Friday 25 March 2016

களிமண் தலைகள்!

2003 - நாங்கள் இங்கு இடம் பெயர்ந்து நான்காவது ஆண்டு அது. சின்னவருக்குப் பதின்நான்கு வயது; பத்தாம் ஆண்டு கற்றுக் கொண்டு இருந்தார். சமூகக்கல்விச் செயற்திட்டத்திற்காக களிமண்ணில் செய்த, பால் அங்காடி ஒன்றுக்கான மட்பலகை.

பாடத் தலைப்பு தலைப்பு - ரோம நாகரீகம்
எழுத்து வடிவம் சாதாரண மக்கள் நடுவே புழக்கத்திலில்லாத காலத்தில், அங்காடிகளிl களிமண் பலகைகளில் வியாபாரம் தொடர்பான இலச்சினை எதையாவது அடையாளம் செய்து மாட்டி வைப்பார்களாம்.

மனதில் எண்ணம் உருவானதுமே செய்கையாக்குவதற்கான ஆராய்ச்சியை ஆரம்பித்திருந்தார் சின்னவர். தொடர்ந்து வந்த விடுமுறையின் போது Coromandel சென்றிருந்தோம். அங்கு Driving Creek Railway பார்க்க & பயணிக்கப் போயிருந்தோம். அங்கு pottery wheel முன்னால் உட்கார்ந்து வேலையிலிருந்த பெண்ணிடம் சின்னவர் சுவாசியமாகப் பேச்சுக் கொடுத்து விபரங்கள் சேகரித்துக்கொண்டார். "மைக்ரோவேவில் சுட்டு எடுக்க முடியுமா?'" என்றும் விசாரித்தார். :-)

வீடு வந்த பின்பு. தானே தொலைபேசிப் புத்தகத்தைப் புரட்டி (அப்போ மொத்தக் குடும்பத்திற்கும் சேர்த்து ஒரேயொரு பழைய டப்பா கம்ப்யூட்டர், யாரிடமோ வாங்கியது - இருந்தது. இணையத் தேடல்கள் இன்று போல் சுலபமாக இருக்கவில்லை.) அழைப்பு மேல் அழைப்பாக இங்கு இருந்த எல்லா மட்பாண்டக் கைவினைஞர்களுடனும் பேசிப் பார்த்தார். தொந்தரவு செய்கிறாரோ என்று தோன்றிற்று. ஆனால் யாரும் அப்படி நினைத்ததாகத் தெரியவில்லை. சின்னவர், படிப்புக்காகக் கேட்கிறார் என்றதும் எல்லோரும் நல்ல விதமாகத் தகவல்கள் கொடுத்தார்கள். வேலையை முடித்து எடுத்துக்கொண்டு போனால் தாங்களே தங்கள் சூளையில் சுட்டுக் கொடுப்பதாகவும் முன்வந்தார்கள். எல்லோருமே தொலைவிலிருந்தார்கள். Barry Potter தூரத்திலும் கிட்ட இருந்தவர். முதலில் அவரைப் போய்ப் பார்த்தோம்.

தட்டியதும் கதவைத் திறந்தவர் பின்னால் என் உயரத்திற்கு அவர் செல்ல நாய் நின்றது. :-) உள்ளே அழைத்துப் போய் சூளையைக் காட்டினார். அதுவே ஒரு பெரிய அறை. சுவரில் வெப்பமானி, வெப்பநிலையைக் கூட்டிக் குறைக்கும் அமைப்பு, சுற்றிலும் சுவரில் தட்டுகள், அவற்றில் சுடப்பட்டு ஆறுவதற்காக விட்டிருந்த பொருட்கள் என்று நிறைந்திருந்தது.

வெளியே வேலை முடித்து விற்பனைக்குத் தயாரானவை ஒரு புறமும் சூளைக்குப் போவதற்காகக் காத்திருந்தவை ஒரு புறமும் அவரது வேலை மேடை ஒரு புறமும் இருந்தது. சின்னவருக்கு மேலும் சில உபயோகமான தகவல்கள் கொடுத்தார் இவர்.

வீடு வந்து மீண்டும் தொலைபேசி அழைப்புகள்... மறுநாள் களிமண் விற்கும் கடையைக் கண்டுபிடித்து 20 கிலோ பை களிமண் வாங்கிவந்தோம். களிமண் - உலர்ந்ததாக இல்லாமல் பிசைந்து பிடிக்கச் சரியான பதத்திலிருந்தது. பலவர்ணங்களில் வைத்திருந்தார்கள். Paint தெரிவு செய்வது போல அட்டையில் பார்த்துப் பொருத்தமான நிறத்தைத் தெரிந்தெடுத்தார் சின்னவர்.

தொடர்ந்து வந்த சனிக்கிழமை கடை பரப்பி வேலையை ஆரம்பித்தார். :-) வேலை முடிந்த மூன்றாம் நாள் மீண்டும் Barry வீட்டிற்குக் கிளம்பிப் போனோம். மட்பலகை தடிமனாக இருப்பதாகவும், உள்ளே ஈரம் மீதம் இருந்தால் சுடப்படும் போது வெடித்துவிடும் என்றும் சொன்னார். அப்போதான் புரிந்தது மட்பாண்டத்தில் செய்யப்படும் உருவங்களெல்லாம் கோது போலிருப்பதன் காரணமும் அவற்றில் துளை இருப்பதற்கான காரணமும். காற்றோட்டம் நன்கு உலர வைக்கிறது. சுடப்படும் போதும் காற்று விரிவடைந்து பொருள் வெடித்துவிடாது.

ஏற்கனவே செய்திருந்ததை நீரில் அமிழ்த்தி ஊற விட மீண்டும் களி பயன்பாட்டுக்குத் தயாரானது.

ஆடு! முதலில் அட்டையில் பென்சிலால் வரைந்து வெட்டிக் கொண்டார். அதன்மேல் களியைப் பிடித்து, சிறிது காய்ந்தபின் அட்டையைக் கவனமாக உரித்து எடுத்தார். ஆட்டின் பின்பக்கம் கீறல்கள் வரைந்தார். முன் பக்கம் பளபளப்பாக்குவதற்காக விரலில் ஈரம் தொட்டு வழித்து விட்டார். ஆட்டின் பின்பக்கமிருந்து உரித்த அட்டையைப் பத்திரப்படுத்திக் கொண்டார்.

மெல்லிய அட்டை ஒன்றின் மேல் செவ்வகத் தட்டு வடிவில் பிசைந்த மண்ணைப் பிடித்தார். ஓரங்களில் விளிம்பு வைக்கவிருந்த இடங்களையும் ஆடு வரவிருந்த இடத்தையும் அடையாளம் செய்து (இதற்காகத்தான் உரித்த ஆட்டின் உருவத்தை வைத்திருந்திருக்கிறார்.) நிறையக் கீறல்கள் போட்டார். (அழுத்தமான மேற்பரப்புகள் இரண்டை ஒன்றன் மேல் ஒன்று வைத்து ஒட்டினால் சரியாக ஒட்டிக் கொள்ளாதாம்.) பிறகு நீளமாக உருட்டி வெட்டிய கரையையும் ஆட்டையும் ஈரம் தொட்டு ஒட்டியாயிற்று.

செய்ததை பழைய பிஸ்கட், கேக் இறக்கி வைக்கும் வலைத்தட்டு ஒன்றின் மேல், வைத்து காற்றோட்டமாக நிழலில் உலர விட்டார். வெயிலில் வைக்க வேண்டாம் என்று ஏற்கனவே எச்சரித்திருந்தார் ஹரி. அப்படிச் செய்தால் வெளியே உலர்ந்து உள்ளே ஈரம் இருக்க, சின்னச் சின்ன வெடிப்புகளோடு காயுமாம்.

ஓரிரு நாட்கள் கழித்து அட்டையை முழுவதுமாக உரித்து எடுத்ததும் மீண்டும் ஹரி வீட்டிற்குப் பயணம்.
ஹரி வீட்டில் மணியை அழுத்த இம்முறை இளைஞர் ஒருவர் கதவைத் திறந்தார். "Dad... It's your little potter friend," :-) ஹரி அனைத்தையும் வாங்கி வைத்துக்கொண்டார். இன்னும் சில நாட்கள் காயட்டும் என்றார். தன் அடுத்த சூளை தினத்தன்று அனைத்தையும் சுட்டு எடுத்தபின் தொலைபேசியில் அழைத்துச் சொல்வதாகச் சொன்னார். சொன்னபடி அழைத்தார். சந்தோஷமாக எடுத்து வந்தோம்.

இத்தனை வருடம் கழித்து இப்போ இடுகை போட நேர்ந்ததன் காரணம் இனி. சின்னவரது இந்தக் கைவேலையை சின்னச் சின்னதாக படம் பிடித்து வைத்திருந்தேன். சில காலம் முன்பாக அப்பா காஸட்டிலிருந்ததை சீடீக்கு மாற்றிக் கொடுத்திருந்தார். பார்த்த நாளிலிருந்து எழுத முயன்று... இன்றுதான் எழுதி முடித்திருக்கிறேன். :-)

சின்னவர் வேலை முடிந்தத கையோடு மீதி இருந்த களிமண்ணில் சின்னவர்களிருவரும் மனதில் வந்தபடி செய்த பொருட்கள் இவை. இவற்றையும் சேர்த்துத் தான் ஹரி சுட்டுக் கொடுத்தார். சின்னவரை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. தன்னிடம் பயிற்சியாளராகச் சேருமாறு இலவச அழைப்பு விடுத்தார். விருப்பம் இருந்தாலும் அப்போதைய எங்கள் பொருளாதார நிலை அத்தனை தொலைவு அடிக்கடி அழைத்துப் போய் திரும்ப அழைத்து வரும் விதமாக இருக்கவில்லை. ;( சின்னவரும் நிலையைப் புரிந்துகொண்டு அமைதியாகிவிட்டார். ;(
ஒரு கரண்டி வாயில் போட்டுக் கொள்ளுங்கள். :-)
ஓடாத ஓடம்!
வலது காலில்...
...பூக்கள்.
வெற்று டாய்லட் ரோலின் வெளியே பாதத்தைப் பிடித்தார். உலரும் முன் உரித்தாயிற்று. சுட்டதனால் உள்ளே நீர் விட்டு நிஜப் பூக்களையும் வைக்கலாம்.

இந்தக் கிண்ணத்தில் இப்போ சின்னச் சின்னதாகச் சில பொருட்கள் இருக்கின்றன.
கீழே... காலணியொன்று.
கட்டும் கயிறு உடைந்துவிட்டது. :-) அறுந்துவிட்டதாகச் சொல்ல முடியாது அல்லவா!
ஆமை - ஒரு எவர்சில்வர் கிண்ணத்தைக் கவிழ்த்துப் போட்டு அதன் மேல் க்ளிங் ராப்பால் மூடிவிட்டு, களிமண்ணைப் பூசி ஆமை வடிவைக் கொண்டுவந்தார்.

பெரியவர் இந்தக் கிண்ணத்தை (மட்டும்) பிடித்து வைத்திருந்தார். இப்போது அவர் வீட்டுச் சாவிகள் வைக்கும் இடம் இது.

எனக்கும் ஒரு பிடி மண் கொடுத்தார்கள். :-) அதைக் கொண்டு செய்தது
இந்தத் தலை. 'தலையிலென்ன களிமண்ணா?', என்று கேட்பது அறிந்திருப்பீர்கள். இவர் தலைக்கு களிமண் போதவில்லை. :-)

ஒரு மிட்டாய் எடுத்துக்கொள்கிறீர்களா? :-)
வெகு காலம் கழித்து நீளமாகத் தட்டியிருக்கிறேன். கணனி கொஞ்சம் இடிபாடாக இருக்கிறது. இரண்டும் சேர... எங்காவது எழுத்துப் பிழை இருக்கலாம். சுட்டிக் காட்டினால் திருத்தி விடுவேன்.

வாழ்த்தாமல் வாழ்த்துங்கள்!

நான் இணையம் வரத்தொடங்கிய முதல் வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் குறைந்தது இரண்டு பேராவது பெரிய வெள்ளிக்கு வாழ்த்துச் சொல்கிறார்கள். மின்னஞ்சல் வாழ்த்துக்களும் வந்திருக்கின்றன. சமையல் பற்றிய, "என்ன ஸ்பெஷல்?" என்று ஒரு கேள்வியையும் சமயத்தில் எதிர்நோக்குவேன்.

என்ன ஸ்பெஷல்!! உண்மையில்  பெரிய வெள்ளி துக்க தினம்; கிறீஸ்து இறந்த தினம். அதுதான் விசேடம்.

அதைத் தொடர்ந்து வருகிற ஞாயிறு - உயிர்த்த ஞாயிறு. இது உண்மையில் நத்தாரை விட முக்கியமான தினம். அன்று வாழ்த்தலாம்.

பெரிய வெள்ளி... சொல்வழி கேளாது போன ஆதாம் ஏவாளிடம், அவர்களுக்கு இன்னதுதான் தண்டனை என்பதைச் சொல்லிவிட்டு, மானிடர் செய்த பாவத்துக்குப் பிராயச்சித்தமாக தன் மகனை அனுப்புவதாக இறைவன் வாக்குக் கொடுத்தாராம். அதன்படி கிறீஸ்து மனிதனாகப் பிறந்து மரணித்த காரணத்தால் மட்டுமே பெரிய வெள்ளியை Good Friday என்கிறார்கள்.

இது மதப்பிரச்சாரம் எல்லாம் கிடையாது. சொல்லிவைத்தால், இனி வரும் காலங்களில் வாழ்த்தாமலிருப்பீர்கள் அல்லது சரியான தினத்தில் வாழ்த்துவீர்கள் எனும் நல்ல நோக்கம் மட்டுமே! :-)
இன்றைய நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமையட்டும்.
என் அன்பு வாழ்த்துக்கள்.


இந்தச் சிலுவைக்காக ஒரு பெட்டி செய்திருந்தேன். அதற்கான செய்முறை விளக்கம் இங்கே... http://www.arusuvai.com/tamil/node/29054

Friday 18 March 2016

பம்பரக் கயிறு

_()_ :-)
பல சமயம் அன்பளிப்பைப் பொதி செய்த பின்போ அல்லது கொடுத்த பிறகோதான் நினைவு வரும், 'ஒரு படம் கூட எடுத்து வைக்கவில்லையே!' என்பது. எப்போதோ இங்கு சேமிப்பில் போட்டு வைத்த படம் இது.

ஏஞ்சல் என்னும் என் குட்டித் தோழிக்கு நத்தார்ப் பரிசாக இந்தக் கிண்ணத்தைத் தயார் செய்திருந்தேன்.  'ஏஞ்சல்' என்றதும் பொதுவாக சம்மனசு / குட்டித் தேவதை ஒன்றுதான் நினைவுக்கு வரும். இங்கு உள்ளது ஏஞ்சல் மீன். பல நிறங்களில், பல வடிவங்களில் கிடைக்கும் தொட்டி மீன் இனம் இது. படம்... கொஞ்சம் ஓவியத்தனமாக இருக்கிறது. :-)

'இமாவின் உலகம்' சுற்றாமல் ஒரே நிலையில் பல காலம் நின்று விட்டது. சுழல வைக்கும் முயற்சியாக, இன்று பம்பரத்தில் கயிறு சுற்றியிருக்கிறேன். :-)