Tuesday 30 July 2019

சேலைக்கரை அன்பளிப்புப் பை

மூத்த மருமகளின் வளைகாப்பினை அவரது குடும்பமும் எம் குடும்பமும் மட்டும் கலந்துகொள்ளும் நிகழ்வாக வைத்துக் கொள்வது என்று தீர்மானித்திருந்தோம். உண்மையில் அதற்கே வீடு போதாது.

கடைசிக்கு முதல் நாள் - பெண்களின் எண்ணிக்கை இரண்டால் கூடிற்று. சம்பந்தி வீட்டில் கற்பதற்காக கொரியப் பெண் இருவர் தங்கி இருந்தார்; அவர் தங்கை வீட்டில் நெருங்கிய தோழி ஒருவர் தங்குவதற்காக வந்திருந்தார். ஐரோப்பியக் கலாச்சாரத்தில் வளர்ந்தவர்களுக்கு எம் கலாச்சாரத்தை ஒட்டிய நிகழ்வுகளைப் பார்க்கக் கிடைப்பது வெகு அபூர்வமல்லவா! சந்தோஷமாக அவர்களுக்கும் அழைப்பு வைத்தேன்.

எண்ணிக்கை இரண்டு கூடுதலானது பிரச்சினையாக இருக்கவில்லை. அன்பளிப்புப் பைகள் தான் குறைந்தன.

அணிய இயலாதபடி இருந்த பழைய புடவை ஒன்றிலிருந்து ஏற்கனவே கரையைத் தனியாக வெட்டி சுற்றி வைத்திருந்தேன். இரண்டு துண்டுக் கரைகளை ஒன்றாகப் பொருத்தி, தலைப்பிலிருந்து நீளத் துண்டுகள் வெட்டி கைபிடியாக அடித்துப் பொருத்தினேன். கடைசியாக, பையில் அளவுக்கு 'லைனிங்' வெட்டி பொருத்திவிட்டேன். ஒரு தடவைப் பயன்பாட்டிற்காகச் செய்ததால் 'ஸிப்' வைக்காமல், 'வெல்க்ரோ' வைத்துத் தைத்தேன்.

சேலையிலிருந்து தைத்த இரண்டு பைகளையும் என் மருமக்களுக்காக வைத்துக் கொண்டு, முன்பு அவர்களுக்கு எனத் தயார் செய்திருந்த பைகளை விருந்தினர்க்குக் கொடுக்கவென்று எடுத்து வைத்தேன்.


சில மாதங்கள் கழிந்ததும் சின்ன மருமகள் வீட்டார் வழியாக ஒரு திருமண அழைப்பு வந்தது. மணநாள் அன்று ஓர் நாற்காலியில் சேலைக் கரையில் தைத்த பை உட்கார்ந்திருந்தது. பேத்தி பிறந்த பின் அவரது விளையாட்டுப் பொருட்களோடு இரண்டாவது பை இடம்பெற்றிருக்கிறது. அதைக் கண்ட போது தான் என்னிடம் இருந்த புகைப்படங்கள் தொலைந்து போனது நினைவுக்கு வந்தது. 

ஒரு 'க்ளிக்'

Thursday 11 July 2019

கல் கால் கை

சேலையிலிருந்து உதிரும் கற்கள் - தரையைச் சுத்தம் செய்கையில் கண்ணில் பட்டால், கைவேலை செய்யலாம் பொறுக்கி வைப்பது உண்டு.

விளையாட்டாக, என்  காலில் ஓர் வேலை செய்தேன்.
அப்படியே கையிலும் ஒரு வேலை.
;)) கற்கள் பெரியவை. கொஞ்சம் இடைஞ்சலாக உணர்ந்ததால் மறுநாட்காலையே கையைச் சுத்தம் செய்ய வேண்டியதாயிற்று. ;(

Tuesday 9 July 2019

பிரியாவிடை வாழ்த்து


பாடசாலையில் தோழி ஒருவர் நாடு மாறிப் போக இருக்கிறார். 4ம் திகதி பிரியாவிடை இடம்பெற்றது.

என்னிடம், ஒரு பூக்கூடை வாழ்த்து இதழ்தான் கேட்டார்கள். 

பிரியாவிடைக்குப் பொருத்தமாக வேறு யோசனை தோன்றிற்று. புத்தக அடையாளம் ஒன்றிலிருந்து இலச்சினையை வெட்டி எடுத்தேன். பாடசாலையின் நிறம் - நீலம், நீலம், சிவப்பு. அட்டைகள் தேடி, கிடைத்ததும் அலங்காரக் கத்தரிக்கோலினால் ஒரே சரிவு வர வெட்டினேன். ஒன்றன் மேல் ஒன்று வைத்து ஒட்டியபின் ஓரங்களை வீட்டில் சீர் செய்தேன். (வெள்ளை அட்டையும் நிற அட்டைகள் போலவே கோடுகள் அமையப் பெற்றிருக்கிறது. படத்தில் தெரியவில்லை.) கரைகளை ஒட்டியானதும் இலச்சினைக்கு முப்பரிமானத் தோற்றம் கொடுக்க ஸ்டிக்கர்கள் கொண்டு ஒட்டினேன். 

மீதியாகிப் போன நிற அட்டைகளிலிருந்து பூக்கள் வெட்டி ஒட்டியிருக்கிறேன்.

உள்ளே 4 பக்கங்கள் கிடைக்கும் விதமாக வெள்ளைத் தாள்கள் - ஓரங்களை அதே அலங்காரக் கத்தரிக்கோலினால் வெட்டிச் சேர்த்தேன்.

பாடசாலையில், இதே விதமாக இன்னும் சிலது செய்து கொடுக்குமாறு கேட்டிருக்கிறார்கள்.

Sunday 7 July 2019

நெல்மணி தூவாது ஓர் வாழ்த்து

என் மச்சாள் வீட்டிலிருந்து பல வருடங்கள்  முன் வந்த வாழ்த்து இதழ் இது. பதினாறு, பதினேழு வருடங்களாக என் சேமிப்பில் இருக்கிறது. இடைக்கிடையே எடுத்து ரசிப்பேன். எப்போ அந்த விபத்து நேர்ந்தது என்பது நினைவில் இல்லை. ;( ஒரு துளி நீர் சிந்தி நிறம் கலந்திருக்கிறது. ஆயினும்… அழகு குறையவில்லை. 

இலங்கையில் இந்த வகை அட்டையை 'பிரிசில் போட்' என்போம். காவி நிற அட்டையில் எல் மணிகளால் பூக்கள் ஒட்டி, அதன் மீள் சிவப்பு நிறம் தீட்டி சிரிதே சிறிது மினுக்கம் கொடுத்திருந்தார். கோடுகள், இலைகள், எழுத்தெல்லாமே கையால் வரையப்பட்டிருந்தன.

சமீபத்தில் எடுத்துக் பார்த்த போது சில நெல்மணிகளைக் காணோம். உதிர்ந்திருக்க வேண்டும். பேட்டியின் அடியிலும்  கிடைக்கவில்லை. முழுவதாகக் காணாது போகும் முன்… இங்கே. 

Friday 5 July 2019

பாம்பு பொம்மை


பழைய காலுறை ஒன்றைப் பாம்பாக மாற்றியிருக்கிறேன். விரல்கள் வரும் இடம் தலையாக வர வைத்து நீளத் தீரையாக வெட்டித்த தைத்தேன். நாவுக்கு ஒரு சிறிய சிவப்பு நிறுத்த துணி, கண்களுக்கு சின்னதாக இரண்டு கருப்பு மணிகள், வாலுக்கு நூலைச் சுற்றிக் கட்டினேன். பல காலமாக மழையிலும் வெயிலிலும் இருந்ததில் தைத்த நூல் இற்றுப் போயிற்று போல; ஓரிடத்தில் பிரிந்து போய் பஞ்சு எட்டிப் பார்க்கிறது. 

இன்று குப்பைக்குப் போகப் போகிறார் பாம்பார்.  

Wednesday 3 July 2019

அன்பளிப்புப் பொதி ஒன்று!

இந்த அன்பளிப்புப் பொதியைத் திறப்பதற்கு, கடதாசியைக் கிழிக்க வேண்டியதில்லை. பார்க்க முழுமையாகத் தெரிந்தாலும் உண்மையில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய விதமாக அமைத்திருக்கிறேன்.

படத்தைப் பார்த்தால் புரியும். நான்கு பக்கங்களிலும் நாடாக்கள் மேல் மூடியில் உள்ள நாடாக்களோடு பொருந்துவதாகத் தெரியும் விதமாக வைத்து செலோடேப் போட்டிருக்கிறேன். பரிசைப் பெறுபவர்கள் பொதியை மீண்டும் பயன்படுத்தலாம்.

விளம்பரத்திற்காக காப்பிப் பொதியோடு இலவசமாகக் கிடைத்த சிவப்பு நிறக் கிண்ணங்கள் வந்த பெட்டிகளை வீசாமல் வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தியிருக்கிறேன். அவற்றில் ஒன்றுதான் மேலே பொதியாகக் காட்சி தருவது.
ஒன்றின் மேல் மூடியில் சின்னதாக ஒரு துளை செய்து உள்ளே சணல் உருண்டையைப் போட்டு வைத்திருக்கிறேன். தேவையான போது சணலை சிக்காமல் எடுக்கலாம்.

Monday 1 July 2019

தச்சுவேலை விரும்பிக்கு ஓர் வாழ்த்து!

தச்சுவேலை விரும்பிக்கு ஓர்  வாழ்த்து!
கைவேலைக்கான பொருட்களை வைத்திருந்த பெட்டியைத் துளாவும் போது கண்ணில் பட்டன ஒரு பையிலிருந்த சின்னச் சின்ன தச்சு வேலைக்கான பொருட்கள். திறந்து பார்த்தேன்… ஒரு ஏணி, இரண்டு ஆணிகள், சுத்தியல், வாள், பலகை துளையிடும் கருவி, ஒரு தூரிகை. இவற்றில் சில பித்தான்கள் - பின்பக்கம் வளையங்களோடு இருந்தன.  

எப்படி இவற்றைக் கொண்டு வாழ்த்திதழ் செய்வது!

ஸ்டிக்கர் பெட்டியிலிருந்து இரண்டு ஸ்டிக்கர் ஷீட்களோடு ஒரு துண்டு பலகை வடிவக் கோடுகள் போட்ட ஒட்டும் தாள் எடுத்துக் கொண்டேன். 
ஒட்டும் தாளை, அலங்கார விளிம்பு கொண்ட கத்தரிக்கோலால் வெட்டி எடுத்தாயிற்று. பித்தான் கொக்கிகளை குறட்டால் நறுக்கி நீக்கியாயிற்று. ஒரு கடையிலிருந்து கிடைத்த சாம்பிள் மரத்துண்டு ஒன்றில் 'happy birthday' ஸ்டிக்கரை ஒட்டி எடுத்தேன்.

இஷ்டத்துக்கு ஒழுங்கு செய்து பார்த்து, பிடித்த விதத்தில் ஒட்டிய பின்…. 
விளைவு இது.

இன்று பிறந்தநாள் கொண்டாடுபவருக்கு, என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். :-)