1. உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக்
கொண்டாட விரும்புகிறீர்கள்?
இருப்பேன்
என்று கொண்டு கேட்கப்பட்ட கேள்வி இது. கட்டாயம் கொண்டாட வேண்டும். மகாராணியிடமிருந்தும் வாழ்த்து வருமே! ;-) சந்தோஷமாக என் குழந்தைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள், வலையுலகிலும் இதே போல ஒரு
குடும்பம் பெருகி இருக்குமே.... எல்லோருடனும் என் மகிழ்ச்சியைப்
பகிர்ந்துகொள்வேன். :-)
இமா...
குதூகலமான, ரசனை நிறைந்த, ஆரோக்கியமான மனதுக்குச் சொந்தக்காரி. யார்
மேலாவது (நியாமாக) கோபம் வந்தாலும் கர்ர்...ச்சித்துவிட்டு... ;) நாலு
நாளில் அதை 100% மறந்து விட்டு அன்பு பாராட்ட முடியும் பேர்வழி. தன்
ஆரோக்கியம் பற்றிய புரிதல் போதுமான அளவு இருக்கிறது. இப்போது இமா இருக்கும்
நிலையை வைத்துப் பார்க்க...
நிச்சயம் 100 வயதில் ஆரோக்கியமான மனநிலையில் இன்னும் அழகான குழந்தையாக
இருப்பேன் என்று நம்பிக்கை இருக்கிறது. ;) அப்படியில்லாமல் சுயநினைவில்லாது
இருப்பேனானால்... நடப்பது நடக்கட்டும். நன்றாக இருந்தால்... நிச்சயம் அப்போது என் வசதிக்கு
ஏற்ப, என் நட்பு வட்டத்திற்கேற்ப... கொண்டாடுவேன். என் கையாலேயே கேக் செய்வேன். ஊட்டிவிட செபாதான் இருக்க மாட்டாங்க.
அன்றைய நாள் நிச்சயம் இன்னொரு
சாதாரண நாளாக இராது. குடும்பம் & நெருங்கிய நட்புகளோடு
செலவளிக்கும் ரசனை மிக்க அவர்களாலும் மறக்க முடியாத நாளாக இருக்கும்.
என் அகராதியில் 'கொண்டாடுதல்' - ஆடம்பரச் செலவு செய்து கொண்டாடுவது அல்ல. என் வாழ்க்கையைக் கொண்டாடுவது, என் உறவுகளை, நட்புவட்டத்தைக் கொண்டாடுவது, அ+து... அங்கீகரித்தேன், மகிழ்ச்சியாக அனுபவித்தேன் என வெளிப்படுத்துவது.
'பிறந்தநாள் இன்னொரு நாள் மட்டும்தான்.' / 'இதில் கொண்டாடுவதற்கு எதுவும்
இல்லை.' / 'வீண்!' / 'வாழ்க்கையில் ஏதாவது சாதித்தவர்கள் தான் பிறந்தநாள்
கொண்டாடலாம்.' இப்படிப் பலர் வாயிலிருந்து பல கருத்துகள் கேட்டிருக்கிறேன்.
என்னைப் பொறுத்த வரை... ஒவ்வொரு பிறந்தநாளும் விசேடம்தான். நான்...
இறப்பைச் சுவைத்துப் பார்த்தவள். மனித உயிரின் அற்புதத்தை, பெறுமதியை
முழுமையாக உணர்ந்து வைத்திருக்கிறேன். என் வாழ்க்கையை இனிமையாக்கிய, முழுமையாக்கிய ஒவ்வொருவருக்கும் அந்தச் சமயம் சின்னதாகவாவது ஏதாவது செய்ய வேண்டும். அப்போது உயிருடன் இருப்பவர்கள் விலாசங்களைத் தேடிச் சேகரிப்பேன். குறைந்தது... பிரத்தியேகமாக ஆளொக்கொரு Thank you Card - அவரவர் குணாதிசயத்திற்குப் பொருத்தமாக நானே செய்து என் கைப்பட நன்றிச் செய்தி பதிவிட்டு அன்போடு அனுப்பிவைப்பேன். இது முன்பே தயாராக இருக்கும். பிறந்தநாளுக்கு பத்து நாட்கள் முன்பாகத் தபாலில் சேர்த்தால் வெளிநாட்டு நட்புகளுக்கு சரியான சமயத்தில் கிடைக்காதா! அவ்வ்!! இப்போதே இங்கு தாபால் நிலையங்களுக்கெல்லாம் மூடுவிழா நடக்கிறது. ஹ்ம்! குரியர் இருக்கும் எப்படியும். நம்பிக்கைதான் வாழ்க்கை. ;)
2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
இன்னும் அதிகமாக 'என்னை'. ;)
3. கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
ம்... இது இமாவிடம் கேட்கும் கேள்வியா இளமதி! 'கடைசியாக உர்ரென்று இருந்தது
எப்போது? எதற்காக?' என்று கேட்டால் கூட "நினைப்பில்லை," என்பேன். பாரமான
எதையும் மனதில் தூக்கிக் கொண்டு உலவுவது கிடையாது. சிரிப்பது தினம்
பலமுறை. கடைசிவரை அது என் கூட வரும்.
4. 24 மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
செய்வது என்னவா? என்ன செய்வேனா?
ம்... இது... நியூஸிலாந்து. கோடையென்றால்... இங்கு
சூரியபகவான் அதிகாலை உதித்து ஒன்பது ஒன்பதரை வரை கோலோச்சுவார். பிரச்சினையே
இல்லை.
பனிக்காலமானால்... ஒன்றன் மேல் ஒன்றாக நான்கைந்து துணி, கையுறை
காலுறையெல்லாம் மாட்டிக்கொண்டு எல்லா நாளும் போல பகற்பொழுது வேலைகள் ஆகும்.
சமையல்... இதற்காகத்தானே வாயு அடுப்பு வைத்திருக்கிறேன். இணையம்... ஒரு
பொழுதுபோக்கு. வேறு பொழுது போக்குகள் நிறைய இருக்கின்றன எனக்கு. பொழுது போதவில்லை என்று
பின்போட்ட வேலைகளும் இருக்கும். அதிலொன்றை முடிப்பேன்.
குளியல்... 25 ஆவது மணி
ஆனதும் வெந்நீர் கிடைக்கும்போது குளிக்கலாம்.
இரவு!! மெழுகுவர்த்தி எதற்கு
இருக்கிறது! ஒரு ரொமான்டிக் 'காண்டல் லைட் டின்னர்'. போன் / அழைப்பு மணி
அடிக்காத, கணனி / தொலைக்காட்சி வழியாக எட்டிப் பார்க்கும் கோபிநாத்கள்
சூப்பர் சிங்கர்கள் யாருமில்லாத அமைதியான தனியான இரவு... நான்... க்றிஸ்... ட்ரிக்ஸி... ஆவலுடன்
எதிபார்க்கிறேன். :-)
5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?
அவர்களிருவரையும் நல்ல மனிதர்களாக வளர்த்திருக்கிறேன் என்கிற பெருமை எனக்கு அதிகம் இருக்கிறது. இதற்குமேல் சொல்வதற்கு அறிவுரைகள் எதுவும் இல்லை. தேவையும் இல்லை. வாழ்த்து... அதுதான் ஒவ்வொரு நிமிடமும் என் மனதில் ஓடுகிறதே, தனியாக வாழ்த்த வேண்டாம். "I am proud of you!" என்று பூரிப்போடு சொல்லலாம். ஆனால் என்னிரு
குழந்தைகளுக்கும் இதெல்லாம்தான் தெரியுமே. எதைச் சொன்னாலும் செயற்கையாகத்தான் தெரியும்.
ஒரு முத்ததுடன் "Love you lots Mahan!"
6. உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்தப் பிரச்சனையைத் தீர்க்க விரும்புகிறீர்கள்?
அனைத்துப் பிரிவினைகளையும் இல்லாமற் செய்ய விரும்புகிறேன்.
7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
முதலில்... என் புத்தியிடம்! அதற்கு மட்டும்தான் என்னை முழுமையாகத் தெரியும். அது சொல்லும் எதற்கு யாரை அறிவுரைக்கு அணுகவேண்டும் என்பதை.
8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால்
என்ன செய்வீர்கள்?
அனுபவம் இருக்கிறது. அப்போது இருந்த இமா சின்னப்பெண். அமைதியாக மனதுக்குள் புழுங்கினேன்தான். ஆனால் அதை மனதோடு காவித் திரியவில்லை. அவர்களுக்கு ஏதோ ஒரு மன ஆறுதல் வேண்டி அப்படிச் செய்திருந்தார்கள். பரிதாபம்தான் வருகிறது இன்று நினைக்க.
இனிமேல்... என்னை, என் குடும்பத்தை எந்த விதத்தில் பாதிக்கும் என்பதைப் பொறுத்துத்தான் கவனிக்காது விடுவதா அல்லது ஏதாவது செய்யவேண்டுமா (அல்லது என்ன செய்வேன்) என்பதைத் தீர்மானிப்பேன்.
9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
என் 'நண்பர்கள்' அனைவருமே
யதார்த்தவாதிகள். சொல்வதற்கு குறிப்பாக எதுவும் இராது. என்னால் அவர்களுக்குப் புதிதாக ஏதாவது உதவி தேவைப்படுமானால் புரிந்துகொண்டு அவர்களுக்குத் தொல்லையில்லாத விதத்தில் உதவ முயற்சி செய்வேன்.
10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
;)) இது எனக்கு சர்வசாதாரணம்.
முன்பெல்லாம்
என் விடுமுறைகள் சின்னவர்களுக்கும் விடுமுறைகளாக அமைந்துவிடும். அவர்கள்
பல்கலைக்கழகக் கல்வியில் கால் பதித்த பின்புதான் விடுமுறைகளில் தனியாக
இருந்திருக்கிறேன். வீட்டு வேலை இருக்கும் விதம் விதமாக. பித்தளை மினுக்க,
மூலை முடுக்குகள் தூசு நீக்க, முத்திரைகள் நாணயங்கள் பிரிக்க, வலையுலக
நட்புகளோடு தொடர்பு... அதிகம் இந்த நாட்களிற்தான். ட்ரிக்ஸியோடு அதிக
நேரம் செலவளிப்பேன். தோட்டத்தில் உலவுவேன்.
நட்பாயினும் உறவாயினும்
ஜெர்மனியின் செந்தேன் மலர்களோடு பேச, உகந்த நாட்கள் இவை. :-) கொஞ்சம்
வலைப்பூக்களில் இடுகை, பின்னூட்டம், கொஞ்சம் அதிகமாக அறுசுவை. கைவினை
செய்வேன். குளியல் தொட்டியில் வெந்நீர் நிரப்பி ரசித்து ஊ..றிக் குளிப்பேன். நக
அலங்காரம். புதிதாக ஒரு கைவினை. இமை மூடி ரசித்து என் mouth organ இல் ஒரு ராகம். பூனையைக் கண்டால் நாய் போல் குரைத்துக் காட்டுவேன். பறவைக் குரல்களை பயிற்சி செய்து அவர்களைக் குழப்புவேன். ;) கிண்ணம் நிறைய மணத்தக்காளி பறித்துச் சுவைத்து... நாவைக் கண்ணாடியில் பார்ப்பேன். ;))
எதிர்பாராமல் அந்நியர்கள் யாராவது கதவைத் தட்டினால்... (இங்கு அறிமுகமானவர்கள் முன்பே பேசி வைக்காமல் வருவது கிடையாது.) படுக்கை அறை ஜன்னலைத் திறந்து, "எனக்கு உடம்பு சரியில்லை. அதனால்தான் வேலைக்கும் போகாமல் வீட்டில் இருக்கிறேன். (பொய்தான், ஆபத்துக்குப் பாவம் இல்லையல்லவா!) குறை நினைக்க வேண்டாம்." என்று மன்னிப்புக் கேட்டுக்கொண்டு ஜன்னல் வழியாகவே பேசி அனுப்புவேன். தனியாகத் தெருவில் நடக்கப் பிடிக்கும். கிளம்பிவிடுவேன்.