Friday, 2 September 2011

சின்னப் பாதங்கள்

குடும்பத்தில் சின்னதாய்ப் புதுவரவொன்று என்பது எவ்வளவு அற்புதமான விடயம். 
பால்வடியக் குறுநகை, பிஞ்சுக் கால்களால் தத்தித் தடுமாறி நடை, தப்புத்தப்பாய் உச்சரிக்கும் வார்த்தைகள்... அவற்றைப் புரிந்துகொள்ள நெருங்கியவர்களால் மட்டுமே முடியும். 

மனித வாழ்வின் அழகான ஆரம்ப நிலை இது. நாள் முழுக்க, ஏன் ஆயுள் முழுக்க ரசித்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கும்.
ஆனால் உண்மையில் இது தொடர்ந்தால்!!! ரசிக்க இயலுமா!!??

என் ஒரு மாணவருக்கு பாடசாலை முடியும் நேரம் அழைத்துப் போவதற்காக ‘டாக்ஸி’ வரும். தினமும் பாடசாலை மணி அடிக்கப் பதினைந்து நிமிடங்கள் முன்பாகவே வந்துவிடும். என்ன காரணம் என்று கேட்கத் தோன்றியதில்ல; எனக்கே அது நல்லதென்று தெரியும். பன்னிரண்டு வயதான இந்தச் சின்னவர் அளவில் சின்..னவர்; அறிவில் இன்னும் சின்னவர்.

நானும் முயற்சிக்கிறேன்; இன்னமும் விலாசம், வீட்டுத் தொலைபேசி எண் எதுவும் மனனம் செய்யவைக்க இயலவில்லை. யாராவது கூடப் போய் ஏற்றிவிடுவது அவருக்குப் பாதுகாப்பு; எங்களுக்கும் நிம்மதி என்கிற நிலை. 

இன்று புதிதாக ஒரு சாரதி வந்திருந்தார். அவர் தவறான இடத்தில் வாகனத்தை நிறுத்தி இருந்தார். நாங்கள் எங்கள் இடத்தில் அமர்ந்திருந்தோம். இப்படிக் காத்திருக்கும் நிமிடங்களை நான் வாய்மூலக் கல்வி & மீட்டல் வேலைகளுக்குப் பயன்படுத்துவது வழக்கம். 

அவ்வேளை என் முன்னாள் மாணவி ஒருவர் எம்மோடு வந்து அமர்ந்து கொண்டார். இவர் இந்தியர். “ஹாய் மிஸிஸ். க்றிஸ்!” என்று சிரிப்போடு மெதுவே வந்து முதுகுச்சுமையை வாங்கில் இறக்கிவிட்டு அமர்ந்தார்.

“பகலில் ‘moon boot’ அணியக் கூடாது,” என்றேன்.
நிமிர்ந்து பார்த்தார். “sun boot’ தான் அணிய வேண்டும். மூன் பூட் இரவில் அணிய வேண்டியது இல்லையா!” என்றேன். சிரித்தார்.
“எப்படி இருக்கிறீர்கள்?”
“குட்” “முப்பதாம் தேதி சத்திரசிகிச்சை முடிந்தது. (இரண்டு நாட்கள் முன்புதான்) இன்னும் ஒரு மாதம் கழித்து ஆதாரங்களை எல்லாம் நீக்கி விடுவார்கள். உடனே பிஸியோதெரபி ஆரம்பிக்க வேண்டும். என் தசைகளுக்கு பயிற்சியில்லாமல் போய் மாதக் கணக்காகிறது இல்லையா?”

ஆமாம்! இவர் Cerebral palsy பிரச்சினையுள்ளவர். மூன்று வருடங்களுக்கு முன்பு சில காலம் இந்தக் குழந்தைக்கு உதவியிருக்கிறேன். எப்பொழுதும் சிரித்த முகம்; கெட்டிக்காரி. கூட இருந்தால் அந்த சந்தோஷம் யாரையும் தொற்றிக் கொள்ளும். இடது கைதான் எழுதும்; சமயத்தில் புத்தகத்தை அழுத்திப் பிடித்துக் கொள்ளுமாறு கேட்பார். கோடுகள் வரைகையில் அடிமட்டத்தை ஒருவர் கட்டாயம் பிடித்தாக வேண்டும். இல்லாவிட்டால் அது நகர்ந்து கோடு சரிந்து போகும். இப்போ உச்சரிப்புத் திருந்தி இருக்கிறது.

கால்!!!

எப்போதாவதுதான் சந்திக்க முடிகிறதென்பதால் விபரம் அதிகம் தெரியவில்லை. பிறப்பிலிருந்தே சிறிதாகவும் பலமில்லாதும் இருந்த ஒரு காலைத் திருத்தும் முயற்சி நடக்கிறது. எப்பொழுதும் சரிந்து சரிந்து மட்டும் நடப்பவர் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக walker உதவியோடு நடந்து திரிந்தார். அப்போது ஒருநாள் விசாரித்த போது வெகு சாதாரணமாகச் சொன்னார் “எலும்பை உடைத்து விட்டு தகடு பொருத்தி இருக்கிறார்கள்,” என்று. மீண்டும் அடிக்கடி சத்திரசிகிச்சைகள்; இப்போ நடைவண்டி இல்லாமல்; ‘மூன்பூட்’ அணிந்து; சரியாமல் நேர்நடை நடக்கிறார். விரைவில் குறைதெரியாத அளவு மாற்றிவிடுவார்கள் மருத்துவர்கள். விஞ்ஞான வளர்ச்சி... மருத்துவ வளர்ச்சி... எதையும் சாதித்து மற்றவர்களையும் சாதிக்க வைக்கிறது.

இவர் இன்னும் சின்னவர். இந்த வருட ஆரம்பத்தில்தான் எங்கள் பாடசாலைக்கு வந்து சேர்ந்தார். ஏழாம் ஆண்டு மாணவர். ஒரு நாள் காலை தொலைபேசி அழைப்புக்குப் பதில் சொல்ல, மறுமுனையில் தந்தை பேசினார், “இன்று சத்திரசிகிச்சை என்று அறை பதினெட்டு ஆசிரியருக்குத் தெரிவித்து விடுகிறீர்களா?” தொலைபேசி அருகே நாடாவில் தொங்கும் சிறிய குறிப்பேட்டையும் பேனாவையும் எடுத்து விபரத்தைக் குறித்துவிட்டு வகுப்பாசிரியையிடம் போய்ச்  சொன்னேன். “என்ன!!!” என்று புதிராகப் பார்த்தார் அவர். சின்னவர் மூன்று நாட்கள்தான் பாடசாலைக்கு வரவில்லையாம். அதன்பின் கற்கவென்று இன்று வரை வரவில்லை.

அவரைச் சந்தோஷப்படுத்தவென்று, பெற்றோரைச் சொல்லி அழைத்துவர வைத்தோம். இரு முறைகள் கைத்தடிகளோடும் இரு முறை சக்கர நாற்காலியிலும் வந்தார், தலையில் முடியில்லாமல். ஆமாம், கால் எலும்பில் புற்றுநோய் தாக்கி இருக்கிறது. சிகிச்சைகள் நடக்கின்றன. இன்று முக்கிய சத்திரசிகிச்சை; எலும்பை முழுதாக எடுத்துவிட்டு செயற்கை எலும்பு பொருத்துகிறார்கள்.

இந்த அழகுக் குழந்தை குணமாகி மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும்; எல்லாக் குழந்தைகளையும் போல இனிமையாக தன் குழந்தைப் பருவத்தை அனுபவிக்க வேண்டும்.

 

சிரித்துச் சிரித்தே எல்லோரையும் சிறையிலிடும் என் செல்லக்குட்டி ஒருவர் இருக்கிறார். இவருக்கும் Cerebral Palsy தான். கடகடவென்று உயர்ந்து வருகிறார். (இவர் தந்தை அசாதாரண உயரமாக இருப்பார்.) சின்னவர் இப்போதே என்னைவிட உயரம். என்னால் தொடர்ந்து உதவ இயலுமா என்பது சந்தேகமாக இருக்கிறது. இவரை அன்பாகக் கவனித்துக் கொள்ள சின்னவருக்குப் பிடித்தவராக யாராவது ஒருவர் அமைய வேண்டும்.

சிலருக்குத் தன்னம்பிக்கை ஆதாரம்; சிலருக்கு மலர்ந்த முகம் ஆதாரம். தங்களிடம் உள்ளதைப் பயன்படுத்தி சுற்றி உள்ளவர்களைக் கவர்ந்து அவர்கள் ஆதரவையும் பெற்றுக் கொள்கிறார்கள். வாழ்க்கையில் கிடைப்பவற்றைப் பற்றிக் கொண்டு மெதுவே படரும், படரத் துடிக்கும் இந்த இளம் கொடிகளுக்காக உங்கள் பிரார்த்தனைகளை வேண்டி நிற்கிறேன். 

நம்பிக்கையுள்ளோர் இந்தச் சின்னப் பாதங்களுக்காகவும் இவர்கள் போல் பிறந்து வளரும் அனைத்துப் பாதங்களுக்காகவும் ஒரு நொடி இறைவனைப் பிரார்த்திக்குமாறு அன்போடு வேண்டுகிறேன்.

-    இமா

39 comments:

  1. நம்பிக்கையுள்ளோர் இந்தச் சின்னப் பாதங்களுக்காகவும் இவர்கள் போல் பிறந்து வளரும் அனைத்துப் பாதங்களுக்காகவும் ஒரு நொடி இறைவனைப் பிரார்த்திக்குமாறு அன்போடு வேண்டுகிறேன்.

    நிச்சயமாக பிரார்த்திகிறோம்
    ஆண்டவன் கூட நல்ல சுய நலமற்ற
    பிரார்த்தனைகளுக்குத்தான்
    அதிகம் செவிசாய்க்கிறான்

    ReplyDelete
  2. // தங்களிடம் உள்ளதைப் பயன்படுத்தி சுற்றி உள்ளவர்களைக் கவர்ந்து அவர்கள் ஆதரவையும் பெற்றுக் கொள்கிறார்கள்.//
    ஆமாம் இமா .என்னை ஆச்சர்யபடுத்தும் விஷயம் இது .அவர்களுக்குள் எத்தனை திறமை !!!!!!.இந்த மலர்களுக்கு எங்கள் பிரார்த்தனைகள் கண்டிப்பா உண்டு இமா

    ReplyDelete
  3. //நம்பிக்கையுள்ளோர் இந்தச் சின்னப் பாதங்களுக்காகவும் இவர்கள் போல் பிறந்து வளரும் அனைத்துப் பாதங்களுக்காகவும் ஒரு நொடி இறைவனைப் பிரார்த்திக்குமாறு அன்போடு வேண்டுகிறேன்.//

    மனிதாபமான முறையில் பதிவு எழுதப் பட்டிருக்கின்றது.

    வாழ்த்துக்கள்!

    என்றும் எங்களின் பிறார்த்தனையுண்டு இச்செல்வங்களுக்கு.

    நன்றி சகோ.

    ReplyDelete
  4. //வாழ்க்கையில் கிடைப்பவற்றைப் பற்றிக் கொண்டு மெதுவே படரும், படரத் துடிக்கும் இந்த இளம் கொடிகளுக்காக உங்கள் பிரார்த்தனைகளை வேண்டி நிற்கிறேன்.//

    இன்றே இப்போதே ஆரம்பித்து தினமும் நிச்சயமாக பிரார்த்திக்கிறோம், மேடம். vgk

    ReplyDelete
  5. இந்த பதிவை படிச்சதும் கண் முழுக்க கண்ணீர் இமா. "எந்த குறையும் இல்லாம எல்லோரையும் வை இறைவா " என்பது தான் நான் தினமும் வேண்டிக்கறது. இவங்களுக்காக இறைவனிடம் பிராத்தித்து கொள்கிறேன் இமா.

    ReplyDelete
  6. கண்டிப்பாக இந்த இளங்கொடிகளுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்....இந்த பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி... உங்களது நல் உள்ளம் பிரதிபலிக்கிறது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. மிக்க நன்றி ரமணி, ஏஞ்சல், அயுப், vgk Sir, ப்ரியா, ராஜா & ராஜேஷ்.

    தினமும் என் குடும்பத்தாரை விடவும் இவர்களுடன் அதிக நேரம் கழிந்து விடுவதால் இவர்களும் என் குடும்பம், என் குழந்தைகள் என்கிறது போல ஒரு ஒட்டுதல். அப்பப்போ மனதில் வந்து உட்காரும் கனத்தைத் தவிர்க்க இயல்வதில்லை. இன்று இங்கு இறக்கி வைத்தேன். உங்கள் பதில் ஆறுதலாக இருக்கிறது. முடிந்தபோதெல்லாம் பிரார்த்தியுங்கள். உங்கள் அன்புக்கு நன்றி.

    ReplyDelete
  8. மன்னிக்கவும் சற்று தாமதம்
    இந்த அழகுக் குழந்தை குணமாகி மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும்; எல்லாக் குழந்தைகளையும் போல இனிமையாக தன் குழந்தைப் பருவத்தை அனுபவிக்க வேண்டும்.

    //

    நிச்சயம் பிராத்திக்கிறேன் இந்த குழந்தை மட்டும் இல்லாமல் அங்கு உள்ள அத்தனை குழந்தைகளும்
    நலம்பெற எப்போதும் மகிழ்வுடன் இருக்க பிராத்திக்கிறேன்.

    ReplyDelete
  9. உதவ இயலுமா என்பது சந்தேகமாக இருக்கிறது. இவரை அன்பாகக் கவனித்துக் கொள்ள சின்னவருக்குப் பிடித்தவராக யாராவது ஒருவர் அமைய வேண்டும்.

    /

    நிச்சயம் கடவுள் இவருக்கும் பிடித்த ஒருவர் கவனித்து கொள்வார்

    ReplyDelete
  10. வாசிக்கும்போதே மனது கனக்கின்றது
    ...
    கூடவே இருந்து கவனித்து கொள்ளும் உங்களுக்கு எப்படி இருந்து இருக்கும்..
    உங்கள் அனுபவமும் அன்பும்தான் அந்த குழந்தைகள் இன்னும் சந்தோசமாய் இருக்கிறார்கள்..

    என்னால் ப்ராத்தனை மட்டும்தான் முடிகிறது
    அன்பு குழந்தைகளுக்கு கூட இருந்து உதவ முடியவில்லை என்ற ஏக்கம் மனதில்.

    உங்களுக்கும் கடவுள் நீண்ட நலமும் கொடுக்க வேண்டுகிறேன்..

    thank you for the post.

    ReplyDelete
  11. Sun boot, moon boot டைம்மிங் காமெடி ரசித்தேன் அக்கா.,
    மழலைகளின் உணர்வுகளை ஆரம்பத்தில் மனதில் சந்தோசம் எழும் வண்ணம் படைத்து விட்டு, இறுதியில் மனதைக் கனக்க வைத்து விட்டீங்களே....

    விரைவில் அந்த மாணவி குணமாகி வர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  12. //என்னால் ப்ராத்தனை மட்டும்தான் முடிகிறது // அது போதும் மகன், தாங்ஸ்.

    //உங்களுக்கும் கடவுள் நீண்ட நலமும் கொடுக்க வேண்டுகிறேன்..// ;))) இருக்கிற அத்தனை காலமும் வலையுலகைப் பாடாய்ப் படுத்துவேன். ஸ்பெல்லிங் மிஸ்டேக்லாம் புடிப்பேன், பரவால்லயா?? ;))

    ReplyDelete
  13. நிரூபன்... உங்களுக்கும் என் அன்பு நன்றி. ;) சின்னவர்கள் சிகிச்சை முடிவுகள் பற்றி பின்பு வந்து சொல்கிறேன்.

    ReplyDelete
  14. தங்கள் கைவண்ணம் மிளிர்வதைப்பற்றி, திருமதி மனோசுவாமிநாதன் அவர்கள், வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளதைப் பார்த்தேன்.

    மிகவும் சந்தோஷப்பட்டேன்.
    பாராட்டுக்கள்.
    வாழ்த்துக்கள்.
    vgk

    ReplyDelete
  15. vgk Sir,

    தங்கள் பாராட்டு மிகுந்த சந்தோஷத்தைத் தருகிறது. இங்கு தேடி வந்து பதிவிட்டிருக்கிறீர்கள். மிக்க மிக்க நன்றி. :)

    ReplyDelete
  16. என்ன சொல்வதுன்னே புரியல . எல்லாம் ஒருங்காக இருப்பவர்கள் உலகை கெடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.பொறாமை ,கோபம் ,சண்டை இன்னபிற செய்கைகளால்.... :-(

    இவர்களுக்காக நானும் பிராத்திக்கிறேன் .இறைவன் பார்ப்பது அன்பு நிறைந்த உள்ளங்களைதான் :-)

    ReplyDelete
  17. //ஆனால் உண்மையில் இது தொடர்ந்தால்!!! ரசிக்க இயலுமா!!?? //


    :-( :-(

    ReplyDelete
  18. மிக நல்ல பகிர்வு..

    ReplyDelete
  19. கருத்துக்கு நன்றி ஜெய் & ஆசியா.

    ReplyDelete
  20. //ஆனால் உண்மையில் இது தொடர்ந்தால்!!! ரசிக்க இயலுமா!!??//

    முதுமையில் வரும் இரண்டாம் குழந்தைப் பருவத்தையே ரசிக்க முடிவதில்லை. இதுபோன்ற குழந்தைகளைப் பார்க்கும்போது ஒரு நடுக்கம் வரும். :-((((

    ReplyDelete
  21. நானும்..நானும்...நானும்.. பிரார்த்திக்கிறேன் இமா... பிறந்திட்டோரை காப்பாத்தச் சொல்லியும், இனிமேல் இப்படிப் பிறப்பு வேண்டாமே எனவும்.

    ReplyDelete
  22. சின்னப் பாதத்துக்கும் பெரிய பெரிய சிலிப்பர்களுக்கும் என்ன சம்பந்தம் இமா?:).

    ReplyDelete
  23. ஜெய்லானி said...

    .இறைவன் பார்ப்பது அன்பு நிறைந்த உள்ளங்களைதான் :-////

    ஐஐஐஐ..... வாழ்க்கையில முதன்முதலாக கிட்னியை யூஸ் பண்ணி ஒரு பின்னூட்டம் போட்டிருக்கிறார் ஜெய்:))... ஆஆஆஆஆ வழிவிடுங்கப்பா எனக்கு எமேஜென்சி மீற்றிங் இருக்கு, நான் கெதியாப் போகோணும்:)).

    ReplyDelete
  24. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. ஆசிரியர் தின வாழ்த்துக்கள் இமா. உங்கள மாதிரி ஒரு ஆசிரியருக்கு இந்த நாளில் வாழ்த்து சொல்வதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  26. மனதைக் கனக்க வைத்த பதிவு.. இமா ஆசிரியர் தின வாழ்த்துக்கள். அனைவரும் நலம் பெற வேண்டும்.

    ReplyDelete
  27. நானும் அக்குழந்தைகளுக்காக பிரார்த்திக்கிறேன் இமா.
    ஆசிரியர்தின வாழ்த்துக்கள்.(லேட்டாக)

    ReplyDelete
  28. இமா, மனம் கனக்கச் செய்யும் பதிவு. வெளிநாடுகளில் இவர்களை அன்பாக பார்க்க நிறைய செலவு செய்கிறார்கள். ஆனால், எங்கள் நாடுகளில் இந்த நிலமையில் குழந்தைகள் இருந்தால் அவர்களின் கதி... அரவணைக்க பெற்றோரை விட்டால் யாருமில்லை.

    ReplyDelete
  29. @ ஹுஸைனம்மா,

    //இரண்டாம் குழந்தைப் பருவத்தையே ரசிக்க முடிவதில்லை.// உண்மைதான். ஆனாலும் எங்கள் குடும்பத்தாருக்கு ரசிக்கும் பாக்கியம் கிடைத்தது. எப்போவாவது ஒரு சிலர் அப்படி இருப்பார்கள்.

    ReplyDelete
  30. //சின்னப் பாதத்துக்கும் பெரிய பெரிய சிலிப்பர்களுக்கும் என்ன சம்பந்தம்// அது எல்லாமே சின்னப்பாதங்களின் செருப்புகள்தான். ஒரு ஐந்தாமாண்டு புலமைப்பரீட்சை ஆயத்த வகுப்பின் முன்னால் எடுத்தது அதீஸ்.

    ReplyDelete
  31. வாழ்த்துக்கு நன்றி ப்ரியா & அம்முலு.

    கருத்துக்கு நன்றி வானதி. நீங்கள் எங்க இருந்து, என்னத்தை சுட இல்ல என்று இங்க சொல்லட்டோ!! ;))))

    ReplyDelete
  32. தேனம்மை, வணக்கம். முதல்முறையா வந்திருக்கீங்க, எதிர்பார்க்கல. சந்தோஷம். ரொம்ப நன்றிங்க.

    ReplyDelete
  33. எனக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் அந்தச் சின்னக் குழந்தைகளுக்காகப் பிரார்த்திக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    சின்னவருக்கு சத்திரசிகிச்சை முடிந்துவிட்டது. இன்னமும் வைத்தியசாலையில், கண்காணிப்பில் இருக்கிறார். இந்த வாரம் மீண்டும் கீமோ ஆரம்பிக்கிறார்கள். தொடர்ந்தும் அவரை உங்கள் பிரார்த்தனைகளில் வைத்திருக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  34. நீங்கள் எங்க இருந்து, என்னத்தை சுட இல்ல என்று இங்க சொல்லட்டோ!! ;//இம்மி, ம்ம்ம்... சொல்லுங்க. இந்தம்மா அந்தப் பக்கம் வராது என்ற தைரியத்தில் தான் போட்டேன். எங்க உங்க மருமவனை காணவில்லை. இப்படி வேலைகள் என்றால் முண்ணனியில் நிற்பாரே கிக்க்க்க்க்க்...

    ReplyDelete
  35. //இந்தம்மா அந்தப் பக்கம் வராது என்ற தைரியத்தில் தான் போட்டேன். எங்க உங்க மருமவனை காணவில்லை. இப்படி வேலைகள் என்றால் முண்ணனியில் நிற்பாரே கிக்க்க்க்க்க்...//

    அங்கே வேனான்னு சொன்னதால இங்கே சொல்ல வரல .அப்படி சொல்லுவதா இருந்தா “என் பக்கத்தி”ல் சொல்லி இருப்பேனே..:-)))..

    இப்போ பாவம் பூஸ்...என்னென்னு தெரியாம திரு திருன்னு விழிக்கும் ...பாவம் அவ்வ்வ்வ்வ் :-))

    ReplyDelete
  36. சின்னவர் காலை மடிக்காமல் வளைக்காமல் இன்னமும் ஆறு வாரங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டுமாம். கீமோவும் தொடர்கிறது. அனைவர் பிரார்த்தனைகளுக்கும் என் அன்பு நன்றிகள். _()_

    ReplyDelete
  37. இமாவின் உலக நட்பு வட்டத்திற்கென ஒரு நல்ல செய்தி கொண்டுவந்திருக்கிறேன்.
    ஆம்... //கால் எலும்பில் புற்றுநோய் தாக்கி இருக்கிறது. சிகிச்சைகள் நடக்கின்றன. இன்று முக்கிய சத்திரசிகிச்சை; எலும்பை முழுதாக எடுத்துவிட்டு செயற்கை எலும்பு பொருத்துகிறார்கள்.// என்றேனே. அந்தக் குட்டியர் வீட்டிலிருந்து இன்று பாடசாலைக்குச் செய்தி வந்திருக்கிறது, சிகிச்சைகள் அவரை புற்றுநோயிலிருந்து முழுமையாகக் குணமடைய வைத்துவிட்டது என்பதாக மருத்துவப் பரிசோதனைகள் சொல்கின்றனவாம். இரண்டு வாரங்கள் முன்பாக, "இனிமேல் தன்னால் இயலாது," என்று சொல்லியிருந்தார் சின்னவர். பெற்றோரும் கிட்டத்தட்ட சோர்ந்து போன நிலையில் இருக்க, இந்தச் சந்தோஷச் செய்தி வந்திருக்கிறது. நாளை அரை நேரம் பாடசாலை வருகிறார். ;) மகிழ்ச்சியாக இருக்கிறது.

    உங்கள் அனைவரது பிரார்த்தனைகளுக்கும் எனது உளமார்ந்த நன்றிகள். நீங்கள் அனைவரும் உங்கள் குடும்பத்தினரும் நலமே இருக்க என் பிரார்த்தனைகள்.

    அன்புடன்
    இமா

    ReplyDelete
  38. வணக்கம். குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.
    இன்றைய வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.
    http://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_26.html

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா