Wednesday, 14 August 2019

நன்றி மறவாமல்...

திருமண அழைப்பிதழ் ஒன்றைச் சுற்றி ஒரு பாச்மண்ட் பேப்பர் வந்திருந்தது. அதில் பொன் நிறத்தில் குறுக்கும் நெடுக்குமாக நெளிந்த கோடுகள் அச்சிடப்பட்டிருந்தன. கடதாசியில் இருந்த இரு மடிப்புகள் வழியே வெட்டிப் பிரித்தேன்.

(படத்தில் பெயரை மறைக்க முயற்சி செய்தேன். முடியவில்லை.
அலுவலகம் ஒன்றிலிருந்து வீச இருந்த குப்பைகளிடையே அட்டைகள் சி(ப)லதை நண்பர் ஒருவர் என்னிஅம் அனுப்பி வைத்தார். அந்த அட்டையின் கீழ் ஓரத்தில் அகலமாக கருநீல நிறத்தில் ஒரு பட்டை இருந்தது.

பாச்மண்ட் கடதாசியில் அகலத்தைக் குறித்துக் கொண்டு அந்த இடத்தை மை தீர்ந்த குமிழ்முனைப் பேனா ஒன்றினால் அழுத்திக் கோடிட்டேன். (இப்படிச் செய்தால் அட்டை அழகாக மடிந்துகொள்ளும்.) மீதி சற்று நீளமாக இருந்தது. அதை வெட்டி நீக்குவதற்குப் பதில் பஞ்ச் கொண்டு பூக்கள் & இலைகள் வெட்டிவிட்டேன்.

பாச்மண்ட் கடதாசியை double sided tape வைத்து முன்புற அட்டையில் ஒட்டினேன். என் கணிப்பு தவறாகிப் போயிற்று. கருநீலப் பகுதியில் பாச்மண்ட் கடதாசியின் கீழ் டேப் தெரிந்து அழகைக் கெடுத்தது.

உள்ளே அளவிற்கு மடித்த வெள்ளைக் கடதாசியை வைத்து ஒட்டி, உலர்ந்த பின் ஓரங்களை வெட்டிக் கொண்டேன்.

டேப் அடையாளம் அழகைக் கெடுப்பதாகச் சொன்னேன் அல்லவா? அதை மறைக்க மெல்லிய ரிப்பன் (பெண்களின் மேற்சட்டைகளில் தோட்பட்டையின் உட்புறமாக மெல்லிய ரிப்பன் - கோட் ஹாங்கரில் மாட்ட வசதியாக என்று நினைக்கிறேன் - வைத்துத் தைத்திருப்பார்கள். எனக்கு அது இடைஞ்சலாகத் தெரிவதால் வாங்கியதுமே அவற்றை வெட்டி எடுத்து விடுவேன். அந்த வகையில் கிடைத்ததே இந்த வெள்ளை சாட்டின் பேபி ரிப்பன்.) இரண்டு வரிகள் ஒட்டினேன். அடையாளம் காணாமற்போயிற்று. ஒட்டும் போது அட்டையின் இருவக்கமும் நீண்டு இருக்கும்படி வைத்தே ஒட்டினேன். ஈரமாக இருக்கும் போது ரிப்பன் சீராக வெட்டுப்படாது என்பதால் காய விட்டு மறுநாள் காலை வெட்டிவிட்டேன்.
அடுத்து Thank You ஸ்டிக்கரை கோடுகளின் சரிவை ஒத்துப் போகும் விதமாக வைத்து ஒட்டினேன். எழுத்து அச்சடித்த (எழுத்துகளை மறைத்திருக்கிறேன்.) முத்துகளைச் சேகரித்து, மெல்லிய தீரையாக வெட்டிய கடதாசியில் கோர்த்து, கடதாசியைப் பின்பக்கமாக மடித்து, அதையும் double sided tape உதவியால் ஒட்டிக்கொண்டேன்.

அட்டை வெண்மையாகவும் ஓரம் கருநீலமாகவும் இருந்ததால், அந்த நிறங்களில் சின்னச் சின்னப் பூக்களைப் பஞ்ச் செய்து எடுத்தேன். ஒரு மௌஸ் பாடின் பின்பக்கம் வைத்து நடுவில் மை இல்லாத பேனாவை வைத்து அழுத்த, பூக்கள் குவிந்தாற்போல் வந்தன. நீலநிறப் பகுதியில் வெள்ளைப் பூக்களையும் வெண்மை நிறப் பகுதியில் நீலப் பூக்களையும், ஒன்றுவிட்டு ஒரு சதுரத்தில் வரும் விதமாக ஒட்டிக் கொண்டேன். ஓரங்களுக்கு அரைப் பூக்கள் தேவைப்பட்டன. ஒரு மூலைக்கு ஒரு காற்பகுதி வேண்டி இருந்தது. எழுத்துகளை ஒட்டி வரும் இடங்களில் ஒரு முக்கால்வாசிப் பூவும் கூடத் தேவையாக இருந்தது. வெட்டி ஒட்டினேன்.

உள்ளே நான் நன்றி சொல்வதற்கான காரணங்கள் அனைத்தையும் என் கைப்பட எழுதி (என் கையெழுத்தின் மேல் ஈர்ப்புக் கொண்டவர்களில் இந்தத் தோழியும் ஒருவர்.) கொடுத்துவிட்டேன். அவரைப் பொறுத்த வரை அவர் எனக்கு எதுவும் விசேடமாகச் செய்யவில்லை என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார். ஆனால் பல சந்தர்ப்பங்களில் அவர் லீவு கொடுக்க முடியாது என்று மறுத்திருந்தால் என் நிலை சிக்கலாகி உடைந்து போயிருப்பேன் என்பது நிச்சயம். ஒரு சமயம் பரீட்சை நாள் அன்று மருத்துவமனைக் கட்டிலிலிருந்து இருந்து செய்தி அனுப்பினேன். ஒரு நாள் அப்பா மருத்துவமனையில் என்று லீவு கேட்டேன். சென்ற வாரம் ட்ரிக்ஸிக்கு முடியவில்லை என்று லீவு. இங்கு பகிர்ந்து கொள்ள இயலாத சில நிகழ்வுகள் இவ்வருடம் நிகழ்ந்திருக்கின்றன. சிலவற்றை என் லீவுக் கணக்கில் சேர்க்கக் கேட்டேன்; மீதியை என் வேலை நாளாக இல்லாத நாட்களில் வேலை செய்து கழித்துக் கொள்வேன். நான் போகாத சமயம் எனக்குப் பிரதியாக வேறு யாரையாவது அனுப்பியே ஆக வேண்டிய கட்டாயம். என் வேலை அப்படி. லீவு சொல்லிவிடுவேன். மீதெல்லாம் தன் வேலைப் பளுவுக்கு நடுவே எந்த முணுமுணுப்பும் இல்லாமல் ஏற்பாடு செய்திருப்பார். நன்றி சொல்வதுதானே முறை!

7 comments:

  1. பொறுமைக்கு பாராட்டுக்கள்...

    ReplyDelete
  2. நன்றி சொல்வதுதான் முறை

    ReplyDelete
  3. நன்றி மறப்பது நன்றன்று. அப்பப்பா எவ்வளவு வேலை. பொறுமையா அழகா கார்ட் செய்திருக்கிறீங்க இமா. அதை விவரமாக எழுதி...ஒரு பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. விபரமா எழுதாட்டி பிறகு இதே போல ஒரு காட் வேணும் எண்டு யாராவது கேட்டால் எப்பிடிச் செய்வது ப்ரியா! :-) உங்களுக்கும் என் நன்றி.

      Delete
  4. அழகான நன்றி சொல்லும் அட்டை.

    பொறுமை உங்களிடம் நிறைய இருப்பது கண்டு மகிழ்ச்சி.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா