Friday 15 May 2020

முள்ளெலி

Hog தமிழில் பன்றிதான் என்றாலும் headgehog முள்ளம்பன்றி அல்ல - முள்ளெலி.

இடைக்கிடை எப்போதாவது சீசன் சமயம் ஒருவர் தோட்டத்தில் நடமாடுவார். தொட்டால் பந்து போல் சுருண்டுகொள்வார். கொஞ்ச நேரம் கழித்து நேராகி ஓடிவிடுவார்.

அம்மா வீட்டருகே ஆரோக்கியமானவர்களைக் கண்டிருக்கிறேன். நான் இருக்கும் வீட்டுப் பக்கம் வருபவர்கள் எப்போதும் ஏதோ நோய் தக்கியவர்களாகத் தெரிகிறார்கள், திரிகிறார்கள்.

சென்ற வருடம் ஒருநாள் இவர் வந்தார். நெருங்கி ஆராய்ச்சி செய்யலாம் என்று பெட்டியொன்றைத் தேடிப் பிடித்து ஆளை அமுக்கிப் பிடித்தேன். நத்தைகள் சுலபமாகத் தோட்டத்தில் கிடைத்தன. செய்ய வேண்டி இருந்தது, தொட்டிகளைத் திருப்பிப் பார்ப்பது மட்டும்தான். உடைத்து உள்ளானை மட்டும் உண்பார் என்ற என் எண்ணத்தைத் தவறாக்கியபடி, நொருக்மொருக் என்று கோது நொருங்கும் சப்தம் கேட்க முழுவதையும் ரசித்துச் சாப்பிட்டார் தோழர்.

அப்போது ட்ரிக்ஸி இருந்தார். இரவு, ட்ரிக்ஸியைக் கூட்டில் அடைத்த பின், இவரை வெளியே விட்டேன். டெக்கைச் சுற்றி வேலி இருக்கிறது. தப்ப இயலாது. மறுநாள் வெள்ளி - இரண்டு பாடவேளைகள் மட்டுமே வேலை. பிறகு வந்து இவருக்கு ஏதாவது மருத்துவம் செய்யலாம் என்று எண்ணியிருந்தேன்.

காலை எழுந்து தேடினால்... ஆளைக் காணோம். பாடசாலை விட்டு வந்து மறுபடியும் (டடா, எங்கிருந்து இந்த மறுபடியைப் பிடித்திருப்பார்! ம்... மங்களூரில் 7 வருடங்கள் இருந்திருக்கிறார். இந்தியர்கலிடமிருந்து பிடித்திருக்கிறார். 'மறுகா' என்பாரே அடிக்கடி!! அது... வெள்ளைமணலிலிருந்த சமயம் பிடித்திருப்பார் போல.) தேடினேன். ஆளைக் காணோம். ஆனால், டெக் வேலியில் ஓரிடத்தில் பலகை விலகி இருந்தது. அந்த வழியேதான் தப்பி இருக்க வேண்டும். விட்டுவிட்டேன்.

லொக்டௌன் ஆரம்பித்தது, தோட்டத்தைத் துப்புரவு செய்ய ஆரம்பித்தோம். ஒரு இடிபாடான இடத்தில் வினோதமான வடிவத்தில் தாடை எலும்பு ஒன்று கிடைத்தது. என்ன பிராணியாக இருக்கும்!! சிந்தித்துக் கைவிட்ட சமயம்... பளிச்!! இது ஏன் முள்லெலியினதாக இருக்கக் கூடாது! அளவுகள் சரியாகத் தெரிந்தன. எத்தனை அழகான பற்கள்! எத்தனை அமைப்பான கால்கள்! இந்தப் படம் இருந்தது நினைவு இல்லை, இன்று காணும்வரை. நினைவில் இருந்திருந்தால் ஃபோட்டோ எடுத்து வைத்திருப்பேன். பற்களை வைத்து ஒரு ஸ்தூபி, எலும்புகளை வைத்து ஒரு ஸ்தூபி கட்டி... Wisteria கொடி ஒன்றையும் நட்டிருக்கலாம்.  :-)  அதன் கீழ் தானே முள்ளெலியார் மறுவுருவானார். :-)

என்னிடம் இருந்து தப்பியதாக நினைத்துப் பலகையை நெம்பி வெளியேறியிருக்கிறார். நோய் முற்றியிருந்திருக்கும் போல. விழுந்த இடத்திலேயே மரணித்திருக்கிறார். எப்படி வாசனைகள் காட்டிக் கொடுக்காமல் போயிற்று என்று தெரியவில்லை.

உண்ணக் கூடிய முள்ளெலிகள் - செய்வது எப்படி! இங்கே சொடுக்குக. :-) இதே முறையைப் பயன்படுத்தி bun, பேஸ்ட்ரி என்று எதை வேண்டுமானாலும் தயார் செய்யலாம்.

5 comments:

  1. முள்ளெலி - பாவம்! தப்பித்துச் சென்று வீர மரணம் அடைந்து விட்டது போலும்.

    ReplyDelete
  2. முள்ளெலிக்கு அஞ்சலிகள்.

    சுட்டிக்கு சென்று பிரமித்து வந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அஞ்சலிக்கு பூக்கள் அனுப்ப வேண்டும். :-)

      அறுசுவைக்கு அனுப்பியபின் பல இடங்களில் பேக்கிங் குறிப்புகளில் இதே போல பார்த்திருக்கிறேன். சிந்தனைகள் ஒரே மாதிரி இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். :-)

      Delete
  3. முள்ளெலி கூட நல்லாத்தான் இருக்கு...!

    ReplyDelete
  4. :-) முள்ளெலியை களிமண்ணில் பொதிந்து சுட்டெடுத்தால் வெகு நன்றாக இருக்கும் என்று இங்கு ஓர் மாமிச விரும்பி நண்பர் சொன்னார்.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா