Sunday 11 September 2011

விடுமுறைகள் தரும் பரிசுகள்

விடுமுறைகள் என்றாலே மகிழ்ச்சிதான். கண்ணுக்கும் மனதுக்கும் விருந்தாகும் ஒவ்வொரு விடயமும் வெகு நாட்கள் நினைப்பில் வந்து வந்து மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டு இருக்கும்.
சில விடுமுறைகள் மட்டும்... மருந்து மாத்திரைகள் பின்விளைவுகளை விட்டுச் செல்வது போல சில பின்விளைவுகளை விட்டுச் செல்கின்றன. இதற்கெல்லாம் பயந்து கொண்டு வீட்டோடு இருந்துவிடமுடியுமா என்ன?

இரண்டு வாரங்கள் முன்பாக நல்லவிதமாக ஒரு நோய்த்தொற்று என்றேனே... அப்போ ஒரு வாரம் விடுப்பிலிருந்தேன். பொழுது போகவில்லை. வீட்டு வேலையும் பார்க்க இயலவில்லை.
நகங்களை எல்லாம் சுத்தம் செய்து புதிதாக வர்ணம் பூசலாம் என்று தோன்றிற்று. என்னில் நான் ரசிக்கும், பெருமைப்படும் பாகங்கள் அவை. ;))
“சுப்பர் சிங்கர்’ பார்த்துக் கொண்டே பஞ்சில் ‘ரிமூவரை’ தொட்டு எல்லாம் நீக்கியாயிற்று. மீந்திருந்தது கைவிரல் நகங்களுக்கு அடியிலிருந்த மருதாணிச் சாயம் மட்டுமே.
அடுத்த வர்ணத்தைத் தொட்டு வைக்கத் தயாரானேன். எப்பொழுதும் இடதுகால் பெருவிரலில்தான் ஆரம்பிப்பேன். அந்த நகம் இம்முறை வித்தியாசமாகத் தோன்றியது.
 
சற்று தொடர்பு விட்டிருந்தது.
ஃபங்கஸ் தொற்று என்று தோன்றிற்று. கூடவே நிறைய சந்தேகங்கள், சிந்தனைகள். அழகு என்பது இரண்டாம் பட்சம்தான். இந்த நிலை தொடர்ந்தால்!! நகம் விழுந்துவிட்டால்!! சப்பாத்துப் போடாமல் குளிர் காலங்களை எப்படிக் கடத்த முடியும்!! சப்பாத்துப் போட வலிக்குமே! ஏதாவது தட்டுப் பட்டால் வலிக்கும். கோடையில் செருப்புப் போட்டால் அசிங்கமாகத் தெரிந்து வைக்கும். நினைக்கவே கஷ்டமாக இருந்தது. ;(
மூன்று நாட்களுக்கு குடும்ப வைத்தியரிடம் ‘பார்வை நேரம்’ கிடைக்கவில்லை. நான்காம் நாள் பார்த்தும் “இது ஒனைகோலைசிஸ்” என்றார். எல்லா நகங்களையும் உள்ளபடி காணட்டும் என்று பூச்சிடாமல் விட்டிருந்தேன். இந்தியர், தமிழ் பேசுவார் இவர். இவரிடம் போக ஆரம்பித்த பின் என் ஆரோக்கியம் பற்றி ஒரு பாதுகாப்பு உணர்ச்சி வந்திருக்கிறது.

இங்கு வந்தது முதல் ஒரு இந்தியத் தமிழ் வைத்தியரிடமே காட்டி வந்தோம். கணவரும் மனைவியுமாக அருமையாகக் கவனித்தார்கள். திடீரென குடும்பத்தோடு அவுஸ்திரேலியா கிளம்பிப் போய் விட்டார்கள். ;( அதன் பிறகு நான் பட்ட சிரமம் அளவில்லை. ஒவ்வொரு தடவை ஒவ்வொரு வைத்தியர் இருப்பார்.

இவர்களிடம் போய்ச் சேர மூன்று மாதங்கள் காத்திருக்கவேண்டி இருந்தது. இருந்தாலும், பயனுள்ள காத்திருப்பு; பார்த்த மாத்திரத்தில் நோயைக் கண்டு பிடித்துவிடுவார்.

என் நக அழகுப் பைத்தியம் பற்றித் தெரிந்திருந்ததால் “கவலையாகத்தான் இருக்கும். ஆனால் கூடுமான வரை ஒட்ட வெட்டிவிட்டு போய் ‘சாம்பிள்’ கொடுத்துவிட்டு வாருங்கள்,” என்றார்.

ஃபங்கஸ் தாக்கம் என்றால் மூன்று மாதம் மருந்து கொடுப்பாராம். வேறு காரணமாக இருந்தால் தன்னால் எதுவும் செய்ய இயலாது என்றும், அது தானாகவே மாறுகிற போது மாறும். மாறாவிட்டால்... இப்போது செய்வது போல் பூச்சுப் பூசி மறைத்துக் கொள்ளவேண்டியதுதான் என்றும் சொல்லி அனுப்பினார்.

நகத்தை நறுக்கிக் கொண்டேன். பரிசோதனைச்சாலையில் இம்முறை வழக்கமான கேள்விகளுக்கும் மேலதிகமாக இரண்டு கேள்விகள் கேட்டார்கள். 1. சமீபத்தில் எப்போதாவது பொதுக் குழியலறை பயன்படுத்தியதுண்டா? 2. சமீபத்தில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டீர்களா? கேட்டுக் கொண்டு மீதமிருந்த பாதிக்கப்பட்ட பகுதியையும் நறுக்கிக் கொண்டார்கள்.
 
தை மாதம் - இலங்கையில் என் விடுமுறைக்காலம், மழைக்காலமாக இருந்தது. தெருவில் ஓடிய அழுக்கு நீரில் கால்கள் நனைந்து வெகு நேரம் ஊறி இருந்த நாட்கள் அதிகம்.

வெள்ளியன்று பாடசாலை முடிந்து வந்து பார்த்த பொழுது தொலைபேசியில் பதிவானதொரு செய்தி இருந்தது. “உங்கள் நகத்துக்கான முடிவு தெரிந்துவிட்டது. வைத்தியர் சொன்னதுதான். மருந்துச் சிட்டை தயாராக இருக்கிறது. வந்து பெற்றுக் கொள்ளுங்கள். இதற்குக் கட்டணம் எதுவும் இல்லை,” தாதியின் குரல்.

நிறமில்லா நகப்பூச்சுப் போல் சின்னதாக இரண்டு குப்பிகள் கிடைத்திருக்கின்றன. பாதிக்கப் பட்ட பகுதி நகத்தை ஒட்ட நறுக்கி விட்டு மேற்புறத்தைச் சுரண்டிக் கொள்ள வேண்டும். முதல் மாதம் ஒன்றுவிட்டொரு தினம் பூச வேண்டும். வாரமொருமுறை ‘ரிமூவர்’ கொண்டு சுத்தம் செய்து “நெய்ல் ஃபைல்” கொண்டு சுரண்டிக் கொள்ள வேண்டும். மருந்தில் வெடிப்புத் தெரிந்தால் இட்டு நிரப்ப வேண்டும். இரண்டாம் மாதம் வாரம் இருமுறையும் மூன்றாம் மாதம் வாரமொருமுறையும் பூச வேண்டும். மாத்திரை என்றால் சுலபம் போல் தோன்றுகிறது; சட்டென்று வாயில் போட்டு முழுங்கி விடலாம். பரவாயில்லை, ஒரு தீர்வு சொன்னார்கள் என்பது நிம்மதியாக இருக்கிறது.

முதற் சந்திப்பில் வைத்தியர் “கூகிள்’ செய்து பாருங்கள்,” என்று ஒரு கடதாசியில் ‘onycholysis’ என்று எழுதிக் கொடுத்தார். கிடைத்த படங்கள் பார்க்க சங்கடமாக இருந்தது. என் நிலமை பரவாயில்லை என்பது மட்டும் ஆறுதலான விடயம். ;)

மழை, ஈரலிப்பு மட்டுமல்லாமல் நான் செய்யும் வேறு சில (பல) வேலைகளும் தவறாக இருப்பது இப்போ புரிகிறது. ;) சில தீர்மானங்கள் எடுத்திருக்கிறேன்; அவற்றில் முக்கியமானது... நகத்தினால் தட்டச்சு செய்வதில்லை என்பது. (key 'A' - யில் ஏற்கனவே பள்ளம் ஒன்று தெரிகிறது.)

பயமாக இருக்கிறதே. ;) 
Prevention is better than cure

42 comments:

  1. கால் பராமரிப்பது கொஞ்சம் மெனக்கெட்ட வேலை என்றாலும் அதிலும் உங்கள் கலையழகு சூப்பர்.
    ”ஒனைகோலைசிஸ்” என்றால் என்னன்னு தெரிஞ்சிகிட்டேன்,வந்த வேகத்தில் போய்விடும்.அழகான பகிர்வு.

    ReplyDelete
  2. இமா கண்டிப்பாக நகங்களை பராமரிக்கனும் இல்லை என்றால் நோய் தொற்று அதிகம் வரும்.
    இதனாலே தொப்பி போல் மருதாணி பேக் போடுவது,

    மருதாணியில் மஞ்ச்ள் கிராம்பு கலந்து தொப்பி வைப்பது.
    சில நேரம் நகத்தை பார்த்தாலே டாக்டர்கள் கண்டு பிடிச்சிடுவாஙக்,
    சிலருக்கு சாமான் தேய்த்து ஓவ்வாமையால் கூட நகம் அழுகி போயிருகு.

    ReplyDelete
  3. நானும் வந்த வேகத்திலேயே சிகிச்சை ஆரம்பித்துவிட்டேன் ஆசியா. நிறையப் பேர் பாதங்களைப் பார்த்திருக்கிறேன். சிகிச்சை என்று ஒன்று இருக்கும் போது கவனிக்காமல் விடுவானேன்; கவலைப்படுவானேன்.

    ReplyDelete
  4. கடைசி வரி 1000 சதம் உண்மை :-)

    ReplyDelete
  5. //அவற்றில் முக்கியமானது... நகத்தினால் தட்டச்சு செய்வதில்லை என்பது.//

    ஐயோ இதென்ன ஹைட்ரஜன் பாம் மாதிரி தெரியுது..அவ்வ்வ்வ் :-))

    ReplyDelete
  6. //நகங்களை பராமரிக்கனும் இல்லை என்றால் நோய் தொற்று அதிகம் வரும்.// ;) பாரமரிக்கிற எனக்கே வந்ததே ஜலீ. நான் நகத்தை அளவோடு நறுக்கி வைத்திருந்தால் இப்படி ஆகி இருக்காதோ என்னவோ! இல்லாவிட்டால் வெள்ளத்தில் உலாவாமலாவது இருந்திருக்க வேண்டும். ;)

    //நகத்தை பார்த்தாலே டாக்டர்கள் கண்டு பிடிச்சிடுவாங்க// உண்மை. அதனால் நான் இனிமேல் நகத்திற்கு மருதாணி வைப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். காலில் ஆனதுபோல் கையில் ஆகி இருந்தால் டாக்டர்கள் கண்டுபிடிக்க இயலாதபடி மருதாணி நிறம் எல்லாவற்றையும் மூடிமறைத்திருக்கும். பிரச்சினை தீவிரமானதின் பின்தான் தெரியவே வந்திருக்கும்.

    ReplyDelete
  7. இது பெண்கள் பதிவு என்பதால் என்ன சொல்றதுனு தெரியலை அப்படி ஒன்னும் சொல்ல வில்லை யென்றாலும்...

    வலை பூவிற்கு வராதது போலாகிவிடும்.

    நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  8. Prevention is better than cure..
    க‌ண்டிப்பாக‌..


    பாத‌ங்க‌ளை க‌வ‌னித்து கொள்ளுங்க‌ள் இமா..

    ReplyDelete
  9. கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு....

    ReplyDelete
  10. நகத்தினால் தட்டச்சு செய்வதில்லை என்பது. (key 'A' - யில் ஏற்கனவே பள்ளம் ஒன்று தெரிகிறது.)

    ஹா ஹா ஹா.... சீக்கிரம்... ஆஆதிஸையும் கவனிக்க சொல்லுங்க டீச்சர்.... அவங்க உங்களுக்காவது கீ போர்டில் A key மட்டுந்தான் பள்ளமாயிருக்கு..... அங்கே கீ போர்டே பள்ளமாகி டேபிள் வரை போத்தல் போட்டுவிட்டார்கள்.... ஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  11. மழை தண்ணீரில் நனைந்ததால் உடனே infection ஆகியிருக்கும் இமா .வெள்ள நீரில் சாக்கடை நீரும் கலந்திருக்கும் .கொஞ்ச நாளைக்கு நகப்பூச்சு ,cleaning liquids ,.chemicals இவற்றை தவிருங்கள் .

    ReplyDelete
  12. இமா,நல்லதொரு விழிப்புணர்வு பதிவு.பகிர்வுக்கு நன்றி.ஏன் இமா கால நகங்களை ஒட்ட நறுக்கி இருக்கலாமே?
    (எனக்கு மில்லி மீட்டர் அளவேனும் கை கால்களில் நகம் இருந்தால் தூக்கம் வராது.உறுத்தினால் நடு ஜாமத்தில் உட்கார்ந்து கூட நகத்தை வெட்டினால்த்தான் நிம்மதி.):0

    ReplyDelete
  13. அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்ல பதிவு.

    நான் என் 18 வயதில் ஒரு ஆட்டோமொபைல்ஸ் ஸ்பேர் பார்ட்ஸ் for Heavy Vehicles விற்கும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தேன். சின்னச்சின்ன 2 wheelers வண்டிகளுக்கு [shock absorbers] ஷாக் அப்ஸார்வர்ஸ் போல லாரிகள் பஸ்களுக்கு, ஸ்பிரிங் பட்டைகள் என்று இருக்கும்.

    நல்ல வெயிட்டாக கனமாக இருக்கும் பலவற்றை சைஸ்வாரியாக சுவற்றில் சாத்தி நிறுத்தி வைத்திருப்பார்கள்.

    ஒரு ஸ்பிரிங் பட்டையை நான் எடுக்கும்போது வேறொன்று சரிந்து என் கால் கட்டை விரலில் விழுந்து, கருரத்தம் குழம்பி, பார்க்கவே சகிக்காமல் கருப்புக்கலராகி விட்டதுடன் நகமும் இரண்டாக உடைந்து விரலிலிருந்து கீழே விழாமல் மிகுந்த அவஸ்ததைகளும், வலியும் கொடுத்து வந்தது.

    பிறகு பல நாட்கள் கழித்து, எனக்கு அவஸ்தைகள் கொடுத்தது போதும் என்று அதற்கே அலுத்துப்போயோ என்னவோ, அவை இரண்டும் தானாகவே வெளியேறி விட்டன.

    ஆச்சர்யம் என்னவென்றால் அதன் பிறகு அடுத்துள்ள சதையே நகமாக மாறி விட்டது. இப்போது இரண்டு கால் கட்டைவிரல் நகங்களுக்கும் எந்த வித்யாசமும் இல்லாமல் உள்ளது.

    நகம் வளர வளர முதல் வேலையாக நான் ஒட்ட வெட்டியெறிந்து விடுவேன்.

    பெண்களுக்கு சற்றேனும் நகம் இருப்பது, தற்காப்புக்கு நல்லது தான் என்று நினைக்கிறேன்.

    பதிவுக்கும், அனுபவப் பகிர்வுக்கும் நன்றிகள். vgk

    ReplyDelete
  14. புத்தம் புதிய கொலுசு, மெட்டி, நகப் பாலீஷ், வரையப்பட்டுள்ள மருதாணிக்கோலம் போன்றவற்றைப் பார்த்ததும், அடுத்த பிறவியென்று ஒன்று இருந்தால் பெண்ணாகப் பிறக்கணும் என்ற ஆவலை ஏற்படுத்துவதாக உள்ளது.

    ReplyDelete
  15. ஆசியா,
    //வந்த வேகத்தில் போய்விடும்.// ம். அது 100% சொல்ல இயலாது. கவனிக்காவிட்டால் சிரமமாகிவிடும் சாத்தியமும் இருக்கிறது.

    ReplyDelete
  16. //ஹைட்ரஜன் பாம் மாதிரி// ??? ;)

    ReplyDelete
  17. அயுப்.... //இது பெண்கள் பதிவு என்பதால்// கர்ர்ர். ஆண்களுக்கு நகம் வளர்வதில்லையா?

    //என்ன சொல்றதுனு தெரியலை// ;)
    //அப்படி ஒன்னும் சொல்ல வில்லை யென்றாலும்...
    வலை பூவிற்கு வராதது போலாகிவிடும்.// க்ர்ர். ;) நான் அப்படி நினைப்பதில்லை எப்பொழுதும். No obligation.

    உங்கள் வசதி; உங்கள் நேரம்; உங்கள் இஷ்டம். இப்போ.... உங்கள் நகம். ;))

    ReplyDelete
  18. இர்ஷாத் வந்திருக்காங்க, ஆனா ஸ்மைலி போடல. ;))
    தாங்ஸ் இர்ஷாத்.

    ReplyDelete
  19. ;) ம்... வீட்டோட டொக்டர் இருக்கிற ஆட்களுக்கு நான் சொல்லத் தேவையில்லை ராஜேஷ். அவங்களே கவனமா இருப்பாங்க.

    ReplyDelete
  20. ஆமாம், நீங்கள் சொன்னது சரிதான் ஏஞ்சலின். இப்போ இயல்பாக நிம்மதியாக இருக்கிறார்கள். இந்த ஒரு நகத்திற்கு மட்டும் விசேட பராமரிப்பு.

    பாதிக்கப்பட்ட பகுதியை நீக்கினால் கீழே பார்க்க சகிக்கவில்லை. யக். ;( படம் எல்லாம் போட மாட்டேன். இப்போதான் வேதனையாக இருக்கிறது; கூச்சமாக இருக்கிறது. இன்று இதனோடு நாள் முழுவதும் சப்பாத்தும் அணிந்து... பார்க்கலாம்.

    ReplyDelete
  21. ஸாதிகா.... //நல்லதொரு விழிப்புணர்வு பதிவு.// ம். யாம் பெற்ற துன்பம் பெறவேண்டாம் எவரும். ;)

    //நகங்களை ஒட்ட நறுக்கி இருக்கலாமே?// சின்னதில் அப்படித்தான் செய்துவிட்டார்கள். என் நகங்கள் சாதாரணமாகவே குட்டி. நான் வேறு கடித்துவைத்தேன்.

    பதின்ம வயதுகளில் மனது சொல்லிற்று வளர்க்கச் சொல்லி. பிறகு... அழகுணர்ச்சி + பாராட்டுப் போதை என்று வையுங்களேன். ;))

    எப்போவாவது ஒட்ட வெட்டி விடுவேன். அப்போதெல்லாம் சிரமமாக உணர்வதுண்டு. இப்போதும் அந்த நகம் தவிர மீதி எல்லாம் விரல் அளவுக்கு விட்டுத்தான் நறுக்கி இருக்கிறேன்.

    ReplyDelete
  22. தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி ஐயா.

    இங்கு சில வேலைகளுக்கு பாதுகாப்புப் பாதணிகள் பரிந்துரைப்பார்கள். என் மூத்தவர் முன்பு ஒரு பேக்கரியில் பேக்கராக இருந்தார். வேலை கொடுக்குமுன் இரும்பு முன்பகுதி கொண்ட காலணி, அதுவும் அவர்கள் சொல்லும் 'ப்ராண்ட்' வாங்கி ரசீது கொடுத்தபின்தான் ஒப்பந்தம் கையில் கொடுத்தார்கள்.

    என் மாமியாருக்கு ஒன்பது வயதாக இருக்கையில் காலில் கோவில் உண்டியல் விழுந்ததாம். கடைசிக் காலம் வரை (84) அது சரியாகவில்லை. எதையும் சின்ன விடயம்தானே என்று விடாமல் கவனிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  23. //கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு.... // இல்ல ராஜேஷ். ;) அக்டோபர் 7

    ReplyDelete
  24. கை எல்லாம் முடிஞ்சு இப்போ காலுக்கு மருதாணி போட ஆரம்பிச்சாச்சோ அவ்வ்வ்வ்வ்வ்:))).

    ReplyDelete
  25. //கை எல்லாம் முடிஞ்சு இப்போ காலுக்கு மருதாணி போட ஆரம்பிச்சாச்சோ அவ்வ்வ்வ்வ்வ்:))). //

    அதீஸ் ஏன் அழறீங்க சங்கு சக்கரம் அவ்வளவு அசிங்கமாவா இருக்கு ஹி..ஹி... ((எப்படியோ கோத்து விட்டாச்சி )) :-)))))

    ReplyDelete
  26. //Prevention is better than cure//

    இமா நகத்துக்கோ ? கீ போர்ட்டுக்கோ?:))).

    //மாயா said..
    //ஹா ஹா ஹா.... சீக்கிரம்... ஆஆதிஸையும் கவனிக்க சொல்லுங்க டீச்சர்.... அவங்க உங்களுக்காவது கீ போர்டில் A key மட்டுந்தான் பள்ளமாயிருக்கு..... அங்கே கீ போர்டே பள்ளமாகி டேபிள் வரை போத்தல் போட்டுவிட்டார்கள்.... ஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ///

    முதலையின் வயிற்றினுள் இருப்பதனால் இப்பூடியெல்லாம் பேச வைக்குதுபோல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))), வெளியில வாங்க... கரையிலதான் நிற்கிறன்:))).

    ReplyDelete
  27. //அதீஸ் ஏன் அழறீங்க சங்கு சக்கரம் அவ்வளவு அசிங்கமாவா இருக்கு ஹி..ஹி... ((எப்படியோ கோத்து விட்டாச்சி )) :-))))) //


    ஆஆஆஆஆஆ என்னாது சங்கு சக்கரமா? ஓடுங்க ஜெய் ஓடுங்க...:))).. சத்தம் கிட்டவா கேக்குதே...:))

    ReplyDelete
  28. //ஆஆஆஆஆஆ என்னாது சங்கு சக்கரமா? ஓடுங்க ஜெய் ஓடுங்க...:))).. சத்தம் கிட்டவா கேக்குதே...:)) //

    புளிய மர உச்சியில ஆல் ரெடி ஏறியாச்சு ஹா..ஹா...இருங்க எதுக்கும் கெட்டியமா மரத்தை பிடிச்சுக்கிறேன் , ஏதோ அதிர்வு கேட்குது ..அட அது என் இதய துடிப்புதான் .கை காலெல்லாம் இப்ப வே நடுக்குதே அவ்வ்வ்வ் :-)))

    ReplyDelete
  29. வணக்கம் இமா அக்கா,
    நலம் தானே?
    நகங்களின் அழகுபடுத்தல்,
    உங்களிற்கு உதவும் மருத்துவராக இருந்தவரின் இட மாற்றம்,
    விடுமுறைப் பயண நினைவுச் சிதறல்,
    நகங்களின் முக்கியத்துவம் பற்றிய சின்னக் காமெடி எனப் பல வகையான தகவல்களோடு பதிவினைத் தந்திருக்கிறீங்க.

    நன்றி.

    ReplyDelete
  30. //காலுக்கு மருதாணி// 'போ'ட ஆரம்பிச்சுக் கன வருஷம் அதீஸ். ;)
    //நகத்துக்கோ ? கீ போர்ட்டுக்கோ?// ரெண்டுக்கும்தான். ;)

    அதீஸ் & ராஜேஷ்... இங்க போத்தல், புகைத்தல் பற்றி எல்லாம் கதைக்கப்படாது, தடை. ;)

    ReplyDelete
  31. அப்ப கேள்விக்குறி; இப்ப சங்குசக்கரம். கண்ணில விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு பாக்குறாங்கள் எல்லாரும். ;)

    ReplyDelete
  32. நிரூ... //நகங்களின் முக்கியத்துவம் பற்றிய சின்னக் காமெடி // சிரிப்பு வருதோ உங்களுக்கு! கர்ர் ;)))

    வருகைக்கு நன்றி நிரூபன்.

    ReplyDelete
  33. இமா, இவ்வளவு மெனக்கெடுவீங்களோ நகத்துக்கு. எனக்கு மிகவும் மென்மையான நகங்கள். நகங்கள் உடைந்து விடும். நெய்ல் strengtheners போடலாமா என்று மருத்துவரிடம் கேட்டேன். அவர் இருக்கிற வரைக்கும் போது போ என்று விரட்டி விட்டார்.

    ReplyDelete
  34. //அதீஸ் & ராஜேஷ்... இங்க போத்தல், புகைத்தல் பற்றி எல்லாம் கதைக்கப்படாது, தடை. ;) ///

    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இமாவுக்கு எப்பவும் அதே நினைப்புத்தான்..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இது வேற போத்தலும் புகையும் இமா...:)))).

    ReplyDelete
  35. Get well இமாம்மா. வயதாகும் போது இன்னும் கவனமாக இருக்க வேணும்.

    எங்கட ஆக்களில் பலர் வெளிய போயிட்டு வந்தால், சூ போட்டுட்டு தானே போனனான் என்டு போட்டு யாரும் காலை தேய்க்கு கழுவுறேல. எங்க போயிட்டு வந்தாலும் உடனேயே காலை கொஞ்சம் டெட்டோல் சவர் ஜெல் போட்டு கழுவ வேண்டும்.

