Friday 19 April 2013

காக்கை நிறத்தொரு பூனை!

ஸ்கூல் விட்டு வரேக்க, ட்ரைவ்வேயில கார் திரும்ப ஒவ்வொருவரா தலையைத் தூக்கிப் பார்ப்பினம். எப்பவும் ஒரு நாலு ஐஞ்சு பூனைகள் எங்கட வாசல்ல இருப்பினம்.

நாங்கள் இறங்கவும் பஞ்சிப்பட்டுக் கொண்டு ஒவ்வொருவராக எழும்பிப் போவினம். ஒருவர் காலை நீட்டிச் சோம்பல் முறிச்சுப் போட்டு வேலியில பாய்வார். இன்னொருவர்... கருப்பு குண்டர் -  பொரியல் களவெடுத்த மாதிரி ஒரு பார்வையோட பேஸ்மண்ட்டுக்குக் கீழ போயிருவார். எனக்கு இன்னும் விழங்க இல்ல எப்பிடி உள்ள போவார் என்று. அந்த இடத்தில பலகைகளுக்கு நடுவில நீக்கல் எதுவும் பெருசாக இல்லை. பூனை மட்டும் பெரு...சாக இருக்கும். எப்பிடி!!
மற்றவர் கடகடவென்று பின்பக்கம் ஓடுவார். இப்பிடி ஆள் ஆளுக்கு ஒரு திசையில கலைஞ்சு ஓடீருவாங்கள்.

பேஸ்மண்ட்டுக்குக் கீழ பலகைகள் கொஞ்சம் கிடக்குது - அவசரத்துக்கு என்று க்றிஸ் வைச்சு இருக்கிறதுகள். அதை எடுக்க நான்தான் போகவேணும். காரணம் கேட்கப் படாது யாரும். ம். ;)

"அகலமாக ஒரு பலகை எடுத்துத் தாறீங்களோ!" என்று க்றிஸ் கேட்டார். ஒரு சனிக்கிழமை மத்தியானம் (அப்ப போனால்தான் வெளிச்சமாக இருக்கும் அங்க,) ஹூடி எல்லாம் மாட்டிக் கொண்டு உள்ள போனன் - தலையில தூசு படப்படாதெல்லோ!

பலகையை இழுக்கேக்க... 'பளிச்' என்று சின்ன்..னதா ஒரு லைட் அடிச்சுது. தலைக்குள்ளயும் லைட் அடிச்சுது. பாம்போ!! ம்.. இங்கதான் பாம்பே இல்லையே! possom!! திரும்பவும் பார்த்தன். ரெண்டு சின்ன பளிச். என்னெவென்று தெரியேல்ல. ;(
"ச்சூ!" என்கிறேன்; எனக்குப் பழக்கமான மாதிர் "கர்ர்ர்" என்கிறேன். லைட் அசையவே இல்லை. கண் கொஞ்சம் இருட்டுக்குப் பழகினபிறகு தெரிஞ்சுது... அது பூஸ். நல்ல கருப்பாக இருப்பாரென்று சொன்னேனே... குண்டர், அவர். அசையாமல் சிலையாக அமர்ந்திருந்தார். பயமே இல்லை!
இது அவர் இல்லை. இப்ப இருக்கிற பக்கத்துவீட்டுக்காரர். மாடியில இருந்து மரத்துக்கு மேலால சுட்டனான்.

நான் நல்லாப் பூனை மாதிரிக் கத்துவன். சிரிக்காதைங்கோ, உண்மையாவே நல்லாக் கத்துவன். பூனைகள் நம்பீரும். கடைசி ஆயுதமாக அதை எடுக்க லைட் சின்னதாக அசைஞ்சுது. ;) பிறகு பலகையை ஆட்டி ஆளைத் திரத்திப் போட்டு வேலையை முடிச்சு வெளிய வந்து குளிக்கப் போய்ட்டன்.

இந்த பேஸ்மண்ட்டுக்க, பிப்ஸ்க்விக் இருந்த காலத்தில பறவைகள்ட உயிர்ச்சுவடுகள் எல்லாம் கிடைக்கும். போகேக்க ஒரு ப்ளாஸ்டிக் பை & ஒரு தோண்டி (தோட்டக்கரண்டி) கொண்டு போனால் எல்லாம் சேர்த்துவந்து திராட்சைக்கடியில புதைச்சு மேல ஒரு கல்லைப் பாரம் வைப்பன். இப்ப உயிர்ச்சுவடுகள் எதையும் காணேல்ல.

திங்கள்க்கிழமை பள்ளியால வரேக்க அவர் வேலிக்கு மேல இருந்தார். எனக்குத் தெரியாமலிருக்க நாவல்ப்பூ மரத்துக்குப் பின்னால ஒழிச்சு இருந்தார்.

நேற்று வந்து பார்க்க படிக்குக் கீழ்ப்பக்கம் என்னவோ ஒரு நாற்றம் வந்துது. இவர் ஒழிச்சு வைச்ச எலியோ பறவையோ கிடக்குது என்று தேடினேன். காணேல்ல. கீழ யார் போறது இப்ப! சனிக்கிழமை பார்ப்போம் விட்டாச்சுது.

காலைல சலட் கீரை போதேல்ல. கூடையோட தோட்டத்தில போய் கொஞ்சம் நேட்டிவ் ஸ்பினாச் துளிர், கொஞ்சம் Nasturtium துளிர், சில்வர் பீட் கொஞ்சம் பிடுங்கிப் போட்டு வல்லாரை பிடுங்கப் போனேன். கருப்பு குண்டர் அந்தப் பாத்தியில படுத்து இருந்தார். கூப்பிட்டாலும் அசையேல்ல. க்றிஸ் திராட்சைக் கொடியை வெட்டிப் போட்டுக் கொண்டு இருந்தார். ஒரு நீளக் குச்சியால தட்டினேன். ம்ஹும்!

நான் நினைச்ச எலி / பறவை அதுதான். ;((

குளிக்கப் போயிருந்த க்றிஸை அவசரமாக மறிச்சு வெளிய கூட்டிவந்து க்ளவ் போட்டு இறுதிக் கடன்களை முடிச்சு தலை முழுகியாச்சுது. லீவு வரேக்கதான் ஆள் இல்லாதது பெருசாத் தெரியும்.

கழுத்தில ஓனர் ஃபோன் நம்பர் இருந்தது தெரியும். ஆனால் அவர் இருந்த நிலமையில எங்களால பார்க்க முடியேல்ல. சொந்தக்காரர் வந்து விசாரிச்சால் இல்லாட்டி எங்கயாவது லைட்போஸ்ட்ல நோட்டிஸ் ஒட்டினால் போன் பண்ணிச் சொல்லுவம்.

பசளை என்று, கருவேப்பிலைக்கடியில தாட்டு இருக்கிறன். வல்லாரைதான் எடுக்க விருப்பமில்லாமல் போச்சுது. வேற இடத்தில இருந்து மண் வெட்டிக் கொண்டுவந்து போட்டு மூடியாச்சு. புதுசாக வேற இடத்தில நட்டும் ஆச்சுது.

'மாற்றம் ஒன்றே மாறாதது.' கவலைப்படுறதுக்கு ஒண்டும் இல்லை. கெதியா இன்னொரு குண்டர் வருவார்.

8 comments:

  1. பாவம்... திடீர்னு எப்படி இப்படி ஆச்சு? கண்முன் வளைய வந்தவர் இல்லையென்றால் சில நாட்கள் கஷ்டமாகத்தான் இருக்கும். அதையும் இயல்பாய் எடுத்துக்கொண்டால் பிரச்சனை இல்லை. நீங்க சொன்னதுபோல கெதியா இன்னொருத்தர் வருவார்...

    ReplyDelete
  2. பூனைகள் பழக இனிக்கும்! தீடிரென இப்படி மரிக்கையில் துக்கம்தான்!

    ReplyDelete
  3. ஹையோஓஓ... ஆண்டவா...:(
    என்னால உங்கட எழுத்தை ரசிச்சதை எழுதமுடியேலை. அதைமீறி குண்டரின் சோகம்....:’(

    ReplyDelete
  4. ஓ மை!
    உங்கள் பரந்த மனமும் சகிப்புத்தன்மையும் ஆராதனைக்குரியது.

    ReplyDelete
  5. போங்க இமா..எதோ பூனையாரின் அழகான கதை என நினைச்சு படிச்சுகிட்டே வந்தா...!! ஹூம்...டூ பேட்!

    //'மாற்றம் ஒன்றே மாறாதது.' கவலைப்படுறதுக்கு ஒண்டும் இல்லை. கெதியா இன்னொரு குண்டர் வருவார்.// நீங்க சொன்னாச் சரிதேன். :-|

    உங்கட திரிகோணமலைத் தமிழ ரசித்தனான்! :)

    ReplyDelete
  6. 'மாற்றம் ஒன்றே மாறாதது.

    ReplyDelete
  7. Very sad story. RIP imma's friend.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா