நெருப்புநரி திடீர் திடீரென்று சுருண்டு படுத்துக் கொள்கிறது. ;(
இதுவரை காலமும் இல்லாது முதல் தடவையாக 'வர்ட்பாட்' பக்கம் வந்து தட்டச்சு செய்கிறேன்.
தமிழில் தட்டச்சு செய்யவேண்டும் என்பது எனக்கு ஒரு கனவு.
பல வருடங்கள் முன்பு, ஊருக்கு வந்திருந்த என் சகோதரர் ஒரு கணனி வாங்கிக் கொடுத்துவிட்டு வந்தார். அப்போ அது ஏதோ பெரிய என்னவோ போல, தனி அறை வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தது. (இந்த ஊரில் எனக்கே ஒரு அறை கிடையாது. ஹும்! )
ஸ்கூல் விட்டு வந்து வேலை எல்லாம் முடித்து விட்டு ஆட்டோ பிடித்துப் போய் கணனிக்கல்வி கற்றுவந்தேன். (இந்தக் காலகட்டத்தில் என் 'மேட் 50' க்கு என்ன ஆயிற்று என்பது இப்போ நினைவுக்கு வரவில்லை.) எல்லோரும் சின்னச் சின்ன மனிதர்களாக இருக்க, நான் மட்டும் பொருந்தாமல் இருந்தேன். தட்டச்சு வேறு தெரியாது.
இரண்டு சிறு பெண்கள் மனமிரங்கி என்னைத் தோழியாக ஏற்றுக் கொண்டார்கள். ஒருவர் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் வேலை பார்த்தார். நாட்டைவிட்டு நிரந்தரமாகப் பயணப்படவிருப்பதை அவருக்கு மட்டும் சொல்லி இருந்தேன். "டீச்சர், என்னையும் உங்கட ப்ரீஃப் கேசில வச்சுக் கூட்டிக் கொண்டு போங்கோ," என்பார்.
பரீட்சையில் எனக்குத்தான் எல்லாவற்றிலும் அதிக புள்ளிகள் கிடைத்திருந்தது. காரணம் என்று எனக்குத் தோன்றியது 1. வினாத்தாள் ஆங்கிலத்தில் இருந்தமை. 2. தட்டச்சு செய்வதில் என் வேகம் போதாவிட்டாலும் தட்டியவரை தவறு இல்லாமல் தட்டி இருந்தமை.
அங்கு கற்றது கைமண்ணளவுதான் என்பது பின்னால் புரிந்தது.
பிற்பாடு க்றிஸ் அலுவலகத்தில் ஒருவர் உதவியால் தமிழ் தட்டச்சு என்று ஆரம்பித்து, தேவை எதுவும் இல்லாத காரணத்தால் அப்படியே நின்று விட்டது. என் பெயருக்கான குறியீடுகளை மட்டும் மனனம் செய்து வைத்திருந்தேன்.
இங்கு வந்து வெகு காலம் கழித்து மீண்டும் அந்த ஆவல்.. எப்படியாவது தமிழில் தட்டச்சு செய்ய வேண்டும். இங்குள்ளவர்களிடம் விபரம் எதுவும் பெயரவில்லை. ஊரில் இருந்து குறுந்தட்டு வரவழைக்கலாம் என்றார்கள்.
இலங்கையரிடமும் கேட்டு அலுத்து விட்டது. ஒரு குட்டி சிங்கள மாணவரைப் பிடித்தேன். அவர் சொன்னார், "மிஸ், ஜெனி மிஸ்ஸைக் கேளுங்கள். அவர் ஏதோ வலைத்தள உதவியோடு ஜேர்மன் மொழி தட்டுகிறார்," ஜெனியிடமும் கேட்டேன், முன்னேற்றம் எதுவும் இல்லை.
அலன் தன் வேற்று மொழித் தோழர்கள் ஆங்கில மூலம் தட்டச்சு செய்வதைச் சொன்னார். எல்லாம் அரைகுறைத் தகவல்களாக இருந்தன. ஒரு ரஷ்யத் தோழி ஒலிமாற்ற முறைத் தட்டச்சு பற்றிக் குறிப்பிட்டு விபரம் சொன்னார். அங்கிருந்து அவரது உதவியால் 'கூகிள் ட்ரான்ஸ்லிடரேஷன்' முறையில் தட்ட ஆரம்பித்தேன். என் சிந்தனை முறைக்கும் அதற்கும் ஒத்துப் போகவில்லை. தவறுகள் சரளமாக வந்தன. திருத்தத்தில் நேரம் அதிகம் செலவாயிற்று.
இதற்குள்
தூயாவின் சமையல் கட்டு வழியாக
அறுசுவைக்குள் நுழைந்திருந்தேன். எழுத்துதவி பிடித்திருந்தது. அதுவே என் நிரந்தர தட்டச்சு இயந்திரமாயிற்று. அங்கு தட்டி எங்காவது கொண்டு போய் வைப்பது நேரம் எடுத்தாலும் ஓரளவு வெற்றி பெற்றுவிட்டேன் என்பதில் பெருமையாக இருந்தது.
ஆனாலும் தமிழரல்லாத தமிழர் பலர் அங்கு உலவியது புரியாமல் குழம்பிய நாட்கள் அதிகம். ஒருவரிடம் வசமாக மாட்டிக் கொண்டு திட்டு வாங்கி இருக்கிறேன். எப்போவாவது என் உலகுக்கு வருகை தருவார். இப்படி ஒன்று நிகழ்ந்ததே அவருக்கு நினைவில் இல்லை. ;)
அறுசுவையில் என் கைவினைகள் வெளியாக ஆரம்பித்தன. உண்மையில் புகைப்படக் கருவியோடு சுற்ற ஆரம்பித்தது அதன் பின்தான். படங்கள் திருப்தி தரவில்லை என்று சந்தேகம் கேட்டேன். தீர்வும் கிடைத்தது. அதிகம் உதவியவர் அறுசுவை நிர்வாகி சகோதரர் பாபு அவர்கள்தான். (இங்கு
ஜெய்லானி)
அதற்கு முன்பு வீடியோக் கருவியோடு மட்டும் அலைவேன்.
அறுசுவை சிறிது சிறிதாக என் கூட்டை விட்டு என்னை வெளியே கொண்டு வந்து விட்டிருக்கிறது. நட்பு வட்டம் பெருகி இருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
~~~~~~~~~~~~~
ம்.... நெருப்புநரி திடீர் திடீரென்று சுருண்டு படுத்துக் கொள்கிறது. ;(
இதுவரை காலமும் இல்லாது முதல் தடவையாக 'வர்ட்பாட்' பக்கம் வந்து தட்டச்சு செய்கிறேன்.....
சேமித்து வைத்து பிற்பாடு வலைப்பூவுக்குக் கடத்தலாம் என்பதாக எண்ணம். எகலப்பை நிறுவ வைத்த சகோதரருக்கு நன்றி. ;)
அது ஒரு சுவாரசியமான கதை. ஒரு நாட்காலை.. தினமும் இப்படிக் காலையில் ஒரு முறை மின்னஞ்சல் இருக்கின்றதா என்று பார்த்து விட்டுப் போக வருவேன். அப்படி வந்தேன். என் அன்புக்குரிய சகோதரரும் அரட்டைக்கு வந்தார். எப்போதாவது தான் அரட்டை என்பதால் நான்கு வரி பேசிவிட்டுப் போகலாம் என்று நினைத்துத் தொடர்ந்தால் அப்படி இப்படி அன்றே 'ஆன்லைன் வகுப்பு' எடுத்து எகலப்பை நிறுவ வைத்து விட்டார்.
எனக்குப்
பாடசாலைக்கு நேரமாகிவிடுமோ என்கிற தவிப்பு. இதையும் விட முடியவில்லை. விடாது தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்த அறிவுறுத்தல்களைப் பின்தொடர்வது சிரமமாக இருந்தது. எனக்குக் கணனி மொழி தெரியவில்லை. ;( சகோதரரோ விடுவதாக இல்லை. ;) எனக்குப் புரியக் கூடிய எளிமையான மொழிநடையில் அறிவுறுத்தல்கள் வர ஆரம்பித்தன.
"அதெல்லாம் இருக்கிற ஐந்து நிமிடநேரம் போதும்," என்று ஆரம்பித்து... ;) என் தடுமாற்றத்தால் நேரம் கடந்து கொண்டே இருந்தது. நடு நடுவே "சீக்கிரம், பாடசாலைக்கு நேரமாகிறது," என்று வேறு மிரட்டி வயிற்றில் புளியைக் கரைத்தார். ;)) இப்போது நினைத்தாலும் சிரிப்பாக வருகிறது. ;) மறக்க முடியாத அனுபவம். ;)
பிறகு... வெற்றிகரமாக வேலை முடிந்ததும் ஒரு சரிபார்ப்பு. ;) "தமிழில் தட்டு," "இப்போ ஆங்கிலத்தில் தட்டு," ஒருவாறாகத் திருப்தியாகி "சரி, இப்போ க்ளாஸ் எடுத்து முடிஞ்சுது. இனி நீங்க போய் உங்க க்ளாசை எடுக்கலாம்," என்று விடுவித்தார். ;)) 'அப்பாடா!' என்று ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டு கிளம்பிப் பாடசாலைக்கு ஓடினேன்.
என் 28 வருட அனுபவத்தில்... எத்தனை பேரோடு கற்பித்திருப்பேன்! இப்படி ஒரு ஆசிரியரைக் கண்டதே... இல்லை. பிரமிப்பாக இருந்தது. ;) எடுத்த நோக்கத்தை நிறைவேற்றாமல் போவதில்லை என்கிற வைராக்கியம்... நான் நிச்சயம் இப்படி இல்லை. ;)
ஒரு விடயம் உண்மை. என்னை வேறு யாரும் இதுபோல் 'ட்ரில்' வாங்கியது இல்லை. ;))
அன்று எடுக்கப்பட்ட வகுப்பின்போது சொல்லப்பட்ட முக்கியமான கருத்து ஒன்று, "இந்த மாதிரி டவுன்லோட் பண்ணி வச்சா எங்க வேணுமானாலும் தமிழில் தட்டலாம்."
'நான் என்ன தட்டப் போகிறேன்,' என்று அப்போ நினைத்தேன். இப்போ புரிகிறது, உண்மைதான். நிறையத் தடவைகள் நன்றி சொல்லியாயிற்று என்பதாலும் சகோதரர் இதைப் படிப்பதற்கான சந்தர்ப்பங்கள் குறைவு என்று கருதியும் இங்கு நன்றி நவிலவில்லை. ;))
(இந்த நிகழ்வு பற்றி எனக்கொரு சந்தேகமும் இருக்கிறது, சரியோ தெரியவில்லை. ஒரு வேளை... அரட்டையில் என் இலங்கைத் தமிழைத் தமிங்கிலத்தில் படிக்கச் சிரமப்பட்டு அதைச் சொல்லாமல், என்னை இப்படித் தமிழில் தட்டவைக்க மேற்கொண்ட முயற்சியாக இருக்கக் கூடுமோ!!!... ;))