Friday 26 October 2012

மீண்டும் ஏஞ்சல் 2

இதற்கு முன்பு

நடுவே மதிய போசனம் ஆயிற்று. பழரசம் எடுத்துக் கொண்டு மேலே வந்தோம். இங்கேதான் என் பொக்கிஷ அறை இருக்கிறது. ;)) குவளையை மேசையில் வைக்கப் போனார். வைக்க முன் தடுத்து ஒரு உடைந்த சீடீயைக் கொடுத்து அதன் மேல் வைக்கச் சொன்னேன்.

"You are great Aunty!" என்றார் மலர்ச்சியோடு. 'I think I now know what I can do. I am going to make a coaster for myself. This will be something different from what my friends are doing for the project. My own tech challenge, a personalized coaster."

உட்கார்ந்து பேசினோம். சில வருடங்கள் முன்பு நர்மதாவின் சீடீ மீன் செய்த பொழுது கோந்திற்குப் பதில் double sided tape பயன்படுத்தக் காட்டிக் கொடுத்திருந்தேன். அதே முறையில் செய்யலாம் என்றார். அலங்காரம்.... ஸ்டிக்கர்! என்னிடன் இருந்தவை பிடிக்கவில்லை.
அக்ரிலிக் பெய்ன்ட்! க்ளாஸ் பெய்ன்ட்! candle colour!
window colour பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தோம். தூரிகை இல்லாமல் நேரடியாகத் தீட்டி விடலாம்.

தேவையானவை எவை என்பதைக் குறித்துக் கொண்டார். சேகரித்ததும் வேலையை 
ஆரம்பித்தார்.

சரியாக ஒட்டிக் கொள்ள இந்த வழி. பசையுள்ள தட்டை முதலில் போட்டோம். மேலே இரண்டாவதைப் போட பிரச்சினையே இல்லாமல் சரியான இடத்தில் ஒட்டிக் கொண்டது.
 
அடியில் நான்கு sticky dots பாதங்களாக
இடது கைப் பழக்கமுள்ளவர். ஆரம்பிக்க முன்பே சொன்னார்... கவனமாகச் செய்யாவிட்டால் கெட்டு விடும் என்று. பெயரை அடையாளம் செய்து கொண்டு, இறுதியில் இருந்து வரைய ஆரம்பித்தார்.




இடையில் turn table-க்கு சீடீயை மாற்றிக் கொடுத்தேன்.








 வேலை முடிந்ததும்...
இந்த நிறங்கள் காய்ந்ததும் நிறம் மாறிவிடும்.

ஒரு வெற்று CD tower (case) எடுத்துக் கொடுத்தேன். நிறம் காய நாள் ஆகும். அதுவரை பாதுகாப்பாக இருக்கும்.

பிறகு... காலுறையில் செய்து வந்திருந்த பாம்பு 'பப்பட்'டிற்கு கண் நன்றாக இல்லை என்றார். அதைப் பிடுங்கி விட்டு என்னிடம் இருந்த 'goggle eyes' இரண்டு எடுத்து ஒட்டிக் கொண்டார். "நாக்கு வைக்க ஏதாவது கிடைக்குமா?" என்றார். ஒரு மென்சிவப்பு ரிப்பன் துண்டு double sided tape கொண்டு ஒட்டிக் கொண்டார்.

தடதடெவென்று கிழே இறங்கி ஓடினார். "Uncle, you can start getting ready now. I will pack my bag first, tidy up Aunty's room and come down soon."
நானே ஒதுக்கிக் கொள்வேன் என்றேன். கேட்கவில்லை. தன்னால் குப்பையானது தான்தான் சரிசெய்ய வேண்டும் என்றார். :)

கிளம்புமுன் மறவாமல் மெத்தென்று ஒரு முத்தம் கொடுத்து "Thank you Aunty," என்றார். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ;)

மீண்டும் ஏஞ்சல்

ஏதோ செயற்திட்டமாம், இன்று காலை 'கீபோர்ட்' வகுப்பு முடிய ஏஞ்சல் எங்கள் வீடு வந்தார்.

முதலில் அவர் அழகாகத் தயாரித்து வைத்திருந்த Alphabet Book' பையிலிருந்து வெளியே வந்தது. அதை staple செய்ய உதவும்படி கேட்டார். பிறகு மெலிதாக ஒரு சிவப்பு 'போ' கட்டி விட்டார்.

முன்பு ஒரு முறை வந்திருந்த போது 'பேப்பர் பீட்ஸ்' செய்து ஒரு வீட்டு வேலை செய்ய வேண்டி இருந்தது. இன்று, என் மாணவர் ஒருவரது வேலையைக் காணவும்,
 அது போல் ஒன்றும் செய்ய விரும்பினார். எப்படிச் செய்வது என்பதை மட்டும் சேர்ந்து பேசிக் கொண்டோம்.
கத்தரிக்கோலால் கடதாசி நாடாக்கள் வெட்ட அதிக நேரம் எடுப்பார் என்று தோன்றிற்று.
அதை மட்டும் வெட்டி வைத்தேன்.

மீதி எல்லாம் பொறுமையாக அவராகவே செய்து முடித்து விட்டார். இடையில் பேச்சு மூச்சு இல்லை.
"எப்படி! அழகாகச் செய்திருக்கிறேனா?
நன்றி, மீண்டும் வருக. 
http://imaasworld.blogspot.co.nz/2012/10/2.html

Thursday 25 October 2012

ஆப்பிள் கு(கூ)டை

பொழுது போக மாட்டேன் என்றது; சேகரிப்பைக் குடைந்து கொண்டிருந்தேன். கண்ணில் பட்டது சென்ற வருடம் boxing day அன்று மலிவு விலையில் வாங்கி வந்த ஆப்பிட்பழங்கள். ஏதாவது கைவேலைக்கு உதவும் என்று வைத்திருந்தேன். இன்று பார்க்க ஒன்றிரண்டு பிளவுபட்டுத் தெரிந்தன. steirofoam கொண்டு தயாரானவை அவை. காலநிலை மாற்றம் இப்படி மாற்றிவிட்டிருக்கிறது போல. இனியும் விட்டு வைத்தால் பயனில்லாமலே குப்பைக்குப் போகும் என்று தோன்றிற்று.

வீட்டில் எப்பொழுதும் மேலதிகமாக சாப்பாட்டுக் குடைகள் இரண்டாவது வைத்திருப்பேன்.
1. இவை அதிக காலம் தாங்குப் பிடிக்காது.
2. ஊரில் பெரிய 'சாப்பாட்டு மூடி' இருந்தது. கிணற்றடியில் கொண்டுபோய் வைத்துக் கழுவி எடுக்கலாம். இவையோ கழுவிப் பாவிக்க இயலாதவை. அடிக்கடி மாற்றிவிடுவது நல்லது.
3. தப்பித் தவறி எனக்குப் பிடிக்காத உணவுப் பொருள் (பறவை) பட்டுவிட்டால் தூக்கித் தூ...ரப் போட்டு விடலாம். ;)
4. கேக் செய்யும் போது மேலதிகமாக ஒன்றிரண்டு இருந்தால் உதவும்.
இந்தக் காரணங்களுக்காக.... 'டொலர் ஷொப்' பக்கம் போனால் ஒன்றிரண்டு வாங்கி வந்து வைப்பது உண்டு.

ஆப்பிள்கள் ஆறுதான் இருந்தன. நத்தார் மரத்துக்கான சோடினைப் பொருட்கள் இருந்த பெட்டியை ஆராய மேலும் இரண்டு அளவுகளில், மொத்தம் ஐந்து பழங்கள் கிடைத்தன.

6+3+2 = !!
குடையிலிருந்த ஆறு கம்பிகளில் மூன்றில், இரண்டிரண்டு பழங்கள் - 6
 
மீதி மூன்றில் ஒவ்வொரு பழம் - 3
உள்ளே - 2

தங்க நிற நூல்களை வெட்டி விட்டு பச்சை நூல் கொண்டு இலைகளைக் குடையோடு தைத்து... தையல் விட்டுவிடாமல் nail polish - top coat பூசி.... (ஒரு போத்தலில் அடியில் மட்டும் கொஞ்சம் மீந்து இருந்தது. தடிப்பாகிவிட்டது; நகத்திற்கு இனி ஆகாது. அந்த நகத்தோடு சாப்பிடலாம் என்றால் இதுவும் ok என்று மனது சொன்னது.) ;) வெடிப்புகளின் மேல் சிவப்பு நகப்பூச்சு தடவி.... சாப்பாட்டு மேசைக்கு எடுத்து வந்தாயிற்று.
~~~~~~~~~~~~~~~~~~~~~

0---- கு 1
இது போல் முன்பு செய்த செர்ரிக் கு(கூ)டை 'அங்கே' http://www.arusuvai.com/tamil/node/17356

0---- கு 2
தட்டச்சு செய்கையில் சுற்றிய நுளம்புத்திரி - 
            ஆ...தியில், அதாவது பிளாத்திக்குக் கூடை வருமுன்பாக, எங்கள் ஒழுங்கையில் திடீரென்று எப்போவாவது 'ஊத்..தக்..கூ..டை, சாப்..பாட்..டு மூ..டீ.....' என்றொரு குரல் கேட்கும். முதல் முதல் பரவை முனியம்மாவை திரையில் பார்த்த போது மூளையில் மீண்டும் அதே குரல்... அந்த அக்கா தோற்றம், குரல் மட்டுமல்லாமல் கைவீச்சு, நடை எல்லாம் ஒரே மாதிரி இருக்கும்.

இயற்கையோடு இயைந்து போகும் மூங்கிற் கூடை காணாமற் போய் ப்ளாத்திக்கும் கடந்து, இப்போ இந்த வலைக்கூடை மேசைக்கு வந்திருக்கிறது.

இது போல் நீள் சதுரமானவைதான் பெரியவர் சின்...னவராக இருந்தபோது நுளம்பு, ஈ வலையாகப் பயன்பட்டது. இரண்டாம் மாதமே தூர உதைத்து விட்டுச் சிரிப்பார். கம்பி காவலிடத்திலிருந்து வெளியே எட்டிப் பார்க்கும். அதைச் சரியான இடத்தில் பிடித்து வைத்துத் தைக்க வேண்டும் அடிக்கடி. எவ்வளவு முட்டாள்தனமாக இருந்திருக்கிறேன். பாதுகாப்பு இல்லை என்று அப்போது நினைக்கவே இல்லையா நான்!! ஹ்ம்! ;(

அவருக்கு அது அளவில்லாது போனதன் பின் 'கேக்' மூடுவதற்காக என்று கழுவி எடுத்து வைத்தது நினைவு இருக்கிறது. இப்போ இதற்கென்றே வாங்குகிறேன்.


0---- கு 3 
இமா எடுத்த இந்தப் படம் வீணாகி விடாமல்.... பார்த்து ரசியுங்கள். ;)

Thursday 18 October 2012

வலது காலை எடுத்து வைத்து!!!

இது முன்பே பலர் பார்த்ததுதான். இங்கும் பகிரத் தோன்றிற்று.
என் இளையவர் வெகு காலம் முன்பாகச் செய்தது இது. பதின்மூன்று வயது அப்போது, பாடசாலையில் சமூகக்கல்விப் பாடச் செயற்திட்டத்திற்காகக் களிமண் ஒரு பை வாங்கினார். அதிலிருந்து மீந்ததில் அவர் செய்தது இது.

ஒரு பழைய குவளையை உள்ளே இருத்தி பூச்சாடி வடிவம் அமைத்தார். மனதில் உருவத்தை வைத்திருந்தார் போல. கை தன்பாட்டில் இயங்கியது. களியைப் பூசி வழித்து, மெழுகி... வடிவமைக்கும் போது அருகே அமர்ந்து அவர் விரல்கள்  வேலை செய்யும் அழகைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பிரமிப்பாக இருந்தது, ஒரு கைதேர்ந்த சிற்பியினது போன்று அவை இயங்கிய லாவகம்.

ஒருநாள் தந்தையிடம் தனக்கொரு சூளை அமைத்துத் தர இயலுமாவென்று கேட்டார். எனக்கும் யோசனை பிடித்துத்தான் இருந்தது. அப்போ இருந்தது வாடகை வீடு. சொந்த வீடானாலும் சூளை அறை தயாராக அதிகம் செலவாகும். கல் வீடு வேண்டும் அதற்கு. அனுமதி பெறவேண்டும். சின்னவர் சிந்தனையும் படிப்பிலிருந்து திசை திரும்பி விடும் என்று தோன்றிற்று. அத்தோடு வனைதலுக்கு முற்றுப் புள்ளி வைத்தாயிற்று.

எப்போதாவது மீண்டும் தொடரக் கூடும்.

Wednesday 17 October 2012

சூரியகாந்தி

இந்தச் சூரிகாந்திச் செடிக்கோர் கதை இருக்கிறது. சில வருடங்கள் முன்பு, அழகாய் ஆறடி வளர்ந்து பூக்கத் தயாராக நின்றது எங்கள் தோட்டத்துத் தரையில்.

சின்னவர்கள் இருவருக்குமாக அவர்களது மாமனார் ரிமோட்டில் இயங்கும் ஹெலிகாப்டர் பொம்மை ஒன்று வாங்கிக் கொடுத்தார். இவர்கள் அதை விர்ரென்று வீட்டினுள்ளே விட, பொருட்களெல்லாம் தட்டிக் கொட்டிற்று.

வெளியே போனார்கள். செடி துண்டாகிவிட்டது. முக்கியமான பகுதி முறி(டி)ந்து விட்டது. தரையில் நீளமாக ஒரு குச்சு மட்டும் நின்றது. எனக்கு சோகம் பொறுக்க முடியவில்லை. கோபிக்க இயலவில்லை. இயலாமை... பயங்கர கர்ர்ர்ர்... கண்ணில் பட்ட வெற்றுத் தொட்டியில் துண்டாகி வீழ்ந்த தலைப்பகுதியைச் சொருகிவிட்டுச் சென்று விட்டேன்.

இலைகள் மெதுவே கருகிக் கொட்டின.

நான் தொடவும் இல்லை.

திடீரென ஒருநாள் துளிர்கள்... அப்போதுகூட பொய்த் தளிர் என்று நினைத்தேன். சூரியகாந்தியைத் தண்டிலிருந்து வளர்க்கலாம் என்று அறிந்திருக்கவில்லை அதுவரை. இலைகள் பெருத்தன. ஆதாரம் குற்றி விட்டேன். இருபத்தைந்துக்கு மேல் பூக்கள் கிடைத்தன அந்தப் புதிய செடியிலிருந்து. தட்டுக்கள் போல் பெரிதாகப் பூக்கும் இனம் இது. தொட்டியில் என்பதாலும் விபத்தின் காரணமாகவும் எண்ணிக்கை அதிகரித்ததாலும் என்று நினைக்கிறேன், சிறிய பூக்கள்தான் கிடைத்தன. ஆயினும் அழகு அவை.

எங்கள் அயல் வீட்டுப் பெண்மணி பறவைகளைக் கவர்வதற்காகவே சூரியகாந்தி வளர்ப்பார். அவை வேலிக்கு மேலாகத் தலை காட்டி 'ஹாய்' சொல்லும் எனக்கு. கோடை விடுமுறையில் தனித்திருக்கும் போது அடிக்கடி ஜன்னலால் எட்டிப் பார்ப்பேன்; சூரியனை ஒழுங்காகப் பின் தொடர்கின்றனவா என்பதைக் கவனிப்பதற்காக.

சூரியனைத் தொடரும் சூரியகாந்தி; இமாவின் உலகம் இங்கு தொடர்ந்ததோ 'சுகந்தி பூ'வை.

சூரியகாந்தி விதைகள் சாப்பிடலாம் அறிந்திருப்பீர்கள்; முழுப்பூவையே சாப்பிடலாம் தெரியுமா? இனிமையாக இருக்கும். நம்பாவிட்டால்... பொறுத்திருங்கள் நிரூபணத்தோடு மீண்டும் வருவேன். 

மாமா!

கொஞ்ச காலம் மட்டும்
நெருக்கமாக இருந்த உறவு;

பிறகு...
தொலைக்கல்வி போல தொலை உறவு.
பின்னாளில் தொலைந்தே போனது உறவு.

மீண்டும் துளிர்க்க ஆரம்பிக்கையில்
பழைய நெருக்கம்
அதை விட அதிக நெருக்கம்.

அருமையான மனிதர்
அசாத்திய உயரம்
மென்னையான உள்ளம்
கட்டான உடல்
கருகருத்த நிறம்

சிறு வயதில் என்னை
பயமுறுத்திய தோற்றம்
ஆனால்...
உள்ளமோ மென்மை.

புரிந்து கொண்டோர் சிலர்
பலனெதுவுமில்லையே!
புரிய வேண்டியவர்க்குப் புரியவில்லையா!!
அல்லது உரிமையுள்ளோர்க்கு
வேறு முகம் காட்டினாரா!!
இறைவனுக்கே வெளிச்சம்!

வெளிச்சம் அகலவாரம்பித்த
ஓர் காலையில்

கிரிங்கியது தொலைபேசி
கலங்கியது மனம்.

ஒரே சொந்தம்
கிளம்பிப் போனார்.
விடை கொடுக்கும் தருணம்
விரைவில் என்று
விரைந்து கொணர்ந்தார்.

குழந்தையாய்...
"வீட்டிற்கு வர வேண்டும்,"
என அடம் பிடித்தவரை
அழைத்து வராமல் ஐசீயூவில் சேர்க்க
மாதமொன்று
ஐ சீ யூ என்று
எமைப் படுத்தி எடுத்தது.

தவிப்பு, ஏக்கம்,
தவறு, தாக்கம்
துக்கம், தூக்கமின்மை
குழப்பம், குடும்பம்
பரபரப்பு, இயலாமை
நட்பின் அருமையென்று
அனைத்தையும் ஒன்றாய் உணர்த்திய
ஒன்பதாம் மாதமது.

அன்னை தெரேசா இறந்தார்.
இளவரசி டயானா அகாலமானார்.
தொடர்ந்து....
மாமாவும்.

சொற்ப நாட்களில்
சொல்லொணாப் பாசத்தை
என் வாரிசுகள் மேல் சொரிந்து
நிலைத்து விட்டார் எம்மோடு.

அகாலமல்லவது
காலம்தான் என்று பின்பு தோன்றிற்று,
சுனாமி வந்தபோது.

அவருக்கு
அடைக்கலம் கொடுத்திருந்த
என் அத்தை குடும்பம்
மொத்தமாய்த் தொலைந்து போக
அவர்களைத் தேட, அழ
ஆட்களிருந்தனர் அங்கே.

நாமிங்கே இருக்க
நால்வர் தேடிப் பார்த்து
முறைகள் செய்திடினும்
முறையிலாப் பேச்செமக்கு.

அது கேட்கவேண்டாம்
தன் நேசத் தமக்கை மற்றும் மைந்தர்
என்றுதான்
அப்படியோர் காலம்
தெரிந்து  காலமானாரோ!!

உற்றார் உறவு கூடி
ஊர் மெச்சும் சிறப்பாய்
இறுதி ஊர்வலம்.
எவரும் அவரைத் தப்பாய்ப் பேசவில்லை.
அன்பானவர்,
நல்லவர்
தானும் தன் பாடுமென்றார்.

என்னாயிற்று!
எங்கே தவறு! யார் தவறு!

புரிய வேண்டியவர்க்குப் புரியவில்லையா!!
அல்லது உரிமையுள்ளோர்க்கு
வேறு முகம் காட்டினாரா!!

புதிர் விலகவில்லை இன்னமும்
விலகாது
விலக்க முயலவுமில்லை நாம்.
சிவற்றை...
அப்படியே விட்டு விடுவதுதான் நல்லது.
13/09/2012 அன்று பதினைந்தாம் ஆண்டு நிறைவையிட்டு வெளியிட இருந்தேன்; தடைப்பட்டுவிட்டது. அதனால் இப்போது.
- இமா

Friday 12 October 2012

கிளீசு டோஃபு !!

'China Town' சென்றிருந்தோம் இரண்டாம் முறையாக.

களைக்கும் வரை சுற்றி விட்டு, அறைக்குத் திரும்பவென்று அகப்பட்ட வாகனத்துக்குக் கைகாட்ட முயல்கையில் ஒரு இளைஞர் கூட்டம் எம்மை அண்மித்தது.

"விடுமுறையிலில் வந்திருக்கிறீர்களா?" என்றார் இந்தியர் போலிருந்தவர் - ஜீன்ஸ் டீ ஷ்ர்ட்டின் மேல் வேட்டி துண்டு - திருட்டுத் தனமாகச் சாப்பிடும் போது காலடி கேட்க அவசரமாகக் குழந்தை சுருட்டி வைத்த ஸ்வீட் பார்சல் மாதிரி. ஒழுங்காகக் கட்டத் தெரியாதோ! ஒரு வேளை... கட்டவே தெரியாதோ!! என்னைக் கேட்டிருந்தால் கூட அழகாகக் கட்டிவிட்டிருப்பேன்.
இவர் வழிகாட்டி போலிருக்கவில்லை; நட்பாக இருக்கலாம்.

"ஆமாம்," இது க்றிஸ்.
"Would you like your name in drawing?"
அரை குறையாகக் காதில் வாங்கிய நான் ஏதோ பெயரைச் சீட்டுக் குலுக்கி எடுக்கப் போகிறார்கள் என்பது போல் நினைத்துக் கொண்டேன். பரபரப்பாக இருந்தார்கள் இளைஞர்கள். பேச விடாமல் இழுத்துப் போனார்கள் ஒரு துள்ளலோடு. வழியில் பெயர் கேட்டு க்ளிப் பாடில் பெரிதாக எழுதிக் கொண்டார்கள்.
"எத்தனை நாட்கள் விடுமுறை?"
"எப்போ மீண்டும் பயணம்?" பொதுவான கேள்விகள் பலதும் படபடவென்று வந்து விழுந்தன.
"Are you from India?" 'ஓஹோ! இதுவா சங்கதி?' மனதில் ஓடிற்று.... அவர்களுக்கு ஒரு வித்தியாசமான பெயர்... வேற்று மொழிப் பெயர் தேவையாக இருந்தது போல.
"பரவாயில்லை, வாருங்கள்," என்று அழைத்துப் போனார்கள்.
அந்த ஒருவர் தவிர மீதி அனைவரும் சீனர்கள்.

ஒன்றும் புரியாமல் கூடச் சென்றோம். இப்போது அவர்கள் உற்சாகம் எம்மையும் தொற்றி இருந்தது.
அங்கே சுவரோரம் ஓரத்தில் ஒரு நீள மேசை - க்ளிப் போர்டுகள், மைக்குப்பி, எழுதும் தூரிகைகள், பின்னால் சில பெண்கள்.

பரபரவென்று இயங்கினார்கள். க்ளிப் போர்ட் கைமாறிற்று. ஒருவர் தூரிகையை மையில் தொட்டு வரைய ஆரம்பித்தார்.
"ஹேய்! ஒழுங்காக எழுதுவாயா?"
"இவ்வளவுதான் உன்னால் முடியுமா?" ஆளாளுக்கு அந்தப் பெண்ணைச் சீண்டினார்கள்.
அவர் சிரித்துக் கொண்டே எழுத்தில் மும்முரமானார். ஒருவர் சட்டென்று கைபேசியை நீட்டினார். "இதோ! இதோ!" அட! அப்போதான் கவனித்தேன். பெயருக்கான எழுத்துக்கள் அங்கே சீன மொழியில்.
தொட்டு...
வரைந்து...
மீண்டும் தொட்டு வரைந்த அந்தப் பெண்ணுக்கு நல்ல ரசனையுணர்ச்சி. கைநகங்களும் தோடும் ஒரே வர்ணத்தில் முத்துக்கள் போலத் தோன்றின.

எழுதி முடித்ததும் சந்தோஷ ஆரவாரம். பெயர் எழுதிய கடதாசியை எங்கள் கையில் தந்த இந்தியர் புன்முறுவலோடு சொன்னார் "சரியென்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை."
 
பானரைக் கையில் வைத்திருந்தவரோடு பெயர் கொண்டவரையும் நிறுத்தி ஒரு படம் எடுத்துக் கொண்டேன்.
மீண்டும் கூட்டம் கூடி என்னவோ திட்டமிடல் நடந்தது.

சரியாக ஒரு வாடகை மோட்டார் அருகே வந்து நிற்க அறையை நோக்கிக் கிளம்பினோம்.

அறையில் இணைய வசதி இருந்தாலும் ஒரு நேரத்தில் இருவரில் ஒருவர் மட்டுமே பயன்படுத்த முடிந்தது. இறுதியாக இணைபவரை வைத்துக் கொண்டு, கணக்கு தன்னால் முன்னவரைத் துண்டித்து விடும்.

என் முறைக்குக் காத்திருந்து கூகுளாரைக் கேட்டேன். இறுதி எழுத்தைத் தவிர மீதி எல்லாம் சரிதானாம். சீன மொழியில் முறையாக எழுதினாலும் சரி, எளிமையான முறையிலானும் சரி 
克里斯托弗
என்று காட்டிற்று. ஆனால்... உச்சரிப்பைக் கேட்டாலோ.. ஹாஹா! தான்.
'கிளீசு டோஃபு' என்கிறது தெளிவாக.
கிளியிலிருந்து தயாராகும் டோஃபுவோ இது! ;)

Wednesday 10 October 2012

மியாவுக்கு ஒரு 'எலி பண்'

மியாவ் ஒரு முறை 'அங்கே' ஒரு கறி பண் குறிப்பு கொடுத்திருந்தார்.
அதை முயற்சிக்கையில்....
அவருக்குப் பிடித்த எலி ஒன்று செய்து...
அவரையே எலியாக்க முயற்சித்தேன். முடியவில்லை. செபாவை எலியாக்கினேன். ;)

'அங்கே' கருத்துக்களோடு படமும் வெளியாகி இருந்தது; இப்போ இல்லை. அதனால் இங்கு பகிர்வதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன். வால் தெரியும் படமும் இருக்கவேண்டும் எங்கோ. கிடைத்ததும் இங்கு இணைக்கிறேன்.

பி.கு
அதிராவின் வேண்டுகோளுக்கிணங்க வெளியாகிறது இந்த இடுகை.

இலையுதிர் காலத்து நிலவொன்று

உலகுக்கு இருப்பது ஒரே நிலவுதான். விழாக்கள் மட்டும் எத்தனை!

சிறு வயதில் வெசாக் தினத்தை ஆவலோடு எதிர்பார்ப்பேன்.

நியூசிலாந்தில் 'லாண்டர்ன் ஃபெஸ்டிவல்' வருவது பெப்ரவரி மாதம்தான். அது சீனப்புத்தாண்டு. என் சின்னவர்கள் பெரியவர்களானதன் பின் பார்க்கப் போனதில்லை நான்.

சிங்கப்பூரில் இருந்த சமயம் ஓர்நாள் இரவுணவின் பின் காற்றாட ஒரு மரத்தின் கீழ், வாங்கில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம் மூவரும். அருகிலிருந்த பாரிய மரத்தின் இரண்டு கிளைகள் நடுவே அழகாய் முழுநிலா தென்பட்டது. அதைப் படம் பிடிக்க முயன்றிருக்க...
;))) 
அழகாய் விளக்கேந்தி மலர்ந்த முகக் குழந்தைகள் பெற்றோர் துணைக்கு வர ஊர்வலமாய் வந்தார்கள்.
 சிறிய குழுதான். அழகுக் காட்சி அது. சீனக் குழந்தைகள்....
 நடுவே நட்புக்குழந்தைகளும் இருந்தார்கள்.
நிலவொளி.. மெல்லிய காற்று... அமைதியான சூழல்... அருகே பாசமான இருவர், முன்னால் சந்தோஷமான பிஞ்சுகள் & அவர்களைச் சந்தோஷிக்க வைக்கவென்று நேரம் செலவிடும் பெற்றோர்.... வேலை, வீடு என்கிற கவலையில்லாது இயல்பாக இருக்க முடிந்த அந்தச் சில நிமிடங்கள்...  மனதுக்கு இதமாக... விபரிக்க இயலாத இதமாக... நிறைவாக இருந்தது.

 அன்றுதான் 'மூன் கேக் ஃபெஸ்டிவல்' பற்றித் தெரியவந்தது. பிடித்தவர்கள் படிக்க வசதியாக... http://www.asiarooms.com/en/travel-guide/singapore/singapore-festivals-and-events/mooncake-festival-singapore.html

'மூன்கேக்' என்பது 'முங்' கேக்காக இருக்குமோ என்று சந்தேகம் இருந்தது முன்பு. நான் சாப்பிட்டதில் எல்லாம் பயறுதான் சேர்த்திருந்திருக்கிறது.
வீட்டுக்குக் கொண்டுவர என்று இரண்டு மூன் கேக் எடுத்து வைத்தேன். 'டிக்ளேர்' செய்திருந்தேன். விமான நிலையத்தில் அருகே வந்த MAF நாய் என்னைக் கடந்து போய் இளைஞரொருவர் பையருகே அமர்ந்தது.
அடுத்த கட்டம்... பையைத் திறந்து எடுத்துக் காட்ட வேண்டி இருந்தது. பார்த்தார்கள்; தனியே ஸ்கானரில் அனுப்பினார்கள்; "முட்டை இருக்கும் போல" என்றார்கள். பையைப் பிரித்து கத்தியால் நறுக்கி... "இதோ பார், முட்டை மஞ்சள்," என்று காட்டினார்கள்.

அங்கே ஒரு குட்டி நிலா. இதலால் கூட இருக்கலாம் Moon Cake!! ;)

"கொண்டு போக அனுமதி இல்லை."

வெகு அவதானமாக இருக்கிறார்கள் எங்கள் நாட்டின் பாதுகாப்புப் பற்றி.

Tuesday 9 October 2012

சிங்கப்பூர் ஜெம் & மெட்டல்ஸ்

விடுமுறையின்போது என்னை மிகவும் கவர்ந்த இடம் இது.

முதல் முறை சென்ற போது எங்களோடு சம்பந்தமில்லாத ஒரு குழுவினரோடு சென்றிருந்ததால் அதிகம் பார்க்க வசதி கிடைக்கவில்லை; குறிப்பிட்ட நேரத்தில் மீண்டும் வண்டியிலிருந்தாக வேண்டி இருந்தது.

கூடவே வந்த 'கைட்' சொன்னவை பலதும் இயந்திர ஒலியில் காதில் விழவில்லை.
கற்களைத் தேவையான வடிவங்களில் தேய்த்து எடுக்கிறார்கள்
அவை பொதுவான விளக்கங்களாகவே இருந்தன; என் சந்தேகங்களைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இருக்கவில்லை. 

ஆனால் கண்ணுக்கு மட்டும்....
 விருந்துக்குக் குறைவில்லை.
கடைசி இராப்போசனம்
 ஒவ்வொரு படைப்பும் கொள்ளை அழகு.
படம் பிடிக்கத் தடை என்பதாக அறிவிப்புப் பலகைகள் சொன்னாலும் மறுப்பு வரவில்லை.
பாதி நிலையில்...
மீண்டும் பார்வையிட வர அனுமதி கிடைக்குமா என்று வரெவேற்புப் பெண்மணியை விசாரிக்க, தன் அடையாள அட்டையில் தேதி குறித்துக் கொடுத்தார். எப்போ வந்தாலும் அந்தத் தேதிக்குரிய கழிவு விலை கிடைக்கும் என்றார். அவருக்கு தொலைபேசியில் அழைத்தால் போக்குவரத்தும் ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். 
 
"இந்தச் சாடிகள் ஒற்றைக்கற் செதுக்கு வேலைகள்
மூன்று நாட்கள் கழித்துக் கிளம்பினோம். பொருள் வாங்கும் நிர்ப்பந்தத்தைத் தவிர்க்க போக்குவரத்துச் சலுகையைத் தவிர்த்தோம்.  வாயிலில் எங்கள் வரவு பற்றி ஏற்கனவே தெரிவிக்கப் பட்டிருந்தது போல. ;) வரவேற்புப் பலமாக இருந்தது. அதே பெண் வந்து அழைத்துப் போனார். சற்றுக் கூட இருந்துவிட்டு தனியே பார்க்க விட்டுவிட்டார். (அங்கிருந்து கிளம்பும்போது அடுத்து நான் செல்லவிருந்த இடத்திற்கு இலவச வாகன வசதி செய்து கொடுத்தார் இவர்.)

எனக்கு இதுபோன்ற கைவினைகள் பிடிக்கும்.
        ஒன்று போல் இன்னொன்று இராது என்பது இவற்றின் சிறப்பு.
அணிகலன்கள் சிற்பங்கள் செய்தவை போக மீதியாகக் கிடைக்கும் கற்கள் கொண்டு இவை தயாராகினாலும், நுணுக்கமான வேலைப்பாடு, செலவிடும் நேரம் என்று பார்த்தால் விலை அதிகம் என்று சொல்லத் தோன்றவில்லை.

கேட்டுத் தெரிந்துகொண்ட விபரங்கள் சில - சில வருடங்கள் முன்பு வரை இது போன்ற இருபரிமாண அமைப்புப் படங்கள் மட்டும்தான் தயாராயிற்றாம்.
தற்போது தயாராகும் முப்பரிமாண அமைப்புகளுக்கு உட்கட்டமைப்பாக கடினமான ஸ்பாஞ்ச் பயன்படுத்துவதாகச் சொன்னார்கள்.
மயிற்தோகை - செப்புத் தகட்டில் வெட்டி வளைத்து அதன் மேல் கற்துகள்கள் ஒட்டப்படுகின்றனவாம். வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக, பாதுகாப்பான முறையில் பொதி செய்து அனுப்பி வைப்பார்களாம். ஒவ்வொரு படத்தின் பின்னாலும் கற்கள் & பெயர் கொண்ட மாதிரி அட்டை இணைக்கப்பட்டிருக்கிறது.
சில கண்ணாடிக் கூடுகளில் காட்சிப் பொருட்களோடு சிறிய குவளைகளில் நீர் வைத்திருப்பது கவனத்தில் பட, விசாரித்தேன். வெப்பநிலை மாற்றம் கற்களை / படைப்புக்களைப் பாதிக்காதிருப்பதற்காக அப்படி என்றார்கள்.

அணிகலன்களுக்குத் தனிப் பகுதி வைத்திருக்கிறார்கள். தோடு தவிர வேறு எதிலும் எனக்கு ஆர்வமில்லை. கண்ணில் பட்ட பிடித்த தோடுகள் பாரமாகத் தோன்றவும் வேண்டாமென்று விட்டுவிட்டேன்.
என் பிள்ளைகளுக்கு ஆளுக்கொரு சிறிய பறவை மருமக்களுக்கு சில அணிகலன்கள் வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.

இத்தனை அழகாகப் படங்களைச் செய்தவர்கள் அவற்றின் பின்னணியிலும் சட்டம் (ஃப்ரேம்) தெரிவு செய்வதிலும் கொஞ்சம் கவனமெடுத்திருக்கலாமோ! வெள்ளை நாரையும் வெண்கழுகும்...
வெள்ளை 'கான்வஸ்' பின்னணியில்... அவற்றின் அழகு சரிவர வெளிப்படவில்லையோவென்று தோன்றிற்று. தங்க நிறச் சட்டங்கள் சில படங்களுக்குப் எடுப்பாக இல்லை. அதுபோல்... சுத்தம் செய்யச் சிரமமான, விலையான படைப்புகள் இவை - கண்ணாடிப் பேழை போல் 'ஃப்ரேம்' அமைப்பு இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். காலப் போக்கில் ஒன்றிரண்டு கற்கள் விலகினாலும் தொலைந்து போகாமல் உள்ளேயே இருக்கும்; மீண்டும் ஒட்டிக் கொள்ளலாமல்லவா!

மூத்தவரும் இதே அபிப்பிராயம் கொண்டிருந்தார். பொருத்தமான கண்ணாடிப் பேழைச் சட்டங்கள் கிடைக்கும் வரை... தன்னுடையதை 'க்ளிங் ராப்' சுற்றி சுவரில் மாட்டிவிடப் போகிறாராம். ;)
~~~~~~~~~~