Wednesday 12 October 2016

இடம் வலம்

ஊரில், எங்கள் வீட்டின் பின்பக்கம் ஒரு கலியாண மண்டபம் இருந்தது. அதை எதற்காகக் கலியாண மண்டபம் என்றார்கள் என்பது எனக்குத் தெரியாது. எந்தக் கலியாணமும் அங்கு நடந்ததாக நினைவில்லை. ஒரு சில பொது நிகழ்ச்சிகள், சில பொருட்காட்சிகள் நடந்திருக்கின்றன.

முன்பு பனங்காடாக அழகாக இருந்த பூமி அது. நிறைய வாகை மரங்கள், அவை நிறைய பொன்வண்டுகள், விதம் விதமான மரங்கள், ஒரு கிணறு... அதன் விசேஷம்... அந்த நீரில் சமைத்தால் சாதம் சிவப்பாக வேகுமாம். அயலில் மீதிக் கிணறுகள் வற்றிப் போக, இது மட்டும் வற்றாது இருக்கும்.

ஒரு பெரிய கால்வாய் ஓடும். அதில் மீன்கள்... அருகே ஒரு இலவமரம். நான் கண்ட முதல் இலவ மரம் அது. காயைக் கொண்டுவந்து வீட்டில் காட்ட, அம்மா 'இலவு காத்த கிளி' பற்றிச் சொல்லிக் கொடுத்தார்.

அந்த இலவமரத்திற்குச் சொந்தக்காரர் ஒரு சிங்களக் குடும்பத்தினர். அவர்களைப் பற்றித் தனியாக எழுதவேண்டும். அருமையான மனிதர்கள். எங்கே இருக்கிறார்களோ தெரியவில்லை.

கலியாண மண்டபம்... இன்னும் பூரணப்படுத்தப்படாமல் தான் நிற்கிறது என்று நினைக்கிறேன்.

முன்பு அங்கு பசுக்கள் உறங்கும். சனி ஞாயிறு - கையில் ஒரு வாளியும் இரண்டு தகரங்களும் எடுத்துப் போய் என் தோட்டத்திற்கு எரு சேகரித்து வருவேன்.

பல தடவை இங்கே round up (என் பையன், 'சுற்று மேலே' என்பார்.) நடந்திருக்கிறது. பல முகமூடிகள், தலையாட்டிகள், பிடிபட்ட அப்பாவிகள் அவர்கள் குடும்பத்தார் கண்ணீரையெல்லாம் கண்ட இடம்.

ஒரு சமயம்.... ஒரு தொகுதி நரிக்குறவர் வந்து தங்கியிருந்தார்கள். எல்லாம் இருந்தும், இல்லாததை எண்ணுவோம் நாம். அவர்கள் இருப்பதோடு சந்தோஷமாக வாழத் தெரிந்தவர்களாக இருந்தார்கள். தேங்கியிருக்கும் மழைநீரில் குழந்தைகளைக் குளிப்பாட்டி, தூண்களிடையே தூளியமைத்துத் தூங்க வைத்து, அருகேயே அடுப்பெரித்து... அவர்கள் வாழ்க்கையை அவதானிக்கக் கிடைத்தது... ஒரு வித்தியாசமான சினிமா பார்த்த அனுபவம்.

சில காலம் அங்கு IPKF முகாமும் இருந்தது. அப்போதான் முதல் முதலாக சப்பாத்தியை நேரில் கண்டேன். அது மட்டுமல்ல - டால்ட்டா டப்பா, மொச்சைக் கடலை, அமுல் டப்பா எல்லாம் எங்கள் வீட்டிலும் புழக்கத்திற்கு வந்தது. பண்டமாற்றாக... மின்சாரம், இஸ்திரிப் பெட்டி அங்கு போயிற்று.

நான் கற்பித்த பாடசாலை சற்றுத் தள்ளி இருந்தது. இல்ல விளையாட்டுப் போட்டிக்குத் தயார் செய்யும் சமயம் எங்கள் இல்லத்தோர் (காவேரி - இலங்கைக்கே வந்துவிட்டது.) இங்கு வந்து பயிற்சி எடுப்போம்.

ஒரு சனிக்கிழமை காலை - பெரிதாக left, right, left, right, about turn என்று சத்தம் கேட்க, வேலியின் மேலாக எட்டிப் பார்த்தோம். தனியாக ஒரு சிறுமி நடை பழகிக் கொண்டிருந்தார். ;) எட்டு அல்லது ஒன்பது வயது இருக்கும். பிறகு இது பல வாரவிடுமுறைகள் தொடர்ந்தது. சிறுமி தனக்குத் தானே ஆணை பிறப்பிக்கும் சத்தம் கேட்டதும் என் அம்மா, " ம்... தனிநபர் மாச்பாஸ்ட் ஆரம்பம்," என்பார். :-)


இது... இங்கு நான் கற்பிக்கும் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ஒரு மாக்பையின் தனிநபர் மாச்பாஸ்ட். :-) எங்களூர்க் காக்கை இவர்.

6 comments:

  1. வற்றாத நீரூற்றைக்கொண்ட அழகிய கிணறு கொண்ட பூமிகள் உருமாறிப்போய் மார்ச் பாஸ்ட்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன,,,./

    ReplyDelete
  2. கருப்பும் வெள்ளையும் கலந்த காக்கையா... அரிதாக இருப்பதால் எடுக்கப்பட்ட புகைப்படமோ.. இல்ல இலங்கையில் காக்கை இந்த கலரில்தான் உள்ளதா. கருப்பு காக்கைதான் இதுவரை பார்த்திருக்கிறேன் இமா....:)

    ReplyDelete
    Replies
    1. //அரிதாக இருப்பதால் எடுக்கப்பட்ட புகைப்படமோ.// இங்கு இவை அரிதானவை அல்ல ராதா. ஆனால் இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ளது போன்று அதிக எண்ணிக்கையில் காணக் கிடைக்காது.

      //இலங்கையில் காக்கை இந்த கலரில்தான் உள்ளதா// இலங்கைக் காக்கைகள் இந்தியாவிலுள்ள அதே அண்டங்காக்கைகளும் அரிசிக் காக்கைகளும்தான்.

      மாக்பைகள் உண்மையில் அவுஸ்திரேலியக் காக்கைகள். இலங்கை, இந்தியக் காக்கைகள் போன்ற கருப்புக் காக்கைகள் இங்கு இல்லை. நியூஸிலாந்திற்கு மட்டும் உரியவை என்றால், அவை பறக்காத தரைப் பறவைகள்தான்.

      காக்கை இனத்தில் மாக்பை தவிர ரேவன், க்ரவன் என்றும் இருக்கின்றன. க்ரவன் ஒன்றின் புகைப்படம் எங்கோ இருக்கிறது. கண்ணில் பட்டதும் இங்கு இணைக்கிறேன்.

      Delete
  3. நினைவுகளைப் பின்னோக்கி அழைத்துச்சென்ற மேக்பையாருக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.. :)))

    ReplyDelete
  4. இனிய நினைவுகள்.
    இங்கு ஆப்பிரிக்காவில் உள்ள காக்கைகள் கழுத்துப்பகுதியில் வெள்ளை நிறத்துடன் காணப்படும்

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா