நத்தார் கொண்டாடுவதற்கான மனநிலை இன்னும் வரவில்லை. அதனாலேயே கொண்டாட வேண்டும் எனும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.
செபா சொல்லுவார்... "சாகப் போற மாடு, கண்டுக்குப் புல்லும் வைக்கோலும் சேர்த்து வைச்சுட்டுச் சாகிறது இல்லை," என்று. உண்மைதான். கன்று எப்படியாவது பிழைத்துக் கொள்ளும். இன்னொரு பசுவிடம் கெஞ்சியோ அடம் பிடித்தோ பாலருந்தலாம். அல்லது... இன்னொரு மாடு தீவனத்திற்கு, தன் சீவனத்திற்கு என்ன செய்கிறது என்பதைக் கவனித்து அதன்படி நடந்தாலே பிழைத்துக் கொள்ளும்.
மனிதர்!!
பிள்ளைக்கு எத்தனை வயதானாலும் அம்மா அம்மாதான். நான் நன்றாக, சந்தோஷமாக இருப்பதைத்தான் அம்மா விரும்புவார்.
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்... ம்... ஔவையாருக்கு இதைச் சொல்வது சுலபமாக இருந்திருக்கும். ஒரு வயதுக்கு மேல் வளர்ப்புத் தாயையும் விட்டு, தன் காலே தனக்குதவி என்று சுற்றுலாக் கிளம்பிய பெண்மணி. ;-) பெரிதாக எதிலும் பிடிப்பு இருந்திராது, தமிழைத் தவிர.
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா
நமக்கும் அதுவழியே நாம் போம் அளவும்
எமக்கு என்னென்றிட்டுண்டிரும்.
கடைசி ஆறு சொற்களையும் பிரித்துப் பிரித்து எழுதிப் பார்த்தேன். :) கவிதைத் தன்மை தொலைந்து போனாற்போல இருந்தது. தேடலாம் என்று இணையத்தில் உலாவ... கொடுமையொன்று கண்டேன்!! ;( படம் போட்ட குழந்தைகள் அரிச்சுவடியில் 'ஔ' என்கிற எழுத்துக்கு 'ஔவையார்' என்று எழுதியிருப்பார்கள். இணையத்தில் சில ஔவைகளையும் ஏராளமான அவ்வைகளையும் கண்டேன். ;(
தமிழ், 'தமிழை வளர்க்க நினைக்கும் தமிழராலேயே' மரித்து விடும் என்று முன்பே ஔவைக்குத் தெரிந்திருக்குமோ! அதனால் தான், 'நமக்கும் அதுவழியே நாம் போம் அளவும் எமக்கு என்ன!' என்று மனம் நோகாமலிருக்கும்படி அப்படிப் பாடி வைத்தாரோ!!! ;D
தட்டச்சு செய்வது சிரமமாகிப் போகும் என உணர்ந்து எழுத்து மாற்றம் வந்த பின்பும், 'ஔ' 'ஐ' எழுத்துகளைத் தட்டுவதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லாதபடிதான் இருந்துவருகிறது. ஆனாலும்... நாம் 'அய்யா' என்போம்; 'அவ்வை' என்போம். ;((
மீண்டும்... விஷயத்துக்கு வருகிறேன். மாண்டார் வருவரோ மாநிலத்தீர்!! வேண்டா... நமக்கும் அதுவழியே நாம் போம் அளவும் எனக்கு என்ன என்று இட்டு உண்டு இருக்கலாம். அதன் ஒரு படியாக... இந்த அலங்காரம்.
கையிலிருந்த பொருட்களை வைத்துச் செய்தேன். இம்முறை அழகான இலைகள் அகப்பட்டன. ஒரு சாடியில் சில மிட்டாய்களும் இருந்தன. இவை அம்மா வீட்டிலிருந்து எனக்குக் கடத்தப்பட பொக்கிஷங்கள். தன்னைச் சந்திக்க வரும் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்காக மிட்டாய்கள் வைத்திருப்பார்.
முன்பெல்லாம் நிறமற்ற செலோஃபேன் கடதாசியில் மிட்டாய்களைச் சுற்றுவேன். இம்முறை கையிலிருந்தது சிவப்பு செலோஃபேன்.
நீளமாகத் தெரிபவை ஜெல்லி மிட்டாய்கள்.
நீளமாகத் தெரிபவை ஜெல்லி மிட்டாய்கள்.
செய்முறை இங்கே - http://www.arusuvai.com/tamil/node/30177


