காதணிகள் - முடியிலோ அல்லது என் துப்பட்டாவிலோ மாட்டி, கழன்று காணாமல் போனதால் துணை இழந்த ஒற்றைக் காதான்கள் சில என் சேமிப்பில் உள்ளன.
அவற்றுள் ஒன்று நெஸ்ப்ரஸோ கிண்ணம் ஒன்றின் நிறத்தில் இருக்கவே, மாலையாக்கலாம் என்னும் எண்ணம் வந்தது.
ஒரே நிறத்தில் இரண்டு கிண்ணங்கள் கிடைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். (கிடைக்கும் வரை காத்திருந்தால் யோசனையை மறந்துபோவேன்.) சற்று அடர்த்தியான நிறத்தில் ஒன்று கிடைத்தது. பின்பக்கம் வைக்க அது போதும். பொருந்தி வரும் நிறத்தில் button ஒன்றைத் தேடிப் பிடித்தேன். கட்டுவதற்கு கயிறு ஒன்றும் தேவைப்பட்டது.
குறடுகள், கத்தரிக்கோல், 'ஹாட் க்ளூ' - மேலதிகமாக இரண்டு தட்டைப் பலகைகளும் வேண்டியிருந்தன. கண்ணில் பட்டது சின்னவர் ஒரு கைவேலையின் பின் மீதியாகிப் போனதென்று கொடுத்திருந்த டொட்டாரா மரத்தின் குறுக்குவெட்டுத் துண்டுகள்.
(எப்பொழுதும் கிண்ணங்களை ஒரு தொகுதியாகச் சேர்த்து, சுத்தம் செய்து காய வைத்து வைத்திருப்பேன். நேரமும் மிச்சம்; நீரும் மிச்சம்.)
சுத்தமான கிண்ணம் ஒன்றை கட்டையில் கவிழ்த்து வைத்து மேலே இன்னொரு கட்டையை வைத்து நடுவில் உள்ளங்கையை வைத்து அழுத்தினால்...
தட்டையாகி இப்படித் தெரியும்.
தோட்டின் கம்பியைச் சற்று நறுக்கி வைத்தேன். நாடாவைக் கழுத்து அளவிற்கு நறுக்கி எடுத்தேன்.
பின்பக்கம் வரவேண்டிய வட்டத்தட்டைக் குப்புறப் போட்டு, அதன் மேல் 'க்ளூ' வைத்து நாடா முனைகளை சேர்த்து வைத்து, மேலே சரியான நிறத்தட்டை வைத்து ஓட்டினேன். அதன் மேல் மீண்டும் க்ளூ வைத்து பித்தானை ஒட்டிக் கொண்டேன்.
கூரான குறட்டினால் நாடா இருந்த இடத்திற்கு நேர் கீழே இரண்டு தட்டுகளின் ஊடாகவும் சேர்த்து ஒரு துளை செய்தேன்.
துளையில் தோட்டை மாட்டி கம்பியை வளைத்ததும்...
அழகான மாலை தயார்.
பொருத்தமான நிறத்தில் ஆடை இல்லாததால் இன்னும் எங்கும் அணியக் கிடைக்கவில்லை. விடுமுறையில் தையல் வேலையில் மும்முரமாக இறங்கியாக வேண்டும்.
இப்படி செய்து போட்டால் (என்ன சொல்வது.)அழகா இருக்கு. எனக்கு ஒன்று வேண்டும்..
ReplyDeleteகண்ட குப்பையிலயும் செய்றதெல்லாம் கேட்கிறீங்கள். நல்லதா ஏதாவது கேளுங்கோ அனுப்புறேன். :-)
Deleteஅழகான கைவேலைப்பாடு. பாராட்டுகள்.
ReplyDeleteதொடர்ந்து பல இடுகைகளுக்கு கருத்துத் தெரிவித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி வெங்கட்.
Delete