Thursday 26 March 2020

Computer Birthday Card

கூட வேலை செய்யும் குட்டித் தோழி ஒருவருக்கு இன்று இருபத்தைந்தாவது பிறந்தநாள். இவர் உதவி இல்லாவிட்டால் இன்று திடீர் இணைய வழிக் கல்வி பற்றி தலை வால் புரியாமல் திண்டாடியிருப்பேன். 

இந்த வாழ்த்திதழின் நடுவே உள்ள வட்டம், எங்கள் பழைய கம்ப்யூட்டருக்கான 'டிஸ்க் க்ளீனர்'. மொத்தமாக மூன்று தட்டுகள் வைத்திருந்தேன். ஒன்று வாழ்த்திதழில்; மீதி இரண்டையும்... :-)

என் பேரக்குழந்தைகளுக்குக் காட்டவென்று சேமித்து வைத்திருக்கிறேன். :-)
  அவை வந்த உறை இது.
பழைய கம்ப்யூட்டர் பேப்பர் ஒன்றை....
....உள்ளே ஒட்டி அளவாக வெட்டினேன். 
வட்டத்தை ஒட்டிக் காய விட்டால்... பசை பூசிய இடம் தனியாகத் தெரிந்தது. அதை மறைக்க கொஞ்சம் தாராளமாகவே வேலைப்பாடுகள் தேவைப்பட்டன. :-) 

காம்புகள் - கொடி கட்டும் நைலான் கயிறு. அவற்றைப் பிரித்து சிறிய கொப்புகளையும் ஆக்கினேன்.
பெரிய ரோஜாக்கள் - முன்பு ஒரு சின்னவர் கொடுத்த 'வாலன்டைன்ஸ்டே' அட்டையிலிருந்தது
சிறிய ரோஜாக்கள் - curling ribbon
குட்டிப் பூக்கள் - ஃபெல்ட் கடதாசியை 'பஞ்ச்' கொண்டு வெட்டி எடுத்தேன். நடுவே நகப்பூச்சினால் சிறிய புள்ளிகள் வைத்திருந்தேன். அவற்றில் பெரும்பான்மை உறிஞ்சப்பட்டுவிட மீதி மட்டும் இருந்தது. அதுவும் ஒரு வித அழகாக இருந்தது.
வண்ணத்துப் பூச்சி - அம்மாவின் சேகரிப்பில் கிடைத்தது. பக்கத்து வீட்டுச் சின்னப் பெண்களின் உடைந்த க்ளிப் ஒன்றிலிருந்து கிடைத்திருக்கலாம்.
Happy Birthday - confetti
பெயர் - எழுத்து மணிகள். L கிடைக்கவில்லை. சின்ன l எழுத்தை ஒட்டிவிட்டு மீதியை வரைந்துவிட்டேன்.
அதன் கீழ் உள்ள 'bow' - என் பழைய ஒற்றைத் தோடு. தண்டுப் பகுதியைக் குறட்டால் நறுக்கி எடுத்தேன்.
மீதி... குட்டிக்குட்டி சிவப்பு மணிகள் & சிவப்பு மகரந்தங்கள்.

இது தோழியின் கையில் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம். கடந்த ஞாயிறு இரவே இந்த வாரம் பாடசாலை நடக்குமா என்பது கேள்விக்குறியாகி இருந்தது, திங்கள் நான் பாடசாலையை எட்டிப் பார்த்ததற்கு இந்த வாழ்த்திதழைச் சேர்ப்பிக்கும் எண்ணமும் ஒரு காரணம். கிளம்பும் முன் என் செய்தியைப் பதிவு செய்துவிட்டேன். எங்கள் பகுதியைச் சேர்ந்த அனைவருக்கும், வாழ்த்திதழில் அவர்கள் வாழ்த்தினைப் பதிவு செய்யுமாறு கூறி மின்னஞ்சலில் தகவல் அனுப்பினேன். மறுநாள் ஒரு சிலர் மட்டும் அவசியம் கருதி பாடசாலைக்குச் சென்றிருந்தனர். அதன் பின் அனைவரும் வீட்டிலிருக்கிறோம். எம் பகுதித் தலைவருக்கு நேரம் கிடைத்து தபாலில் சேர்க்கத் தோன்றி நேரமும் கிடைத்திருந்தால் இன்று தோழி கையில் இந்த வாழ்த்திதழ் கிடைத்திருக்கும். அல்லாவிட்டால் என்று கொரோனா பயம் நீங்கி பாடசாலை திறக்கிறதோ அன்று ஒரு குட்டிப் பார்ட்டி வைத்து கையிலேயே கொடுப்போம். :-)

Tuesday 24 March 2020

இமாவிடமிருந்து...

அன்பு இமாவின் உலகத்தோரே!

 நான் இங்கு நலம். எல்லோரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

அப்பா! பார்த்துப் பேசிச் சில வாரங்கள் ஆகுகின்றது. தொலைபேசியிலும் அவரைப் பிடிக்க முடிவதில்லை. சந்தோஷமாக, நலமாக இருக்கிறார் என்பது மட்டும் தெரியும். இன்னும் குறைந்தது ஒரு மாதத்திற்கு அவசியம் ஏற்பட்டால் தவிர சந்திக்க முடியாது.

தினமும் ஒரு தடவை - 1 மணி நேரம் நடப்பது வழக்கம். இன்று நடக்கக் கிளம்பும் போது மனது நினைவூட்டியது, பாடசாலையிலானால் தினம் எத்தனையோ தடவை மாடி ஏறி இறங்க நேரும்; ஒரு கட்டிடத்துக்கும் இன்னொருக்கும் எத்தனையோ தடவை நடந்துவிடுவேன். இப்போது அது இல்லை எனும் போது... ஒரு மணி நேர நடை போதாது. நாளை முதல் தினமும் இரு முறை நடப்பதாக எண்ணியிருக்கிறோம். பெரும்பாலும் இருவரும் தனித்தனியாக நடப்போம். என் கால்கள் சிறியவை, க்றிஸ் நடைக்கு ஈடு கொடுத்து நடக்க இயலாது. ஒரு நடை தனித்தும் இரண்டாவதைச் சேர்ந்தும் நடக்கலாம் என்று இருக்கிறோம். மெதுவே குளிர் தலைகாட்ட ஆரம்பிக்கிறது. இருந்தாலும் நடந்தே ஆக வேண்டும்.

செய்திகள் பார்ப்பதற்கு முன்பை விட அதிக நேரம் செலவழிக்கிறோம். அதில் கொஞ்ச நேரமாவது கொறிப்பதும் நடக்கிறது. :-) நிறுத்த வேண்டும்; முடியாவிட்டால் குறைக்கவாவது வேண்டும். உடற்பயிற்சி இரண்டு நாட்கள் தடைப்பட்டுவிட்டது; தொடர வேண்டும்.

நாளைமறுநாள் மீண்டும் வேலை ஆரம்பம். பாடசாலை வேளை இணையத்தில் இருக்க வேண்டும். என் சின்னவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும்; சந்தேகங்களைத் தீர்த்து உதவ வேண்டும். வேறு ஒரு வேலையும் கொடுக்கப்பட்டிருக்கிறது எனக்கு. இன்னொரு வகுப்பிற்குப் பாடம் தயார் செய்து கொடுக்க வேண்டும்.

இதற்கு மேல்... கொஞ்சம் சுத்தம் செய்தல், கொஞ்சம் கைவினை, கொஞ்சம் இணைய உலா. இவை மனதில் இருக்கும் எண்ணங்கள். இன்னும் இரண்டு வேலைகள் நினைத்து வைத்திருக்கிறேன். சொல்லாமற் செய்வோர் பெரியர். :-) சொல்ல மாட்டேன் இப்போது. :-)

சனிக்கிழமை அன்று அயல்வீட்டிலிருக்கும் சின்னவர் வழியாக ஒரு தட்டில் உணவும் சிறிய குறிப்பும் அனுப்பியிருந்தார் அவர் தாயார். வேலிக்கு மேல் எட்டிப் பார்த்து, "புதிய தொலைபேசி இலக்கம் அனுப்பியிருக்கிறேன். ஏதாவது உதவி தேவையானால் தயங்காமல் கேளுங்கள்," என்றார். அடுத்து இருக்கும் மற்றவர்களுக்கு முன்பே நான் செய்தி அனுப்பியிருந்தேன். நேற்றுக் காலை முதல் 70 வயதானோரை வீட்டில் இருக்கச் சொல்லி அறிவுறுத்தியிருந்தார்கள். என்னையும் என் ஆஸ்த்துமாவின் தீவிரம் கருதி பாடசாலையிலிருந்து வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். என்ன உதவி வேண்டுமானாலும் கேட்க வேண்டும் என்பதாக எல்லோருமே சொல்கிறார்கள்.

முடிந்த வரை ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வோம். எம் நலனையும் கவனத்திற் கொள்வோம்.

எல்லோரும் நலமே இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அன்புடன்
இமா

புதியதும் பழையதும்

வெகு காலமாக மனதில் இருந்த ஆசை; சமீபத்தில் அதிக தையல்கள் தைக்கக் கூடிய தையல் இயந்திரம் ஒன்று வாங்கினேன். பழையதில் எந்தக் குறையும் இல்லை. இன்றும் என் பிரியத்துக்குரியதாகவே இருக்கிறது. 'ஸ்காலப்ஸ்' தைக்கும் வசதி இருக்கவில்லை. இம்முறை வாங்கியதில் துவிச்சக்கரவண்டி கூடத் தைக்கலாம்.

பெட்டியைப் பிரித்து இயந்திரத்தை வெளியே எடுத்து வைத்தேன். அடிப்படை அமைப்புகள் சிலவற்றில் மாற்றங்கள் தெரிந்தது. புத்தகத்தை எடுத்துப் படித்து, நூலைக் கோர்த்து வைத்தேன்.

முதல் முயற்சிக்காக கைக்கு அகப்பட்டது குப்பைக்குப் போக இருந்த பழைய 'பானர்' ஒன்று. 'ஸ்காலப்ஸ்' தைக்கக் கிடைத்த சந்தோஷத்தில், செவ்வகவடிவில் இருந்த அந்த 'ஃபெல்ட்' துணியைச் சுற்றிலும் ஒரு வரி தைத்தேன். சிறிய வயதில் என்னிடம் இருந்த சட்டை ஒன்றில் நெளிவேலைப்பாட்டுத் தையல் ஒன்று இருந்தது. அது சங்கிலித் தையலில் இருக்கும்; இப்போதையது நேர்த்தையலையே நெளிவாகப் போட்டுக் கொடுத்தது. அதோடு பரீட்சார்த்தம் திருப்தியாக முடிந்தது.

இப்போது அந்தத் துணி வீச இயலாத அளவு அழகாகத் தெரிந்தது. பதினைந்து தடவையாவது எடுத்துப் பார்த்திருப்பேன். :-) 'இதை வைத்து என்ன செய்யலாம்!!!'

அந்தச் சமயம் தோழி ஒருவரது பிறந்தநாள் வந்தது. துணியைத் தேவையான அளவு மடித்து வெட்டிக் கொண்டேன். சுற்றிலும் சாதாரண தையல் ஒரு வரி அடித்தேன். அளவாக அட்டையை மடித்து துணியை அதில் ஒட்டிக் காயவிட்டேன்.

சில வருடங்கள் முன்பு வீட்டிற்குத் திரைச் சீலைகள் மாற்றும் சமயம் வெட்டிக் கழித்த லேஸ் துண்டு ஒன்று இருந்தது. கடையில் கோணலாக வெட்டிக் கொடுத்ததால் நான் நேராக வெட்டியதில் கிடைத்த அந்தத் துணியில் பத்துப் பன்னிரண்டு பூக்கள் முழுமையானவையாக இருந்தன. அரைகுறையாக இருந்த பூக்களை இலைகளாகவும் மொட்டுகளாகவும் மாற்றிவிடலாம் என்று தோன்றிற்று.

அட்டையில் விதம்விதமாக ஒழுங்குபடுத்திப் பார்த்து திருப்தியான அமைப்புக் கிடைத்ததும், ஒட்டினேன். குட்டிகுட்டி வெள்ளை மணிகளை ஒட்டி மேலும் அழகு சேர்த்தேன். பெற்றுக் கொண்டவர், 'இப்படி எல்லாம் கூட யோசிக்க வருமா!' என்றார். :-) அவரது வேலை மேசையில் மேல் உள்ள 'நோட்டிஸ் போர்டில்' குத்தியிருக்கிறார்.