Saturday 10 August 2019

கட்டிப் போட முடியாதது எது?




கட்டிப் போட முடியாதது எது? 

எது!
உயிர்!
எங்கள் உயிருக்கு உயிரான குட்டிப்பெண் - ட்ரிக்ஸி - கடந்த செவ்வாய் (06/08/2019) அன்று எம்மை விட்டுப் பிரிய அனுமதி கொடுத்தோம். எடுப்பதற்கு வெகு சிரமமான முடிவு. ட்ரிக்ஸியின் நலன் கருதி சம்மதித்தோம்.

வெகு தைரியமான... குழந்தை. கடந்த எட்டு மாதங்களாக எப்போது வேண்டுமானால் இழப்பு நேரலாம் என்று உணர்ந்தே இருந்தோம். திடீரென்று பின்னங்கால் இழுத்துக்கொள்ளும். நான் தூக்கி விட்டு காலை உருவி, மடித்து விரித்துப் பயிற்சி கொடுத்து நிறுத்தி விட்டால், பிறகு குதித்து ஓடித் திரியும். கடந்த பாடசாலை விடுமுறையில் தினமும் குட்டிக் குளியலும் காலுக்கு அப்பியாசமும் கொடுக்க, மாடி ஏறி இறங்கித் திரிய ஆரம்பித்திருந்தார். வீட்டினுள் என்றும் அழுக்காக்கியது கிடையாது. தானாகவே இன்ன விதத்தில் காலை வைத்தால் விழாமல் நடக்கலாம் என்று புரிந்து கவனமாக இருந்தார். கால்களை நீட்டி சோம்பல் முறித்தால் திரும்ப கால் பழைய நிலைக்குப் போகச் சிரமப்படுகிறது என்பதைத் தெரிந்துகொண்டு சோம்பல் முறிப்பதைத் தவிர்த்தார்.

செவ்வாய் காலை பாடசாலைக்குக் கிளம்பும் முன் வழக்கமாகச் செய்வது போல் கடைசியாக ட்ரிக்ஸியைக் கவனிக்கலாம் என்று கூட்டைத் திறந்தேன். பின்னங்கால்கள் இரண்டும் வலது பக்கமும் முன்னங்கால்கள் இடப்பக்கமுமாக நீட்டியபடி சரிந்து கிடந்தார். இடது பக்க உடல் நனைந்திருந்தது. ட்ரிக்ஸிக்கு அழுக்காக இருப்பது பிடிக்காது. சட்டென்று விடயத்தைத் தெரிவித்து, தாமதமாக வருவதாக பாடசாலைக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு நான் உடை மாற்றிக் கொண்டு ட்ரிக்ஸியைக் குளிக்க வைத்தேன். பின்னங்கால்கள் முற்றாகப் பலமிழந்துவிட்டன. பிரச்சினை சற்றுப் பெரிது என்று புரிந்தது. ஒவ்வொரு ஐந்து பத்து நிமிட இடைவெளியில் ட்ரிக்ஸியை இடம் மாற்றவேண்டி இருந்தது. சில சமயம் தானாகவே சிரமத்துடன் நகர்ந்து வேறு இடம் போயிருப்பார். அப்போதெல்லாம் உணவு இருக்கும் இடத்திலிருந்து தூரமாக நகர்ந்திருப்பார். அருகே எடுத்துக் கொடுத்தால் மட்டும் உண்ண முடிந்தது. வேறு வழி தெரியாமல் வேலைக்கு லீவு அறிவித்தேன்.

இங்கு பூனை, நாய்களுக்கானால் எந்த மிருக வைத்தியரையும் அணுகலாம்; முயல், எலி, கினிப்பன்றி, பறவைக்களுக்கு குறிப்பிட்ட ஓர் இடத்திற்கு அழைத்துப் போக வேண்டி இருந்தது. அதற்காக மதியம் வரை காத்திருந்து அழைத்துப் போனோம். கால்களைத் தவிர மீதி எல்லா விதத்திலும் ஆரோக்கியமாகவே இருந்தார். அங்கும் மடியில் அமர்ந்து சாப்பிட்டபடிதான் இருந்தார். மருத்துவமனையில் அனுமதித்துச் சிகிச்சை செய்தாலும் 20%ற்குக் குறைவான அளவே குணமாவது சாத்தியம் என்றவர்கள், 'நிலமை மோசமாகினால் வாழ்க்கைத் தரம் குறைந்து போகும்; வேதனை அனுபவிப்பார்; விடை கொடுக்க இது நல்ல நேரம்,' எனவும் உடைந்து போனேன். 

அரை மணி நேரம் மடியில் வைத்துக் கொஞ்சி விட்டு, கால் மனதாக விடை கொடுத்தோம். ரிப்பன் கட்டியபடி கொடுத்த வெள்ளை நிறப் பொதியை கனத்த மனதோடு சுமந்து வந்தேன்.

ஒரு தொட்டியுள் உறங்குகிறார் ட்ரிக்ஸி. இந்த வீட்டை விட்டு விலகும் காலம் வரும் போது, போகும் புதிய இடத்திற்கு எம்மோடு எடுத்துச் செல்வோம்.

மறுநாட் காலை வழக்கமாக கூட்டைத் திறக்கும் நேரத்திற்கு ட்ரிக்ஸியின் மிச்சம் மீத உணவை உண்பதற்காக ஒரு கூட்டம் சிட்டுக்கள் வேலியில் காத்திருந்தன. பிறகு காணவே இல்லை. ட்ரிக்ஸி இனி வரமாட்டார் என்று புரிந்திருக்க வேண்டும். 

சின்ன உயிரே என்றாலும் பெரிதாக ஒரு வெறுமை -என் தாயை இழந்த சமயம் உணர்ந்தது போன்ற வெறுமை - மீண்டும் என் வீட்டைத் தாக்கி இருக்கிறது. 

6 comments:

  1. அடடா... செல்லங்கள் நம்மை விட்டுப் பிரிவது ரொம்பவும் கலக்கம் தரும் ஒன்று. காலம் உங்களுக்கு மன ஆறுதல் தரட்டும்.

    ReplyDelete
  2. மிகவும் கவலையான விடயம். ஆசையில் வளர்த்து அன்புகாட்டி பின் அவங்க நம்மை விட்டு பிரியும் போது ஏற்படும் வலி கொடுமை. கவலைப்படவேண்டாம் இமா. கொஞ்சநாள் செல்லும் மாறுவதற்கு...

    ReplyDelete
  3. மிகவும் வருத்தம் அளிக்கிறது...

    ReplyDelete
  4. மூவருக்கும் என் அன்பு நன்றிகள். கூடு இருந்த இடத்தில் தொட்டிச் செடிகளை மாற்றி வைக்க நினைத்திருக்கிறேன். விடுமுறைக் காலம் தனிமை பெரிதாகத் தெரியும். நான் தனியே வீட்டிலிருக்க நேரும். முன்பானால் எப்பொழுதும் முயல் ஓடுவதும் எதையாவது இழுத்து விழுத்துவதுமாக சத்தம் கேட்கும்; இன்னொரு ஆள் இருப்பது போல இருக்கும். ;(

    ReplyDelete
  5. Replies
    1. ஆமாம், பல வருடங்கள் தொடர்ந்து செய்த வேலைகள் எல்லாம் இல்லாமல் போனது. வீட்டில் உயிரோட்டம் இல்லாதது போல் இருக்கிறது.

      Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா