Thursday, 26 January 2017

ஹலோ!

சென்ற வாரம் க்றிஸ்ஸுடன் நேப்பியர் சென்றிருந்தேன். 'எங்கெல்லாம் போகலாம்?' என்று விபரம் தேடிய வேளை கண்ணில் பட்டது ஒரு farm zoo பற்றிய விளம்பரம். பெரும்பாலும் எல்லாம் ஏற்கனவே கண்ட பிராணிகளாகத் தான் இருக்கப் போகிறது. புதிதாக எதுவும் இருக்கப் போவதில்லை. இருந்தாலும் ரசிக்கக் கூடிய இடம் என்பதால் போகலாம் என்று முடிவு செய்தோம்.

தீனி என்று ஒரு பிளாத்திக்குக் கிண்ணத்தில் சோளவிதைகள் கிடைத்தன. ஒரு போத்தல் பாலும் வாங்கிக் கொண்டோம்.


ஆரம்பத்திலேயே செம்மறிக் கன்றுக்கும் பாலூட்டும் வேலையை முடித்து அனுப்பிடுவது அங்கு வேலைக்கிருந்த இளம்பெண்களுக்கு சுலபமாகத் தெரிந்திருக்க வேண்டும். ஒருவர் மற்றவரிடம் பொறுப்பை ஒப்படைக்க, அவர் வந்து அடைப்பிலிருந்த  கன்று ஒன்றின் (குட்டியா!) கழுத்தில் நாடாவை மாட்டி வெளியே அழைத்து வந்தார். பால் போத்தலைக் கண்டதுமே உள்ளே இருந்த மூவர், நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு முன்னே வர, ஒருவருக்கு மட்டும் சந்தர்ப்பம் கிடைத்தது. (பிறகு இவரை அதே அடைப்பில் விடாமல் வேறு இடத்திற்கு மாற்றிவிட்டார்கள்.)
பெரும் அவாவோடு என் கையிலிருந்ததைப் பிடுங்காத குறையாக உறிஞ்ச ஆரம்பித்தார் குட்டியர். 

ஆட்கள் கொஞ்சம் பலசாலிகள் போல. என்னை இரண்டு கைகளாலும் போத்தலை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளச் சொன்னார் அந்தப் பெண். பால் முடியும் முன்பே பறித்துக் கொள்ளச் சொல்லிவிட்டார். காற்றை உள்ளே எடுத்துக் கொள்ளுவாராம். குட்டியர் போகப் பிரியமில்லாமல் போனார்.
பெரிய ஆடுகள் வேலிக்கு மேல் எட்டிப் பார்த்தன.
  
எனக்கு கையில் உணவு கொடுக்கும் எண்ணம் இருக்கவில்லை. ட்ரிக்ஸியும் ட்ரேஸியும் உலர்ந்த உதட்டுப் பெண்கள். என் கையிலிருந்து பட்டும் படாமலும் மெதுவே எடுப்பார்கள். ஈர வாய்க்காரர்களுக்கு க்றிஸ் கொடுக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.  :-)
அடுத்து இருந்த merino பெண் கொஞ்சம் கெஞ்சுவதாகப் பட்டது. எப்படியோ என் மனதைக் கவர்ந்துவிட்டார். கையில் தீனை வைத்து நீட்ட, பொறுக்கிக் கொண்டு கரக் முரக் என்று கடித்துச் சாப்பிட்டார்.
தடவி விடச் சொல்லிக் கழுத்தை நீட்டினார் இன்னொருவர். எனக்கு வீட்டில் விட்டுப் போன சின்னப் பெண்களின் எண்ணம் வந்துவிட்டது. :-) அதன் பின், தொடர்ந்து இருந்த ஆடுகளுக்கெல்லாம் தீன் கொடுத்தேன்.

ஆங்காங்கே தங்களுக்கு வசதியாக வேலைக் கம்பியை நெளித்து வைத்திருக்கிறார்கள் பெரும்பாலானோர். பன்றிகளுக்குத் தீன் கொடுக்க வேண்டாம் என்று எச்சரித்திருந்தார்கள். ஒரு பன்றிக்குட்டி ஆவேசமாகக் கம்பியை நெளித்துக் கொண்டு பாதைக்கு ஓடிவந்தது. கினிக்கோழிகளும் உள்ளேயும் வெளியேயுமாக ஓடித் திரிந்தன.

இவர் சார்லட் - 6 கால்ப் பெண்மணி. கொஞ்சம் அருகே வரத் தயங்கினார். 'பலர் இவரது ஐந்தாவது, ஆறாவது கால்களைப் பிடித்து விளையாடியிருக்க வேண்டும்,' என்று தோன்றிற்று.

இங்கு எல்லாமே வெகு மலிவாகத் தோன்றிற்று எனக்கு. எப்படிப் பராமரிப்பு வேலைகளைச் சமாளிக்கிறார்களோ என்று யோசித்தேன். பெரும்பாலானவர்கள் தாங்களே மனமுவந்து வேலை செய்வதாகத் தெரிந்தது. உணவுக்கும் பராமரிப்புக்கும் கூட அவர்கள் வாங்கும் பணம் போதுமாவெனத் தெரியவில்லை.
 
ஈமுக்கள் - எத்தனை அழகாக அமர்ந்திருக்கிறார்கள் பாருங்கள். தரையிலிருந்து உணவைப் பொறுக்கும் போதும் ஒரு நளினம் தெரிந்தது. :-) இவர்களது முட்டை - ஓடு மட்டும் ஒன்று வாங்கி வந்தேன். செதுக்கு வேலை செய்து பார்ப்பதாக எண்ணம். அதற்குள் உடைந்துவிடாமல் இருக்க வேண்டும். :-)
குதிரை ஏற ஒரு போதும் கிடைத்ததில்லை. ஆசைப்பட்டேன். அன்று காலை எழும்போது முகம் சற்று அதைத்து இருந்தது. இந்த விடுமுறையில் இது அடிக்கடி நிகழ்கிறது. காரணம் கண்டுபிடிக்க இயலவில்லை. அதனால் க்றிஸ் வேண்டாமென்றதை அரை மனதாக ஏற்றுக் கொண்டு முடிவிடத்திற்குப் போனோம். 

கை கழுவ Hand wash இருந்தது. க்றிஸ் கொண்டு சென்ற காப்பியை ஊற்றி உறிஞ்ச ஆரம்பித்தார். நான் என் பங்கைக் கிண்ணத்தில் ஊற்றி ஆற விட்டுவிட்டுத் திரும்ப, எதிரில் பெரிய பெரிய கூடுகள் தென்பட்டன. ஒன்றில், 'உள்ளே விரல்களை விட வேண்டாம்,' என்னும் வாசகம் தெரிந்தது. அதன் பின்னே.... சின்னதாக ஒரு தலை.
அருகே போய்ப் பார்க்க ஹிமாலயன் உப்பை நினைவுபடுத்துவது போன்ற நிறத்தில் கிளியார் ஒருவர்.
'ஹலோ!' என்றேன். அசையாமல் நின்றார். தொடர்ந்து, 'ஹலோ!' சொல்ல - மெதுவே தலையை அசைத்து ஏற்றுக் கொண்டார். 

நான் அடுத்து இருந்த கூட்டை நெருங்கும் சமயம் யாரோ, 'ஹலோ! என்பது போல் கேட்டது. யாரையும் காணோம். நான் புதிய கிளிகளைத் தேடிப் போனேன். அவை அருகே வரவேயில்லை. என்னோடு கோபித்த மாதிரி தூரவே நின்றார்கள். 

மீண்டும், 'ஹலோ!' ஹிமாலயன் ஆள்தான் கூப்பிட்டிருப்பாரோ! நான் அருகே அத்தனை நேரம் நின்றும் பேசாதவர் இப்போ பேசுகிறாரா! கிட்டப் போனேன். அருகே வந்து நின்றுகொண்டார். மீண்டும் நான் - 'ஹலோ!' ஆமோதிப்பது போல் தலை மேலும் கீழும் அசைந்தது. நான்கு முறை, 'ஹலோ!' சொல்லிவிட்டு அடுத்த கூட்டுக்கு நகர்ந்தேன். உடனே ஹிமாலயன் கூப்பிட்டார், 'ஹலோ!' இம்முறை குரல் சற்று அழுத்தமாக வந்தது. மீண்டும் அருகே சென்றேன். நான்கைந்து ஹலோ சொல்லிவிட்டுக் கிளம்ப... 'ஹலோஓ!! ;D எட்டிப் பார்க்கிறார். அவரோடு மட்டும் பேச வேண்டுமாம்.
கடைசியாக சில நிமிடங்களை அவரோடு கழித்து விட்டுப் பிரிய மனம் இல்லாமல் கிளம்பினேன். 
சின்னச் சின்ன உயிர்களுக்குள்ளும் ஆசாபாசங்கள் இருக்கின்றன.

15 comments:

  1. இமா,

    ஹிமாலயா ஆள்தான் பாவமா இருக்கார். கூண்டு இல்லயா அப்படித்தான் தெரியும்.

    வந்த புதுசுல இங்கு நான்கூட பள்ளியில் பாப்பா வகுப்போடு(1st grade) ஒரு ஃபார்ம்க்கு போயிருக்கேன், நாங்க போன நேரம் மயில் ஒன்று செம ஆட்டம் போட்டது, மேலும் அன்றைக்குத்தான் முதன்முதலாக அதன் குரலைக் கேட்டு மயங்கிப்போனேன் :))

    ReplyDelete
    Replies
    1. முடிந்தவரை குட்டீஸோடு போங்க. சாதரணமாகக் கிடைக்க முடியாத தகவல்களெல்லாம் கிடைக்கும். பொதுமக்களுக்குத் திறக்கப்படாத அறைகளெல்லாம் மாணவர்களுக்கு விசேடமாகக் காட்டுவார்கள்.

      Delete
    2. இமா,

      பாப்பாவோட ஐந்தாம் வகுப்புவரை ஒன்னு விடாம எல்லா ஃபீல்ட் ட்ரிப்புக்கும் நிறைய இடங்கள் போயிருக்கேன். ஆறுக்குமேல நான் போகல. மிஸ் பண்ணிட்டேன். இப்போ காலேஜ் முடிக்கப் போறாங்க :)

      Delete
  2. உண்மைதான் சகோதரியாரே
    எத்துனைச் சிறிய உயிராக இருந்தாலும் அதற்கென்று தனித் தனியே ஆசாபாசங்கள் இருக்கத்தான் செய்கின்றன
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், எறும்பு போன்ற குட்டி ஜீவராசிகளும் இது போல் சிந்திக்குமோ என்று யோசிக்கத் தோன்றுகிறது.

      கருத்துக்கு நன்றி ஜெயகுமார்.

      Delete
  3. அழகிய படங்கள்... நல்லதொரு அனுபவம் உங்களுக்கு....

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அங்கு பார்த்த எல்லாவற்றையும் புகைப்படம் எடுக்கவில்லை. என் பொழுது ரசிப்பதிலேயே போய் விட்டது. கிடைத்த படங்கள் கொணர்ந்த நினைவுகளை மட்டும் இங்கே பகிர்ந்திருக்கிறேன். மிக்க நன்றி. :-)

      Delete
  4. நேப்பியர்ல குண்டுக்குண்டா ஆடுகள் வச்சிருக்கினம்போல, குளிர் இல்லாத இடம் போல இருக்கு இமா.

    ///பிளாத்திக்குக்//// அம்மம்மா வை நினைவு படுத்துறீங்க:)

    ReplyDelete
    Replies
    1. இங்க ஆடுகள் குறைவு அதீஸ். குண்டா இருக்கிறவை செம்மறிகள்.

      //அம்மம்மா வை// நான் அந்த அளவு கிழவி இல்லை. ;D

      Delete
    2. ஹா ஹா ஹா .. அது வந்து இமா.. அம்மம்மா சுவீட் 16 ல இருக்கும்போதும் உப்பூடித்தான் சொன்னவ எனச் சொன்னேனாக்கும்..:)

      Delete
  5. அழகோ அழகு . ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சிவகுமாரன்..

      Delete
  6. நன்றி தனபாலன். :-)

    ReplyDelete
  7. அனைத்து ஜீவன்களும் மானசீகமாக பேசுவதாக தோன்றுகின்றது இமா

    ReplyDelete
  8. ம்ம் நல்ல இடம் .இம்ஸ் நானும் இப்பிடி ஒருக்கா பிரான்ஸ் ல பெரிய ஃபாம் க்கு போகேக்க பழங்கள் எம்புட்டு வேணுமானாலும் சாப்பிடலாம் வெளிய கொண்டுவாரதுக்கு மட்டும் சரியான மலிவான காசு பே பண்ண வேணும்.மற்றது அவையள் விக்கிற எல்லாமே விலை குறைவாயும் இருந்தது உங்களை மாதிரியே அதே கேள்வி எனக்குள்ளயும் அப்பறம் பாத்தா அங்க யாருமே சம்பளத்துக்கு வேலை செய்யுறது கிடையாது .ஒரு ஃபாம் வச்சிருக்கினம் நிரப்பி குடுத்து வெயிட் பண்ணினா நாங்கள் கூட பிரீ டைம் ல இந்த இடத்தில வேலை செய்யலாம்.பிறவு கவர்மண்ட் ம் இவைக்கு பே பண்ணும் .இங்க ஃபாம் காணி வாங்கி ஆடு ,கோழி வளக்கிற ஆக்கள் ப்ராப்பட்டி டக்ஸ் கட்ட தேவையில்ல தெரியுமோ .இப்பிடியான விஷயத்தை ஊக்குவிக்கிறதுக்காகத்தான்.பிறவு அனிமல்ஸ் பிரியர்கள் டொனேஷன் ம் குடுப்பினம்.இப்ப விளங்கிச்சோ.நீங்களும் பதிஞ்சு வேலை செய்யுங்கோ .பறவைகள் எல்லாம் சந்தோச படுவினம்

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா