முன்பு, பாடசாலையில் கைவினை வகுப்பு எடுக்கும் போது சேகரிப்பில் இணைந்திருந்த ஒரு பெட்டி தேன்மெழுகு மெதுவே குறைந்து வருகிறது.
சென்ற இரு வருடங்கள் நத்தார் அன்பளிப்பாக மெழுகுவர்த்திகள் செய்த விதத்தில் வெண்மை நிறத் தாள்கள் முற்றாகத் தீர்ந்து போயிற்று. சிவப்பு நிறம்... பூக்கள் செய்யலாம் என்று வைத்திருந்தேன். ஆனால் மெழுகுவர்த்தியை எரிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். பருமன் அதற்கேற்ப அமைய வேண்டும். சிந்தனை வந்து போகும்.
சில வாரங்கள் முன்பாக இதற்கு நேரம் அமைந்தது. அம்மாவின் நினைவாக குடும்பத்தாருக்கு சிறிய அன்பளிப்புகள் கொடுக்க விரும்பினேன். அன்பளிப்புப் பெட்டியில் ஒரு மெழுகுவர்த்தி வைக்கலாம் எனத் தோன்றியது. அவரது வலைப்பூவின் பெயர், 'இதயத்திலிருந்து' என்பதாலும் இதயம் அன்பின் அடையாளம் என்பதாலும் இதய வடிவில் செய்யலாம் என முடிவு செய்தேன்.
தேவையாக இருந்தவை...
தகரத்திலான இதய வடிவ cookie cutter
சிவப்பு நிறத் தேன் மெழுகு தாள்கள்
அழுத்தமான பலகை
hair dryer
நீளமான தடித்த கம்பி
நீளமான கேக் மெழுகுவர்த்திகள்
நக அலங்காரத்திற்குப் பயன்படுத்தும் சிறு கற்கள்
கத்தரிக்கோல்
(படத்தில் முக்கியமான பொருட்களை மட்டும் காட்டியிருக்கிறேன்.)
மெழுகுவர்த்தி செய்வது வெகு சுலபம்.
முதலில் பலகையில் மெழுகு தாளினை வைத்து, கட்டரை வைத்து அழுத்தி இதயங்களை வெட்டிக் கொண்டேன். குளிர்காலம் என்பதால், ஒவ்வொரு வெட்டுக்கும் முன்பு ட்ரையரால் வெட்டப் போகும் இடத்தைச் சூடுகாட்டிக் கொண்டேன். கட்டர் கையைப் பதம்பார்க்காமல் அதன் மேல் அட்டை ஒன்றை வைத்துப் பிடித்துக் கொண்டேன்.
எந்தச் சந்தர்ப்பத்திலும் மெழுகு அதிகம் சூடாகிவிடக் கூடாது. வேலைக்கு
வளைந்து கொடுக்கும் அளவு சூடு போதும். அதிகமானால் பார்க்கப் பளபளப்பாக
இருக்குமென்றாலும் அதன் அறுகோண வடிவம் கெட்டுப் போகும்.
ஒவ்வொரு மெழுகுவர்த்திக்கும் பதினைந்து இதயங்கள் தேவைப்பட்டன. வெட்டிய இதயங்களைத் திருப்பிப் போட்டுவிடாமல் ஒரே பக்கமாக
அடுக்க வேண்டும். கட்டரின் வடிவம் சமச்சீராக இல்லாமலிருந்தால் அல்லது
நெளிந்திருந்தால் முழுகுவர்த்தி அமைப்பு சீராக வருவதற்கு இப்படி அடுக்கி
வைப்பது உதவும். தேவையான எண்ணிக்கை இதயங்களை வெட்டி முடித்ததும். பதினைந்து பதினைந்தாக அடுக்கி வைத்துக் கொண்டு வேலையை ஆரம்பித்தேன்.
இதயத்தை அமைப்பதுதான் அனைத்திலும் சுவாரசியமான வேலை. முதலில் ஒரு துண்டைப் பலகையில் வைத்து மெல்லிதாக சூடு காட்டிக் கொண்டு அடுத்த துண்டை அதன் மேல் வைத்து அழுத்தினேன். இப்படியே தொடர்ந்து சூடு காட்டி எட்டுத் துண்டுகளை ஒட்டி எடுத்தேன். அமைப்பு பொருந்தி வர வேண்டும். துண்டுகள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ள வேண்டும் ஆனால் அழுந்தி தட்டையாகி விடக் கூடாது. சற்றுப் பொறுமையாகச் செய்ய வேண்டி இருந்தது. மெழுகுதிரி தலையில் கையும் பிக்பொஸ் வீட்டில் கண்ணுமாக வேலை நடந்தது.
மீதி ஏழு துண்டங்களுக்கும் ஒட்டும் முறையை மாற்றினேன். இப்போது கையில் எடுக்கும் துண்டைச் சூடு காட்டி ஏற்கனவே செய்து வைத்திருந்தவற்றின் மேல் அடுக்கத் தொடங்கினேன். மெதுவே இதயம் உருப் பெற ஆரம்பித்தது. அடுத்தடுத்த துண்டுகளை அழுத்துகையில் ஓரங்கள் சற்று கீழ் நோக்கி வளைய ஆரம்பித்தன. இறுதி மூன்று துண்டுகள் இதயத்தின் மேற்பகுதிக்குச் சரியான வடிவம் கொண்டுவந்தன. 'வந்தன' என்ன! 'கொண்டு வந்தேன்,' எனச் சொல்ல வேண்டும். சுற்றிலும் ஒரு முறை அழுத்திச் சரி செய்து விட்டு அடுத்த இதயத்தைத் தயாரிக்க ஆரம்பித்தேன்.
அனைத்தும் தயாரான பின் திரி வைக்கும் முயற்சியை ஆரம்பித்தேன். அவற்றுக்குரிய திரிகள் கைவசம் இருந்தன. நேரம் குறைவாக இருந்தது. கேக்கில் சொருகும் மெல்லிய நீள மெழுகுவர்த்திகள் எந்தப் பயனும் இல்லாமல் சேமிப்பில் கிடந்தன. அவற்றைப் பயன்படுத்துவது... சுலபமாக இருக்கும் என்று பட்டது. சிவப்பு நிற மெழுகுவர்த்திகளைக் காணோம். மென்சிவப்பு நிறமே போதும் என்று முடிவு செய்தேன்.
கொதிநீரில் கம்பியை அமிழ்த்தி வைத்து எடுத்து இதயங்களின் நடுவே துளைகள் செய்தேன். உடனே தயாராக வைத்திருந்த மெழுகுக் குச்சு ஒன்றை துளையூடே சொருகி அளவாகக் தத்தரித்து விட்டேன். கீழ்ப்பக்கத்தச் சற்று அழுத்திச் சரிசெய்தாயிற்று. அனைத்து இதயங்களுக்கும் திரிகளைச் சொருகிய பின்பு மீண்டும் ஊசியைக் கொண்டு கற்கள் வரவேண்டிய இடத்தில் அடையாளம் (மெழுகு சற்று இளகும்.) செய்து கற்களை வைத்து அழுத்தி விட... என் மனதுக்குப் பிடித்தாற்போல் மெழுகுவர்த்திகள் கிடைத்தன. ஒவ்வொன்றையும் தனித்தனியே வெள்ளை நிறப் பட்டத் தாளில் சுற்றி சேமித்து வைத்தேன்.
(பிழைகள் நிறையை இருக்கும் என்று தோன்றுகிறது. சுட்டிக் காட்டினால் உதவியாக இருக்கும். அல்லாவிட்டால்... தானாக என் கவனத்திற்கு வரும் சமயம் தான் திருத்தம் செய்யப்படும்.)