[l:-) இமாவின் உலகத்தார் அனைவருக்கும் அன்பு வணக்கம்.
கடந்த சில... அல்ல, பல மாதங்களாகவே தட்டச்சு செய்வது சிரமமாக இருந்து வந்தது.
இந்த வருஷம் வாழ்த்துக்கள் உட்பட இதுவரை 25 இடுகைகள்தான் பதிவிட்டு இருக்கிறேன். அவை கூட அதிகம் தட்டச்சு செய்யாமல் படங்களை இட்டு நிரப்பியவை. பலது ஏற்கனவே ஏதோ ஒரு சமயம் தட்ட ஆரம்பித்து அரைகுறையாக நின்ற பதிவுகள், இப்போ முடித்து வெளியிட்டவை.
எப்படியாவது சமாளித்து ஓட்டி விடலாம் என்று இதுவரை முயற்சித்து... இனி இயலாது என்கிற நிலைக்கு வந்தாயிற்று.
வலது கை கட்டாய ஓய்வு கேட்கிறது. மருத்துவ ஆலோசனையின்படி மெதுவே இடது கைக்கு வேலைகளை மாற்றிப் பழக்கிக் கொண்டு இருக்கிறேன். முறையாகத் தட்டச்சு கற்றதில்லை. என் வசதி போல் சில விரல்களைப் பயன்படுத்துகிறேன். ஆனால் பிடித்த வேலை. ;) தட்ட ஆரம்பித்தால் வேக வேகமாகத் தட்டுவேன்... பிறகு வேதனையில் இரவு உறக்கம் தொலைந்து போகிறது.
விடுபட்டுப் போன கடமைகள் நிறைய இருக்கின்றன, பதில் போடாத முக்கிய மின்னஞ்சல்கள் ஏராளம்; என் உலகத்து இடுகைகளில் கருத்துச் சொன்னவர்களுக்குச் சரியானபடி பதில் சொல்வதில்லை; பெற்றுக் கொண்ட விருதுகள் பல இன்னமும் இணைக்கப் படவில்லை.
அனைவரிடமும் மன்னிப்புக் கோருகிறேன்.
இடது கையால் வேலை செய்வது சுலபமாக இல்லை. பழக்கம் இல்லை. அதிக நேரம் எடுக்கிறது. ஆனாலும் முக்கியமான வேலைகளைத் தவிர்க்க இயலவில்லை!
இன்னும் இரண்டு நாட்களில் இரண்டாம் தவணை வேறு ஆரம்பிக்கவிருக்கிறது.
எத்தனை நாளைக்கு ஸ்மைலியும் சுருக்கமான கருத்துக்களும் சொல்லிச் செல்வது! படிக்கிற வலைப்பூச் சொந்தக்காரருக்கு ஏனோதானோவென்று நான் கருத்துச் சொல்லி இருப்பதாகக் கூட எண்ணத் தோன்றலாம் அல்லவா?
என் நிலையைத் தெளிவுபடுத்தி விட்டு வலைப்பூ உறவுகளிடமிருந்து தற்காலிகமாக விடைபெறலாம் என்று தோன்றிற்று.
இறுதித் தொடர்பதிவுக்கு அழைத்த விதத்தில் அதிராவுக்கு மட்டும் என் நிலை பற்றிச் சுருக்கமாகத் தெரியும். இப்போ மீதிப் பேரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்புகிறேன்.
சமீபத்தில் புதிதாகப் பின்தொடர இணைந்துள்ளவர்களை ஏமாற்றுவது போல் இருக்கிறது. கவலையாக இருக்கிறது. ;( மன்னியுங்கள்.
கை வலிக்கிறது என்று சொல்வதற்கும் கை வலிக்கத் தான் தட்டச்சு செய்ய வேண்டி இருக்கிறது. ;))
என் உலகில் சேமிப்பில் உள்ள இடுகைகள், முடிகிற வரை அவ்வப்போது தன்னால் வெளியாகும். வேறு பகிர்ந்து கொள்ள இருந்தால் சுருக்கமாகப் பகிர்ந்து கொள்கிறேன்.
கருத்துச் சொல்லாவிடினும் வழமை போல் உங்கள் அனைவர் இடுகைகளையும் படித்துக் கொண்டு இருப்பேன். ;) தங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு என் நன்றிகள்.
அனைவருக்கும் மீண்டும் என் அன்பு
_()_
kia ora
மீண்டும் சந்திப்போம்
- இமா