Monday 1 November 2010

கார்த்திகை பூத்தது

பெண்களின் விரல்களைக் காந்தள் மலருக்கு ஒப்பிடுவார்கள்.

திருகோணமலையில், என் வீட்டுத் தோட்டத்தில் நின்றது ஒரு கார்த்திகைச்செடி; அழகாக நெருப்பு வர்ணங்களில் பூக்கும்.

அது எப்படி என் தோட்டத்திற்கு வந்தது!

சிரமப்பட்டு நினைவுக்குக் கொண்டு வந்தால்...
ஒரு தினம் உப்புவெளியில் இருக்கும் என் பெரியதந்தையார் வீடு சென்று திரும்புகையில் பஸ்தரிப்பு நிலையத்தில் காத்திருந்த போது, வேலியோரத்தில் காடாய் முளைத்துப் பூத்துக் கிடந்த காந்தள்மலர்கள் மனத்தைக் கவரவும், கடத்தி இருந்தேன் கிழங்குகளை. ;)

இங்கும் கிழங்குகளை ஓர் கடையில் கண்டேன். ஆசையில் வாங்கிவந்தேன்.
வாங்கி வந்த இரண்டு கிழங்குகளில் ஒன்று மட்டும் செடியானது. 
மொட்டு விட்டது. பூக்க ஆரம்பித்ததும் தான் இது வேறு நிறம் என்பது தெரிந்தது.
 
இங்குள்ள எல்லாவற்றிலுமே ஏதாவது ஒரு வேறுபாடு தெரிகிறது. ;)
ஆயினும் அழகு அழகுதான்.
அதில் மாற்றம் இல்லை.
அதுபோல் அவை இங்கு கார்த்திகையில் பூக்கவும் இல்லை.

முதல் முறையாகக் காய்த்ததை அவதானித்தேன்.
நீளமாக, பார்க்க ஓகிட் செடியில் வளரும் காய் போல் இருந்தது. எதிர்பார்த்ததற்கும் முன்பாக முதிர்ந்து காய்ந்தது. முத்து முத்தாய் விதைகள், சோளமுத்துக்கள் போல்.
முளைவிடுமா, நடுகைக்கு ஏற்ற காலம் எது என்பது போன்ற அறிவு எனக்கு இல்லை. செடி உள்ள அதே சட்டியில் புதைத்து விடலாம். முளை விட்டால் இதுதான் என்று தெரிந்து கொள்வேன். பார்க்கலாம்.
~~~~~~~~~~~~
காந்தள்மலர் கண்ணில் படும் போதெல்லாம் சுவாமி விபுலானந்தரின் 'ஈசன் உவக்கும் இன்மலர் மூன்று' தவறாமல் நினைவு வரும். இப்போதும் வருகிறது.

வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது
~~~~~~~~~
காப்பவிழ்ந்த தாமரையோ கழுநீர் மலர்த்தொடையோ
மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ
காப்பவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல
கூப்பிய கைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது.
~~~~
பாட்டளிசேர் பொற்கொன்றையோ பாரிலில்லாக் கற்பகமோ
வாட்டமுறாதவற்கு வாய்த்த மலரெதுவோ
பாட்டளிசேர் கொன்றையல்ல பாரிலில்லாப் பூவுமல்ல
நாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது.

32 comments:

  1. நான் இக்கிழங்கை மிஸ் பண்ணிட்டு வந்ததை நினைத்து கவலை. ஆனால் தெரிந்த ஒருவர் தந்திருக்கிறார். பார்ப்போம் வருகிறதா என.பூக்கள் கார்த்திகை மாதத்தில் இங்கு கிடைக்கும்.
    விபுலானந்தரின் பாடல்களை ஞாபகம் வைத்திருக்கிறீர்களே இமா.

    ReplyDelete
  2. அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் காட்சியளிக்கும். அழகானபூ.

    ReplyDelete
  3. என் வீட்டு தோட்டத்தில்.... எல்லாமே கேட்டுப்பார் ....என் பேரை சொல்லும் ......

    வள் இதழ்
    ஒண் செங் காந்தள்,
    ஆம்பல்,
    அனிச்சம்,
    தண் கயக் குவளை,
    குறிஞ்சி, வெட்சி,
    செங் கொடுவேரி,
    தேமா, மணிச்சிகை,
    உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ்,
    கூவிளம்,
    எரி புரை எறுழம்,
    சுள்ளி, கூவிரம்,
    வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
    எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை,
    பயினி, வானி, பல் இணர்க் குரவம்,
    பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா,
    விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
    குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,
    குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம்,
    போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி,
    செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம்,
    கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா,
    தில்லை, பாலை, கல் இவர் முல்லை,
    குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
    வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,
    தாழை, தளவம், முள் தாள் தாமரை,
    ஞாழல், மௌவல், நறுந் தண் கொகுடி,
    சேடல், செம்மல், சிறுசெங்குரலி,
    கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை,
    காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல்,
    பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம்,
    ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
    அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை,
    பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி,
    வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
    தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி,
    நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
    பாரம், பீரம், பைங் குருக்கத்தி,
    ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை,
    நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
    மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும், அரக்கு விரித்தன்ன.
    மல்லி,மா,மாதுளை,அல்லி,
    குறிஞ்சி,மரிக்கொழுந்து,பிச்சி,
    கத்தாலை,கனகம்,காகிதம்,கற்பூரம்,
    செண்பகம்,செந்தூரம்,ரோஜா,
    அப்புறம் ..கொஞ்சம் இருங்கள் இளைக்கிறது இளைப்பாறிவிட்டு சொல்லுகிறேன்.

    ReplyDelete
  4. இது வரை இத்தாவரத்தை அறிந்ததில்லை.

    ReplyDelete
  5. இமா மயங்கி விழுந்துட்டாங்க. ;))

    மயக்கம் தெளிஞ்சு எழுந்துவந்து எல்லாருக்கும் பதில் போடுவாங்களாம். ;)

    ReplyDelete
  6. இதுவெல்லாம் பூக்களின் பெயர்கள் அக்காள், நமக்கு என்ன அந்த மல்லிகை பூவையும், ரோஜா பூவையும் விட்டால் வேற என்ன தெரியப் போகிறது, தாவரவியலில் வருமே இத்தனை பூக்களின் பெயருகள்

    ReplyDelete
  7. இமா.. கார்த்திகைச்செடி, காந்தள் மலர் - வித்தியாசமான பெயர்கள்.. இந்தப் பூவை ஊரில் கண்டதில்லை.. நன்றி..

    மொஹம்மத் சொல்லியுள்ளவற்றில் தற்போது புழக்கத்தில் உள்ள சிலவற்றைத் தவிர்த்து, எதையும் அறிந்ததில்லை! எங்கே மறைந்தனவோ!

    ReplyDelete
  8. நான் இப்போதான் கேள்விப்படறேன் பார்க்கிறேன் :(

    நெருப்புவர்ணமா இது? அரக்குசிவப்புன்னுதான் சொல்லுவோம்!

    ReplyDelete
  9. மொஹம்மத் யப்பா சூர்யா பூவெல்லாம்கேட்டுப்பார்ல சொன்ன மலர் வகைகள்தானே இது?

    ReplyDelete
  10. சங்க இலக்கியங்கள்லயும்,சாண்டில்யன் கதைகளிலும் படித்திருக்கிறேன்..காந்தள் மலரை கண்ணில் காட்டியதுக்கு நன்றி இமா! பூ அழகா இருக்கு.

    /சூர்யா பூவெல்லாம்கேட்டுப்பார்ல சொன்ன மலர் வகைகள்தானே இது? /நானும் இதேதான் நினைத்தேன். :) பொறுமையா டைப் பண்ணிருக்கீங்க மொஹம்மத்!

    ReplyDelete
  11. இதுதான் காந்தள் மலரா?! இலக்கிய பாடல்களில் மட்டுமே அறிந்திருந்த மலர் இமாவால் இன்று கண் முன்னே! நன்றி இமா(ம்மா!) :)

    ReplyDelete
  12. காந்தள் பூக்கள் அழகாய் இருக்கிறது.

    நடைமுறையில்
    முதன் முறை
    பார்க்கின்றேன்
    பலமுறை
    வியக்கின்றேன் ..
    பூக்களை
    போல நானும்
    புன்னகை
    பூக்கின்றேன்

    இமாவின் எழுத்து முறையிலும்
    மாற்றங்களை
    அறிகின்றேன்

    ஆனால் இது நம்ம ஏரியா இல்லையே.
    "அனைவரும் துய தமிழில் கதைக்கிறார்கள் "
    .
    ஒன்றும் விளங்கவில்லை
    நன்றி மீண்டும்
    வருகின்றேன்...

    ReplyDelete
  13. இந்த மாதிரி பூவை இப்போது தான் பாக்குறேன்.

    நன்றி இமா

    ReplyDelete
  14. ப்ரியா,

    இங்க இதெல்லாம் எப்பவாவது அபூர்வமாகக் கண்ணில் படும். முளைக்குமா என்று நட்டுத்தான் பார்க்கவேணும். ;) ஊர்ல கார்த்திகைல தான் பூக்குறது. இது நெருப்பு நிறமா இல்லை. குங்கும நிறம். அதுதான் கார்த்திகைல பூக்க இல்லை போல. ;)

    நீங்கள் அனுப்பின மிச்ச விபரங்கள் பார்த்தேன். உபயோகமா இருந்துது.

    கிடைச்ச குரு அப்பிடி. படிப்பிச்ச விதத்தில பாட்டு மனசில நிக்குது. ;)

    ReplyDelete
  15. இந்தப் பூ பூத்து, காய்க்கத்தான் இத்தனை நாளா பதிவே போடாம காத்திருந்தீங்களோ? ;-))))

    ReplyDelete
  16. அயூப் சார்... கலக்கிட்டீங்க. ;)

    ஆம்பல் - முன்பே தெரிந்திருந்தாலும், இப்போ எல்லாம் 'பூம்பாவை... ஆம்பல் ஆம்பல்' தான் நினைவுக்கு வருகிறது. ;) அதுபோல் 'புன்னகையோ மௌவல் மௌவல்' ;)) மௌவல் - மல்லிகையாம் இல்லையா! அகராதியில் கூடவே தாமரை என்றும் சொல்லி இருக்கிறார்கள்.

    அனிச்சம் - மோப்பக் குழையும் அனிச்சம், மனந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து.

    தேமா - இதைப் பற்றி சந்தேகம் இருக்கிறது. ஆளாளுக்கு ஒன்று சொல்கிறார்கள். இங்கு 'தேமா' என்று தேடினால் முன்னே வந்து நிற்கிறது 'Pride of Japan' மலர். ;)

    வாகை - தெரியும்

    பாதிரி - ம்.. நினைவு இருக்கிறது. ;) 'சொல்லியும் செய்யார்' தானே! ;) (..... பலா மாவைப் பாதிரியைப் பார்) மூங்கிலையும் 'பாதிரி' என்பார்களோ!

    சண்பகம் - கேள்விப்பட்டு இருக்கிறேன்.

    முல்லை, வாழை, தாழை, தாமரை, மல்லி, மா, மாதுளை, அல்லி, கற்றாழை, கனகம், கற்பூரம், ரோஜா - ம். ;)

    இலவம் - பூக்குமா!! காய்தான் கண்டதுண்டு. அந்த உயரத்தில் பூ எப்படி இருந்தாலும் தெரியாது. ;(

    கொன்றை - பிடித்த பூ ;) இரண்டு மூன்று பாடல்கள் நினைவுக்கு வருகின்றன. 'பொன்செறியும் கொன்றை நெடும் பழமெடுத்துத் துழைத்து' என்று ஆரம்பிக்கும் பாடலொன்று. 'பொன்பூச் சொரியும் பொலிந்த செழுந்தாதிறைக்கும்' என்று ஆரம்பித்து 'மின்பிரபை வீசு புகழ் நல்லூரான் வில்லவராயன் கனக வாசலிடைக் கொன்றைமரம்,' என்று முடியும் அழகான பாடலொன்று.
    கொசுவர்த்தி புகைகிறதே!! ;)

    அவரை - அழகுதான், எத்தனை வர்ணங்கள் இவற்றில்.

    தும்பை - ஊரில் வேலியில் இருந்ததாக நினைவு.

    வேங்கை - அது பூத்திருக்கும்! அழகே அழகு. ;)

    மரிக்கொழுந்து - இலை மட்டும் கண்டதுண்டு.

    பிச்சி - வீட்டில் இருந்தது ஒரு கோப்பிப்பிச்சி. வாசனை ஊரைத் தூக்கும்.

    காகிதம் - நானே செய்வேனே. ;) போகன்வில்லாவா? ;)

    செந்தூரம் - அப்படி ஒன்றே இல்லையாமே! கங்கை அமரன் ஐயா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சொல்லக் கேட்டேன்.

    //தாவரவியலில்// என் தோழி எங்கோ படித்ததாகச் சொல்லிக் கேட்டது.. தாவரவியல் ஆராய்ச்சியாளர் ஒருவர் காந்தள் மலர் கண்ணில் பட்டதும் அதனழகில் மயங்கி 'க்ளோரியஸ், சுப்பர்ப்' என்று பாராட்டினாராம். அதுவே அதன் தாவரவியற் பெயராக (Gloriosa superba) நிலைத்துவிட்டதாம். ;)

    ReplyDelete
  17. ஸாதிகா, இது தமிழீழம், சிம்பாப்வே இரண்டுக்கும் உரிய 'தேசியமலர்'. தமிழ்நாட்டின் 'மாநிலமலர்' என்றும் அறிந்தேன்.

    எல்ஸ்.. ஊரில் இராது. காட்டில்தான் அதிகம் இருக்கும். புகைவண்டியில் பயணிக்கையில் அதிகம் கண்ணில்படும். மரங்களில் படர்ந்து... பூத்திருக்கும் அழகு சொல்ல முடியாது.

    வசந்த் சார்!!! என்ன இப்பிடி சொல்லிட்டீங்க. சும்மாதானே சொல்றீங்க?
    //நெருப்புவர்ணமா இது? அரக்குசிவப்புன்னுதான் சொல்லுவோம்!// அதே. ;) ஊரில் காண்பவை நெருப்புவர்ணத்தில் இருக்கும். இது இப்படி. இன்னும் பலவர்ணச் சாயல்களிலும் இருப்பதாகத் தெரிகிறது.
    //சூர்யா பூவெல்லாம்கேட்டுப்பார்ல சொன்ன மலர் வகைகள்// ஓ!! அப்படியா கதை!! மாட்டி விட்டுட்டீங்க. ;)))

    //சங்க இலக்கியங்கள்லயும்,சாண்டில்யன் கதைகளிலும்// ம்.
    //காந்தள் மலரை கண்ணில் காட்டியதுக்கு// என்ன எல்லாரும் வருசையா வந்து இந்த ரேஞ்சிலயே கதைக்கிறீங்க!! நம்ப ஏலாமக் கிடக்கு மஹி.

    //பொறுமையா டைப் பண்ணிருக்கீங்க மொஹம்மத்!// நல்..லா மாட்டிட்டார். ;)))

    கவீஸ்... ;) அந்த ஸ்மைலி எல்லாம் க.கா.போய்ட்டேன். ;))

    ஆமினா, ம். போடும் போது 'இதெல்லாமா போஸ்டிங் போடுறது!' என்று நினைத்தேன். இத்தனை பேருக்குப் புதிதாக இருக்கிறதா! தகவல் உபயோகமாக இருந்தது, சந்தோஷமாக இருக்கிறது.

    இது பூப்பூத்த காலத்தில் (ஏப்ரலில்) சேமித்த இடுகை ஹுசேன். தன்னால் உரிய நேரத்துக்கு வெளியாகி இருக்கிறது. ;)

    ReplyDelete
  18. சிவா,

    செபாம்மா போன்ல கேட்டாங்க, 'சிவா அழகா கவிதை எல்லாம் எழுதி இருக்கிறாங்களே' என்று. ;)

    'அதெல்லாம் நல்லா எழுதுவாங்க, ஆனால் திருப்பிப் படிச்சுப் பார்க்காம வெளியிட்டு வைப்பாங்க,' என்று சொன்னேன். ;)

    //"அனைவரும் தூய தமிழில் கதைக்கிறார்கள் "// யார்ங்க!! நாங்களா!! ;)))

    ReplyDelete
  19. வித்தியாச‌மான‌ ப‌கிர்வு இமா..அருமை..

    இமா said...
    ஸாதிகா, இது தமிழீழம், சிம்பாப்வே இரண்டுக்கும் உரிய 'தேசியமலர்//

    அது ஜிம்பாப்வே.. த‌வ‌று க‌ண்டுபிடிக்கிற‌துல‌ இருக்கிற‌ ச‌ந்தோஷ‌மே த‌னி.. வ‌ர்ட்டா இமா :)

    ReplyDelete
  20. ஸ்டோரி ரைட்ட‌ர் விருது வாங்கின‌ கையோடு இமாகிட்ட‌ ந‌ல்ல‌ க‌தை('க‌த‌'? இல்ல‌ க‌தை) வ‌ரும்'னு நானும் எதிர்ப்பார்க்கிறேன் காணோமே இன்னும்..?

    ReplyDelete
  21. //ஜிம்பாப்வே// ஆஹா! ;) எப்படா இமா மாட்டுவாங்க என்று பார்த்துட்டு இருக்காங்கப்பா. ;) நாங்க 'இலங்கை' இர்ஷாத். ;) 'ஜி' போட மாட்டோம். அந்த இடத்துல 'சி'தான். 'சி'தான். 'சி'தான். ;))))))))))

    //வ‌ர்ட்டா இமா// ம். வாங்கோ வாங்கோ. :))))
    சந்தோஷம். தொடர்ந்து வரவேணும். இமா பிழை விட்டால் கட்டாயம் சொல்லிக் காட்ட வேணும் இர்ஷாத்.

    நீங்க என்ன சொல்ல வந்தீங்க எண்டு விளங்குது. இங்க தட்டுறது எல்லாம் உங்களுக்கு விளங்கட்டும் எண்டு கொஞ்சம் மாத்திக் கதைக்கிறது. ஆனால் அந்த 'ஜி' பழக்கமில்லாமல் கிடக்கு. மாற்ற முடியேல்ல. ;( மன்னிக்கவேணும். இர்ஷாத். அடுத்த முறை எழுதேக்க நினைவா சரியா ;) எழுதப் பாக்குறன் என்ன. ;)

    ReplyDelete
  22. அய்யோயோ ..பூவெல்லாம் கேட்டுப் பாருலே இப்படியொரு பூக்களின் பேர்கள் பாடலாக வந்தால், முன்னணிப் பாடகியானாலும் சரி, பின்னணி பாடகியானாலும் சரி, துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு ஓடிப் போயுடுங்க,ஏன் என்றால் இப்பவுள்ளப் பாடகர்களுக்கு இந்த ழா,ழ,ழோ,ழொ,இதுலாம் வராது. இது ரொம்பக் காலமா அதாவது காலேஜில் படிக்கும் போது வந்த மெயில். அவ்வளுவுதான், நம்ம என்ன திரு வள்ளுவர் காலத்து ஆளா? இப்படியொரு பூக்களை பற்றி எழுத என் மனைவி, என் காதலியாக இருக்கும் போது எனக்கு அனுப்பிய மடல் இது

    ReplyDelete
  23. இர்ஷாத்,

    கதை ;) வரும். எழுதத்தான் வேண்டும். எழுதுவேன்.

    ஆனால் எதிர்பார்ப்புகள் வேண்டாம் இர்ஷாத்.

    //ந‌ல்ல‌ க‌தை('க‌த‌'? இல்ல‌ க‌தை)// இதற்கு வரைவிலக்கணம் என்று ஒவ்வொருவர் மனதில் ஒவ்வொன்று இருக்கும். ரசனைகள் வித்தியாசம் இல்லையா? என் எழுத்து உங்களுக்குப் பிடிக்குமா என்று தெரியவில்லையே. ;))

    கதை வெளியானதும் இங்கு தொடர்பு கொடுக்கிறேன். படித்துப் பார்த்துக் கருத்துச் சொல்லுங்கள்.

    அன்புடன் இமா

    ReplyDelete
  24. அயூப் சார்... ;) ம். சரி. சரி. ;)))

    ReplyDelete
  25. விதைகளை ஒரு பையில் போட்டு, இருட்டான இடத்தில் வையுங்கோ. spring வந்த பிறகு மண்ணில் புதைத்து விடுங்கள். செடி வரும். இது சில மாசங்களின் முன்பு கூகிளில் நான் வாசிச்சது. என் அம்மா நாலுமணிப் பூ விதைகள் தந்தார்கள். அதை நான் அப்படித்தான் வைச்சிருக்கிறேன். வசந்தகாலம் வந்த பிறகுதான் மண்ணில் புதைக்க வேண்டும்.

    காந்தள் மலர்கள் அழகு. இருந்தாலும் என் விரல்கள் போல இல்லை!!!!!

    ReplyDelete
  26. இமா! அருமையான பதிவூ! அழகா இருக்கு... அதைவிட படித்ததை மறக்காமல் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!
    வழமை போல
    அன்புடன்
    குழாப்புட்டு :))

    ReplyDelete
  27. இருட்டில வைக்காமல் நட்டாச்சு வாணி. ஆனால் ஸ்ப்ரிங்ல தான் நட்டு இருக்கிறன். பாப்பம்.

    4 மணிப்பூ!! ;)
    இங்க ஒன்று தன்னால வந்துது. சந்தோஷமா இருந்துது. இப்ப ஒழிக்க முடியேல்ல. ;( அது வேலிக்கு மேலால வளருது. 9, 10 அடி. நம்புங்கோ. நிறையப் பூக்கும். நிறைய வித்துக்கள் எல்லா இடமும் விழுந்து... முளைக்கிற இடமெல்லாம் கிழங்கு. வேற மரங்கள் வைக்க முடியேல்ல. அதைக் கொத்தினால் கவனமா எடுத்து எறிய வேணும். இல்லாட்டி எங்க போடுறமோ அங்க முளைக்குது. சரியான கஷ்டமா இருக்கு.
    ~~~~~~~~~~~~~~~
    //குழாப்புட்டு// ;) அங்க அடுத்த ட்ரெய்ன் ஓட ரெடியாகுது போல இருக்கு. ;)

    ReplyDelete
  28. பாட்டனி படிக்கும் போது என்னன்னவோ பேரா நிறைய வரும் .கூடவே பூக்களும் படித்ததால் இப்ப அந்த பூக்கள் பேர் மட்டுமே நினைவில் இருக்கு என்ன செய்ய..!!! :-))

    ReplyDelete
  29. இமா மாமீ இருக்கிரவரை ஆராய்ச்சிக்கு பஞ்சமா என்ன ..? எனக்கு என்னவோ வெண்டைக்காயை பார்தால்தான் விரல்கள் நினைவுக்கு வருகிறது அதானே லேடிஸ் ஃபிங்கர் ..!! ஹா..ஹா..!!!!!! :-))))))))))))))

    ReplyDelete
  30. சந்தேகம் 2

    1. பச்சை ரோசுக்கு பாட்டனில என்ன சொல்றது மருமகனே!! நினைவு இருந்தா சொல்லுங்க. ;))

    2. வெண்டிக்காய் நெய்ல்பாலிஷ் பூசுமா? ;)

    ReplyDelete
  31. ரோஸா சைனான்ஸிஸ் விர்டிஃபுளோரா இது ரோசுக்கு ,ஃபேமிலி ரோஸாஸி..!!!

    ஹைபிஸ்கஸ் ரேஸா சைனான்ஸிஸ்--இது செம்பருத்தி பூவுக்கு சரியான்னு இப்ப நீங்க சொல்லுங்க :-))

    மாமீ முன்னே , நான் சொன்ன பூக்கள் ,தலையில் பூ வைத்துக்கொண்டு வரும் பூக்களை..!! :-))

    வெண்டிக்காய்கள் நெய்ல் பாலீஸ் பூசாட்டிதான் அழகு..!! பூசினால் ரத்தகாட்டேரி மாதிரி இருக்கும் (( ரத்தகாட்டேரி பாத்து இருக்கீங்களான்னு கேக்கப்பிடாது ஹி..ஹி.. )) :-)))))))))

    ReplyDelete
  32. திருமதி ஜெய்லானி கவனத்துக்கு

    //பாட்டனி படிக்கும் போது என்னன்னவோ பேரா நிறைய வரும் .கூடவே பூக்களும் படித்ததால் இப்ப அந்த பூக்கள் பேர் மட்டுமே நினைவில் இருக்கு என்ன செய்ய..!!! :-)) //

    ;)))

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா