Thursday 30 April 2020

டாரோ ரோஸ்ட்

குறிப்பு இல்லாச் சமையல் இது. :-)

டாரோ இங்கே, சாமோவா, டொங்காவில் இது டாலோ. தமிழில்... சேப்பங்கிழங்கு!

இலங்கையில் இருந்தவரை சாப்பிட்டது இல்லை. ஆனால் சிங்களவர்கள் சாப்பிடுவார்கள் என்பது தெரிந்திருந்தது. ஏதோ ஒரு பழைய திரைப்படத்தில் (பதர்பாஞ்சாலி என்பதாக நினைவு. நிச்சயமாகச் சொல்லத் தெரியவில்லை.) வறுமையிலிருக்கும் பிள்ளைகளுக்கு உணவு சமைக்க, இருட்டில் தாய் இந்தக் கிழங்குகளைப் பிடுங்கிப் போவதாகப் பார்த்திருக்கிறேன். கறுப்பு வெள்ளைத் திரைப்படம், அதிலும் மிகப் பழைய பிரதி வேறு. டாரோ என்று ஊகிக்க முடிந்தது.

பத்து வருடங்களின் முன்பு, கூடக் கற்பித்த ஃபிஜி ஆசிரியை கன்று ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தார். வேலி ஓரமாக மெதுவே நீண்டு பெருகிற்று தாவரம். வீட்டில் தனித்திருக்கும் பகற்பொழுதுகளில், அவ்வப்போது கிழங்குகளைப் பிடுங்கி மைக்ரோவேவ் செய்து கட்டசம்பலைத் தொட்டுக் கொண்டு சாப்பிடுவேன். பிஞ்சுக் கிழங்குகள் சற்று வழுக்கும். முதிர்ந்தவை சுட்ட கிழங்கு போல் இருக்கும். க்றிஸ் சாப்பிட மாட்டார். அறிமுகமில்லாத உணவுகளைத் தொடத் தயங்குவார். எனக்கு தாவர உணவு என்றால் அதிலும் புதினமாவை பிடிக்கும். :-) இவற்றின் இலைச் சுருள் பொரியல் மிகவும் பிடிக்கும்.

வேலி ஓரத்தைச் சுத்தம் செய்யும் முயற்சியில் டாரோச் செடிகளை அப்புறப்படுத்த ஆரம்பித்திருந்தேன். வீணாக்குவதாக இல்லை, சாப்பிட்டுத்தான் முடிக்க வேண்டும். அந்தச் சமயம் நாத்தனாரும் இங்கு வந்து சேர, இடைக்கிடை ஒரு தொகுதி கிழங்குகளைப் பிடுங்கி அங்கு அனுப்பி வந்தேன்.








சென்ற வாரத்து அறுவடையில் சமைத்தது இது ----------------> 







வழுக்கும் தன்மையான கிழங்குகளையும் ஒரு வாரம் வரை பிடுங்கி வைத்திருந்து சமைத்தால் சற்று முற்றிவிடும். பிடுங்கியதுமே மண்ணைக் கழுவி வைத்துவிடுவேன்.

அப்படி வைத்திருந்ததை இந்த வாரம் மைக்ரோவேவ் செய்து (எத்தனை நிமிடங்கள் சமைக்க வேண்டும் என்பது கிழங்கின் அளவைப் பொறுத்தது. ஒரே அளவான கிழங்குகளை ஒன்றாக வைத்து இரண்டு நிமிடங்கள் ஓட விட்டு, திறந்து சோதித்து, திருப்பிப் போட்டு மீண்டும் இரண்டு நிமிடங்கள் ஓட விட்டு...  நேரக் கணக்கு பயிற்சியில் தானாக வந்துவிடும்.) ம்... மைக்ரோவேவ் செய்து சில நிமிடங்கள் வெளியே எடுத்து வைக்க வேண்டும். ஆறியும் ஆறாமலும் இருக்கும் போதே தோலைப் பிரிக்க வேண்டும். படைபடையாக வரும். (ஆவி வரும், கை கவனம்.) இப்படியே இட்லிப் பொடி, எண்ணெய் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.

அல்லது வட்டமாக கால் அங்குலப் பருமனில் வெட்டிக் கொண்டு, ரொட்டி சுடுவது போல் எண்ணெய் பூசிய தட்டில் போட்டு இரு பக்கமும் சுட்டு எடுக்கலாம். மேலே உப்பு & mixed herbs, lemon pepper, garlic flakes, tuscan seasoning என்று சுவையூட்ட எதையாவது தூவிக் கொண்டும் சுடலாம். இம்முறை க்றிஸ் நன்றாக இருக்கிறது என்று கொடுத்த முழுவதையும் சாப்பிட்டுவிட்டார்.

இன்னும் ஒரு அறுவடை கிடைக்கும். பிறகு தொட்டியில் வளர்க்கலாம் என்று இருக்கிறேன். தொட்டியில் என்றால், தொட்டியில் அல்ல; பழைய recycle bin இருக்கிறது. இப்போது அவை புழக்கத்தில் இல்லை. காய்கறி பயிரிட உகந்தவை. அவற்றில் ஒன்றில் ஏற்கனவே ஒரு குட்டிக் கிழங்கைப் போட்டிருந்தேன். தளதளவென செழித்து வளருகிறது. பெருப்பித்து எடுக்க வேண்டும்.

Tuesday 28 April 2020

மெது...வடை

சமையற்குறிப்பு கொடுக்கப் போகிறேன் என்று நினைத்து ஏமாற வேண்டாம். :-)

கடைசியாக இந்தியா சென்றிருந்த சமயம் - எங்கோ துணி வாங்கிய போது அன்பளிப்பாகக் கிடைத்தது இந்த உபகரணம். ஒரு தரம் பயன்படுத்தினேன். பலன் கிடைக்கவில்லை. எப்போதாவது டோநட் செய்யும் போது பயன்படுத்தலாம் என்று வைத்துவிட்டு மறந்து போனேன்.

கடைக்குப் போவதைத் தவிர்க்க வேண்டி... பேக்கிங் சோடா, ஈஸ்ட் மேலதிகமாக எங்காவது இருக்கிறதா என்று தேடி சமையலறையைக் குடைந்தேன். இது கண்ணில் பட, வடை செய்யும் முனைப்பில் இறங்கினேன்.

முன்பு பிழைத்ததற்கான காரணம், வடையில் சேர்த்திருந்த உளுந்து தவிர்த்த மீதிப் பொருட்கள் என்பதாக நினைவில் இருந்தது. வேலையை ஆரம்பிக்கும் முன் யூட்யூபில் ஒரு குட்டித் தேடல் - தண்ணீர் குறைவாக இருந்தால் ஒழுங்காகப் பிரிந்து வராது, அதிகமாகவும் இருக்கக் கூடாது என்று புரிந்தது.

இம்முறை தனி உளுந்தை அளவாக நீர் தெளித்து அரைத்து உப்பும், முழு மிளகும் வெகு சிறிதாக அரிந்த கறிவேப்பிலையும் மட்டும் சேர்த்த்துக் குழைத்தேன்.

வேலை வெகு சுலபமாக இருந்தது. கிண்ணத்தில் மாவை நிரப்பி, அதை மேசையில் வைப்பதைத் தவிர்க்க இன்னொரு குட்டிக் கிண்ணத்தை எடுத்து வைத்துக் கொண்டேன். எண்ணெயைக் காய வைத்து பிழிந்து விட கிட்டத்தட்ட ஒரே அளவான வடைகள் கிடைத்தன. ம்... இது பிழிபவரது கையில் இருக்கிறது. ஒரே அளவு அழுத்தம் கொடுக்க வேண்டும். இன்னொரு விடயம் - எண்ணெய் மட்டத்திற்குச் சற்று மேலே உபகரணத்தைப் பிடித்து (கொதிக்கும் எண்ணெயில் பட்டால் ப்ளாத்திக்கு உருகி விடும் அபாயம் இருக்கிறது. அதிக உயரமாகப் பிடித்தாலும் எண்ணெய் கையில் தெறிக்கலாம்.) முழுவதாக அழுத்தி, தேவையான அளவு வரும் வரை பொறுத்து, சட்டென்று அழுத்தியை விலக்க... நடுவில் துளையுடன் வடைமா எண்ணெயில் விழுகிறது. கை, கரண்டி என்று எங்கும் மாப்பசை இல்லாமல் சுத்தமாக சுலபமாகப் பொரித்து எடுக்க முடிந்தது.

Monday 27 April 2020

சிகையலங்காரம்!

தலைமுடியை வளர்க்க அம்மா அனுமதி கொடுத்தது எப்போது என்பது நினைவில் இல்லை, ஏழாம் வகுப்பின் பின் இருக்கலாம். எனக்குப் பின்னுவதற்கு வராது. குட்டையாக இருக்கும் போதும் அடர்த்தி அதிகமாக இருக்கும். கையைச் சற்றுத் தளர்த்தினால் சட்டென்று பின்னல் பிரிந்துவிடும்.

நானாகப் பின்ன நேர்ந்தது... 1976ல். கூட்டுச் சேரா நாடுகள் மகாநாடு இலங்கையில் நடந்த சமயம் முதல் நாள் நிகழ்வுகளுக்காக நாட்டின் பல பாடசாலைகளிலுமிருந்து அவற்றின் வாத்தியக் குழுக்கள் (school bands) அழைத்துச் செல்லப்படிருந்தோம். முழங்கால் வரை நீண்டிருந்த கூந்தலைப் பின்னி எடுப்பது பெரும் பியத்தனமாக இருந்தது எனக்கு. மேல்ப்பாதியைப் பின்னிவிட்டுப் பார்த்தால், அதன் கீழ் உள்ள முடி சிக்கிக் கிடக்கும். திரும்ப அதைச் சிக்கெடுத்து மீதியைப் பின்னி... ;( அதற்குள் எங்களை பயிற்சிக்கு அழைத்துப் போக பேருந்து வந்துவிட்டிருக்கும். மஹரகம ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் நாம் தங்கவைக்கப்பட்டிருந்தோம். அங்கிருந்து மகாநாடு நடந்த பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்திற்கு மூன்றுநான்கு நாட்கள் தினமும் பயிற்சிக்காக எங்களை அழைத்துப் போனார்கள். பாதிக் கூந்தலைப் பின்னிக் கொண்டு வண்டியில் ஏறிவிடுவேன். மீதியைப் பயணத்தின் போது எப்படியாவது பின்னி மடித்துக் கட்டிக் கொள்வேன்.

பிறகு ஒரு சமயம்... 1979 என்பதாக நினைவு - அம்மா நன்கு குட்டையாக வெட்டிவிட்டார். அது சில மாதங்கள்தான் குட்டையாக இருந்தது. கிடுகிடுவென்று வளர்ந்து முன்பை விட நீண்டு போனது. இம்முறை முடி அடர்த்தி முன்பை விடச் சிறிது குறைந்தும் தன்மையில் மென்மையாகவும் சுருளாகவும் மாறி வளர்ந்தது.

பிறகு மூத்தவர் பிறந்த சமயம் அதிக இரத்த இழப்போடு நிறைய முடி கொட்டிப் போயிற்று; ஆனாலும் நீளம் குறையவில்லை.

எனக்கு 35 வயதில் உச்சந்தலையிலும் பிடரியிலும் ஒரு ரூபாய் அளவுக்கு நரை இருந்தது. அதை மறைக்க, வகிடு எடுக்காமல் தலை வார ஆரம்பித்தேன்.

இங்கு வந்த பின் ஒரேஒரு முறை, அதுவும் நான் அறிந்து கொண்டால் பிறகு நானே நரையை மறைக்கும் வேலையைச் செய்யலாம், நேரமும் பணமும் மீதம் என்று நினைத்து தலையை ஒருவருவரிடம் காட்டி வைத்தேன். உண்மைக் காரணம் வேறு இருந்தது. எனக்கு என் வேலைகளை இன்னொருவரிடம் கொடுத்துச் செய்ய வைத்துப் பழக்கமில்லை; நானே செய்தால் தவிர திருப்தி கிடைப்பதில்லை. தலையைக் கொடுத்தேன். அரை மணி நேரம் பூசிய மையின் மேல் glade wrap சுற்றி உட்கார வைத்தார் அந்தப் பெண்மணி. காதோரம் ஏதோ ஊர்ந்தது. கையை வைக்காமல் பொறுமையில்லாமல், பொறுமையாக அமர்ந்திருந்தேன். அழைத்துச் சொல்ல, வந்து பார்த்தவர், 'அது வியர்வை' என்று விட்டுப் போய்விட்டார். அரைமணி கழித்து, கூந்தலைக் கழுவிவிட்ட பிறகு பார்த்தால் காதோரம் தடிப்பாக கோலம் போட்டிருந்தது. கர்ர்ர்ர்ர் என்று ஆகிவிட்டது எனக்கு. நான் கேட்ட நிறம் தன்னிடம் இல்லை என்று என்னைக் கொண்டே வாங்க வைத்திருந்த அந்த சிகையலங்கார 'நிபுணர்', மீதியை என்னையே எடுத்துச் சென்று, மறு முறை வரும் போது கொண்டுவரச் சொல்லி இருந்தார். பிறகு நான் போகவே இல்லை.

பல வருடங்கள் கழித்து உச்சி நரை சற்று அசிங்கமாகச் தெரிய ஆரம்பித்த போது, க்றிஸ்ஸைத் துணைக்கு வைத்துக் கொண்டு நானே மை பூச ஆரம்பித்தேன். பாடசாலை விடுமுறை காலங்களில் இயல்பாக விட்டுவிடுவேன். பாடசாலைக் காலங்களில் கூட மூன்று நான்கு கிழமைகளுக்கு ஒரு முறைதான் வேலை. இடையில் முக்கியமான நிகழ்வுகள் இருந்தால் தவிர, அலங்காரமாகச் சீவி மறைத்து விடுவேன். சிறிய வாசனையானாலும் சட்டென்று வேலையைக் காட்டும் என் நுரையீரலின் செயற்பாடு காரணமாக, நம்பிக்கை & தேவை இருந்தால் தவிர மையைத் தொடுவதில்லை. க்றிஸ்ஸின் வேலை, எங்காவது தவறிச் சிதறி விட்டால் உடனுக்குடனே துடைத்து விடுவது.

மருமகளைப் பார்க்கக் கனடா சென்றிருந்த சமயம் அவர் ஒரு சிகையலங்கார நிலையத்திற்கு அழைத்துப் போனார். நான் கேட்ட விதம் ஒன்று, அது சரிவராது என்று அவர்கள் சொன்ன காரணம் நியாயம் என்று அரை மனதாக ஒப்புக் கொண்டு தலையைக் கொடுத்தேன். முடிவு... பரவாயில்லை என்று தோன்றிற்றே தவிர முழுத் திருப்தி கிடைக்கவில்லை. அன்றே தீர்மானித்தேன், இனி என்ன ஆனாலும் இன்னொருவரிடம் தலையைக் கொடுக்க மாட்டேன் என்று.

குழந்தைகள் வளர்ந்து விட, மூன்று கிளைக் குடும்பங்களாக என் குடும்பம் பெருகி இருந்தது. அம்மாவின் உடல்நிலை, அவர் தொடர் சிகிச்சைக்காக ஓய்வு இல்லத்தில் அனுமதிக்கப்பட்டது, அதற்காக தயார் செய்தல், அவர் வீட்டை ஒழித்து மீண்டும் வீட்டு உரிமையாளரிடம் கையழித்தது, அதே சமயம் சின்னவரது திருமணம் என்று வேலைப் பழு அதிகமாகிப் போன சமயம் தோன்றிற்று... முடியை வெட்டலாம், நேரம் மிச்சமாகும், சுலபமாக உலரும், இழுப்பு இருக்கும் நாட்களிலும் பயமில்லாமல் முழுகலாம். க்றிஸ்ஸிடம் கேட்டேன். "சேலைக்குக் குட்டை முடி அழகாக இருக்குமா?" என்றார். அவர் பிரச்சினை அது அல்ல, என்னை அப்படிப் பார்த்து அவர் கண்களுக்குப் பழக்கமில்லை. என்னால் சேலைக்கு ஏற்றபடி & முன்னிருந்து பார்த்தால் முடியை வெட்டியதே தெரியாதபடி வெட்ட முடியும் என்றேன். நீண்ட முடியோடு கடைசி நாள் என்று முழுகி தலையை ரசித்து வாரி நீளமாக விரித்து உலரவிட்டுக் கொண்டு அம்மாவைப் பார்க்கப் போனேன். அறைக்குப் போகும் வழி நெடுக, கண்ட பெண்கள் என் கூந்தல் அழகைச் சிலாகித்துப் பேசக் கேட்டு மனம் மாறிற்று. வெட்டவில்லை அன்று.

இப்படியே மூன்று முறை ஆயிற்று. இதற்குள் எனக்கே சந்தேகம் வந்துவிட்டது - என் கூந்தல் என் பெருமை ஆயிற்றே! வெட்டுவதா!! நீளமாக இருந்தால் அழகழகாகக் கட்டி அழகுபார்க்கலாமே!

அம்மா இறுதியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டாம் நாள், தன் முடியைக் குட்டையாக வெட்டி விடச் சொன்னார். அவருக்கும் என்னைப் போல் மற்றவர்கள் அவர் தலையைத் தொடுவது இஷ்டமில்லை. சின்னவரது திருமணத்திற்கு இரண்டு மாதங்கள் இருந்தது. பின்னிப் பிடித்து, முன்பிருந்து பார்த்தால் முடி குறைந்திருப்பது தெரியாத விதமாக வெட்டி விட்டேன். அந்தக் கற்றை அப்படியே என்னிடம் பத்திரமாக இருக்கிறது இன்னும். எண்பத்தொரு வயதானாலும் கன்னங்கரேலென்ற கருத்த சுருண்ட முடி. மரணித்த சமயம் மீண்டும் அதே நீளத்திற்கு வளர்ந்திருந்தது.

உடற்பயிற்சி செய்யும் சமயம் குறுக்கே பாம்பு போல் தொங்கி பார்வையை மறைக்கும் போது சற்று அலுப்பாக இருக்கும். வெட்டிவிடும் எண்ணம் மீண்டும் தலைதூக்கியது. இலங்கைக்குப் போகும் சமயம் என் பெறாமகளைக் கொண்டு வெட்டலாமா! அழகுக்கலை நிபுணர் அவர். அவரது ரசனை எனக்குப் பிடிக்கும் என்பதால்... தயங்காமல் தலையைக் கொடுக்கலாம்.

அதற்குள்... கொரானா வந்தது. நானே வெட்டிக் கொள்ள முடிவு செய்தேன். உதவிக்கு இருக்கவே இருக்கிறது யூட்யூப். இந்தக் காணொளியில் சொல்லப்பட்டிருக்கும் முறை சரிவரும் என்று மனம் சொன்னது.

முன்பொருமுறை வெகு மலிவாக எங்கோ கண்ணில் பட, இந்த இரண்டு உபகரணங்களையும் வாங்கி வைத்திருந்தேன். இரண்டிலும் அசையக் கூடிய நீர்மட்டங்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. உள்ளே கூந்தலைப் பற்றிப் பிடித்துக் கொள்ள சின்னச் சின்னப் பற்கள் இருக்கின்றன.

சிறியதை மட்டும் எடுத்துக் கொண்டேன். க்றிஸ்ஸின் முடி திருத்தும் கத்தரிக்கோலை (அவருக்கு நான் தான் வெட்டிவிடுவேன்.) எடுத்துக் கொண்டேன். இன்னொரு ரப்பர் பட்டியும் சுத்தமான கடதாசி ஒன்றையும் எடுத்து வைத்தேன். முடியைக் கழுவி, கண்டிஷனர் போட்டு அலம்பி, வீடியோவில் சொன்னபடி முன்பக்கமாக நீளமாக, சீராக வாரிக் கட்டிக் கொண்டேன். பிறகு அந்த உபகரணத்தை சரியான இடத்தில் மாட்டிவிட்டு க்றிஸ்ஸைக் கொண்டு நீர்மட்டம் சரிபார்க்க வைத்தேன். அதன் பின் கவனமாக, சற்றுச் சரிவாக, நறுக்! நறுக்!

விளைவு இதோ!
(இது உண்மையில் ஆறு வாரங்கள் கழித்து எடுத்த புகைப்படம்.)


நறுக்கியவற்றை ஒன்றாகப் பிடித்து ரப்பர்பட்டியை மாட்டி, கடதாசியில் உலரும் வரை வைத்திருந்து எடுத்து வைத்திருக்கிறேன். என்ன செய்யப் போகிறேன் என்று யோசித்துவைத்திருக்கிறேன். தேவையான உபகரணங்களும் நேரமும் கிடைத்ததும் செயலில் இறங்க வேண்டும்.

Saturday 25 April 2020

வளையல் செய்தேன்!

அம்மாவின் நினைவாக அவர் பயன்படுத்திய பொருட்களை பெட்டியொன்றில் சேமித்து வைத்திருக்கிறேன். பொருட்களின் இடையே அவரது பற்தூரிகை இருந்தது.

பயன்படுத்தியது - என்றோ நிச்சயம் குப்பைக்குப் போய்விடும். அணிகலனாக மாற்றினால்! என்றோ யூட்யூபில் பார்த்த கைவினை நினைவுக்கு வர, தேடினேன்.
குறட்டினால் குஞ்சத்தை நீக்கி, (தகடுகளைக் கொண்டுதான் இறுக்கி இருப்பார்கள். அவற்றையெல்லாம் நீக்கிவிட முடிந்தால் நல்லது.) இன்னொரு பழைய தூரிகையால் அந்த இடத்தைத் தேய்த்துச் சுத்தம் செய்தேன். புதிதாக இருந்தால் கழுவும் வேலை இல்லை. நேரடியாகவே காரியத்தில் இறங்கலாம்.

தட்டையான சட்டியில், கொதிநீரில் தயார் செய்து வைத்திருக்கும் தூரிகைக் கட்டையைப் போட்டு இளகவிட்டேன். நான்கைந்து நிமிடங்கள் கழித்து சமையலறை இடுக்கியினால் பிடித்து எடுத்து துணியில் பிடித்து முறுக்கிக் கொண்டேன். முன்பே என் கையை அளந்து பார்த்ததில் வளையல் பெரிதாகவே வரும் என்று தெரிந்தது. அதனால்தான் முறுக்கு வளையல் செய்ய முனைந்தேன்.

அடுத்த தடவை சற்று நேர்த்தியாகச் செய்ய வேண்டும்.
முக்கிய குறிப்பு:- வளையலில் முறுக்கிய பகுதியை உள்ளங்கையில் வரும் விதமாகப் பிடித்து அணிந்தால் சுலபமாக அணியலாம்.

Monday 20 April 2020

My Locket

Locket என்பதன் தமிழாக்கம் என்னவாக இருக்கும்!!

சென்ற தவணை இடம்பெற்ற ஒரு கருத்தரங்கின் முடிவில், எங்களை வழிநடத்திச் சென்றவர் தன் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியைக் காட்டி அதைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். வித்தியாசமாக இருக்கிறதே என்று முன்பே யோசித்தேன்.

சிறப்புத் தேவைகளுடனான குழந்தைகள் பற்றிய கருத்தரங்கு அது. சில குழந்தைகளின் பெற்றோர் ஒன்றாகச் சேர்ந்து அமைப்பொன்றை உருவாக்கியிருக்கிறார்கள். பாடசாலையொன்றின் விளையாட்டு மைதானத்தில் மாதமொரு முறை ஒன்றுகூடுவார்களாம். குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்காக, நன்கொடை சேகரிக்கும் முயற்சியாக தாய்மாரில் ஒருவர் இந்தச் சங்கிலிகளை விற்கிறார்.


சிமிழ்களின் விளிம்புகளிலுள்ள வெட்டுவேலைகளில் வித்தியாசமானவை இருக்கின்றன. விரும்பியதைத் தெரிந்துகொள்ளலாம். வாங்கும் போது சிமிழ்கள், இரண்டு உருவங்களுடன் வரும். மேலும் ஐந்து உருவங்களை சிமிழ் கொள்ளும். அவற்றை மேலதிகமாகப் பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ள வேண்டும். பணத்தை அனுப்பியபின் lockdown அறிவிக்கப்பட... என் ஆர்வம் குறைந்து போயிற்று. இனி ஒரு மாதம்! கழித்துத் தான் கிடைக்கும் என்று முடிவு செய்து தபாலை எதிர்பார்ப்பதைத் தவிர்த்தேன். சில நாட்கள் கழித்து எதிர்பாராத சமயம் தபாற்பெட்டியில் சின்னதாகப் பொதி ஒன்று. என் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

இப்போ என்  சங்கிலியின் கதை -
                சிமிழின் விளிம்பிற்கு - சிற்றலைகளைத் தெரிவு செய்தேன். Ripples of love & kindness.
              Family heart - என் அன்புக் குடும்பத்திற்காக
              குருசு - க்றீஸ்தவத்தைக் குறிக்க.
              Autism puzzle - தற்போது நான் செய்யும் தொழிலைக் குறிப்பதற்காக
              துவிச்சக்கரவண்டி - எட்டாவது வயது முதல் நாட்டை விட்டு வெளியேறும் வரை இரண்டு சக்கர வண்டிகள் என் வாழ்வின் முக்கிய அங்கமாக இருந்திருக்கின்றன. முதலில் ஒரு சின்ன ஹீரோ, பிறகு பச்சை நிற ரோட்ஸ்டார், ஒரு chopper, ஒரு சின்ன Asia சைக்கிள், கடைசியாக ஒரு பெரிய லேடீஸ் சைக்கிள். அதன் பின் பச்சை நிற Yamaha mate 50 ஒன்று வைத்திருந்தேன்.
          இரண்டு முயல்களும்... ட்ரிக்ஸி, ட்ரேஸியின் நினைவாக
          கற்கள் பதித்த பூ - என் கைவினைப் பிரியத்தையும் அணிகலன் பிரியத்தையும் குறிக்க.

இன்னும் எத்தனை வருடங்கள் விசேட தேவைகளுள்ள சிறுவர்களோடு பயணிப்பேன் என்பது தெரியாது. இந்தச் சங்கிலியை அவர்கள் நினைவாக எப்பொழுதும் என்னோடு வைத்திருக்க விரும்புகிறேன்.