Thursday, 25 November 2010

மலர்களே! மலர்களே!


இங்கு அனைவரும் காண என் உலகைப் பின்தொடரும் அறுபத்தொருவருக்காகவும் இன்று பறித்த என் தோட்டத்து மலர்கள்.

ஒரு மீற்றர் உயரம் வளரும் என்று செடியில் தொங்கிய சிட்டை சொல்லிற்று. செடியோ கொடியாகிப் படர்கிறது. மூன்று வருடங்களாக எங்கள்  வீட்டு 'ட்ரைவ் வேயில்' பூத்துச் சிலிர்க்கின்ற இந்த ரோஜாவிலிருந்து பதியன்கள் வைத்து வேறு இடத்தில் நட்டிருக்கிறேன்.

'ரோஜா' வண்ணத்தில் அழகிய பெரிய பூக்கள்; அதைவிட மென்மையான வண்ணத்தோடு குட்டிக் குட்டியான பூக்கள்; இடை இடையே மொட்டுக்கள்; சிவப்பாய்த் துளிரிலைகள், கொஞ்சம் பெரிய மென்பச்சை இலைகள்; கடும்பச்சையாக பளபளவென்று முதிர்ந்த இலைகள்; தளதளவென்று எறியும் சிவந்த மொத்தக் கிளைகள்; மெல்லிய பச்சைக் கிளைகள்; முதிர்ந்து வயதானதால் பசுமையற்றுப் போன கிளைகள்; எப்போதும் பூக்களுக்காகச் செடியைச் சுற்றிச் சுற்றி வரும் வண்டுகள்; சென்ற வருடத்து வசந்தத்தின் அடையாளமாக மீந்து போன காய்கள் என்று வாழ்க்கையின் பல படிகளையும் ஒருங்கே கொண்ட இது... ஒரு செடி மட்டும் அல்ல. என் தோழி.

தினமும் காலையில் வேலைக்குப் புறப்படும் சமயம் முதலில் ரோஜாத் தரிசனம், மிகச் சிறிதே ஆனாலும் அழகான நொடிகள் அவை. மெத்தென்றும் சட்டென்று விதம் விதமாய்த் தலையசைத்து காலைவணக்கம் சொல்லும் என் ரோஜாக்கூட்டம். அந்த நொடிச் சந்தோஷம் நாளை அருமையாக ஆரம்பித்து வைக்கும். (சமீபகாலமாக பாடசாலையில் இருக்கும் மேரிமாதாவுக்காக தினமும் சில பூக்கள் கொண்டு செல்லும் வழக்கம் தொற்றி இருக்கிறது.)
மீண்டும் வீடு திரும்புகையில் பூக்களைப் பார்த்ததும் களைப்புக் காணாது போய்விடும்.கொஞ்ச நேரம் செடியோடு பேசிக் கொண்டிருந்துவிட்டுத் தான் உள்ளே போவேன்.

செடியிலிருந்து உதிர்ந்த இதழ்கள் எப்பொழுதும் 'ட்ரைவ் வே' முழுக்கக் கோலம் போட்டிருக்கும். அது ஒரு அழகு.

தோட்டத்தில் பூக்கள் போதிய அளவு கிடைக்கிறது. நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகமும் என்று எங்கு சென்றாலும் செபா அறுசுவையில் செய்துகாட்டிய பூச்செண்டு போல் ஒன்று கொண்டு செல்கிறேன். பெறுபவர் சந்தோஷம் என்னை மேலும் சந்தோஷப் படுத்துகிறது.

ஒரு வீட்டுக்கு மறுமுறை சென்றபோது அந்த வீட்டு ஆன்டி கொட்டிப் போன பூக்களை எடுத்துவிட்டு நான் மீண்டும் பாவிக்கட்டும் என்று மீதி அமைப்பைப் பாதுகாத்து வைத்திருந்து எடுத்துக் கொடுத்தார். எங்கள் அதிபர் பிறந்தநாளுக்குக் கொடுத்தது பாடசாலையில் இருக்கும் பெரிய மேரிமாதா பாதத்தின் அருகே இருக்கிறது. பதினெட்டாம் அறை ஆசிரியர் மேசையில் அவர் பிறந்தநாளுக்குக் கொடுத்தது இருக்கிறது. இரண்டிலும் தினமும் பூக்களைப் புதுப்பிக்கிறேன்.

இன்று இது உங்களுக்காக.

25 comments:

  1. ”மலர்களே மலர்களே இது என்ன கனவா”
    நான் என் கையை கிள்ளிப்பார்த்தேன். கனவில்லை நிஜம்தான். இமா பதிவுதான் போட்டிருக்கா.
    அழகான ரோஜாபூக்கள் கொடுத்ததற்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. வாவ் பூங்கொத்து அழகோ அழகு!
    எங்கள் வீட்டிலும் இது போன்ற ரோஜாச் செடி இருந்தது. பூக்கள் எப்போதும் பூத்துக் குலுங்கும். தேனெடுக்கும் சிறுதேனீக்கள் எப்போதும் சுற்றும். காலை எழுந்த உடன் பார்த்தால் ஏதோ இனம்புரியா சந்தோஷம் தொற்றிக் கொள்ளும் :)

    ReplyDelete
  3. வெள்ளையும் பிங்கும் மனசை கொள்ளை கொல்லுது :)

    ReplyDelete
  4. நான் பெற்றுகொண்டேன்!

    மிக்க நன்றி

    ReplyDelete
  5. பூங்கொத்து அழகோ அழகு!

    ReplyDelete
  6. ஆஹா...ரோஜாக்காதலி...

    அந்த ஊசியிலைதான் எனக்கு பிடிச்சுருக்கு ரீச்சர்...!பிற்ச்சேர்க்கையா?

    ReplyDelete
  7. வந்தாச்சா ?
    விதை செடியாகி,செடி கொடியாகி, கொடி.மரமாகி பின்பு "பூ" பூக்க இத்தனை நாட்களா ?
    வந்த வேகத்தோடு மீட்டருக்கு சூடு வைத்த மாதுரி தெரியுது (மீற்றர்)

    வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  8. அறுபத்தி ரெண்டு பேருனு சொல்லுங்கள்.

    ReplyDelete
  9. வருகை தந்த அனைவருக்கும் என் நன்றிகள்.

    ஹைஷ், அடுத்த இடுகை உங்களுக்காக.

    அந்தப் பன்னத்தில் இலை ஒழுங்கமைப்பு அழகு இல்லையா வசந்த்? 'koru' என்பதால் சேர்த்திருக்கிறேன்.

    முஹம்மது அயுப், நீங்கள் சொல்வது எதுவும் புரியவில்லை.
    இருந்தாலும் சொல்கிறேன், 62 பேர்.

    ReplyDelete
  10. கவிதை வராதுன்னு சொல்லிட்டு பாதி எழுதியது கவிதை மாதிரியே தெரியுதேஏஏஏஏஏஏஏஏஏஏ..!! :-)

    ReplyDelete
  11. எனக்கும் ரோசாப்பூக்களை கண்டா ரொம்ப பிரியம். எங்க அம்மா அப்பா கலியாண நாளுக்கு எங்க வீட்டில ஒரு ரோசா செடி வாங்கி வைத்தேன். அது பூத்து பூத்து குலுங்குமாம் ( நான் தான் வீட்டிலே இருப்பதில்லையே :(()) போற வர்ரவங்க எல்லாம் பறிச்சிட்டு போவாங்களாம். இங்க என்னவோ என் கட்டைவிரல் கரிவிரலாய் இருக்கு - No Green thumb ( ஊரில் வச்சதெல்லாம் வந்தது )

    அழகான பூ அலங்காரம் இமா... இன்னைக்கு போகிறேன் கடைக்கு கிப்ட் கார்டை எடுத்திட்டு முதலில் ஒயாசிஸ் வாங்கணும் :))

    ReplyDelete
  12. இங்கு அனைவரும் காண என் உலகைப் பின்தொடரும் அறுபத்தொருவருக்காகவும் இன்று பறித்த என் தோட்டத்து மலர்கள்.

    ReplyDelete
  13. இமா, உது எனக்கு வேண்டாம். பெரிசா எதிர்பார்த்தேன்!!!!!!

    ReplyDelete
  14. வர்ணனை ரொம்ப அழகு! மறுபடியும் ஒருக்காப் படிச்சுப் பாக்கணும்..

    பூ அழகா?
    பூவைப் படமெடுத்த பூவையின் ரசனை அழகா??
    பூவைப் பற்றிய பூவையின் வர்ணனை அழகா???

    இப்பிடிக்கு,
    பூ/பூவை..

    ReplyDelete
  15. பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கு இமா.. அந்த டேபிள் கூட நல்லா இருக்கு :)

    ReplyDelete
  16. கொஞ்சம் லேட்
    எனக்குதான் எல்லாம்
    யாருக்கும் கிடையாது அந்த ஸ்டார்பேரி...

    அப்புறம் அந்த ரோஸ்
    மிக அழகு
    என்னைப்போலவே

    ReplyDelete
  17. பதில் போட முயன்ற ஒவ்வொரு தடவையும் ஏதாவது ஓர் தடை வந்துகொண்டே இருந்தது.
    இப்போ ஒரு ஹாய் மட்டும் சொல்லிவிட்டுப் போகிறேன். விரைவில் சந்திப்போம்.

    ReplyDelete
  18. //விரைவில் சந்திப்போம். //

    எதிர்பார்ப்புடன்..!! (( குச்சி மிட்டாய் கிடைக்குமில்ல ))

    ReplyDelete
  19. பூக்கள் அழகா இருக்கு இமா! உங்க தோழிக்கு எனது "ஹாய்"!!! :)

    ReplyDelete
  20. இமா உங்களுக்கு எப்ப கோவம் வரும்..ரொம்ப மென்மையா அழகாக எல்லாத்தையும் ரசித்து ரசித்து போடுறீங்க..உங்க அம்மாவையும் எனக்கு பிடிச்சிருக்கு..மனசு ரிலாக்ஸ்டா வச்சுக்கனும்னா உங்க தளத்துக்கு வரனும்..அழகான புகைப்படங்கள்

    ReplyDelete
  21. ப்ரியா, //இமா பதிவுதான் போட்டிருக்கா.// ஒரு பதிவு போட்டுட்டு திரும்ப காணாம போகப் போறா. ;) உங்கள் 'சமையலறையைக்' கொஞ்சம் எட்டிப் பாருங்கள். ;))

    ~~~~~~~~~~

    கவி, //ஏதோ இனம்புரியா சந்தோஷம் தொற்றிக் கொள்ளும்// :) மலர்கள் அழகு இல்லையா? ;)

    ~~~~~~~~~~

    மிக்க நன்றி பாலாஜி, ஆமினா, ஸாதிகா & அனாமிகா ;)

    ~~~~~~~~~~

    //மீட்டருக்கு சூடு// இன்னுமே புரியவில்லை அயுப்.
    //அறுபத்தி ரெண்டு பேருனு சொல்லுங்கள்.// ;) இடுகையின் போது இருந்தவர்கள் அறுபத்தொருவர் தான். நீங்கள் பார்க்கும்போது புதிதாக இணைந்திருந்த குறிஞ்சியையும் சேர்த்து எண்ணினீர்களா?

    ~~~~~~~~~~

    //:(())// இது என்ன பிராணி இலா?? ;) //ஒயாசிஸ் // வாங்கிட்டு வீரா திட்டுற வரைக்கும் வச்சுட்டு இருக்கிறது இல்லை. ;)

    ~~~~~~~~~~

    வாணி, வரவர சின்னதாயும் எதுவும் கொடுக்க முடியவில்லை. ஆரம்பத்தில் நீங்கள் சொன்னது சரிதான். ;)

    ~~~~~~~~~~

    எல்ஸ்.. //இப்பிடிக்கு,
    பூ/பூவை..// ;)
    கவிஞரே!! அது டேபிள் இல்ல. செபா வீட்ல இருந்து முன்னொரு காலத்தில் சுட்ட மூங்கில் டேபிள் மாட். ;)

    ~~~~~~~~~~

    சிவா, //மிக அழகு என்னைப்போலவே// ம். போட்டோவ பார்த்துட்டு சொல்றேன், அனுப்புங்க. ;)

    ~~~~~~~~~~

    ஜெய்லானி, //எதிர்பார்ப்புடன்..!!// மன்னிக்கவேண்டும். மீண்டும் காணாமல் போகிறேன் என்று சொல்லத்தான் வந்தேன். வேகு காலமாகும் மீண்டும் வர. இது அனைவருக்குமான அறிவித்தல். காரணம்... உலகம் சுற்ற மாட்டேன் என்கிறது. கராஜில் விடப் போகிறேன் சர்வீஸுக்கு. ;) //பாதி எழுதியது கவிதை மாதிரியே தெரியுதே// மீதி எழுதினா அதுவும் சொல்ல மாட்டீங்க. :-)

    ~~~~~~~~~~

    நன்றி மகி. //தோழிக்கு எனது "ஹாய்"!!!// சொல்லி விடுகிறேன். ;)

    ~~~~~~~~~~

    தளீ... //கோவம்// !! ;) //அம்மாவையும் பிடிச்சிருக்கு..// தாங்ஸ். //மனசு ரிலாக்ஸ்டா வச்சுக்கனும்னா உங்க தளத்துக்கு வரனும்..// ;) எனக்கும் ஒரு ரிலாக்க்ஷேன் தேவைப் படுது. அதனால ஒரு ப்ரேக் எடுக்கப் போறேன். திரும்பவரும் வரை அனைவருக்கும் என் அன்பு. _()_
    - இமா

    ReplyDelete
  22. வணக்கம்

    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் பதிவை சென்று பார்வையிட இதோ முகவரி
    http://blogintamil.blogspot.com/2014/05/blog-post_8.html?showComment=1399504745644#c2740972411937371345

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா