Saturday 29 June 2019

ரீல் ஸ்டான்ட்

என் தந்தைக்கு மரவேலை என்றால் உயிர். இது அவருக்கு வெகு சிறிய வேலை. இங்கு பெரிதாக எதுவும் செய்யக் கிடைப்பதில்லை. வசித்தது தொடர்குடியிருப்பு ஒன்றில். சப்தமாக வேலை செய்ய முடியாதே! சின்னதாக ஏதாவது செய்வார். 

இப்படி நான்கைந்து செய்துவைத்திருந்தார். என்னிடம் இவ்விரண்டும் வந்து சேர்ந்தன. 

பொதி சுற்றும் போது அலங்கரிக்கும் நாடா ரீல்களை (ரீலுக்கு தமிழ்ச்சொல் என்ன! நூல் - கண்டு. இங்கு படத்தில் உள்ளவற்றை எப்படி அழைப்பது!)  மாட்டிவைக்கலாம்.
அல்லது....

தையல் வேலை செய்யும் போது பயஸ் பைண்டிங் ரீல்களை மாட்டிவைக்கலாம். உருளாமல், நாடாக்கள் சிக்காமல் வேலை செய்யலாம். 

Thursday 27 June 2019

மாலை வேலை!

காதணிகள் - முடியிலோ அல்லது என் துப்பட்டாவிலோ மாட்டி, கழன்று காணாமல் போனதால் துணை இழந்த ஒற்றைக் காதான்கள் சில என் சேமிப்பில் உள்ளன. 

அவற்றுள் ஒன்று நெஸ்ப்ரஸோ கிண்ணம் ஒன்றின் நிறத்தில் இருக்கவே, மாலையாக்கலாம் என்னும் எண்ணம் வந்தது.  
ஒரே நிறத்தில் இரண்டு கிண்ணங்கள் கிடைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். (கிடைக்கும் வரை காத்திருந்தால் யோசனையை மறந்துபோவேன்.) சற்று அடர்த்தியான நிறத்தில் ஒன்று கிடைத்தது. பின்பக்கம் வைக்க அது போதும். பொருந்தி வரும் நிறத்தில் button ஒன்றைத் தேடிப் பிடித்தேன். கட்டுவதற்கு கயிறு ஒன்றும் தேவைப்பட்டது.
 குறடுகள், கத்தரிக்கோல், 'ஹாட் க்ளூ' - மேலதிகமாக இரண்டு தட்டைப் பலகைகளும் வேண்டியிருந்தன. கண்ணில் பட்டது சின்னவர் ஒரு கைவேலையின் பின் மீதியாகிப் போனதென்று கொடுத்திருந்த டொட்டாரா மரத்தின்  குறுக்குவெட்டுத் துண்டுகள்.
(எப்பொழுதும் கிண்ணங்களை ஒரு தொகுதியாகச் சேர்த்து, சுத்தம் செய்து காய வைத்து வைத்திருப்பேன். நேரமும் மிச்சம்; நீரும் மிச்சம்.) 
சுத்தமான கிண்ணம் ஒன்றை கட்டையில் கவிழ்த்து வைத்து மேலே இன்னொரு கட்டையை வைத்து நடுவில்  உள்ளங்கையை வைத்து அழுத்தினால்...
தட்டையாகி இப்படித் தெரியும்.
தோட்டின் கம்பியைச் சற்று நறுக்கி வைத்தேன். நாடாவைக் கழுத்து அளவிற்கு நறுக்கி எடுத்தேன்.
பின்பக்கம் வரவேண்டிய வட்டத்தட்டைக் குப்புறப் போட்டு, அதன் மேல் 'க்ளூ' வைத்து நாடா முனைகளை சேர்த்து வைத்து, மேலே சரியான நிறத்தட்டை வைத்து ஓட்டினேன். அதன் மேல் மீண்டும் க்ளூ வைத்து பித்தானை ஒட்டிக் கொண்டேன். 

கூரான குறட்டினால் நாடா இருந்த இடத்திற்கு நேர் கீழே இரண்டு தட்டுகளின் ஊடாகவும் சேர்த்து ஒரு துளை செய்தேன்.
துளையில் தோட்டை மாட்டி கம்பியை வளைத்ததும்... 

அழகான மாலை தயார். 

பொருத்தமான நிறத்தில் ஆடை இல்லாததால் இன்னும் எங்கும் அணியக் கிடைக்கவில்லை. விடுமுறையில் தையல் வேலையில் மும்முரமாக இறங்கியாக வேண்டும்.

Tuesday 25 June 2019

மணநாள் வாழ்த்து!

நட்பு ஒருவருக்கு இன்று மணநாள். முதலில் அவருக்கு என் அன்பான வாழ்த்துக்கள். மகிழ்ச்சியுடன் வாழ்க பல்லாண்டு. ;-)
↔↔↔↔↔↔↔↔↔↔

அம்மாவின் சேகரிப்பில் அவருக்கு வந்த வெகு அழகான நத்தார் வாழ்த்துமடல் ஓன்று இருந்தது. அவற்றிலிருந்த இரண்டு பறவைகள் மணநாள் வாழ்த்து மடல் அமைக்கப் பொருத்தமாகத் தோன்றின. வெட்டி எடுத்தேன். மீதி அட்டையில் சில அலங்காரப் பந்துகள் தெரிந்தன. அவற்றைப் பூக்களாக வெட்டிக்கொண்டேன். சேலையிலிருந்து உதிர்ந்த கற்கள் தரையில் தென்படும் போது பொறுக்கி அருகில் உள்ள ஜன்னல்கட்டில் வைப்பதுண்டு. ஒரு ஜன்னலில் மூன்று கற்கள் இருந்தன. 3 D இதய வடிவ ஸ்டிக்கர்களில் மீதி வடிவங்களோடு இயைந்துபோகக் கூடிய நிறங்களில் இருந்த இரண்டைத் தெரிந்துகொண்டேன். 

அட்டையை மடித்துச் சீராக வெட்டி, உள்ளே வாழ்த்து எழுத வாகாக ஒரு கடதாசி ஒட்டியபின் ஓரங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி முடித்தேன். வடிவங்களைப் பரவலாக வைத்துப் பார்த்து, திருப்தியானதும் ஒட்ட ஆரம்பித்தேன். பறவைகளுக்கு முப்பரிமாணம் கொடுக்க வேண்டி, 'ஸ்டிக்கி டொட்ஸ்' வைத்து ஒட்டியிருக்கிறேன். கால்கள் பேனையால் வரைந்தவை. 
தோழிக்குக் கிடைத்திருக்கும்; பிடித்திருக்கும் என நினைக்கிறேன். ;-)

பிறந்தநாள் வாழ்த்து

இந்த மாதம் பிறந்தநாளைக் கொண்டாடும் ஒரு நட்புக்காகச் செய்த வாழ்த்துமடல். நட்புக்கு என் மாங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பிரிந்துபோக ஆரம்பித்த விசிறியொன்றில்... வெட்டிய பின் பிரிந்துவிடாமல் இருப்பதற்காக தாராளமாகப் பசை பூசி, காகிதத்தை ஒட்டிக் காய விட்டேன்.
கூடை வடிவை வெட்டி...
மினுக்கத்துக்காக,'nail polish top coat' கொடுத்தேன்.
'3 D sticky dots' கொண்டு ஒட்டினேன்.

சிவப்பு அட்டை - ஒரு திருமண அழைப்பிலிருந்து கிடைத்தது.

பூக்கள் - சேலையொன்றிலிருந்த லேபிள் - நிறம் பிடித்திருந்தது. பஞ்ச் கொண்டு பூக்களை வெட்டிவிட்டு நடுவில் அழுத்தி குவிந்த வடிவம் கொடுத்தேன்.

இலைகள் பச்சை நிறக் கடதாசி + பஞ்ச் + கொஞ்சம் மடிப்பு. 
ஒரேயொரு கவலை, மடியாமல் உதிராமல் போய்க் கிடைக்கவேண்டும் என்பது. 

Sunday 23 June 2019

கை வேலை!

எப்படி யோசித்தாலும் ஒரு சொல்லுக்கு மேல் தலைப்பு எதுவும் தோன்றவில்லை. :-)

 ஒரு நாள்... க்றிஸ் ஏதோ வேலையாக இருந்தார். சீமெந்து குழைப்பதை மட்டும் கவனித்தேன். (இடையில் கொஞ்சம் எடுபிடி வேலையும் செய்தேன்.) வேலை முடியும் தறுவாயிலிருக்கையில்... நான் முயற்கூட்டைச் சுத்திகரிக்கும் வேலையிலிருந்தேன். கையிலிருந்து ரப்பர்க்கையுறையை நீக்கும் சமயம் க்றிஸ் வேலையை முடித்து மீதிக் கலவையுடன் வெளியே வந்தார். கொட்டிவிட மாட்டார் என்று தெரியும். ஏதாவது ஒரு தேவை கண்டுபிடிப்பார் அதற்கு. 
"என்ன செய்யப் போறீங்க அதை?" என்றேன்.
"ஏன்? வேணுமா?"
"ம், கனகாலம் முன்னுக்கு ஸ்கூல் ஜேனல்ல ஒரு கைவேலை பார்த்தன். க்ளவ்ல தண்ணி நிரப்பி ஃப்ரீசர்ல வைச்சு எடுக்க கை மாதிரி வந்திருந்துது. சீமெந்தை நிறப்பினாலும் அப்பிடி வரும்தானே! ட்ரை பண்ணிப் பார்க்க விருப்பம்." 
"க்ளவ்வை ரெடியாக்கினால் நிறப்பிவிடுறன்."
"உள்ளுக்கு கம்பி ஏதும் வைக்காட்டி பிலனா இருக்குமா?"
"இருக்கும், என்ன செய்யப் போறீங்க எண்டதைப் பொறுத்தது அது."
கையுறையை நான் பிடிக்க க்றிஸ் கொஞ்சம் கொஞ்சமாக சீமெந்தை உள்ளே நிரப்பினார். சமையலறையிலிருந்து ஒரு 'க்ளிப்' எடுத்து வந்து மாட்டிவிட்டு அப்படியும் இப்படும் விரல்களை மடித்துப் பார்த்தேன். மேசையில் வைத்தால் கை போலவே இல்லை. இந்த வருடம் தானாக விளைந்த பூசணிக்காய்கள் எட்டு மேசையில் இருந்தன. சிறியதாக இருந்த காயின் பின்புறம் பூவின் அடையாளம் இன்னும் குண்டாக இருந்தது. கையை அதன் மேல் போட, சற்று வளைந்தாற்போல் அமர்ந்துகொண்டது.

ஓரு வாரம் வரை அப்படியே விட்டுவிட்டேன். 
நன்கு காய்ந்த பிறகு ரப்பரை உரித்து எடுக்க...
இப்படித் தெரிந்தது. வெளியே... சீமெந்துத் தூசினைத் தொடுகையில் உணர்ந்தேன். கழுவும் போது... சீமெந்தை பலப்படுத்த நீரில் ஊற வைக்க வேண்டும் என்பது நினைவுக்கு வந்தது. ஒரு வாரம் ஐஸ்க்றீம் பெட்டி ஒன்றுள் நீரில் ஊறிற்று கை. பிறகு மேலும் ஒரு வாரம் உலரவிட்டேன்.

அதன் பின்...
 கையின் மேல் கூட்டில் பறவை ஒன்று.
 கையில் மேல் ஒரு கை; அதன் மேல் சின்னத் தொட்டிச்செடி.

இனி இஷ்டம் போல் எதை வேண்டுமானாலும் வைத்து அலங்கரிக்கலாம்.

Friday 21 June 2019

பசைபூசி

அம்மா வீட்டுக் குளிரூட்டியில் குறிப்புகள் மாட்டி வைப்பதற்காக ஒட்டப்பட்டிருந்த 'க்ளிப்' உடைந்துவிட்டது. 

காந்தம் உள்ள பகுதி மீண்டும் எம் வீட்டுக் குளிரூட்டியில் ஒட்டப்பட்டுவிட்டது. சிறிய துண்டுகளை வீசிவிட்டேன்.

இரண்டாவது பிரதான பாகத்திற்கு அருமையான ஒரு உபயோகம் அமைந்தது. பெரிய பரப்புகளுக்கு பசை பூச நேரும் சமயம், எங்கிருந்தாவது ஒரு அட்டைத்துண்டை எடுத்துப் பயன்படுத்துவேன். இனி இந்தத் துண்டை நிரந்தரமாக அந்தத் தொழிலுக்காக வைத்துக் கொள்ளலாம். கைபிடி இருப்பதால் கவனியாமல் பசையில் விரல் படும் விபத்து நேராது. பசையும் சீராகப் பூசப்படும்.

Wednesday 19 June 2019

வாடிப்போன சீடீ


இங்கு வந்த ஆரம்ப நாட்களில்... கைவினைகள் செய்வதற்கான பொருட்கள் எதுவுமே கையில் இல்லை. குட்டிக் கத்தரிக்கோல் ஒன்று சிறு தையல் வேலைகளுக்காக வைத்திருந்தேன். அட்டைப் பெட்டிகளையும் ப்ளாத்திக்குப் பால்போத்தல்களையும் வைத்து விளையாடிக்கொண்டிருப்பேன். 

அவை என் கைவினைப் பசிக்குத் தீனி போடப் போதவில்லை. வீட்டில் முதல் முதலாக வீணாகிப் போன சீடீ இது. சின்னவர்களிடம் 'க்ளூ' இருந்தது. கரை நீக்கிய வெள்ளைப் பாண் துண்டு ஒன்றைப் க்ளூ சேர்த்துப் பிசைந்து ரோஜாக்களையும் சில மொட்டுகளையும் இலைகளையும் உருவாக்கினேன். பிரகு சின்னவர்களது நீர்வர்ணங்களை இரவல் வாங்கிப் பூசிவிட்டேன். ஒரு வாரம் கழித்து, நகப்பூச்சின் மேல் இறுதியாகப் பூசும் மேற்பூச்சைப் பூசிக் காயவிட்டேன்.

சீடீயில் ஒட்டியபின் எங்கே எப்படி வைப்பதென்றே தெரியவில்லை.  வாடகை வீட்டில் ஆணி அடிக்க முடியாது. அப்போது இந்த நிறுத்தி இருக்கவில்லை. அங்கும் இங்குமாக இடம் மாற்றி வைத்து அழகுபார்த்தேன்.

வருடங்கள் கடந்தன. நான்காவது வீடு இது.
இலைகளும் காம்புகளும் உதிர்ந்தன; மொட்டுகள் காணாமற்போயின. 

படிந்த தூசைத் துடைத்தால் மீதியும் தொலையும் நிலையில் - எவர் பார்வையிலும் படாத ஓர் இடத்தில் சேமிப்பில் போட்டுவைத்தேன்.

இன்று... மீண்டும் ரசித்து ருசித்துவிட்டு... வீசினேன் குப்பைத்தொட்டியில். 

இமாவின் உலகில் உள்ள 'குப்பைத்தொட்டி' என்றும் நிரம்பாது; வெறுமையும் ஆகாது. பதிவிட்டால் எப்போது வேண்டுமானாலும் நான் இரைமீட்டுப் பார்க்கலாம்.

Monday 17 June 2019

காப்பிக் கிண்ண அணிகலன்!

சில வருடங்கள் முன்பு, என் சிறு வயதுத் தோழி ஒருவர், காப்பிக் கிண்ணங்களில் (Espresso capsules) அழகழகாக அலங்கார வேலை செய்து பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார்.

என் சின்ன மகன் வீட்டில் தான் முதல்முதலில் கிண்ணங்களை நேரடியாகக் கண்டேன். சேகரித்துத் தருமாறு கேட்டிருந்தேன்; கிடைத்தது.

கையில் கிடைத்தவற்றையெல்லாம் ஒட்டி அலங்கரித்தேன். பெரிதாய்த் திருப்தி கிடைக்கவில்லை. அவற்றைப் படம் எடுத்து வைக்கவில்லை. 

தொடர்ந்து வந்த நாட்களில் கூகுளில் தேட அருமையான கைவினைகள் கண்ணில் பட்டன. ஆரம்பத்தில் கிடைத்தவை எவையுமே ஆங்கிலத்தில் இருக்கவில்லை. வெறுமனே, 'படம் பார்; பாடம் படி,' என்கிற விதத்தில் புரிந்துகொண்டேன்.

என்னிடம் என் கைக்குப் பெரிதான பண்டோரா பிரேஸ்லட் ஒன்று இருந்தது. அவற்றுக்கான மணிகளை வாங்கலாம் என்று பார்த்தால், விலை வாங்க இடம் கொடுக்கவில்லை. இப்போது தான் யோசனை கிடைத்துவிட்டதே! நானே மணிகள் செய்து எடுத்தேன்.

செய்முறை பிறிதொரு சமயம் வெளியாகும்.

Saturday 15 June 2019

சிம்பா சிப்மங்க் ஆன கதை


பேத்திக்கு சிம்பாவைப் பிடிக்கும். திடஉணவு உண்ண ஆரம்பித்து இருக்கிறார். ஒரு கிண்ணம் தயார் செய்ய எண்ணினேன். 

கிண்ணத்தின் அளவுகளை ஒரு கடதாசியில் அளவெடுத்துக் கொண்டேன்.

கூகுளில் கண்ணில் பட்ட சிம்பாக்கள் எவரையும் பிடிக்கவில்லை. சிரித்த முகமாக வரவேண்டும் என்று எண்ணம் இருந்தது. பல நிமிடங்கள் செலவழித்து ஒருவரைக் கண்டேன் - முகம் மட்டும் இருந்தது. அதை அடிப்படையாக வைத்து, கூடவே முன்னங் கால்களோடு வால் மட்டும் தெரிய வரைந்து நிறம் தீட்டிப் பார்த்தேன். 

 திருத்தியாக வந்ததும் அதை டிஷ்யூ பேப்பருக்கு மாற்றினேன். அளவாகக் கார்பன் பேப்பர் கத்தரித்து டேப் செய்தென்.
 கிண்ணத்தைஸ் சுத்தம் செய்து, சிம்பாவைப் பிரதி எடுத்தேன். க்றிஸ் வேலை செய்து வீசுவதற்காக வைத்திருந்தவற்றிலிருந்து சில துண்டு சலவைக்கற் துண்டுகள் இருந்தன. அவற்றில் ஒன்றில் வரைந்து நிறம் தீட்டிப் பார்த்து (முடிக்கவில்லை) திருப்தியான பின்...
கிண்ணத்தையும் நிறம் தீட்டி முடித்தேன்.
 மறுபக்கம்... இந்தப் பூ.

பேக் செய்து இன்று கொண்டுபோய்க் கொடுத்தாயிற்று. குட்டிப் பெண் உறக்கம் கலைத்து வந்ததும் அவர் முன்னிலையில் அம்மா பொதியைப் பிரித்தார். "Oh! Nice chipmunk"என்றார். ;) "சிரிக்கும் சிம்பாவை வரைய முயற்சித்தேன்," என்று விளக்க ஆரம்பித்தேன். மகன் குறுக்கிட்டு, நாவுக்கு நிறம் தீட்ட மறந்ததைக் சுட்டிக் காட்டினார். வெண்மையாக இருந்த நாக்கு பெரிய பற்களாகத் தோற்றமளிக்க, மருமகளுக்கு சிம்பா சிப்மங்க் ஆகத் தெரிந்திருக்கிறார். ;)


Thursday 6 June 2019

பனங்களி பைக்லட்

ஊரில்.... மாவைக் கரைத்து மெல்லிசாக தோசையாக வார்த்து, அதற்கு வறுத்த பயறு, தேங்காய்ப்பூ, சீனி சேர்த்துக் கலந்த கலவையை நடுவில் வைத்து நீளமாகச் சுருட்டி... 'பான்கேக்' செய்வோம்.

இங்கு வந்தபின்... பான்கேக் / பைக்லட் - இனிமையான சின்ன வட்டமாக, தடிப்பாக மெத்தென்று வார்த்து, சூடாக இருக்கும் போதே மேலே வெண்ணெய் வைத்து, உருகியதும் உருகாததுமான நிலையில் சாப்பிடுவேன்.

ஊரில்.... பனங்காயிலிருந்து களி எடுத்து பனங்காய்ப் பலகாரம் சுட்டுச் சுடச் சுட வாசனையை நுகர்ந்தபடி சாப்பிடுவோம்.

இங்கு வந்தபின்... போத்தலில் அடைக்கப்பட்டு விற்கப்படும் பனங்களியை வாங்கி பனங்காய்ப் பலகாரம் சுட்டுச் சாப்பிட்டிருக்கிறேன்.

மேலே படத்திலுள்ளது இரண்டுக்கும் இடையில் ஒரு கலவை. ;-) போத்தல் பனங்களியில் பனங்காய்ப் பலகாரம் சுட்டுக்கொண்டிருக்கும் போது, "பான்கேக்காக வார்த்தால் என்ன!" என்று தோன்றியது. வார்த்தேன். சுவை அபாரம்.