Wednesday 4 October 2017

இடையில்

எப்போ எது என் சுவாசத்தைக் குழப்பி வைக்கும் என்பதை முன் கூட்டியே அறிந்து கொள்ள இயலாததால் கையோடு அட்டோமைசரைக் கொண்டு உலாவுவேன்.  இடையில் மாட்டும் பை மிக வசதி; நடக்கும் போதும் கைக்கெட்டும் தூரத்தத்தில் இருக்கும்.

சென்ற தவணை புதிதாக ஆசிரியை ஒருவர் எங்களோடு வந்து இணைந்திருந்தார். திங்களன்று மட்டும் வேலை, அதுவும் 4 பாடங்கள் மட்டும். காலை இடைவேளையில் சந்திப்போம். சற்று வயதானவர். எதனாலோ என்னைப் பிடித்திருந்தது.

ஆ!! இப்போது நினைவுக்கு வந்து விட்டது. :-)

சென்ற விடுமுறையில் பாடசாலை ஆசிரியர் அறையைப் புதுப்பித்திருந்தார்கள். பழைய சமையல் மேடையை நீக்கி விட்டு புதிதாக நடுவில் ஒரு மேசை (island) அமைத்திருக்கிறார்கள்.

அந்தத் தீவு பற்றிய விபரம் - நீளவாட்டில் பாத்திரங்களுக்கும் கத்தி, கரண்டிகளுக்குமாக இழுப்பறைகள் உள்ளன. இரு புறமும் ஒவ்வொரு சிறிய குளிரூட்டி, ஒரு மைக்ரோவேவ் குக்கர், டோஸ்டர் போன்றவற்றை வைக்க ஒரு இழுப்பறை. மேசை நடுவில் (நட்ட நடுவில்) சின்னதாக ஒரு குழாய். ("குளாய் இஸ் நாட் எ வர்ட் ஆன்டி," என்று ஒரு அசரீரி என் காதில் ஒலித்து சரியாக எழுதவைத்தது. அந்த நட்புக்கு  நன்றி. :-) )

தட்டையான தொட்டியும் மெல்லிய குழாயும் இருக்கும் அந்த வடிகட்டி அமைப்புக்கு இரண்டு அழுத்திகள் - ஒன்று கொதிநீர் வரவைக்கும்; ஒன்று குளிர் நீர் வரவைக்கும். இதிலிருந்துதான் தேநீர், கோப்பிக்கு (உப கதை கீழே)  கொதிநீர் எடுக்க வேண்டும். எம்பி, கையை நீ....ட்டி எடுக்கும் போது பருகும் ஆசையே கெட்டுவிடுகிறது. ;(

உபகதை -  இலங்கைக் கடைக்குப் போனோம் இன்று. அங்கு போனால் எனக்கு இருக்கும் தமிழும் மறந்து போகும். அத்தனை அருமையாக இருக்கும் ஒவ்வொரு தயாரிப்பாளரும் தம் பொருட்களில் கொடுத்திருக்கும் விபரங்கள். கோபி, திணை மா, விதம் விதமான 'பொறியள்'களோடு  'என்னை போட்ட கீரமீன்' கூட விற்பனைக்கு இருந்தது. ஹும்!  ஆறாம் கட்டளைக்கு விரோதமான பாவம்  எல்லாம் மனிதக் கொலைகளுக்கு மட்டும் தான் பொருந்துமா!! ;)

மைக்ரோவேவ் மறைவான இடத்திலிருக்கிறது. மேற்பார்வையாளர்களுக்கு தெரியவராது; என்னைப் போல் 'உயர்ந்த' மனிதர்கள் கண்ணிற்கு மட்டும் தெரியும். :-) தோழி தேடும் முன் ஒரு ஊகத்தில் இடம் காட்டி உதவினேன். பின்பு ஒரு சமயம் - வீட்டில் கொடித்தோடம்பழங்கள் காய்த்துக் குலுங்கிய சமயம் (என் பெரும் பொழுது செபாவுடன் கழிந்த சமயம்) நேரப்பற்றாக்குறை காரணமாக என்னால் பயன்படுத்த முடியாதிருந்தது. வீடு வீடாக விநியோகிக்கும் நிலையிலும் நான் இல்லை. தினமும் பாடசாலைக்கு கூடையில் எடுத்துப் போய் ஆசிரியர் கூடத்தில் வைத்து விடுவேன். கூடவே சில ப்ளாத்திக்குப் பைகளை வைத்துவிட்டால் அவரவர் தம் தேவைக்கு பையில் போட்டு எடுத்துப் போவார்கள். தோழியும் கொஞ்சம் வீட்டுக்குக் கொண்டு போவார். பாடசாலைக்கு மட்டும் கிட்டத்தட்ட 500 பழங்கள் எடுத்துப் போயிருப்பேன். ஒற்றைக் கொடியிலிருந்து கிடைத்த விளைச்சல் அத்தனையும்.

ஒரு நாள் இலையைச் சமைப்பது பற்றிப் பேச்சு வந்தது. மறு வாரம் கொடித்தோடைக் கீரை சம்பல் செய்து, அதைத் தனியே கொடுக்க இயலாததால் கூடவே சோறு, மரக்கறி என்று கட்டி எடுத்துப் போனேன். தோழி என்னோடு நெருக்கமாகிவிட்டார்.
~~~~
இடையில் மாட்டியிருந்த என் பையைப் பார்த்ததும், தன்னிடமும் தன் முன்னாள் கணவரது பழைய பை  ஒன்று இருப்பதாகவும் அதன் ஸிப் சிக்கிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்.

"நடுவில் பேனையால் குத்திப் பாருங்களேன்," என்றேன்.

"அது பித்தளை சிப், செழும்பு பிடித்திருப்பதால் சரிவராது," என்றார்.

"கொண்டுவந்தால் திருத்திக் கொடுப்பேன்," என்றேன்.

தொடர்ந்து வந்த திங்கள் மறந்திருந்தார். அதன் மறுவாரம் கொண்டுவந்து கொடுத்தார். உடனே என்னால் எதுவும் செய்ய முடியவிலை.

வீட்டிற்கு வந்து இழுத்துப் பார்க்க, வரவில்லை. ;(

குளியலறைக் குப்பைத் தொட்டியிலிருந்து தேய்ந்து போன சவர்க்காரத் துண்டை எடுத்து வந்தேன். ஓர் திரைப்படம் பார்த்துக் கொண்டே திறந்திருந்த ஸிப் கொக்கிகள் அனைத்திலும் தேய்த்தேன். பிறகு ஸிப் கைபிடியைப் பிடித்து அசைத்துக் கொண்டே இருக்க, வழிவிட்டது.

உள்ளே $15, 3 பேனைகள், லிப்ஸ்டிக், க்ளிப் 2. :-) அனைத்தையும் வெளியே எடுத்து வைத்துவிட்டு பையைக் கழுவி உலர விட்டு புதிதாக்கி எடுத்துப் போனேன்.

11 comments:

  1. ஆஹா இன்று இப்போதுதானே கொம்பியூட்டர் ஓன் பண்ண ரைம் கிடைத்தது, அதனால போஸ்ட் இப்போதான் கண்ணில் தெரிந்தது...

    என்ன பழையபடி இலைமறையா?:) இது புதியவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை:))

    //

    உபகதை - இலங்கைக் கடைக்குப் போனோம் இன்று. அங்கு போனால் எனக்கு இருக்கும் தமிழும் மறந்து போகும். அத்தனை அருமையாக இருக்கும் ஒவ்வொரு தயாரிப்பாளரும் தம் பொருட்களில் கொடுத்திருக்கும் விபரங்கள். கோபி, திணை மா, விதம் விதமான 'பொறியள்'களோடு 'என்னை போட்ட கீரமீன்' கூட விற்பனைக்கு இருந்தது. ஹும்! ஆறாம் கட்டளைக்கு விரோதமான பாவம் எல்லாம் மனிதக் கொலைகளுக்கு மட்டும் தான் பொருந்துமா!! ;///

    ஹா ஹா ஹா தமிழ்படும் பாடு.. ஆனா இலங்கை லேபலில் அப்படி வருகிறதா?

    ReplyDelete
    Replies
    1. இலங்கைக் கடைகளிலதான் கனக்க சிரிக்க இருக்கும். தமிழ் கதைக்கத் தெரிஞ்ச, ஆனால் எழுத வாசிக்கத் தெரியாத சிங்களவரை வைச்சு ட்ரான்ஸ்லிட்டரேட்டை வைச்சு அடிக்கிறது போல. திரும்ப வாசிச்சுப் பார்க்க ஒரு தமிழர் கூட அந்தக் கொம்பனிகளில இல்லையா? அடிமட்டத்திலயாவது இருப்பினம். வாசிக்கக் குடுத்தால் திருத்திக் குடுப்பினம். இவ்வளவு காலத்துக்கு ஒருவரும் இதைப் பற்றிச் சொல்லாமல் இருந்திருக்காகினம். ஆனால் மேலிடங்களுக்குக் காசில இருக்கிற அளவு கரிசனம் இதில இல்லை. சில நேரம்.... வேணுமெண்டு செய்யுற மாதிரியும் எனக்கு இருக்கு. ஒவ்வொரு தரம் இப்பிடி பிழையான லேபிள் எதையாவது வாசிக்கேக்க... இவைட தயாரிப்புகளை வாங்கிச் சாப்பிட மனது வாறேல்ல. அன்பளிப்பாகக் கிடைச்ச ஒரு போத்தல்ல லேபிளைப் பிச்சு விட்டன். அதைப் பார்க்கப் பார்க்க என்னை அறியாமல் ஒரு கோவம் வருது.

      Delete
  2. 500 தோடம்பழங்களா? அவ்வ்வ்வ்... முன்பு எனக்கு காலில் எக்ஸிமா இருந்தது, அதை மாற்ற வேண்டாம் என்றார்கள்.. சொக்ஸ் போட முடியாது என அடம்பிடிச்சு ஒயின்மெண்ட் போட்டு மாற்றினேன், அது பின்பு வீசிங் அல்ல, ஆனா இருந்திருந்திட்டு, மூச்சு எடுக்க முடியாமல் முட்டுப் போல வரும்... அப்போ பிரச்சனைகள் சூடு பிடித்திருந்த காலம் என்பதால், அப்பாவின் ஒபிஸ் குவார்ட்டேஸ் க்குப் போயிருந்தோம், முற்றத்தில் ஒரு அளவான பெரிய தோடை, காய் எனில் இலை தெரியாத காய்கள்.. ஆனா படு புளிப்பு...

    யாரோ சொன்னார்கள், முட்டுக் குணம் எனில் இதைக் குடிச்சால் சுகம் வரும் என.. டெய்லி..1,2 பழங்கள் கரைத்துக் குடித்தேன்.. 2 மாதத்தில் எல்லா வருத்தமும் போயிந்தி....

    என்னாது தோடை இலையில் கீரைக்கறியா அவ்வ்வ்வ்:) அது மடமடப்பான இலையாச்சே...

    பாக்.. ஷிப்.. இம்மா என்னிடமும் 5,6 பாக் குகள் இப்படி இருக்கு அனுப்பட்டோ? கழுவி கிளீன் பண்ணித் தாறீங்களோ?:) ஆனா உள்ளே கிளிப்ஸ்:), லிப்ஸ்ரிக் இருக்கும் பட் பவுண்ட்ஸ் இருக்காது ஹா ஹா ஹா:).

    ReplyDelete
    Replies
    1. //தோடம்பழங்களா?// :-) கொடித்தோடை - பஷன் ஃப்ருட்.
      //டெய்லி..1,2 பழங்கள் கரைத்துக் குடித்தேன்.// ஒரு தரம் தடிமல் வர ஒரு ஃப்ரெண்ட் தந்தார். ஃப்ரீ தானே எண்டு அளவு வைக்காமல் குடிச்சன். தடிமல் போச்சுது. அதைத் தொடர்ந்து எனக்கு gout இருக்கிறது தெரிய வந்துது. அதுக்குப் பிறகு என்ன சாப்பிட்டாலும் அளந்து பார்த்துச் சாப்பிடுறன்.

      //அனுப்பட்டோ?// அதுக்கென்ன? அனுப்புங்க. சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம். :-)

      //தோடை இலையில் கீரைக்கறியா// இந்தக் கொடுமையைக் கேட்பார் இல்லையா!!! கொடித்தோடை, தோடை இல்லை. உங்கட குறிஞ்சா ரெசிபி எல்லாம் இதில செய்யலாம் அதீஸ்.

      Delete
  3. ("குளாய் இஸ் நாட் எ வர்ட் ///
    கிக்கிக்கீ

    நோட் திஸ் point மியாவ் :)

    ReplyDelete
    Replies
    1. எப்பெல்லாம் நான் ஸ்பெல்லிங் மிஸ்டேக் கண்டுபிடிக்கிறேனோ அப்பெல்லாம் நீங்களும் தாங்க்யூ அஞ்சு சொல்லணும் :)

      Delete
    2. :D தாங்க்யூ அஞ்சு.

      Delete
  4. //அது பித்தளை சிப், செழும்பு பிடித்திருப்பதால் சரிவராது," என்றார்.//

    என் கணவர் கூட ஒரு பை இப்படி வச்சிருக்கார் ..திறக்க முடில ..ஆனா ஹெவியா இருக்கு ..நான் நினைக்கிறேன் நிறைய யூரோ ஜேர்மன் பழைய மார்க் காயின்ஸ் அதில இருக்குன்னு :)
    அவ்வ்வ் :) விக்கி அண்ணா கிட்ட தான் இப்போ கேட்டு தெரிஞ்சேன் சவர்க்காரம்னா சோப்பு என்று :)
    ஹையோ ஹய்யோ :)


    ReplyDelete
    Replies
    1. ஹா!!! ;))))) எங்களுக்குப் பொதுவாக இப்பிடி ஒரு ட்ரான்ஸ்லேட்டார் இருக்கிறது எவ்வளவு நல்ல விஷயம்! நீங்க சோப்புக்கு தமிழ்ல என்ன சொல்லுவீங்க!!
      அந்த ஸிப் தலையைப் பிடிச்சு ஆட்டிக்கொண்டே இருக்க வேணும். அதுக்குப் பக்கத்தில ஒரு மெல்லிய ஆணியைச் செருகி கொஞ்சம் கொஞ்சமாக அசைக்க, விட்டுக் கொடுக்கும். கன நேரம் எடுக்கும். வீட்டில இப்பிடிக் கிடைக்கிற காசு எல்லாம் என் கடின உழைப்பால கிடைக்கிறதால... என் சம்பளம் என்று எடுத்துருவன். நேற்றும் $40 உழைச்சன், டடாட வேணாம் எண்டு எறிஞ்ச பழைய பையில இருந்து. :D

      Delete
  5. இங்கே ஒரு ஆர்கானிக் கார்டனில் தனியே ஒரு செக்ஷனில் ஹீட்டர்லாம் போட்டு வளர்க்கிறாங்க :)
    கீரைன்னு தெரியாம போச்சு அள்ளிப்போட்டு வந்திருப்பேன் :) இதோட நெக்ஸ்ட் இயர் தான் போவோம் சம்மருக்கு விதைச்சா வளருமானு தெரில பார்ப்போம்

    ReplyDelete
    Replies
    1. விக்கி அண்ணா சரியாச் சொன்னவரோ என்ன கீரை எண்டு! passion fruit
      நாவல் நிறப் பழம் கொடுக்கும் கொடியை விட பச்சை நிறமாகவே பழுக்கும் வகையின் இலைகள் கசப்பு குறைவு ஏஞ்சல்.

      Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா