Saturday 20 April 2013

இசைத்தேன்!

என்னிடம் இருக்கும், என்னை விட்டு பிரியாத பொருட்களைப் பட்டியலிட வானதி அழைத்திருந்தார். இரண்டு மாதங்கள் கழித்துத்தான் பார்த்திருக்கிறேன்.

சிறிய வயதில் அப்பா mouth organ வாசிப்பதைக் கேட்டிருக்கிறேன். அகலமான சிறிய Butterfly மௌத் ஆர்கன் ஒன்று அவரிடம் இருந்தது. யாரையும் தொட விடமாட்டார். தான் வாசித்து முடிந்ததும் அதற்கென உள்ள வெல்வெட் துணியில் பொதிந்து பெட்டியில் பத்திரப்படுத்துவார். இதனால்... "சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்," என்றிருந்துவிட்டேன் போல.

எங்கள் வீடு இருந்த இடம் அப்போது காட்டுப்புறம். அயல் என்று இரண்டே இரண்டு வீடுகள்; ஒன்றில் ஒரு ஐயா மட்டும் தனியே இருந்தார் - அருமையாகப் புல்லாங்குழல் வாசிப்பார். 'வெசாக்கில வாங்கிற புல்லாங்குழல் எங்களுக்கெல்லாம் 'கீக்..பீக்..ஃபீ..ஃப்ஃப்ஃப்' என்று காதை அறுக்கிற மாதிரி கத்த, இவருக்கு மட்டும் எப்பிடி வடிவா ஊதுது!'என்று எனக்கு வியப்பாக இருக்கும். "பொழுதுபடுற நேரம் புல்லாங்குழல் வாசிச்சால் பாம்பு வரும்," என்பார் செபா. வாசிக்காவிட்டாலும் அது வரும். உண்மையில் அவற்றின் குடியிருப்புக்குள் நாம் வந்து குடியமர்ந்திருந்தோம். 

ஒரு தடவை நானும் தம்பியும் (ஐந்து வயதும் ஏழு வயதும்) தனியே இருந்தபோது பக்கத்து வீட்டு ஐயா,  அப்பாவின் மௌத் ஆர்கனை இரவல் வாங்கினார். அழகாக வாசித்தும் காட்டினார். முதல் முறை வாசிப்பவரால் எப்படி இப்படி என்று வியந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பா வந்ததும் சொல்ல வெடித்தது பூகம்பம். ;) "வாயில் வைத்து வாசிப்பதை எப்படி இன்னொருவருக்குக் கொடுக்கலாம்!" நன்றாக வாங்கிக்கட்டிக் கொண்டேன்.

மௌத் ஆர்கனுக்கு கொதிநீர்க்குளியல் நடந்தது; அது தன் நிறமிழந்து மெருகிழந்து போயிற்று. பிறகு அப்பா அதை அதிகம் தொட்டதாக நினைவில்லை.

பிறகு.... 'மூன்று முடிச்சு' வந்தது. படம் பார்த்து மறுநாள் எடுத்து ஊதிப்பார்த்தேன். முதல்முயற்சியிலேயே சரியாக I.. LOVE... U... ஊத வந்தது. மனதுக்குள் மத்தாப்பூ; பெருமை பிடிபடவில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதையே 'ஞா.. ஞா... ஞா' என்று ஊத ஆரம்பித்தேன்.

அப்போது எங்கள் வீட்டில் என் வயதொத்த (15) தோழி ஒருவர் தங்கிப் படித்துவந்தார். அவரிடம் மெலோடிக்கா ஒன்றிருந்தது. சனி ஞாயிறு மதியபோசனத்தின் பின் நாங்கள் கச்சேரி ஆரம்பிப்போம். நான் கமல், அவர்... முதலில் ஸ்ரீதேவியாக ஆரம்பித்து மெதுவே Y. விஜயாவாக மாறுவார். ;)) ஒரு அரைமணிநேரமாவது அமர்க்களமாகக் கச்சேரி நடக்கும். ;) செபா எப்படித்தான் எல்லாம் பொறுத்தார்களோ! பாவம். கிடைக்கும் இரண்டுநாள் விடுமுறையும் கூட சப்தத்தோடுதான் கடக்கும் அவருக்கு.

பிறகு... நானாகவே school band ல் வாசிக்கும் பாடல்களை மெதுவே வாசிக்க ஆரம்பித்தேன். செவி இசைக்குப் பழகிற்று. கையும் மூச்சும் இசைந்து கொடுத்தது. ஆஸ்மாவுக்கும் நல்ல மூச்சுப் பயிற்சி என்று தோன்றிற்று, தொடர்ந்தேன்.

1979 - ஓரளவு நன்றாக வாசித்திருக்க வேண்டும் நான்.  அப்பா தானாகவே எனக்குப் புதிகாக ஒன்று வாங்கிக்கொடுக்கத் தேடினார். அவரிடமிருந்ததை விட நீளமாக பளபளவென்று ஒரு Hero.
முதல் முறை விலை கேட்க 160 ரூபா சொன்னார்கள். (மூன்று நாள் கல்விச்சுற்றுலாவுக்கு இருபத்தைந்து ரூபா கட்டணம் இருந்த காலம் அது.) "வேண்டாம்," என்றேன். ஒவ்வொரு தடவை அந்தக் கடையைக் கடக்கும் போதும் விலை விசாரிப்பேன். வாங்க மட்டும் மாட்டேன். ஆறுமாதம் கழித்து, எனது ஏழாவது விசாரிப்பில் அறுபத்தைந்து ரூபாவாக இறங்கிவந்திருந்தார்கள். இதற்குமேல் குறையாது என்று நிச்சயம் தெரிந்து, சந்தர்ப்பத்தை விடவேண்டாம் என்று அப்பா வாங்கிக் கொடுத்த அன்று தேதி - 04 செப்டெம்பர் 1979. (மறுநாள் எனது மாமனார் காலமானார். அதனாற்தான் தேதி நினைவிலிருக்கிறது.)

எங்கு போனாலும், ஒரேயொரு நாள் பயணமானாலும் கூட என்னோடு கூடவே வரும் என் மௌத் ஆர்கன். என் தோழியின் தந்தையார் அப்போது சவூதியிலிருந்தார். ஒரு தடவை விடுமுறையில் வரும்போது ப்ளாஸ்டிக் நாடாக்களில் பெயர் அடிக்கக்கூடிய சிறிய உபகரணம் ஒன்றைக் கொண்டுவந்தார். எனக்கும் பெயர் அடித்துக் கொடுத்தார்.
இணையத்தில் யார் படத்தை யார் சுடுவார்கள் என்பது தெரியாது. ஒரு எச்சரிக்கையுணர்ச்சியில்... ;) பெயரை மறைத்துவிட்டேன். படிப்போர் / பார்ப்போர் மன்னித்தருள்க. ;)
என் இரண்டாவது புத்திரனுக்கு ஏழு வயதாக இருக்கையில் அவருக்கும் இசையில் நாட்டம் ஏற்பட்டது. கீபோர்ட், ட்ரம்ஸ் வாசிப்பார். அவருக்கு சுலபமாகவே மௌத் ஆர்கன் வாசிக்க வந்தது. கேட்டார். "புதிது வாங்கித் தருகிறேனே!," என்றேன். என்னுடையதுதான் வேண்டுமென்றார். அவரே என்னுடையவர்தானே, கொடுத்துவிட்டேன்.

இருவர் கையாலும் பலமுறை விழுந்திருக்கிறது. ஆனாலும் பின்னாளில் க்றிஸ் எனக்கு வாங்கித் தந்த...
 
இந்த Big Valley யை விட வலிமையானது. இன்னமும் இனிமைக்குக் குறைவில்லை; பிசிறில்லாமல் வாசிக்கிறது.
~~~~~~~
Today's special... 'நெஞ்சுக்குள்ளே' ஆரம்ப இசை. கேட்கத் தயாரா! ;)
 
இங்கு வந்த முதல் வருடம் Atwaters ல் மலிவு விற்பனையில் இந்தப் புத்தகத்தையும் ஒலிநாடாவையும் கூடவே ஒரு குட்டி மௌத் ஆர்கனையும் (மூன்றும் ஒன்றாகத்தான் விற்பனைக்கு இருந்தது.) கண்டு, மகனுக்கு வாங்கிக் கொடுத்தேன். பழகினார், பிறகு அந்த குட்டி மௌத்ஆர்கனை மட்டும் தனியாக தன் நெருக்கிய தோழருக்குக் கொடுத்துவிட்டார்.

7 comments:

  1. அட...:) எத்தனை இனிமையான நினைவுப்பகிர்வு இமா...
    பிரியாத பொருளும்... அருமை. உங்கள் மௌத்தோர்கனும் அதனுடனான நினைவும் ரசிக்கவைத்தது.

    எங்கே... நெஞ்சுக்குள்ளே ஆரம்ப இசையை காணவில்லையே... உங்கள் இசையென்ற நாதவெள்ளத்தில் மூழ்குவதற்காகத் தேடிப்பார்த்தேன். காண்வில்லையே...:(

    இணையுங்கள் கேட்க ஆவலோடு உள்ளேன்...:)

    ReplyDelete
  2. நல்லதொரு பொக்கிஷப் பகிர்வு இமா.விதம் விதமாக மௌத் ஆர்கன் படங்கள் பகிர்ந்தது கூடுதல் அழகைத் தந்தது பகிர்வுக்கு.

    ReplyDelete
  3. அருமையான பொக்கிஷம் ..

    இசை தேன் தான்...

    ReplyDelete
  4. இனிமையான நிலைவலைகள்... இமா கியூரெக்ஸ் கலரை மாத்திட்டார்ர்.... நெயில் ஆர்ட் இப்போ எங்க வீட்டிலும் பேமஸாக்கும்:)... கணவருக்கும் பெருவிரல் நகத்துக்கு பண்ணி விடுவேன்ன்:) மாட்டேன் என என்னிடம் சொல்லவே முடியாது விடமாட்டமில்ல:).

    ReplyDelete
  5. மிகவும் கஷ்டமான வாத்தியம் என்பார்கள். கேட்கப் பிடிக்கும்.
    காலங்களை அழகாகக் கோர்த்தப் பதிவு.

    ReplyDelete
  6. //கணவருக்கும் பெருவிரல் நகத்துக்கு பண்ணி விடுவேன்ன்:) மாட்டேன் என என்னிடம் சொல்லவே முடியாது விடமாட்டமில்ல:).// ஐயகோ!!! ஆண்டவா...இந்தக் கொடுமயக் கேப்பாரில்லையா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

    இமா, ஹார்மோனிகா கதை ஜூப்பர். எங்க வீட்டிலும் ஒரு ஹார்மோனிகா இருக்குதே! :) என்னவர் ஹார்மோனிகா பழக ஆசைப்பட்டப்பவும் உங்கப்பா மாதிரிதான் தடை போட்டிருக்காங்க. அப்புறமா இவர் வேலைக்குப் போனப்பறம் இவரா வாங்கிகிட்டது அது. பத்திரமா வைச்சிருக்கோம்.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா