Monday 18 July 2011

தண்டனையா! தவப்பயனா!


'மனதோடு மனோ' பார்த்துக் கொண்டிருந்தேன்.

அருமையாக.. மிக அருமையாக "என் காதலே, என் காதலே.. என்னை என்ன செய்யப் போகிறாய்?" என்று பாடிக் கொண்டிருந்தார் கார்த்திக்.. பாடகர் கார்த்திக் அல்ல; துபாயில் இருந்து பெற்றோரோடு வந்து கலந்து கொண்ட "ஸ்பெஷல் நீட்ஸ்" குழந்தை கார்த்திக்.

கண் கலங்கி விட்டது. எதற்காக இப்படி!  
எல்லாக் குழந்தைகளும் முழுமையாகப் பிறந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

இப்போ மக்கள் மத்தியில் இவர்கள் பற்றிய விழிப்புணர்வு, புரிதல் அதிகமாகி இருப்பது ஆரோக்கியமான விடயம்.

என்பெரிய - குட்டி மாணவன்’ பற்றி முன்பு சொன்னேனில்லையா! இப்போ அவர் சிறப்புப் பாடசாலையில் கற்கிறார். அங்கு விளையாட்டுகளில் மும்முரமாக இருக்கிறாராம், கேள்விப்பட்டேன். ஒரு முறை என் சக ஆசிரியர் ஒருவர் கடைத்தெருவில் சந்தித்திருக்கிறார். மெதுவே அருகே வந்து உன்னிப்பாக ஒரு பார்வை பார்த்துவிட்டுத் திரும்பிப் போனாராம் சின்னவர். நினைவு வந்திருக்கும்; ஆனால் நினைவு வந்திராது.

இப்போ சின்னவரை எனக்கு நினைவு வந்த காரணம்... அவரும் இசைப் பிரியர். ஒழுங்காக சொற்களை உச்சரிக்க வராவிட்டாலும் பாடுவார். நல்ல ரசிகர்; உன்னிப்பாக ராகம், தாளத்தினைக் கவனிப்பார்.

நான் வியந்த ஒரு விடயம் என்னவென்றால்... இவர்கள் தெரிந்து கொள்ளும் பாடல்கள் அவர்களுக்குப் புரியாமலே நல்ல கருத்துள்ள பாடல்களாகவோ சிறந்த தரமான பாடல்களாகவோ தான் இருக்கின்றன. குத்துப் பாடல்... விரைவிசைப் பாடல்கள் இவர்களை ஈர்ப்பதில்லை. மனதைச் சாந்தப் படுத்தும் இசையோடு கூடியவையாக மட்டும் இருக்கின்றன.

சின்னவர் ஒரு நாள் படிப்பு நடுவே ஏதோ 'ஹம்' செய்து கொண்டிருந்தார். "கொஞ்சம் சப்தமாகப் பாடினால் நானும் கேட்பேனே!' என்றேன். முதலில் வெட்கமாக மறுத்தவர் ஒரு பாராட்டை எதிர்பார்த்தோ என்னவோ பாட ஆரம்பித்தார். பிரமித்துப் போய் விட்டேன். சொற்பிழை இன்றி இசை பிசகாமல் இனிமையாக வந்து என்னுள் இறங்கியது பாடல். கண் மூடி அனுபவித்துப் பாடிய அழகு... சொல்ல வார்த்தையில்லை. அந்த நிமிடம் சுற்றி உள்ள அனைத்தும் மறந்து போயிற்று.

இன்றும் அந்தப் பாடல் எங்கு கேட்டாலும் சின்னவர் நினைவு வருகிறார். இதையே தான் அவருக்கு சென்ற வருடம் கிறீஸ்தவம் போதித்த ஆசிரியரும் சொல்வார். பாடம் ஆரம்பிக்கும் ஒவ்வொரு முறையும் ஒரு கீதத்துடன் ஆரம்பிக்க வேண்டும். இந்தப் பாடல் பாட நேர்ந்தால் தான் இவரைத் தான் கவனித்துக் கொண்டிருப்பாராம் ஆசிரியர். அப்படி அனுபவித்துப் பாடுவார். அதிலும் 'ப்ரிட்ஜ்' பாடும் சமயம் கண்மூடித் தலை அசையும் விதம் அழகு.

தப்பே அறியாத, தப்பு செய்யத் தெரியாத இவர்களுக்கு இது தண்டனையா! அல்லது... தவப்பயனா!

13 comments:

  1. எனக்கும் கூட இப்படிதான் தோணும் இமா .எங்க சர்ச்சுக்கும் வாரவாரம் ஒரு பத்து பேராவது அவங்க அசிஸ்டன்ஸ் கூட வருவாங்க அவ்ளோ அழகா கோட் /டை எல்லாம் அணிந்து .ஒரு ஸ்பெஷல் நீட்ஸ் பெண்மணி கார்ட் மேகிங் கிளாஸ் வருவாங்க .SHE CANT SPEAK BUT SHE IS SOOO CREATIVE .
    மத்தவங்க ரெண்டு மணிநேரத்துல முடிக்க வேண்டிய கார்டை இவங்க அரை மணியில் செய்து முடிப்பாங்க .இவங்களுக்குள்ள இவ்ளோ திறமையா என்று வியந்திருக்கிறேன்

    ReplyDelete
  2. //தப்பே அறியாத, தப்பு செய்யத் தெரியாத இவர்களுக்கு இது தண்டனையா! //

    வேதனையாக தான் இருக்கிறது :(

    ReplyDelete
  3. அதெல்லாம் விதிதான்... இன்று இருக்கிறோம்... நாளை, கீழே விழுந்து ஒரு நரம்பு தட்டுப்பட்டால் போதுமே, எமக்கும் இயலாமை வந்துவிடும்... எதுவும் நம் கையில் இல்லை...

    கேட்பதெல்லாம் கிடைத்திடுமா, நினைப்பதெல்லாம் நடந்திடுமோ...

    ReplyDelete
  4. இமா, இது தண்டனையா? தவப்பயனா? இரண்டும் இல்லை. உலகம் முழுவதும் மாசு பட்டு வருகிறது. தாய் உட்கொண்ட மருந்து வகை, சாப்பாடு, சுற்றுச் சூழல் இதெல்லாம் கூட காரணமாக இருக்கலாம்.
    என் உறவினர் குழந்தையும் இப்படித் தான். யாருடனும் கதைக்கவே மாட்டார். அவருக்கு என்று ஒரு உலகம் இருக்கு. அதிலேயே இருப்பார். பசித்தால் நிறைய சாப்பிடுவார். ஒரு வித கட்டுப்பாடும் கிடையாது. மற்றவர்கள் பேசினால் புரிந்து கொள்ளவே சிரமப்படுவார். அவரிடம் ஏதாவது தனித்திறமை இருக்கா என்று தெரியவில்லை.

    ReplyDelete
  5. சில நேரம் கண்முன்னே
    காணும் நேரங்களில்
    இறைவனை திட்டாமல் சென்றது இல்லை...

    ReplyDelete
  6. விதி.ஆண்டவன் செய்த சதி.

    ReplyDelete
  7. எல்லாக் குழந்தைகளும் முழுமையாகப் பிறந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

    கண்ணீருடன் கவனிக்க வேண்டிய விஷயம்

    தண்டனையா! தவப்பயனா!

    எதா இருந்தாலும் இது அதிகம் சகோ.

    முற்பிறவி பயன் என்று கூட சொல்வார்கள்

    இது கடவுளின் பழிவாங்கும் குணம் இல்லையா .

    தண்டனையாக இருந்தால் அப்பிரவியிலேயே தரட்டுமே ,காத்திருந்து அடுத்த பிறவியில் தருவது நல்ல குணமா ,மனிதருக்கும் ,கடவுளுக்கும் என்ன வித்தியாசம் .

    எண்ணினால் கஷ்டம் தான் மிஞ்சும் சகோ

    ReplyDelete
  8. கண் கலங்கி விட்டது. எதற்காக இப்படி!
    எல்லாக் குழந்தைகளும் முழுமையாகப் பிறந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

    இறைவா.... உறவுகள் என்பது பொய் என்றால் சிறகுகள் த்ந்து முறிப்பது ஏன்?

    ReplyDelete
  9. //கேட்பதெல்லாம் கிடைத்திடுமா, நினைப்பதெல்லாம் நடந்திடுமோ... // ஹும்! உண்மைதான்.

    ஏஞ்சல், ஆமினா, அதிரா, வானதி & சிவா... விட்டுச் சென்ற கருத்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  10. ராதாராணி, ரமேஷ் & ராஜேஷ் _()_ நல்வரவு. கருத்துக்களுக்கு நன்றி.

    ராதா ராணி... நீங்கள் அறுசுவை ராதா ராணி என்று நினைக்கிறேன், சரிதானா? ;)

    ரமேஷ்... உங்கள் 'அன்பு உலகில்', 'கருவறைக் குழந்தை கடவுளைக் கேட்கும்' படித்தேன். முழுமையாகப் பிறக்கக் கிடைக்காத குழந்தைகள் பிறந்து சிரமப்படுவதை விட கருவிலேயே எடுத்துக் கொள்ளப்படுவது நலமே என்றுதான் எனக்கு நினைக்கத் தோன்றுகிறது.

    ராஜேஷ், உங்கள் மாய உலகம் அழகாக இருக்கிறது. வித்தியாசமாக இருக்கிறது.

    மூவர் வலைப்பூக்களும் சிறக்க எனது வாழ்த்துக்கள். தொடருங்கள் இடுகைகளை. நேரம் கிடைக்கையில் நிச்சயம் வருவேன்.

    ReplyDelete
  11. ””வாழுகின்ற மக்களுக்கு வாழ்தவர்கள் பாடமடி
    பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளை சேருமடி””

    இந்த வரிகள்தான் நினைவுக்கு வருது
    தவறு நம்மிடம்தான் எங்கோ இருக்கும். அது புரி படாமல் தடுமாறுகிரோம் :(

    ReplyDelete
  12. நானும் மனதோடு மனோ பார்த்த போது மனதை தைத்த விஷயம் இது. இந்த குறைகள் எல்லாம் புரியாத புதிர்.. பெற்றவர்களை மிகவும் பாராட்ட வேண்டும். எத்தனை வீடுகளில் நார்மல் ஆக இருக்கும் குழந்தைகளையே கவனிக்காது புறக்கணிப்பதை நாம் பார்க்கிறோம்

    ReplyDelete
  13. //ராஜேஷ், உங்கள் மாய உலகம் அழகாக இருக்கிறது. வித்தியாசமாக இருக்கிறது. //

    நன்றி மேடம்

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா