Sunday, 10 May 2020

ஜம்மென்றிருக்க ஜிம்

'லொக்டௌன்' ஆரம்பித்ததும் முதலில் மனதில் ஓடியது உடற்பயிற்சி விடுபட்டுப் போகப் போகிறதே என்கிற பயம்தான். 'ட்ரெட்மில்' அதற்குச் சில மாதங்கள் முன்பாக இறந்துபோயியிருந்தது. அது முதல் தெருவில் உலாப் போக ஆரம்பித்திருந்தேன். 'லொக்டௌன்' காலத்தில் க்றிஸ்ஸும் நானும் தினமும் காலை ஒன்றரை மணி நேரம் பின்னேரம் ஒன்றரை மணி நேரம் நடக்கப் போவதை வழக்கமாக்கி இருந்தோம். பாடசாலை நாட்களில் மாலையில் மட்டும் போக முடிந்தது. 

டீவீ பார்க்கும் போது ஆடலாம் :-) என்று பழசாகிப் போய் கராஜில் கிடந்த "Ab King Pro' - வை வெளியே கொண்டு வந்தோம். அதன் உறைகள் சில இடங்களில் கிழிந்தும் சில இடங்களில் உருகியும் இருந்தன. 

துடைத்துவிட்ட இருக்கையின் வளைவுகளை வரைந்து நீள அகலங்களைக் குறித்துக் கொண்டேன். கறுப்பு நிற டெனிம் துணியில் படம் வரைந்து எடுத்து, சுற்றிலும் 3 செ.மீ + தையலுக்கான அளவு விட்டு வெட்டி எடுத்தேன். இருக்கைக்கு மடித்துத் தைத்த ஓரத்தின் உள்ளே எலாஸ்டிக் வைத்து, இழுத்து மாட்டிவிட்டேன். முதுகுப் பகுதியின் பின்புறம் இரண்டு சில்லுகள் இருந்தன. க்றிஸ்ஸை உதவிக்கு அழைத்து ஸ்க்ரூக்களை நீக்கி முதுகுப் பகுதியைப் பிரித்தேன். பிறகு துணியை வைத்து ஒருவர் பிடிக்க மற்றவர் ஸ்டேப்பிள் கன் கொண்டு அடித்து முடித்தோம்.
புது உருக் கொண்டது, 'ஆப் கிங் ப்ரோ.'

சின்ன மகனிடம் ஒரு பெட்டி டம்பெல் செட் - சில்லுகளை மாற்றிப் போட்டு எடைகளை மாற்றக்கூடியது இருந்தது. அதைப் பயன்படுத்துவதற்கு எனக்கு ஒரு சிறிய வாங்கு தேவைப்பட்டது. என் உயரத்துக்கும் அகலத்திற்கும் வீட்டில் இருந்த எதுவும் பொருந்தி வரவில்லை, ஒரு வட்ட ஸ்டூலைத் தவிர. அந்த ஸ்டூல் அப்பாவினது. அவர் ஓய்வு இல்லத்திற்குச்சென்ற பின் என்னிடம் வந்து சேர்ந்தது. அதன் மேல் ரெக்கார்ட் ஒன்றை வைத்து பூந்தொட்டி வைத்திருந்தேன். இதுதான் அளவு என்று முடிவானதும், அதற்கும் மெல்லியதாக ஃப்ரில் வைத்த குஷன் ஒன்று தைத்து எடுத்தேன். 

இதற்கு மேல்... கொஞ்சம் ஸ்கிப்பிங் செய்வேன்; கொஞ்சம் 'தெரா பாண்ட்' பயிற்சிகள் செய்வேன். படிக்கட்டில் கடகடவென்று ஏறி இறங்குவேன்; எக்சர்சைக்கிள் - டீவீ பார்க்கும் சமயம் ஓடுவேன்.

லொக்டௌன் ஆரம்பித்தது முதல் இதுவரை ஜிம்முக்குக் கட்டணம் செலுத்தத் தேவை இல்லாதிருந்தது. 18ஆம் தேதி முதல் சிலர் போக ஆரம்பித்துவிட்டார்கள் என்றாலும் எனக்கு சற்றுத் தயக்கமாக இருந்தது - இந்த சுத்தம் செய்யும் திரவங்களின் வாசனைகள் என்னைப் பாடாய்ப் படுத்துமே! எப்படியும் வருகிற திங்கள் முதல் மீண்டும் போக ஆரம்பிக்கப் போகிறேன். வாழ்த்தி வழியனுப்புங்கள். :-) 

முன்பெல்லாம் காலையில் முதல் வேலையாக ஜிம்முக்குப் போய்விட்டு அங்கேயே குளித்து உடை மாற்றிக் கொண்டு பாடசாலைக்குப் போக முடிந்தது. இப்போதோ அங்குள்ள குளியலறைகளைப் பாவிப்பதை நினைத்தும் பார்க்க முடியவில்லை. 

விரைவில் எல்லாம் பழைய நிலைக்கு மாறும் என்று நம்புகிறேன்.

No comments:

Post a Comment

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா