Thursday 28 December 2017

டேப் & டிஸ்பென்சர்

 நத்தார் அன்பளிப்புகளைப் பொதிகளாகச் சுற்றும் சமயம் இடைநடுவே 'டேப்' தீர்ந்து போயிற்று. புதியதை மாற்ற‌ முயன்றேன். என் சின்னக் கைகளுக்கு பிரயத்தனமாக‌ இருந்தது. கர்ர்... மாடியிலிருந்து இறங்கி வந்து, தோட்டத்தில் நின்றிருந்த‌ மனிதரிடம் உதவி கேட்டேன். அவரும் பழையதைக் கழற்ற‌ சிரமப்பட்டார்.
 திடீரென்று தோன்றிற்று... புதியதை மாட்டிவிட்டுத் தள்ளினால் வராதோ! வந்தது. புதியதும் தானாகப் பொருத்தமான‌ இடத்தில் சென்று அமர்ந்தது.
எல்லோரும் இப்படித் தான் செய்வார்கள் போல‌. நமக்குத்தான் தாமதமாக‌ வெளித்திருக்கும் என்று தோன்றிற்று. :‍)

Wednesday 27 December 2017

காகிதச் சொடுக்குகள்

புதினமாக‌ ஏதாவது தலைப்பு வைத்தால் நிறையப் பேரைக் கவரலாம். :-)

முன்பு ஒரு சமயம் பாடசாலைக்கு யாரோ ஒரு தொகுதி விளையாட்டு அட்டைகளை வழ்ங்கியிருந்தார்கள். வருட‌ இறுதி வாரம், சின்னவர்களுக்கு ஆளுக்கொன்று கொடுத்து குறிப்பிட்ட‌ பகுதியைப் பிரித்து அதில் கொடுக்கப்பட்டிருந்த‌ விளக்கக் குறிப்புகளைப் பயன்படுத்தி 'கிராக்கர்ஸ்' செய்யச் சொன்னோம். எனக்கும் அந்தச் சத்தம் பிடித்திருந்தது. சில நாட்கள் முன்பாக‌ எனக்கென்று எடுத்து வைத்திருந்த‌ கிழிந்து போன‌ வெடியைக் கண்டேன், ஓர் பெட்டியில். இன்று இந்தப் பதிவுடன்... அந்தக் காகித‌ வெடி குப்பைக்குப் போகிறது. :‍)

செய்முறை 

ஒரு 4A கடதாசியில் 4 செ.மீ நீளத் தீரைகள் வெட்டிக் கொள்ள‌ வேண்டும்.

அதை ஒரு முறை இரண்டாக‌ மடிக்க‌ வேண்டும்.

பிறகு விரித்து வைத்து...
ஒவ்வொரு பக்கத்தையும் தனித்தனியே நடுக் கோட்டுடன் இணையுமாறு பிடித்து ....

உள்நோக்கி மடித்துக் கொள்ள‌ வேண்டும்.


இப்போது மொத்த‌ அகலம் 2 செ.மீ இருக்கும்.

மீண்டும் நடு மடிப்பு வழியே மடிக்கவும். இப்போது அகலம் 1 செ.மீ  இருக்கும்.
மீண்டும் இரண்டாக‌.....
....பின்பு நான்காக‌ மடித்து எடுக்க‌ வேண்டும்.
W  / M  வடிவில் மடிப்பது முக்கியம்.


M கீழ் நடு மடிப்பை இடது கையில் பிடித்துக் கொள்ளுங்கள். மடித்திருக்கும் மேல் துண்டுகள் இரண்டும் இடது கைக் கட்டை விரல் & சுட்டு விரல்களின் மேல் இருக்கும். இப்போது வலது கையை மேல் நோக்கி 
இழுத்தால், 'டிக்' என்று சொடுக்குச் சத்தம் கேட்கும். கடதாசி உயிரை விடும் வரை வேலை செய்யும் இந்த‌ க்ராக்கர்.

இங்கே பதிவு செய்தால் தேடுவது சுலபம்; நட்பு வட்டத்திற்குக் காட்ட‌ வேண்டி இருந்தாலும் சட்டென்று கைபேசியில் தேடிக் கொடுக்கலாம்.... என்பது வரை தட்டச்சு செய்து தயாராக‌ இருந்தது இடுகை. படங்கள் மட்டும் பிற்பாடு எடுத்து இணைக்க வேண்டி இருந்தது.

24 /12/2017
வருடா வருடம் நானே 'க்றிஸ்மஸ் க்ராக்கர்ஸ்' தயார் செய்வேன். பெரும்பாலும் அவை இன்னாருக்கு இன்னது என்பதாக‌ தனித்துவமான‌ அன்பளிப்புகள் & சிரிப்புத் துணுக்குகளுடன் தயாராகும்.

இம்முறை சின்னவர்களை ஏமாற்றக் கூடாது. கடைசி நேரத்தில் போய்த் தேட‌, க்ராக்கர் ஸ்னாப்ஸ்' கிடைக்கவில்லை. மனம் தளராமல், 'சரி, ஒரு வித்தியாசத்திற்கு காகிதச் சொடுக்குகளை வைக்கலாம்,' என்று செய்ய‌ ஆரம்பித்தேன்.

க்ராக்கர்ஸை எடுக்கும் போது எல்லோரும் எங்கே பிடித்து இழுப்பது என்று தலையைப் பிய்த்துக் கொண்டார்கள். ;‍) சாதாரணமாக‌, சொடுக்குகளின் முடிவுகளைக் கையில் பிடித்துக் கொண்டு இழுத்தால்தான் சப்தத்தோடு வெடிக்கும். இம்முறை பிய்த்து உள்ளீட்டை எடுத்துக் கொண்டு பிறகு சொடுக்கி விளையாடினோம். :‍)

Tuesday 26 December 2017

செரிப்பழங்கள்

இந்த நொடி... என் சிந்தனையில் ஒலிக்கிறது சித்ராவின் இனிய‌ குரலில், "ஐஸ் க்ரீம் கடையில் செரிப்பழம் இருப்பது அரை நொடி வாழ்க்கையடா!" என்கிற‌ வரிகள்.

வாழ்க்கை கூட‌ அப்படித்தான். ஒரு நொடி அழகு; மறு நொடி அழுகை.

இந்த‌ வருடம் ஆரம்பம் முதல் இதுவரை, இந்தத் தத்துவம் சுத்தியலால் ஒவ்வொரு அடி வாங்கும் போதும் ஆணி சற்று ஆளமாக‌ உள்ளே இறங்குமே, அப்படி இறங்கிக் கொண்டே இருக்கிறது.

செபா மருத்துவமனையிலிருந்த‌ சமயம், காலை வரை பிரயாசையுடன் என்றாலும் நடந்து குளியலறை வரை சென்ற‌ வயதான‌ பெண்மணி பதினொரு மணியளவில் வந்து குழுமிய‌ உறவினர் கூட்டத்துடன் பேசியபடி அமைதியாகக் கண் மூடினார். எதிர்க் கட்டிலிலிருந்து மெதுவே நிகழ்வுகளைக் கவனித்தபடி இருந்தோம் நாம். மெதுவே உறவுகள் கலைந்து போய் அனுமதிக்க‌, வைத்தியசாலை ஊழியர்கள் அவரை அறையிலிருந்து வெளியே எடுத்துப் போனார்கள். படுக்கை சுத்தம் செய்யப்பட்டு அடுத்த‌ நோயாளியை ஏற்கத் தயாராகிற்று.

என் பெற்றோர்களுக்காக‌ ஓய்வு இல்லத்தில் அனுமதிக்கான‌ பத்திரங்களை நிரப்பிய‌ வண்ணம் இருந்த‌ சமயம், அந்த‌ அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. "நீங்கள் உள்ளேயே இருங்கள். ஒருவரை வெளியே எடுத்துப் போகப் போவதாகத் தெரிகிறது," என்றார் அலுவலர். இம்முறை அவரது அறை - ஓரிரண்டு நாட்களில் இன்னொருவரை அனுமதிக்கத் தயாராகி இருக்கும் என்னும் நினைப்பு வந்தது.

ஐப்பசி 18ம் தேதி - அம்மா பிரிந்ததும் அவரை பார்லருக்கு எடுத்துப் போயாயிற்று. குளிர் அறையில் அவர் அமைதியாகத் துயில் கொள்ள‌, நாம் பிரிவுபசார‌ வேலைகளில் மும்முரமானோம். பத்தொன்பது... இருபது... கிட்டத்தட்ட‌ இருபது பேர், அந்த இல்லத்தில் இணைய அறைகளுக்காகக் காத்திருப்பது நினைவை உறுத்தியது. அட்டைப் பெட்டிகள் எடுத்துப் போய் உடமைகள் எல்லாவற்றையும் அடுக்கி, அறையைக் காலி செய்து கொடுத்தோம். மருத்துவமனையால் இரவலாகக் கொடுக்கப்பட்டிருந்த‌ குளியல் நாற்காலி, நடை வண்டி, ஒட்சிசன் இயந்திரம் எல்லாவற்றையும் உரியவர்களுடன் தொடர்பு கொண்டு திருப்பியாயிற்று. (இவை இன்னொருவர் பயன்பாட்டுக்காக அனுப்பப்பட்டுவிடும்.) ஒரு வாரம் கழித்து இறுதிச் சடங்குகள் முடிந்து போய்ப் பார்க்க‌, அந்த‌ அறை அடுத்தவரை வரவேற்கத் தயாராக‌ இருந்தது. இபோது இன்னொரு பெண்மணி அங்கு குடியிருக்கிறார். இந்த‌ அறைக்கு வரும் எவரும் குணமாகி வீடு திரும்புவது  கிடையாது என்பது கசப்பான‌ உண்மை.

முப்பத்தோராம் நாள் காரியம் ஆகி மெதுவே மனது வேலைகளில் ஈடுபட‌ முனைகையில் ஊரில் குடும்பத்தினர் இல்லத்தில் சடுதியாக‌ ஒன்றன்பின் ஒன்றாக‌ இரு இழப்புகள்.

விடுமுறையைத் தனியாக‌ வீட்டில் கழிக்க‌ இயலுமென்கிற‌ தைரியம் இருக்கவில்லை. ஒரு சிறு பயணம் கிளம்பினோம்.  தோட்டமொன்றில் பழம் பிடுங்கப் போனோம்.  அங்கும் செரிப்பழங்கள் -
கொத்துக் கொத்தாக சிவப்பும் கருஞ்சிவப்புமாக செரிப்பழங்கள் - நாம் பறித்தவற்றுக்கு அரை நாள் தான் வாழ்க்கை. :-) இந்தப் படத்திற்கு இங்கு சில நாட்கள் தான் வாழ்க்கை. பிறகு காணாமல் போய் விடும். :-)

மார்கழி 26 வந்தால் சுனாமி எண்ணங்கள் வராது இராது. எம் உறவுகள் எழுவரை இழந்த தினம்.

பூவுலகை  விட்டுப்  பிரிந்து போன அனைத்து ஆன்மாக்களுக்காகவும் என் பிரார்த்தனைகள்.

Thursday 21 December 2017

யார் இவர்?


இவரைப் பற்றி....


அறிந்தவர்கள் விபரம் சொல்லலாம். 

Tuesday 19 December 2017

அழகுக் குறிப்பு!

படித்ததில்.........
பிடித்தது! 
:-)

Monday 18 December 2017

வெயிலுக்கு முளைத்த‌ காளான்!

அவ்வப்போது கைவேலைக்காக‌ வாங்கிச் சேர்த்தவற்றில், சில செரமிக் பொருட்களை நேற்று வெளியே எடுத்தேன். யாருக்கு என்ன‌ அன்பளிப்பு என்பதை   யோசித்து குறித்து வைத்தாயிற்று. செரமிக் பெய்ன்ட் இருந்த‌ பெட்டியில் எப்பொழுதோ ஒரு கைவேலைக்காக‌ வாங்கி மீந்து போன‌ மலிவு விலை வர்ணங்கள் தெரிந்தன‌. சிவப்பும் வெள்ளையும் மஞ்சளும் பாதி காய்ந்து இருந்தன‌. 

வீசாமல் பயன்படுத்த‌ முடியாதா! 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2003ல் இந்த‌ வீட்டை வாங்கினோம். வாங்கும் போது ஒரு ப்ளம் மரம் & நிறைய‌ புல்லும் களைகளும் அவற்றின் நடுவே களையாக‌ வளர்ந்திருந்த‌ ப்ளம் கன்றுகளுமே இருந்தன‌. தோட்ட‌ வேலையை ஆரம்பித்தேன். 


அந்த‌ வருட‌ நத்தாருக்கு சின்னவர் எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தது... ஒரு காளானை. $ கடைகள் சின்னவர்களுக்கு ஒரு பெரிய‌ வரப்பிரசாதம். :‍-) கையிலிருக்கும் சொற்பப் பணத்தில் அழகாக‌ எதையாவது தேடி வாங்கிவிடலாம். 

பல‌ வருடங்கள் கழித்து அதன் வர்ணப் பூச்சுகளை இழந்தும் என்னைப் பிரியாமல் செடி மறைவில் இருந்துவந்த காளானை, சுரேஜினியின் கைவேலை ஒன்று வெளியே எடுத்து வரச் செய்தது. படிந்த‌ பாசியைத் தேய்த்துத் தேய்த்துச் சுத்தம் செய்வது நச்சுப் பிடித்த‌ வேலையாக‌ இருந்தது.
இந்த‌ நிலை வரைதான் கொண்டுவர‌ முடிந்திருந்தது. அழுக்குப் போகாவிட்டாலும் சிரிப்புப் போகவில்லை. ;-) மீண்டும் அழுக்காகி விடாமல் ஒரு அட்டைப் பெட்டியில் உறங்கப் போய்விட்டார் காளான் பிள்ளையார்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தொட்டால் ‍ தூரிகையில் கெட்டித்தயிர் போல் ஒட்டிப் பிடித்தது தீந்தை. பளிச்! 

எங்கே என் காளான்! 
தேடிப் பிடித்தேன். 

பூசாமல் இழுபட்ட தீந்தை, காளான் மேல் கோடுகள் போன்ற‌ தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. காய்ந்த‌ பின் முகத்தை வரைந்தேன்.
 
அடிப்படை கரடுமுரடாக‌ இருந்ததால், மெல்லிய‌ கோடுகள் வரைவது சிரமமாக‌ இருந்தது.

மஞ்சள் பச்சக் பச்சக்! :‍) தூரிகையின் பின்புறத்தால் தொட்டு பொட்டுகள்வைத்தேன்.  பரவாயில்லை. 
கடும் வெயில் இங்கு.  சட்டென்று உலர்ந்துவிட்டது. என் தோட்டத்தில் எங்கே வைக்கலாம்!
                                     .. இந்தக் களைகளைத் தொலைக்க‌ முடியாமலிருக்கிறது. கர்ர். க்றிஸ்ஸிடம் சொல்லி தற்காலிகமாக‌ ஏதாவது விசிறச் சொல்ல‌ வேண்டும்.
 சின்னவர் ஓரிரண்டு நாட்களில் வருவார். நன்கு தெரியும் எனக்கு‍ ‍ காளானைப் பார்த்ததும் ஒரு சிரிப்புச் சிரிப்பார். ;-) அதன் கருத்து... "மம்மி இன்னும் சின்னப் பிள்ளை விளையாட்டு விளையாடுறா!"

Thursday 14 December 2017

ஔவை சொன்ன‌ வாக்கு!!

நத்தார் கொண்டாடுவதற்கான‌ மனநிலை இன்னும் வரவில்லை. அதனாலேயே கொண்டாட‌ வேண்டும் எனும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.

செபா சொல்லுவார்... "சாகப் போற‌ மாடு, கண்டுக்குப் புல்லும் வைக்கோலும் சேர்த்து வைச்சுட்டுச் சாகிறது இல்லை," என்று. உண்மைதான். கன்று எப்படியாவது பிழைத்துக் கொள்ளும். இன்னொரு பசுவிடம் கெஞ்சியோ அடம் பிடித்தோ பாலருந்தலாம். அல்லது... இன்னொரு மாடு தீவனத்திற்கு, தன் சீவனத்திற்கு என்ன‌ செய்கிறது என்பதைக் கவனித்து அதன்படி நடந்தாலே பிழைத்துக் கொள்ளும். 

மனிதர்!! 

பிள்ளைக்கு எத்தனை வயதானாலும் அம்மா அம்மாதான். நான் நன்றாக‌, சந்தோஷமாக‌ இருப்பதைத்தான் அம்மா விரும்புவார். 

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்... ம்... ஔவையாருக்கு இதைச் சொல்வது சுலபமாக‌ இருந்திருக்கும். ஒரு வயதுக்கு மேல் வளர்ப்புத் தாயையும் விட்டு, தன் காலே தனக்குதவி என்று சுற்றுலாக் கிளம்பிய‌ பெண்மணி.  ;-) பெரிதாக‌ எதிலும் பிடிப்பு இருந்திராது, தமிழைத் தவிர‌. 

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா
நமக்கும் அதுவழியே நாம் போம் அளவும்
எமக்கு என்னென்றிட்டுண்டிரும். 

கடைசி ஆறு சொற்களையும் பிரித்துப் பிரித்து எழுதிப் பார்த்தேன். :‍) கவிதைத் தன்மை தொலைந்து போனாற்போல இருந்தது. தேடலாம் என்று இணையத்தில் உலாவ‌... கொடுமையொன்று கண்டேன்!! ;( படம் போட்ட‌ குழந்தைகள் அரிச்சுவடியில் 'ஔ' என்கிற‌ எழுத்துக்கு 'ஔவையார்' என்று எழுதியிருப்பார்கள். இணையத்தில் சில‌ ஔவைகளையும் ஏராளமான‌ அவ்வைகளையும் கண்டேன். ;( 

தமிழ், 'தமிழை வளர்க்க‌ நினைக்கும் தமிழராலேயே' மரித்து விடும் என்று முன்பே ஔவைக்குத் தெரிந்திருக்குமோ! அதனால் தான், 'நமக்கும் அதுவழியே நாம் போம் அளவும் எமக்கு என்ன!' என்று மனம் நோகாமலிருக்கும்படி அப்படிப் பாடி வைத்தாரோ!!! ;D

தட்டச்சு செய்வது சிரமமாகிப் போகும் என உணர்ந்து எழுத்து மாற்றம் வந்த‌ பின்பும், 'ஔ' 'ஐ' எழுத்துகளைத் தட்டுவதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லாதபடிதான் இருந்துவருகிறது. ஆனாலும்... நாம் 'அய்யா' என்போம்; 'அவ்வை' என்போம். ;((

மீண்டும்... விஷயத்துக்கு வருகிறேன். மாண்டார் வருவரோ மாநிலத்தீர்!! வேண்டா... நமக்கும் அதுவழியே நாம் போம் அளவும் எனக்கு என்ன‌ என்று இட்டு உண்டு இருக்கலாம்.  அதன் ஒரு படியாக‌... இந்த‌ அலங்காரம். 
கையிலிருந்த‌ பொருட்களை வைத்துச் செய்தேன். இம்முறை அழகான‌ இலைகள் அகப்பட்டன‌. ஒரு சாடியில் சில‌ மிட்டாய்களும் இருந்தன‌. இவை அம்மா வீட்டிலிருந்து எனக்குக் கடத்தப்பட‌ பொக்கிஷங்கள். தன்னைச் சந்திக்க‌ வரும் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்காக‌ மிட்டாய்கள் வைத்திருப்பார்.

முன்பெல்லாம் நிறமற்ற‌ செலோஃபேன் கடதாசியில் மிட்டாய்களைச் சுற்றுவேன். இம்முறை கையிலிருந்தது சிவப்பு செலோஃபேன். 
நீளமாகத் தெரிபவை ஜெல்லி மிட்டாய்கள். 
செய்முறை இங்கே ‍- http://www.arusuvai.com/tamil/node/30177 

Friday 24 November 2017

மெழுகில்லாததோர் மெழுகுவர்த்தி

ஆம்னஸ்டி இன்டர்னஷனல், அவர்களுக்கு உதவுவதற்காக சமீபத்தில்  அனுப்பிய நன்றித் தபாலிலிருந்து.....
மெழுகுவர்த்திப் படங்களைபி பிரித்து....
காட்டியிருந்த வெட்டுக்கோடுகள் வழியே பொருத்த.....
கிடைத்தது இந்த மெழுகில்லாத  மெழுகுவர்த்தி. 
துளைகளில் நூலைக் கோர்த்துக் கட்டினால் நத்தார் மரத்திற்கேற்ற அழகான அலங்காரம் கிடைக்கும். மரம் முழுவதும் இதையே கொழுவ முடிந்தால்! முயற்சி செய்ய வேண்டும் விடுமுறையில்.

Thursday 19 October 2017

Obituary Notice of Mrs. Anthonia Jeyanathan

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Mrs. Anthonia Jeyanathan passed away peacefully at
Elizabeth Knox Home and Hospital, Auckland,New Zealand on the 18th of October 2017.
Anthonia was born on the 11th June 1936, in Batticaloa, Sri Lanka to Sebastiampillai and Sebamalai. She served as a teacher of Tamil at St Theresa's Convent (Batticaloa), St Mary's College (Trincomalee) and retired from service in 1985 after teaching at St Joseph's College, Trincomalee.
Anthonia is the beloved wife of Sevastianpillai Jeyanathan; loving mother of Immaculata Christopher Williams & Dr. Hilary Jeyaranjan; mother-in-law of Johnpillai Christopher Williams & Dr. Shanthi Jeyaranjan and much loved grand-mother of Allen Christopher Williams, Arun Christopher Williams & Dr Thivya Jeyaranjan.
Visitation will be from 2.00 p.m until 4.00 p.m on Sunday, 22 October 2017 at Davis Funerals, 400 Dominion Road, Mt Eden, Auckland.
A requiem mass for Anthonia will be celebrated at Our Lady of the Sacred Heart Church, Banff Avenue, Epsom on Wednesday, the 25th of October at 11.00 am and will be followed by a private cremation.
Dr. Hilary Jeyaranjan ( +64 274740303 )
Mrs. Immaculata Jeyam Christopher Williams (Jeya Jesu / Imma Chris) ( +64 21 1712348)
Image may contain: 1 person, smiling

Wednesday 4 October 2017

கா'தோடு' சொல்கிறேன்

தலைப்பு சிலசமயம் ஜிங் ஜிங் என்று மூளையில் வந்து உதிக்கும். சில சமயம் முடியைப் பிய்த்தாலும் ஊஹும்!

பாடசாலையில் ஓர் விஞ்ஞான ஆசிரியர் _ ஒரே இப்படி எழுதுவது சிரமமாக இருக்கிறது. Mr. B - தமிழில் மிஸ்டர். பா! ;(( இதுவும் பிடிக்கவில்லை. ;( ஒரு புனை பெயர் வைக்கலாம். ம்... பாரி - கடையெழு வள்ளல்களில் ஒருவர் பெயர். ;)

மீதி 6 பெயர்களும் நினைவிருக்கிறதா எனக்கு! சோதித்துப் பார்க்கலாம். பாரி, ஓரி, மலையன், எளி..இல்லை எ..ழினி. ;) நினைவு இருக்கிறது நன்றாக. பேகன், ஆய், நள்ளி. ஹையா! எனக்கு நானே ஒரு ஷொட்டு கொடுத்துக் கொள்கிறேன். :-)

பாரியைப் பற்றிச் சின்னக் காலத்தில் ஒரு சந்தேகம் இருந்தது எனக்கு. அவர் எப்படி முல்லைக்குத் தேர் ஈந்தார்!! ஔவையார் திரைப்படத்தை (கருப்பு வெள்ளையில்) பார்த்தும் புரியவில்லை. அப்போ எனக்கு முல்லைச் செடியைத் தான் தெரிந்திருந்தது; கொடியைத் தெரியாது.
அது என்ன முல்லைச் செடி என்கிறவர்கள் மேலே உள்ள படத்தைப் பார்க்கவும். இதற்கு ஒரு சக்களத்தியும் இருப்பது சில வருடங்களுக்கு முன்தான் தெரிந்தது. எனக்குத் தெரிந்த வரை... முல்லைக் கீரை... குப்பென்று வாசம் வீசும். அதை அனுபவிப்பதற்காகவே செடியைத் தட்டித் தட்டி விடுவேன். :-) ஆசையாகக் கேட்டேன் என்று சென்ற தடவை ஊர் போயிருந்த சமயம் மச்சாள் சொதி வைத்துக் கொடுத்தார்கள்.

சாப்பிடும் போதும், பிறகும் என்னிடமிருந்து எந்தப் பாராட்டும் கிடைக்காமல் போக, மச்சாள் கேட்டார், "ஜெயா, முல்லைக் கீரை சொதி - எப்பிடி இருந்துது?" நான்,,, "ஙே!!":-)
"இது முல்லைக் கீரைச் சொதியா?"
"ஓம், முன் வீட்டில இருக்கு. உங்களுக்காகப் பிடுங்கீட்டு வந்து வைச்சன். ஏன் நல்லா இல்லையா?"
"இது முல்லையே இல்லை! வேற என்னத்தையோ சமைச்சிருக்கிறீங்கள். ;))"
"இல்ல, முல்லை தான். நான் பிறகு காட்டுறன்."
அப்படியே சமையலறை ஜன்னலால் எட்டிப் பார்த்தார். "அந்தா... மதிலுக்கு மேலால தெரியுது பாருங்க."
எனக்குத் தெரியவில்லை. மதில் அருகே போய்ப் பார்த்தும் தெரியவில்லை. அதையும் சிலர் முல்லை என்கிறார்கள்.
http://www.arusuvai.com/tamil/node/25075 இங்கே அகத்திக் கீரைச் சொதி குறிப்பு இருக்கிறது. அதே போல இறுதியில் முல்லைக் கீரையைப் போட்டு சட்டென்று இறக்கினால் முல்லைச் சொதி தயார். துளிர் இலைகளாகத் தெரிந்து நடு நரம்பை மட்டும் நீக்கிவிட வேண்டும். இலையை மென்மையாகக் கையாள வேண்டும். சொதி கம்மென்று வாசமாக இருக்கும். சுடச் சுட சோறு, வெறும் முல்லைச் சொதியோடு... தேவாமிர்தம் எனக்கு.

;))) பாரியில் ஆரம்பித்து இங்கே வந்தேனா! ;)

இந்த வெள்ளைக்காரப் பாரி, ஒரு தடவை சின்னவர்களுக்கு 'கணக்கெடுப்பும் அதை வரைபாக்குதலும்' பற்றிக் கற்பித்தார். நாக்கு உருட்டுவது, நீலக் கண், ஒட்டிய காது என்று பல விடயங்களையும் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தார். மாணவர்கள் தங்கள் தங்கள் நாக்குகளை எதிரே இருக்கும் மாணவர்களிடம் உருட்டிக் காட்டுனார்கள். எனக்கு நா துருதுருத்தது. அந்தச் சமயம் பார்த்து பாரி, "Not many can touch their nose with their tongue you know. Some can," என் மனம் குளிர்ந்தது. இப்போ மாணவர்கள் நாக்கால் மூக்கைத் தொட முயற்சித்தார்கள். யாரும் வெற்றியடையவில்லை.

என் அருகே இருந்த மாணவரிடம் ரகசியமாகச் சொன்னேன், "I can do that you know."
CAN YOU MISS!!!!"
"Shhh!!!! Promise to keep it a secred and I will show you," :-)

இப்போ பயிற்சி போதாததாலோ அல்லது நாக்கு கொழுத்துப் போயிருப்பதாலோ (உடலில் மீதி உறுப்புகளை விட நாக்குக்கு கொழுப்போடு அதிக தொடர்பு இருக்கிறது. அதுதான் முதலில் குண்டாகுமோ! எப்போதோ எங்கோ படித்த ஞாபகம். சரியாக நினைவுக்கு வரவில்லை.) தெரியவில்லை - மட்டுமட்டாகத்தான் தொட முடிகிறது.

அதையெல்லாம் விடுங்க. காது பற்றி ஒரு கதையாவது சொல்ல வேண்டாமா!

தெலுகு, கன்னடம் தெரிந்தவர்களுக்கு ஒரு கேள்வி. கலைமகளில் ஒரு ஜோக் படித்தேன். (இதுவும் சின்..னக் காலத்து நினைவுதான்.) ஒரு சத்திரத்தில் இருவர் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஒருவர் கைத்தடியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு தூங்கினார். உறக்கத்தில் அதை நகர்த்தி விட்டார். அது மற்றவர் காதில் மாட்டுவிட்டது. அவர், "காதுரா! காதுரா!" என்பார். மற்றவர் தடியை இறுக்கிப் பிடித்தபடியே, "நாதுரா! நாதுரா!" என்பார். இப்படியே மாற்றி மாற்றிச் சொல்வார்கள். எந்த வார்த்தை என்ன மொழிக்குரியது!! மறந்து போனேன். இப்போ அறிந்துகொள்ள ஆவல்.
கீழே கருத்து சொல்லும் போது, ஏஞ்சல் 'நாதுரா' என்பது தெலுகு சொல் என்று சொல்லி உதவினார்கள். நன்றி அஞ்சு. :-)
என் ஒற்றைக் காதணி இது. முன்பு சில காலம் செஞ்சிலுவைச் சங்கக் கடை ஒன்றில் தொண்டராகப் பணியாற்றிய சமயம் கிடைத்தது. என் கடமைகளுள் அங்கு வரும் உடைந்து போன, உதிர்ந்து போன நகைகளைத் திருத்துவதும் ஒன்றாக இருந்தது. திருத்திக் கொடுத்தவை போக மீந்து போனவற்றுள் பின்னால் கொக்கி உடைந்த இந்த ஒற்றைக் காதான் கிடைத்தது. குறட்டால் மீதி இருந்த கொக்கிப் பகுதியை உடைத்து நீக்கி அந்த இடத்தில் 'ப்ரோச் பின்' ஒன்றை 'ஹாட் க்ளூ' வைத்து ஒட்டினேன். எனக்கு மிகவும் பிடித்த ப்ரோச் இது. வேறு யாரிடமும் இராது. :-)

இடையில்

எப்போ எது என் சுவாசத்தைக் குழப்பி வைக்கும் என்பதை முன் கூட்டியே அறிந்து கொள்ள இயலாததால் கையோடு அட்டோமைசரைக் கொண்டு உலாவுவேன்.  இடையில் மாட்டும் பை மிக வசதி; நடக்கும் போதும் கைக்கெட்டும் தூரத்தத்தில் இருக்கும்.

சென்ற தவணை புதிதாக ஆசிரியை ஒருவர் எங்களோடு வந்து இணைந்திருந்தார். திங்களன்று மட்டும் வேலை, அதுவும் 4 பாடங்கள் மட்டும். காலை இடைவேளையில் சந்திப்போம். சற்று வயதானவர். எதனாலோ என்னைப் பிடித்திருந்தது.

ஆ!! இப்போது நினைவுக்கு வந்து விட்டது. :-)

சென்ற விடுமுறையில் பாடசாலை ஆசிரியர் அறையைப் புதுப்பித்திருந்தார்கள். பழைய சமையல் மேடையை நீக்கி விட்டு புதிதாக நடுவில் ஒரு மேசை (island) அமைத்திருக்கிறார்கள்.

அந்தத் தீவு பற்றிய விபரம் - நீளவாட்டில் பாத்திரங்களுக்கும் கத்தி, கரண்டிகளுக்குமாக இழுப்பறைகள் உள்ளன. இரு புறமும் ஒவ்வொரு சிறிய குளிரூட்டி, ஒரு மைக்ரோவேவ் குக்கர், டோஸ்டர் போன்றவற்றை வைக்க ஒரு இழுப்பறை. மேசை நடுவில் (நட்ட நடுவில்) சின்னதாக ஒரு குழாய். ("குளாய் இஸ் நாட் எ வர்ட் ஆன்டி," என்று ஒரு அசரீரி என் காதில் ஒலித்து சரியாக எழுதவைத்தது. அந்த நட்புக்கு  நன்றி. :-) )

தட்டையான தொட்டியும் மெல்லிய குழாயும் இருக்கும் அந்த வடிகட்டி அமைப்புக்கு இரண்டு அழுத்திகள் - ஒன்று கொதிநீர் வரவைக்கும்; ஒன்று குளிர் நீர் வரவைக்கும். இதிலிருந்துதான் தேநீர், கோப்பிக்கு (உப கதை கீழே)  கொதிநீர் எடுக்க வேண்டும். எம்பி, கையை நீ....ட்டி எடுக்கும் போது பருகும் ஆசையே கெட்டுவிடுகிறது. ;(

உபகதை -  இலங்கைக் கடைக்குப் போனோம் இன்று. அங்கு போனால் எனக்கு இருக்கும் தமிழும் மறந்து போகும். அத்தனை அருமையாக இருக்கும் ஒவ்வொரு தயாரிப்பாளரும் தம் பொருட்களில் கொடுத்திருக்கும் விபரங்கள். கோபி, திணை மா, விதம் விதமான 'பொறியள்'களோடு  'என்னை போட்ட கீரமீன்' கூட விற்பனைக்கு இருந்தது. ஹும்!  ஆறாம் கட்டளைக்கு விரோதமான பாவம்  எல்லாம் மனிதக் கொலைகளுக்கு மட்டும் தான் பொருந்துமா!! ;)

மைக்ரோவேவ் மறைவான இடத்திலிருக்கிறது. மேற்பார்வையாளர்களுக்கு தெரியவராது; என்னைப் போல் 'உயர்ந்த' மனிதர்கள் கண்ணிற்கு மட்டும் தெரியும். :-) தோழி தேடும் முன் ஒரு ஊகத்தில் இடம் காட்டி உதவினேன். பின்பு ஒரு சமயம் - வீட்டில் கொடித்தோடம்பழங்கள் காய்த்துக் குலுங்கிய சமயம் (என் பெரும் பொழுது செபாவுடன் கழிந்த சமயம்) நேரப்பற்றாக்குறை காரணமாக என்னால் பயன்படுத்த முடியாதிருந்தது. வீடு வீடாக விநியோகிக்கும் நிலையிலும் நான் இல்லை. தினமும் பாடசாலைக்கு கூடையில் எடுத்துப் போய் ஆசிரியர் கூடத்தில் வைத்து விடுவேன். கூடவே சில ப்ளாத்திக்குப் பைகளை வைத்துவிட்டால் அவரவர் தம் தேவைக்கு பையில் போட்டு எடுத்துப் போவார்கள். தோழியும் கொஞ்சம் வீட்டுக்குக் கொண்டு போவார். பாடசாலைக்கு மட்டும் கிட்டத்தட்ட 500 பழங்கள் எடுத்துப் போயிருப்பேன். ஒற்றைக் கொடியிலிருந்து கிடைத்த விளைச்சல் அத்தனையும்.

ஒரு நாள் இலையைச் சமைப்பது பற்றிப் பேச்சு வந்தது. மறு வாரம் கொடித்தோடைக் கீரை சம்பல் செய்து, அதைத் தனியே கொடுக்க இயலாததால் கூடவே சோறு, மரக்கறி என்று கட்டி எடுத்துப் போனேன். தோழி என்னோடு நெருக்கமாகிவிட்டார்.
~~~~
இடையில் மாட்டியிருந்த என் பையைப் பார்த்ததும், தன்னிடமும் தன் முன்னாள் கணவரது பழைய பை  ஒன்று இருப்பதாகவும் அதன் ஸிப் சிக்கிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்.

"நடுவில் பேனையால் குத்திப் பாருங்களேன்," என்றேன்.

"அது பித்தளை சிப், செழும்பு பிடித்திருப்பதால் சரிவராது," என்றார்.

"கொண்டுவந்தால் திருத்திக் கொடுப்பேன்," என்றேன்.

தொடர்ந்து வந்த திங்கள் மறந்திருந்தார். அதன் மறுவாரம் கொண்டுவந்து கொடுத்தார். உடனே என்னால் எதுவும் செய்ய முடியவிலை.

வீட்டிற்கு வந்து இழுத்துப் பார்க்க, வரவில்லை. ;(

குளியலறைக் குப்பைத் தொட்டியிலிருந்து தேய்ந்து போன சவர்க்காரத் துண்டை எடுத்து வந்தேன். ஓர் திரைப்படம் பார்த்துக் கொண்டே திறந்திருந்த ஸிப் கொக்கிகள் அனைத்திலும் தேய்த்தேன். பிறகு ஸிப் கைபிடியைப் பிடித்து அசைத்துக் கொண்டே இருக்க, வழிவிட்டது.

உள்ளே $15, 3 பேனைகள், லிப்ஸ்டிக், க்ளிப் 2. :-) அனைத்தையும் வெளியே எடுத்து வைத்துவிட்டு பையைக் கழுவி உலர விட்டு புதிதாக்கி எடுத்துப் போனேன்.

Tuesday 3 October 2017

மூன்றாவது இரண்டு

வணக்கம் வலையுலக நட்புகளே ! _()_ 

இந்த வருடம் இரண்டே இரண்டு இடுகைகளுடன் இமாவின் உலகை  அமைதியாக உறங்க விட்டிருக்கிறேனா!! ;(

என் தாயாரின் உடல் நலக் குறைவும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் என் நேரத்தை முழுமையாகவே ஆக்கிரமித்துக் கொண்டன. இப்போ விடுமுறை. 

சென்ற விடுமுறையில் என் நேரம் பெரும்பாலும் என் பெற்றோர் வசிக்கும் ஒய்வு இல்லத்திலேயே கழிந்தது. இம்முறை அங்கு செல்ல முடியவில்லை.  

'வைரல்' என்னும் சொல் இப்போ வெகு சாதாரணமாக எல்லோர் வாயிலும் புழங்குகிறது. :-) இவ்வருடம் இரண்டாவது தடவையாக வைரஸ் தாக்கியிருக்கிறது என்னை. பாடசாலைச் சின்னவர்கள் வழியே வந்தது, ஒரு மாதமாக என்னோடு ஒட்டிக் கொண்டு இருக்கிறது. எனக்கு மட்டுமல்ல, எங்கள் பாடசாலையில் பலருக்கும் இதே பிரச்சினை. 

என் தாயாரது  நுரையீரல்கள்  பாதிக்கப்பட்டிருக்கின்றன. நான் போய்ப் பார்க்க, அவருக்குத் தொற்றினால் சிரமப்படுவார். அதனால் எனக்கு விடுமுறை. 

இதற்கு மருந்து ஏதும் தருவதில்லை. கொத்துமல்லித் தண்ணீர், ஊதுமக்கஞ்சி, பழங்கள், ஆவி பிடிப்பது என்று செய்ய வேண்டியதெல்லாம் செய்கிறேன். ஒய்வு முக்கியம் என்கிறார்கள். இன்றைய என் ஒய்வு நேரச்  செயற்பாட்டை உங்களோடு பகிர வந்தேன்.

என் மாணவர் தன் தாய்நாடான  லெபனானுக்கு  குடும்பத்தைப் பார்ப்பதற்காகச் சென்றுவிட்டார். அவர் வரும் வரை வேறு வகுப்பிற்கு உதவியாகச் செல்லப் பணிக்கப்பட்டிருக்கிறேன். சென்ற வாரம்  தையல் வேலையைத் தெரிந்துகொண்ட மாணவிகள் இருவருக்கு உதவிய இடைப் பொழுதில் என்னை ஈர்த்தது அருகே மற்ற மாணவர்கள் சிலர் செய்துகொண்டு இருந்த கைவேலை. சதுரப் பலகைகளில் சாமோவன், டொங்கன் சித்திர வடிவங்களைச் செதுக்கிக் கொண்டிருந்தார்கள். நான் விசாரிக்க ஆரம்பித்ததும், முயற்சி செய்து பார்க்கும்படி எனக்கும் ஓர் பலகைத் துண்டைக் கொடுத்தார்கள். 

செதுக்குவதற்கான ஆயுதங்கள் ஏற்கனவே என்னிடம் இருந்தன. பலகைக்கு
நேற்றே  'இந்தியன் இங்க்'  தடவிக் காய வைத்திருந்தேன். இன்று, முதல் முயற்சி. 

இந்தப் பக்கம் சில இடங்களில் ஒரு தடவைக்கு மேல் தீந்தை பூசப்பட்டுவிட்டது. பூசப்பட்டுவிட்டது என்ன! நான்தானே பூசினேன்! ;( அந்த இடங்கள்தான் செதுக்கிய இடங்களில் அசிங்கமாகத் தெரிகின்றன. ;(

'ஹங்சபூட்டுவ' (හංස පූට්ටුව - கழுத்துகள் பின்னிய வடிவிலான  ஒரு சோடி அன்னங்கள்)  வரைகிறேன் என்று ஆரம்பித்தேன். பிறகு ஒற்றை அன்னத்தோடு விட்டுவிட்டேன்.
இன்னொரு முறை பெரிய பலகையில் செதுக்கலாம் அதை. 

என்னிடம் உள்ள 'இந்தியன் மை'  நீரில் கரையும் போல் தெரிகிறது. (மாணவர்கள் வேறு சாயம் எதோ பயன்படுத்தியிருக்க வேண்டும். அவர்களது நல்ல கருப்பாக இருந்தது.) இதற்கு மேல் வாணிஷ் பூசுவதாக இருக்கிறேன். சின்னவரிடம்  இருக்கிறது என் வாணிஷ்  பேணி. அது வரும் வரை காத்திருக்கப் பொறுமை இல்லை. :-)

கொத்திக் கிளறியதை... க.கா.போ. 

செதுக்கிய கை வலிக்கிறது. நாளை மோசமாக வலிக்குமோ! :-) 

கன  காலம் கழித்துத் தட்டியிருக்கிறேன். பிழைகள் இருப்பின் சுட்டிக் காட்டுக. காலை எழுந்து வந்து திருத்துவேன். 

Friday 10 March 2017

DARE to make a change!!

பாடசாலையில் அறை எண் 16 மூடிக் கிடந்தது. 

அங்கு முன்பு பணியாற்றிய ஆசிரியர் 2015 இறுதியில் பணிமாற்றம் பெற்றுச் சென்றிருந்தார். பின்பு அதே அறையில் கற்பித்த அருட்சகோதரருக்கு தொண்டையில் ஒரு சத்திரசிகிச்சை. குரல் கிசுகிசுப்பாக மட்டுமே வருகிறது. அவரும் ஓய்வுபெற்றுவிட்டார். இருவருமே பாடசாலையிலிருந்த இறுதி நாட்களில், தேர்ச்சி அட்டை வேலைகளில் மும்முரமாக இருந்ததால் அறையை அப்படியே போட்டுவிட்டுக் கிளம்பியிருந்தார்கள். 

அந்த அறையைச் சுத்தம் செய்யும் வேலையை என்னிடம் ஒப்படைத்தார் அதிபர். எப்போதெல்லாம் சிறிது நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகச் சுத்திகரிப்பு வேலை நடந்தது.

முதலில் பெரிய கடதாசிகளும் ஒரு மார்க்கரும் தேடி வைத்துக் கொண்டேன். மீள்சுழற்சிக்கு ஒரு இடத்தைத் தெரிந்து வைத்து ஒரு பக்கம் கடதாசிகளும் அருகே ப்ளாத்திக்குப் பொருட்களையும் போட்டேன்.  'PE Department' 'Arts Department' 'RE Department' என்று பிரித்துப் பொருட்களைப் போட்டு லேபிள் போட்டு வைத்துக் கொண்டு வேலையைத் தொடர்ந்தேன். 

அருட்சகோதரர் சென்ற வருடம் வரை ஃபெல்ட் கைவினைப் பொருட்கள் செய்யக் கற்பித்து வந்தார். அந்தப் பெட்டியை எனக்குத் தருவதாக முன்பே சொல்லியிருந்தார். வீட்டிலுள்ள குப்பைகளோடு அதுவும் வந்து சேர்ந்திருக்கிறது. :-) 

கூடவே இந்த அட்டைகளும்.
 
வருடாவருடம் மூன்றாம் தவணையின் போது ஒரு குறிப்பிட்ட போலீஸ் அதிகாரி DARE Program  நடாத்த வருவார். சென்ற வருடம் இந்த அட்டைகளை மாணவர்களுக்காக எடுத்து வந்தார். ஆளுக்கொன்று கொடுத்து மீந்த மூன்று, கடதாசிக் குப்பைகள் மத்தியில் கண்ணில் பட்டது. 

இன்று ஒரு மாற்றம் வேண்டும் எனத் தோன்ற, அட்டைகளை எடுத்தேன். இமா விளையாட 3 கார்கள் கிடைத்தன. :-) 

Thursday 26 January 2017

ஹலோ!

சென்ற வாரம் க்றிஸ்ஸுடன் நேப்பியர் சென்றிருந்தேன். 'எங்கெல்லாம் போகலாம்?' என்று விபரம் தேடிய வேளை கண்ணில் பட்டது ஒரு farm zoo பற்றிய விளம்பரம். பெரும்பாலும் எல்லாம் ஏற்கனவே கண்ட பிராணிகளாகத் தான் இருக்கப் போகிறது. புதிதாக எதுவும் இருக்கப் போவதில்லை. இருந்தாலும் ரசிக்கக் கூடிய இடம் என்பதால் போகலாம் என்று முடிவு செய்தோம்.

தீனி என்று ஒரு பிளாத்திக்குக் கிண்ணத்தில் சோளவிதைகள் கிடைத்தன. ஒரு போத்தல் பாலும் வாங்கிக் கொண்டோம்.


ஆரம்பத்திலேயே செம்மறிக் கன்றுக்கும் பாலூட்டும் வேலையை முடித்து அனுப்பிடுவது அங்கு வேலைக்கிருந்த இளம்பெண்களுக்கு சுலபமாகத் தெரிந்திருக்க வேண்டும். ஒருவர் மற்றவரிடம் பொறுப்பை ஒப்படைக்க, அவர் வந்து அடைப்பிலிருந்த  கன்று ஒன்றின் (குட்டியா!) கழுத்தில் நாடாவை மாட்டி வெளியே அழைத்து வந்தார். பால் போத்தலைக் கண்டதுமே உள்ளே இருந்த மூவர், நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு முன்னே வர, ஒருவருக்கு மட்டும் சந்தர்ப்பம் கிடைத்தது. (பிறகு இவரை அதே அடைப்பில் விடாமல் வேறு இடத்திற்கு மாற்றிவிட்டார்கள்.)
பெரும் அவாவோடு என் கையிலிருந்ததைப் பிடுங்காத குறையாக உறிஞ்ச ஆரம்பித்தார் குட்டியர். 

ஆட்கள் கொஞ்சம் பலசாலிகள் போல. என்னை இரண்டு கைகளாலும் போத்தலை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளச் சொன்னார் அந்தப் பெண். பால் முடியும் முன்பே பறித்துக் கொள்ளச் சொல்லிவிட்டார். காற்றை உள்ளே எடுத்துக் கொள்ளுவாராம். குட்டியர் போகப் பிரியமில்லாமல் போனார்.
பெரிய ஆடுகள் வேலிக்கு மேல் எட்டிப் பார்த்தன.
  
எனக்கு கையில் உணவு கொடுக்கும் எண்ணம் இருக்கவில்லை. ட்ரிக்ஸியும் ட்ரேஸியும் உலர்ந்த உதட்டுப் பெண்கள். என் கையிலிருந்து பட்டும் படாமலும் மெதுவே எடுப்பார்கள். ஈர வாய்க்காரர்களுக்கு க்றிஸ் கொடுக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.  :-)
அடுத்து இருந்த merino பெண் கொஞ்சம் கெஞ்சுவதாகப் பட்டது. எப்படியோ என் மனதைக் கவர்ந்துவிட்டார். கையில் தீனை வைத்து நீட்ட, பொறுக்கிக் கொண்டு கரக் முரக் என்று கடித்துச் சாப்பிட்டார்.
தடவி விடச் சொல்லிக் கழுத்தை நீட்டினார் இன்னொருவர். எனக்கு வீட்டில் விட்டுப் போன சின்னப் பெண்களின் எண்ணம் வந்துவிட்டது. :-) அதன் பின், தொடர்ந்து இருந்த ஆடுகளுக்கெல்லாம் தீன் கொடுத்தேன்.

ஆங்காங்கே தங்களுக்கு வசதியாக வேலைக் கம்பியை நெளித்து வைத்திருக்கிறார்கள் பெரும்பாலானோர். பன்றிகளுக்குத் தீன் கொடுக்க வேண்டாம் என்று எச்சரித்திருந்தார்கள். ஒரு பன்றிக்குட்டி ஆவேசமாகக் கம்பியை நெளித்துக் கொண்டு பாதைக்கு ஓடிவந்தது. கினிக்கோழிகளும் உள்ளேயும் வெளியேயுமாக ஓடித் திரிந்தன.

இவர் சார்லட் - 6 கால்ப் பெண்மணி. கொஞ்சம் அருகே வரத் தயங்கினார். 'பலர் இவரது ஐந்தாவது, ஆறாவது கால்களைப் பிடித்து விளையாடியிருக்க வேண்டும்,' என்று தோன்றிற்று.

இங்கு எல்லாமே வெகு மலிவாகத் தோன்றிற்று எனக்கு. எப்படிப் பராமரிப்பு வேலைகளைச் சமாளிக்கிறார்களோ என்று யோசித்தேன். பெரும்பாலானவர்கள் தாங்களே மனமுவந்து வேலை செய்வதாகத் தெரிந்தது. உணவுக்கும் பராமரிப்புக்கும் கூட அவர்கள் வாங்கும் பணம் போதுமாவெனத் தெரியவில்லை.
 
ஈமுக்கள் - எத்தனை அழகாக அமர்ந்திருக்கிறார்கள் பாருங்கள். தரையிலிருந்து உணவைப் பொறுக்கும் போதும் ஒரு நளினம் தெரிந்தது. :-) இவர்களது முட்டை - ஓடு மட்டும் ஒன்று வாங்கி வந்தேன். செதுக்கு வேலை செய்து பார்ப்பதாக எண்ணம். அதற்குள் உடைந்துவிடாமல் இருக்க வேண்டும். :-)
குதிரை ஏற ஒரு போதும் கிடைத்ததில்லை. ஆசைப்பட்டேன். அன்று காலை எழும்போது முகம் சற்று அதைத்து இருந்தது. இந்த விடுமுறையில் இது அடிக்கடி நிகழ்கிறது. காரணம் கண்டுபிடிக்க இயலவில்லை. அதனால் க்றிஸ் வேண்டாமென்றதை அரை மனதாக ஏற்றுக் கொண்டு முடிவிடத்திற்குப் போனோம். 

கை கழுவ Hand wash இருந்தது. க்றிஸ் கொண்டு சென்ற காப்பியை ஊற்றி உறிஞ்ச ஆரம்பித்தார். நான் என் பங்கைக் கிண்ணத்தில் ஊற்றி ஆற விட்டுவிட்டுத் திரும்ப, எதிரில் பெரிய பெரிய கூடுகள் தென்பட்டன. ஒன்றில், 'உள்ளே விரல்களை விட வேண்டாம்,' என்னும் வாசகம் தெரிந்தது. அதன் பின்னே.... சின்னதாக ஒரு தலை.
அருகே போய்ப் பார்க்க ஹிமாலயன் உப்பை நினைவுபடுத்துவது போன்ற நிறத்தில் கிளியார் ஒருவர்.
'ஹலோ!' என்றேன். அசையாமல் நின்றார். தொடர்ந்து, 'ஹலோ!' சொல்ல - மெதுவே தலையை அசைத்து ஏற்றுக் கொண்டார். 

நான் அடுத்து இருந்த கூட்டை நெருங்கும் சமயம் யாரோ, 'ஹலோ! என்பது போல் கேட்டது. யாரையும் காணோம். நான் புதிய கிளிகளைத் தேடிப் போனேன். அவை அருகே வரவேயில்லை. என்னோடு கோபித்த மாதிரி தூரவே நின்றார்கள். 

மீண்டும், 'ஹலோ!' ஹிமாலயன் ஆள்தான் கூப்பிட்டிருப்பாரோ! நான் அருகே அத்தனை நேரம் நின்றும் பேசாதவர் இப்போ பேசுகிறாரா! கிட்டப் போனேன். அருகே வந்து நின்றுகொண்டார். மீண்டும் நான் - 'ஹலோ!' ஆமோதிப்பது போல் தலை மேலும் கீழும் அசைந்தது. நான்கு முறை, 'ஹலோ!' சொல்லிவிட்டு அடுத்த கூட்டுக்கு நகர்ந்தேன். உடனே ஹிமாலயன் கூப்பிட்டார், 'ஹலோ!' இம்முறை குரல் சற்று அழுத்தமாக வந்தது. மீண்டும் அருகே சென்றேன். நான்கைந்து ஹலோ சொல்லிவிட்டுக் கிளம்ப... 'ஹலோஓ!! ;D எட்டிப் பார்க்கிறார். அவரோடு மட்டும் பேச வேண்டுமாம்.
கடைசியாக சில நிமிடங்களை அவரோடு கழித்து விட்டுப் பிரிய மனம் இல்லாமல் கிளம்பினேன். 
சின்னச் சின்ன உயிர்களுக்குள்ளும் ஆசாபாசங்கள் இருக்கின்றன.