    மருத்துவமனைக்குப் போனால், ப்யூனரெலுக்குப் போனால், தலைமயிர் வெட்டப் போனால் ஊரில குளிக்காம வீட்டுக்க விடுவதில்லை. அதைப் பழிப்பவர்கள் பலர். வெளிய போயிட்டு வந்தாலே (அதுவும் சன நெருக்கடியான இடத்தால வந்தால் டெட்டோல் அல்லது லைப்போய் சவர் ஜெல் போட்ட வேணும்) நல்ல குளிச்சுப் போட்டு தான் மத்த வேலை செய்யோனும்.

    மனிக்யோர் பெடிக்யோர் எல்லாம் அழகு படுத்த என்பதை விட, ஆரோக்கியத்துக்கு உதவுபவை என்று மாதத்தில் ஒரு தடவையாவது போய் செய்ய வேணும். தரமான நெயில் பாலிஷ் போடணும். இல்லாட்டி போடாமல் கூட விடலாம். ஒரு முறை பெடிக்யோர் செய்யும் இடத்துக்குப் போய் பாத்தால் தெரியும் எவ்வளவு அழுக்கு எங்கள் கால் நக இடுக்குகளில் இருக்கிறது என்று.

    ஆண்களுக்கும் பெடிக்யோர் இருக்கு. இதல்லாம் ஊரில செஞ்சமா என்று குறுக்கு கேள்வி கேட்டு டென்சன் பண்ண கூடாது. கால நிலை மாற்றங்களால் நிறைய உடல் உபாதைகள் வருகின்றன. இவையும் கவனிக்கப்படவேண்டும்.

    ReplyDelete
  36. //வயதாகும் போது இன்னும் கவனமாக இருக்க வேணும்.// krrrrrrrrr ;))
    //Get well soon!// thank u ;)

    ReplyDelete
  37. உபயோகமான பதிவு. வாழ்க கலாநிதி இம்ம்ஸ்...
    :-))

    ReplyDelete
  38. வெளியே தெருவே போயிட்டு வந்தால், வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது உப்பைப் போட்டு பத்து நிமிட நேரம் கால்களை வைத்திருந்தால் இதுமாதிரி தொந்தரவுகள் எல்லாம் வராது என்று சொல்கிறார்களே இது உண்மையா டாக்டர்??

    ReplyDelete
  39. //கலாநிதி இம்ம்ஸ்... // ம். ;) இம்சை இல்லைல்ல! இரட்டை ஸ்மைலி. ;))

    //சிறிது உப்பைப் போட்டு பத்து நிமிட நேரம்...// வராதுதான். என் வீட்டில் நடக்கும்.
    விடுமுறை என்று இன்னொருவர் வீட்டில் தங்கும்போது கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டாமா? ;)

    அது கொடுமையான மழைக்காலம். ஏழு வருடங்களின் பின் போயிருந்தேன். காலையில் கிளம்பினால் மதியம் வருவோம். மதியம் கிளம்பினால் இரவு வருவோம். பிறந்தமண்ணில் காலாற நடந்து... ;) கால் மணிக்கணக்காக ஊறி இருக்கும். வீட்டுக்கு வரும்போதே யாராவது காத்திருப்பார்கள். அப்போ இதைப் பெரிதுபடுத்தத் தோன்றவில்லை.

    ReplyDelete
  40. //இவ்வளவு மெனக்கெடுவீங்களோ நகத்துக்கு.// மினக்கெடுறது எண்டு இல்ல வான்ஸ். செய்தி பார்க்கேக்க, சுப்பர் சிங்கர் பார்க்கேக்க சைட் பிஸ்னஸ். ;)

    ReplyDelete
  41. நகமாயினும் சரி,உடம்பில் எந்தப்பாகமாயினும் சரி எல்லாம் முக்கியம் என எனக்கு ஏற்பட்ட சுகயீனத்தில் இருந்து தெரிந்து கொண்டேன்.
    நானும் சில கொள்கைகளை கடைப்பிடிக்க கற்றுக்கொண்டேன் இமா.
    உங்க அனுபவம் எங்களுக்கு ஒரு பாடம். நானும் இன்னும் கூடுதல் கவனம் நகத்தில் செலுத்தத்தொடங்கிவிட்டேன். Gute Besserung.
    அழகாக இருக்கு உங்க மெஹந்தி.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா