Saturday, 31 December 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள்


வெலிங்டன் போயிருந்த போது அங்கிருந்த மியூசியம் பார்க்கப் போனோம். அங்கே இருந்த மரச்செதுக்குவேலை நுழைவாயில் (உள்ளேதான் இருக்கிறது.) இது.

மீதி விபரங்கள் புகைப்படமாகவே கொடுத்திருக்கிறேன்; விரும்பினால் பெரிதுபடுத்திப் பார்க்கலாம்.


'Te Papa' என்பது மியூசியத்தின் பெயர்.

2012ம் ஆண்டின் நுழைவாயிலான இன்றைய தினமும் தொடர்ந்து வரும் நாட்களும் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியானவையாக அமைய என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.
                                                                                                                 அன்புடன்
- இமா

Friday, 30 December 2011

ஆசை, தோ... ம்..ஹும்! பிட்டு , கம்பி, கைக்குட்டை

ஆசை, தோசை, பிட்டு, கம்பி, கைக்குட்டை
 !!!
எப்போ விடுமுறை என்று எங்கு போனாலும் நாங்களே சமைத்துச் சாப்பிடுவதைத்தான் விரும்புவோம். இம்முறை விதி விளையாடி விட்டது. ;(
சென்று தங்கிய...

granny flat ல்... சமையற் பாத்திரங்கள் போதுமானதாக இருக்கவில்லை. ;( இங்கு வந்த 12 வருடங்களில் முதல்முறையாக மைக்ரோவேவ் இல்லாத ஒரு தங்குமிடம் அமைந்தது. பிட்டு அவிப்பதற்கு ஆயத்தமாக அரிசிமா கொண்டு போயிருந்தோம். ;((

முதல் நாள் வேறு வழியின்றி ஒரு மலேஷிய உணவகத்தைத் தேடி நடக்க, அது 'விடுமுறைக்காக மூடியுள்ளோம்' என்கிற அறிவிப்போடு எங்களை வரவேற்றது.

பக்கத்து dairy ல் பாண், மாஜரின், கரட், சலாமி, முட்டை என்று தேவைக்கு சில பொருட்களை வாங்கிக் கொண்டு வெளியே வந்தால் கண்முன்னே Yellow Chillie.

வெகு காலம் கழித்து ஒரு உணவகத்தில் நுழைந்து சாப்பிட்டுவிட்டு (அவர்கள் சமையல் பிரமாதமாக இருந்தது.) அறையில் போய் மாத்திரை எடுத்துக் கொண்டு உறங்கிப் போனேன்.

மறுநாள்...
தேன்கூட்டின் உள்ளே சுற்றும் முன் கைப்பையை அங்குள்ள பெண்ணிடம் ஒப்படைத்து 'டோக்கன்' பெற்றுக் கொண்டோம்.

"ஹச்சும்!" கையிலிருந்த 'டிஷ்யூவை' வெளியே எடுக்க... க்றிஸ் திடீரென்று, "கைக்குட்டை இருக்கிறது," என்கிறார். 
"என்னிடம் போதுமான அளவு டிஷ்யூ இருக்கிறது," இது நான். 
"ஒரு நாடா மட்டும் கிடைத்தால்...!!" 
தலையும் புரியவில்லை; வாலும் புரியவில்லை. கர்ர்.. என்று வந்தது எனக்கு.

"புட்டு அவித்து விடுவேன்," என்று முடித்தார். "இருக்கிற pan ல ஹங்கியைக் கட்டி... அவிக்கலாம்." 
"ம்!" வாயைத் திறக்க யோசனையாக இருந்தது எனக்கு. என் பிரியமான jacket ல் இருந்த நாடாவைப் பார்த்துவிட்டால் வேறு வினையே வேண்டாம். அமைதி காத்தேன்.

இரவு பாணும் பருப்புக்கறியும் சாப்பிட்டாயிற்று.

மறுநாள் இரவு அறைக்கு வந்ததும் ஒரு தட்டில் அப்பிள் கத்தி சகிதம் தொலைக்காட்சிப் பெட்டி முன் அமைந்தார் க்றிஸ். நான் குளித்துவிட்டு வரும்போது அப்பிள் தீர்ந்திருந்தது; கட்டிலில் தரையிலெல்லாம் ஏதுவோ நீலநிற ப்ளாத்திக்குத் துண்டுகள் போல் நீளநீளமாகக் கிடந்தது.

கையில்...
இன்னும் நீ..ளமாக ஒரு கம்பி.
!!!
ஏதாவது புரிகிறதா!!

என்னைப் பார்த்து ஒரு அரை வெற்றிச் சிரிப்புச் சிரித்தார்.
புரிந்தது எனக்கு - கோட் ஹாங்கர்!! ;)

இதற்குப் பெயர்தான்... நளபாகம். நளமகாராஜா out of nothing சமைப்பாராமே! ;)

இனி மீதியை 'ஸ்டெப் பை ஸ்டெப்' படங்கள் விளக்கும். ;) பார்த்து மகிழுங்கள்.
கைக்குட்டை கட்டிய pan...
துணி தீப்பிடிக்காமல்... 'சேஃப்டிபின்'...
தட்டில் பிட்டுக் குழைத்து....
பாத்திரத்தில் நீரைக் கொதிக்க வைத்து....
குழைத்த மாவை கைக்குட்டை மேல் கொட்டி...
மூடி அவித்தால்...
பிட்டு தயார். பிறகு... முட்டைப் பொரியல், காய்கறிக் கலவைப் பொரியல் என்று திருப்தியாக விருந்து சாப்பிட்டாயிற்று. 
யம்! யம்! ;P

Sunday, 25 December 2011

வாழ்த்துகிறேன் ;)

கிறிஸ்தவ வலையுலக உறவுகள் அனைவருக்கும் இனிய கிறிஸ்தோதய வாழ்த்துக்கள்.
அன்புடன்
- இமா

Sunday, 18 December 2011

சின்னவர்கள் பெரியவர்களாகும்போது - 2

~~~~~~~~~~~~~~~~~~~~~~   
சென்ற வருட இறுதிப் பகுதியில் 'மெரில்' இறந்துவிட்டது. 
 
அல்ஃபி, "நான் வளர்கிறேனே மம்மி"
(ஓட்டுத்துண்டங்கள் நடுவே வெளிர்மஞ்சட் கோடுகளை அவதானித்தீர்களா! வளர்கிறார்.)
மெரில் இல்லாதது ஆணிக்கு இழப்பாகத் தெரிந்தாலும் அல்ஃபி பொருட்படுத்தவில்லை. ஆணி இல்லாது போயிருந்தால் கூட சந்தோஷம்தான் என்பதுபோல் இருந்தார். இருவருக்கும் பெரிதாக ஒட்டவில்லை.
ஆணி
அல்ஃபி இது தன் வீடு என்கிற உரிமையை விட்டுக்கொடுப்பதாக இல்லை. பகிர்ந்துகொள்ளப் பிடிக்கவில்லை அவருக்கு. திடீர் திடீரென்று சண்டை நடக்கும்; இரண்டு கால்களில் நின்றுகொண்டு முன்னங்கால்களால் ஆளை ஆள் பிடித்துத் தள்ள முயற்சிப்பார்கள். கடிக்க முயல்வார்கள். ஒருநாள் ஆணி காலில் இருந்து ரத்தம். ;( 

அல்ஃபி நன்றாக வளர்ந்திருக்கிறார், கிட்டத்தட்ட ஆணி அளவுக்கு.

இருவரும் சென்ற வாரம் மகன் வீட்டுக்குக் கிளம்பிப் போயாயிற்று. ;)
 
தொட்டி மட்டும் இன்னமும் என்னோடு இருக்கிறது. அதனைச் சுத்தம் செய்து காய வைப்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறேன். மழைதான் விடுவதாக இல்லை.

தொட்டியை வீடுமாற்ற மகனோடு இன்னும் 4 பெரியவர்கள் வேண்டும், பெரீ..ய தொட்டி அது. என்னைப் போல எட்டுப் பேரை வளர்த்தலாம் என்பேன். ;))
சுத்தம் செய்யும் போது அந்தநீரை எங்கே ஊற்றுகிறேன் என்பதிலும் கவனமாக இருக்கவேண்டும் நான். தொட்டிச் செடிகளுக்கு விட்டால் தொடர்ந்து வரும் நாட்களில் நீர் விடாதிருந்தால் அமோனியா செறிவு அதிகரித்து செடிகள் கெட்டுவிடும். கீரைச்செடிகளின் மேல் விட்டால் உண்பதற்குப் பாதுகாப்பற்றதாகி விடும். பார்த்துச் செய்ய வேண்டிய வேலை.

எப்படியும் நத்தார் வருமுன்னால் முடிக்க வேண்டும், இல்லாவிட்டால் அசையாது இருக்கும் நீர் கெட்டு வாசனை வீச ஆரம்பித்தாலும் ஆரம்பிக்கும்.
 
என் மகனுக்கும் என்னைப் போன்றே ரசனைகள். ;)
ஒருநாள் ஒரு தோழரின் பாட்டி அழைத்தாராம். பேரனிடம் தொலைபேசி இலக்கம் விசாரித்து வாங்கியிருக்கிறார். அவர் வீட்டைத் தேடி அனாதையான ஓர் ஆமைக்குட்டி வந்திருக்கிறது. அதனைப் பாதுக்காப்பாக ஒரு வாளியில் எடுத்து வைத்துக் கொண்டு மகனை அழைத்திருக்கிறார்.

இவர் ஆமைக்குட்டியைப் போய் பார்த்துவிட்டு இங்கே வந்து நோயுற்ற மீன்களைப் பராமரிக்கவென்று வைத்திருந்த சிறிய தொட்டியையும் ஒரு சிறிய போத்தலில் ஆமை உணவு சிறிதும் எடுத்துப் போனார். மறுநாள் ஆமைக்குட்டியின் படத்தைக் காட்டினார், அழகாக இருந்தது குட்டி. எனக்குத் தந்துவிடுமாறு கேட்டேன். "வேலை அதிகமாகும், வேண்டாம்," என்றார், அது உண்மைதான்.

நேற்று மகன் வந்திருந்த போது விசாரித்தேன். பெரியவர்கள் இருவரும் நன்றாக இருக்கிறார்களாம். சின்னவர் இரவிலும் உறங்குவதில்லையாம்; எப்போதும் சாப்பிட்டுக்கொண்டும் நீந்திக்கொண்டும் இருக்கிறாராம். "பெரியவர்களை விட அதிகமாகச் சாப்பிடுகிறார், அத்தனையும் நீச்சலில் செலவளித்துவிடுகிறார்," என்றார் சிரித்துக் கொண்டு.

Friday, 28 October 2011

சின்னவர்கள் பெரியவர்களாகும்போது

என் மூத்தவருக்கு ஆக்க வேலைகளில் ஈடுபாடு அதிகம். சமையல், தையல், வரைதல், தச்சுவேலை, கட்டுமானம், தோட்டம் என்று எல்லாவற்றிலும் ஈடுபாடு உண்டு.

நிறைய வாசிப்பார். படிக்கும் காலத்தில், 2004 ல் ஒரு பாடசாலை விடுமுறையின் போது ஓர் நாள், தன் புத்தகங்களையும் மேசைவிளக்கொன்றையும் வைத்துக் கொள்ளக் கூடியதாக 'bedside table' ஒன்று இருந்தால்  நல்லதென்று சொன்னார்.

அன்று பின்னேரம் க்றிஸ் வேலையால் வரவும் ஆறு துண்டுப் பலகைகளைக் காட்டி அவற்றைத் தான் எடுத்துக் கொள்ளட்டுமா? என்றார். சம்மதம் கிடைத்த அரைமணி நேரத்தில் இந்த அழகு மேசை தயாராகிவிட்டது.

கிடைத்த பலகைகளை (புதியவை அல்ல; மீள்சுழற்சி செய்திருக்கிறார்.) அப்படியே பயன்படுத்தினார் . எதையும் அறுக்கவோ, பெய்ன்ட் செய்யவோ வார்னிஷ் செய்யவோ இல்லை.
எனக்கு இந்த மேசையின் அமைப்பில் ஒரு பிடிப்பு. தர மாட்டேன் என்றுவிட்டார். ;) இப்போ 'ஃப்லாட்டிங்' கிளம்பும் தருணம் பொருட்களை காரில் ஏற்றிக்கொண்டிருக்கையில் என்ன தோன்றியதோ, "மம்மி, நான் கொண்டு போக முதல் ஸ்டூலைப் படம் எடுக்கிறதெண்டால் எடுங்க," என்று வந்து நின்றார்.

கண்ணில் அகப்பட்டதை வைத்து சட்டென்று ஒரு படம் எடுத்ததும் தூக்கிப் போய்க் காரில் ஏற்றினார்.

சொல்லி இருக்கிறேன், எப்போதாவது உடைத்து மாற்றங்கள் செய்யத் தோன்றினால் அல்லது வேண்டாம் என்று தோன்றினால் எனக்குத் தந்துவிட வேண்டும் என்று. ;)

இவர் வளர்ச்சி பற்றி, முன்னேற்றங்கள் பற்றி அன்னைக்கே உரிய இயல்பான சந்தோஷமும் பெருமையும் இருந்தாலும்...
பிரிவு!!
மெதுவே வலிக்கிறதே! ;(

Wednesday, 26 October 2011

தீபாவளி வாழ்த்துக்கள்

தீபாவளி கொண்டாடும், அனைத்து இமாவின் உலகத்து உறவுகளுக்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.
- இமா

Wednesday, 19 October 2011

ரெக்கார்ட் தட்டுகள்

 
 வைனைல் ஒலிப்பதிவுத் தட்டுக்களை மீள்சுழற்சி செய்திருக்கிறேன்.
சுலபமான சுவாரசியமான கைவேலை இது.
( http://www.arusuvai.com/tamil/node/20768 )

Saturday, 8 October 2011

Who is offline!!


Who is offline!!!

கேட்கிறது காதில விழேல்லயோ!

யார் நீங்கள்?

ஹலோஓ!!!

ஒண்டும் கதைக்கிறாங்கள் இல்ல. ஹும்!!

ஒன்லைன்ல யாராவது வருவினமோ!!

அட! வந்துட்டீங்கள், நான் யார் எண்டு சொல்லிப்போட்டுப் போங்கோ போக முதல். எனக்கு பேர் மறந்து போச்சு.
நான்... பச்சை நிறம்; 'குக்குர்ர்ர்ர் குக்குர்ர்ர்ர்" எண்டு கத்துவன்.

Friday, 30 September 2011

Who is online today!!!


Expect the unexpected. ;))

இண்டைக்கு இருக்கிறது நானே..தான் - இமா. ;)

இனிமேல் 'இமாவின் உலகம்' மெல்லமாத்தான் சுழலும் போல இருக்கு.

கை, கைவிடப் பார்க்குது... இப்ப ரெண்டு கையும். நான்தான் இனிக் கவனமா இருக்க வேணும்.
http://www.ncbi.nlm.nih.gov/pubmedhealth/PMH0001485/

http://en.wikipedia.org/wiki/Tennis_elbow

எப்பவும் போல எனக்கு உங்களோட தொடர்பு இருக்க வேணும் எண்டால் மெல்லமா எண்டாலும் உலகம் சுழல வேணும். ஏலுமான நேரம் சின்னதா ஏதாவது பகிர்ந்து கொள்ளுறன். ஏலாத நேரம் படம் காட்டுறன். ;)
கருத்துச் சொல்ல வேணும் எண்டு கட்டாயம் இல்ல. பார்த்திட்டு மனசுக்குள்ள ஒரு சிரிப்புச் சிரிச்சிட்டுப் போனால் போதும். ;)

உங்கட வலைப்பூ இடுகைகள் எல்லாம் கட்டாயம் வாசிப்பன்; கருத்துச் சொல்ல இல்லயெண்டு மட்டும் குறை நினைக்கப்படாது ஒருவரும்; என்ட ஃப்ரெண்ட்ஸ் நீங்கள் - அப்பிடி நினைக்க மாட்டீங்கள் எண்டு தெரியும். வாசிக்கிற நேரம் சுருக்கமாகவாவது கருத்து எழுதப் பாக்கிறன். இல்லாட்டியும் நான் வந்தது உங்களுக்குத் தெரியவரும். ;)
ஏலும் எண்டு கனக்க எழுதினால் அடுத்தடுத்த நாட்களிலதான் பிரச்சினை ஆகுது. அதால இனி ஏலும் எண்டாலும் எழுத்தைக் குறைக்க வேணும்.

சரி, சந்தோஷமாக, சுகமாக இருங்கோ எல்லாரும்.
எப்போதும் போல் அடிக்கடி சந்திப்போம்.
அன்புடன்
இமா க்றிஸ்

Who is online now?

Thursday, 29 September 2011

Who is online?


Surely not imma. ;)

It's U...
You are online now. ;)

Friday, 23 September 2011

கல்லூரிச் சிட்டுக்கள்

நாங்கள் ஊரில 'interval' எண்டுறத இங்க 'morning tea' எண்டுறாங்கள்; 'lunch interval' - 'afternoon tea' ஆகி இருக்கு. ஜெனி எப்பவும் 'recess' எண்டுவா; அவ 'Aussie'.
 
எங்கட 'department' நாற்சார் வீடு மாதிரி. நடுவில சின்னதா 'courtyard'... மூன்று 'bbq' மேசைகள், 'drinking fountain', 'worm bin' & 'dust bins' இருக்கு.
எங்களுக்கு 'morning tea' முடிய, இவைக்கு 'morning tea'.
'cup cake', 'pizza', 'pie' & 'sandwich' ஓரங்கள்... இப்படி விதம்விதமாகச் சாப்பிடுவார்கள்.

உள்ள ஒரு ஆள் தனிய இருந்து சாப்பிடுறா. இங்க வெளியில சண்டைக்கு ரெடியாகுகினம் இவை.
சண்டை நடக்கேக்க குறுக்கால ஒரு சின்னன் வந்ததில படம் சரிவரேல்ல. பிறகு இவங்கள் சமாதனமாகீட்டினம், எடுக்கக் இடைக்கேல்ல. இன்னொரு நாள் பாப்பம்.

உள்ள சாப்பிட்டுக்கொண்டிருந்தவ இவதான்; வண்டியைப் பாருங்கோ. ;)) 

"அடுத்த பாடத்துக்கு மணி அடிச்சுக் கேக்குது." 

எனக்குத் தெரிஞ்சு... ஒரு ஆறு வருஷமா இந்தச் செவ்வரத்தமரத்திலதான் இவை குடியிருக்கினம். உள்ள கூடு இருக்குது.

சிட்டுக்குப் பின்னால 'Just juice' போத்தலில இருக்கிறது 'worm tea'. செடிகளுக்கு விடுறதுக்கு எடுத்து வச்சிருக்கிறம்.
சிட்டு, தொட்டித் தட்டில சேருற தண்ணீரையே 'tea' எண்டு குடிச்சுரும்.