருந்த‌ சமயம், அந்த‌ அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. "நீங்கள் உள்ளேயே இருங்கள். ஒருவரை வெளியே எடுத்துப் போகப் போவதாகத் தெரிகிறது," என்றார் அலுவலர். இம்முறை அவரது அறை - ஓரிரண்டு நாட்களில் இன்னொருவரை அனுமதிக்கத் தயாராகி இருக்கும் என்னும் நினைப்பு வந்தது.

ஐப்பசி 18ம் தேதி - அம்மா பிரிந்ததும் அவரை பார்லருக்கு எடுத்துப் போயாயிற்று. குளிர் அறையில் அவர் அமைதியாகத் துயில் கொள்ள‌, நாம் பிரிவுபசார‌ வேலைகளில் மும்முரமானோம். பத்தொன்பது... இருபது... கிட்டத்தட்ட‌ இருபது பேர், அந்த இல்லத்தில் இணைய அறைகளுக்காகக் காத்திருப்பது நினைவை உறுத்தியது. அட்டைப் பெட்டிகள் எடுத்துப் போய் உடமைகள் எல்லாவற்றையும் அடுக்கி, அறையைக் காலி செய்து கொடுத்தோம். மருத்துவமனையால் இரவலாகக் கொடுக்கப்பட்டிருந்த‌ குளியல் நாற்காலி, நடை வண்டி, ஒட்சிசன் இயந்திரம் எல்லாவற்றையும் உரியவர்களுடன் தொடர்பு கொண்டு திருப்பியாயிற்று. (இவை இன்னொருவர் பயன்பாட்டுக்காக அனுப்பப்பட்டுவிடும்.) ஒரு வாரம் கழித்து இறுதிச் சடங்குகள் முடிந்து போய்ப் பார்க்க‌, அந்த‌ அறை அடுத்தவரை வரவேற்கத் தயாராக‌ இருந்தது. இபோது இன்னொரு பெண்மணி அங்கு குடியிருக்கிறார். இந்த‌ அறைக்கு வரும் எவரும் குணமாகி வீடு திரும்புவது  கிடையாது என்பது கசப்பான‌ உண்மை.

முப்பத்தோராம் நாள் காரியம் ஆகி மெதுவே மனது வேலைகளில் ஈடுபட‌ முனைகையில் ஊரில் குடும்பத்தினர் இல்லத்தில் சடுதியாக‌ ஒன்றன்பின் ஒன்றாக‌ இரு இழப்புகள்.

விடுமுறையைத் தனியாக‌ வீட்டில் கழிக்க‌ இயலுமென்கிற‌ தைரியம் இருக்கவில்லை. ஒரு சிறு பயணம் கிளம்பினோம்.  தோட்டமொன்றில் பழம் பிடுங்கப் போனோம்.  அங்கும் செரிப்பழங்கள் -
கொத்துக் கொத்தாக சிவப்பும் கருஞ்சிவப்புமாக செரிப்பழங்கள் - நாம் பறித்தவற்றுக்கு அரை நாள் தான் வாழ்க்கை. :-) இந்தப் படத்திற்கு இங்கு சில நாட்கள் தான் வாழ்க்கை. பிறகு காணாமல் போய் விடும். :-)

மார்கழி 26 வந்தால் சுனாமி எண்ணங்கள் வராது இராது. எம் உறவுகள் எழுவரை இழந்த தினம்.

பூவுலகை  விட்டுப்  பிரிந்து போன அனைத்து ஆன்மாக்களுக்காகவும் என் பிரார்த்தனைகள்.

18 comments:

 1. எனது பிரார்த்தனைகளும். பிரிவு - ரொம்பவே வாட்டம் தரக்கூடியது. என்றாலும் வாழ்க்கையை கடந்து தானே ஆக வேண்டியிருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் வெங்கட். அந்த‌ முயற்சி தான் நான் இங்கு மீண்டும் இடுகைகள் பதிவிடுவது. இனி நோ சோக‌ கீதம். :‍) என் மூடைப் பொறுத்து எல்லாம் கலந்து வரும்.

   Delete
 2. நினைவுகளே வாழ்க்கை!...
  அதன் சுவடுகள் நெஞ்சில் ஆழப்பதிந்திருக்கும்.
  நீங்கள் எழுத எனக்கும் அந்தச் சுவடுகளின் அழுத்தம் இதோ கழுத்துவரை வந்து நெருடுகிறது.
  கக்கிவிட வேண்டாமென விழுங்கிக் கொள்கின்றேன் இமா!

  சில சமயம் இழப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து நிகழும்போது மனம்படும் வேதனை சொல்லிற்கடங்காது.
  எனது பிரார்த்தனைகளும்...!

  ReplyDelete
  Replies
  1. //கக்கிவிட வேண்டாமென விழுங்கிக் கொள்கின்றேன்// நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறோம். என் எண்ணம்... அடக்கி வைக்கக் கூடாது என்பது. முன்பு அடக்கி வைத்து, பல‌ வருடங்கள் கழித்து சிகிச்சைக்கெல்லாம் போய் வந்திருக்கிறேன். அடக்கி வைக்காமல் சிரித்துக் கொண்டே வெளியே கொட்ட‌ ஆரம்பித்தபின் என் ஆரோக்கியம் மேம்பட்டதைக் குடும்பத்தில் எல்லோருமே உணர்ந்திருக்கிறார்கள். இப்போது கவலை இல்லை, நினைவு வந்தால் மட்டும் வெளிப்படுத்தி விடுகிறேன். ஆனால் அது உங்களை மீண்டும் பின்னோக்கி அழைத்துப் போகிறது என்றால் இங்கு என் போக்கை மாற்ற‌ வேண்டும் நான். மெதுவே எல்லோரும் வெளியே வரலாம் இளமதி. உங்களுக்கு என் அன்பு என்றும்.

   Delete
 3. நீங்கள் ஜெபா அன்ரி பற்றிச் சொல்லும்போது எனக்கு எங்கள் அப்பாவின் நினைவே வருகிறது... நான் உடனே மனதை வேறு பக்கம் டைவேர்ட் ஆக்கிடுவேன்.. இல்லையெனில் அதுக்குள்ளேயே மூழ்கி, கண்கள் கண்ணீர் மல்கியவணம் இருக்கும்... கடசி நேரங்களை எப்பவும் திரும்ப நினைத்துப் பார்க்க முடியாது:(..

  ReplyDelete
  Replies
  1. //கடசி நேரங்களை எப்பவும் திரும்ப நினைத்துப் பார்க்க முடியாது// :‍) மம்மி எனக்கு அதைச் சந்தோஷமான‌ விஷயமாகத் தந்திருக்கிறா அதீஸ். ஸ்டைலாக‌ உடுத்தி சந்தோஷமான‌ தெளிவான‌ கதை, முகத்தில‌ வடிவான‌ சிரிப்பு, கையில‌ பென் பேப்பர்... இதுதான் நினைவுக்கு வருது. அவ‌ கொஞ்சம் வித்தியாசமான‌ பொம்பிளையா இருந்திருக்கிறா. இனிமேல் நான் வேற‌ போஸ்ட் போடுவன். இப்ப‌ என் சின்னவர் இதை வாசிக்கிற‌ மாதிரி இருக்கு. எனக்குப் பிறகு அவைக்கு என்னைப் பற்றித் தெரிய‌ ஒரு பப்ளிக் டயறி எண்டு எழுதி வைக்கிறன் நான். மம்மி போன‌ பிறகுதான் தம்பி வீட்டாருக்கு அவ‌ ப்ளொக் வைச்சிருந்தது தெரியும். எனக்கே அப்ப‌ தான் அவ‌ ஃபெஸ்ட் அப்பொய்ன்மன்ட் கோட்டைமுனை எண்டு தெரியவந்துது. இடைக்கிடை என்னவாவது இடிபாடாக‌ எழுதினால், கஷ்டமா இருந்தால் வாசிக்காதைங்கோ. நான் குறை எண்ண‌ மாட்டேன்.

   Delete
 4. ஒரு பழம்கூடக் கடிக்க முடியவில்லையே இமாவால ஹா ஹா ஹா.. கொஞ்சம் குண்டாகிட்டீங்களோ இமா?:)

  ReplyDelete
  Replies
  1. நிறைய‌. :‍) ஒரு வருஷமா சாப்பாட்டைக் கவனிக்கேல்ல‌, வயசு + ஸ்ட்ரெஸ் வேற‌. இனிப்பு நல்லாச் சாப்பிட்டுட்டன். 8 கிலோ கூடியிருக்கிறன். என்ர‌ உயரத்துக்கு இது சரியான‌ கனக்க‌. இப்ப‌ சாப்பாட்டைக் கவனிச்சாலும் ஓடினாலும் குறையாமல் அப்பிடியே நிக்குது. கூடாமல் இருக்கிற‌ வரைக்கும் சந்தோஷம் என்று இருக்கிறன். :‍) செபா எனக்கு அடுத்த‌ சைஸ். கிஃப்ட்டாக் கிடைச்ச‌ நிறைய‌ நல்ல‌ உடுப்புகள் வைச்சிருந்தவ‌. பிரச்சினையில்லாமல் போகுது அதீஸ். ;D

   Delete
 5. இவ்வருடம் உண்மையில் துயரம் தோய்ந்த வருடமாக எனக்கும் அமைந்துவிட்டது. வருட ஆரம்பத்திலே இழப்பு.. இப்போ இம்மாதம் அடுத்தடுத்து 3 தொடர் இழப்பு. இடையிலும் தான்.
  என்ன செய்வது எல்லாவற்றையும் மனதை ஏற்க செய்ய பழக்கவேண்டியிருக்கு..கூடவே கஷ்டமாவும்.

  ReplyDelete
  Replies
  1. //எல்லாவற்றையும் மனதை ஏற்க செய்ய பழக்கவேண்டியிருக்கு..கூடவே கஷ்டமாவும்.// ஆமாம் ப்ரியா. ஏற்றுக் கொண்டு, அதைச் சுமந்து கொண்டே கடக்கலாம். மெதுவே கனம் குறையும். எல்லோரும் கைகோர்த்துக் கொண்டு ஒன்றாக‌ வெளியே வருவோம். நீங்களும் நேரம் கிடைக்கேக்க‌ எழுதுங்கோ.

   Delete
 6. புரிகிறது இமா ..எனக்கே இன்னும் அப்பா அம்மாவை மறக்க முடியலை .பழைய படங்கள் தஹ்வாரி பார்த்தாலும் நினைவுகள் தீயாய் சுடும் .இந்த உலகத்தில் எதுவும் நிரந்தரமில்லை .
  கொஞ்சம் நாளைக்கு அந்த ஒய்வு இல்லம் பக்கம் பிரயாணம் செய்யாதீங்க ..
  சுனாமியால் மறைந்த ஆருயிர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள் மற்றும் பிரார்த்தனைகள்

  ReplyDelete
  Replies
  1. பழைய படங்கள் //தஹ்வாரி // தவறி

   Delete
  2. //கொஞ்சம் நாளைக்கு அந்த ஒய்வு இல்லம் பக்கம் பிரயாணம் செய்யாதீங்க ..// :‍) இப்பதான் அடிக்கடி போக‌ வேண்டிய‌ நேரம் ஏஞ்சல். அப்பா பாவம். அவருக்கு எங்கட‌ ஆறுதல் தேவை. வீட்ட‌ ஒரு கிழமை இருந்தார். பிறகு இங்க‌ தனிமையா இருக்காம்; போகப் போறன் எண்டார். அங்க‌ அவருக்கு நிறைய‌ ஃப்ரெண்ட்ஸ் இருக்கினம். நானும் அங்க‌ போய்ப் போய் இன்னும் சிலரை ஃப்ரெண்ட் பிடிச்சு வைச்சிருக்கிறன். அவங்களுக்காகவும் நான் போக‌ வேணும். டடா இல்லாட்டியும் அங்க‌ அடிக்கடி போவன் எண்டு நினைக்கிறன். அங்கத்தைய‌ நல்ல‌ விஷயங்களைப் பற்றி இங்க‌ எழுத‌ வேணும்.

   Delete
 7. ஆவ் !செரிஸ் :) எனக்கும் பிடிக்கும் . ஒருமுறை விதையை எடுத்து ஊருக்கு அனுப்பலாம்னு வெட்டி பார்த்தா பழத்தின் உள்ளே நெளிந்து கொண்டிருக்கு ஒரு உயிர் :) ஸோ சைவம்னு நினைச்சாலும் உள்ளே ஒரு அசைவம் உக்காந்திருப்பதால் இப்படி டைரக்டா கடிக்க மாட்டேன்

  ReplyDelete
  Replies
  1. ;)))) அது சும்மா படத்துக்கு மட்டும் ஏஞ்சல்.

   இங்கு பராமரிக்கும் விதத்தைப் பார்க்க‌, அசைவம் இராது என்று தோன்றுகிறது.

   Delete
 8. சிலர் மறக்கச் சொல்லுகினம். மறக்க‌ ஏலாது. என் நம்பிக்கை... அதோட‌ வாழ்ந்து மெதுவா வெளிய‌ வாறது தான் ஆரோக்கியத்துக்கு நல்லது. நான் சந்தோஷமா இருக்கிறன். இடைக்கிடை தான் மனம் ஜிங்ஜிங் எண்டுது.

  இனி தொடர்ந்து இப்பிடி போஸ்ட் போடாம‌ இருக்கிறது என்று மட்டும் நினைச்சிருக்கிறன். உங்களை எல்லாம் திரும்பத் திரும்பக் கஷ்டத்துக்குள்ளாக்குகிற‌ மாதிரி இருக்கு. எனக்காக‌ இல்லாட்டியும் உங்களுக்காக‌ வேற‌ மாதிரி போஸ்ட் வரும். ;D

  ReplyDelete
  Replies
  1. இல்லை இமா .. மனம் லேசாகுது என்றால் ..உங்கள் விருப்பப்படி எழுதுங்க ..எதுக்கு சொல்றேன்னா சோகம் அடக்கி வைக்கப்படும்போது எதோ ஒரு தருணத்தில் படாரென வெடிப்பது நல்லதில்லை .எனக்கும் அப்பா போன தருணத்தில் டிப்ரஷன் வந்தது அது பல சைட் எப்பெக்ட்ஸ் எல்லாம் வந்து கிராப்டில் மைண்ட் செலுத்தி சரியாச்சு ..அதனால் feel free to share your feelings .so you dont have the weight of them on your shoulders.
   டடாவும் அங்கே யா அப்போ அங்கே போய் எல்லா முதிய குழந்தைகளுடனும் பழகிட்டு வாங்க அவங்க சந்தோஷப்படும்போது அது நமக்கொரு பிளெஸ்ஸிங் .மனதுக்கும் நிறைவை தரும்

   Delete
  2. //அவங்க சந்தோஷப்படும்போது அது நமக்கொரு பிளெஸ்ஸிங் .மனதுக்கும் நிறைவை தரும்.// This is true. I also have learnt a lot about life from them.

   Delete