Wednesday 17 October 2012

மாமா!

கொஞ்ச காலம் மட்டும்
நெருக்கமாக இருந்த உறவு;

பிறகு...
தொலைக்கல்வி போல தொலை உறவு.
பின்னாளில் தொலைந்தே போனது உறவு.

மீண்டும் துளிர்க்க ஆரம்பிக்கையில்
பழைய நெருக்கம்
அதை விட அதிக நெருக்கம்.

அருமையான மனிதர்
அசாத்திய உயரம்
மென்னையான உள்ளம்
கட்டான உடல்
கருகருத்த நிறம்

சிறு வயதில் என்னை
பயமுறுத்திய தோற்றம்
ஆனால்...
உள்ளமோ மென்மை.

புரிந்து கொண்டோர் சிலர்
பலனெதுவுமில்லையே!
புரிய வேண்டியவர்க்குப் புரியவில்லையா!!
அல்லது உரிமையுள்ளோர்க்கு
வேறு முகம் காட்டினாரா!!
இறைவனுக்கே வெளிச்சம்!

வெளிச்சம் அகலவாரம்பித்த
ஓர் காலையில்

கிரிங்கியது தொலைபேசி
கலங்கியது மனம்.

ஒரே சொந்தம்
கிளம்பிப் போனார்.
விடை கொடுக்கும் தருணம்
விரைவில் என்று
விரைந்து கொணர்ந்தார்.

குழந்தையாய்...
"வீட்டிற்கு வர வேண்டும்,"
என அடம் பிடித்தவரை
அழைத்து வராமல் ஐசீயூவில் சேர்க்க
மாதமொன்று
ஐ சீ யூ என்று
எமைப் படுத்தி எடுத்தது.

தவிப்பு, ஏக்கம்,
தவறு, தாக்கம்
துக்கம், தூக்கமின்மை
குழப்பம், குடும்பம்
பரபரப்பு, இயலாமை
நட்பின் அருமையென்று
அனைத்தையும் ஒன்றாய் உணர்த்திய
ஒன்பதாம் மாதமது.

அன்னை தெரேசா இறந்தார்.
இளவரசி டயானா அகாலமானார்.
தொடர்ந்து....
மாமாவும்.

சொற்ப நாட்களில்
சொல்லொணாப் பாசத்தை
என் வாரிசுகள் மேல் சொரிந்து
நிலைத்து விட்டார் எம்மோடு.

அகாலமல்லவது
காலம்தான் என்று பின்பு தோன்றிற்று,
சுனாமி வந்தபோது.

அவருக்கு
அடைக்கலம் கொடுத்திருந்த
என் அத்தை குடும்பம்
மொத்தமாய்த் தொலைந்து போக
அவர்களைத் தேட, அழ
ஆட்களிருந்தனர் அங்கே.

நாமிங்கே இருக்க
நால்வர் தேடிப் பார்த்து
முறைகள் செய்திடினும்
முறையிலாப் பேச்செமக்கு.

அது கேட்கவேண்டாம்
தன் நேசத் தமக்கை மற்றும் மைந்தர்
என்றுதான்
அப்படியோர் காலம்
தெரிந்து  காலமானாரோ!!

உற்றார் உறவு கூடி
ஊர் மெச்சும் சிறப்பாய்
இறுதி ஊர்வலம்.
எவரும் அவரைத் தப்பாய்ப் பேசவில்லை.
அன்பானவர்,
நல்லவர்
தானும் தன் பாடுமென்றார்.

என்னாயிற்று!
எங்கே தவறு! யார் தவறு!

புரிய வேண்டியவர்க்குப் புரியவில்லையா!!
அல்லது உரிமையுள்ளோர்க்கு
வேறு முகம் காட்டினாரா!!

புதிர் விலகவில்லை இன்னமும்
விலகாது
விலக்க முயலவுமில்லை நாம்.
சிவற்றை...
அப்படியே விட்டு விடுவதுதான் நல்லது.
13/09/2012 அன்று பதினைந்தாம் ஆண்டு நிறைவையிட்டு வெளியிட இருந்தேன்; தடைப்பட்டுவிட்டது. அதனால் இப்போது.
- இமா

7 comments:

  1. இமா! மனதை உருக்கி உறைய வைத்த கவிதை.
    உங்களைப் பாராட்டத் தெரியவில்லை எனக்கு:(
    மாறாக மனத்தில் வேதனைதான்.
    உற்ற உறவின் பிரிவு வலியை உணர்ந்தவள் நான்

    // புரிந்து கொண்டோர் சிலர்
    பலனெதுவுமில்லையே!
    புரிய வேண்டியவர்க்குப் புரியவில்லையா!! //

    நெருடலான வரிகள் எனக்கு:’(
    ஆழ்ந்த அனுதாபங்களுடன் நீங்கா நினைவில் உங்களுடன் நானும்...........

    ReplyDelete
  2. மனம் கனத்தது... வேறு எதுவும் எழுத தோன்றவில்லை...

    ReplyDelete
  3. மறந்துருங்க.
    இது வாழ்க்கையில் சகஜம். ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் நான்.
    நீங்கள் இருவரும் படித்தீர்கள் என்பதே மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. மிக்க நன்றி.

    ReplyDelete
  4. நெருடலான வரிகள் நிறைந்த கவிதை

    ///இது வாழ்க்கையில் சகஜம். ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்///

    பகிர்ந்து கொள்கையில் குறைந்து போய்விடுகிறது துயரம்

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம்.
      உங்களைக் காண நினைவுக்கு வந்த இன்னொரு விடயம்.. மாமாவை அங்கேதான் வைத்திருந்தோம். அவர் உயரத்திற்குக் கட்டில் போதவில்லை. எப்போதும் கால்களைக் கம்பிகளுக்கு இடையில் விட்டு வெளியே நீட்டி இருப்பார். :-)

      Delete
  5. //புதிர் விலகவில்லை, இன்னமும் விலகாது
    விலக்க முயலவுமில்லை நாம்.
    சிவற்றை... அப்படியே விட்டு விடுவதுதான் நல்லது.//

    மாமாவின் நினைவுகள் மறக்கத்தான் மறக்காது.
    நல்லாவே எழுதியுள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா.

      Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா