Friday, 3 September 2010

நட்பெனப்படுவது!!!!

இந்த வருட ஆரம்பத்தில் எனக்கு அதிபரிடமிருந்து ஒரு மின்னஞ்சல், 'இமா, புதிதாக ஒரு துணை ஆசிரியர் இணைந்து கொள்கிறார். ஜெனியின் 'ஹோம்ஸ்டே' இவர். பயிற்றுவிக்க முடியுமா?' என்று.

ஹோம்ஸ்டே யார் என்கிறீர்கள்! மிஷேல்தான்.

என்னவாயிற்று!!

இருவரும் பிரிந்த பின்னும் ஜெனி இவரோடு தொடர்பு வைத்திருந்தார். எங்கோ தோழிகள், தோழர்களோடு 'ஃப்லாட்டிங்' செய்து கொண்டு இருந்தவரைத் தாய் போல் தினமும் 'தூங்கினாயா? சாப்பிட்டாயா? படித்தாயா?' என்று கனிவாக விசாரித்திருக்கிறார். தேவையான உதவிகள் செய்திருக்கிறார்.

மிஷேலும் அப்படித்தானாம். இருவர் நடுவேயும் அழகாக நட்பு வளர்ந்து விட்டது. மகனை விடவும் தாயார் நெருக்கமாகி விட்டார்.

பல்கலைக்கழகக் கல்வி முடிந்ததும் விடுமுறைக்காக வெளிநாடு சென்று இருக்கிறார் மிஷேல். என்னதான் இங்கு வந்து ஆண்டுகள் 25 ஆனாலும் மிஷேல் பெற்றோரால் மாற இயலவில்லை. ஃப்லாட்டிங், டேட்டிங், இது எதனையும் ஏற்றுக் கொண்டிருக்கவில்லை அவர்கள். அதனால் காதலர்கள் பிரிவைத் தமக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு செயலில் இறங்கினார்கள். தங்கள் உறவில் மாப்பிள்ளை பார்த்தார்கள்.

இவர் வருவதற்கு முதல் நாள் செய்தி சொல்லி இருக்கிறார்கள். மிஷேல் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் மனதை மாற்றிக் கொள்வதாக இல்லை.

பிறந்தது முதல் இங்கேயே வளர்ந்த பிள்ளைக்கு இது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்து இருக்கிறது. தன் துணையைத் தான் தெரிவு செய்ய வேண்டும் என விரும்பினார். வீட்டிற்குத் திரும்பினால் நிர்ப்பந்திப்பார்கள் என்று புரிய ஜெனியின் உதவியை நாடி இருக்கிறார். தனக்கு ஒரு வேலையும் ப்ளாட்டும் கிடைக்கும் வரை தங்க இடம் கிடைக்குமா? என்று தொலைபேசியில் அழைத்துக் கேட்டிருக்கிறார்.

இவருக்கு சந்தோஷம் கேட்கவே வேண்டாம். அழைத்து வந்து விட்டார். அன்று முதல் இன்றுவரை ஒரே வீட்டில் தான் இருக்கிறார்கள்.

பகலில் வீட்டில் தனித்து இருப்பார் பாவம் என்று அதிபர் அனுமதியோடு பாடசாலைக்கு அழைத்து வந்தார். வேலை கிடைக்கும் வரை பொழுதை வீணடிக்காமல் மாணவர்களுக்குக் கல்வியில் உதவட்டும் என்றார்.

சும்மா சொல்லக் கூடாது, மிஷேல் எந்த வேலையானாலும் கற்பூரம் தான். மாணவர்களோடு மிகவும் கடுமையாக இருப்பார். இவர் வந்ததில் எங்கள் காரியதரிசிக்கு வேலை போதவில்லை. நிறைய ஓய்வு கிடைத்தது. ஜெனிக்குக் காலை உணவு தயாரிக்க, பயிற்சிப் புத்தகங்கள் திருத்தவென்று கூட வேலை இருக்கவில்லை. பாடசாலைக்குள்ளும் எதுவெல்லாம் முடியுமோ அதெல்லாம் செய்தார்.

வீட்டில், ஜெனியும் மிஷேலும் ஒன்றாக நடை போனார்கள். சினிமா பார்த்தார்கள். சண்டை போட்டார்கள். அதட்டினார்கள். அவர்கள் பழகுவது பார்க்க அழகாக இருக்கும்.

"அதிகம் பாஸ்தா சாப்பிடாதே, நிறை கூடும்," என்று இளையவர் ஜெனியைத் திட்டுவார். "கீரை சாப்பிடாமல் ஒதுக்காதே," என்று ஜெனி இவரைத் திட்டுவார். போன பிறவி என்று ஒன்று இருந்திருந்தால் இருவரும் தாயும் மகளுமாக இருந்திருப்பார்களோ என்னவோ!

ஒரு நாள் மிஷேல் வேண்டாம் என்று ஸ்பினாச் ஒதுக்கி வைத்திருந்தார். அந்த வழியால் போன ஜெனி பார்த்து விட்டுத் திட்டினார். திரும்ப வரும் போது இன்னும் அதிகமாக ஒதுங்கி இருக்கவும் நிஜக் கோபத்துடன் இழுப்பறையைத் திறந்து ஒரு முட்கரண்டியை எடுத்து வந்தார்.

"எத்தனை பேர் சாப்பாடு இல்லாமல் இருக்கிறார்கள். நீ வீணாக்குகிறாயா?" பக்கத்தில் அமர்ந்து அந்த மீதத்தை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தார்.

ஒரே நேரம் ஒரே தட்டில், வெள்ளை வெளேர் என்று ஒரு கை.  கன்னங்கரேல் என்று ஒரு கை. ஒன்றாய் உணவருந்தும் காட்சி மனதை நெகிழ வைத்தது.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள். இவர்கள் நட்பு ஆயுளுக்கும் தொடரவேண்டும்....

தொடரும் நாளை பி.ப

13 comments:

  1. //ஒரே நேரம் ஒரே தட்டில், வெள்ளை வெளேர் என்று ஒரு கை. கன்னங்கரேல் என்று ஒரு கை. ஒன்றாய் உணவருந்தும் காட்சி மனதை நெகிழ வைத்தது.//
    super.

    இம்மி, நெஞ்சைத் தொடும் உறவு. நீடித்து நிலைக்க வேண்டும்.

    ReplyDelete
  2. அழகான நட்பு ஆன்ரீ! நட்பு ஆயுள் முழுதும் தொடர வாழ்த்துவோம்.

    ReplyDelete
  3. ஓகை.. அப்ப நானும் ரிலீஸ் பண்ணிடறேன்.. வந்து படிச்சிட்டு சொல்றேன்..

    ReplyDelete
  4. எப்படித்தான் முடியும் சந்தூஸ்!!! ;)))))

    ReplyDelete
  5. நன்றி வாணி & பப்பி.

    ReplyDelete
  6. சரியா சொன்னிங்கங்கோ ...

    #ஒரே நேரம் ஒரே தட்டில், வெள்ளை வெளேர் என்று ஒரு கை. கன்னங்கரேல் என்று ஒரு கை. ஒன்றாய் உணவருந்தும் காட்சி மனதை நெகிழ வைத்தது#.

    பசி என்ற உணர்வுதான் உயிர்கள் எல்லாவற்றையும் இயங்கச் செய்துகொண்டிருக்கிறது.

    பசிக்குப் பிறகுதான் அனைத்தும். பசியென்ற ஒன்று இல்லையெனில் உலகத்தின் இயக்கமும், உயிர்களின் தேடலும் என எல்லாமே மந்தமாகித் தேய்ந்து போயிருக்கும்.

    எமது இன்றைய நாளின் தேவைக்கான உணவு இலகுவாகக் கிடைத்துவிடுகிறது. எமது இன்றைய தேவைக்கான துணிகள், நிம்மதியாக ஓய்வெடுக்க ஒரு கூரை என எல்லாமே கிடைத்துவிடுகின்றன.

    ஆகவே இலகுவாகக் கிடைக்கும் அவற்றின் அருமையை நாம் உணர்வதில்லை.


    இதே கணத்தில் எத்தனை உயிர்கள் தங்களது ஒருவேளை உணவினை குப்பைத் தொட்டிகளில் தேடிக் கொண்டிருக்கும்?

    குளிருக்குப் போர்வையோ, வெயிலுக்கு ஒதுங்கியிருக்கோ ஒரு நிழலோ இல்லாமல் எத்தனை உயிர்கள் தவித்துப் போய் துயரப்பட்டுக் கொண்டிருக்கும்?

    வெப்பம் உமிழும் கொடும் பாறைத் தரைகளில் வெற்றுக் கால்களோடு அலையும் உயிர்கள் எத்தனை?

    தாகத்துக்கு ஒரு மிடறுத் தண்ணீர், எழுதப் படிக்க வசதி, ஒழுகாத, ஒழுங்கான ஒரு குடிசையற்று எத்தனை உயிர்கள் பரிதவித்துக் கொண்டிருக்கும்?

    வாழ்க்கையென்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முகமூடிகளைக் காட்டவென வைத்திருக்கிறது. அது ஒவ்வொருவருக்கும் அழகாகவும், கோரமாகவும் தனது முகத்தை மாற்றி மாற்றிக் காட்டிக் கொண்டேயிருக்கிறது.

    அந்த முகங்களில் புன்னகையைத் தேடியபடியே ஒவ்வொருவரது பயணமும் நீடிக்கிறது அலைச்சலாகவும், நேரானபாதையிலும்.

    ReplyDelete
  7. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்...!!!

    ReplyDelete
  8. //ஒரே நேரம் ஒரே தட்டில், வெள்ளை வெளேர் என்று ஒரு கை. கன்னங்கரேல் என்று ஒரு கை. ஒன்றாய் உணவருந்தும் காட்சி மனதை நெகிழ வைத்தது.//
    நானாக‌ இருந்தால் ஒரு பாட்ட‌ம் க‌ண்ணீர் விட்டிருப்பேன் அப்ப‌வே :)) ஆ.க‌ தான்...

    ReplyDelete
  9. அழகு தமிழில் அருமையாகக் கருத்துச் சொன்ன மொகமட் அயூப் அவர்களுக்கு ஒரு சல்யூட். உங்களை வரவைப்பதற்காகவே சீரியஸாக ஏதாவது எழுத வேண்டும் என்று தோன்றுகிறது.

    வாழ்த்துக்கு நன்றி ஜெய்லானி. ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு கொண்டாட்டம். இங்கு இன்று தந்தையர் தினம். உங்களுக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்.

    இலா, இதுதான் இங்கு எனக்கு மிகவும் பிடித்த விடயம், சமத்துவம்.

    ReplyDelete
  10. நட்பூ அழகாக இருக்கிறது இமா!!

    ReplyDelete
  11. ஒரு சிரிப்பூ @ சந்தூஸ்.

    ReplyDelete
  12. அழகா சிரிக்கிறீங்க சிவா. ;)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா