Showing posts with label craft. Show all posts
Showing posts with label craft. Show all posts

Sunday, 24 May 2020

ஒரு பித்தான், ஒரு ரப்பர் வளையம்!

 தலைப்பில் சொல்லியிருப்பவற்றை, மேலே உள்ள படத்தில் காண்பீர்கள்.
ரப்பர் வளையத்தை மடித்து பித்தான் கொக்கியூடாக மாட்டி மறுபக்கம் எடுத்து...
ஒரு பக்கத்தை வளைத்து சுருக்குப் போட்டு....
 இழுத்து இறுக்க வேண்டும்.
கூந்தலில் மாட்டுவதற்காகத் தான் செய்தேன்; ஆனால் எனக்காக அல்ல. அதனால், என் பின்னலில் மாட்டி புகைப்படம் எடுக்க விடும்பவில்லை.

இந்த பித்தான் ரப்பர் வளையத்திற்கு இன்னொரு பயன்பாடும் இருக்கிறது. லொக்டௌனில் நன்றாகச் சாப்பிட்டு, ஓய்வு எடுத்துவிட்டு வேலைக்குக் கிளம்பும் சமயம் skirt / trousers பித்தான் மாட்டுவது சிரமமாக இருந்தால், ஆடையில் ஏற்கனவே இருக்கும் பித்தான் அளவில் இன்னொன்றை எடுத்து சாதாரண ரப்பர் பட்டி ஒன்று - மிகவும் சிறியதாக இருப்பது அவசியம் - இப்படி மாட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். ஆடையில் உள்ள பித்தான்கண் வழியே புதிய! பித்தானை மாட்ட வேண்டும்; ரப்பர் வளையத்தை ஆடையில் உள்ள பித்தானில் மாட்ட வேண்டும்.
வேலையைச் சரியாகச் செய்திருக்கிறேனா! :)
புரியாவிட்டால் கடைசிக்கு மேலே உள்ள படத்தைப் பார்த்துக் கொண்டே.... இந்தப் பந்தியை மீண்டும் படித்துப் பார்க்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

ஒருவேளை....  2 / 3 / 4 துளைகள் கொண்ட பித்தான்தான் கிடைத்தது என்றால், ஏதாவது ஒரு துளை வளியே ரப்பர் வளையத்தை மாட்டி, இன்னொரு துளை வழியே மறுபக்கம் இழுத்துப் பார்க்க இரண்டாவது படத்தில் இருப்பது போல் தெரியும். பிறகு மீதிப் படிமுறைகளைப் பின்பற்றுவது சுலபமாக இருக்கும்.

Friday, 1 May 2020

சின்னச் சின்ன அணிகலன்கள்

பேத்திக்காக, அவரது பிறந்தநாளுக்காகச் செய்தவை இவை. சட்டைகளையும் நானே தைத்தேன். அவற்றைப் பற்றி வேறொரு இடுகையில் பார்க்கலாம்.)

கைவினைப் பொருட்கள் மலிவாகக் கிடைக்கும் சமயம் வாங்கிச் சேர்த்து வைப்பேன். எது எப்போது தேவைப்படும் என்பதைச் சொல்ல முடியாது. ஒரு பாக்கெட்டில் வந்த பூக்களைக் கொண்டு, நேற்றைய இடுகையிலுள்ள வாழ்த்திதழ் உட்பட மூன்று வாழ்த்திதழ்களாவது செய்திருப்பேன்.


செய்முறை என்று எழுதுவதற்குப் பெரிதாக எதுவும் இல்லை.

தேவையாக இருந்தவை...
தடிமனான, மினுக்கமான வண்ணக் கயிறுகள்
பொருத்தமான நிறத்தில் பூக்கள்
மகரந்தம்
செயற்கை இலைகள்
மாலைகள் செய்வதற்கான வளையங்களும் கொக்கிகளும் (Lobster clasps)

இவற்றோடு....

கத்தரிக்கோல்
குறடு
மெழுகுவர்த்தி
க்ளிப்புகள்
ஊசி & பொருத்தமான நிறங்களில் நூல்

  • கழுத்து அளவிற்கு ஏற்றபடி நாடாவை வெட்ட வேண்டும்.
  • நுனிகளை மெழுகுவர்த்தியில் காட்டி உருக்கிக் கொள்ள வேண்டும்.
  • ஒரு முனையில் வளையத்தையும் மறுமுனையில் கொக்கியையும் மாட்டி இறுக்கிக்கொள்ள வேண்டும்.
  • பாதியாக மடித்து நடுவில் அடையாளம் செய்து எடுத்து, பூக்கைளையும் இலைகளையும் மகரந்தங்களையும் சரிவர வைத்துத் தைக்க வேண்டும். 
  • க்ளிப்பிலும் விருப்பம் போல் பூக்களை வைத்துத் தைத்துவிடவேண்டும்.
  • நூல் பிரிந்துவிடாமல் இருக்க தையலை முடித்த இடத்தில் நிறமற்ற நெய்ல் பொலிஷ் வைத்துவிட்டால் நல்லது. 
இவை ரிபன் ரோஜாக்கள் - வாங்கியவைதான். சில சமயங்களில் விலையைப் பார்க்கும் போது ரிபன் வாங்கி, செய்யச் செலவளிக்கும் நேரத்தையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது... எப்படி இவர்களால் இந்த விலைக்கு விற்று லாபம் காண முடிகிறது என்று வியப்பாக இருக்கும். கண்ணில் படும் போது வாங்கிவிடுவது எனக்கு லாபம்.

எளிமையாக இருக்க வேண்டும் என்று விரும்பியதால் இவ்வளவோடு நிறுத்திவிட்டேன். பேத்தி வளரும் போது தேவை மாறலாம். :-)

Saturday, 25 April 2020

வளையல் செய்தேன்!

அம்மாவின் நினைவாக அவர் பயன்படுத்திய பொருட்களை பெட்டியொன்றில் சேமித்து வைத்திருக்கிறேன். பொருட்களின் இடையே அவரது பற்தூரிகை இருந்தது.

பயன்படுத்தியது - என்றோ நிச்சயம் குப்பைக்குப் போய்விடும். அணிகலனாக மாற்றினால்! என்றோ யூட்யூபில் பார்த்த கைவினை நினைவுக்கு வர, தேடினேன்.
குறட்டினால் குஞ்சத்தை நீக்கி, (தகடுகளைக் கொண்டுதான் இறுக்கி இருப்பார்கள். அவற்றையெல்லாம் நீக்கிவிட முடிந்தால் நல்லது.) இன்னொரு பழைய தூரிகையால் அந்த இடத்தைத் தேய்த்துச் சுத்தம் செய்தேன். புதிதாக இருந்தால் கழுவும் வேலை இல்லை. நேரடியாகவே காரியத்தில் இறங்கலாம்.

தட்டையான சட்டியில், கொதிநீரில் தயார் செய்து வைத்திருக்கும் தூரிகைக் கட்டையைப் போட்டு இளகவிட்டேன். நான்கைந்து நிமிடங்கள் கழித்து சமையலறை இடுக்கியினால் பிடித்து எடுத்து துணியில் பிடித்து முறுக்கிக் கொண்டேன். முன்பே என் கையை அளந்து பார்த்ததில் வளையல் பெரிதாகவே வரும் என்று தெரிந்தது. அதனால்தான் முறுக்கு வளையல் செய்ய முனைந்தேன்.

அடுத்த தடவை சற்று நேர்த்தியாகச் செய்ய வேண்டும்.
முக்கிய குறிப்பு:- வளையலில் முறுக்கிய பகுதியை உள்ளங்கையில் வரும் விதமாகப் பிடித்து அணிந்தால் சுலபமாக அணியலாம்.

Thursday, 26 March 2020

Computer Birthday Card

கூட வேலை செய்யும் குட்டித் தோழி ஒருவருக்கு இன்று இருபத்தைந்தாவது பிறந்தநாள். இவர் உதவி இல்லாவிட்டால் இன்று திடீர் இணைய வழிக் கல்வி பற்றி தலை வால் புரியாமல் திண்டாடியிருப்பேன். 

இந்த வாழ்த்திதழின் நடுவே உள்ள வட்டம், எங்கள் பழைய கம்ப்யூட்டருக்கான 'டிஸ்க் க்ளீனர்'. மொத்தமாக மூன்று தட்டுகள் வைத்திருந்தேன். ஒன்று வாழ்த்திதழில்; மீதி இரண்டையும்... :-)

என் பேரக்குழந்தைகளுக்குக் காட்டவென்று சேமித்து வைத்திருக்கிறேன். :-)
  அவை வந்த உறை இது.
பழைய கம்ப்யூட்டர் பேப்பர் ஒன்றை....
....உள்ளே ஒட்டி அளவாக வெட்டினேன். 
வட்டத்தை ஒட்டிக் காய விட்டால்... பசை பூசிய இடம் தனியாகத் தெரிந்தது. அதை மறைக்க கொஞ்சம் தாராளமாகவே வேலைப்பாடுகள் தேவைப்பட்டன. :-) 

காம்புகள் - கொடி கட்டும் நைலான் கயிறு. அவற்றைப் பிரித்து சிறிய கொப்புகளையும் ஆக்கினேன்.
பெரிய ரோஜாக்கள் - முன்பு ஒரு சின்னவர் கொடுத்த 'வாலன்டைன்ஸ்டே' அட்டையிலிருந்தது
சிறிய ரோஜாக்கள் - curling ribbon
குட்டிப் பூக்கள் - ஃபெல்ட் கடதாசியை 'பஞ்ச்' கொண்டு வெட்டி எடுத்தேன். நடுவே நகப்பூச்சினால் சிறிய புள்ளிகள் வைத்திருந்தேன். அவற்றில் பெரும்பான்மை உறிஞ்சப்பட்டுவிட மீதி மட்டும் இருந்தது. அதுவும் ஒரு வித அழகாக இருந்தது.
வண்ணத்துப் பூச்சி - அம்மாவின் சேகரிப்பில் கிடைத்தது. பக்கத்து வீட்டுச் சின்னப் பெண்களின் உடைந்த க்ளிப் ஒன்றிலிருந்து கிடைத்திருக்கலாம்.
Happy Birthday - confetti
பெயர் - எழுத்து மணிகள். L கிடைக்கவில்லை. சின்ன l எழுத்தை ஒட்டிவிட்டு மீதியை வரைந்துவிட்டேன்.
அதன் கீழ் உள்ள 'bow' - என் பழைய ஒற்றைத் தோடு. தண்டுப் பகுதியைக் குறட்டால் நறுக்கி எடுத்தேன்.
மீதி... குட்டிக்குட்டி சிவப்பு மணிகள் & சிவப்பு மகரந்தங்கள்.

இது தோழியின் கையில் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம். கடந்த ஞாயிறு இரவே இந்த வாரம் பாடசாலை நடக்குமா என்பது கேள்விக்குறியாகி இருந்தது, திங்கள் நான் பாடசாலையை எட்டிப் பார்த்ததற்கு இந்த வாழ்த்திதழைச் சேர்ப்பிக்கும் எண்ணமும் ஒரு காரணம். கிளம்பும் முன் என் செய்தியைப் பதிவு செய்துவிட்டேன். எங்கள் பகுதியைச் சேர்ந்த அனைவருக்கும், வாழ்த்திதழில் அவர்கள் வாழ்த்தினைப் பதிவு செய்யுமாறு கூறி மின்னஞ்சலில் தகவல் அனுப்பினேன். மறுநாள் ஒரு சிலர் மட்டும் அவசியம் கருதி பாடசாலைக்குச் சென்றிருந்தனர். அதன் பின் அனைவரும் வீட்டிலிருக்கிறோம். எம் பகுதித் தலைவருக்கு நேரம் கிடைத்து தபாலில் சேர்க்கத் தோன்றி நேரமும் கிடைத்திருந்தால் இன்று தோழி கையில் இந்த வாழ்த்திதழ் கிடைத்திருக்கும். அல்லாவிட்டால் என்று கொரோனா பயம் நீங்கி பாடசாலை திறக்கிறதோ அன்று ஒரு குட்டிப் பார்ட்டி வைத்து கையிலேயே கொடுப்போம். :-)

Tuesday, 24 March 2020

புதியதும் பழையதும்

வெகு காலமாக மனதில் இருந்த ஆசை; சமீபத்தில் அதிக தையல்கள் தைக்கக் கூடிய தையல் இயந்திரம் ஒன்று வாங்கினேன். பழையதில் எந்தக் குறையும் இல்லை. இன்றும் என் பிரியத்துக்குரியதாகவே இருக்கிறது. 'ஸ்காலப்ஸ்' தைக்கும் வசதி இருக்கவில்லை. இம்முறை வாங்கியதில் துவிச்சக்கரவண்டி கூடத் தைக்கலாம்.

பெட்டியைப் பிரித்து இயந்திரத்தை வெளியே எடுத்து வைத்தேன். அடிப்படை அமைப்புகள் சிலவற்றில் மாற்றங்கள் தெரிந்தது. புத்தகத்தை எடுத்துப் படித்து, நூலைக் கோர்த்து வைத்தேன்.

முதல் முயற்சிக்காக கைக்கு அகப்பட்டது குப்பைக்குப் போக இருந்த பழைய 'பானர்' ஒன்று. 'ஸ்காலப்ஸ்' தைக்கக் கிடைத்த சந்தோஷத்தில், செவ்வகவடிவில் இருந்த அந்த 'ஃபெல்ட்' துணியைச் சுற்றிலும் ஒரு வரி தைத்தேன். சிறிய வயதில் என்னிடம் இருந்த சட்டை ஒன்றில் நெளிவேலைப்பாட்டுத் தையல் ஒன்று இருந்தது. அது சங்கிலித் தையலில் இருக்கும்; இப்போதையது நேர்த்தையலையே நெளிவாகப் போட்டுக் கொடுத்தது. அதோடு பரீட்சார்த்தம் திருப்தியாக முடிந்தது.

இப்போது அந்தத் துணி வீச இயலாத அளவு அழகாகத் தெரிந்தது. பதினைந்து தடவையாவது எடுத்துப் பார்த்திருப்பேன். :-) 'இதை வைத்து என்ன செய்யலாம்!!!'

அந்தச் சமயம் தோழி ஒருவரது பிறந்தநாள் வந்தது. துணியைத் தேவையான அளவு மடித்து வெட்டிக் கொண்டேன். சுற்றிலும் சாதாரண தையல் ஒரு வரி அடித்தேன். அளவாக அட்டையை மடித்து துணியை அதில் ஒட்டிக் காயவிட்டேன்.

சில வருடங்கள் முன்பு வீட்டிற்குத் திரைச் சீலைகள் மாற்றும் சமயம் வெட்டிக் கழித்த லேஸ் துண்டு ஒன்று இருந்தது. கடையில் கோணலாக வெட்டிக் கொடுத்ததால் நான் நேராக வெட்டியதில் கிடைத்த அந்தத் துணியில் பத்துப் பன்னிரண்டு பூக்கள் முழுமையானவையாக இருந்தன. அரைகுறையாக இருந்த பூக்களை இலைகளாகவும் மொட்டுகளாகவும் மாற்றிவிடலாம் என்று தோன்றிற்று.

அட்டையில் விதம்விதமாக ஒழுங்குபடுத்திப் பார்த்து திருப்தியான அமைப்புக் கிடைத்ததும், ஒட்டினேன். குட்டிகுட்டி வெள்ளை மணிகளை ஒட்டி மேலும் அழகு சேர்த்தேன். பெற்றுக் கொண்டவர், 'இப்படி எல்லாம் கூட யோசிக்க வருமா!' என்றார். :-) அவரது வேலை மேசையில் மேல் உள்ள 'நோட்டிஸ் போர்டில்' குத்தியிருக்கிறார்.

Wednesday, 19 February 2020

மணநாள் வாழ்த்து

என் மருமகள் ஒருவர், என் பெற்றோரை, 'மம்மி, டடா,' என்று அழைப்பார். மணமாகி வெளிநாடு சென்றபின் தனது கணவரோடு சேர்ந்து இந்த வாழ்த்து இதழை என் பெற்றோரது பொன்விழாவுக்காக அனுப்பி இருந்தார். இப்போதுதான் அனைத்தும் என் உடைமைகள் ஆகி விட்டனவே! 

ஆனால் எத்தனை காலம் வைத்திருப்பேன்! வீச மனதே இல்லை.

என்னைப் பொறுத்த வரை - அவர்கள் கடைக்குப் போக, தெரிவு செய்ய  விலாசம் தேடி எழுதி முத்திரை வாங்கி ஒட்டித் தபாலில் சேர்க்க செலவழித்த நேரமும் அவர்கள் பணமும் விரயமாய் குப்பையில் போகக் கூடாது. அனுப்பியவரது அக்கறை மதிக்கப்பட வேண்டாமா!

சமீபத்தில் சில மாற்றங்களோடு மகனுக்கும் மருமகளுக்கும் அனுப்பிவைத்தேன். 
இனி செய்த மாற்றங்களைச் சொல்கிறேன்.
1. புதிய அட்டை தயார் செய்து ஓரங்களுக்கு வெள்ளி நிறக் கோடுகள் (ஸ்டிக்கர்) ஒட்டினேன்.
2. எழுத்துக்களைச் சுற்றி முகில் வடிவம் வரைந்து வெட்டி, 3 D sticky dots கொண்டு ஓட்டினேன்.
3. தேன் கூட்ந்த் தனியாக வெட்டி தேனீக்களின் கண்களுக்கு குட்டிக் குட்டி google eyes வைத்து ஒட்டினேன். குட்டிப் பூக்கள் - நக அலங்காரத்திற்குப் பயன்படுத்தும் பூக்கள்.
 4. தேனீக்களின் தலைகள் மேல் உள்ள இரண்டு இதயங்களும் ஸ்டிக்கர்கள்.
5. தேன் கூட்டின் கால்களைப் பேனையால் வரைந்தேன்.
6.  பழைய அட்டையின் பச்சை நிறப் பகுதியிலிருந்து இலைகளையும் காம்புகளையும் வெட்டி ஒட்டினேன்.   
7. வெள்ளைப் பூக்கள் - திருமண அழைப்பு ஒன்றிலிருந்து வெட்டி எடுத்தவை. நடுவில் நகத்திற்கு ஓட்டும் கற்கள்.

உள்ளே வாழ்த்தினை எழுதி அனுப்பினேன்.

சேமிப்பு மெதுவே குறைந்து வருகிறது. முடியும் போதெல்லாம் ஒவ்வொரு அட்டையாக புதுப்பித்து வைக்கப் போகிறேன். பெரும்பாலான வாழ்த்திதழ்களிலிருந்து வாசகங்கள் பயன்படுத்தப்பட்டுவிட்டன. படங்கள் தான் மீதம் இருக்கின்றன. 

Thursday, 16 January 2020

Dishwasher Magnet

Fridge Magnet கேள்விப்பட்டிருப்பீர்கள். இங்கு உள்ளது... Dishwasher Magnet.

பாடசாலைப் பாத்திரம் கழுவும் இயந்திரத்தை ஒழுங்காக இயக்குவது ஒரு போராட்டம். இங்கு வந்தபின் வேலை செய்த இரண்டு பாடசாலைகளிலும் இது ஒரு பிரச்சினைதான். பொறுப்பானவர் பாத்திரங்களை நிரப்பி, சவர்க்காரத் தூளை நிரப்பி ஓடவிட்டிருப்பார்; பாதியில் யாராவது கவனிக்காமல் திறந்து மூடி விடுவார்கள். பாத்திரங்கள் அரைகுறையாகக் கழுவியதோடு நின்றிருக்கும். சிலசமயம் கவனிக்காமல் சுத்தமான பாத்திரங்களுக்கு இடையில் அழுக்குக் கிண்ணங்களை அடுக்கி விடுவதும் உண்டு.

தற்போதைய பாடசாலையில் Clean, Dirty என்று தட்டச்சு செய்து லமினேட் செய்த அட்டைகள் - காந்தம் ஒட்டப்பட்டவை உள்ளன. அவற்றை ஒழுங்காக ஒட்டி வைத்தாலும் குழப்பி வைப்பவர்கள் இருக்கிறார்கள். (தமக்கெனத் தனிக் கிண்ணங்கள் வைத்துப் பயன்படுத்துவோர் அணியில் நானும் உள்ளேன். எம் பாத்திரங்களை நாமே கழுவி வைத்துவிடுவோம்.)



எங்கள் வீட்டிற்கு முதன்முதலில் இயந்திரம் வந்தபோது ஆரம்பித்த வழக்கம், ஒரு காந்த ஸ்மைலி. அது சிரித்தால் - சுத்தம்; தலை கீழாக இருந்தால் - அழுக்கு. பிறகு அம்மா வீட்டிலிருந்து கிடைத்தன சில காந்தக் குண்டுகளும் குச்சுகளும். அவை எதனோடு வந்தன எனத் தெரியவில்லை. ஸ்மைலியை குச்சி மனிதன் ஆக்க உதவின அவை.

சமீபத்தில் சேகரிப்பில் கிடந்த 'ஸ்ரபிள்ஸ்' எழுத்துக்கள் கண்ணில் பட்டன. இவை முன்பு செஞ்சிலுவைச் சங்கக் கடையில் வேலை செய்த சமயம் சேகரித்த குப்பைகள். இரண்டு காந்தங்கள் செய்யக் கூடிய அளவு எழுத்துக்களே கிடந்தன. ஒரே காந்தத்தில் தலைகீழாக இரண்டு சொற்களையும் ஒட்டியிருக்கிறேன். முதலில் எழுத்துக்களை ஓர் தடித்த அட்டையில் ஒட்டிக் கொண்டேன். பெரும்பாலும் ஸ்ரபிள்ஸ் எழுத்துக்கள் பின்புறம் குழிவாக இருக்கும். மெலிந்த விளிம்புகளிலும் இரண்டு எழுத்துக்கள் எங்கு தொடுகைக்கு வந்தாலும், அங்கும் super glue  பூசி ஒட்டினேன். நன்கு உலர்ந்தபின் அட்டையைக் காந்தத்தோடு (குளிரூட்டியில் ஒட்டியிருந்த பழைய நாட்காட்டிகளைக் காந்தமாகப் பயன்படுத்தினேன்.) ஒட்டி, பாரம் வைத்து உலரவிட்டேன்.

அழகாகக் பொதிசெய்து மூத்தவருக்கு அன்பளிப்பாக்கினேன். சந்தோஷமாக இயந்திரத்தை ஓட விட்ட சமயம் ஒட்டி வைத்தார். :-) பாத்திரங்கள் உலரும் சமயம் கதவு சூடேற... காந்தம் ஒட்டுக் கழன்றுவிட்டது.

மகன் வேறு உறுதியான பசையைப் பயன்படுத்தி ஒட்டிக் கொண்டார்.

பயன்படுத்தும சமயம் தான் இது போன்றவை நேரும். இது ஓர் பாடம்.

Wednesday, 15 January 2020

ப்ரோச்


நாத்தனார் அறுந்து போன சங்கிலி ஒன்று வைத்திருந்தார். சங்கிலி ஆரம்பத்தில் எப்படி இருந்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஒரே மாதிரியான இரண்டு பதக்கங்கள் அதற்கு இருந்திருந்திருக்க வேண்டும். சங்கிலியைத் திருத்திக் கொடுத்துவிட்டேன்.

 இரண்டாவது பதக்கத்தில் வளையம் இருக்கவில்லை. இருந்தாலும், ஒரே மாதிரி இரண்டை வைத்து அவர் என்ன செய்யப் போகிறார்! ஒரு ப்ரோச் செய்து கொடுத்தால், சங்கிலியை அணியும் சமயம் இதையும் பயன்படுத்துவார் என்று தோன்றிற்று.

சின்னதாக ஒரு ப்ரோச் பின், ஏற்கனவே இருந்த முத்துக்களோடு ஒத்துப் போகும் நிறத்தில் ஓர் மணி, தங்க நிற ஊசி ஒன்று தேடி எடுத்துக் கொண்டேன். அதற்கு மேல் தேவைப்பட்டவை, ஊசியை வெட்டுவதற்கும் வளைப்பதற்கும் ஏற்ற குறடு & hot glue gun மட்டும்தான்.

புத்தாண்டு அன்று என் அன்பளிப்பாகக் கொடுத்தேன். கடைத் தேங்காயை கடைக்காரருக்கே உடைத்தாயிற்று. :-)

Tuesday, 14 January 2020

சின்னச் சின்னக் கூடைகள்

பல வருடங்களின் முன், ஏதோ ஓர் பொதி சுற்றப்பட்டு வந்த நாடாக்களைக் கொண்டு சின்னதாக ஓர் கூடை பின்னி வைத்திருந்தேன்.

ஆசிரியத் தோழி ஒருவர் வீட்டில் விருந்து. அவர் நிறைய சின்னச் சின்னக் கூடைகளைச் சேகரித்து பெரியதோர் சட்டத்தில் அலங்காரமாக வீட்டில் மாட்டி வைத்திருப்பார். என்னிடம் இருந்த கூடையை அவருக்குக் கொடுப்பதென முடிவு செய்து எடுத்து வைத்தாலும் புதிதாகச் செய்தால்தான் அன்பளிப்பு என்பது போல் ஓர் எண்ணம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
 இன்னும் சின்னதாக ப்ளாத்திக்கு நாடாவில் ஒன்று செய்துகொண்டேன்.
இரண்டையும் அவருக்குக் கொடுத்துவிட்டேன். சமீபத்தில் மீண்டும் அவர் வீட்டிற்குச் செல்லும் சந்தர்ப்பம் அமைந்தது. என் கூடைகள் இரண்டும் அவரது சேகரிப்புச் சட்டத்தினுள் அமர்ந்திருந்தன. சின்னதாக மனதுக்குள் ஓர் மத்தாப்பூ. :-)

Friday, 18 October 2019

அம்மாவின் நினைவுநாள்

முக்கிய நிகழ்வு ஒன்றுக்காக, குடும்பத்தாருக்குக் கொடுப்பதற்காக சின்ன அன்பளிப்புகள் செய்ய விரும்பினேன். 

அம்மாவின் முகம் மட்டும் வரக் கூடியதாக 'ப்ரிஜ் மாக்னட்' செய்யலாம் என்று தோன்றிற்று.  வீட்டுக்கு ஒன்று என்கிற விதத்தில் எண்ணிக் கொண்டேன். படங்கள் (இறுதி அஞ்சலிக்காக அடித்த மடல்களில்) தேவைக்கு மேலேயே இருந்தன. லாமினேட் செய்து பின்பக்கம் காந்தம் ஒட்டலாமா! அம்மாவே நிறையப் பழைய காந்த அட்டைகளும் லாமினேட்டிங் உறைகளும்  சேகரித்து வைத்திருந்தார்கள். பாடசாலைத் தோழி ஒருவர் பாரமில்லாத லாமினேட்டர் ஒன்று வைத்திருக்கிறார். அவரிடம், ஒரு வார இறுதிக்காக இரவல் வாங்கலாம். 

அதற்குள்... செராமிக் பெய்ன்டிங் பெட்டியில் சின்னச் சின்ன டைல்கள் இருப்பது நினைவுக்கு வந்தது. எடுத்துப் பார்த்தேன். வெண்மையாக இருந்தவை கச்சிதமாக இருக்கும் என்று தோன்றிற்று.

இனி... செய்முறை சுருக்கமாக
1. ஒரு டைலை அட்டையொன்றின் மேல் வைத்து வெளிக் கோடு வரைந்து சுற்றிலும் வெட்டிச் சற்றுச் சிறிதாக்கிக் கொண்டேன். (டைலின் அளவுக்கோ அதை விடச் சிறிது பெரிதாகவோ படம் இருந்துவிட்டால் பிறகு படம் உரிந்து போகலாம்.)

2.  இந்த அட்டையை வைத்து படங்களை அளவாக வெட்டிக் கொண்டேன். (ஓரங்களில் சிலும்பல் இல்லாது இருக்க வேண்டும் என்பது முக்கியம். இந்த வேலைக்கு க்ராஃப்ட் நைஃப் நல்லது.)

3. அதே அளவில் காந்தத் தாள்களையும் வெட்டிக் கொண்டேன். (மூலை கூராக இருந்தால் காந்தம் பிரியக் கூடும்.) 
4. இரவு காந்தத்தை ஒட்டிக் காயவிட்டேன்.
5. மறுநாள் காலை டைலின் மேற்பக்கத்தை மெதைலேட்டட் ஸ்பிரிட் கொண்டு துடைத்துவிட்டு (சட்டென்று உலர்ந்துவிடும்.) படங்களை ஒட்டினேன்.
6. மாலை நன்றாக உலர்ந்து இருந்தது. மேலே ஒற்றைப் பூச்சாக வார்னிஷ் கொடுத்தேன். (வார்னிஷ் படத்திற்கு வெளியேயும் பட வேண்டும். அப்போதுதான் படத்துக்கு முழுமையான பாதுகாப்புக் கிடைக்கும்.) ஃப்ரிஜ்ஜில் ஒட்டிக் கொள்ளப் போவதால் ஒரு கோர்ட்டிங் போதும்.

மறு நாள் காலை உலர்ந்திருந்தது. பிறகு பபிள் ராப் தேடி, அளவுக்கு வெட்டிச்  சுற்றி ஒட்டி வைத்தேன். என்னுடையதை ஃப்ரிஜ்ஜில் ஒட்டிவிட்டேன்.

வருடாவருடம் நினைவுநாட்கள் வரத்தான் போகிறது. அந்தச் சந்தர்ப்பங்களை / சந்தர்ப்பங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Wednesday, 7 August 2019

பூக்கூடை வாழ்த்திதழ்

என் மேலதிகாரிக்கு விடுமுறையின் நடுவில் பிறந்தநாள் வந்துபோயிருந்தது. அவருக்காகச் செய்த வாழ்த்துமடல் இது.

கூடை - ரப்பர் முத்திரை + எம்போஸிங் இங்க் & பௌடர்
கரை & Happy Birthday - silver stickers
பூக்கள் - உலரவைத்த (செய்முறைக்கான சுட்டி) வயலட் பூக்கள்
இலைகள் - பன்னத் தாவரத்திலிருந்து எடுத்து உலரவைத்தவை

கூடை தாயாரானதும் போ ஒட்டி முடித்தேன். பூக்கள் கைபட்டால் கெட்டுப் போகும் என்பதால் மேலே ஒரு OHP பேப்பர் மடித்து ஒட்டினேன். பிறகு! அது திறக்கும் சமயம் இதழ்களைப் பாழாக்குவதாகத் தோன்றியதால் முன் அட்டையோடு சேர்த்து ஒரு செலோஃபேன் வளையம் ஒட்டிவிட்டேன்.

இயற்கை மலர்களும் இலைகளும் கொண்டு தயார் செய்யும் வாழ்த்திதழ்களில் உள்ள விசேடம், ஒரே மாதிரி இன்னொன்றைத் தயார் செய்ய முடியாது. நிச்சயம் வித்தியாசம் தெரியும்.


Tuesday, 30 July 2019

சேலைக்கரை அன்பளிப்புப் பை

மூத்த மருமகளின் வளைகாப்பினை அவரது குடும்பமும் எம் குடும்பமும் மட்டும் கலந்துகொள்ளும் நிகழ்வாக வைத்துக் கொள்வது என்று தீர்மானித்திருந்தோம். உண்மையில் அதற்கே வீடு போதாது.

கடைசிக்கு முதல் நாள் - பெண்களின் எண்ணிக்கை இரண்டால் கூடிற்று. சம்பந்தி வீட்டில் கற்பதற்காக கொரியப் பெண் இருவர் தங்கி இருந்தார்; அவர் தங்கை வீட்டில் நெருங்கிய தோழி ஒருவர் தங்குவதற்காக வந்திருந்தார். ஐரோப்பியக் கலாச்சாரத்தில் வளர்ந்தவர்களுக்கு எம் கலாச்சாரத்தை ஒட்டிய நிகழ்வுகளைப் பார்க்கக் கிடைப்பது வெகு அபூர்வமல்லவா! சந்தோஷமாக அவர்களுக்கும் அழைப்பு வைத்தேன்.

எண்ணிக்கை இரண்டு கூடுதலானது பிரச்சினையாக இருக்கவில்லை. அன்பளிப்புப் பைகள் தான் குறைந்தன.

அணிய இயலாதபடி இருந்த பழைய புடவை ஒன்றிலிருந்து ஏற்கனவே கரையைத் தனியாக வெட்டி சுற்றி வைத்திருந்தேன். இரண்டு துண்டுக் கரைகளை ஒன்றாகப் பொருத்தி, தலைப்பிலிருந்து நீளத் துண்டுகள் வெட்டி கைபிடியாக அடித்துப் பொருத்தினேன். கடைசியாக, பையில் அளவுக்கு 'லைனிங்' வெட்டி பொருத்திவிட்டேன். ஒரு தடவைப் பயன்பாட்டிற்காகச் செய்ததால் 'ஸிப்' வைக்காமல், 'வெல்க்ரோ' வைத்துத் தைத்தேன்.

சேலையிலிருந்து தைத்த இரண்டு பைகளையும் என் மருமக்களுக்காக வைத்துக் கொண்டு, முன்பு அவர்களுக்கு எனத் தயார் செய்திருந்த பைகளை விருந்தினர்க்குக் கொடுக்கவென்று எடுத்து வைத்தேன்.


சில மாதங்கள் கழிந்ததும் சின்ன மருமகள் வீட்டார் வழியாக ஒரு திருமண அழைப்பு வந்தது. மணநாள் அன்று ஓர் நாற்காலியில் சேலைக் கரையில் தைத்த பை உட்கார்ந்திருந்தது. பேத்தி பிறந்த பின் அவரது விளையாட்டுப் பொருட்களோடு இரண்டாவது பை இடம்பெற்றிருக்கிறது. அதைக் கண்ட போது தான் என்னிடம் இருந்த புகைப்படங்கள் தொலைந்து போனது நினைவுக்கு வந்தது. 

ஒரு 'க்ளிக்'

Tuesday, 9 July 2019

பிரியாவிடை வாழ்த்து


பாடசாலையில் தோழி ஒருவர் நாடு மாறிப் போக இருக்கிறார். 4ம் திகதி பிரியாவிடை இடம்பெற்றது.

என்னிடம், ஒரு பூக்கூடை வாழ்த்து இதழ்தான் கேட்டார்கள். 

பிரியாவிடைக்குப் பொருத்தமாக வேறு யோசனை தோன்றிற்று. புத்தக அடையாளம் ஒன்றிலிருந்து இலச்சினையை வெட்டி எடுத்தேன். பாடசாலையின் நிறம் - நீலம், நீலம், சிவப்பு. அட்டைகள் தேடி, கிடைத்ததும் அலங்காரக் கத்தரிக்கோலினால் ஒரே சரிவு வர வெட்டினேன். ஒன்றன் மேல் ஒன்று வைத்து ஒட்டியபின் ஓரங்களை வீட்டில் சீர் செய்தேன். (வெள்ளை அட்டையும் நிற அட்டைகள் போலவே கோடுகள் அமையப் பெற்றிருக்கிறது. படத்தில் தெரியவில்லை.) கரைகளை ஒட்டியானதும் இலச்சினைக்கு முப்பரிமானத் தோற்றம் கொடுக்க ஸ்டிக்கர்கள் கொண்டு ஒட்டினேன். 

மீதியாகிப் போன நிற அட்டைகளிலிருந்து பூக்கள் வெட்டி ஒட்டியிருக்கிறேன்.

உள்ளே 4 பக்கங்கள் கிடைக்கும் விதமாக வெள்ளைத் தாள்கள் - ஓரங்களை அதே அலங்காரக் கத்தரிக்கோலினால் வெட்டிச் சேர்த்தேன்.

பாடசாலையில், இதே விதமாக இன்னும் சிலது செய்து கொடுக்குமாறு கேட்டிருக்கிறார்கள்.

Friday, 5 July 2019

பாம்பு பொம்மை


பழைய காலுறை ஒன்றைப் பாம்பாக மாற்றியிருக்கிறேன். விரல்கள் வரும் இடம் தலையாக வர வைத்து நீளத் தீரையாக வெட்டித்த தைத்தேன். நாவுக்கு ஒரு சிறிய சிவப்பு நிறுத்த துணி, கண்களுக்கு சின்னதாக இரண்டு கருப்பு மணிகள், வாலுக்கு நூலைச் சுற்றிக் கட்டினேன். பல காலமாக மழையிலும் வெயிலிலும் இருந்ததில் தைத்த நூல் இற்றுப் போயிற்று போல; ஓரிடத்தில் பிரிந்து போய் பஞ்சு எட்டிப் பார்க்கிறது. 

இன்று குப்பைக்குப் போகப் போகிறார் பாம்பார்.  

Wednesday, 3 July 2019

அன்பளிப்புப் பொதி ஒன்று!

இந்த அன்பளிப்புப் பொதியைத் திறப்பதற்கு, கடதாசியைக் கிழிக்க வேண்டியதில்லை. பார்க்க முழுமையாகத் தெரிந்தாலும் உண்மையில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய விதமாக அமைத்திருக்கிறேன்.

படத்தைப் பார்த்தால் புரியும். நான்கு பக்கங்களிலும் நாடாக்கள் மேல் மூடியில் உள்ள நாடாக்களோடு பொருந்துவதாகத் தெரியும் விதமாக வைத்து செலோடேப் போட்டிருக்கிறேன். பரிசைப் பெறுபவர்கள் பொதியை மீண்டும் பயன்படுத்தலாம்.

விளம்பரத்திற்காக காப்பிப் பொதியோடு இலவசமாகக் கிடைத்த சிவப்பு நிறக் கிண்ணங்கள் வந்த பெட்டிகளை வீசாமல் வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தியிருக்கிறேன். அவற்றில் ஒன்றுதான் மேலே பொதியாகக் காட்சி தருவது.
ஒன்றின் மேல் மூடியில் சின்னதாக ஒரு துளை செய்து உள்ளே சணல் உருண்டையைப் போட்டு வைத்திருக்கிறேன். தேவையான போது சணலை சிக்காமல் எடுக்கலாம்.

Monday, 1 July 2019

தச்சுவேலை விரும்பிக்கு ஓர் வாழ்த்து!

தச்சுவேலை விரும்பிக்கு ஓர்  வாழ்த்து!
கைவேலைக்கான பொருட்களை வைத்திருந்த பெட்டியைத் துளாவும் போது கண்ணில் பட்டன ஒரு பையிலிருந்த சின்னச் சின்ன தச்சு வேலைக்கான பொருட்கள். திறந்து பார்த்தேன்… ஒரு ஏணி, இரண்டு ஆணிகள், சுத்தியல், வாள், பலகை துளையிடும் கருவி, ஒரு தூரிகை. இவற்றில் சில பித்தான்கள் - பின்பக்கம் வளையங்களோடு இருந்தன.  

எப்படி இவற்றைக் கொண்டு வாழ்த்திதழ் செய்வது!

ஸ்டிக்கர் பெட்டியிலிருந்து இரண்டு ஸ்டிக்கர் ஷீட்களோடு ஒரு துண்டு பலகை வடிவக் கோடுகள் போட்ட ஒட்டும் தாள் எடுத்துக் கொண்டேன். 
ஒட்டும் தாளை, அலங்கார விளிம்பு கொண்ட கத்தரிக்கோலால் வெட்டி எடுத்தாயிற்று. பித்தான் கொக்கிகளை குறட்டால் நறுக்கி நீக்கியாயிற்று. ஒரு கடையிலிருந்து கிடைத்த சாம்பிள் மரத்துண்டு ஒன்றில் 'happy birthday' ஸ்டிக்கரை ஒட்டி எடுத்தேன்.

இஷ்டத்துக்கு ஒழுங்கு செய்து பார்த்து, பிடித்த விதத்தில் ஒட்டிய பின்…. 
விளைவு இது.

இன்று பிறந்தநாள் கொண்டாடுபவருக்கு, என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். :-)

Saturday, 29 June 2019

ரீல் ஸ்டான்ட்

என் தந்தைக்கு மரவேலை என்றால் உயிர். இது அவருக்கு வெகு சிறிய வேலை. இங்கு பெரிதாக எதுவும் செய்யக் கிடைப்பதில்லை. வசித்தது தொடர்குடியிருப்பு ஒன்றில். சப்தமாக வேலை செய்ய முடியாதே! சின்னதாக ஏதாவது செய்வார். 

இப்படி நான்கைந்து செய்துவைத்திருந்தார். என்னிடம் இவ்விரண்டும் வந்து சேர்ந்தன. 

பொதி சுற்றும் போது அலங்கரிக்கும் நாடா ரீல்களை (ரீலுக்கு தமிழ்ச்சொல் என்ன! நூல் - கண்டு. இங்கு படத்தில் உள்ளவற்றை எப்படி அழைப்பது!)  மாட்டிவைக்கலாம்.
அல்லது....

தையல் வேலை செய்யும் போது பயஸ் பைண்டிங் ரீல்களை மாட்டிவைக்கலாம். உருளாமல், நாடாக்கள் சிக்காமல் வேலை செய்யலாம். 

Thursday, 27 June 2019

மாலை வேலை!

காதணிகள் - முடியிலோ அல்லது என் துப்பட்டாவிலோ மாட்டி, கழன்று காணாமல் போனதால் துணை இழந்த ஒற்றைக் காதான்கள் சில என் சேமிப்பில் உள்ளன. 

அவற்றுள் ஒன்று நெஸ்ப்ரஸோ கிண்ணம் ஒன்றின் நிறத்தில் இருக்கவே, மாலையாக்கலாம் என்னும் எண்ணம் வந்தது.  
ஒரே நிறத்தில் இரண்டு கிண்ணங்கள் கிடைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். (கிடைக்கும் வரை காத்திருந்தால் யோசனையை மறந்துபோவேன்.) சற்று அடர்த்தியான நிறத்தில் ஒன்று கிடைத்தது. பின்பக்கம் வைக்க அது போதும். பொருந்தி வரும் நிறத்தில் button ஒன்றைத் தேடிப் பிடித்தேன். கட்டுவதற்கு கயிறு ஒன்றும் தேவைப்பட்டது.
 குறடுகள், கத்தரிக்கோல், 'ஹாட் க்ளூ' - மேலதிகமாக இரண்டு தட்டைப் பலகைகளும் வேண்டியிருந்தன. கண்ணில் பட்டது சின்னவர் ஒரு கைவேலையின் பின் மீதியாகிப் போனதென்று கொடுத்திருந்த டொட்டாரா மரத்தின்  குறுக்குவெட்டுத் துண்டுகள்.
(எப்பொழுதும் கிண்ணங்களை ஒரு தொகுதியாகச் சேர்த்து, சுத்தம் செய்து காய வைத்து வைத்திருப்பேன். நேரமும் மிச்சம்; நீரும் மிச்சம்.) 
சுத்தமான கிண்ணம் ஒன்றை கட்டையில் கவிழ்த்து வைத்து மேலே இன்னொரு கட்டையை வைத்து நடுவில்  உள்ளங்கையை வைத்து அழுத்தினால்...
தட்டையாகி இப்படித் தெரியும்.
தோட்டின் கம்பியைச் சற்று நறுக்கி வைத்தேன். நாடாவைக் கழுத்து அளவிற்கு நறுக்கி எடுத்தேன்.
பின்பக்கம் வரவேண்டிய வட்டத்தட்டைக் குப்புறப் போட்டு, அதன் மேல் 'க்ளூ' வைத்து நாடா முனைகளை சேர்த்து வைத்து, மேலே சரியான நிறத்தட்டை வைத்து ஓட்டினேன். அதன் மேல் மீண்டும் க்ளூ வைத்து பித்தானை ஒட்டிக் கொண்டேன். 

கூரான குறட்டினால் நாடா இருந்த இடத்திற்கு நேர் கீழே இரண்டு தட்டுகளின் ஊடாகவும் சேர்த்து ஒரு துளை செய்தேன்.
துளையில் தோட்டை மாட்டி கம்பியை வளைத்ததும்... 

அழகான மாலை தயார். 

பொருத்தமான நிறத்தில் ஆடை இல்லாததால் இன்னும் எங்கும் அணியக் கிடைக்கவில்லை. விடுமுறையில் தையல் வேலையில் மும்முரமாக இறங்கியாக வேண்டும்.

Tuesday, 25 June 2019

மணநாள் வாழ்த்து!

நட்பு ஒருவருக்கு இன்று மணநாள். முதலில் அவருக்கு என் அன்பான வாழ்த்துக்கள். மகிழ்ச்சியுடன் வாழ்க பல்லாண்டு. ;-)
↔↔↔↔↔↔↔↔↔↔

அம்மாவின் சேகரிப்பில் அவருக்கு வந்த வெகு அழகான நத்தார் வாழ்த்துமடல் ஓன்று இருந்தது. அவற்றிலிருந்த இரண்டு பறவைகள் மணநாள் வாழ்த்து மடல் அமைக்கப் பொருத்தமாகத் தோன்றின. வெட்டி எடுத்தேன். மீதி அட்டையில் சில அலங்காரப் பந்துகள் தெரிந்தன. அவற்றைப் பூக்களாக வெட்டிக்கொண்டேன். சேலையிலிருந்து உதிர்ந்த கற்கள் தரையில் தென்படும் போது பொறுக்கி அருகில் உள்ள ஜன்னல்கட்டில் வைப்பதுண்டு. ஒரு ஜன்னலில் மூன்று கற்கள் இருந்தன. 3 D இதய வடிவ ஸ்டிக்கர்களில் மீதி வடிவங்களோடு இயைந்துபோகக் கூடிய நிறங்களில் இருந்த இரண்டைத் தெரிந்துகொண்டேன். 

அட்டையை மடித்துச் சீராக வெட்டி, உள்ளே வாழ்த்து எழுத வாகாக ஒரு கடதாசி ஒட்டியபின் ஓரங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி முடித்தேன். வடிவங்களைப் பரவலாக வைத்துப் பார்த்து, திருப்தியானதும் ஒட்ட ஆரம்பித்தேன். பறவைகளுக்கு முப்பரிமாணம் கொடுக்க வேண்டி, 'ஸ்டிக்கி டொட்ஸ்' வைத்து ஒட்டியிருக்கிறேன். கால்கள் பேனையால் வரைந்தவை. 
தோழிக்குக் கிடைத்திருக்கும்; பிடித்திருக்கும் என நினைக்கிறேன். ;-)