Tuesday, 24 March 2020

புதியதும் பழையதும்

வெகு காலமாக மனதில் இருந்த ஆசை; சமீபத்தில் அதிக தையல்கள் தைக்கக் கூடிய தையல் இயந்திரம் ஒன்று வாங்கினேன். பழையதில் எந்தக் குறையும் இல்லை. இன்றும் என் பிரியத்துக்குரியதாகவே இருக்கிறது. 'ஸ்காலப்ஸ்' தைக்கும் வசதி இருக்கவில்லை. இம்முறை வாங்கியதில் துவிச்சக்கரவண்டி கூடத் தைக்கலாம்.

பெட்டியைப் பிரித்து இயந்திரத்தை வெளியே எடுத்து வைத்தேன். அடிப்படை அமைப்புகள் சிலவற்றில் மாற்றங்கள் தெரிந்தது. புத்தகத்தை எடுத்துப் படித்து, நூலைக் கோர்த்து வைத்தேன்.

முதல் முயற்சிக்காக கைக்கு அகப்பட்டது குப்பைக்குப் போக இருந்த பழைய 'பானர்' ஒன்று. 'ஸ்காலப்ஸ்' தைக்கக் கிடைத்த சந்தோஷத்தில், செவ்வகவடிவில் இருந்த அந்த 'ஃபெல்ட்' துணியைச் சுற்றிலும் ஒரு வரி தைத்தேன். சிறிய வயதில் என்னிடம் இருந்த சட்டை ஒன்றில் நெளிவேலைப்பாட்டுத் தையல் ஒன்று இருந்தது. அது சங்கிலித் தையலில் இருக்கும்; இப்போதையது நேர்த்தையலையே நெளிவாகப் போட்டுக் கொடுத்தது. அதோடு பரீட்சார்த்தம் திருப்தியாக முடிந்தது.

இப்போது அந்தத் துணி வீச இயலாத அளவு அழகாகத் தெரிந்தது. பதினைந்து தடவையாவது எடுத்துப் பார்த்திருப்பேன். :-) 'இதை வைத்து என்ன செய்யலாம்!!!'

அந்தச் சமயம் தோழி ஒருவரது பிறந்தநாள் வந்தது. துணியைத் தேவையான அளவு மடித்து வெட்டிக் கொண்டேன். சுற்றிலும் சாதாரண தையல் ஒரு வரி அடித்தேன். அளவாக அட்டையை மடித்து துணியை அதில் ஒட்டிக் காயவிட்டேன்.

சில வருடங்கள் முன்பு வீட்டிற்குத் திரைச் சீலைகள் மாற்றும் சமயம் வெட்டிக் கழித்த லேஸ் துண்டு ஒன்று இருந்தது. கடையில் கோணலாக வெட்டிக் கொடுத்ததால் நான் நேராக வெட்டியதில் கிடைத்த அந்தத் துணியில் பத்துப் பன்னிரண்டு பூக்கள் முழுமையானவையாக இருந்தன. அரைகுறையாக இருந்த பூக்களை இலைகளாகவும் மொட்டுகளாகவும் மாற்றிவிடலாம் என்று தோன்றிற்று.

அட்டையில் விதம்விதமாக ஒழுங்குபடுத்திப் பார்த்து திருப்தியான அமைப்புக் கிடைத்ததும், ஒட்டினேன். குட்டிகுட்டி வெள்ளை மணிகளை ஒட்டி மேலும் அழகு சேர்த்தேன். பெற்றுக் கொண்டவர், 'இப்படி எல்லாம் கூட யோசிக்க வருமா!' என்றார். :-) அவரது வேலை மேசையில் மேல் உள்ள 'நோட்டிஸ் போர்டில்' குத்தியிருக்கிறார்.

4 comments:

  1. இப்படி அழகான கைவண்ணங்களை போட்டால் என்ன கருத்து போடுவது...
    இனி நான் ஸ்மைலிதான் போடப்போறேன்..ஹா..ஹா..
    அழகா இருக்கு இமா.

    ReplyDelete
  2. அருமையா இருக்கு. எனக்கும் தையலுக்கும் ரொம்ப தூரம்

    ReplyDelete
    Replies
    1. இது வெறுமனே மெஷின் தையல்தான் ராஜி. பூக்கள் அனைத்தும் வெட்டி ஒட்டிய கர்ட்டன் துணி. முழுமையாக தையலுக்கு இறங்கும் காலம் தொலைவில் இல்லை. :-)

      Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா